புதன், 16 மார்ச், 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -71

    


     "யார் முட்டாள்கள், யார் புத்திசாலிகள்?" பீட்டர் கேட்டான். "நீங்கள் யாரென்று நினைக்கிறீர்கள்". ஜான் மெதுவாக அவனிடம் கேட்டான்.

"அந்தக் கடவுள், நம் தந்தை!" செபெதீயின் மகன் அதற்குப் பதிலளித்தான்.

    எல்லோரும் விழாவில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அதன் பிறகு ஏனையர்கள் மணமக்களை இல்லத்தின் மத்தியில் இருத்தி,  திருமணச்சடங்குகளைச் செய்யத்துவங்கினர். வந்திருந்த விருந்தினர்கள், ஊர்மக்கள் எல்லோரும் தங்கள் முத்தங்களையும், வாழ்த்துக்களையும், ஆசிர்வாதங்களையும் தெரிவித்து, கொண்டு வந்திருந்த பரிசுப் பொருட்களை அளித்தனர். புதியத் தம்பதிகளுக்கு ஆண்மகவு பிறந்து, அதன் மூலமாவது இஸ்ரவேலத்தின் அடிமைத்தளை விலகட்டும் என அவர்கள் தங்கள் வேண்டுதல்களைத் தெரிவித்தனர். பின் பார்வையற்ற இசைக்கலைஞர்களின், யாழின்  நரம்புகள் அவிழத் தொடங்கியது. கடல் அலைகளின் கார்வையான லயத்துடன் கமகங்கள் மெருகேறின. எல்லோரும் உண்டும், குடித்தும் ,நடனமிட்டும் குதூகலித்தனர். ஜீசஸ் தன் துணைவர்களுடன் நன்றாகக் குடித்து நிறைவாகச் சேர்ந்து நடனமாடினான். நேரம் சிறிது சிறுதாகக் கடந்தது. நிலவின் சாம்பல் நிற ஒளி, வானத்திற்கு குறுக்கே, பூமியின் உருக்களுக்கிடையே ஊடுருவி நிலத்தின் அங்கங்களிலெல்லாம், வியர்வைத் துளிகள் குமிழ்வது போலச் பொட்டுகளாகத் திரண்டுக் குமிழ்ந்தது. வசந்ததத்தின் மென் குளிரும், கதகதப்பும் அடர்ந்துக் காற்றின் மெல்லிய அலைவுகளில், மரங்களில் இலைகளின் தாளமிடலும், பூச்சிகளின் பொறுமையற்ற ரீங்காரங்களும் தொடர்ந்து இரவைக் கடத்தின. அவர்கள் தங்கள் பயணத்தைத் திரும்பவும் துவங்கினர். இரவுப் பறவைகளின் பொருளற்றக் குழறல்களின் ஊடே அவர்களின் விரைவானக் காலடிச் சப்தமும் இணைந்து இருளின் பாதைகளின் வழியே முன்னேறினர்.

    நீண்டு கிடந்த ஜெருசலேமிற்கான பாதையில் அவர்கள் விரைந்து கொண்டிருந்தனர். திருப்தியாகக் குடித்திருந்ததால் பார்க்கும் உருக்களின் ஒழுங்கு குலைந்து மயங்கித் தெளிந்தது. அவர்களின் உடல்கள், ஆன்மாக்களைத் தாங்கிக் கொண்டு கால்கள் பாவிக்காது மிதந்தன, சிறகுகள் முளைத்தக் கால்கள் பாதைகளைத் தாவிக் கடந்தன. இடப்புறம் ஜோர்டான் தூரத்தொலைவில் ஒரு புள்ளியாகத் தெரிகிறது. வலப்புறம் நிலவின் சாம்பல் வண்ண ஒளியின் குளிர்வும், வளமும் கூடிக் கூடி அவர்களை உள்ளும் புறமும் கிளர்த்தியது. அதன் வெளிச்சங்களின் ஊடே சாபுலோன்களின் விளைச்சல் நிலங்களை கண் காணாத் தொலைவு வரை அவர்கள்  பார்வையிட்டனர். இந்த வருடமும் எந்தக் குறைவுமில்லாது பயிர்கள் செழித்துத் திருப்தியுற வித்துக்கள் கொணர்ந்து சாய்ந்து நிற்கின்றன. திரும்பவும் மக்களின் வேண்டுகோள்களுக்கு இணங்கி நம் தேவன் அவர்களுக்கு பாத்தியப்பட்டதை, அவர்களின் உழைப்பின் நம்பிக்கைக்கு எந்த சஞ்சலமும் ஏற்படாத வண்ணம் நல்விளைச்சலுக்கானக் குன்றிமணிகளை, தேவைக்குக் குறைவில்லாது அள்ளித் தந்திருந்தான். திராட்சைத் தோட்டங்களில் கொடிகளில் கொத்துக் கொத்தாகப் பழங்கள் நிறைந்து குலுங்குகின்றன. ஆலிவ் காய்கள், கனிந்து பறிப்பதற்காகத் தொங்குகின்றன. அனைத்தும் தன் வித்துக்களை பலப்பலவாகப் பெருக்கி, அயர்ந்து அறுவடைக்காக, பேறுகால வயிற்றுப் பிள்ளைத்தாச்சி போலக் காத்து நிற்கின்றன.

    "ஆஹ்! என்ன ஒரு இன்பமயமான நேரம் இது!" பீட்டர் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான். அவர்களுக்கு அளிக்கப்படும் கருணை உண்மையில் அவர்களால் தாங்க முடியாதவாறு இருந்தது. இத்தனைப் பெரியக் காருண்யத்தின் கைகளில் சின்னஞ்சிறியக் குஞ்சுகளாகியத் தங்களை அணைத்துக் கொள்ளும், மாபெரும் பேரன்பினால் அவர்களின் மகிழ்வு கூடிக் கொண்டே போனது. அந்த இரவுப்பயணத்தில், இருளும் ஒளியும் ஒரு சேர அவர்களுடன் கடக்கின்றது. "இது நிஜம் தானா?, இல்லை கனவா?, என்னைச் சுற்றி எல்லாமும் மகிழ்வில் கிறங்கிக் கிடகின்றனவே! கட்டுப்படுத்த முடியாதப் பிரவாகம் போல என்னுள் பீறிடும் இன்பத்தின் சங்கீதத்தை நான் பாடி என்னை அமைதிப்படுத்துவதே ஒரே வழி, இல்லையேல் வெடித்துச் சிதற வேண்டியதுதான். உண்மையில் இவ்வனுபவம் என் சக்திக்கு மீறியது." பீட்டரின் இதயம் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

" நாம் ஒன்றாக!" ஜீசஸ் தேம்பினான். அவர்களுக்கு முன்னால் வந்து நின்றுத் தலை நிமிர்ந்து வான் நோக்கினான். அவன் குரலில்  இனிமையும், உணர்வெழுச்சியும் கூடிக் கொண்டிருந்தது. இடம் மற்றும் வலப்புறம் ஜானும், ஆண்ட்ரூவும் அவனுடன் இணைந்து கொண்டனர். அவர்கள் தங்கள் குரல்களைத் தாழ்த்தி மென்மையாக ஜீசஸுன் குரலுடன் ஒத்திசையும்படிப் பாட முற்பட்டனர். இம்மூவரின் குரலும் இணைகையில் அதன் அதிர்வுகளின் தேற்றத்தின், கைக்கொள்ளாத தன்மை வான் வரை விரிந்து பரவியது. பொங்கியெழும் மனிதக்குரல்கள், இருதயத்தின் துடிப்புகள் தாவிச் செல்வதைப் போல, அவர்களால் வைத்துக் கொள்ள முடியாது, வெளிப்படுத்தித் தீர்க்க முனைந்தன. அப்பாடலின் தித்திப்பு கிறுகிறுக்க வைத்தது. ஒவ்வொருத்தராக அதன் இசைவிற்குள் மூழ்கி, அதன் அலைவினுள் அடித்துச் செல்லப்பட்டனர். ஆழ்ந்த வசந்தத்திற்குள் முளைக்கின்ற பாடலின் துடிப்புகள் கட்டுப்பாடுகளை இழந்து, தன்னிலையை மீறிப் பீறிட்டது. அதன் எல்லையின்மையினால் தடுமாறும் பொழுதெல்லாம், தங்களைச் சமப்படுத்த பெரும் முயற்சி எடுத்தனர். திடீரென, அந்த ஆண்கள் தங்களின் குரல்களின் வழியே ஒற்றை ஆண் உடல் ஆகினர். அவர்களின் தனித்தனியானக் குதூகலங்களின் ஊடுவழிகள், மடங்கி ஒற்றைப் பெருங்குரலாகியது. அந்த இன்பத்தின், சுவையின், களிப்பின் அனைத்துக் கூறுகளையும் ஒருமித்து உணர்ந்து இன்புற்றனர். யூதாஸும், ஜேக்கப்பும் கைகளை உயர்த்திக் காற்றின் திசையில் ஒரு மரக்கிளை போல நடனமாடத் தொடங்கினார்கள். அதன் வெற்றியை, மிதப்பை, அழிவில்லாத் தன்மையை அவர்கள் ஒவ்வொருத்தரும் தங்களின் சொந்த உணர்வெழுச்சிகளின் மூலம் உட்கிரகித்துக் கொண்டு, அதன் பறத்தலிலே சொர்க்கங்களை நோக்கி கைகளை உயர்த்தி, அச்சங்கீதத்தைத் தங்களின் முழு உடலும், வலுவும் சக்தியும் வெளிப்படும்படி, இந்த புனிதப்பயணத்தின் சிறப்புகளாக பாடி ஆடத் தொடங்கினர்.

"ஓ! இதை விட இனிமையானதும் , சிறந்ததும் எதுவும் இம்மண்ணில் உண்டா!

 நாங்கள் சகோதரர்கள் ஓருடலாகி உம்மை நோக்கி வருகின்றோம்!

ஆரோனின் கேசத்திலிருந்து வழியும் புனித வியர்வையைப் போல

நாங்கள் விரைந்து வருகின்றோம்!

ஹெர்மானின் முடிவற்ற வானத்தில் சேகரமானத்

தூயப் பனித்துளி, சியோனின் மலைக்குன்றங்களில் பேரன்புடன் பொழிவதைப் போல

தேவனே! உம் ஆசிர்வாதங்களும், கருணையும் எங்களினுள் பொங்கிப் பெருகுகட்டும்!

எங்களின் வாழ்வு என்றென்றைக்குமாக உம் அணுக்கத்தில் நித்தியத்துவம் அடையட்டும்!"

    நேரம் கடந்து கொண்டிருந்தது. விண்மீன்கள் ஒளி மங்கி வானம் வெளித்தது. சூரியன் உதித்தது. கலீலியின் சிவந்த நிலத்தைக் கடந்து அவர்கள் சமாரியாவின் கருமை நிலத்திற்கு வந்து சேர்ந்திருந்தனர்.

    யூதாஸ் அவர்களை நிற்கச் சொன்னான். "நாம் வேறு பாதை வழியே செல்வோம்" இது நம் கடவுளுக்கு எதிரான, சபிக்கப்பட்ட நிலம். நாம் ஜோர்டான் பாலத்தைக் கடந்து அதன் நதிப்படுகைகளின் வழியே  போகலாம். நாம் சட்டத்தை மீறுவது பாவமாகும். அவர்களின் கடவுளர்களின் மாசு இந்த நிலத்திலும், தண்ணீரிலும், உணவிலும் கலந்திருக்கிறது. இந்நிலத்தின் உணவை உண்பது என்பது பன்றி இறைச்சியை உண்பதற்குச் சமம் என என் தாய் எனக்குச் சின்னவயதில் அறிவுறுத்தியிருக்கிறாள். இந்த சமாரிட்டனின் நிலத்தை விட்டு அகன்று நாம் வேறு வழியில் செல்வதே நல்லது.

    ஆனால் ஜீசஸ், யூதாஸைத் தன் கைகளில் பற்றிக் கொண்டு ஒன்றாக நின்று அவன் முகத்தைப் பார்த்தான். "யூதாஸ், என் சகோதரா! ஒரு தூய மனிதன், அழுக்கடைந்தவனைத் தொடும் பொழுது, அழுக்கடைந்தவன் சுத்தப்படுவான். மறுக்காதே! நாம் இவர்களுக்காகவே, இந்தப் பாவிகளுக்காகவே வந்திருக்கிறோம். அவர்களுக்கு உரிமைப்பட்டதை நாம் அவர்களுக்கு உறுதியாக வழங்கித் தீர வேண்டும். இதோ இங்கிருக்கிறது சமாரியா! கருணையின் சொல்லினால் நாம் ஒரு நல்ஆன்மாவை மீட்க முடியும். ஆம்! யூதாஸ், ஒரு கருணையின் சொல்! நாம் செய்யும் ஓர் நற்செயல்! அவர்கள் நம்மைக் கடக்கும் பொழுது அவர்களைப் பார்த்து உளமாறப் புன்னகைப்பதே! உனக்குப் புரிகிறதா?"

    யூதாஸ், அருகில் நிற்கும் மற்றவர்களுக்குக் கேட்காத படி, மெதுவானக் குரலில் அவனிடம் பேசினான். "இது அல்ல, சரியானப் பாதை!, இல்லை! கண்டிப்பாக, இந்த வழியல்ல!. ஆனால் அந்தக் காட்டுத்துறவியைக் காணும் வரை நான் பொறுமையாக இருக்க வேண்டும். அவன் உன்னைக் கண்டறியட்டும். அதுவரை, உனக்கு எங்கெல்லாம் போக விருப்பமோ, போ! எதையெல்லாம் செய்ய நினைக்கிறாயோ, செய்! நான் உன்னை விட்டு விலக மாட்டேன்."

    அவன் தான் முறித்து வைத்திருந்தக் காட்டுமரத்தின் கிளையைத் தோள்களில் வைத்துக் கொண்டு, தன்னை முழு விசையில் உந்தி ஜீசஸ் காட்டியப் பாதையில் நகர முற்பட்டான்.

    பின்னால் உரையாடிக் கொண்டிருந்த மற்றவர்களும் அவனைத் தொடர்ந்தனர். ஜீசஸ் அவர்களிடம் அன்பு, தேவன், சொர்க்க ராஜ்ஜியம் பற்றிப் பேசினான். ஆன்மாக்களில் புத்திசாலி, முட்டாள் எனப் பிளவுபடுதல், விளக்குகள், ஒளி, எண்ணெய் என அவன் சொன்னக் கதையைப் பற்றி விவரித்தான். யார் அந்த மணமகன். எதனால் முட்டாள்க் கன்னியர்களை வீட்டிற்குள் வரவிடாமல், இந்தப் புத்திசாலிக் கன்னிகள் தடுத்து நிறுத்தினர். இருந்தும் அவர்களின் தளர்வுற்றுக் களைத்த பாதங்களையே, பணியாட்கள் சுத்தம் செய்யுமாறு ஏன் பணிக்கப்பட்டனர். அந்த நான்குத் துணைவர்களும் அவனுடைய விளக்கங்களை ஊன்றிக் கவனித்தனர். கேட்கக் கேட்க அவர்களின் உள்ளம் விரிவடைந்தது. இருதயங்கள் மலர்ச்சியடைந்தன.  எப்படி அந்த முட்டாள்க் கன்னியர்கள் அழுது கொண்டே வாசலுக்கு வெளியே, தங்கள் அணைந்த விளக்குகளுடன் கெஞ்சிக் கொண்டிருந்தார்களோ, அதேபோல அவர்களும் தங்கள் பாவங்களை ஏந்திக் கொண்டு தேவனின் வாசலில், சாத்தியக் கதவுகளுக்கு வெளியேக் கண்ணீர் மல்க நின்று கொண்டிருந்தனர்.

    அவர்களின் பாதை இன்னும் இன்னும் என விரிவடைந்தது. பயணம் தொடர்ந்தது. வானம், மேகங்கள் அடர்ந்துக் கருமையாகி மழை பொழியக் காத்திருந்தன. காற்றின் சிலுசிலுப்பு மழையினைத் தீர்க்கமாக நிலத்தில் அறிவித்தது.

    அவர்கள் வெகுதூரத்து வெற்று நிலங்களைக் கடந்து, முதல் கிராமத்தை வந்தடைந்தனர். ஜெரிசிம் கிராமத்தின் மலை அடிவாரம் அது. அவர்களின் முன்னோர்கள் புனித மலைக்குன்றங்களாக வான் நோக்கி உயர்ந்து வீற்றிருந்தனர். கிராமத்தின் நுழைவில் பேரீச்சை மரங்களும், வயல் வெளிகளின் நாணல் புற்களும் வரவேற்றன. ஒரு  பழமையானக் கிணறு ஒன்றை ஜேக்கப் பார்த்தான். இந்தக் கிணற்றில் தான்,  மேய்ப்பர்கள் தங்கள் ஆடுகளுக்கும், தங்களுக்கும் தாகம் தீர்த்துக் கொள்கிறார்கள். அதன் வெளிவிளிம்பு பலதலைமுறைகளாகக் நீர் இறைக்கக் கயிறு இழுத்து இழுத்து மழுங்கித் தேய்ந்து வடிவற்றிருந்தது.

    ஜீசஸ் மிகவும் களைத்திருந்தான். அவனது அடிப்பாதங்களில் குத்துக்கற்கள் பதிந்து அங்கங்குப் பிளந்து ரத்தம் கன்றியிருந்தது. "நான் இங்கேயே இருக்கிறேன், நீங்கள் ஊருக்குள் சென்று வீடுகளின் கதவைத் தட்டுங்கள். நல் உள்ளம் படைத்தவர்கள் நமக்காக சில ரொட்டித்துண்டங்களைக் காணிக்கையாக அளிப்பார்கள். பெண்கள் யாராவது கிணற்றிலிருந்து நமக்கு குடிக்க நீர் இறைத்துத் தருவார்கள். நாம் நம் தேவனிடமும், மனிதர்களிடமும் நம்பிக்கை வைப்போம்."

    மற்ற ஐவரும் கிராமத்திற்குள் செல்ல எத்தனித்தனர். போகும் வழியில் யூதாஸ் தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டான். "இந்தக் கறை படிந்த நிலத்திற்குள் நான் வரமாட்டேன். அவர்களின் உணவை என்னால் உண்ணவும் முடியாது. நான் இந்த அத்திமரத்தின் நிழலில் நீங்கள் வரும்வரைக் காத்திருக்கிறேன்" யூதாஸ் அவர்களிடம் சொன்னான்.

    ஜீசஸ் நாணற்புற்கள் அடர்ந்தத் தாழ்வானப் பகுதியில் கால்கள் நீட்டி அமர்ந்து கொண்டான். அவனுக்குத் தாகமாக இருந்தது. ஆனால் கிணறோ மிக ஆழம். எப்படிக் குடிக்க? சற்றுத் தலை சாய்த்து அவன் எண்ணங்களுக்குள் முழுகத் தொடங்கினான். அவன் தான் செல்வதற்கு மிகக்கடினமானப் பாதை ஒன்றைத் தனக்கு முன்னே அமைத்திருக்கிறான். அவனது உடலோ வலுவற்றிருக்கிறது. சோர்வு அப்பி, மூட்டுகள் தளர்வடைந்துவிட்டன. அவன் தன் ஆன்மாவைப் பற்றிக்கொள்ளும் வலுவையும் இழந்து கொண்டிருந்தான். அவன் தளர்ந்து வீழும் பொழுதெல்லாம், இறைவன் குளிர்மையையும், ஒளிர்வையும், ஆசுவாசத்தையும் அவனுக்கு மேலேத் தருவிப்பதைத் தவறியதில்லை. அவன் தன் உடல் வலுவைத் திரும்பவும் மீட்டுக்கொண்டு, உறுதியுடன் எழுந்துத் தன் வழியைத் தொடர்வான். தொடர்ந்து கொண்டே இருப்பான். எப்பொழுது வரை? இன்னும் எத்தனை காலம்? சாகும் வரையா? சாவிற்கும் அப்பாலா?

    அவன் தனக்குள் கடவுள், மனிதம், மரணம் என்று போராடிக் கொண்டிருக்கும் பொழுது, வளைகளும், காதணிகளும் அணிந்த மத்திம வயதுப் பெண் ஒருத்தி,  குடத்துடன், கிணற்றை நோக்கிச் சென்றாள். கிணற்றின் விளிம்பினில் நின்றுகொண்டு கயிற்றினை இழுத்துக் கொஞ்சம் கொஞ்சமாக நீர் இறைத்துக் குடத்தில் நிரப்பினாள். நாணலில் சாய்ந்து கொண்டு, அமைதியாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்த ஜீசஸுற்கு தாகம் தலைக்கேறியது.

    "பெண்ணே!" அவன் சற்று எழுந்து கத்தையாகத் தரையில் கிடந்த புற்களை மிதித்து வெளிப்பட்டான். "கொஞ்சம் அருந்த நீர் கொடு."

    அவனது திடீர் பிரவேசத்தால், திகைத்து அவள் சட்டென நின்றுவிட்டாள்.

    "பயப்படாதே,"" நான் ஒரு யோக்கியமான மனிதன் தான், தாகமதிகமாக இருக்கிறது. குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் வேண்டும்"

    "யார் நம்மிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார் என இவள் அறிந்திருந்தால், உடனடியாக நீரினை அருந்தக் கொடுத்திருப்பாளோ! பிறகு என் கால்களில் விழுந்து மண்டியிட்டு, அழிவேயில்லாத நீர்மையினால் எம் இருதயத்தின் தாகத்தைத் தீர்த்து வையும் என்று மன்றாடியிருப்பாளோ! ஜீசஸ் கேலியாக யாருக்கோ சொல்வது போலச் சொன்னான்.

    இதைக் கேட்ட அந்தப் பெண் குழம்பிப் போனாள். உம்மிடம் கயிறோ, வாளியோ, ஏன் குடம் கூட இல்லை. எந்த நம்பிக்கையில் நீ  என் தாகத்தைத் தீர்ப்பாய்? அவள் விசனத்துடன் கேட்டாள்.

    "இந்தக் கிணற்றிலிருந்து நீர் அருந்துபவனின் தாகம் தற்சமயம் வேண்டுமானால் தீரலாம். ஆனால் அவனுக்குத் திரும்பவும் தாகம் எடுக்கும். ஆனால் நானளிக்கும் தண்ணீரை அருந்துபவனின் தாகமோ முற்றிலுமாக அடங்கிவிடும்" 

    "ஐயா! அந்த நீரினை எனக்கு அளியும். நானும் இத்தாகத்தின் பிடியிலிருந்து நித்தியமாக என்னை விடுவித்துக் கொள்கிறேன். இல்லையேல் தினமும் நான் இந்தக் கிணற்றிற்கு வந்துதான் ஆக வேண்டும்" அவள் ஜீசஸுடம் வேண்டினாள்.

    "போ! போய் உன் கணவனை அழைத்து வா!" ஜீசஸ் அவளிடம் கூறினான்.

"எனக்கு கணவன் இல்லை!"

    "சரியாகச் சொன்னாய், உனக்கு கணவன் இல்லை என்று. நீ இதுவரை ஐந்து கணவன்களை வைத்திருந்தாய். ஆனால் உன்னுடன் இப்போதிருப்பவன் உன் கணவன்  இல்லை. சரிதானே!"

    "ஐயா! நீங்கள் யார்? தீர்க்கதரிசியா?" வியப்புடன் அவள் கேட்டாள். "உங்களுக்கு எல்லாமும் தெரியுமா?"

    "உனக்கு என்னிடம் ஏதாவது கேட்க வேண்டுமென்று நினைத்தால், சங்கடமின்றிக் கேள்!" ஜீசஸ் சிரித்துக் கொண்டே பதிலளித்தான்.

    "ஆமாம். ஒரே ஒரு விஷயத்திற்கு மட்டும், நீங்கள் எனக்கு பதிலளிக்க வேண்டுகிறேன். இது நாள் வரை எங்கள் தந்தையர்கள் ஜெரிசிம்மின் இந்தப் புனிதமலையில் இருக்கும் தெய்வத்தையே வழிபட்டுக் கொண்டிருந்தனர். இப்பொழுது திடீரென, உங்களைப் போன்றத் தீர்க்கதரிசிகள், ஜெருசலேம்மிற்கு வந்துதான் நீங்கள் கடவுள் வழிபாடும், பிரார்த்தனையும் செய்ய வேண்டும் என்று எங்களை நிர்பந்திக்கிறீர்கள். எது சரி? கடவுள் உண்மையில் எங்கே இருக்கிறார்? எனக்கு நீங்கள் மெய்யைப் போதியும்!"

    ஜீசஸ் தலைகுனிந்து நின்றுகொண்டிருந்தான். எதுவும் பேசவில்லை. "இந்தப் பாவப்பட்டப் பெண், இந்த வேண்டுதல்களினாலும், இறை வழிபாட்டிற்காகவும் அதிகமும் துன்புறத்தப்பட்டிருக்கிறாள்.  தான் என்ன செய்வது என்ற குழப்பத்தில், அவளது இருதயம் அலைக்கழிகிறது. அவள் தன் விதியுடன் போராடிக் கொண்டிருக்கிறாள். அவளைத் தேற்றுவதற்கான சரியானச் சொல்லிற்காக அவனும் தன்னுள் துழாவிக் கொண்டிருந்தான். திடீரென அவன் தலை நிமிர்ந்துப் பார்த்தான். பொலிவான அவனது ஒளிரும் முகத்தை அவள் கண்டு விக்கித்து நின்றாள்.

    "பெண்ணே! நான் சொல்வதை உன் இருதயத்தினுள் இருத்திக் கொள்! நமக்கான நாள் வந்துகொண்டிருக்கிறது. ஆம்! அது வந்துவிட்டது. மனிதன்,  நம் தேவனை மலைகளிலோ இல்லை ஜெருசலேமிற்கோப் போய்த் தேட வேண்டியதில்லை. இறைவன் என்பவன் நம் தூய ஆன்மா! அவனை நம் ஆன்மாவினுள் இருந்து மட்டுமே வணங்க வேண்டும்!"

    அந்தப் பெண்மணிக்கு உண்மையில் ஒழுங்காகப் புரியவில்லை. சஞ்சலத்துடன் அவள் அவனை ஏறிட்டு நோக்கினாள். மெதுவாக....மிக மெதுவாக அவள் நடுங்கும் குரலில் கேட்டாள், "நீங்கள்? உண்மையில், நீங்கள் தான் நாங்கள் காத்துக் கொண்டிருக்கும் ஒருவராக இருக்க முடியுமா?"

"யாருக்காக நீங்கள் காத்திருக்கிறீர்கள்?"

    "உங்களுக்குத் தெரியும்! என்னை ஏன் அவரது பெயரை உச்சரிக்கச் சொல்கிறீர்கள்? உங்களுக்குத்தான் தெரியுமே! எனது உதடுகள் அழுக்கடைந்தவை! பாவம் பொருந்தியவை என்று!"

    ஜீசஸ் தன் தலை தாழ்த்தி, மார்பை பார்க்கும் படி நின்றிருந்தான். அது அவன் தன் இருதயத்தின் குரலுக்கு செவி கூர்வது போல இருந்தது. அதற்கானப் பதில் அங்கிருந்து நிச்சயமாகக் கிடைக்கும் என அவன் எதிர்பார்த்திருந்தான். அவனை நேருக்கு நேராகப் பார்த்து நின்ற அப்பெண்மணி, காய்ச்சலுற்றவள் போல அதிர்ந்து கொண்டிருந்தாள்.

    அவர்கள் இருவரும் கலக்கத்துடன் அமைதியாக நின்றிருந்தனர். ஆரவாரித்துக் கொண்டு வரும் குரல்களை அவர்கள் கேட்டனர். அவனது சீடர்கள் கைகளில், ரொட்டித் துண்டங்களை வைத்து ஆட்டிக் கொண்டு மகிழ்ச்சியுடன் வந்தனர். ஒரு பெண்ணுடன் தங்களின் ஆசிரியன் நிற்பதைப் பார்த்ததும் அவர்கள் அப்படியே நின்று விட்டனர். அவர்களது வருகை, அப்பெண்ணுக்குப் பதிலளிப்பத்தைச் சற்று ஒத்திப் போடவைத்ததை நினைத்து அவன் கொஞ்சம் அமைதியானான். அவர்களைப் பார்த்து கையுயர்த்தி அருகில் அழைத்தான்.

    "வாருங்கள்!" இந்த நல்ல மனுஷி நம் தாகம் தீர்ப்பதற்காகக் கிணற்றிலிருந்து நீர் இறைத்துக் கொண்டு வந்திருக்கிறாள்."

    யூதாசைத் தவிர்த்து மற்ற அனைவரும் அங்கிருந்தனர். அவன் சற்றுத்தொலைவில் மர நிழலில் தனித்திருந்தான். ஒரு சமாரிட்டனின் உணவினால் தான் மாசடைவதை அவன் விரும்பவில்லை.

    அவள் ஒரு மண்சாடியில் நீர் நிரப்பி அவர்களுக்கு வழங்கினாள். தாகம் தீர அவர்கள் குடிக்கும் வரைக் காத்திருந்து, பின் அந்தச் சாடி நிரம்ப நீரினை அளித்துவிட்டுக் குடத்தை லாவகமாகத் தலையில் வைத்தவள், அமைதியாகவும், நடந்த சம்பாஷணையைத் தனக்குள் உருட்டிக் கொண்டும் கிராமத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

    "துறவியே! யார் அந்தப் பெண்?" பீட்டர் கேட்டான். நீங்கள் இருவரும் நின்று பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த பொழுது, நீங்கள் பலவருடங்கள் பரிட்சயப் பட்டவர்கள் போலத் தெரிந்தது."

    "அவள் என்னுடைய சகோதரிகளில் ஒருத்தி!, நான் என் தாகம் அடங்க அவளிடம் நீர் கேட்டேன். ஆனால் அவள் தன் தாகம் அணைந்துச் சென்றுவிட்டாள்.

    பீட்டர் தன் தலையைப் பலமாக ஆட்டினான். "எனக்குப் புரியவில்லை,"

    "அது விஷயமில்லை" ஜீசஸ் தன் நண்பனின் சாம்பல் நிறத் தலையைச் செல்லமாகத் தட்டினான். "பொறுமையிழக்காதே!, நீ கொஞ்சம் கொஞ்சமாக இதனைப் புரிந்து கொள்ளும் நேரம் வரும்.  இப்போது நாம் பசியில் இருக்கிறோம். அதனால் முதலில் சாப்பிடுவோம்!"

    அவர்கள் ஒரு நீண்ட கிளைகள் கொண்ட பேரீச்சை மரத்தின் அடியில் அமர்ந்தனர். ஆண்ட்ரூ எவ்வாறுத் தாங்கள் ஊர்மக்களை அணுகிப் பிச்சை கேட்டோம் எனச் சொல்லத் தொடங்கினான்.

    "நாங்கள் ஒவ்வொரு வீட்டுக் கதவுகளையும் தட்டிப் பிச்சை கேட்டோம், அவர்கள் எங்களைப் பார்தத்தும் குழப்பமடைந்துக் கூச்சலிட்டு விரட்டினர். கடைசியில், கிராமத்தின் எதிர் எல்லையில், ஒரு மூதாட்டிக் கதவைத் திறந்து எங்கள் ஒவ்வொருவரையும் கவனமாகத் தலை முதல் கால் வரை நோட்டமிட்டாள், பின் தெருவில் யாராவது தன்னைக் கவனிக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தாள். தெருவில் ஒரு ஆளரவமுமில்லை. அவள் கொஞ்சம் ரொட்டித்துண்டங்களை எடுத்து எங்களிடம் வீசி விட்டு, கதவை உடனடியாகச் சாத்தி விட்டாள். நாங்கள் அதனை வாங்கிக் கொண்டு, அங்கிருந்து தப்பித்தோம், பிழைத்தோம் என்று இங்கு ஓடி வந்துவிட்டோம்."

    "நாம் அவளது பெயரைக் கேட்காமல் விட்டதற்கு வெட்கப்படவேண்டும்!" பீட்டர் கூறினான்.  "நாம் கேட்டிருந்தால் நம் தேவன் அவள் பெயரை நினைவில் நிறுத்தியிருப்பான்."

    ஜீசஸ் சிரித்துக் கொண்டே பதிலளித்தான். "அந்தக் கணக்கைப் பற்றி நீ வருத்தம் கொள்ளாதே, பீட்டர்! தேவனுக்கு அவளின்  பெயர் தெரியும்!"

    ஜீசஸ் ரொட்டிகளைக் கையில் எடுத்துக் கண்கள் மூடி, அதை வழங்கிய அந்த மூதாட்டியின் பெயரால், இறைவனுக்கு நன்றிகளைத் தெரிவித்தான். பிறகு அதை சமபாகமாகப் பிரித்து ஆறு சிறியத் துண்டங்களாக்கிப் பகிரத் தொடங்கினான். அருகிலிருந்த மரத்தில் அமர்ந்திருந்த யூதாஸ் தன் கையில் இருந்த கம்பால் அவன் பங்கை விலக்கி தலை திருப்பிக் கொண்டான். சமாரிட்டன்களின் ரொட்டியை நான் உண்ண மாட்டேன். "நான் பன்றியை உண்பதில்லை."

    ஜீசஸ் அவனுடன் மேலும் வாதிட விரும்பவில்லை. யூதாஸின் இருதயம் கடினமானது, அது மென்மையாவதற்கு இன்னும் சமயம், இன்னும் வலு, இன்னும் அதிகமான அன்பு தேவை என ஜீசஸுக்குத் தெரியும்.

    "நாம் உண்போம்!" அவன் மற்றவர்களிடம் கூறினான். "கலீலியர்கள் உண்ணுவதால், சமாரிட்டன்களின் ரொட்டித் துண்டமும் கலீலியர்களாகும். மனிதன் உண்பதால் பன்றிக் கறியும் மனிதச் சதையாகும். அதனால் நம் தேவனின் பெயரால் நாம் உண்போம்!"

    அனைவரும் பசியுடன் இருந்ததால், அந்த எளிய உணவும் சுவையாக இருந்தது. அவர்கள் அருமையான சமாரிட்டனின் உணவை உண்டு மகிழ்ந்தனர். உண்டு முடித்ததும், களைப்பிலும், சோர்விலும் அப்படியே உறங்கியும் போயினர். ஒருத்தனைத் தவிர. அவன் தன் கையிலிருந்த கிளையைப் பொருளற்றுத் தரையில் அறைந்து அடித்துக் கொண்டிருந்தான். "அவமானமடைவதை விட பசித்திருப்பது நல்லது. இல்லையேல் இது என்னை அசுத்தப்படுத்தியிருக்கும்."

    வானத்தின் முதல் துளி, நாணற்புற்களில் விழுந்தது. பின் துளிப் பெருகிப் பெருகி ஓலமாக வானம் உடைந்து நிலத்தில் விழத் தொடங்கியது. அயர்ந்து உறங்கியவர்கள், திடுக்கென்று தன்னிலை உணர்ந்து எழுந்தனர்.

    "இது முதல் மழை!" ஜேக்கப் சொன்னான். " நிலம் தன் தாகம் அடங்க வானத்தை அருந்திக் கொள்ளட்டும்!"

    ஆனால் அவர்கள் இங்கு எங்கே போய்த் தங்குவது. எதாவது குகை இருக்க வாய்ப்பிருக்குமா என்று ஆலோசித்தனர். வடக்கிலிருந்து மேகக் கூட்டங்கள் அடர்ந்து இருளாகிக் குளிர்க்காற்றினை அலைத்தது. நீர்த்துளிகள் காற்றின் பாடுகளுக்கு தன் சிறகுகளை விரித்துப் பறக்கத் தொடங்கின.

    அத்திமரங்களில் பழங்கள், ஈரக்காற்றை மென்று அசைந்தன. மாதுளம் கிளைகளில் சிவந்த மாதுளைகள், இன்னும் நன்றாகப் பொலிந்துக் குலுங்கின. நால்வரும் நனைந்து கொண்டே அப்பழங்களைப் பறித்துத் தின்று, தங்கள் சோர்வை விலக்கி இளைப்பாறினர். விவசாயிகளின் கைகள் நிலத்திலிருந்து வான் உயர்ந்தன. மழைத்துளிகளுக்கிடையே  வெளிப்படும் கலீலியர்களை அவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். சமாரியாவில் இவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? எதற்காக சமாரிட்டன்களின் நிலத்திற்கு வந்து, எங்களின் ரொட்டித்துண்டங்களையும், இங்கு விளைந்த பழங்களையும், இவர்கள் தின்கிறார்கள்? சீக்கிரமே நம் பார்வையிலிருந்து விலகிச் செல்வது இவர்களுக்கு நல்லது!

    நின்று கொண்டிருந்த ஒரு முதியவர், தாங்கமாட்டாமல் பழத்தோட்டத்திலிருந்து அவர்களை நோக்கி சத்தம் போட்டுக்கொண்டே ஒடி வந்தார். "ஹேய்! கலீலியன்களா," இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? உங்களின் அநியாயமான சட்டங்களால், எங்களை, எங்கள் கடவுளர்களை வெறுத்து ஒதுக்கி அப்புறப்படுத்தி, இந்தப் புனித நிலத்தின், பெருமையைக் குலைத்தது மட்டுமல்லாமல், இங்கும் வந்து எங்கள் மண்ணை மிதிக்க உங்களுக்கு என்ன தைரியம்! சமாரியாவில் உங்களுக்கென்ன வேலை வேண்டிக் கிடக்கிறது. ம்ம்! ஓடிப்போய்விடுங்கள் எங்களின் பார்வையிலிருந்து. ம்ம்! சீக்கிரம்!."

    "நாங்கள் ஜெருசலேமிற்கு எங்களின் வழிபாட்டிற்காகச் செல்கிறோம்." பீட்டர் தன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு அந்தப் பெரியவரின் முன் வந்து நின்றான்.

    "நீங்கள் இங்கல்லவா உங்கள் வழிபாட்டினைச் செய்ய வேண்டும், விசுவாசமற்றப் பிறவிகளே!, இங்கு, இந்த ஜெரிசிம்மில், கடவுளின் பாதம் படிந்த இம்மலைக்குன்றங்களில்!, முதியவர் நிதானிக்க முடியாமல் கத்தினார். " நீங்கள் உங்களின் வேத நூல்களை என்றாவது படித்திருக்கிறீர்களா? அதில் தெளிவாக இருக்கிறதே! அது இங்கே நிகழ்ந்தது. இதோ ஜெரிசிம்மின் காலடிகளில், கருவேல மரங்கள் அடர்ந்த இந்தப் பாதைகளின் ஊடே, எல்லாம் வல்ல நம் தேவன், ஆப்ரஹாமிற்குக் காட்சியளித்தார். ஆம்! அவர் ஆப்ரஹாமிற்குக் காண்பித்தார், தூர தூர மலைகளையும், வயல் வெளிகளையும், வெற்று நிலங்களையும் ஒரு எல்லையிலிருந்து மறு எல்லை வரை. ஹெப்ரான் மலையடுக்குகளிலிருந்து இதூமியா வழியே, மிடியானின் நிலப்பரப்பு வரை. பின் அவர் சொன்னார், "பார்! இது நான் உனக்குக் கையளித்திருக்கும் நிலம். இந்நிலத்தில் பாலும் தேனும் கொழிக்கும். நான் எம்முடைய வார்த்தையை வழங்கினேன். அது உனக்காக உனக்கு மட்டுமேயாக யாம் அளித்துள்ளோம். அதன் பிறகு அவர்கள் கைகள் குலுக்கிக் கொண்டு, ஒப்பந்தத்தை மூடி முத்திரைக் குத்திவிட்டனர். கேட்கிறீர்களா, கலீலியன்களா? இதைத்தான் நம் வேதம் நமக்கு எடுத்துரைக்கிறது. யாரெல்லாம் தம் வேண்டுதல்களையும், பிரார்த்தனைகளையும், வழிபாடுகளையும் செய்ய நினைக்கிறீர்களோ, அவர்கள் இந்தப் புனித நிலத்தில் நம் கடவுளிடம் மண்டியிட்டு வேண்டுங்கள், அதில்லாமல் நம் புனிதர்களைக் கொன்றுக் குவித்த ஜெருசலேமிற்கல்ல, நீங்கள் செல்ல வேண்டியது."

    "எல்லா நிலமும் புனிதமானதே! முதியவரே!" ஜீசஸ் அமைதியாகக் கூறினான். "கடவுள் எங்கும் இருக்கிறார், நாம் அனைவரும் சகோதரர்கள் ஐயா!"

    அவர் ஜீசஸை வியந்து நோக்கினார். "சமாரிட்டன்களும், கலீலியன்களும் கூடவா?

    "ஆம்! நாம் சமாரிட்டன்களும், கலீலியர்களும், ஏன் யூதர்களும். அனைவரும்!"

    தன் நரைத்தத் தாடியைத் தடவிக் கொண்டே அந்தக் கிழவர் ஜீசஸை தலை முதல் கால் வரை நோட்டமிட்டார்.

    "தேவனும் சாத்தானும் கூடவா?" அவர் மிக மெல்லியக் குரலில் ஏதேனும் அமானுஷ்ய சக்தித் தன்னைத் தாக்கி விடுமோ என்று பயந்து கொண்டே அதைக் கேட்டார்.

     ஜீசஸ் அந்தக் கேள்வியின் அதிர்ச்சியிலிருந்து விலகாமலேயே அவரைப் பார்த்தான். அவன் தன் வாழ்நாளில், இது நாள் வரை இப்படி ஒரு கேள்வியை எதிர்கொண்டதில்லை. கடவுளின் மாபெரும் கருணையினால் அவர் ஒரு நாள் அந்த சாத்தானையே மன்னித்து, அவனைத் தன் சொர்க்கத்தின் ராஜ்ஜியத்திற்கு அழைத்துச் செல்வார் என்று அவனால் உண்மையில் அச்சமயம் நம்பமுடியவில்லை.

    "எனக்குத் தெரியாது, முதியவரே! எனக்குத் தெரியாது!, நான் ஒரு மனிதன். என்னுடைய அக்கறை மனிதர்களிடம் மட்டுமே. அதற்கு அப்பால் உள்ளவை தேவனின் காரியம்."

    கிழவர் இன்னும் தன் தாடியைத் தடவிக் கொண்டே தன் அகத்திற்குள் உழன்று கொண்டிருந்தார்.  அவர் தூரத்தில் செல்லும் இரு வழிப்போக்கர்கள், மரக்கூட்டங்களை விரைவாகக் கடந்து ஒரு புள்ளியாவது வரை  பொருளற்று, அப்படியே ஸ்தம்பித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

    இரவு வந்தமைந்தது. மழையின் ஈரப்பதத்துடன் குளிர்க்காற்று ஊசித்துளைப்பதைப் போலச் சில்லிட்டது. இறுதியில் அவர்கள் அங்கு ஒருக் குகையைக் கண்டுபிடித்தனர். மலைப் பாறைகளின் அடியில் ஒரு ஆள் உட்செல்லும்படி இருந்தது அந்தக் குகை. குளிரில் விரைத்திருந்த உடலைக் கதகதப்பாக்குவதற்காக, ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொண்டனர். பின் மிச்சமிருந்த ரொட்டித்துண்டங்களை உண்டனர். செந்தாடிக்காரன் வெளியே சென்று சிலச் சுள்ளிகளைப் பொறுக்கிவந்து, தீ மூட்டினான். எல்லோரும் தீயின் ஜ்வாலையைச் சுற்றி அமர்ந்து தன் உடலை வெதுவெதுப்பாக்கிக் கொண்டனர். தழலாடலுடன் அவர்கள் அமைதியாகத் தனித்திருந்தனர். ஒற்றைத் துவாரத்தின் வழியே வெளிக் காற்றின் மென் பீறிடல், நரிகளின் ஊளை, தொலைவில் இடி இடிக்கும் அதிர்வுகளின் முணக்கம், அது சிற்சிலச் சிதறல்களாக, ஜெரிசிம் மலைக் குன்றத்தைக் குடைவதைப் போல இருந்தது. துவாரம் வானத்தைக் காட்டியது. வானத்தின் இருள், மேகங்களின் சாம்பல்த் தூவல்களுக்கிடையில், விண்மீன்களும் நிலவும் தத்தளித்துக் கொண்டிருந்தன. வெளித்தும் மறைத்தும் போக்கு காட்டிக் கொண்டிருக்கும் வெளிச்சம், பின் திடீரன முற்றிலும் உறைந்து இருள் மட்டுமேயானது. தீயின் மஞ்சள் ஒளி மட்டும் ஒருக் கீற்று போல இருளைக் கீறிக் கொண்டுக் வெளியேக் கோடுகளாகப் பிளந்துப் பரவியது. அதன் அலைவுகளின் ஊடே, வானத்துச் செதும்புகளின் கோரைகள், நாணல் வெளி போல அலையிட்டுச் சுழன்றது. அவர்கள் தங்கள் கண்களை மூடிக் கொண்டு, ஒருவர் தோள்களில் ஒருவர் தலை சாய்த்து அமர்ந்திருந்தனர். ஜான் மிக மெதுவாகத் தன்னுள் அணிந்திருந்த கம்பளி அங்கியை வெளியே எடுத்து ஜீசஸுன் முதுகில் போர்த்தி விட்டான். குத்துக்காலிட்டு அருகருகே அமர்ந்திருந்தவர்கள், ஒருவர் மற்றொருவரின் மூச்சின் வெப்பத்தினை உள்ளிழுத்து உறங்கத்தொடங்கினர். இருளின் முடிச்சுகள் இறுகிக் கொண்டிருந்தன. அவர்களின் இருப்பு பார்ப்பதற்கு சிறகுகள் ஒடுக்கி ஓய்ந்திருக்கும் சின்னஞ்சிறியப் பறவைகள் போல இருந்தது.

    அடுத்த நாள் அவர்கள் யூதேயாவை வந்தடைந்தனர். நிலத்தின், மரங்களின் அமைப்பில் உருவாகியிருக்கும் நுட்பமான மாற்றத்தை அவர்கள் கவனித்தனர். இருபுறமும் மரங்கள் அடர்ந்த நெடும்பாதை. மஞ்சள் வண்ண இலைகள் நெரியும் நெட்டிலிங்கங்கள், பழமையான தேவதாருக்கள், வெட்டுக்கிளிகளின் ஓய்வொழுச்சல் இல்லாதக் கூச்சல்கள், சிறகடிப்புகளைத் தாண்டி அவர்கள் போய்க் கொண்டிருந்தனர். மரங்களுக்கு அப்பால் இருக்கும் மண் பாதைகள், பாறைக் கற்கள் சிறிதும் பெரிதுமாய் முளைத்த, வறண்டப் பாழ் நிலம், காட்டுக் குத்துச் செடிகளும், புதர்களும், முட்செடிகளும் அடர்ந்து அங்காங்கே கொத்தாய்ப் படர்ந்திருந்தன. அதில் நீல நிறக் காட்டுப் பூக்கள் செறிந்து வளர்ந்திருந்தன. தூரத் தொலைவில் விவாசாயிகளின் வீட்டு அடுப்படிகளில் கனலும் தீப்பொறிகளின் மஞ்சள் துகள்களை அங்காங்கேப் புள்ளிகளாய்க் காண முடிந்தது.  மந்தமான அமைதி, சிலசமயம் நிசப்தம் உண்டாக்கும், அதன் பூதாகரம், மலை இடுக்குகளில் என்றோ பெய்த மழையின் எச்சமாக நீர்ப்பாதையின் உதிரி மண்துகள்கள். ஒரு ஒற்றைக் கௌதாரியின் தொடர்க் குழறல் ஒலி அனாயசமாகச் சூழலை மர்மம் கொள்ள வைத்தது. தாகத்திற்கு நீர்த் தேடும் அப்பறவையின் குரலை அனைவரும் ஒருமித்துக் கேட்டனர். அதன் மென்மையானத் தேகத்தின், உயிர்த்துடிப்பை குழறல் ஒலியின் வழித் தன் உள்ளங்கைகளில் அமர்த்தி, தன்னுடைய  உடற்சூட்டில் பத்திரப்படுத்தினான் ஜீசஸ்.

    அவர்கள் ஜெருசலேம்மை நெருங்க நெருங்க நிலம் மேலும் பாழ்த்தன்மை கொண்டுக் கடுமையாகியது. அவர்கள் காணும் கடவுள் கூட உருமாறியிருந்தது. இந்த நிலம் சிரிக்கவில்லை. கலீலியில், கிராமத்து மக்களின் இன்பப் பெருக்கும், மகிழ்ச்சியும் ஒரு தீப்பொறி போல அனைவரிடமும் பரவி வெடித்ததே, கடவுளும் கூட அவர்களின் முகங்களின் வழியேத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டாரே, அதேபோல சிறிதளவாயினும், சொர்க்கத்தின் மண் வாசனை, மழையின் ஈரத்தால் சமாரியாவின் நிலம், அதன் வற்றா நீர்மையினால் நம்மைப் புத்துணர்ச்சி அடையச் செய்ததே. ஆனால் இங்கு நிலம் எரிகிறது. சூரியன் ஒருப் பழுக்கக் காய்ச்சிய, இரும்பு உருளியைப்போல சென்னிறமாக  வானத்தில் சுழல்கிறது. அந்தத் தழலும் அடுப்பினுள் அவர்கள் மூச்சிரைக்க  முன்னேறிக் கொண்டிருந்தனர். இருள் அடரும் சமயம், பாறைகளை வெட்டி உருவாக்கப்பட்ட பலவிதமான சமாதிகள், உடலின் வீக்கங்கள் போல, மண்ணிற்கு மேலேக் கிளம்பி இருள்த்தன்மையுடன் வெளிக்கின்றன. ஆயிரமாயிரம் மூதாதையர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுக் கருங்கற்களாக மாறியிருந்தன. அதனில் காலியாகக் கிடந்த ஒரு சமாதியின் துவாரத்திற்குள் சென்று அவர்கள் சீக்கிரமேத் தங்களை உறக்கத்தினுள் ஆழ்த்திக் கொண்டனர். அடுத்த நாளில், புதுத்தெம்புடன்,  விடியலிலேயே அந்தப் புனித நகரத்தினுள் நுழைய அவர்கள்  எண்ணம் கொண்டிருந்தனர்.

    ஜீசஸ் மட்டும் உறங்கவில்லை. அவன் அந்தக் கல்லறைகளின் பாதையில் அங்குமிங்கும், இருளை மோப்பமிட்டுக் கொண்டுத் தீவிரமாக அலைந்து கொண்டிருந்தான். அவனது நெஞ்சம் அமைதியற்றிருந்தது. அகத்தினுள் தெளிவற்றக் குரல்கள் ஒலித்தன. மாபெரும் ஓலங்கள், பல்லாயிரம் உடலங்களின் வாதை விளிகள்....நள்ளிரவில், காற்றின் அனக்கம் கூட இல்லாமல் இருளின் முற்றமைதி. அமைதி, கரிய பிசின் போல அடர்த்தியாய் அவனைச் சுற்றி வழிகிறது. ஒருக் கார்வையான அழுகுரல் அதனைக்கிழித்து உள்நுழைகிறது. முதலில் அது ஒரு பசித்த ஓநாயின் கேவலோ என்று நினைத்தான். ஆனால் சட்டென்று அந்த ஊளைத் தன் இருதயத்திலிருந்து வெளிவருவதைப் பதைபதைப்புடன் உணர்ந்து கொண்டான்.

    "தந்தையே! யார் என்னுள் அழுகிறார்கள்,  ஏன் இப்படிக் கத்தி ஊளையிடுகின்றன? அவன் நடுக்கத்துடன் தனக்குத்தானே முணுமுணுத்தான்.

    பிறகு சோர்வுடன் தன் தளர்வடைந்த உடலைத் தூக்கிக் கொண்டு அவனும் ஒரு கல்லறைக்கு மேலேபோய்ச் சாய்ந்துத் தன்னைக் கடவுளின் கருணைமிகு கைகளில் ஒப்புவித்தான். படுத்தவுடன் உறங்கியும் விட்டான். விடியற்காலைக்குச் சற்று முன்னே ஒரு கனவு. அதில் அவன், மாக்தலேனுடன் இருந்தான். அவர்கள் இருவரும் அந்தரத்தில் கூரைகளுக்கு மேலே மிதந்து கொண்டிருந்தனர். அவர்களின் உடல்கள் காற்றின் இலகுவுடன் அந்தரவெளியில் ஒரு பறவையின் இறகினைப் போல திசையற்றுப் பறந்தன. அவர்கள் பறந்துப் பறந்துக் கிராமத்தின் எல்லைவரை சென்று விட்டனர். எல்லை விளிம்பினில் இருந்த ஒரு வீட்டிலிருந்து வயதானப் பருத்தக் கிழவர் ஒருவர், கதவைத் திறந்து வெளியே வந்தார். அவரது வெண்ணிறத்தாடி காற்றில் அலைந்தது. இரு குமிழ்க்கண்கள் இருளினுள் கான் மிருகம் போலப் பிரகாசித்தது. தன் மேல் அங்கியின் கைகளை இழுத்து மடித்திருந்தவரின் முழங்கைகள் வரை மண் சாந்து அப்பியிருந்தது. அண்ணாந்து அவர்கள் பறப்பதைப் பார்த்து அவர் கத்தினார். " நில்லுங்கள்! நில்லுங்கள்! நான் உங்களிடம் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேச வேண்டும்". உடனே அவர்களும் நின்றனர்.

"சொல்! கிழவரே! நாங்கள் கேட்கிறோம்!"

    "மெசியா இந்த உலகையே நேசிப்பவன், இந்த மொத்த உலகினையும் நேசிப்பதனால், அவன் அதற்காகச் சாகவும் துணிவான்"

"வேறென்ன?" மாக்தலேன் கேட்டாள்.

"இந்தச் செய்தி உனக்குப் போதாதா!" கிழவர் எரிந்து விழுந்தார்.

    "நாங்கள் உங்களின் பட்டறைக்குள் நுழைவதற்கு வாய்ப்பிருக்கிறதா" மாக்தலேன் கேட்டாள்.

    "இல்லை! நீ என் கைகளைக் கவனிக்கவில்லையா? அது முழுக்கக் களிமண் அப்பியிருக்கிறது. உள்ளே நான் மண்ணைக் குழைத்து நமக்கான மெசியாவை படைத்துக் கொண்டிருக்கிறேன்."

    ஜீசஸ் திடுக்கிட்டு விழித்தெழுந்தான். அவனது உடல் எடையற்றிருந்தது, பறப்பதைப் போல, கடலலையில் பாதை தவறிப் பயணிக்கும் ஆளற்றத் தோணி போல அலைந்தது. மற்றத் துணைவர்களும் எழுந்துவிட்டனர். புதிய நாள் தொடங்கிவிட்டது. விடியலின் மங்கல் வெளிச்சத்திற்குள்ளிருந்து கிளம்பிக் கோட்டு உருவங்களாய் வெளித்தெரியும் மலைகளும், குன்றுகளும் கருமையினுள் இருந்து பையப் பையச் சாம்பல் வண்ணம் பெறும் ஜெருசலேமின் திசைகளை அவர்கள் அனைவரும் ஒருமித்து நோக்கினர்.

    அவர்கள் புறப்படத் தயாராகினர். சீக்கிரமே போய்ச் சேரவேண்டும் என்ற ஆர்வத்தில் பொறுமையற்றிருந்தனர். அவர்கள் முன் ஏகிச் செல்கிறார்கள். ஆனால் தூரமும் பாதையும் முடிவடையாமல் வந்துகொண்டே இருந்தன. தூரத்து மலைகள் அசைவற்று, எந்த மாற்றமுமில்லாமல் அதே தொலைவில் நின்றிருந்தன.

    "நாம் ஜெருசலேமிற்குப் போவோம் என்று எனக்குத் தோன்றவில்லை சகோதரர்களே!" பீட்டர் விரக்தியாகக் கூறினான். " நமக்கு என்ன நிகழ்கிறது? நாம் அவளை நோக்கிச் செல்லச் செல்ல அவள் நம்மை விட்டு விலகி இன்னும் இன்னும் எனத் தொலைதூரம் போகின்றாள்."

    "அவள் நமக்கு மிக அருகில் வந்துவிட்டாள்" ஜீசஸ் கனிவுடன் பதில் அளித்தான். "தைரியம் கொள், பீட்டர்!, நாம் அவளைக் கண்டறியும் பொழுது அவளும் நம்மைக் கண்டு கொள்வாள், நமது மெசியாவைப் போல!"

    "மெசியா!" யூதாஸ் அதுவரை இருந்தத் தன் அமைதியை விடுத்து திடீரெனக் கேட்டான்.

    "மெசியா வந்து கொண்டிருக்கிறார்!" ஜீசஸ் ஆழமாகத் தனக்குள்ளும் ஊடுருவும் வகையில் சத்தமாகச் சொன்னான். "உனக்கு நன்றாகத் தெரியும் யூதாஸ், என் சகோதரா,  எதுவாகிலும் நாம் சரியானப் பாதையில் அவனை எதிர்கொள்வோம். நாம் நன்மையினாலும், நற்செயல்களினாலும், கருணையின் தூய்மையான வார்த்தையை உச்சரிக்கும் பொழுதும்,  நம்மை நோக்கி அவன் காலடிகள் விரைவதை உணர்கிறேன். அநீதியும், நேர்மையின்மையும், தீய்மையும், பயமும் நம்மை ஆட்கொள்ளும் பொழுது அவன் நமக்கு முதுகு காட்டிக் கொண்டு தூரதூரங்களுக்கு பின் நோக்கிச் செல்வதையும் பார்க்கிறேன். ஜெருசலேம்மின் இயக்கமே மெசியாவினால் தான் நிகழ்கிறது. நண்பர்களே! அதன் துரிதம் நமக்குள் பற்றட்டும். ம்ம்! வேகமெடுங்கள் நாம் அவளைச் சீக்கிரமே கண்டறிவோம்! நம் தேவனிடமும், மனிதனின் அழிவில்லா ஆன்மபலத்திடமும்  நம்பிக்கை வைப்போம்!"

    அவனது சொல்லின் ஊக்கத்தில், அவர்கள் விரைவாகப் பயணத்தைத் தொடர்ந்தனர். யூதாஸ் மறுபடியும் முதல் ஆளாக, அவர்களை வழி நடத்தி முன்னே சென்று கொண்டிருந்தான். அவனது உள்ளம் மகிழ்ச்சியில் பொங்கியது. "அவன் நன்றாகச் சொல்லிவிட்டான்." தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான். "ஆம்! மேரியின் மகன் சொல்வது சரிதான். அந்த முதியத்துறவியும் இதையே தானெ நம்மிடம் சொன்னார். நமது இரட்சிப்பு, முழுக்க முழுக்க நம்மைச் சார்ந்ததே! நாம் வெறுமனே நம் கைகளைக் கட்டிக் கொண்டு அமர்நிருந்தால், இஸ்ரவேலம் என்றுமே விடுதலை அடையாது. நாம் நம் கைகளை உயர்த்துவோம், நம் ஆயுதங்களைக் கையிலெடுப்போம், நமக்கான சுதந்திரத்தைப் பெறுவதற்காக!"

    யூதாஸ் தொடர்ந்து தனக்குளேயே விவாதித்துக் கொண்டு வந்தான். திடீரென மறுதலித்து நின்றான். அவன் முற்றிலுமாகக் குழம்பிப் போனான். "அப்படியென்றால் யார் இந்த மெசியா?, யார்?, ஒருவேளை இந்த அனைத்து மக்களுமா?"

    அவனது அடர்ந்த புருவங்களுக்கிடையிலிருந்து, வியர்வை, குமிழ்களாக வழிந்தன.  "இல்லை! ஒரு வேளை நாம்! அனைத்து மக்களுமேவா?" முதல்முறையாக இப்படி ஒரு எண்ணம் அவனுக்குத் தோன்றியது. அது அவனைத் தொந்தரவு செய்தது. "மெசியா என்பவன் இந்த மொத்த மக்களுமாக இருக்க முடியுமா?" அவன் திரும்பத் திரும்பத் தனக்குள்ளேயே உசாவினான். அப்படியென்றால் நாம் இத்தனைக் காலம் இந்தப் புனிதர்களையும், தவறானத் தீர்க்கதரிசிகளையும் வைத்துக் கொண்டு என்ன செய்கிறோம்? எதற்காக இப்படி அணுதினமும் வேதனையில் உழன்று, அவனைக் காணுவதற்காக முயற்சி செய்து ஏங்கிக் கொண்டிருக்கிறோம்? ஆம்! அவ்வளவு தான்! நாம் தான்! மக்கள் தான் அந்த மெசியா!. நீ, நான், நாம், நாம் அனைவரும்தான். நாம் ஒட்டுமொத்தமாக நம் ஆயுதங்களைக் கையில் எடுப்பதே நாம் செய்யவேண்டியது!"

    அவன் தொடர்ந்து நடையிட்டான். தன் கையிலிருந்த கம்பை உயர்த்தி வானத்தில் சுழற்றினான். ஒரு விளையாட்டுத் தோழன் போல அது அவன் சொல்வதையெல்லாம் கேட்டது. தனக்குத் தோன்றிய இந்தப் புது எண்ணத்தில் மகிழ்ச்சியாகத் தன்னை மூழ்கடித்துக் கொண்டு முன்நோக்கிச் சென்றான். சடாரென அவன் உடைந்து அழுதான். அவனுக்கு முன்னே ரெட்டைச் சிகரங்களாய் முளைத்திருந்த புனித ஜெருசலேமின் மலைகள் தெளிவாகத் தெரிந்தது. அழகும் பெருமையும் வாய்ந்த அதன் வெண்ணிற முகடுகள் சூரிய ஒளியை விழுங்கிக் கொண்டு ஒளிர்ந்து தெரிந்தன. அவனுக்குப் பின்னால் வந்துகொண்டிருப்பவர்களை அவன் இன்னும் அழைக்கவில்லை. அவன் தான் மட்டும் தனித்து அதனைத் தன்னால் முடிந்த அளவுப் பார்த்து,  ரசித்து அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தான். அரண்மனைகளும், கோட்டை, கோபுரங்களும், பரந்து விரிந்து செல்லும் நீல வெளிகளான அதன் ஊடு பாதைகளும், அதன் நடுமையமாக நம் தேவனால் பாதுகாக்கப்படும் கோவிலையும் வியப்புடனும், பயபக்தியுடனும் கண்டான். கோவிலின் பிரகாரங்களும், அதில் ஜொலிக்கும் பளிங்கு மற்றும் தங்க முலாம்களையும். தேவதாரு மரங்கள் சூழ்ந்த நீள் வரிசைக்கிடையில், அதனை ஒரு ஆன்மானுபவமாக அவனுள் உள்வாங்கிக் கொண்டான்.

    மற்றவர்களும் அவனுக்கருகில் வந்து அவன் கண்ட அனைத்தையும் கண்டு சந்தோஷத்தில் திக்குமுக்காடினர். 

    "வாருங்கள், நமது இறை மனுஷியின் பெருமைகளைப் பாடுவோம்!" கூட்டத்தில் சிறந்த பாட்டுக்காரனான பீட்டர் கூறினான். "தயாரா! நாம் ஒருமித்துப் பாடவோம்!"

ஐவரும் கைகளைக் கோர்த்துக்கொண்டு வட்டமிட்டு நின்று நடனமாடத் தயாராகினர். ஜீசஸ் அவர்களின் நடுவே அசைவற்று அந்தப் புனித சங்கீதத்தினைப் பாடத் தொடங்கினான்.

"அவர்கள் சொன்னபோது என்னுள் மகிழ்ச்சி பொங்கியது,

எழுக! நாம் நம் தேவனின் இல்லத்தை நோக்கிப் பயணப்படுவோம்!

என்னுடையக் கால்கள் உமக்கு முன் தாழ்ச்சியுறுகின்றன,

இதோ நாங்கள் உம்  சதுக்கத்திலே! ஓ! ஜெருசலேமே.

ஜெருசலேமே! திடமான உம் கோட்டை அரண்களே,

உம் வலிமை மிகு கோபுரங்களில் அமைதி நிலவுகிறது

உம் மாளிகையினில் இன்பம் பெருகுகிறது

என் உடன் பிறப்புகளே, என் துணைவர்களே, உங்களின் நிமித்தம்

சாந்தம் ! சாந்தம் எழுக!, என் ஜெருசலேமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக