உடல் அதன் ஒவ்வொரு கணுக்களிலும்
தேடிக் கொண்டிருக்கிறது. குருதி முழுக்க வடிந்து உறைந்து ஒரு வெளுத்த சல்லாத்துணி போல
நடுங்கிக் கொண்டிருக்கிறது. தூரத்தில் புகைப்படலமாய் பல்லாயிரம் உடலங்கள் மோதும் அரவம்.
விரதம் எனும் சொல் என் மூளைக்
குழியினுள் நொதித்து கூழ் போன்ற திரவமாய் கொப்பளித்தது. காட்சிகளின் கோர்வையற்ற சலனம்
காலமற்று புறத்தே ஓடிக் கொண்டிருந்தது. வண்ணங்களற்ற ஒரு காட்சியில் நான் தன்புணர்ச்சியாய்
என்னையே விழுங்குகிறேன். மற்றொன்றில் எனதருமை குதிரவீரன் அங்கசீலனைப் பிடித்து தரையில்
குப்புறக் கிடத்தி வன்புணர்வு செய்கிறேன். முழுக்க வடித்த பின் அவன் முகத்தில் காறி
உமிழ்ந்து விட்டு திரும்பி பாராமல் செல்கிறேன். என் உமிழ் நீர் பச்சை நிறமாய் அவன்
கன்னத்திலிருந்து சளியைப் போலத் தொங்குகிறது.
எனக்குள் நான் தேக்கிக் கொண்டிருந்தது
எதை. என் பார்வைக்கப்பால் பிதுக்கி வெளி தள்ளிய பல கோடி உயிர்களின் திரவ நெடி.
என் தந்தையை நினைக்கிறேன்.
என் உயிர் காலத்தின் ஒவ்வொரு சொடுக்கலுக்கும்
ஒன்று ஒன்றாக பிரிந்து கொண்டிருப்பதை வேடிக்கை பார்க்கிறேன். அம்புகள் உடலின் அனைத்து
அணுக்களிலும் ஒன்று விடாது உள் நுழைந்து முளைத்திருந்தது.
என்னுடைய காலம் முழுவதும் நான்
ஒன்றையே நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்காகவே நான் வாழ்ந்தேன். அதுவே நான். அதை விடுத்து
என்னுள் எதுவுமே இல்லை.
என் முன்னே அவன் நின்று கொண்டிருந்தான்.
தன் குறியை ஒரு கழட்டி மாட்டும் கருவி போல கைகளில் வைத்திருந்தான். அவனுடைய முகம் ஏனோ
அவளை ஞாபகப்படுத்தியது.
பாவம்! பேதை! என்னை அறியாதவள்.
நான் தந்தையை மறுபடியும் நினைத்தேன்.
என்னால் அறியமுடியாத மூர்க்கமும் வன்மமும் என்னுள் பெருகுவதை உணர்ந்தேன்.
வேண்டாம்! வேண்டாம்! நான் என்
தந்தையின் மைந்தன். அவருக்காகவே வாழ்பவன். அவருக்காகவே துறந்தவன்.
அவரது முகம் ஒரு பல்லியின் முகம்
போல உருமாறியிருந்தது. என் கண்களுக்கு நேர் எதிரே அது அசையாது என்னைப் பார்த்தது. அதனுடைய
சூடான எச்சம் என் நெற்றியில் விழுந்து என் குருதியில் கரைந்து வழிந்தது.
அய்யோ! வேண்டாம்!
நான் அவளை விரும்பியிருக்க வேண்டும்.
அவளைப் புணர்ந்திருக்க வேண்டும். இந்தப் பாரத வர்ஷம் முழுக்க என் புத்திரர்களால் நிரப்பியிருக்க
வேண்டும்.
என் புத்திரர்கள் மலப்புழுக்கள்
போல என்னில் நொதிக்கிறார்கள்.
நான் ஒரு நல்ல தந்தையுமல்ல. மைந்தனுமல்ல!
என்னுள் நிரம்பிக் கொண்டிருப்பது
என் அகம் மட்டுமே. அது என்னை விரதம் விரதம் என்று ஆட்படுத்துகிறது. என் விரதம் என்பது
என்னை பாலற்றவன் ஆக்கி விட்டதே.
நான் பீஷ்மன். பிதாமகன். சத்திரியர்களில்
தலை சிறந்தவன். ஆனால் நான் ஏதுமற்றவன். அனைத்தையும் இழந்தவன். அனைத்தையும் ஒறுத்தவன்.
எதையும் ஏற்கும் தகுதியற்றவன்.
என்னுடைய விரதம் எனக்கு நானே சூட்டிக்
கொண்ட பொய்முடி. தன்னைத் தானே உண்ணும் மிருகம் பார்த்திருக்கிறாயா? அது நான் தான்.
விலாவிலிருந்து குருதி ஒரு கூழ் உருளை உருளையாய் விழுந்து கொண்டிருந்தது.
நான்! நான்!
பூமியும் வானமும் அற்றவன்.
தந்தை என்னிடம் மன்றாடுவதைப்
பார்க்கிறேன். பல நூறு துகள்களாக என் கைகளாலேயே அவரை சிதைத்துத் தூக்கி எறிகிறேன்.
அதன் ஒவ்வொரு துகள்களும் விழுந்த இடத்திலிருந்து கொடுக்குகள் முளைத்து விஷம் மட்டுமே ஆனதாய் என் உடலம் முழுதும் தொற்றிப் படர்கின்றன.
ஸ்தூலகர்ணனின் சிலை பல அடி உயரத்திற்கு ஸ்தாபிக்கப் பட்டிருக்கிறது. திடமான அவனது உடலின் மார்புகள் நொங்கு போல அலங்குகிறது. அவனது குறி என்பது அவன் நினைத்த மாத்திரத்தில் உருமாறும் ஒரு தனித்த உயிர். தன்னை ஆண் என்றும் பெண் என்றும் ஒரு சேர ஆக்கியவனின் பலி பீடத்தில் பல கோடி ஆண்களின் பெண்களின் குறிகள் அவிசாக்கப் படுகின்றன.
அவனுக்கு நேர் எதிர்புறம் ஆடி பிம்பம் போல ஸ்ரீ கண்டியின் சிலை. வில்லம்புடன் அவனையே உற்று நோக்குகிறது. அவர்களுக்கிடையே சன்னதம் வந்து ஆடிக் கொண்டிருந்தன பல்லாயிரம் உடல்கள் பாலற்றவர்கள். தங்களை இந்த மாபெரும் உடல்களுக்கிடையில் பொருத்தியவர்கள். சந்ததியற்றவர்கள்.
அங்கு பீஷ்மருக்கென்றிருந்த பீடத்தில் ஒரு கூர்மையான ஆண் குறியை ஸ்தாபித்திருந்தனர். அதன் மேல் சொட்டிக் கொண்டிருந்தது காலாதீதமான ஊற்று. அது நனைய நனைய உருகி பின் தனக்குள்ளாகவே தூலமாகிக் கொண்டிருந்தது.
பிறையைப் போல 15 நாட்கள் வளர்ந்தும் பின் குன்றியும் பரிணாமம் கொண்டது. அதற்கு பலிகள் இல்லை. பூசைகள் இல்லை. வருடத்திற்கு ஒரு முறை ஒரு திடமான ஆணை அதில் இருத்துவார்கள். அவனது குதம் அதனுள் ஒருங்கி அப்படியே அவனது பலி ஏற்கப்படும். அதுவும் ஒரு சம்பிரதாயம் தான். வெறுமனே இருத்தி எழுப்பி விடுவார்கள்.
தற்போது யாரையும் கொல்வதில்லை. ஆனால் காலங்காலமாக அது காத்திருக்கிறது. தனக்கானவளுக்காக.
கார்த்திகை மாதத்தில் அதன்முன்னே சொக்கப்பனை ஏற்றுவார்கள். ஒரு பெண் மரத்தை எரியவிட்டு அதன் சாம்பல் கரியை அந்த பீடத்தில் பூசுவார்கள்.
மற்றைய தினங்களில் மறக்கடிக்கப்பட்டு அது தன்னுள் தானே அலைவற்று கிடக்கும்
என்னுடைய கேள்வி திரும்ப பாட்டனாரையே முட்டி நின்றது. அவரது காம ஒறுப்பு இயல்பானதாய் இல்லை. அவர் முன் பல மணி நேரம் பேச்சற்று நோக்கிக் கொண்டிருந்தேன். எந்த பதில்களுமற்று அது உள் நோக்கியது.
ஒரு மென் அழுகை. பின் ஒரு ஓலம். அது ஒரு பெண் குரல். வெட்டியெடுத்த முலைகளை இரு பழங்கள் போலக் கொண்டு வந்தாள். மண்டியிட்டு தன் கைகளாலேயே மண்ணைப் பிராண்டி தோண்டி விதைகள் போல அதைப் புதைத்தாள். பின் அதன் மேலேயே சிறு நீர் கழித்து காறியுமிழ்ந்து விட்டு நகரந்தாள். யோசிக்கிறேன், அவளுக்கு முகமே இல்லை. அதில் ஒரு நிழல் மட்டுமே இருந்தது.
நான் அங்கசீலன் போல என்னை உருவகித்து பீஷ்மரை நோக்கினேன். பரிதாபகரமான அவர் முகத்திலிருந்து கண்ணிர்த்துளிகள். ஒரு இருப்பு மட்டுமாகவே இருந்தார். உடல் இல்லை. தன்னை நோக்கி வரும் பிள்ளைகளை எல்லாம் வாரி அணைத்து நெஞ்சுருகி அழும் ஒரு பெரிய தந்தை போல இருந்தார்.
அதே நேரம் தன் பிள்ளைகளை எல்லாம் வன் புணர்வு செய்யும் மனம் பேதலித்த பெரியவர் போலவும் தோன்றினார். என்னால் நிர்ணயிக்க முடியவில்லை.
எனக்கு அந்தப் பழங்குடிகளின் வழிபாடே உகந்ததாக இருந்தது. அவர்கள் தங்களுக்குள் எந்த பேதமின்றி மாறி மாறிப் புணர்வதே எங்கள் வழிபாடு என்றனர்.
அந்த முதிய பாட்டனுக்கான சரியான வழிபாடு அதுதான்.
நுரைக்க நுரைக்க அவன் முன்னே காமத்தைப் படைப்பது.
ஆனால் விரதம் எனும் சொல் காலாதீதாமாய் அப்பீடத்தின் மழுங்கிய தலையில் சொட்டிக் கொண்டிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக