3
அந்திக்கருக்கல்.
ஒற்றையடிப்பாதையின் வழக்கமான மென் தோல் பிருபிருப்பு, ஒவ்வோர் காலடியிலும் செருப்பின்
கீழ் சதையை ஊடுருவிக் கொண்டிருந்தது. தேங்கலில்லாத நீரின் ஓட்டத்தில் சிறுபிள்ளைகளின்
குழைவு. மதகில் அவிழ்த்துப் பொங்குகையில், கைகளைத் தூண்டி அழைக்கிறது. நித்திய சூலியாய்
நின்றிருந்தது வேம்பு. பட்டையிலிருந்து ஒழுகும் பிசின் நீர்த்துமியைத் துழாவி, இரவின்
மென்னிருளை ஸ்பரிசித்து நாசிகளில் மணத்தியது. சாரைப்பாம்பு அசைவை மெதுவாய் உள்ளிளுத்து
நீரோட்டத்தில் கரை தாண்டத் திமிறி, தலை உந்தி பின் நீருக்குள் முழுகியது. படித்துறையில்
பாசி நெடியினுள், நத்தைகள் குமுழிக் கொண்டே தனித்தனியாய் மோனத்தினுள் ஆழ்ந்து கற்படியில்
விக்கித்திருந்தது. வீடுகளின் கண்கள் அணைந்து கொண்டிருந்தன. ஆல மரத்தின் கிளைகளில்,
இரவை அணங்காமல் அழைத்துக் கொண்டிருக்கும் பல நூறு நாக்குகள்.
பிருஷ்டம் போலவா,
கூம்பா, இளம் முலைகளா, மூக்கு, முண்டிய வயிறு, கால்கள். எனக்கு முன்னால் வியாபித்துப்
படர்ந்திருக்கிறது அந்தக் கருமை. உண்மையில் அதன் கோட்டு வெளிச்சம். வானம் இணையும் எல்லையில்
சர்ப்ப நெளிவைப் போல. வடிவில்லாத காலமாய் உந்தி நிற்கிறது. காலம் கொண்டு அதனைப் பறண்டிக்
கொண்டிருக்கிறேன். திகைத்து நிற்கையில் இந்தக் கதையின் ஞாபகம்.
ஆரண்யத்தில் பெரும்
முலைக்காரியை யாவருமறிவர். இருளின் நிறத்தில் அவள் பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள். வானத்துடன்
புணர்ந்து பெற்றாளா இல்லை ஓயாது சமரிட்டுக் கொண்டிருக்கும் கரிய காலனை ஆலிங்கனித்து
அவர்களுக்கு உருக்கொடுத்தாளா தெரியவில்லை. அவர்கள் பிறவியிலேயே அங்கங்கள் வளர்ந்த உருளைக்கற்களால்
தேகம் வார்த்த பெரும் ரூபங்களாக வனம் படர்ந்து கிடந்தனர். தம் பிள்ளைகள் சப்பிய பால் போக மிச்சப்பால் வனாந்தரத்தின்
இண்டு இடுக்குகளிலெல்லாம் ஒழுகி வளம் நிரப்பியது. சாகா வரமடைந்த பூக்களையும், வண்டுகளையும்,
வானமுந்தி அழைக்கும் நீள் மரங்களையும், வேர்களே உயிர்களாய் பச்சை நிரப்பும் புற்பூண்டுகளையும்,
கிழங்குகளையும். வனப்படைந்த ஓராயிரம் முலைக்காம்புகளாய் சக்கைகளையும், தன் கனாக்களைக்
கொண்டு எண்ணற்ற சிறகுகளையும், மத நீர் கொண்டு வண்ணத்துப்பூச்சிகளையும், அக்குள் வியர்வை
கொண்டு சுனைகளையும், தடாகங்களையும் உருவாக்கி வளம் பெருக்கினாள்.
தனி ராஜ்ஜியம்
நடத்தும் அவளது பிரதேசத்தில், அங்கிங்கெனாத படிக்கு பிள்ளைகள் நிரம்பி வளர்ந்தன. ஆரண்யம்
தாண்டியும் அவளது கால் விரல்கள் வெகுதூரத்திற்கு நீண்டு கிடந்தது. கோப முனி எறிந்த
வெட்டுக்குத்தியால் அகழ்ந்த நிலத்தில் தன் மைத்துனன் நீலாழியைத் தழுவிக் கொண்டு காலமற்று
ஆட்சி நடத்திக் கொண்டிருந்தாள். அவளுக்கு பெயரில்லை. சூட்சுமமாய் தன் கோவிக் கைகளால்
பிள்ளையைத் தழுவிக் கொள்ளும் அம்மையைப்போல, கன்னியம்மையின் ஒளிர் மூக்குத்தி போல, வராகன்
அகழ்ந்தெடுத்த தேவியைப் போல, வட்ட வடிவினளாய், வளைந்து தடாகையாய் கொழித்து செழித்திருந்தாள்.
தன்னைத்தானே அழித்தெடுப்பவள்,
தீக்கனல் சொரியும் இசக்கியவள். தன் பிள்ளைகளைக் கடித்து விழுங்கும் அவளது தழல் நாக்குகளை
நான் கண்டிருக்கிறேன். ஆனி ஆடி மாதங்களில் அவளுக்கு வெறி பிடிக்கும். மலைகளையெல்லாம்
தன்னுள் விழுங்கிக் கொள்வாள். நிலத்தையெல்லாம் தன் செண்பக விரல்களால், கசக்கியெறிவாள்.
கால் விரல்களின் கூர் உகிர்களால் உயர்ந்தனவற்றையெல்லாம் நெட்டித்தள்ளி பொடியாக்குவாள்.
அடங்காச் சினம் உருளும் அவள் நாசிகளில், உஷ்ணத்தின் தீக்கங்குகளாக இருள் தெறிக்கும்.
பிள்ளைகளை தன் அடங்காப்பசிக்கு வாரி வாரித் திம்பாள். ஒழுகும் கொதி மத நீர் அப்பொழுது
சாரை சாரையாக கரு நாகங்களாய் உருவெடுத்து விடம் கக்கி, சூழ்ந்த பசுமையினைக் கரித்துக்
கொண்டே செல்லும். எதுவும் மிஞ்சாது பாலையாவது வரை அவளின் உமிழ் நீர் திராவகமாய் பொழிந்து
உயிர்களை வதைத்து சிதைத்து அழிக்கும்.
பின் அடங்குவாள்.
கருமையினைக் குடித்துக் கொண்டு, தனிமையில் தன் செந்தழல் கண்களால் உடலை நோக்குவாள்.
வறண்டு தொங்கும் முலைகளையும், காரை எலும்புகளையும், வெறித்து, காய்ந்திருக்கும் தன்
அல்குலையும் காண்பாள். வானத்தை விழுங்க அண்ணாந்து கிடந்தாள். பொறுமையின்றி புரண்டு
உருண்டாள். அந்த சமயம் தான் கட்டைமுனி அவள்
பிரதேசத்திற்குள் நுழைந்தார். அதுவும் ஒரு கருக்கல் நேரம். அந்தகாரம் தன் மேற் போர்வையை
குமிழ் குமிழாக திறந்தும் மூடியும் போக்கு காட்டிக் கொண்டிருந்தது. கதிரவன் சென்னிறக்
கோழையாய் பாலையின் வெண் சாம்பலில், உழைந்து கொண்டிருந்தான். தாகமெடுத்த முனி கமண்டல
நீரை கைகளில் ஊற்றினார். விஷம் சூழ்ந்த சூழ், உஷ்ணத்தில் நீர் வற்றி விட்டது. தடாகங்கள்
கிடந்த சதுப்பு, வறண்டு அவளது உப்புக்குத்தியின் வெடிப்பாய்க் கிடந்தது. அங்கு இரு
கரு உருவங்கள், ராஜ நாகங்களைத் தோலுரித்து சவைத்துக் கொண்டிருந்தான் ஒருவன். உடும்பின்
தலையை ஒடித்து அதன் மென் அடித் தோலை தன் வீரப்பற்களால் இழுத்து கரும்பை மெல்வது போல
அதன் சூடான குருதி ஒழுக சுவைத்துக் கொண்டிருந்தான். அவர்களுக்கு உருவமில்லை. ஒரு வேளை
இருந்ததோ. ஆம்! அவர் திகைத்து விட்டார், இது வரை அவர் அறிந்த அவரது முன் முடிவுகளில்
உதித்த எந்த உருவமும் அவர்களுக்கில்லை. ஆனால் ஏதோ ஒரு த்வனியில் அவர்களை ஆண்கள் என்று
மட்டும் கணித்து விட்டார். மேலும் அவர்கள் சிறுவர்கள் தான் என்பதும். ஆனால் ஊகிக்க
முடியாத கொடும் நாற்றம் அந்தச் சூழலை அவரின் கண்களிலிருந்து மறைத்தது.
கருமையின் கார்வை
அங்கு மெல்ல ஒரு பிணத்தைப் போர்த்துவதைப் போல அவரை முழுக்கடித்தது. அவர்கள் தான். இப்பொழுது
இரை கிடைத்த குதூகலத்தில் பாலையின் செம்போத்துகளாய் கீறினர். மானுட ரத்தத்தின் வாசனை,
புளித்த தேனைப் போல கிறங்கடித்தது. அவர்களின் வயிறு இருக்குமிடத்தில் இருளாய், நிரம்பாத
பிலங்கள். இருளுக்குள்ளிருக்கும் முனி பெரிதாகிக் கொண்டே இருந்தார். இவர்கள் விழுங்க
முடியாத அளவு, ஆனால் இவர்களும் தத்தமது தாடைகளை விரித்துக் கொண்டே இருந்தனர். அவர்
முடிவிலி வரை உந்தியிருந்தார். தழல் நாக்குகளின் சிவந்த உள்ளறைகளிலிருந்து, நெருப்பு
ஒரு பாதாள நீரோட்டமாய் அலையாடிக் கொண்டிருந்தது. பிளந்த வாயை மூட இயலாது கதறினர். தாடை
கிழிந்து கொடிக்கம்பம் சருகி விழுவதாய், உதிர் சருகுகளாய், தலை வெட்டிய அரவங்களாய்,
காட்டு நாய்களின் முணங்கல்களாய், பிளிறலாய், உறுமலாய், விதிர்த்தலாய், கேவலாய், அதட்டலாய்
பல்லாயிரம் விளிகள். மல்லாந்து கிடந்த வறுமுலை அம்மையின் காதுகளில் கீரிச்சிடலாய் அணங்கிக்
கொண்டிருந்தது.
கட்டைமுனி பிள்ளைகளுக்கு
வாய்ப்பூட்டு போட்டு, பசித்து சாக சபித்து நிலத்தை விட்டு அகல எத்தனித்தான். எல்லை
தாண்ட முயல்கையில் அம்மையின் அழைப்பு. அவள் கட்டை முனியை நன்கறிவாள்.
எங்க போறியோ…!
என்னய இங்கன சாவ
உட்டுட்டு போவாதியோ…!
கேளும் வே…
அவள் அழகிய ரூபமெடுத்து
அவர் முன் சிருங்கரித்தாள்.
என்னத் தெரியலயா…
லோபமுத்திரை. வெகு
நாள் தேடியலையும் அவள் இங்கெப்படி வந்தாள். கட்டை முனி திடுக்கிட்டார்.
இங்கெப்படி வந்தாய்.
அன்னைக்கு கடைசியா
நீங்க என்ன உட்டுட்டு போன பொறவு, பயங்கர மழை, ஒரு நாகம் வீட்டுக்குள்ள வந்து குட்டி
போட்டுச்சு. அது ஒரு ராத்திரிலேயே நம்ம குடில் அளவுக்கு வளந்துட்டு. நான் பயந்துட்டு
ஓடப்பாத்தேன். ஒங்கள விளிச்சேன். அது என்ன முழுங்கிட்டு. ஆனா, அதாலே முழுசா திங்க முடியல.
இங்கன என்னத் துப்பிட்டு போய்ட்டு. நான் நீங்க வருவீங்கனு இத்தன நாள் காத்துக்கெடந்தேன்.
எப்படியோ இந்தா வந்துட்டேள்ளா. என்ன இங்கருந்து கூட்டிட்டு போய்ருங்கோ.
ஆனால் அவள் தந்திரமாக
அவரை மயக்கி இங்கேயே இருத்தி, தன்னை மீட்டு விட முடிவு செய்திருந்தாள். காமத்துடன்
அவரை நெருங்கித் தழுவினாள். மலை அருவிகளின் சுகந்தம் அங்கு நிரம்பியது. அருகில் நெருங்க
நெருங்க கட்டை முனி விடைத்தார். பாசியுடன் இணைந்த மென் துமி ஒரு சரச நாதமாய், ஒலி புனைந்து
நிலத்தில் புரண்டது. தீராக் காமத்துடன் அவர்கள் சர்ப்பங்களாய் பிணைந்து புணர்ந்தனர்.
தன் சூட்சும உடலை விட்டு கட்டை முனி ஒரு சிறுவனாய் உணர்ந்தார். அவரது குழந்தைமையை முத்தி
இறுக்கினாள். அடுக்குகளாய் பிரிந்திருந்த அவரது அகக் கட்டுமானத்திற்குள் தாகம் இறைக்க,
அவளது கேசம் அனல் நீரோட்டமாய் தொண்டைக் குழியில் இறங்கியது. அவர் நீலம் பாய்ந்த மதலை
போல, அவளது கைகளுக்குள் துவண்டார். மோனமிழந்த சூழலில் அவளது மதம் உருகி வழிந்து நிரம்பிக்கொண்டிருந்தது.
அவள் தன்னிலிருந்து எல்லை மீறி பீறிடும் முலைக் கண்களை, கணக்கற்ற தழல் அதரங்களுக்கு
ஊட்டினாள். அடி நீரோட்டமாய்க் கலங்கியத் தொழியாய் நிலமெங்கும் பால் பொங்கிவழிந்தது.
அது ஒரு பாலாழியாய், அந்த நிலமே ஒரு தோணியாய் உருமாறி அசைந்து கொண்டிருந்தது. விடைத்த
அவரது குறியை மெல்ல மெல்ல அதக்கிப் பிழிந்தாள்.
சலனத்தின் மெல்லிய
நொடி, தன்னைத் தின்று கொண்டிருக்கும் ஓநாயின் ஒளிக் கண்கள். இல்லை! இல்லை! ஸ்தம்பித்தது.
இறுகியிருந்தது அவரது உடல். சுருங்கிய தேகத்தில் தீப்புண்கள். எழுந்து ஓங்கரித்தார்.
நீ! நீ!
அவள் வனத்தையே
இடையாடையாய் அணிந்திருந்தாள். பொங்கிப் பெருகி சூழ்ந்து கொண்டிருந்தது ஆரண்யம். மதர்த்த
அவளது முலைகளில் இன்னும் இன்னும் என்று நிறையாத பாலருவிகள். பாம்புகளை அரையிலும், கழுத்திலும்
அணிந்திருந்தாள். குருதி சொட்டும் வெண் வீரப்பற்கள் தாடை வரை தொங்கிக் கிடந்தது. கருமையாய்
உருண்ட விழிக் கோளங்கள். நீள் மூக்கின் விடைத்த நாசிகளில் உஷ்ணப் புகை. நெற்றியில்
இமையற்ற ஒற்றைக் கண். அதில் பார்வை இல்லாத வெறித்த அந்தமற்ற நோக்கு. காதுகளில் எலும்புக்
குழைகள். கருப்பி! கருமைக்கு உருவம் கொடுத்தால் உருவாகும் வடிவு. ஆனால் அவர் நோக்க
நோக்க எஞ்சியிருக்கிறது இன்னும் அவளது உடல். கண்கள் தாங்க இயலாத அரூபத் தோற்றம். அயர்ந்து
அயர்ந்து வடிவு தேடும் அகம். ஆனால் வடிவற்ற பிரம்மாண்டம். தெற்கிலிருந்து மேற்கு நோக்கி
அவள் வளர்ந்து கொண்டே இருந்தாள். அவர் காணுந்தோறும் எல்லையின்மையாய் அவரது அறிதல் உடைந்து
கொண்டே இருந்தது.
இதுக்கென்ன உருவம் கொடுப்பது என்பதை யோசித்துக் கொண்டிருந்தேன்.
நீள் மஞ்சள் மூக்குப் பறவை ஒன்று இரை தேடும் திண்டாட்டத்தில் வேம்பின் கிளைகளில் சப்தித்தது.
வள்ளியாமடத்து இசக்கி கோவிலின் களப மணம். முக்குத் தாண்டி வந்து கொண்டிருந்தேன்.
படித்துறையில்
மெல்ல அளைந்து கொண்டிருக்கிறேன். கைகளுக்குள் அகப்பட்டும் நழுவியும் செல்கிறது இந்த
கனத்த நீர்த்தாரை. எங்கிருந்து வந்து கொண்டிருக்கிறாள். யாரது முலைக்காம்புகளிலிருந்து
கசிகிறது.
புரண்டு படுக்கிறேன்.
அம்மை திரும்பி படுத்திருக்கிறாள். அம்மையின் முடிக்கற்றை இருளினுள் விகாரமாய் உருவெடுத்திருக்கிறது.
விடிபல்பு வெளிச்சத்தில் அதனுள் வடிவம் தேடிக் கொண்டிருக்கிறேன்.
அதற்கு வடிவங்களே
இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக