நாள் கணக்கின்றி ஒரே இடத்தில், வெளி என்பதே அறிய இயலாது கட்டி வைக்கப்பட்டக் கான் மிருகம் ஒன்று, தன்னைப் போலவேக் கண்ணியில் அகப்பட விரையும் இன்னொரு மிருகத்தைக் கண்டால் அதன் கேவல், இல்லையேல் கட்டுப்படுத்த முடியாது அம்மிருகம் சமிஞ்சை செய்யும் கத்தல் எப்படி இருக்குமோ, அதே போல அந்த பரிசேயன், கோவிலின் கடைசிப் படிக்கட்டின் ஓரத்தில் தனித்து நின்று கொண்டு, தன் தொண்டை நரம்புகள் இழுபடக் கதறினான். அவனது கைகளிலிலும் கழுத்திலும், புனிதத் திருமறையில் இறைவனால், யூதர்களுக்காக இம்மைக்கும் மறுமைக்குமாக அருளப்பட்ட அறுதியான சொற்சேர்க்கையின் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சின்னங்களை இணைத்து செய்யப்பட்டக் கயிறுகளை வைத்திருந்தான். அவனது முகம், கழுத்து, மார்பு என அனைத்தும், தொடர்ந்து மீள மீள வதைக்குள்ளாக்கப்பட்டப் புண்கள் புரையோடியிருந்தது. தொடர்ச்சியாக, காலக்கணக்கின்றி நிலத்தில் மண்டியிட்டு காய்ப்பேறியிருந்தது முன் நெற்றி. கால்களும், மூட்டுகளும் வளைந்து பார்ப்பதற்கு, கூன் விழுந்தது போலவும், அவனது நீள் முகவெட்டு, காலத்தை அசை போட்டுக் கொண்டு, ஏதுமற்று வெறித்திருக்கும் ஒட்டகத்தை நினைவு படுத்தியது. ஒவ்வொரு முறையும் எல்லாம் வல்லத் தந்தை ஜெகோவாவின் ஈவிரக்கமற்ற ஏவல்களுக்கு ஆட்பட்டு, மேலும் மேலும் தன்னை சிதைத்துக் கொள்வதைத் தான் அவன் வழிபடலாகக் கொண்டிருந்தான். அப்பிரார்த்தனைகளின் நிலம் கூர்க் கற்களினால் பரந்திருந்தது. அங்கு தன் உடலும் ஆவியும் நிலத்தில் படியும் படி உராய்ந்துத் தன்னைத் தானே ரத்த விளாறாகப் பிய்த்துப் பிய்த்து மூர்ச்சையற்றுக் கிடப்பது ஒன்றே அவனுக்காக இறைவன் விதித்த வழி என்று அவன் உறுதியாக நம்பினான்.
ஆண்ட்ரூவும், ஜானும் உடனடியாக ஜீசஸுக்கும் முன் சென்று இருபுறமும் அந்தப் பரிசேயனின் இருப்பு தெரியாதவாறுப் பார்த்துக் கொண்டனர். " அவன் யாரென்று உனக்குத் தெரியும் தானே?", பீட்டர் மெல்ல ஜேக்கப்பின் காதில் வினவினான். "அவன் அந்த தச்சன் ஜோசப்பின் மூத்த மகன் ஜேக்கப் தானே?, உலோகத்தில் இறைச்சொற்கள் பொறிக்கப்பட்டு பல்வேறு வடிவங்களில் செய்யப்பட்ட புனிதக்கயிறுகளை சதுக்கத்தில் விற்கும் அதே ஜேக்கப்தானே அவன். ஒவ்வொரு மணித்தியாலங்களுக்கு ஒருமுறையும் தீய சக்திகளால் பீடிக்கப்பட்டுத் தன்னைத்தானே கொன்று கொண்டிருக்கும் அந்த அப்பாவி ஜீவனை என்னவென்று சொல்வது"
"அவனும் தன் உயிரைப் பணயம் வைத்து ஒரு குருவை தேடித்தான் தன்னை இப்படி வதைத்துக் கொள்கிறானோ என்னவோ?" சற்று நின்று அவனை உற்று நோக்கிக் கொண்டே ஜேக்கப் பதிலளித்தான்.
"ஆம்! அவன், தான் தன் குடும்பத்திற்கே அவமானம் ஏற்படுத்திய, இழிபிறவி" என்று கேட்பவரிடம் சொல்லிக் கொண்டு திரிகிறான்."
அவர்கள் தங்கக் கதவுகள் பொருத்தியக் கோவிலின் வாசல் வழியே வெளியேறி, கிட்ரான் பள்ளத்தாக்கையும் தாண்டி சாக்கடலை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தனர். பின் ஜெத்சலேமின் சோலை வழிக் கடந்தனர். வானம் சாம்பல் நிற வெளிச்சத்தை, ஒரு அகல் விளக்கின் படபடத்தலுடன் ஒளிர்த்தது. திட்டுத்திட்டுகளாக படியும் வெம்மையின் தீற்றல்களை உட்கிரகித்துக் கொண்டு அவர்கள் நகர்ந்தனர். ஆலிவ் மரங்கள் அடர்ந்த மலைக்குன்றங்களைத் தாண்டினர். ஒளி இலைகளின் ஊடு வழி வழியே, நிழல்களை வானிலிருந்து உதிறும் அடர்ந்த இறகுகளைப் போல நிலத்தில் உதிர்த்தது. காகங்களின் கரைதலும், சிறகடிப்புகளும் ஜெருசலேமை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது.
ஜீசஸின் தோள்களைப் பற்றிக் கொண்டு செல்லும் ஆண்ட்ரூவின் எண்ணங்கள் ஜோர்டான் நதிக்கரையில் சுழன்றது. தனது பழையக் குருவின் இருப்பினை நீக்கமற அவன் உணர்ந்தான். கர்ஜனை தெறிக்கும் அவரது மூச்சின் சுவாசத்தையும், வெம்மையையும் அருகாமையில் அறிந்தான். சூடு பொறுக்காது உருகி வழியும் பாகினைப் போல அவனது உடலும், உள்ளமும், கொதித்து ஆவியாகிக் கொண்டிருந்தது.
"அவர் ஒரு மெய்யான எபிரேயர். அவரைத் தீ என்றே அறிகிறேன். இரு நெருப்புப் புள்ளிகள் போலக் கனலும் கண்கள், மானுடனின் ஆன்மாவினை பரிசுத்தமாக்கும் தீப்புனல். அதற்காகவே ஜெகோவாவின் சொற்களை ஏந்தி கார்மல் மலை அடுக்குகளிலிருந்து நிலத்திற்கு வந்தார். அவரைச்சுற்றி மூட்டமாக எரிந்துக் கொண்டே இருக்கும் கங்கு வளையத்தை நான் என் சொந்தக் கண்களாலேயேக் கண்டிருக்கிறேன். ஒரு நள்ளிரவின் நிசப்தத்தில், கரியப் பறவை ஒன்று தீச்சொரியும், சிறகுகளுடன் அவருள் அமிழ்ந்து மறைவதை அதன் செம்மஞ்சள் நிற ஜ்வாலை, அவரது உடல் முழுதும் நீள்வட்டப் புள்ளிகளாய் சுழன்று மிதப்பதை பயம் அடங்கா விரைத்தலுடன் கண் அகலாது பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள், எனக்கு நானே தைரியப்படுத்திக் கொண்டு அவரிடம் வெகு நாட்களாக கேட்க நினைத்ததை அருகமர்ந்துக் கேட்டேன். நீங்கள் தான் மெசியாவா?. அவர் கண்கள் திறக்கவில்லை. அவரது அகம் சட்டென, அழுத்தத்தால் பீடிக்கப்பட்டது. கால்களுக்கடியிலிருந்த நிலம் கழன்று வீழ்ந்ததைப் போல, பதற்றத்துடன் விரைவாக தலையை அசைத்தார். "இல்லை! நிச்சயமாக இல்லை!" அவரது குரல் நடுங்கிக் கொண்டிருந்தது. நீண்ட பெருமூச்சுகளை இழுத்துக் கொண்டு மறுபடியும் இமை மூடிக் கொண்டு அமர்ந்தார். உதடுகள் துடித்தன. பனிக்கும் கண்களில் சொல் ஒன்று, தத்தித் தத்தி எம்பிக் கொண்டிருந்தது. சிறகுகள் படர்த்திய அச்சொல் அவரிடம் சதா வினவிக் கொண்டதற்கு பதில் கூறும் வகையில் அவர் முன்னே இருக்கும் வெளியையும், தொலைவில் முனகும் நதியின், தொடர் சலனத்தையும் கூர்ந்தார். "இல்லை! நான் ஒரு கலப்பை! மெசியாதான் விதை!"
" நீ ஏன் அவரை விட்டு வந்தாய்?" ஜீசஸ் ஆண்ட்ரூவிடம் கேட்டான்.
" நான் விதையை அறிய விளைந்தேன்!"
"நீ கண்டறிந்தாயா?"
ஆண்ட்ரூவின் உள்ளம் தகித்தது. தன் கைகளுக்குள் அடங்கியிருக்கும் ஜீசஸின் உடலை இன்னும் இறுகத் தன்னுள்ளே செலுத்திக் கொள்வதைப் போல அழுத்திக் கொண்டான். ஜீசஸின் உடல் சூட்டைத் தன்னுள் அமர்த்தி, அவனது வியர்வையின் மகர்ந்தங்களின் உட்கிரியையை மணத்தி மணத்திப் பலகோடி முறை முத்திக் கொண்டான். தன்னிலையிழந்த நிலையில் பதில் எதுவும் கூறாமல் ஒரு விதமான ஆர்ப்பரிக்கும் துடிப்புடன் ஜீசஸின் அணுக்கத்தை இடைவிடாது, ஒரு துளி கூட சிந்தி விடாது தன்னுள் ஏந்திக் கொண்டுப் பிடைத்தான். ஆம்! எனத் தனக்குள் தானே எத்தனை முறை சொல்லியிருப்பானோ தெரியவில்லை. ஜீசஸ் எதுவும் பேசாமல் அவனது தகிப்பை உள் வாங்கிக் கொண்டு அமைதியாக நின்றான்.
வெகுவேகமாக, நீள் சரிவுப் பாதைகளின் சரளைக் கற்களை மிதித்துக் கொண்டு சாக்கடலை நோக்கி அவர்கள் விரைந்தனர். ஒளியைப் பீய்ச்சிக் கொண்டிருந்த வானத்திலிருந்து, வெக்கை ஒரு கூர்மையானத் திரவக் குழாய் போன்று அவர்களது உள்ளும் புறமும் அனத்தியது. மோப் மலையின் குழிந்த சாந்து நிற, வறண்ட நிலம் கண்ணுக்கெட்டியத் தூரம் வரை செதுக்கல் பாறைகளால் நிரம்பிக் கிடந்தது. காலமற்றுக் கிழித்த காற்றின் கனத்த விரல்களின் ரேகைகள் படிந்த வழிப்பாதை, ஊர்ந்து ஊர்ந்துப் புள்ளிகளாய் உருமாறி வெகு தூரத்தே, வெண் திட்டுகளாய்த் தெரியும் இதுமியாவின் நிலம் வரை, ஒரு நீண்டு வளைந்த சுருக்கப் படிவுகளாய் நிலத்தில் பதிந்திருந்தது. தங்களைச் சுற்றிய மண் முகடுகளே ஒரு சுவர் எழுப்பியது போல உயர்ந்திருந்தது. ஏதோ ஆழமானக் கிணற்றின் நடுமையத்திலிருந்து சுற்றிச் சுற்றிப் பார்ப்பதைப் போல, அக்குழிவானப் பிரதேசத்திலிருந்து தூர தூரம் அகன்று அகன்று விரிந்துப் படர்ந்தது.
அவர்கள் தங்கள் மூச்சைப் பிடித்துக் கொண்டு, வளைந்து வளைந்து செல்லும் பாதையின் பிடிமானத்தில் நகர்ந்து கொண்டிருந்தனர். மண் வானம், உடல், ஆவி என அனைத்தும் எரிந்துக் கசிந்துச் சுரந்தது. எரிவின் மணமன்றி எதுவுமில்லாத மூட்டம். எந்த தயைகளுக்கும் வாய்ப்பில்லாத வானம் கண்ணுக்கெட்டியத் தொலைவு வரை, ஒரு முட்டை வடிவ சாம்பல் பொதிச்சுருக்கு போலத் தொங்கிக் கொண்டிருந்தது. நிலமோ செல்லச் செல்ல எந்த உயிர் நடமாட்டமும் இல்லாது, வெற்றாய், காலகாலத்துக்கும் வெறுமையை மட்டுமே குடித்துக் கொண்டு, எரிவின் கந்தக நாற்றத்துடன் அவர்களின் கால்களில் புதைந்தது. நரகக் குழிக்குள் அகப்பட்டுக் கொண்டோமோ என அவர்கள் ஒருமித்து நினைத்தனர். காற்றின் ஒற்றைச் சலனம் மட்டுமே அவர்களை உயிர்ப்பித்திருந்தது. அதன் மிருகலயம், அந்நிலத்தின் சொல் என அவர்களின் காதுகளில் முழங்கியது. ஒரு சேரப் பயமும் கவர்ச்சியும் அடங்காது அவர்களின் செவிகளில் ஊளையிடும் காற்றின் உயிர்ப்பு மட்டுமே அவர்கள் அம்மாபெரும் வெளியின் உயிருள்ள இருப்புகள் என்பதை அவர்களுக்கே தெரிவித்துக் கொண்டிருந்தது.
ஒளியின் கார்வை கூடிக் கூடி அவர்களை குருடாக்கியது. தடுமாறிக் கொண்டே அவர்கள் முன்னே சென்றனர். சூட்டின் பதற்றம் அவர்களின் மண்டையைக் கிளறியது. சரியாகச் சொல்வதெனில் நெருப்பு ஒரு பெரிய போர்வை போல வானிலிருந்து நேரடியாக நிலத்தை அமிழ்த்திக் கிடந்தது. அதனுள் அவர்கள் பாதையை அறியக் கூட முடியாது தப்பித் தப்பி மெல்ல சென்று கொண்டிருந்தனர். சற்றேத் தொலைவில் ஏதோ மணி சப்தம், ஒட்டகங்கள் நகர்ந்து செல்வதைப் போல மயக்கு. உண்மையில் அது பாறைப் படிவத்தின் நெழியும் மேற் தோல், அனலில் அது நகர்வதைப் போலக் காட்சி பிளற்வு.
"எனக்குப் பயமாக இருக்கிறது" செபதீயின் இளையமகன், சற்றே அழும் தொனியில் கூறினான். "இது நரகக் குழி"
"தைரியமாக இரு!", ஆண்ட்ரூ அவனுக்குப் பதிலுரைத்தான். "நீ கேள்விப்பட்டதில்லையா! சொர்க்கத்தின் வாசல், நரகத்தின் இதயத்திலிருக்கிறது என்று!"
"சொர்க்கமா?"
" நீ சீக்கிரமேக் காண்பாய்!"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக