குறுக்கு மறுக்காக வெட்டிப் பிணைக்கப்பட்ட நீள மரத்துண்டுகள். இன்னும் முழுதாய் சீவி முடித்திருக்கவில்லை. செதில்கள் பிளந்து தடிமனாய், மேடும் பள்ளமுமாயிருந்தது. மரச்செதுக்கியும் மற்ற உபகரணங்களும் அங்காங்கு சிதறிக் கிடந்தது. குன்றியிருந்த அறை வெளிச்சத்த்தை ஜன்னல் கம்பிகளின் இடைவெளி வழியே உறிஞ்சிக் கொண்டிருந்தது இருள். மேகங்களற்ற வானம். மலைத்தொடரின் கோட்டு வெளிச்சத்தில் உப்பிக் கொண்டிருந்தது. நட்சத்திரங்கள் குழந்தைக் கண்களின் வியப்பில், வெளியை சுழற்றி மீண்டது.
கை கால்களை அசைக்க முடியவில்லை. அது மார்பின் மேலே அழுந்திப் புரண்டது. தொண்டைக் குழியில் சிக்கிக் கொண்டிருந்தது வெளியிடத் துடித்துக் கொண்டிருந்த அலறல். அழுத்தம் கூடக் கூட தண்ணிருக்குள் உணர்வது போன்ற விரைப்பு அவனது உடல் முழுமைக்குமாய் அதிர்வுற்றது. பெரும் பாறாங்கல்லை நகர்த்தும் பாவத்துடன் எழுந்தடங்கினான். அசைய முடிந்தது. பதற்றத்துடன் எழுந்து உட்கார்ந்தான். முதுகுக்கு பின்னால் பயங்களின் அரூப உருவம் ஒன்று முளை விட்டுக் கொண்டிருப்பதைப் போல. அறை இருளின் குழியிருந்து புகை போல தன்னைச் சுற்றி பரவுவதாய் நினைத்து விதிர் விதிர்த்தான்.
அறையினுள் வெளிச்சம் முழுதாய் உட்கிரகிக்கப் பட்டு இருள் தன்னுள் போர்த்திக் கொண்டது. காற்று கூட புக முடியாத வண்ணம் அறையினுள் இருந்த திறப்புகளையெல்லாம் அடைக்கத் தொடங்கினான். இருளினுள் தான் மிக பாதுகாப்புடன் இருப்பதைப் போலவும் அதே நேரம் வெகு காலமாய் இதற்காகவே காத்துக் கிடந்த ஒன்றின் வாயினுள் தான் அகப்படுவதைப் போலவும் ஒரு சேர உணர்ந்தான். இருந்தும் வெளியுடன் இருந்த தொடர்பை முற்றிலும் தவிர்ப்பது மூலம் தப்பித்து விடலாம் என்று ஜீர வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தான்.
அது நெருங்கிக் கொண்டிருக்கிறதா?
அவர்கள் வந்து விட்டனரா?
சுவரோடு சுவராக தன்னைப் பதிந்து கொண்டு தன்னை நோக்கி வந்து கொண்டிருக்கும் அந்த இரைச்சலை கவனித்தான். ஆம்! ஆம்! நான்! நான்!
இருளினுள் சப்தங்கள் முளைக்கும் ஒவ்வோர் தருணத்திலும் முணுமுணுத்தான்.
நான்! நான்!
கொப்புளமிட்டு சுருங்கி விரியும் உருவங்களின் திமிறல். மொத்த கிராமமும் நீரின் அடியில் வயிறு வெடித்து ஊறிக் கனத்துக் கிடக்கும் வன மிருகம் போல மிதந்து கொண்டிருந்தது. இரவின் அடர் கருமை விழுதுகள் முளைத்து நிலைத்து பதிகிறது. விழிப்புக்கும் போதைக்குமிடையில் நகர்கிறது பிரஞ்சை. என்னெதிரே கிடக்கிறது பல்லாயிரம் தடவை குதறப்பட்ட பிணம். என்னுடலா?
என்னுடலா?
எழுந்திரு! எழுந்திரு! எழுந்திரு!
நிழல்கள் மட்டுமே சூழ்ந்திருந்தது அறையினுள். துண்டு வெளிச்சம் மெல்ல மெல்லப் பரவத் தொடங்கியதும் சுற்றிலுமிருந்த பொருள்கள் உருக்கொண்டன. வெளியின் காற்றை அகம் உணர்ந்தது. சருகுகள் இடையில் குமைந்தது அகம். உதிர்ந்து கொண்டிருந்த சருகுகள் ஆழம் பொதிந்த நதியைப் போல அறையின் விளிம்புகளில் அலையாடியது. ஏதோ மன்றாட்டைப் போல, அந்த ஊளை நிசப்த்ததை துளைத்துக் கொண்டு அரையெங்கும் எதிரொலித்தது. ஒவ்வொன்றும் ஒவ்வொன்றிலும் ஸ்பரிசித்து தொடர்புறுத்தியது. கட்புலனாகாத சமிக்ஜைகள் அங்குமிங்குமாக பரவிக் கொண்டிருப்பது, முடிவேயற்ற கண்ணிகளில் கோர்க்கப்பட்டுக் கொண்டே இருக்கும் சப்தங்களின் தொடர்ச்சியான நிகழ்வுகள் அவனுள் இன்னும் தன்னுள்ளே இருந்து வெளி வர இயலாத, அச்சத்தை மேலும் மேலும் கூட்டிக் கொண்டே இருந்தது. அறை உயரமான மலைப்பாறையாக உருமாறியது, எங்கும் நீக்கமுறக் குளிர். எதிரொலிகள் அவனுள் இருந்து கிளம்பி அவனுள்ளே சென்று பல்லாயிரம் பிம்ப அதிர்வுகளாக அவனை மூடியது.
தான் ஒருவன் மட்டுமே இவ்வுலகில் மிச்சமிருப்பதைப் போல தொண்டை நரம்புகள் இழுபடக் கத்தினான். அவனது குரல் பாளம் பாளமாய் நொறுங்கத் தொடங்கியது.
-The Last Temptation of Christ -Nikos Kazantzakis
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக