வியாழன், 11 ஜனவரி, 2018

வெட்டு

இந்த நாற்றம் என்னைத் திரும்ப திரும்ப ஞாபகப்படுத்துகிறது. என் வலது காதில் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது இந்த ஈ. அசைய முடியாது கட்டிலில் பிணைந்திருக்கிறேன். ஆனால் எனக்கு எண்ணங்கள் உண்டு. இல்லையேல் அர்த்தமின்மையில் விழுந்து கிடக்கும் வாழ்வில் எதைக் கொண்டு நான் இன்னும் இழுத்துப்பிடித்துக் கொண்டிருக்க முடியும். நாங்கள் காதலித்து கல்யாணம் செய்து கொண்டோம். எட்டு வருடங்களுக்கு முன். இப்பொழுது நினைவலைகளில் நான் முன்னும் பின்னும் நிழல்களாய் பின்னிக் கொண்டிருப்பது மரணத்தை. இது வரை மூன்று முறை முயற்சி செய்து விட்டாள். நான் விடுவதாய் இல்லை. அவளும் கடைசி நொடியில் பின் வாங்கி விடுகிறாள். ஆனால் ஒவ்வொரு முறையும் அவள் அணுகும் பொழுது நான் அதை அறிகிறேன் அவள் கண்களின் வழி.
இம்முறை அது நடப்பதை நானே பார்த்தேன். என் அண்ணன் அவள் இடையைப்பற்றுவதையும், புட்டத்தை அழுத்தி அவளிடம் பேசிக்கொண்டிருப்பதையும். என்னறையிலேயே. நான் தூங்கிக் கொண்டிருந்தேன். அவர்களுக்கும் தெரியும். நான் என்ன செய்து விடமுடியும். அண்ணன் திரும்ப மடத்திற்கு செல்லவில்லை. வீட்டிலேயே தங்கி விட்டான். அவள் ஊட்டிய பால் ரவையை நான் துப்பிக் கொண்டே இருந்தேன். நான் சாகத்தான் வேண்டுமா. மருந்தும் பீ நாற்றமும் இணைந்த அழுகிய வாடை மட்டும் தான் ஒரு வருடமாய் நாசியில் நிறைத்துக் கொண்டிருக்கிறது. இந்த மருந்து நாற்றம், காற்றின் அசைவில் இருப்பு குலையாமல் வந்திறங்கும் உதிர் சருகினைப் போல அம்மை சொன்ன கதைகள், உண்மையில் கதைகளல்ல. அவளது வாழ்வில் நிகழ்ந்தவற்றை கோர்வையில்லாமல் அவளது குரலிலேயே நான் கேட்டுக் கொண்டிருப்பேன்.
நீ இருக்கம்போ, எழுவது நாளு கெடந்தேன். சர்க்கார் ஆசுவத்திரியில. செப்டிக் வார்டுனு விடிபல்பு மட்டும் எரியும். அங்க எனக்கு கிட்ட கெடந்தவ நேத்தைக்குதான் செத்தா. அவளும் சூலி. எனக்கு போதங்கெடையாது. அப்பாட்ட கையெழுத்து வாங்கியாச்சு. ஒன்னுஞ்செய்யதுக்கில்ல. ஒரு உயிருதான் பொழைக்குன்னுட்டாரு. கொடலு எறங்கி அடிவயிறு தொங்குகு. பச்சை நரம்பு தெரியும். நகம் பட்டாலே கிழியது மாறி தொலி சுருங்கி விரியு. அன்னைக்கு ராத்திரி நான் கண்டம் பாத்துக்கோ ஒரு சொப்பனம். ஒரு ஏணிப்படி, ரெண்டு செய்டும் நல்ல தொப்பை வச்சுக்கிட்டு ஏழடி ஒசரத்துல நிக்கானுகோ, கருத்த உருவமா. மூஞ்சியே இல்ல. அதுல பல்லிக்கு தோல் இருக்குல்லா அத மாறி செதிலு. வாலுண்டு, பன்னி வாலு. கைல ரெண்டு வேரும் ப்ளேடு வச்சிருக்கானுக. இல்ல, வெரலெல்லாம் ப்ளேடா இருக்கு. நான் அந்த ஏணிப்படில ஏறதுக்கு நிக்கேன். ஆனா நீ வயித்துல இல்ல. எனக்கு அப்பதான் வெட்டிழுக்க ஆரம்பிச்சிருக்கு. பொறவு கட்டைய வாய்ல வச்சு பாரு பல்லெல்லாம் கொட்டிப் போச்சு. தன் மேல் பல் செட்டைக் கழற்றி, பொக்கை வாயை காண்பித்தாள். திரும்ப அன்னைக்கு ராத்திரி அவ கூப்புடுகா! வாட்டி போவோன்னு. அதுலதான் ரெண்டாவது வெட்டுனு நெனைக்கேன். எப்படியோ கடவுள் புண்ணியத்துல செத்துப்பொழைசுல்லா மக்கா உன்னை பெத்தெடுத்தேன். வயித்தைக் கீறி. தையல் தழும்புகளுடன் சுருங்கிய அந்த வயித்துச் சூட்டில் என்னை அணைத்துக் கொண்டு குறுக்கில் தட்டிக் கொடுத்து உறக்காட்டினாள்.
எட்டி, அவனுக்கு எதியாங்கொடுத்து கழிச்சு விடுவியா, இப்படி வச்சுகிட்டிருக்க. இல்ல, எங்கயாவது கொண்டு போய் விட்டிரலாம். நீ எதுக்குட்டி இப்படி கெடந்து சாவனும்.
என்னை விட நான்கு வயது குறைந்தவள். அம்மா அவளைக் கடைசி வரை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆ...ஆ…நான் சத்தம் போடுகிறேன். எனக்கு குரலில்லை. வெறும் ஜடப்பொருளாக ஒரு வருடமாய் படுக்கையில் கிடக்கிறேன். ஆனால் மரணிக்கவும் இஷ்டமில்லை. திரும்ப சரியாகிவிடும் என நம்பிக் கொண்டிருக்கிறேன். டீவியில் கால்பந்தாட்டம் பார்த்துக் கொண்டிருக்கும் போது எனது வலது கால் சிறிது அசைய முயன்றது. நான் நம்பிக் கொண்டிருக்கிறேன் சரியாகி விடும். அவள் என்னை அணுகும் போது இப்பொழுது வெறுப்பு தட்டுகிறது. அவளைக் கொல்ல எனக்கு விருப்பமில்லை. ஆனால் அவளை அடிக்க வேண்டும் தாகம் தீர.
எட்டி, நீ சீன் படம் பாப்பியா. அவள் ஏதும் சொல்லாது சுண்டை மலத்தி தெரியாதவள் போல திகைத்தாள். உண்மையில் நடித்தாள், அது இப்போது புரிகிறது. எனக்கு கொஞ்சம் பாக்கணும். சரி பாருங்க. இருவரும் பார்த்துக் கொண்டிருந்தோம்.
இங்க வாயேன். அந்த செய்டு, இன்னும் கீழே.
நான் மேல படுத்துக்கிட்டா.
இல்லை, வேண்டாம். கொஞ்சம் சவுண்ட கூட்டு.        
நீயும் முணகு இத மாறி.
என்னத்துக்கு. எனக்கு வரல.
சும்மா செய்யுட்டி.
கொஞ்சம் திரும்பி படுங்களான். வாக்கா இல்ல. இப்படி, இப்படி.
அவள் சிரிக்க ஆரம்பித்தாள். நமட்டுதலாய் என் புட்டச்சதையை நுள்ளி விட்டு திரும்பி படுத்துக் கொண்டாள்.
அதுக்குள்ள பஞ்சராயிட்டாக்கும்.
நான் செவுளில் ஒன்று விட்டேன். அவள் எதிர்பார்க்கவில்லை அதை.
இப்ப என்னதுக்காக்கும் அடிச்ச.
வா! திரும்ப வச்சுக்கலாம்.
ஆமா…பேசாம படு.
இல்லை. நீ வா. வலிக்கும் வரை கடித்தேன்
அவள் சத்தம் போட்டாள். மதர்த்த பின் சதையை கை விரல்கள் பதியப்பதிய சிவக்கும் வரை அடித்தேன்.
விட்டிரு. விடுகியா?

அப்பொழுதுதான். இந்த ஓஷோ கதை ஞாபகம் வந்தது.
அறையில் இன்னொருத்தன் மனைவியுடன் புணர்ந்து கொண்டிருக்கிறான் ஒருவன். கணவன் வந்து விடுகிறான். இவன் தப்பித்து ஓடுகையில் அவன் குறியைக் குறி பார்த்து சுட்டு விடுகிறான். அவன் தன் நீள் நாக்கை வெளியே காட்டி வலிச்சம் காட்டிக் கொண்டு ஓடுகிறான்.
இன்றும் எல்லாக் காலையும் போல, பூஜை செய்து விட்டு திரு நீறிட்டாள். இன்னைக்கு நம்ம கல்யாண நாள். நான் கண்களை அகலத் திறந்து சமிக்ஜை செய்தேன். கண்ணீர் துளிர்த்து சன்னமாக வடிந்து கொண்டிருந்தது. அண்ணன் வந்திருந்தான். பதின்ம வயதுக்குபிறகு அவனிடம் பெரிதாக உரையாடியதேயில்லை. அண்ணன் தம்பிகள் உண்மையில் எதிராளிகள். சக போட்டியாளன் தான் இப்போது. அவனைப் பார்த்ததும் இவள் கண்கள் பூரித்ததா இல்லை வெறும் மயக்கா. அவன் அனுசரணையாக என் தலை மயிரைக் கோதி விட்டு நெற்றியில் முத்தமிட்டான். அவன் இப்படி செய்பவனல்ல. விசித்திரமாக இருந்தது. திரும்ப அம்மையைப் பற்றி பேச ஆரம்பித்தான்.
என் எண்ணங்கள், மேற்கூரையில் அசையாது நிற்கும் பல்லியைப் பார்த்துக் கொண்டிருந்தது. என்னிருப்பும் அதுவும் ஒன்றானது மாதிரி பிரமை. சிறு அசைவுமில்லை. வால் மட்டும் சற்று நெளிகிறது. பக்கவாட்டு கண்கள் மனிதக் கண்களைப்போல அவ்வளவு துல்லியம். இரட்டை நாக்கு, கதவிடுக்கு வழியே வெளிக்காற்று அனிச்சையாக பீறிடுவதைப் போல நீட்டி விழுங்கியது. வெண்மையான மேற்பரப்பில், இடது முக்கிலிருக்கும் சிலந்தி வலையை பார்த்துக் கொண்டே பல்லியையும் கவனப்படுத்திக் கொண்டிருந்தேன். சில நேரம் அது விரிந்து பெரிதாவதைப் போல தோன்றியது. அசையாதிருந்த ஒரு நொடித் துளியில் சட்டென, ஒரு கொசு நாக்கில் அகப்பட்டு வாயினுள் பிதுங்கி அறைபட ஆரம்பித்தது.
நான் என்ன செய்யதுக்கு சொல்லுங்க. இதுக்கு மேல முடியல. ஆனால் அவரை விரும்புறேன். அது எனக்கு நல்லாத் தெரியும்.
சரிதாம்மா, இது இப்படியே போனா சரிப்பட்டு வராது.
சமூகத்திற்கு தேவையில்லாதவைகளை அவர்கள் மூர்க்கமாக விலக்குவது இயல்புதானே. நான் உயிர் வாழ்வது யாருக்காகத்தான். இல்லை. எதுக்குத்தான். அப்புறம் ஏன் என் உயிர் போகலை. நான் சாவதுக்கு விரும்பலை. ஆனா நான் செத்துதானே தீரணும். இப்படிக் கொண்டு வந்ததுக்கு யார சபிக்க. என் பழைய உருவத்தை மனக்கண் முன் கொண்டு வர முயன்றேன். வாகான உடல் வாகு. ஜிம்முக்கு போய் கட்டுமஸ்தாக்கிய கைகள், மார்பு, தோள்பட்டைகள். பல்லி என் தலைக்கு நேராக நின்றிருந்தது இப்பொழுது. இடது காதினுள் கொசு அதன் ரீங்கரிப்பை சகிக்கவொண்ணாத வண்ணம் எழுப்பியது. கைகளை எழுப்ப என் உயிர் முழுவதையும் இணைத்து, ஒரு பெரும் பாறையை நிமிர்த்தும் பிம்பம் என் கண் முன் நிழலாடுவதாய் எண்ணிக் கொண்டு அசைக்கிறேன். கனத்து கிடந்தது உடல். எந்த அசைவுக்கும் இணங்கவில்லை. ரத்த ஓட்டம் மூளை நரம்புகளில் அழுந்தி கண்கள் சிவப்பதை உணர்ந்தேன்.
எப்பொழுதும் என் முன் கண்ணாடி ஒன்றில், நான் என்னையே பார்ப்பது போல உருவகிப்பேன். சீழ் படிந்த அந்த வாதை முகம் அதில் எனக்கு தெரிவதில்லை. என் பழைய முகத்தை அதில் கொண்டுவந்து நான் செய்ய இயலாததையெல்லாம் அந்த பிம்பத்தைக் கொண்டு செய்ய முயல்வேன். அன்றும் அப்படி முயற்சிக்கையில், கால் நரம்புகளில் வலியூடுருவதை உணர்ந்தேன். கழுத்துக்கு கீழ் வலியென்பதை அதுவரை உணர்ந்ததில்லை. நான் குதூகலித்து விக்கித்து எனக்குள் ஓலமிட்டேன். பாலைவன மணலில் தனித்துக் கிடக்கும் ஓநாயின் இரை தேடும் தனிமையின் அகால இரவுகளையும், பசியின் உன்மத்தத்தில் அதன் எச்சில் வழியும் தாடையில் சிவந்திருக்கும் அதன் ஈறுகளையும் அங்கு காண்பேன். அது நான் தான்! நான் தான்!
எனது பால்ய நண்பன் சிராஜ் வந்திருந்தான். எனக்கு நண்பர்கள் இருந்தார்கள். ஆனால் என்னை அதன் பிறகு யாரும் வந்து பார்க்கவில்லை. நெருங்கிய நண்பன் பாலா, என்னை உற்றுப்பார்த்து இது அவனில்லை என்று சொல்லிக் கொண்டு கடைசியாக சென்றது தான் ஞாபகம். அதன் பிறகு யாரும் வந்திருக்கவில்லை. அவனது இளமைத் தோற்றம் எனக்கு வெறுப்பைத்தான் உருவாக்கியது. எரிச்சலும் தன்னிரக்கமும் சேர, நான் கண்களை மூடிக் கொண்டேன். என் இமைகளுக்குள் ஓயாமல் நடுங்கிக் கொண்டிருந்தது. அவனைக் காறி உமிழ வேண்டும் போல இருந்தது.
இவளே என்னைக் கொன்று விட்டால் தீர்ந்தது. ஆனால் அவளுக்கும் தெரியும் நான் அதை விரும்பவில்லை என்பதை. அந்தக் கடைசி சந்திப்பில் தான் எத்தனை வன்மத்தைக் காட்டியிருப்பேன் அவளிடம். ஆனால் அவளுக்கும் தெரியும். நான் நம்புகிறேன். நான் அவளை என் வாழ்நாள் முழுமைக்கும் விரும்பிக் கொண்டிருக்கிறேன். தெரியவில்லை, சில சமயம் என்னுடல் போலவே அவளுடலையும் எண்ணுவேன். அவளது அசைவுகளை நான் என் அசைவற்ற உடலில் பாவனை செய்து கொண்டிருப்பேன். அதனால்தான் அன்று அவளிடம் கட்டற்ற வெறுப்பையும் பிரயோகித்தேனோ என்னவோ. இதெல்லாம் ஞாயப்படுத்துதல்கள். உண்மையில் அவள் எனக்கு தேவை. அதற்கு மேல் அவள் என்னிடம் எதிர்பார்த்தாள். இப்பொழுது பல்லி அங்கில்லை. வெற்றுச்சுவர். வெளுத்த சுவரின் மேற் தோல். ஏதுமற்ற சூன்ய வானம். ஒரு வருடத்தில் அதை நான் வானமாக மாற்றி விட்டிருந்தேன். அங்கு நட்சத்திரங்கள் உண்டு. சூரிய சந்திரர்கள் உண்டு. ஆனால் மேகங்களை நான் உருவாக்குகையில் நான் அவனைப் பார்க்க ஆரம்பித்தேன்.
மேகங்கள் அசைகையில் அதன் இடைவெளி வழியே அந்த மனிதன் என் பிம்பக் கண்ணாடிக்குள் புகுந்து விட்டான். பின் நான் என்னைப்பார்க்கையில், என் பின்னால் கருப்பு ரூபமாய் நிழலாய் அவனும் இருந்தான். அவளிடம் அதை தெரிவிக்க முயல்கையில் அவனது கூர் உகிர் என் பிம்பத்தின் கழுத்து நரம்புகளுக்குள் நுழையத் துடிக்கும். அந்த மனிதனுக்கும் முகமில்லை. அங்கு எதுவுமில்லை. இருந்தது. ஆனால் அது காட்சிப்பிறழ்வில் தோன்றி மறைந்து விடும். எனக்கு மிகப் பரிச்சயமான உடல் தான் அது. நான் வாழ்நாள் முழுவதும் அதை சூட்சுமமாய் அணுகி உணர்ந்திருக்கிறேன்.
இப்பொழுது காட்சிகள் எதுவும் தெரியவில்லை. கண்கள் மங்கி, வடிவிலிகளாய் என்னைச் சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நான் மெத்தையில் இல்லை. எங்கிருக்கிறேன். வீட்டிலுமில்லை. வெட்ட வெளி. ஆனால் நான் தனியனாக இல்லை. சூழ நிற்கும் எல்லா உருவங்களும் நான் தான். பெரும் பனிப்பாறை உருகுதல் போல அந்த உடல்கள் பார்வைக்கெட்டா தொலைவிலிருந்து உருகி என்னைச் சுற்றி வட்டமாக இடைவெளி விட்டு கீழே பாழ் நிலத்தில் வடிந்து கொண்டே இருக்கிறது. நான் நிற்கிறேன், என்னால் உடலை அசைக்க முடிகிறது. என் பார்வை இன்னும் கூர்மையாகிறது. புலன்கள் இன்னும் இன்னும் என்று ரீங்கரிக்கிறது. படிவமாய் என்னைச் சுற்றியிருந்த நிலம் கண்மண் தெரியாது தலை தெறிக்க சுழல்கிறது. பார்க்கும் வெண்ணிற வானத்திலிருந்து பல்லிகள் மழையாய் பொழிந்து கொண்டிருக்கிறது. ஜெராக்ஸ் எடுத்தது போல ஒரே பல்லிதான் அத்தனையும். திரும்ப திரும்ப சத்தமிடுகிறேன் ஒலியின்றி மௌனத்தைத் துளைத்துக் கொண்டு அந்தக் கூச்சல், பாறை இடுக்குகளில் சிக்கிக் கொண்டு தேங்க ஆரம்பிக்கிறது. மௌனம் கலைகிறது. பார்வை எதையோ தவிர்க்க சொல்லிக் கொண்டே உந்துகிறது. அவள் நிற்கிறாள் அங்கு. அம்மணமாக. தொப்புளிலிருந்தே சுருள் மென் மயிரோட்டம், கருத்த மென் வெளிச்சதை, உள்ளே சிவந்து துடிக்கும் வழி, அவள் என்னை அழைக்கவில்லை. தூரத்தில் நிற்கிறாள். அவள்! அவளை நான் விரும்புகிறேன் என் வாழ்நாள் முழுமைக்கும் என்று பிதற்றுகிறது என்னைச் சுற்றி உருகி வழியும் கட்டில்லா என்னுடல்கள்.
ஆனால் முகம் அவளுடையதல்ல. இது யார்? அவள் சூலியாகிருந்தாள். அம்மை பார்த்த மரணித்த பெண்ணா? அவளைத்தான் எனக்குத் தெரியாதே! அம்மையின் முகமாகவும், நான் பால்யத்தில் விரும்பிய அத்தையின் முகமாகவும் உருமாறியது. இப்பொழுது பலமுறை என் விந்தினைத் தெறித்த முகம். முகங்கள் அலைவிளிம்புகளில் பட்டு மருண்டு சலனமாகி முகமல்லாத உடலாகியிருந்தது. ஆனால் அவள் இப்பொழுதும் அழைக்கவில்லை.
ஏங்க…ஏங்க…என்னாச்சு! கடவுளே!
எனக்கு திரும்பவும் வெட்டு வந்திருந்தது. ஆனால் இம்முறை அதை நான் கிரகிக்க முடிந்தது. அசையாத என் கால்கள் இழுபட்டு கட்டில் விளிம்புகளில் மோதி ரத்தம் சொட்டியது. என் கைகள் மூடி இறுகியிருந்தது. என்னால் விரல்களை அசைக்க முடிந்ததை, வாய்க் கோணுவதை அந்த பிம்பத்தில் நான் காணும் போதே அது உடைந்து சிதறியது. அந்த நிழல் மனிதனும். திரும்ப என்னுடைய பழைய முகத்தை என்னால் நினைவு படுத்திக் கொண்டு வர முடியவில்லை. எதுவுமே இல்லாததாய் இப்பொழுது நான் மாறியிருக்கிறேன்.
எதுவுமே நினைக்க முடியாத ஒன்றாய். ஆனால் அதே நாற்றம் என்னைத் திரும்ப திரும்ப ஞாபகப்படுத்த முயற்சிக்கிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக