திங்கள், 19 நவம்பர், 2018

கிறுஸ்துவின் கடைசி சபலம் 6

நீங்கா தண்டனைகளின் பெரும்பாரம் சுமக்க வாய்க்கப்பட்டவர்களே! சுமடுகளின் கனம் தலையழுந்துகிறதா? துதித்து மரணியுங்கள். மரணித்திருப்பது மட்டுமே உங்களுக்கு விதிக்கப்பட்டது. தன் உப்பின் துளியிலிருந்து உங்களைப் படைத்தான். கீழ்மையின் அடிமண்டிய பரப்பில் மிதக்கும் அமைதியில்லாத வேதனையின் குரல்களை அவனறிவான்.

நீங்கள் பிரார்த்திக்கிறீர்களா?

உண்மையை, நன்றியுணர்தலை தொட்டதுண்டா நீங்கள்? உங்களின் பாவங்களுக்காக இறக்கும் கடவுளை நோக்கியிருக்கிறீர்கள். உங்களின் முதுகுத்தோல் செதில் முளைத்திருப்பதை பார்க்கிறேன். இரைக்காக சதா காத்துக்கொண்டு உருண்டு கொண்டிருக்கும் பார்வையினுள் அதை நான் எப்பொழுதும் கண்டிருக்கிறேன்.

இன்னும் எத்தனை காலம். பிதாவே! இன்னும் எத்தனை காலம்! காலம்  எங்களை மலைப்பாம்பை போல  சுருட்டி விழுங்கிக் கொண்டிருக்கிறது. அண்ணாந்து வானத்தை நோக்கினான். விண்மீன்களின் அனந்தப் பெருவெளி. ஓராயிரம் விழிகளுடன் சொர்க்கத்தின் தூயமணிகள் கிணுங்க பூமியைப் பார்த்து சிமிட்டிக் கொண்டிருக்கிறது. காற்றின் தாள கதி மெல்ல மெல்ல உயர்ந்து குறுகிப் படர்ந்து ஒரு சிலந்தி வலை போல அவர்களைச் சுற்றிக் குமைந்தது. தூய வானின் கீழ் பலிக்காக காத்திருக்கும் இரைகளைப் போல அந்தர வெளியில் அவர்கள் அசைவின்றி நின்றிருந்தனர். பாலை மணற்துகள்கள் பதற்றமுற்ற முதியவனின் விரல்களைப் போல அவர்களி ஸ்பரிசம் தொட்டு தொட்டு இறைஞ்சியது.

செந்தாடிக்காரன் ஒவ்வொருவராய் தனித்தனியாய் பார்த்து சிரித்தான். ஏதோ விழுங்க இயலாத ஒன்றை மெல்ல மெல்லக் கரைத்து தனக்குள் இட்டது போல  பற்களும் ஈறுகளும் தெரிய வாய் பிளந்து சிரித்தான். ஆனால் சப்தம் ஏதும் வெளிப்படவில்லை.

கிறுக்கன்! கிறுக்கன்!
எல்லாம் இழந்தாகி விட்டது. அறிவு! உள்ளுணர்வு! புத்தி!
நம் தேவதூதனுக்காக அலையும் அனுமானிக்க வழியற்ற பாதையில் பயணம் செய்கிறோம் நாம்.

யாருமே இல்லை என்னுடன். மனைவியும் பிள்ளைகளும்...
தனியனாய் என்னை பலி கொடுப்பதாயினும் செய்வேன்.

அவர்களின் முன் எல்லாம் தெளிவாக இருந்தது. ஒரு சூட்சுமமான மையச்சரடுஅவர்களின்  ஒவ்வோர் இடைவெளிகளிலும் முடிச்சுகளை இட்டுக் கொண்டே இருந்தது.

இருளுக்குள் ஒளி நுழைந்து கொண்டிருந்தது. வானம் சடையடர்ந்த மயிர்க்கற்றைகளைப் போல வரையிட்டிருந்தது. ஆழமற்ற சேற்றுக் குழியினுள் கால்கள் புதையும் பொழுது உருவாகும் பதற்றமும் மெல்ல அடுத்த அடியில் நகக் கண்களில் கூர்மையாகும் அகமும் போல மென் குமிழியிட்டு ஒளி பழக்கப்பட்ட திசையில் ஒளிரத் தொடங்கியது.

அவன் தூரத்தை பார்த்துக் கொண்டிருந்தான். பழுத்திருக்கும் மண் அவன் ஞாபகங்களில் அலையிட்டது. காறி உமிழ்ந்தான். சருகுகளிடை ஊர்ந்து கொண்டிருந்த வீரியன் குஞ்சுகளின் மொலுமொலுப்பு. அவர்கள் நின்று கொண்டிருந்த மலைக்குன்றுகள் ஒரு பெரிய சுருக்குக் கயிறைப் போல அந்த கிராமத்தின் கழுத்தை சுற்றிப் படர்ந்திருந்தது. அந்த சின்னன்சிறு சரிவான பாதையின் வழியே பாதங்கள் நரனரக்க கூர் கற்களை மிதித்துக் கொண்டே ஓட்டனமும் நடையுமாய் நகர்ந்தான்.

உறக்கம், கடைசியாக ஒலி அடங்கிய நுனியிலிருந்து சொட்டத் தொடங்கியது. முகங்களின் பெருங்கடல். அலைகளின் வழியே அந்தரங்கமாய் விதிர்க்கும் உணர்ச்சிகளின் கூச்சல். கலங்கல் குளத்தில் அலையும் கரைப்பாசி. செம்மண் நீரில் மிதக்கும் சாம்பல் மரத்துண்டு. வடிவங்களின் வடிவின்மை. கானல் நீரின் பிரவாக வெளி. நிறங்களின் ஊசலாட்டம். கட்டமைப்புகள் சிதையச் சிதைய துண்டாடி உருளும் பாழ் நிலம். முண்டங்களின் குரல். சப்தமின்மையின் கவந்த வாய்.

இளைஞனின் இமைகள் முடிச்சிட்டுத் திணறின. கனவின் கடிய கார்வை செவியடைத்தது. நிழலின் ஆடி பிம்பங்களாய் உருகியோடின உருக்கள். ஜன்னல்கள் யாருடைய குரலையோ வாங்கிச் சிதறிச்சாத்தியது. இருள்! இருள்!

அவனை நோக்கி வந்து கொண்டிருந்தது.

-The Last Temptation of Christ -Nikos Kazantzakis

ஞாயிறு, 18 நவம்பர், 2018

கிறுஸ்துவின் கடைச் சபலம் 5

அவர்கள் பன்னிருவர் இருந்தனர். ஒவ்வொருவரையும் தனித்தனியே நோக்கினான். சுற்றிலும் பெரும் பாலை நிலம். வானம் தாய் மிருகத்தின் அடிவயிறு போல சுருங்கி விரிந்து மூச்சிழைத்தது. அதன் நீலத் துணுக்குகளில் வெண்ணிற முடிக் கற்றைகள் போல விண்மீன்கள் சுருண்டிருந்தது. அவர்களின் இருப்பு அந்த இருள் நதியினுள் உதிர்ந்து விழுந்த இலைக் கற்றைகள் போல சலனமின்றி அலையாடியது. குழப்பத்துடன் அவர்கள் ஒவ்வொருவரையும் தொட்டு மீள்கையில் அவனது உறுதிப்பாடு அவர்களிடையில் கடத்தப்பட்டது. ஒரு பெரிய சிலையின் பூதாகர உறுப்புகள் போல அவர்கள் இருந்தனர். ஆனால் தனித்தனியே அவர்கள் நதியினுள் சலனமின்றி பாசி பீடித்து உறங்கிக் கிடக்கும் பாறைகள் போல எண்ணங்களே இன்றி இருந்திருக்கக் கூடும். தங்களுக்குள் பேசிக் கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் அறிந்திருந்தனர். செந்தாடிக் காரனின் சொற்கள் எண்ணங்களாய் உருமாறும் முன்னரே அவர்கள் உணர்ந்தனர். அமைதியாக அவன் வழி நடப்பதையே அவர்களும் விரும்பினர். இருந்தும் அவர்கள் தியாகத்தை அஞ்சினர். மரணம் என்றும் தியாகமாவதில்லை. அதன் இறுதிச் சொல் நிச்சயம் வன்மத்துடன் தான் இருக்க முடியும். யாதொரு மனிதனும் தியாகத்தின் பொருட்டு தன்னை முழுக்க ஒப்புக் கொடுத்திட முடியாது என்றே நம்பினர். ஆனால் அவர்கள் ஒற்றை உடலாக ஆகுகையில் எதனையும் செய்யும் ஒரு இயந்திர பாவம் அவர்களுள் உருவாகி விடுகிறது. அதன் பின் எதன் முன்னும் முட்டி மோதி அவர்கள் நகர்ந்து கொண்டே இருப்பர். கடவுளர்களின் சொற்களால் வழி நடத்தப்படுவதாகவே அவர்கள் முழுக்க நம்பினர். நம்பிக்கையின் பேரில் நம்பிக்கை கொண்டனர். அதனால் கொலைகள் மானுடத் தூய்மையை நோக்கியே எனும் பெரும் லட்சியத்தின் முன் அவர்கள் அதன் கருவிகளாக தங்கள் கடமையை செய்வதாகவும் தங்களுக்கு மீட்பு உண்டு என்றும் உறுதி கொண்டனர்.

காலத்தின் நிழலில் சர்ப்பம் போல நெளிந்து தலைகீழாகியது காட்சிகள். கனவும் அல்லாததும் குழம்பிய சேற்று வண்டலாய் சொத சொதத்துக் கிடந்தது.

யாரை ஏமாற்றுகிறாய். நீ! அந்த இறவாப் பேறுடைய ஆப்ரகாமின் மைந்தன். நீதானே! பயத்தினை ஒழித்தவன். தீமை அண்டாத தூயன். கருணை உருவாய் ஆனவன். வெற்றுப் பிண்டங்கள். உன் நல்லொழுக்கங்களை குப்பையில் வீசியெறி. அண்டிப்பிழைக்கும் அற்பக் கூட்டங்களே. சுயமில்லாத முதுகற்ற புழுக்களே.

ஓ! நீ! மத்தேயுவின் புத்திரனல்லவா! சந்தைக் கடைகளில் தேவனின் ராஜ்ஜியத்தை விற்றுக் கொண்டிருக்கிறீர்களே. உங்களுக்கு வெறும் பொருள் தானே அவன்.

கடவுளர்கள் உங்கள் கிடங்குகளில் ஊற வைக்கப்பட்டிருக்கும் போதை ரசம். உங்களின் இன்பக் களியாடல்களில் அவர்களை இருத்தி வியாபாரம் செய்து கொள்வீர்கள். ஜெகோவாவை அறிவீர்களா நீங்கள்? அவனது குகைக்கருகில் செல்லும் தைரியம் உண்டா உங்களுக்கு? உங்களது சொற்களுக்குள் அவரது பெயர்கள் எத்தகைய விலையைப் பெறுகின்றன.

உன் அகங்காரத்தையும் வன்மத்தையும் உன் முட்டாள் தனங்களையும் கொண்டு நீ வரைந்த உன் ஆடிப்பிம்பம் உன் கடவுள். அதன் முன் உன்குறைகளை மண்டியிட்டு அழு.

தெருவெங்கும் ஓடுகிறது, பலிபீடங்களிலிருந்து சிதறிதெறிக்கும் அடர் குருதி. ஆம். அவனது சொந்தக் குருதி. அவர்களிடமிருந்து பறித்ததைக் கொண்டு அவர்களுக்கு உதவுங்கள். தயாளர்களே! இந்த நன்மைகளின், அன்பின் விசுவாசத்தின் ஆன்ம தியாகத்தின் ஒவ்வோர் துளிகளையும்... தேவா! உன் நாமத்தால்...

உன் நாமமே! எங்களுக்கு கிடைத்த கொலைக் கூர் வாள்.

மறுமையின் காரியங்களை செய்து கொண்டிருக்கும் துர் நாற்றம் அண்டிய செல்வக் கிடங்குகளில். கால்கள் இறுக்க கண்ணிகளால் கட்டப்பட்டு விலைப்பட்டியல் இடப்பட்டு தலை கீழாக தொங்க விடப்பட்டிருக்கும் கடவுளர்களின் இறைச்சியைக் கண்டிருக்கிறேன். நீ காறி உமிழவும் மலம் கழிக்கவும் அமைக்கப்பட்ட கூடாரங்களில் தன்னந்தனியே அகப்பட்டுக் கிடக்கும் அந்த அனாதரவான கடவுளை நான் அறிவேன். உனது சொந்த நியாயங்களுக்கும் காரியங்களுக்கும் உன்னுடன் புணர்ந்து கொள்ள ஒரு உருவம் கிடைத்தே விட்டது. உனது வன்மங்களின் சபலங்களின் நிமித்தத்தின் பொருட்டு நீ தேடிக் கிடைக்கும் கீழ்மைகளின் சிக்கல்களுக்கு வழியமைத்துக் கொடுக்கவும் ஒரு உருவம். கால பேதமற்ற ஒன்றை நீ உனக்காகவெ உருவாக்கிக் கொண்டாய். மரணக்கிழியின் அனத்தத்தில் நான் உன்னை சந்த்திப்பேன். அதுவே உன்னிடம் நான் பகிர்ந்து ஏதேனும் உள்ள ஒரு இடம். கால் கைகள் முடுக்கி வெறும் பிண்டமாய்க் கிடக்கும் அது நீதானா? உனக்கு பெயருண்டா? மதிப்புண்டா? இருப்பு ஏதெனுமுண்டா? நீ யார்? நாற்றம். நாற்றம். மறுமையின் வருகையில் அழுகிக் கொண்டிருக்கிறது. ஆசிர்வதிக்கப்பட்ட மறுமை.


பன்னிருவர்களும் வார்த்தைகளின்றி இருந்தனர். தங்கள் முன் நிற்கும் தலைவனின் ஒவ்வொரு அலைக்கழிதலும் நீரலை போல அதிர்வுற்று அதிர்வுற்று அவர்கள் ஒவ்வோர் உடல் கணுக்களிலும் நெளியத் தொடங்கியது.

-The Last Temptation of Christ -Nikos Kazantzakis


வெள்ளி, 16 நவம்பர், 2018

இரவுகள்

சிறிதும் பெரிதுமாய் கூந்தல் இழைகளை சேமித்துக் கொண்டே இருக்கிறேன்
தலையணை இடைவெளிகளில் அனத்தும் கவுச்சியை ஒரு உருவமாக்கி கொள்ள முயல்கையில்
கால்களைச் சுற்றிப் படர்கிறது உன் நிழல்.
போர்த்திக் கொண்டிருந்த அடிப்பாவாடை நுனிகளில் ஈரம்,
கண்ணாடிப்பாட்டில்களுக்குள் அக்கப்பட்டு மிதக்கும் தலை பிரட்டைகளை வாரி வாரி உண்கிறது இரவு
மெல்ல தலை உயர்த்திப் பார்க்கிறேன்
நீ போர்வையாகிக் கொண்டிருந்தாய்,
பாதியில் எழுந்து சிறு நீர் கழித்தேன்.
ஏனோ அன்று நீயும் இதைப்போலவே அமர்ந்திருக்கையில்
உன்னிடம் பகிர்ந்த முத்தங்கள் வெண்ணிறக் கோளங்களாக தரையில் படர்கின்றன
நூறு நூறு நிலாக்கள் கூடிய பழுப்பு நிற வானம் கால்களுக்கடியில் உராயத் தொடங்கியது.
நீ போர்வையாகிக்
கொண்டிருந்தாய் இரவின் காரிருளினுள்

சனி, 13 அக்டோபர், 2018

மாயநதி

உன் உள்ளாடைகளின் நுனிகளை அதக்கி வைத்துக்கொள்கிறேன்
அதில் ஊறும் சாம்பல் வண்ணத்தை புண்ணிற்குள் வைத்து இறுக்க மூடுகிறேன்.
குருதியோட நதிக்கரையில் பாதங்கள் முழுக்கிக் காத்திருக்கிறேன்.
இந்நதிக்கப்பால் நீ  குளித்து விட்டுச்சென்ற தூவாலைகள் சலசலக்கின்றன.
பல்லாயிரம் ஸ்டிக்கர் பொட்டுகளால் நிரம்பி வழிகிறது என் ஆடி.
பிம்பங்களுக்குள் நிறைந்து பெருகுகிறது இரவின் மழை.
இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது இந்நதி.
சின்னஞ்சிறிய
பள்ளங்களை நிரப்பிக் கொண்டே.

வெள்ளி, 5 அக்டோபர், 2018

இரவுகள்

இந்த ஒற்றைக் கையை துண்டாக்கி வைக்க முடியுமா,
அதன் சதைப்பற்றைக் கொண்டு ஒரு தலையணை செய்ய முடிந்தால்,
கூந்தல் இழைகளால் ஆன மேகங்களை காண்பேன்.
அந்தியைத் தாண்டிச் சென்று இரவினுள் விழுந்து கொண்டிருந்தது
நான் கனவில் பதுக்கி வைத்திருந்த விண்மீன் மழை.
சேற்றுக் குவியலாய் குழம்பும் என் மெத்தையின் அடியில் கனத்திருக்கும் வெக்கையின் சிறகுகள்,
உடலினுள் இறுக்கிக் கட்டிய சடம்பாய் இறுக்குகிறது.
நீ எனும் சொல்லிலிருந்து முளைக்கிறேன் உன் உடலினால் ஆன நீலப் பொதிகளாய்.
உத்திரம் அயர்ந்து விழும் வரைக் காத்திருக்கிறேன்.
கனக்க கனக்க உன்னை அணைத்துக் கொண்டிருக்கிறேன்
இரவு பட்ட மரம் போல வெகு அப்பால் வெறிக்கிறது.