இருமையை உருவாக்கி அதனை மோத விடுவதன் மூலம் மேலான அப்பழுக்கற்ற புனிதத்தின் வழி நேர்மை குணத்தை கடைத்தேற்ற முயல்கையில் உருவாகும் ஊசலாட்டம். புனிதத் தன்மையில் இயற்கையாவாகவே இருக்கும் ஒவ்வாமை மற்றும் வலுக்கட்டாயமாக தனக்குத் தானே உண்மையற்று நடந்து கொள்ளுதல். மனிதன் எனும் ஆதி மிருகத்தின் கட்டற்ற தன்மை. எதிரிடைகளை ஆழமாக பற்றிக் கொள்வது. குற்றத்தின் ஈர்ப்பின் பால் உள்ள அலைக்கழிப்பு. ஒரே நேரம் ஒன்றிற்கு மேற்பட்ட நியாயங்களை அதற்காக உருவாக்கிக் கொள்வது. அதை நிரூபிக்க முயலும் தோறும் அதிலிருந்து நழுவி ஆன்மீகத்தை கிறிஸ்துவை அதற்கு தீர்வாக்கிக் கொள்ள. அதன் குணாதீசியமான பாவ மன்னிப்புக் கொள்கையை பயன்படுத்திக் கொள்ளுதல். அதே நேரம் கடவுளே நிராதரவாக ஒரு அனாதைப்பிணமாய்க் கிடப்பதைக் காணுதல். எந்த தர்க்க ஒழுங்குமில்லாத வாழ்வின் புதிர்களில் எல்லாமே அனுமதிக்கப்பட்டதே என்று பிதற்றிக் கொண்டே கொலை மற்றும் துன்புறுத்துதலை ஒரு புறம் ஏற்றுக் கொள்ளுதலும் மறு புறம் அதற்காக சொந்த உடலைத் தண்டனைக்குள்ளாக்குதல். அனைத்து போகங்களுக்குள்ளும் திளைத்தல். தற்செயலிற்குள் வாழ்வை பணயம் வைத்தல். எல்லாக் கீழ்மையினையும் வலுக்க வரித்துக் கொண்டு அதன் மூலமாய் நான் மிகக் கீழ்மையானவன் என்று தம்பட்டம் அடித்து பரிதாபத்தை அடைய முயற்சிக்கும் கோமாளித்தன்மை.
எல்லாவற்றிற்கும் தீர்வான புனிதத் தன்மையிடமும் காறி உமிழ்ந்து செல்வது. பின் அதற்கும் சேர்த்து தன்னுடலையே தண்டனைப் பொருளாக பலி பீடத்தில் வைத்தல். சில சமயம் இது ஒரு விளையாட்டு போல ஒரு மிகை உணர்ச்சியாய் ஆக்கிக் கொண்டும் பின் அதனையே மூர்க்கமாக வரித்துக் கொண்டு அதன் இறுதி எல்லை வரை சென்று தன்னைத் தானே மாய்த்துக் கொள்ளுதல்.
கரமசோவ்
ரோகோஸின்
லெபதேவ்
மர்மத்லோவ்
இவால்ஜின்
டிமிட்ரி
இவான்
ஸ்மர்த்தியோகோவ்
ஸ்வட்ரிலிகோவ்
ரஸ்கொல்நிகாஃப்
இப்போலிட்
கன்யா
இந்த கதாபாத்திரங்கள் போல நாமும் இருக்கிறோம். நிச்சயமாக இந்த பிறழ்வுகளுக்குள் நாம் திளைக்கிறோம். திளைத்துக் கொண்டே இருக்க விரும்புகிறோம். நம் நாடிகளில் இவர்களை ஓட விடும் நுட்பம் தஸ்தாயெவ்ஸ்கிக்கு தெரிந்திருக்கிறது.
நம்மை அவர் கடைத்தேற்ற முயல்கிறார். புனிதத்தை தீர்வாக்க முயல்கிறார். அந்த பாவப்பட்ட கிறிஸ்துவை அதற்காக அழைக்கிறார். ஆனால் ஜோஸிமாக் கிழவனின் பிணம் நாறுகிறது. தேவ மைந்தன் கந்தல் கந்தலாகக் கிடக்கிறான். எதற்கும் தீர்வில்லை என்று எக்களிக்கிறோம்.
அவரின் புனிதர்களின் அப்பழுக்கு அவருக்கும் நமக்கும் கூட எந்த தீர்வையும் தரவில்லை.
தர விரும்பவுமில்லை.
#dostoevsky
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக