இடைவெளிகளுக்குள்
உள்ள நிறுத்தமே
அந்த பாதைகளைத்
தீர்மானிக்கச்
சொல்கின்றன.
சிகப்பு விளக்குகளில்
ஒரு குரூரம் ஒளிந்திருக்கிறது.
அது நிற்கச் சொல்லும்
நிலம் தற்செயலானதல்ல.
அங்கு சகபயணிகள்
வன்மத்துடன் உற்று
நோக்குகின்றனர்.
குறுக்கே தலைதெறிக்க
நகரும் பெட்டிகளின்
அலட்சிய பாவமோ
பாதைகளை மறுதலித்து
பயங்காட்டுகின்றன
மஞ்சள் விளக்குகளை
நான் அணுகுகையில்
அது ஒரு தவளையைப்
போல உருமாறி
பாதைகளைத் தாண்டிய
பொது நிலத்தில்
சாடி மறைகின்றன.
அதனைப் பின் தொடர்ந்தவர்கள்
திரிசங்காய் ஊசலாடுகின்றனர்.
அவர்களின் ஏக்கப்பார்வைகளில்
இதுவரை விடுபட்ட
பல்லாயிரம் வழிகளின்
துர்சொப்பனங்கள்
வந்து துக்கம்
விசாரிக்கின்றன.
நான் இக்கணம்
புறமுதுகு காட்டித்
திரும்பினேன்.
ஆனால் என் கால்கள்,
அதன் முன்னம் நுனிகள்
அந்த இடைவெளிகளில்
குறிப்பெழுதத் தொடங்கின,
Take
Diversion.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக