புதன், 31 ஜனவரி, 2018

பூனை

பூனை போல வளைய வருகிறது,
என் முன்னே இந்தத் தொலை தூர நெடுஞ்சாலை.
மெல்ல என் கணுக்கால்களின் பின்னே முட்டி வருடி
தன் இடுப்புச்சூட்டினால் அழுத்துகிறது.
எனக்கு முன்னும் பின்னுமாக வந்து போகிறது இரட்டைப் புள்ளிகள்.
இதற்கிடையிலான தூரத்தில்
அதைத் தூக்கிக் கொஞ்சுவதும்,
லாவகமாக அதன் அடிக்கழுத்தில் தடவுவதும்,
அதன் கண்கள் சொக்குவதுமாய் முன் பயணிக்கிறேன்.
முடியும் புள்ளியோ வெகு தொலைவில்,
செல்லும் பாதையோ நகரும் தோறும் மாற்றம்.
மெல்ல கால்கள் பதுங்க தலை தாழ்க்கிறது.
கண்களில் வெறி கொள் விழிப்பு.
இரவுக் கார்வைக்குள் மின்னும் பொறி.
தன் பின்னங்கால்கள் உள் மடிய உட்கார்ந்து
வெளிக் காட்டுகிறது
செந்நிற நாக்கையும் கோரைப் பற்களையும்.
வேகம் வேகம்.
தலை தெறிக்கின்றன காட்சிகள்.
முன்னும் பின்னுமான புள்ளிகள்,
சுருள் வட்ட வடிவமாய் உருமாறிற்று.
அதன் நடு மையத்தில் உள் புகுந்து விட்டேன்.
வெளிவர முயல்கையில்
என்னை நோக்கி
நகங்களைக்
கூர்
தீட்டிக் கொண்டிருந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக