திங்கள், 14 மார்ச், 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -70

    

    முதிய ஜோனா இந்நேரம், வீட்டில் சமையல் செய்து கொண்டும், தன் நினைவுகளில் மூழ்கியும் பீட்டருக்காக உணவைத் தயார் செய்துக் காத்திருப்பார். அவர்கள் எப்பொழுதுமே ஒன்றாக உணவு உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். "பீட்டர்! என் ஒரு மகனையாவது எனக்காக இந்தக் கடவுள் விட்டு வைத்தாரே! நல்லது! ஆண்ட்ரூவைப் போல அல்ல, பீட்டர். அவன் விவேகமாகவும், சமயோஜிதமாகவும் விஷயங்களைக் கையாள்பவன். செயல்களைச் செய்வதிலும், வேலை வாங்குவதிலும் சிறந்த ஆளுமைத்திறனுடையவன். ஆனால் ஆண்ட்ரூ, அவனின் உணர்ச்சிவேகமும், ஆர்வக் கோளாறும் தான் அவன் பிரச்சனையே!. அவனால் நிதானமாக எதனையும் அணுக முடியாது. எந்தப் புதியவிஷயங்களைப் பற்றியும் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளாமலேயே எல்லாம் தெரிந்தது போலப் பாவனைகள் செய்து கொள்வதும், அதில் பெருமையடைவதும் இயல்பாகவே அவனைப் பிரச்சனையில் தான் கொண்டு போய் சேர்த்திருக்கிறது. தன் பிள்ளைகளைப் பற்றியக் கவலையில் மூழ்கியிருந்த முதியவரின் எண்ணங்கள், அதில்லாவிட்டால் ஏரியும், வலையும், மீன்களையும் தவிர்த்து எதனுள்ளும் சிலாகித்து இருந்ததில்லை. மனைவி இறந்ததும் பிள்ளைகளையேப் பெரிதும் நம்பியிருந்தவருக்கு, ஆண்ட்ரூவினால் காலம் மாபெரும் துன்பத்தைக் கொடுத்துச் சென்றுவிட்டது. பீட்டரை மட்டும் தன் இனிமேலான வாழ்விற்கு வலு சேர்க்கும் ஒரேக் குவியமாக அவர் நம்பியிருந்தார். தயாராகிவிட்ட உணவை எடுத்து வைத்து, தன் மகனுக்காக, நண்பகல் கழிந்தும் பசியுடன் காத்திருந்தார் அவர், அவனின் வருகையை எதிர்நோக்கிக் கைகளை மார்புக்குக் குறுக்காக மடக்கிக் கொண்டு அமைதியாக  வாதிலில் அமர்ந்திருந்தார்.

    செபெதீயின் இல்லத்தின் எல்லாக் கதவுகளும் திறந்துகிடந்தது. வீட்டு முற்றத்தின் ஓரத்தில் கூடைகளும், ஜாடிகளும் நிரம்பி இருந்தன. மது தயாரிக்கும் தொட்டியில் இருந்து திராட்சை ரசம் நுரைக்க நுரைக்கப் பீப்பாய்களில் மாற்றப்பட்டிருந்தது அதன் மீதமிருந்த, தோலும் விதைகளும் குடுவைகளில் நொதிக்க விடப்பட்டிருந்தது, புளிப்பேறிய மதுவின் மணம் வீடு முழுதும் அலைந்து கொண்டிருந்தது. மிச்ச மீதிகளும், திராட்சைக் கழிவுகளும் இன்னும் அகற்றப்படாமல் ஈக்கள் மொய்க்க முற்றத்தின் ஒரு மூலையில் கிடந்தன. மதுவின் புளிப்பு வீச்சத்தைக் கலந்து தங்கள் இரவுணவை உண்டு கொண்டிருந்தனர் முதிய செபெதீயும், அவர் மனைவியும். செபெதீ உணவைக் கைகளால் முடிந்த அளவுப் பிசைந்து வாயிலிட்டார். பற்களில்லாத பொக்கை வாயில் ஈறுகளினால் சவைத்து மென்று விழுங்கினார். ஒவ்வொரு கவளத்துக்கும் முகத்தில் பலபல விசித்திரமான பாவங்களைக் காட்டிக் கொண்டிருந்தார். அருகிலிருக்கும் முதிய நஹும்மின் குடிலின் மேல் அவருக்கு ஒரு கண். அவரின் தந்திரபுத்தி, எப்படித்தன்  வியாபாரத்தை வளர்ப்பது என்பதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தது. ஏற்கனவே கடனினால் அந்தக் குடிலை விற்கும் எண்ணத்தில் அவர்கள் இருந்ததால், தனக்குத் தர வேண்டியதற்குப் பணயமாக, அந்தக் குடிலைக் குறைந்த விலைக்கு ஏலத்தில் எடுக்க வேண்டும் என்பது தான் அவரது தற்போதைய யோசனை. இறைவனின் அருளால் அடுத்த வாரத்திற்குள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அந்தக் குடிலை வாங்கியபின், இரு வீடுகளுக்கும் இடைப்பட்ட சுவரை அகற்றி ஒரேக் குடிலாக ஆக்கி விட்டால், பின் அங்கே ஒரு ஆலிவ் எண்ணெய் தயாரிக்கும் உற்பத்தி அலகை அமைக்க வேண்டும். ஏற்கனவே நம்மிடம் உள்ள திராட்சை மது உற்பத்திக்கு செய்த அதே சூத்திரத்தை, இதற்கும் பயன்படுத்தலாம். ஜனங்களிடமிருந்து பழங்களை வாங்கி, எண்ணெய் எடுக்கலாம். நாம் செய்ய வேண்டியது ஒரு முதலீடு, பின் எப்படியும் ஒரு வருடம்,  வீட்டிற்குத் தேவையான எண்ணெய்க்கு குறை இருக்காது. வியாபாரமும் செய்யலாம். அவர்களுக்கு பங்கிட்டுக் கொடுப்பதில், சரியான லாபமாக, நமக்குக் கிடைக்கும் கணிசமான வருமானத்திற்கு வருமானமும் ஆயிற்று என்று மனத்தில் கணக்குகளைப் போட்டுக் கொண்டிருந்தார். அதனால் என்ன செய்தாவது அந்தக் குடிலை விலைக்கு வாங்கிவிட வேண்டும். அது ஒரு நிரந்தர வருமானத்திற்கானச் சரியான வழி என்று நினைத்து உறுதி எடுத்துக் கொண்டார்.

    முதிய சலோமி வழக்கமானத் தன் கணவனின் அங்கலாய்ப்புகளை வெறுமனேக் கேட்டுக் கொண்டிருந்தாள். ஆனால் அவளது உள்ளம், ஜானைத் தேடிக் கொண்டிருந்தது. தன் நேசத்திற்குரியக் குட்டிப் பையன் எங்கே இருக்கிறானோ, என்ன செய்கிறானோ, சாப்பிட்டானோ என்னவோ என்று அல்லாடியது. அவனைக் காண வேண்டும் என அவள் ஏங்கிக் கொண்டிருந்தாள். மேலும் புதிய தீர்க்கதரிசியின் சொற்கள் அவளை எல்லா வகையிலும் ஆற்றுப்படுத்தியது. அதை மறுபடியும் கேட்க வேண்டும் என்னும் எண்ணம் அவளினுள் நிறைந்தது. தேவனின் வார்த்தைகளின் பூரணத்தையும், சத்தியத்தையும், மனித இதயங்களுக்கு அளிக்கும் அவனது தேன் தடவிய உதடுகளை அவள் பக்தியுடன் விரும்பினாள். என்னுடைய மகன் செய்தது சரியே! அவன் இப்பொழுதுதான் தனக்கானச் சரியானப் பாதையினைத் தேர்ந்தெடுத்திருக்கிறான் என்று அவள் உறுதியாக நம்பினாள். நான் அவனை என் ஆன்மாவின் உள்ளிருந்து ஆசிர்வதிக்கிறேன். இரு தினங்களுக்கு முன் அவளுக்கு வந்த சொப்பனத்தினைப் பற்றி அவள் எண்ணினாள். தன் இல்லத்தின் உறுதியானக் கதவுகளை உடைத்துத் திறந்து அவள் வெளியே ஓடுகிறாள். வெளியே பாதையில் அவளுக்கு முன்னே அந்தப் புனிதன் வெளிச்சமாகச் செல்கிறான். அவள் தன்னை அடக்க முடியாமல் அவன் பெயரை அழுத்தமாக உச்சரித்துக் கொண்டே, அவனை நோக்கி ஓடுகிறாள். வெற்றுக் கால்களுடன், தன் பசி, தாகம் எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு, தன் வீடு, அதன் ஆடம்பரங்கள் அனைத்தையும் ஒரு தூசு போல உதறிவிட்டு விரைகிறாள். தன் வாழ்நாளில் அன்றுதான் அவளால் மகிழ்ச்சி என்பதை உண்மையாக உணரமுடிந்தது. தன் பசியும் தாகமும் இந்த சாதாரண உணவினாலும், தண்ணீரினாலும் அடங்காது, அது விளைவது தேவனின் அணுக்கமே என்று அவள் மனதார வேண்டினாள்.

    "சலோமி! சலோமி!, என்னாயிற்று இவளுக்கு, நான் பேசுவதைக் கேட்கிறாயா" செபெதீ தன் மனைவியின் எங்கோ ஸ்தம்பித்து நிற்கும் விழிகளைப் பார்த்து அவளை உலுக்கினார்.

"என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்?"

    "நான் நீங்கள் பேசுவதைத்தான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்?" அவரைப் பொருளற்றுப் பார்த்தன சலோமியின் விழிகள். அது இன்னும் தான் தொலைந்த இடத்திலிருந்து மீளாமலேயே இருந்தது.

    அந்தக்கணத்தில் தெருவில், தனக்கு நன்கு தெரிந்தக் குரல்களைக் கவனித்த முதியவர், வாதிலைக் கூர்ந்து வெளியேப் பார்த்தார்.

    "அதோ அவர்களேதான்" வாசலிற்கு வந்தவர்,  வெளியே வெள்ளை அங்கி அணிந்திருந்த ஒருவன் தன் வீட்டைக் கடந்து , தன் இரு மகன்களையும், இரு தோள்களிலும் கைகளால் தாங்கிக் கொண்டு செல்வதைப் பார்த்து, வாயிலிருந்த சாப்பாட்டின் எச்சில் தெறிக்கக் கத்தினார்.

"எங்கே செல்வதாய் உத்தேசம் தம்பிகளா! நில்லுங்கள் அங்கேயே!"

    பீட்டர் அவரிடம் பேசமுற்பட்டான். இன்னொருத்தன் சட்டென அங்கிருந்து சற்று விலகி நின்றான். 

    "எங்களுக்கு செய்யவேண்டிய  அத்தியாவசியமான வேலை ஒன்று இருக்கிறது, நாங்கள் போகவேண்டும்"

"என்ன வேலை"

    "அது முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டியச் சிக்கலான வேலை" சொன்னவன் அடக்க மாட்டாமல் சிரித்தான்.

    முதியவர் நிமிர்ந்து அவர்களை உற்றுப் பார்த்தார். நீயுமா? ஜேக்கப்! நீயுமா!". அவர் தன் வாயிலிருந்து மிச்ச உணவைச் சவைத்துக் கொண்டே அழத்தொடங்கினார். அவரது குரல் கம்மியது. தொண்டைக்குழி அடைத்தது போலக் கமறி இருமினார். பின் அங்கிருந்து வீட்டிற்குள்ளே சென்றுத் தன் மனைவியைப் பார்த்தார்.

    "உம் மகன்களுக்கு விடைபெறல் கூறு செபெதீ," அவள் தன் தலையை ஆட்டிக் கொண்டே சொன்னாள். "அவன் நம்மிடமிருந்து அவர்களை எடுத்துக் கொண்டான்."

    "ஜேக்கப்புமா?" அவர் அதிர்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறினார். "அவன் மண்டையிலாவது ஏதாவது இருக்கும் என்றல்லாவா  நான் நினைத்தேன், இதற்கு வாய்ப்பே இல்லை!"

    சலோமி பேசாமல் நின்றிருந்தாள். "என்ன பேச அவரிடம்? என்ன சொன்னாலும் அவர் எப்படியும் புரிந்துகொள்ளமாட்டார்?" தனக்கு இனி பசியும், துக்கமுமில்லை என்று நினைத்துக் கொண்டவள், வாசலிற்கு வந்தாள். அவர்களுக்குத் துணையாக, அவர்களை அணைத்து நிற்கும்  கருணையின் வடிவான இளைஞனைக் கண் கொட்டாமல் கண்டாள். பின் தன் கைகளை அசைத்து யாருக்கும் கேட்கா வண்ணம் மெல்லியக் குரலில் பேசினாள். "என் ஆசிர்வாதங்கள் என்றும் உங்களுக்கு உண்டு, போய் வாருங்கள் குழந்தைகளா" என்றாள். அவர்கள் மூவரும் தேவன் விதியிட்டத் தேடலின் பாதையில், ஜெருசலேம் வழியாக ஜோர்டானை  நோக்கி விரைவாக நடையிட்டனர்.

    கிராமத்தின் எல்லையில் பிலிப் எதிர்பட்டான். அவன் ஏரியின் கடைசி நிலத்தில் தன் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தான். ஒரு சிவந்தப் பாறைக்குன்றில் தன் துரட்டிக் கம்பினை ஊன்றி சாய்ந்து கொண்டு ஏரியின் தூரத்தை அளந்து கொண்டிருந்தான். நீலப்பச்சையான நீர்மையில், கருமையான வளையங்கள் அலையிட்டுக் கரை ஒதுங்குகிறது. கரைப்பாசிகளின் அனிச்சையான அலைதல். ஒவ்வொரு அலைத்துள்ளலுக்கும், அதன் சுழல் வட்டம் பெரிதாகி பெரிதாகி விளிம்பில் முறிந்து கொண்டிருந்தது. தனக்குப் பின்னே கூழாங்கற்களை மிதித்து வரும் காலடிகளைக் கவனித்தவன் திரும்பி, நிமிர்ந்து அவர்களை நோக்கினான்.

    "ஹேய்!என்னைத் தெரிகிறதா?" அவன் அவர்களை நன்றாகத் தமக்குத் தெரியும் என்கிறத் தொனியில் சத்தமாக விளித்தான்,  "எங்கே போய்க் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள்?"

    "தேவனின் சொர்க்க ராஜ்ஜியத்திற்கு!" ஆண்ட்ரூ சத்தமாகக் கூறினான். " நீயும் வருகிறாயா?"

    "இதோ பார், ஆண்ட்ரூ கொஞ்சம் காரியமாகப் பேசுகிறாயா?", நீங்கள் மாக்தலாவில் நடக்கும் திருமண விருந்திற்குப் போகிற மாதிரி இருந்தால், சரி! நானும் வருகிறேன். நாத்தனேல் என்னையும் அழைத்திருக்கிறான். அவனது அக்காளின் மகளுக்குக் கல்யாணம் இன்று இரவு நிகழ்கிறது.

    "ஏன்? மாக்தலாவையும் தாண்டி இன்னும் தூரமாகப் போவதாய் இருந்தால் நீ வரமாட்டாயா என்ன? ஜேக்கப் கிண்டலாகக் கூறினான்.

    "அய்யைய்யோ! என் ஆடுகள் இருக்கிறதே! அதுகளை எங்கேக் கொண்டுபோய் விட?"

    " நம் தேவனின் கைகளில்" ஜீசஸ் திரும்பிப்பார்க்காமல் பதிலுரைத்தான்.

"ஓநாய்கள் அதுகளைத் தின்றுவிடும்"

"திங்கட்டுமே!" ஜான் கத்தினான்.

    "சரிதான்! கடவுளுக்கும் பைத்தியம் பிடித்துவிடும், இவர்களின் பேச்சைக் கேட்டால்!", இந்தப் பயல்கள் முழுக்கிறுக்காக ஆகி விட்டார்கள் போல" நமக்கெதற்கு வம்பு! என்று அந்த மேய்ப்பன் சீழ்க்கை அடித்து, தன் துரட்டியை ஆட்டி ஆடுகளை ஓட்டத் தொடங்கினான்.

    அவர்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள். யூதாஸ் தன் கையிலிருந்த முறித்தக் கிளையை ஆட்டிக் கொண்டே, முன்னே அவர்களை வழி நடத்திச் சென்றான். சீக்கிரமே சென்று சேர வேண்டும் என்ற அவசரத்தில் அவன் வேகமாக நடந்தான். பின்னால் வரும் மற்ற அனைவருமே சந்தோஷத்தில் இருந்தனர். அவர்கள் ஒரு பறவைக்கூட்டம் போல சத்தமாக சீழ்க்கை அடித்தும், அளவளாவிக் கொண்டும், சிரித்துக்கொண்டும் வந்தனர். பீட்டர் ஓடிப் போய் யூதாஸை அணுகினான். யூதாஸ் இது எதிலும் கலந்துகொள்ளாமல், அவசரகதியில் மூச்சிரைக்க நடக்கிறான். எந்த உணர்ச்சிகளும் வெளிக்காட்டாது நேரம் கடக்க கடக்க அவனது நடையின் வேகம் அதிகரித்துக் கொண்டே சென்றது.

    "யூதாஸ், நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் என்று ஒருமுறை என்னிடம் சொல்லிவிடு!" பீட்டர் மென்மையாக அவனுக்கு கோபம் வராதவாறுக் கேட்டான்.

"தேவனின் சொர்க்க ராஜ்ஜியத்திற்குத்தான், வேறெங்கு!" அவனது பாதி முகத்தில் வெறிப்பு கரிந்தது.

    "கேலிப் பேச்சு வேண்டாம், யூதாஸ். எனக்கு நம் ஆசிரியனிடம் கேட்கப் பயமாக இருக்கிறது. கடவுளுக்கே வெளிச்சம்! நாம் எங்கு போகிறோம் என்று சொல்லேன்"

"ஜெருசலேமிற்கு"

    "ஐயோ, மூன்று  நாட்கள் தொடர்ந்து நடக்க வேண்டுமே! ச்சே! முன்னமே தெரிந்திருந்தால் நான் கொஞ்சம் ரொட்டியும், குடுவையில் புதிய மதுவும், செருப்பும் போட்டுக் கொண்டு வந்திருப்பேன். என் கைக்கோலையும் எடுத்திருக்கலாம். இப்போது ஒன்றும் செய்வதற்கில்லை."

    இந்த முறை செந்தாடிக்காரனின் முகம் முழுதும் சிரிப்பு படர்ந்தது. அவனின் வெறிப்பார்வையில், ஏளனம் குடிகொண்டது. "ஐயோ, பீட்டர்! பீட்டர்! பாவம் நீ!. பந்து ஏற்கனவே உருளத் தொடங்கி விட்டது. இனி இதனை யார் நினைத்தாலும் நிறுத்த முடியாது. நீ உன் செருப்புகளுக்கும், ரொட்டி மற்றும் மதுவிற்கும் கடைசி விடைபெறல் கூறிவிடு. நீ திரும்பி வரமுடியாதப் பாதையைத் தேர்ந்திருக்கிறாய். நாம் ஏற்கனவே அதைவிட்டு வந்தாயிற்று. புரிந்ததா உனக்கு! நீ உன் உலகத்தை விட்டு, உன் கடலின் வழிகளை விட்டு வெகுதூரம் வந்தாயிற்று. ஆனால் இன்னும் உனக்கு நேரம் இருக்கிறது. போவதென்றால் இப்பொழுதே ஓடிப்போய்விடு! அவன் வெடித்துச் சிரித்தான்.

    " என்னால் இனிமேல் எப்படித் திரும்பிப் போகமுடியும்?" பீட்டர் கூறினான். தன் கைகளை உயர்த்தி சுற்றிக் காண்பித்தான். நான் உள்ளே நுழைந்தாயிற்று. கண்ணுக்குத்தெரியாத சூட்சுமத்தின் கைகளில் அகப்பட்டுக்கொண்டிருக்கிறேன். இனிமேல் நானே நினைத்தாலும் திரும்பிப் போவதற்கு வாய்ப்பில்லை. இனி எல்லாவற்றையும் கடவுள் தீர்மானிக்கட்டும். எனக்கு உண்மையில் சலித்துவிட்டது. இந்த ஏரியும், அதன் மீன்களும் இன்னும் இன்னும் என்னை அர்த்தமற்றாதாக்கிக் கொண்டிருக்கிறது. எனது படகுகளையும், இந்த கார்பெர்னத்தையும் நான் அடியோடு வெறுக்கிறேன். இதனை முற்றிலுமாக  மறந்து எனக்கானப் பாதையை நான் சுயமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். அதன் எல்லா கூடுதல் குறைவுகளோடும் நான் அதனைப் பார்த்துக் கொள்கிறேன்.

    "நல்லது! நானும் ஒத்துக் கொள்கிறேன்!, அப்படியென்றால் உன் தேவையற்றப் புலம்பகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, பேசாமல் என்னுடன் வா!"

    கிராமத்தின் தெரு நாய்கள், பரிட்சயமற்ற ஆட்களின் வாடையை உணர்ந்துக் குரைக்கத் தொடங்கின. பிறகு ஊரின் சிறுவர், சிறுமிகள் மாக்தேலாவின் முடுக்குகளுக்குள் கத்திக் கொண்டே ஓடினர்.

"அவர் வந்து கொண்டிருக்கிறார்! அவர் வந்து கொண்டிருக்கிறார்!"

"யார் வருகிறார், பொடியன்களா?" கிராமத்து மக்கள் தங்கள் இல்லக் கதவுகளைத் திறந்து கொண்டு கேட்டனர்.

"புதிய தீர்க்கதரிசி!"

    கிராமத்தின் முகப்பிலிருக்கும் சதுக்கம் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என நிறையத் தொடங்கியது. ஆண்கள் தங்கள் வேலைகளை அப்படியே நிறுத்தி விட்டு அங்கு வந்தனர். நோய் வாய்ப்பட்டவர்கள் மகிழ்ச்சியுடன், அவனது தொடுகையை ஏங்கி வருகின்றனர். அவனைப் பற்றியச் செய்திகள் ஏற்கனவே மக்களுக்குத் தெரிந்திருந்தது. அவனது அற்புதங்களின் சங்கீதங்களைக் கதைப்பாடல்களாக, ஜென்னசரேட் ஏரிக்கரையிலிருந்து சுற்றுவட்டாரக் கிராமங்கள் முழுதும் பறைசாற்றப்பட்டிருந்தது. அவனது தொடுகைகளின், அணுக்கத்தின், சமீபத்தின் மகத்துவமும், மருத்துவமும், வலிப்பு கண்டவர்களையும், முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட முதியவர்களையும், பார்வையிழந்தவர்கள், பேய், பிசாசுகள் பிடித்து மூர்க்கமடைந்தவர்களையும், கிறுக்கர்களையும் குணப்படுத்துவதன் அதிசயங்களை மக்கள் எல்லோருமே அறிவர். அதனால் அவனின் வருகை என்பது சாதாரண நிகழ்வல்ல. அவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியும், குதூகலமும், பக்தியும், மன்றாட்டும், பிரார்த்தனைகளும் என ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதத்தில் தங்களை அங்கே வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.

    "அவர் என் இருளடைந்த விழிகளைத் தொட்டார், நான் ஒளி பெற்றேன்!"

    "அவர் என் ஊன்றுகோல்களைத் தூக்கித் தூர எறியச் சொன்னார், நான் என் கால்களில் வலுவைப் பெற்றேன். நடனமாடினேன்!"

    " சாத்தான்களின் சந்ததிகள் அனைத்தும் என்னுள் கிளர்ந்து என்னை ஆட்டுவித்தன. அவர் தன் கைகளை உயர்த்தி என்னிடம் ஆணையிட்டார். "அப்பாலே போ சாத்தானே! போய் அந்தப் பன்றிகளைப் பற்றிக்கொள்" அவைகள் ஒரே வீச்சில் என் உடலிலிருந்து உதறி என் ஆவியினுள் இருந்து, கெட்ட ரத்தம் பீறிடுவதைப் போல வெளியேறி, கடற்கரையினில் மேய்ந்து கொண்டிருந்த பன்றிகளிடம் போய் அண்டிக் கொண்டன. அந்த விலங்குகள் பைத்தியம் பிடித்துக் கத்தின. அவைகள் ஒன்றை ஒன்று மூர்க்கமாய் முட்டிக் கொண்டு சண்டையிட்டு நீரினுள்  மூழ்கி மறைவதை நான் என் சொந்தக் கண்களால் பார்த்தேன்."

    அவனின் வருகையின் இனிய செய்தியை அறிந்ததும் மாக்தலேன் அவளது கூடத்திலிருந்து வெளியே வந்தாள். என்று மேரியின் மகன் அவளைத் திரும்பப் போகச் சொல்லி, இனி உனக்குப் பாவங்கள் இல்லை என்று சொன்னானோ அதன் பிறகு அவள் தன் முகத்தை யாருக்கும் வெளிக்காட்டவில்லை. வீட்டை விட்டு அவள் வெளியேயும் வரவில்லை. அவள் அழுகையினாலும், தன்னுள் ஊறிக் கொண்டே இருந்த பிரார்த்தனைகளின் தூய்மையினாலும் , தன் கடந்தகாலத்தின் அத்தனை அழுக்குகளையும் சுத்தப்படுத்தித் தன்னுடைய ஆன்மாவை நிர்மலமாக்கியிருந்தாள். இரவு விழிப்புகளின், உடலின் தாபங்களின் சுரப்புகளை, அதன் வலிகளை, வாதைகளை  என்று எல்லாவற்றையும் அழிக்கும் பொருட்டு அவள் போராடித் திரும்பவும் தன்னைப் புதிதாக பிறப்பித்திருந்தாள். அவள் தன் கன்னித்தன்மையைத் திரும்பவும் மீட்டெடுத்தாள். ஆம்! தேவனின் அணுக்கத்தைத் தன்னுள் உணரும் வண்ணம் இரவு பகலாகப் பிரார்த்தனைகளன்றி எதனுள்ளும் தன்னை ஒப்புக் கொடுக்காமல் அவள் மீண்டு வந்திருந்தாள். அவளுடைய பிரார்த்தனைகளின் வழியே ஜீசஸ்! ஜீசஸ்! எனும் சொல் ஒன்றே அவளை ஒளியிலும், இருளிலும் ஒரு கவசம் போலப் பாதுகாத்தது. அந்தப் பெயரன்றி அவளினுள் எதுவும் தழும்பவில்லை. அவள், தான் அந்தப் பெயர் எனும் இருமை ஒழிந்து ஜீசஸ்! எனும் சொல்லிற்குத் தன் உடல், பொருள், ஆவி எல்லாவற்றையும் பாரபட்சமின்றி, சந்தேகங்களின்றி சமர்ப்பணம் செய்துவிட்டாள். தன் இம்மைக்கும் மறுமைக்கும் ஏதுமின்றி அந்த ஒரு பெயர் மட்டுமேத் தனக்குப் போதுமானதாக இருப்பதாக அவள் மனதார நம்பினாள். தன் மரணத்தின் நொடியிலும் அப்பெயரை உச்சரித்து, அருள் ததும்பச் சாவதே அவளது வாழ்வின் நோக்கமாக இருந்தது. பெரும்பாலான இரவுகளில், அவளது சொப்பனத்தின் வழியே அவள் ஜீசஸைக் கண்டாள். தூர தூரங்கள் பயணித்து சோர்வுடன், புழுதி படிந்த வெற்றுக் கால்களுடன் அயர்ந்து அவன் நள்ளிரவுகளில் வருகிறான். அவள் வெந்நீர் வைத்து அவன் பாதங்களைக் கழுவி, தன் கேசத்தால் அதனை ஒற்றித் துடைக்கிறாள். அவனுக்கு இரவுணவு அளிக்கிறாள். அவர்கள் இரவு முழுதும் ஏதேதோ விஷயங்களைப் பேசி சிரிக்கிறார்கள். அவன் தன்னிடம் என்ன பேசினான் என்பதை அவளால் ஞாபகப்படுத்த முடியவில்லை. ஆனால் அவனின் அணுக்கம் உண்மையில் அவளுக்கு சொப்பனம் போல இல்லை. ஒரு நித்திய இருப்பாக எல்லா இரவுகளிலும் அவனை அவள் உணர்ந்து கொண்டிருந்தாள். ஒவ்வொரு நாளும் காலையில் படுக்கையை விட்டு எழும்பும் பொழுது அவன் நினைவுகளின் சுகந்தத்தினாலும், அவனது குரலின் எல்லையில்லாத் தன்மையினாலும் தான் அடித்துச் செல்லப்படுவதும், அந்த ஆதியந்தமற்ற நதியில், அவள் பாதைகளே அற்று மிதந்து செல்வதைப் போலவும் துணுக்குற்றுத் தனக்குள்ளேயே மகிழ்ந்திருந்தாள். சில நேரங்களில் அவள் அவனுடன் பேசுவதைப் போலத் தனக்குள் பேசிக் கொள்வாள். கொஞ்சுவாள், அழுவாள், மன்றாடுவாள். ஆனால் யாருக்கும் கேட்காதபடி தாழ்ந்த குரலில் அவளுக்கு மட்டுமேயானத் தனி உலகினில் அவள் அதனை உருவாக்கி வைத்திருந்தாள். இன்று இந்தச் சிறுவர்களின் கூச்சலையும், ஆரவாரத்தையும் கேட்டவள், தன்னைச் சற்றும் நிதானப்படுத்த முடியாமல், வாதிலை விட்டு வெளியே வந்தாள். நீளமானக் கண்களைத் தவிரத் தன் உடலின் அனைத்து தடங்களையும் முற்றிலுமாக மறைத்து, அவனது வருகையின் நிமித்தம் அவனைப் பார்க்க ஓடி வந்து கொண்டிருந்தாள்.

    மாலைப் பொழுதில் கிராமமே உற்சாகத்தில் திளைந்திருந்தது. இளம் பெண்கள், தங்கள் ஆபரணங்களையும், வனப்பான உடைகளையும் அணிந்து கொண்டு அங்கு நடக்கும் திருமணத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். தங்களுக்குள் வம்பளந்துக் கொண்டும், அவர்களின் அலங்காரங்களை, அணிகலன்களை ஒருத்தொருக்கொருத்தர் நோட்டமிட்டு ஒப்பிட்டுக் கொண்டும் வந்தனர். நாத்தனேலின் சகோதரியின் மகளுக்குத் திருமண நிகழ்வு ஒருங்கமைந்து கொண்டிருந்தது. இளம்பெண்கள் விளக்குகளை ஏற்றி, வீட்டினுள் அலங்காரங்களை அமைப்பதைப் பார்த்துக் கொண்டனர். செருப்பு தைக்கும் தொழிலாளியான நாத்தனேலின் மாமா, விருந்திற்கானக் காரியங்களை மேற்பார்வை செய்து கொண்டிருந்தார். மணப்பெண் முழு அலங்காரத்துடன், தன் கண்கள்  மட்டும் தெரியும்படி முக்காடிட்டுக் கொண்டு நடு வீட்டில், திருமணத்திற்காகப் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்து, கிராமத்தின் ஆண்கள்,பெண்கள், விளக்கொளிகளுடன் வரவேற்க வரும் இளம்பெண்களின் வருக்கைக்காகக் காத்திருந்தாள். விளக்கொளியில் அவள் காதுகளில் அணிந்திருந்த, வெள்ளிக் கம்மல்கள் மிளிர்ந்தன. முக்காட்டிற்குள்ளிருந்தும் அவளின் புன்சிரிப்பினைக் கண்கள் வழியேக் காண முடிந்தது. தனது வேத நூல்களைப் பிரித்து அவர்களின் திருமணத்தை நிகழ்த்தி வைக்கும் அந்தக் கிராமத்தின் துறவியின் ஆசிர்வாதங்களுக்காகவும் காத்திருக்கிறாள். ஆனால் யாருமே இன்னும் வந்து சேரவில்லை. அவள் மட்டும் தனியே தன் தடித்த மூக்கை உறிஞ்சிக்கொண்டு இருக்கையில் அலங்காரங்களுடன் அமர்ந்து மந்தமாக வெளியை நோக்கிக் கொண்டிருந்தாள்.

    நாத்தனேலும் அச்சிறுவர்களின் விளியைக் கேட்டு, தன் நண்பர்களைத் திருமணத்திற்கு அழைப்பதற்காக வெளியே ஓடினான். அவர்கள் கிராமத்தின் முகப்பில் இருக்கும் கேணியின் அருகிலிருந்த திண்டில் அமர்ந்திருப்பதை அவன் கண்டான். கிராமத்தின் தாகம் தீர்க்கும் குடிதண்ணீர் சுரக்கும் சுனை அக்கிணறு, மாக்தலேன் அவனின் காலடியில் அமர்ந்திருந்தாள். தன் அழுகையினால் அவன் பாதங்களை நனைத்து, கேசத்தால் வருடிக் கொண்டிருந்தாள்.

    அவன் அவர்களை நோக்கி அருகில் வந்தான். "இன்றிரவு என் சகோதரியின் மகளுக்குத் திருமணம். நீங்கள் கண்டிப்பாக திருமண விருந்தில் கலந்து கொள்ள வேண்டும். இந்தக் கோடையில், செபெதீயிடம் வேலை செய்ததற்குக் கூலியாக வாங்கியப் புதிய, இனிமையான திராட்சை ரசத்துடன் நாம் இவ்விருந்தினைக் கொண்டாடுவோம்." 

    அவன் ஜீசஸைப் பார்த்தான். "மேரியின் மகனே, நாங்கள் உம் புனிதத்தின் மகத்துவத்தைப் பற்றி எல்லா இடமும் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.  எங்களைக் கௌரவிக்கும் விதத்தில் நீ இந்தத் திருமண வைபவத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி ஆசிர்வதிக்க வேண்டும். அவர்கள் ஆண்மகவுகளைப் பெற்றெடுத்து இஸ்ரவேலத்தின் புகழுக்கு வலுசேர்க்கட்டும்!"

    ஜீசஸ் எழுந்தான். "மனித இதயங்களின் புனிதம் அவர்களின் இன்பத்திலேயே நிலைக்கிறது" ஆம்! என் துணைவர்களே! வாருங்கள் நாம் போகலாம்!"

    ஆவன் மேரியின் கைகளைப் பிடித்துத் தூக்கினான். "வா! மேரி! எங்களுடன் இணைந்துகொள்!"

    உற்சாகம் பொங்க அவன் கூட்டத்தை வழி நடத்தி முன்னே சென்றான். திருவிழா மன நிலையை அவன் எப்போதுமே விரும்பினான். மனிதர்களின் பிரகாசிக்கும் முகங்கள் அவனை சந்தோஷப்படுத்தும். இளையவர்கள் இணையும் அந்த அற்புதமான நொடி. அந்த இருமனங்களும் ஒன்றாகும் நிகழ்வில் அவர்களின் ஆனந்தமான மகிழ்ச்சியைக் காணுவது அவனுக்கு மிகவும் பிடிக்கும். அங்கு உடல், மனம், ஆன்மா ஒன்றிணைந்து இருவரும் ஒருவராக பற்றிக் கொள்வதற்கான சடங்குகளைச் செய்விப்பதையும், அதைப் பார்ப்பதையும் அவன் தவறவிட்டதில்லை. இறைவன் படைத்த எல்லாமே புனிதத்தன்மை கொண்டவையே. ஆம்! மண், மரம், பூச்சிகள், விலங்குகள், மனிதர்கள் என்று எல்லாமே அவனின் வேறு வேறு உருவங்களே அன்றி வேறென்ன!. நாம் எதற்காக வாழ்கிறோம்? நம் தேவனை மகிமைப் படுத்துவதற்காக? மனிதம், என்றென்றும் எப்போதும் நீடூழி வாழட்டும்!"

    வெண்ணிறத் தூய ஆடைகளை அணிந்துகொண்டு அலங்காரமிட்ட வாயிலில் இளம்பெண்கள், தங்கள் வீச்சமான நறுமணம் வீச நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் தங்கள் கைகளில் விளக்குகளை ஏந்திக் கொண்டு, மணமகளை வரவேற்கும் வண்ணம் திருமணத்திற்கானப் பழமையான பாடல்களைப் பாடினர். அது மணமகனைக் கேலியும், கிண்டலும் செய்யும் தொனியில் எழுதப்பட்டது.  அது இறைவனையும்  தங்களின் வரவேற்பில் இணைந்து கொள்ளுமாறு வேண்டுகிறது. ஒரு திருமண நிகழ்வென்பது, இஸ்ரவேலத்தில் இரு உடல்கள் தங்களை ஒன்றை ஒன்று அந்த நாளின் இரவில் கண்டுகொண்டு ஒன்றிணைவதன் வழியே எல்லாம் வல்ல இறைத்தன்மையை அடைவதற்கான வாசலைத் திறப்பதாகும். ....அந்த நாளின் இரவை மேலும் நீட்டிக்க இளம்பெண்கள், மணமகனை வழியில் தடுத்து நிறுத்திக் காக்க வைப்பதும்,  கேள்விகள் கேட்டு நாண வைப்பதும் சம்பிராதயமாக நடக்கும். அவர்கள் மேலும் மேலும் தனித்திருக்கும் மணப்பெண்ணைக் காக்க வைத்து, விழாவின் எதிர்ப்பார்ப்பைக் கூட்டுவர்.

    அவர்கள் பாடிக் கொண்டிருக்கும்பொழுது, ஜீசஸ் கூட்டத்தை முன் நடத்தி உள்ளே வந்தான். கன்னியர்கள் அவனின் எழிலை ஆச்சர்யத்துடன் பார்த்தனர். ஆனால்மாக்தலேனைப் பார்த்ததும் அவர்களின் பாடலின் ஸ்வரம் அப்படியேத் தாழ்ந்து நின்றுவிட்டது, அங்கு திடீரென அமைதி  படிந்து, அவர்கள் பின் வாங்கினர். "இந்த வேசிக்கு இங்கென்ன வேலை?, எங்கே அந்த கிராமத் தலைவர், இவளைத் தடுக்காமல் எங்கே போனார்? இவள் இந்தத் திருமணத்தின் புனிதத்தை அசுத்தப்படுத்துவதற்கென்றே வந்திருக்கிறாள். கூட்டத்தில் நின்றிருந்த திருமணமானப் பெண்கள், அவளை முறைத்துக் கொண்டும், தங்களுக்குள் வசைபாடிக்  கொண்டுமிருந்தனர். சலம்பலும், குழப்பமும், கூச்சலுமாக அங்கே சம நிலைக் குலைந்து கொண்டிருந்தது. எல்லோரும் ஒட்டுமொத்தமாக அசௌகரியத்தை உணர்ந்தனர். அந்த வீட்டின் ஆட்களும், வந்திருந்த விருந்தாளிகளும் அடைத்திருந்த கதவைப் பார்த்து வெறுப்புடனும், தங்களுக்குள் சலசலத்துக் கொண்டும் பொறுமையின்றி நின்றனர். மாக்தலேன் தன் ஒளிர்வுடன் பூரணமாக ஜீசஸின் அருகில் நின்று கொண்டிருந்தாள். மாசுமருவற்ற அவளது, முகம், தேகம், இன்னும் தன் கன்னித்தன்மை அகலாத உதடுகள் எல்லாமே, தூய்மையின் பொலிவுடன் இருந்தது. கூட்டத்தின் உள்ளிருந்து, கட்டை தாட்டியான, அக்கிராமத்தின்  தலைவரான ஒரு முதியவர் வந்து மேரியை அணுகினார். அவள் கைகளைப் பிடித்து இழுத்து வெளியே போகும்படித் தலையை ஆட்டி எச்சரிக்கை செய்தார்.

    தன்னருகே இருக்கும் மக்களின் முகத்தில், கைகளில், அவர்களின் உடல்மொழியில் வெறுப்பின் நச்சுத்தன்மை உமிழ்ந்து கொண்டிருப்பதை ஜீசஸ் உற்று நோக்கினான். அவன் தன்னிலை இழக்கத் தொடங்கினான். உடல் முழுதும் சிறு சிறுக் கணுக்களாகப் பல்லாயிரம் கூர் முட்கள் குத்திக் கிழிப்பதைப் போலக் காயங்களின் வலி அவன் தலைக்கேறுகிறது, அவன் அதிர்ந்து கொண்டிருந்தான். அந்த முதியக் கிராமத் தலைவரை, சத்தமாய் வசை பாடும் ஆண்களை, நேர்மையான அவர்களின் மனைவிகளை, வெறுப்புடன் பார்க்கும் கன்னிப்பெண்களை எல்லோரையும் ஜீசஸுன் கண்கள் மாறி மாறி நோக்கின. அவனால் தாங்க முடியவில்லை. மூச்சை இழுத்துவிட்டான். இன்னும் எத்தனை நாட்கள் இந்த மனிதர்கள் இப்படியே இருக்கப் போகிறார்கள். நாம் சகோதரர்கள் இல்லையா?. ஜீசஸின் தேகம் மறுபடியும் பலவீனமடையத் தொடங்கியது. அவன் தலையில் பாரம் ஏறக் கண்கள் கலங்கின.

    அவர்களின் முணுமுணுப்புகள் தீவிரமாகின. இருளின் அச்சுறுத்துதல்கள் அவர்களினுள் முளைக்கத் தொடங்கின. நாத்தனேல் ஜீசஸுடம் பேசுவதற்கு முனைந்தான். ஆனால் ஜீசஸ் அவனை விலக்கிக் கொண்டு முன்னே செல்ல எத்தனித்தான். வாசலில் நின்று கொண்டிருந்த கன்னிப் பெண்களையும், அவர்களின் கைகளில் ஊசலாடிக் கொண்டிருக்கும் விளக்கொளியையும் பார்த்தான். அவன் முன்னே செல்லச் செல்ல அவர்கள் விலகி வழிவிட்டனர். அவர்களுக்கு மத்தியில் நின்று ஜீசஸ், தன் கைகளை வான் நோக்கி உயர்த்தினான். "கன்னிகளே! என் சகோதரிகளே! நம் தேவன் என் இருதயத்திலிருந்து, அவரது அன்பானச் சொற்களை எனக்களித்து என்னைப் பேச வைக்கிறார். என் மூலம் அவர் நிகழ்த்தும் வார்த்தைகளைச் செவி கூர்வீர்களாக! இந்தப் புனித இரவில், என் சகோதரிகளே! உங்கள் இருதயத்தைத் திறந்திடுங்கள். என் சகோதரர்களே! கொஞ்சம் அமைதியாகுங்கள். நான் உங்களிடம் பேச விளைகிறேன்!"

    சஞ்சலத்துடன் அவர்கள் அவனைப் பார்த்தனர். அவனது அழைப்பு உண்மையில், ஆண்களிடம் இப்போது வெறுப்பை உண்டாக்கியது. அவர்கள் கோபமாக நின்று கொண்டிருந்தனர். பெண்கள் ஏதும் பேசாமால் சோகச்சாயம் பூசிக் கொண்டுத் தரையைப் பார்த்தனர். யாரும் எந்தக் குரலும் எழுப்பவில்லை. இரு பார்வையற்ற இசைக்கலைஞர்கள், முற்றத்தின் ஒரு ஓரத்தில் தங்களின் நரம்பிசைக் கருவியை மீட்டித் தூண்டிக் கொண்டிருந்தனர். அதன் தந்தி அசைவுகளின் லயம் அங்கிருந்து கிளம்பி சூழலுக்குள் ஒரு அனிச்சம் போலக் குழைந்து ஒழுகியது.

    "சகோதரிகளே! நம் தேவனின் சொர்க்க ராஜ்ஜியம் எவ்வாறு இருக்கவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அது ஒரு  திருமண மேடை. நம் தேவனே அதில் மணமகன். அத்திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது இல்லையா! மனிதகுலம் மொத்தத்தையும் அவர் அதற்காக அழைக்கிறார். என்னை மன்னியுங்கள், சகோதரர்களே! என்னிடம் கடவுள் இப்படித்தான் பேசுகிறார். கதைகளின் வழியாக. ஆகவே நானும் அக்கதையையே உங்களுக்கு அளிக்கிறேன்.

    "முன்னொரு சமயம், ஒரு கிராமத்தில், ஒரு திருமண நிகழ்வு நடந்தது. பத்து கன்னிமார்கள் விளக்கேந்தி ஒளிபொருத்தி வாசலில் நின்றனர். அதில் புத்திசாலியான ஐந்து கன்னிகள், விளக்கு எரிப்பதற்கான எண்ணையையும், கையோடு எடுத்து வந்திருந்தார்கள். ஆனால் மற்ற ஐந்து முட்டாள் கன்னியர்களோ வெறும் விளக்கை மட்டும் ஒளிர்வித்துக் கொண்டு வந்திருந்தார்கள், அவர்களிடம் மேலதிகமாக எண்ணெய் இல்லை. அவர்கள் வெகு நேரமாக மணமகனின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். அந்த மணமகன் வருவதற்கு இன்னும் தாமதமானதால், அவர்கள் சோர்வுற்று அங்கேயே உறங்கிப் போயினர். அந்த நாளின் நள்ளிரவில், அந்த சத்தம் கேட்டு அவர்கள் அலறிக் கொண்டு எழுந்தனர். "இதோ நம் மணமகன் வந்து கொண்டிருக்கிறான்! சீக்கிரம் ஓடிப் போய் அவனை வரவேற்கச் செல்லுங்கள்" அந்தப் பத்துக் கன்னியர்களும் ,தங்கள் விளக்குகளை ஏந்திக் கொண்டு அவசர அவசரமாகக் கிளம்ப ஆயத்தமாகினர். ஆனால் அந்த ஐந்து முட்டாள்களிடம் எண்ணெய் இல்லை. அவர்கள் என்ன செய்வது என்று பதைபதைத்துக் கொண்டு மற்ற ஐந்து கன்னிமார்களிடம் தங்களுக்குக் கொஞ்சம் எண்ணெய் தரும்படிக் கெஞ்சினர். எங்களின் விளக்குகள் கூடிய சீக்கிரம் எண்ணெய் இல்லாமல் அணைந்துவிடும் சகோதரிகளே! தயவு செய்து உதவுங்கள்" என்று கேட்டனர். அந்தப் புத்திசாலிப் பெண்களோ, தங்களிடமும் எண்ணெய் வேறு இருப்பு இல்லை என்றும், அவர்களிடம் போய் எடுத்து வருமாறும் கூறிக் கொண்டு தங்களுக்குள் குசுகுசுத்துக் கொண்டனர். இந்த முட்டாள்களோ எண்ணெய்க்காக அங்கும் இங்கும் ஓடி அலைந்தனர். சரியாக அந்தத் தருணத்தில் மணமகன் உள்ளே வந்தான். அந்தப் புத்திசாலிப் பெண்கள் அவனை வரவேற்று, அழைத்துச் சென்றுக் கதவை இறுக்கிச் சாத்திவிட்டனர்.

    சிறிது நேரம் கழித்து, அந்த முட்டாள் பெண்கள் விளக்கை ஒளிர்வித்து ஓடோடி வந்தனர். ஆனால் கதவு அடைத்திருந்தது. அவர்கள் கதவைத் திறக்கும் படி, வெளியே நின்று கொண்டு மன்றாடினர். உள்ளே இருந்த புத்திசாலிக் கன்னியர்கள், அவர்களைக் கேலி செய்து நகைத்தனர். "உங்களுக்கு சரியான பாடம் கிடைத்தது. இனிமேல் இந்தக் கதவு திறக்காது! இங்கிருந்து போய்விடுங்கள்!" ஆனால் அந்த ஐந்து பேரும் வெளியில் நின்று கதறி அழுதனர், பிச்சை கேட்பதைப் போலக் கெஞ்சிக் கூத்தாடினர். கதவைத் திறங்கள்! கதவைத் திறங்கள்! கதவைத் திறங்கள்!"

    ஜீசஸ் கதை சொல்வதை நிறுத்தினான். திரும்ப அந்தக் கிராமத் தலைவரை, விருந்தாளிகளை, நேர்மையான இல்லத்தரசிகளை, விளக்கை ஏந்திக் கொண்டு நிற்கும் கன்னிமார்களை, என ஒவ்வொருத்தராக ஜீசஸ் நோட்டமிட்டான். பின் வெறுமனே சிரித்தான்.

    "அதற்குப் பிறகு என்னாயிற்று/" நாத்தனேல் தன் திறந்த வாய் மூடாமல் ஆர்வத்துடன் கேட்டான். அவனுடைய எளிய மந்தமான மனம், அமைதியின்றிக் குழம்பியது. "துறவியே! சொல்லுமைய்யா! அதற்குப் பிறகு என்னதான் நடந்தது?"

    "நீ இந்த நிலைமையில் இருந்தால் என்ன செய்திருப்பாய் நாத்தனேல்?" ஜீசஸ் கேட்டான். அவனது நீண்ட மயக்கும் விழிகள் அவனை உற்று நோக்கியது. " நீ அந்த மணமகனாய் இருந்தால் உண்மையில் உன்னால் என்ன செய்திருக்க முடியும்?"

    நாத்தனேல் எதுவும் பேசவில்லை. அவனால் அதனை இன்னும் தெளிவாக யோசித்துச் சொல்ல முடியவில்லை, தான் என்ன செய்திருப்பேன் என்று! ஒரு சமயம் அவர்கள் அப்படியே வெளியே தான் கிடக்க வேண்டும், அது தான் சரி என்று நினைத்தான். ஆனால் மறுசமயம் அவர்களின் அலறல்களையும், அழுகையும் கேட்கும் அவன் மனம் அவர்களுக்காக வருந்தியது. அவர்களை உள்ளே அழைத்திட வேண்டும் என்று நினைத்தது.

    "சொல்! நாத்தனேல்! உன்னால் என்ன செய்திருக்க முடியும், நீ மட்டும் அந்த மணமகனாக இருக்கும் பட்சத்தில்" ஜீசஸ் மறுபடியும் கேட்டான். விடாப்பிடியாக, அதே நேரம் ஆதுரத்துடன், ஜீசஸின் கனிவனாப் பார்வை அந்த எளியக், கள்ளங்கபடமற்ற மனிதனின் கண்களை நோக்கியது.

    "நான் கதவைத் திறப்பேன்" அவன் தன் குரலைத் தாழ்த்திக் கொண்டு யாருக்கும் கேட்டு விடுமோ என்ற பயத்தில் பதிலளித்தான். தனக்கு எதிரே நிற்கும் இந்த மனிதனின் கண்களைத் தன்னால் எக்காலத்திலும் மறுக்க முடியாது என்பதை அவன் உள்ளூற உணர்ந்தே அந்தப் பதிலைச் சொன்னான்.

    "நான் என் மனமார உன்னை வாழ்த்துகிறேன், என் அன்பே! நாத்தனேல், என் சகோதரா" ஜீசஸ் மகிழ்ச்சி பொங்கத் தன் கைகளை உயர்த்தி அவனை ஆசிர்வதித்தான். "இந்தக் கணம், ஆம்! என் நேசத்திற்குரியவர்களே! கேளுங்கள்! இந்தக் கணத்தில் உங்களில் யாரெல்லாம் உயிரோடு இருக்கிறோம் என்று நம்புகிறீர்களோ, அவர்களுக்காக சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும், நம் மணமகன்! நம் தேவனும் நீங்கள் உறுதியாக எதைச் சொன்னீர்களோ, அதையே செய்விப்பான். அவன் தன் பணியாட்களை அனுப்பி உங்களுக்காக, அவனது ராஜ்ஜியத்தின் கதவுகளைத் திறப்பான். "ஆம்! இது ஒரு திருமண விழா" அவன் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தான். "நாம் உண்போம், குடிப்போம், நம் களிப்பைப் பகிர்வோம்!" இந்த முட்டாள் கன்னிக்காக உங்களின் கதவுகளைத் திறங்கள் எம்மக்களே! அவள் வெகுதூரம் ஓடிக் களைத்து உங்களிடம் வந்திருக்கிறாள். அவள் பாதங்களைக் கழுவி அவளை ஆற்றுப்படுத்துங்கள்."

    மாக்தலேனின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. ஜீசஸுன் அருகில் நின்றிருந்த அவளது உதடுகள் தழுதழுக்க, அவளின் நீண்ட கண்களிலிருந்து, கண்ணீர்த்துளிகள் இரு கன்னங்களையும் தாண்டிச் சிந்தியது. அந்த வார்த்தைகளை உச்சரித்த மனிதனின் உதடுகளைத் தன் உயிர் உருக முத்தமிட வேண்டும் என்று அவளது உள்ளம் நாடியது. நாத்தனேல் தலை முதல் கால் வரை, அவனது ஆசிர்வாதங்களை உட்கிரகித்துக் கொண்டான். அவனது தேகம் இன்னும் அதிர்வுகளை நிறுத்தவில்லை. ஆனால் அந்தக் கிராமத்தலைவரின் முகம் வெளிர்ந்து, வெறுப்பில் ஒளியிழந்திருந்தது.

    நீ சட்டத்தை எதிர்க்கிறாய், புரிகிறதா இளைஞனே! அவரது கடுமையானக் குரல் உயர்ந்தது. 

    "இல்லை! சட்டம் என் இதயத்தின் பாதையை எதிர்க்கிறது", ஜீசஸ் அமைதியாகப் பதிலளித்தான்.

அங்கு மணமகனின் வருகை வரும்வரை அவன் பேசிக்கொண்டிருந்தான்.  நன்றாக உடுத்தி, நறுமணத்தைலம் பூசிக்கொண்டு, தலையில் தன் சுருள் முடியைச் சுற்றி பச்சைச்சரமாய், பூக்களைச் சூடிக் கொண்டு அவன் வந்தான். நாணத்தால் அவனது முகம் சிவந்திருந்தது. ஒரே உந்தில் கதவைத் திறந்து அவன் தன்னை வெளிப்படுத்தினான். விருந்தினர்கள் அவனைத் தொடர்ந்து உள்ளே சென்றனர். மேரியைக் கைப்பிடித்துக் கொண்டு ஜீசஸும் உள்ளே நுழைந்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக