வெள்ளி, 10 ஜனவரி, 2020

அவளை வணங்குவோம்- அம்புதாயனத்துக் காளி- பிரபு கங்காதரன்




ஊருக்கு நடுவில் மலந்து கிடக்கிறாள் வண்டி மலச்சி. தெருவை நிறைத்துக் கிடக்கிறது அவள் உடல். அவள் அருகில் சின்னச் செப்பு சிலையாய் அமைந்திருக்கிறான் முத்து வைரவன். மிகச்சிறிய உடல். குன்றாக் காமத்திற்கு அருகில் வெறித்துக் கொண்டிருக்கும் உடல். தின்ன இயலா மாபெரும் புல் வெளியை அளைந்து கொண்டிருக்கும் எருமை போலக் காமம் கொப்பளித்துக் கொண்டிருக்கிறது.

அதை வணங்குவோம். வேறு வழியில்லை இச்சிறிய உடல்களுக்கு.
ஆனால் அது மாபெரும் வெளியாய் உருவாகும் தருணம் உண்டு. அது உடல் தன் ஸ்தூலத் தன்மையைக் கலைத்து எல்லாவற்றிலும் கலந்து தோற்றம் கொள்வது. தின்னத் தின்ன திகட்டாதது. அங்கு எங்கும் எதிலும் அவள் உடலாக ஆவதும். அவள் உடல் எல்லாமாமும் ஆவதும்.

மூணு சீட்டுக் காரனைப் போல மொழி அமைந்து விடும் பொழுது இந்தக் கலைதல் உருவாகி விடுகிறது. இந்த ஒற்றைக் கட்டிலில் தன்னந்தனியே வெறுமனே அமர்ந்திருக்கும் பொழுது வெளியை ஜன்னல் வழி நோக்குகிறேன். பாலையின் இம்மழைக் காலம், வானம், காற்று அண்ணாந்து நோக்க சிதறிக் கொண்டிருக்கும் கரு நீலப் பெருவெளி, சலசலத்து தூத்திக் கொண்டிருக்கும் மழை, உள்ளுள் பிரவாகமெடுக்கும் காமத்தை அதக்கி அதக்கி உருண்டையாக்கிக் கொண்டிருக்கிறேன். அது மெல்ல காட்சி ரூபமெடுக்கிறது. என் முன் அதன் அந்தர வெளியில் அவள், அவள் உடல், நீர், காற்று, மண், மணம், சுவை, ஸ்தூலமாய் நிற்கும் அனைத்தும் உடல் மட்டுமே கொண்டதாய் உருவாவதை தவிர்க்க இயலவில்லை. அவள் மட்டுமே ஆனதான லோகம் இது.

அவளை ஸ்பரிசித்த நொடிகளை எண்ணிப் பார்க்கிறேன். நாக்கு எனும் உறுப்பு கண்டறிந்த எண்ணிலடங்கா சுவைகளை அவள் உடல் எனக்கு தந்திருந்தது. உடல் கொண்டு மட்டும் அறிய இயலா மாய நதி என் மீது படர்ந்து நான் அடிக் கூழாங்கல்லாய் ஆகி விட, அவள் உடல் என்னை மூழ்கடித்து நகர்ந்து கொண்டிருந்தது.

அந்த நிலம் எப்படி இருந்தது?

மரங்களால், செடிகளால், கொடிகளால், புதர்களால் பச்சை சூழ்ந்தது. அங்கு அவள், எதுவும் அவள் வாசனை.

காலம் தனக்கேயான தனித்தன்மைகளுடன் அவளை வாரி வாரி இறைத்தது. காரையார் அணையின் பானதீர்த்தத்தின் அடியில் பத்து நிமிடங்களுக்கு மேல் நிற்பவன் இறந்து போவான். வேறு வழியில்லை.

கார்காலம் - ஆவணி, புரட்டாசி
கூதிர்காலம் - ஐப்பசி, கார்த்திகை
முன் பனிக்காலம் - மார்கழி, தை
பின் பனிக்காலம் - மாசி, பங்குனி
இளவேனிற்காலம் - சித்திரை, வைகாசி
முது வேனிற்காலம் - ஆனி, ஆடி

இக்காலங்களின் பிரத்யேக குணமும் மணமும் சுவையும் அந்தரங்கமாய் மொழியாவது. மொழி மூலம் அதைத் தொட்டு தொட்டு உவப்பது. அக்காலங்களின் மொட்டவிழும் பூக்களின், காய்களின், கனிகளின் அத்துணை ரகசியங்களும் மெல்ல மெல்ல உன் உடலாய் உருக்கொள்வது.

ஆம். நான் உன் உடலைக் கண்டேன். தொட்டேன். முகிழ்த்தேன். சுவைத்தேன். விழுங்கினேன். விக்கலெடுத்தே செத்தேன். விழுங்க விழுங்க இன்னும் இன்னும் என்று என் உடல் முழுக்க நீயானாய். நானும் நீயானாய். ஒரு சரணாகதி. அது மட்டுமே வாய்த்த வெறும் ஆணுடல் நான். அதன் குறைபாடுகளுடன் உன்னிடம் வந்தேன். நீ அத்தனையும் தந்தாய் மழையைப் போல.

"நிதம்ப மயிர் நாற்றம்"

"களி மண் வெட்ப்புகளுக்குள் வயல் நண்டு ஊடுறுவுவது"

" ஊழித் தாண்டவத்தில் எரியும் பெருவனம்"

"கோடை வனத்தின் மக்கிய வாசனை"

"ஆம்பல் குளத்தி களி மண் வாசம்"

"நொச்சியின் கிறங்கடிக்கும் மணம்"

"காயும் ஈர வெம்பின் வாசம்"

"மார்கழியின் பரங்கிக் கனிகள்"

"அளவிற் பெரிய பௌர்ணமியை தனித்துக் கடப்பது"

"நீலம் பாரித்த கழுத்தில் பூக்கும் விஷக் காமம்"

"
மீனூறும் வாசம் ஒத்த உன் முதல் திரவம்"

"பாம்புக்கு நீர் கொண்டு போகும் நத்தை"

"உன் பின்னங்கழுத்தெங்கும் பொங்கும் தாழம்பூ"

"வெள்ளப் பெருக்கெடுப்பில் கரையும் பாசி மணம்"

"பனியில் ஊறிக் கிடக்கும் நெல்"

"குறுவை நன்னீரின் வாசம்"

"இலுப்பை மரங்களுக்கடியில் அந்தியில் வீசும் மணம்"

"எருக்கம் பூ பிசுபிசுப்பு"

"கோடை மழையின் மண் வாசம்"

"இள நுங்கின் மணம்"

"தீதலை பூத்த கரிய அல்குல்"

"சிறியா நங்கையின் மணம்"

"சக்கரை வள்ளி அவிக்கும் மணம்"

"விதைப்பு வயலின் கருவைப் பிசின் வியர்வை"

"இளவெயில் சூடு"

"வயலெலி விழுங்கிய சாரைப்பாம்பின் ஊறல்"

"சித்திரை வெயில் ஒத்த உன் அல்குல்"

"நுணா மரப்பூக்களின் நறுமணம்"

"நறை வழியும் இடும்ப மரம்"

"கொடுக்கா புளியின் துவர்ப்பும் புளிப்பும்"

"மிக நீண்ட பயணத்தின் கட்டுச்சோறு வாசனை"

"தின்னத் திகட்டா கிழுவைத் தளை"

"கிழட்டு புளியமர வேர் நிறம்"

"நறும் பச்சைக் களி மண்"

"எரியும் கருப்பங்காடு"

இது ஒவ்வொன்றும் அவள் அவள் உடல் அவள் காமம்.




காலங்களின் மாறாத தன்மையினுள் முயங்கும் உடல்கள். பெண் உடல் ஆண் மனத்தில் எப்படியெல்லாம் உருக்கொள்கிறது. அவளே இப்பிரபஞ்ச லீலையாகி விடுகிறாள். விட்டில் பூச்சிகள் போல ஆண் அவ்வைணையா சோதியில் கலக்கத் துடித்து சாகிறது. ஒரு வகையில் அதுதான் அவனுக்கான கடைத்தேற்றம் போல.



உண்மையில் காளியின் மகா உடலைத் திரும்பத் திரும்பக் கடக்க முயலும் ஒரு  எளிய ஆணின் பிதற்றல் போல பித்தாகி விட்டது. அதே நேரம் காளியைப் புணர்ந்ததாலேயே சிவனாகி விடும் பித்து வாய்த்து விடுகிறது.

நம் மரபின் சாக்த மரபின் கண்ணி இது. உடல் எனும் ஒற்றை பெரும் பரப்பில் அள்ளி அள்ளி இட்டும் நிரம்பா பிலத்தினுள் காலாதீதமாய் சொட்டிக் கொண்டிருக்கிறது ஆணின் சுக்கிலம்.


வணங்குவது என்பது அவளை புணர்வைதைத் தவிர வேறென்ன.

அதனால் அவளை வணங்குவோம்.



2 கருத்துகள்:

  1. ஆண் வெறும் வணங்குவதற்காகவே உருவாக்கப்பட்ட பிண்டமா என்ன ? அவன் காமத்தை கணித்தவர் உண்டா ? அதன் அடங்கா நிலையை அதன் உடைப்பெடுக்கும் கணத்தை அதன் மிருக ஓட்டத்தை அதன் நிகரில்லா அடங்கலை அறிந்தவர் உண்டா ? ஆம் ஆண் சபிக்கப்பட்டவன் தன்னை உணரா உலகத்தில் பிறந்து தன்னால் இயலாத்தை செய்ய்யும் பொருட்டு இங்கு அனுப்பப்பட்டுள்ளனர். பெண் நீலத்தில் நிறம் எனில் ஆண் அந்நீலத்தை தாங்கும் நிலம் போன்றவன். அவள் நீலம்மை ஆகையில் அவன் பூமதேவன் ஆகிறான். கைவைத்து விளையாட பொம்மை இல்லையெனில் விளையாடுபவரும் இல்லையல்லவா ?

    பதிலளிநீக்கு
  2. இறுதியாக , ஒரு கேள்வி , ஆண் என்பவன் இங்கே யார் வெறும் பெண்களின் விளையாட்டுகளில் பங்குபெறும் பொம்மைகளா அவர்கள் நகர்த்தும் காய்களின் தொகையா ? பஞ்ச பூதங்களிலலும் ஐவகை நிலங்களிலும் ஆண்கள் வெறும் சிலையெளுப்பி தரிசிக்க மட்டுமே தானா ?

    கேள்வியின் முடிவிலேயே இன்னொரு கேள்வியும் , ஆண்கள் அனைவரும் மறத்திற்கு பதிலாய் நிற்கையில் பெண்கள் அனைவரும் அறத்திற்கு பதிலாய் நிற்கின்றனரோ ? , ஆதியில் தொடங்கி அவ்விளையாட்டு தங்கள் பதவிகளை இடங்களை கைமாற்றிக்கொள்ளாமல் அப்படியே தொடர்கிறதா ?

    இயற்கையே தன்நிலையில் சமநிலையற்றே அலைகின்றது , ஆம் நான் நிரப்பவே அவள் திறக்கவே. கைமாற்றிக்கொள்ள இயலா நிலை.

    எல்லா ஆண்களும் பெண் நிலையை அடைவதே கனிதல் என்ற கருத்து இருக்கும் நிலையில் அதனை நான் ஏற்கும் நிலையில் ஆண் யார் எதற்கு அவன் பிறப்பு பின் அனைவருமே பெண்ணாகவே படைக்கப்பட்டிருக்கலாமே ?

    பெண்ணாக மாறுவதற்கே ஆண் எனில் ஆண் தேவயில்லையே என் அன்பு இயற்கையே. பெண்கள் முயங்கி பெண்கள் பிறந்து , எல்லாவற்றையும் பெண்ணாகவே படைத்திருக்கலாமே ?

    பதிலளிநீக்கு