வியாழன், 11 ஜனவரி, 2018

நெடுஞ்சாலைகள்

நேர்க்கோடுகள்
சாமர்த்தியமில்லாத பாதையினைத்
தேர்ந்தெடுத்து விடுகின்றன.
பின் அதில் பயணப்படும் வழிப்போக்கர்கள்
அஞ்சும் வகையில்
தற்கொலைக் காரணங்களைத் தேட ஆரம்பிக்கிறோம்.
U வளைவில்,
சக்கரங்கள் ஒறுப்பதையே மறந்து திக்கிட்டு நிற்கிறோம்.
மைல்கற்கள்,
சுவாதீனமான எச்சரிக்கையையும்,
எதிராளிகளிடமிருந்து திகைப்பையும்
பதற்றத்தையும், அலட்சியத்தையும்
ஒரு சேர எதிர்பார்க்கின்றன.
ஆனால் சீட்பெல்டுக்கிடையில்
கை கால்கள் குறுக்கிடும் நேரங்களில்
செல்போனின் ஒளித்திரைக்குள்ளான
என் ஒடுங்கிய தன்னுணர்வில்,
என்னை பிக்சல்களாக உருமாற்றி
அந்த நேரத்தின் குண்டங்குழிகளை பதிவிட்டு
காலாதீதமாக்க முயல்கிறேன்.       
கண்ணாடி ஜன்னல்கள் வழி உருகிப் பின்னோக்கி வழிந்தோடுகிறது
அவள் கேசம்.
அம்புக்குறிகளும்
ஒளிர்ப்பான்களும்
ஒலிப்பான்களும்
பாதையை ஒடித்து ஒடித்து
ஒரு குறுகிய வளை போல
ஆக்கத் தொடங்குகையில்
எதிர்வருபவனின் கூசும் ஒளிர்ப்பில் நிறுத்தினேன்.
அவன் என்னைக் கடந்து செல்லும் வரையிலான
கணத்தில் நான்
அவளுடன் மட்டும் தான் இருந்தேனா
என்பது மட்டுமே
இனி அடுத்த பயணத்தைத் தீர்மானிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக