திங்கள், 30 ஜூலை, 2018

கிறுஸ்துவின் கடைச் சபலம் 4

அவன் ஒரு தச்சனா? வெறும் தச்சனா? ஆமை தன் ஓட்டினுள் பதுங்கிக் கொள்வதைப் போல இங்கு வாழ்கிறான். இவனா நாம் தேடித் திரியும் ஒருவன். ஒரு அந்தரங்கமான நடுக்கத்துடன் படுத்திருந்தான் இளைஞன். தன்னுள் ஒடுங்கிய மெலிந்த தோற்றம், கூச்ச சுபாவம் மிகுந்த உள்முகமாய் இருக்கும் ஒரு பயந்தவனாய் பார்ப்பதற்கு தோன்றியது. குடிகாரனைப் போல போதை ததும்பிய சிவந்த விழிகள். நிலை கொள்ளாத பார்வை. நீள் முகத்தில் தீட்சண்யமாய் ரேகைகள். மெலிந்திருந்தாலும் வலுவான புஜங்கள், அவன் ஒரு தச்சன் என்பதை நினைவுறுத்தியது. மணிக்கட்டுகளிலிருந்து கிளம்பும் பச்சை நரம்புகள் முழங்கை வரை புடைத்திருந்தது. தோள்பட்டை அகன்று சற்று உயரமான பெரிய உடல் வாகு கொண்டவனைப் போல இருந்தான். ஆனால் எதன் பொருட்டோ உருவாகிய அனிச்சை பாவம், ஒரு தீர்க்கமான நோக்கு அவனை அலைக் கழித்துக் கொண்டே இருந்ததை அவனது உடல் மொழி உணர்த்தியது. உறக்கத்தில் கூட ஒடுங்கி குறுகி அவ்வப்பொழுது விதிர்த்து உயரும் அவனது உடல் ஒரு பைத்தியக் களையையும் அதே நேரம் ஒருமித்த ஒரு தேடலும் சதா போராடிக் கொண்டிருப்பதாய் உணர்த்தியது.

அவன் தான். அவனே தான். இனி தப்பிக்க வழியேதுமில்லை.
வீரர்களே, தேவனுக்குத் தெரியும். அவனே அறிபவன். இவனையும் பின் வரும் அனைவரையும் அவன் தன் இமையா விழிகளுடன் நோக்குகின்றான். காலங்களின் மூப்பும் தொய்வும் அணக்கமும் அலைவும் கடந்ததின் இருப்பதின் வருவதின் சூட்சுமம் அறிந்தவன் அவன்.

செந்தாடிக் காரனின் கால்கள் பாலை மணலில் அழுந்தப் பதிந்தன. அவனது கால் விரல்களிடை வெண் மணல் திரவக்குமிழ் போல கொப்பளித்தது. ஆனால் அவனது வீரர்களான குள்ளர்கள் அவனைப் பற்றிக் கொண்டு முன்னேறிச் செல்ல விடாமல் தடுத்தனர்.

அங்கே பழைய அழுக்கு உடைகளில் தச்சனைப் போல அதிகம் பேர் இருக்கின்றனரே! எவ்வாறு நாங்கள் அவனைக் கண்டறிவோம்?

அவன் எங்குள்ளான். பார்க்க எப்படி இருப்பான். ஏதேனும் குறிப்புணர்த்துங்கள். நாங்கள் பதற்றமடைகிறோம். அவனது தோற்றம் வடிவம் ஏதாவது சொல்லுங்கள். உங்களின் குரலுக்காக தயாராக இருக்கிறோம்.

நான் முத்தமிடுவேன். என் மார்பழுந்த இறுக்கி அவனை என் கைகளுக்குள் துடிதுடிக்க அணைத்து முத்தமிடுவேன்.

வெளிச்சம் இன்னும் முழுமையடைந்திருக்கவில்லை. இரவு முடிவே அடையாத தொடர் நிகழ்வாய் சுழலை பாதி உண்ட இரை போலக் கவ்விக் கொண்டிருந்தது. கோட்டான்களின் குழறல் ஒலி. இரவின் நிழல் வடிவங்கள் மறைந்தும் பின் வெளிப்பட்டும் வடிவங்களைச் சிதைத்து, உருவாக்கிக் கொண்டிருந்தது. முற்றிலுமான சப்தமின்மை.

ஆம்! முன்னேறுங்கள். படுக்கை விரிப்புகளுக்கடியில் ஊறும் முட்டைப் பூச்சிகளைப் போல அதிர்வின்றி அவர்கள் நகர்ந்தனர். அறையினுள் இருள் ஒரு வளர்ப்பு மிருகம் போல அவனது எண்ணங்களினுள் மடிந்து கிடந்தது.

தப்பித்து விடக்கூடாது. தங்களுக்குள் கட்டளைகளை அவர்கள் உணர்ந்து கொண்டனர். காலம் ஒரு அணங்காய் உச்சபட்ச கவர்ச்சியுடன் அவனது கழுத்தை இறுக்கியது. கனவினுள் ஆழ்ந்திருந்தான் இளைஞன். கனவினுள் பலியாவதை அவன் விரும்பியிருந்தான். ஆனால் யாரும் கனவிற்குள் சாவதில்லை. அதன் எல்லை வரை சென்று மீளும் சாகசத் தூண்டல் இருக்கலாம். ஆனால் அவன் உள்ளூர தன்னை ஒப்புக் கொடுத்திருந்தான். தன்னைத் துரத்தும் அதன் வேர்களை அறியும் ஆர்வத்தில் மேலும் மேலும் கனவினைத் தன் வாழ்வனுபவமாக மாற்றியிருந்தான். ஒவ்வொரு நொடிப்பொழுதும் தன்னை இம்சித்துக்கொண்டே இருக்கும் இந்த கூர் நுனியில் அமிழ்ந்து உயிர் விட எண்ணினான். அது அவன் வழக்கமாக காணும் கனவு தான். தினம் இந்த சித்திரவதைக்குள் தன்னை அகப்படுத்தி மீள முடியாத எல்லைக்குள் புதையப் புதைய தன்னுள் உருவாகும் நடுக்கத்தை ரசித்தான்.

வீரர்களே! பிரபஞ்சமெங்கும் நிலைத்திருக்கும் கடவுளின் பெயரால். ஆம்! மீட்சியடையும் வழியைக் காட்டும் என் பிதாவே!

சூரிய சந்திரர்களையும் வானையும் மண்ணையும் அனலையும் குளிரையும் அளித்த, எதனிலும் உட்படுத்த முடியா கட்டுகளிலடங்கா செறிவும் நுட்பமும் ஒரு சேரக் கொண்ட பரலோகத்திலிருக்கும் எங்கள் பரம பிதாவின் பெயரால். இவனையும் இவனுக்கு பின் வருபவர்களையும்...

ஒருமித்த குரலாய் அவர்கள் நிலம் அதிரக் கத்தி ஆரவாரமிட்டனர்.

முட்கிரீடம் வைத்திருந்தவன் அகலாது அங்கேயே நின்றிருந்தான். அவனது ஒரு கண் வெண்ணிறச் சதைக் கோளமாய் இருந்தது. முதுகு  சற்றே வளைந்து மேடிட்டு கூன் விழுந்திருந்தது. அவன் கதறி அழுதான். மனிதக் குரல் போலவே இல்லாத ஒரு விளி. உடலெங்கும் தீப்பற்றுகையில் உருவாகும் மரண விளி. என்ன இது? நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம். இனியும் இதுதானா நம் விதி. நாம் வேட்டை மிருகங்கள். எத்தனை உயிர்கள். எத்தனை சாவு. இந்த இரவு நாம் கொன்று புதைத்த பிணங்களின் குத்திட்ட விழிகள் போல என் முன் வெறிக்கிறது. வேண்டாம். வேண்டாம். தனக்குள் விம்மித் தளர்ந்து ஓங்கரித்தான்.

இதுமியாவில் எந்தத் துறவியையும் விட்டு வைக்கவில்லை. பாவப்பட்ட அந்த லாசரசை பெத்தனியில் எந்தப் பிரயோஜனமுமின்றிக் குத்திக் கொன்றோம். ஜோடார்ன் நதிக்கரையில் அந்த பித்து பிடித்த சாமியாரிடம் போய் நின்றோம். அவனுமில்லை. பிணங்களின் துர் நாற்றம் என் உள்ளுறுப்புகளில் புகுந்து நவதுவாரங்கள் வழி வெளியேறுகிறது. சவங்களின் பெருங்குழியில் காலமின்றி நொதித்துக் கொண்டிருக்கிறோம்.

சே! எங்களுக்கு வேறு வழியுமில்லை. உன்னுடன் வருவதைத் தவிர.

எங்குமே இல்லை அவன். அவன் இல்லாதவன். தேடி அவன் கிடைக்கப்போவதுமில்லை. ஜெருசலேமில் அலைந்தோம். பொய்யர்கள், பரத்தை மகன்கள், கொள்ளையர்கள், கொலை செய்பவர்கள், சுய நலமிகள், வம்பர்கள், ஒழுக்கமற்றவர்கள் என்று நாம் கண்டது அனைத்தும் அவனது வெவ்வேறு பிம்பங்களா? ஒரு ஆடிச்சுழியில் அவனை நிற்க வைத்து பிரதியெடுத்த ஓராயிரம் பிம்பங்களில் அவன் தன்னை மறைத்து வைத்திருக்கிறான். கொலைகளின் வழி மரணத்தை நாம் அறைக்கூவலிடுகையில் அவனது வெறுமையின் இளிப்பை நான் காண்கின்றேன். இல்லாத ஒருவனை நாம் தேடுகின்றோம்.

ஒருவன். ஒரே ஒரு மேன்மை மனிதனை. ஒழுக்கத்தில் சிறந்த உண்மையானவனை. தேவனுக்கு கீழ்படியும் மானுடத் தூயனை நாம் தேடினோம். கனாவிலும், பெத்தைசிலும், காப்ரீனிலும், அலைந்தோம். ஒவ்வொரு முறை அவனை நாம் கண்டறியும் பொழுதும் அவன் அழுது கொண்டிருப்பான். நீயே அந்த ஒருவன் எனில் ஏன் மறைந்திருக்காய். ஏன் பயப்படுகிறாய். வா! இல்லையேல் செத்தொழி. வா! இந்த நிலத்தை இந்த மானுடத்தை காப்பாற்று.

ஒருவன். அந்த ஒருவன். எவனுமற்ற ஒருவன். மானுடத்தை உண்மையாய் உணர்ந்த மானுடன். மானுட மீட்சியின் வழியை தன் குருதியினால் உணர்ந்தவன். நாம் அவனைக் கண்டு கொள்வதும் இது முதன்முறை அல்ல.  கழுத்தறுபடும் முன் வெறித்து பார்க்கும் கன்றின் பார்வையைத் தான் நான் அவனில் கண்டேன்.

நம் கொலைக்கருவிகளைக் காணும் போதெல்லாம் அவனது விழிகளை நான் சந்திக்கிறேன். நம்மைக் கண்டதும் அவன் உள்ளூற அதனை எதிர்பார்த்துக் காத்திருப்பதைப் போல உணர்ந்தேன். மரணம் தன்னை விடுவிக்கும் என்றும் அதன் மூலம் தன்னை அவன் நிரூபித்துக் கொள்வதாகவும் நினைக்கிறான். மொத்த பிரபஞ்சத்தின் முன்னும் நெஞ்சு வெடித்து அழுகிறான். அந்த மகத்தானவன் நானில்லை என்று.

ஆம்! இங்கு யாருமே மகத்தானவர்களில்லை. மகத்தானது என்று இவ்வுலகில் என்னதான் உண்டு. நம் கொலைக் கருவிகள் அதைத்தானே நம்மிலிருந்து எதிர்பார்க்கின்றன. அதிலிருந்து சிந்திக் கொண்டிருக்கும் ரத்தத் துளிகள் அறியும் உலகில் மகத்தானது எது என்று.

மதுவின் தித்திப்பில், இளம்பெண்களின் தேக லயிப்பில் அவனைத் தூக்கி எறிவோம். ஆம் மகத்தானது. மயக்கம் தரும் சுயமழிப்பை அவன் அறியட்டும். பரத்தையர்களுடன் பொருந்திக் கிடக்கையில் அவன் பீய்ச்சும் விந்து அறியும் மகத்தானது எது என்று. அப்பொழுது அவனைப் பிடிப்போம். அவனைக் காறி உமிழ்ந்து மகிழ்வோம். ஆம்! மகத்தானது இது என்று.

மன்னித்து விடுங்கள். திரும்பத் திரும்ப நான் இதனையே புலம்புகிறேன். என்னுள் தகிக்கும் ஒன்று பல்லி வால் போல அறுந்து தனியே துடிக்கிறது. அதற்கு உயிரில்லை. அது ஒரு ஏமாற்று. உண்மையில் அப்படி ஒருவனை நாம் அறியும் பொழுது அவனும் அதைப் போலவே இருப்பான் என்று நான் நம்புகிறேன். கடவுளர்களின் எக்காளம் எங்கள் காதுகளில் குடைகிறது. இந்தப் பயணம் முழுதுமான பிணங்கள், அவர்கள் மரணிக்கும் நொடி நேரத்தில் அவர்களின் ஒருவர் கூட சாக விரும்பவில்லை. அவர்கள் பயந்தார்கள். மரணமே கடவுள். ஆம் மகத்தானது அப்படித்தான் இருக்கும்.

செந்தாடிக் காரன் தன் வலுத்த கைகளால் அவன் பிடரியைப் பற்றித் தூக்கினான். அந்தரந்தில் கால்கள் இழுபட மூச்சுத்திணற அல்லாடினான் கூனன்.

ஹா! ஹா! ஹா! தாமஸ்! ஓ! தாமஸ்! சந்தேகப்படுகிறான். தயங்குகிறாயா எனதருமை தாமஸ். நீ எப்பொழுதுமே இப்படித்தான். விழி பிதுங்கிய கூனனின் வாயிலிருந்து எச்சில் வழிந்தது. அவனை விடுவித்தான். தொண்டை நரம்புகள் இழுபட வேகமாக மூச்சிரைத்து மெல்ல சரளைக்கற்கள் உருளும் மண்ணில் கால்கள் அறைபட எழுந்து செந்தாடிக்காரனை ஆதுரத்துடன் நோக்கினான்.

இந்த வேசி மகன் நம்மை வழி நடத்தட்டும். என்ன தாமஸ். மகத்தானதை நீ கண்டறிவாய். உண்மை உன்னிடம் மட்டுமே உறைகிறது இல்லையா?

நிமிர்ந்து தன் முன் நிற்கும் கூட்டத்தினை வெறிக் கண்களுடன் நோக்கினான். நாம் உருவாக்கிக் கொண்டது எதனை? மரணத்திடம் நாம் சொல்வோம். நாங்கள் இம்மண்ணின் மைந்தர்கள். தயங்குபவர்கள் இந்த நொடியே கொல்லப்படுவீர்கள். உங்களுக்கு மானுடத்தின் மீட்சி என்ன என்பதை நான் உரைப்பேன். கடவுளர்கள் உருவாக்கிய இந்த நிலத்தினை மீட்கும் பொருட்டு நாம் தியாகம் செய்வோம். அன்பும் கருணையும் கொண்ட நம் பிதாவின் வாக்கு என்றைக்குமே தப்புவதில்லை. சந்தேகங்கள் தீக்கங்குகள் போல. புகை விட்டுக் கொண்டிருக்கும் அதனை நாம் நம் வயிற்றிற்குள் செருகி அணைப்போம். ஒன்று திரள்வோம்.

The Last Temptation of Christ-Nikos Kazantzakis



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக