ஒரு பறவையைப் போலத்தான்
நான் அவனை அறிகிறேன்.
சிறகுகள் கொண்ட
பூச்சியைப் போலவும்.
முட்டையிட்டோ
குஞ்சுகள் ஈன்றோ
நான் கண்டதில்லை.
உணவின் பொருட்டு
பூமியில் அவனை
நான் பார்க்கையில்,
தெரு நாய்ப்போலவே
இருப்பான்.
என்னைத்தவிர யாரும்
அறிந்திலர் அவன் சிறகுகளை.
கோபுரத்தின் உள்ளிருளில்
அவனைத் தலைகீழாகவும்.
கருவறையில் கரும்பல்லியாகவும்
வாசலில் தொழு நோய்க்கிழவனாகவும்
குளத்தில் பாசியாகவும்
பிரகாரங்களில்
பிரசாதம் விளம்புபவனாகவும்
அவன் தோன்றி மறைவதாய்ப்
புரளி.
ஆனால்
வெகு நாட்கள் காணாத
அவனை,
என் வீட்டு வாசலில்
அலகால் தன் கழுத்தையே
குத்திக் குத்தி
உடைக்கும்
சிறகுதிர்ந்த கிழக்காகம்
ஏன் அவனைப் போல
அல்லாது
இருந்தும்
அவனையே ஞாபகப்படுத்துகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக