வியாழன், 11 ஜனவரி, 2018

இல்லை தானே?

அன்பும் வெறுப்பும்
ஒன்று போலவா,
கைப்பித்தான்களை அவிழ்க்காமல்
கழற்றிய முழுக்கைச் சட்டை போல.
சில சமயங்களில்
பழைய ஜட்டி அறுப்பாய்,
ஒவ்வொரு காலடிக்கும் தொடைகள் அதக்க
ரத்தம் கன்றக் கன்ற
அன்பைக் கொண்டு பயணம் செய்கிறேன்.
என்னை நிர்வாணப்படுத்த முயலும்,
குறைந்தது உள்ளாடைகளையாவது
களையச் செய்யும்
வெறுப்பின் அதி உன்னத சுதந்திரம்,
பின்பான தனித்த பயணங்களில்
என்னை விட்டு விலகி,
அன்பைக் கேட்டு மன்றாடுகிறது.
ஒரு கனத்த சங்கிலியில்
ஒட்டித் துவளும் கண்ணிகள் போல.
எதையும் தேர்ந்தெடுக்க நாதியற்ற வழிகளில்,
சாலையின் இரு மருங்கிலும்
உடைமுட்களாய்
பச்சைப்பசேலென மருகுகிறது.
உண்மையில்
அன்பும் வெறுப்பும்

ஒன்று போலவா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக