புதன், 5 ஜூன், 2019

கஞ்சா


நீள் பட்டைக் கோடு. செந்தீற்றலாய் உருகி விழுந்து கொண்டிருந்தது. மஞ்சள் காவி வெண்மை பச்சை கருமை நீலம் குழைந்து குழைந்து ஓடியது. சுழல் நடுப்புள்ளியிலிருந்து வண்ணங்கள் முளைத்துக் கொண்டே இருந்தது.
“முன்பு ஒரு பயணத்தில் விண்மீன் உறங்கும் நேரத்தில்”
“முன்பு ஒரு பயணத்தில் விண்மீன் உறங்கும் நேரத்தில்”
தப்பித்துக் கொள்ள முனைவது போல, கடல் தன் பல்லாயிரம் கரங்களால் கரையைப் பற்றிக் கொள்ள முயன்று கொண்டே இருந்தது. அலைகளின் நகங்கள் பழுத்து ஒடிந்து கொண்டிருந்தது. செம்பழுப்புக் கோளம், பட்டைத் தீற்றல். வண்ணங்களின் ஒழுங்கு குலையக் குலைய உருகிய சுழல் பந்து, விசைந்து தலைக்கு மேலே குதித்து கால்களுக்கடியில் குப்புற விழுந்தது.
தன்னைச் சுற்றிய மோனம் அவிழ்ந்து பேரிரைச்சல். மெல்ல அடுத்த இழுப்பு, கழுத்துக்குள் புதைந்த கனத்த புகை உடலினுள் அமைதியற்று அலைந்து என் மார்பினுள் ஒரு தனித்த உயிர் போல துடிக்கத் தொடங்கியது.
புற்கள், எண்ணிலடங்கா தூரம் அதன் நுனியிலிருந்து முளைத்து நெளியும் பல வண்ணப் புழுக்கள். மஞ்சள் நிறப்புழுக்கள் நீர்த்தாரைகள் போல இண்டு இடுக்குகளெல்லாம் ஓடிக் கொண்டிருந்தது. இடுப்புக்கு கீழே ஒன்றுமே இல்லாதது போல, கால்களற்று மிதந்து கொண்டிரூந்தேன்.
மூர்க்கமாக ஒரு அடி, மூக்கிலிருந்து அடர்ந்து குருதி வழிந்தது. தலை குப்புறக் கிடந்ததில் முகமெல்லாம் சிவந்திருந்தது. மெல்ல அடுத்த இழுப்பு.
இந்த முறை, மணல் மேடுகளுக்குள்ளிருந்து சில் வண்டுகளைப் போல உருள் உருளாக உடல்கள். நிறங்களற்ற உடல்கள். இல்லை நிறமிருந்ததா? என்ன நிறம் என்று யூகிக்க முடியவில்லை. ஆண் பெண் ஆணிலி பெண்ணிலி என்று பிரித்தறிய முடியாத உடல்களின் பெருக்கு. நடுவே அதே வட்டச் சுழல். அது ஒரு மாபெரிய சக்கரம் போலவும், அதனுள்ளிருந்து இந்தப் பெருக்கு துளிர்த்து பெருத்துக் கொண்டே இருப்பது போலவும் இருந்தது.
தாகம் கருத்த உருவமாய் என் தலை மேல் ஏறி அமர முயற்சித்து, வழுகிக் கொண்டிருந்தது. அதன் பெரிய உடல் மிருக வாசனையுடன் முணகிக் கொண்டிருந்தது. ஒரு கரடியைப் போல ரோமங்களடர்ந்த அதன் உடலிலிருந்து பழுப்பு நாகங்கள் மொலுமொலுத்து என் உடலினுள் இறங்கிக் கொண்டிருந்தது.
கண்ணாடியைப் பார்க்கிறேன். என் முகம் பலூன் போல விரிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது. வாஷ் பேசினில் வாய் மூக்கு கண்கள் காதுகள் எல்லாம் தனித்தனியே மிதக்கிறது. கழிவுப் போனியினுள்ளிருந்து எட்டிப் பார்த்தது என் குறி. சுற்றிலும் நான் சுவர்களிலிருந்தும் எட்டிப் பார்க்கின்றன நிறங்களற்ற உடல் பொதிகள்.
விளக்கை அணைக்க முயற்சிக்கிறேன். நீண்ட ட்யூப் லைட்டுகள் சுருங்கிச் சுருங்கி விந்துத் துணுக்குகளைப் போல உத்திரத்தில் சொட்டிக் கொண்டிருந்தது. குண்டு பல்புகள் விட்டில் பூச்சிகளாய் ஒளிர்ந்து ஒளிர்ந்து சிமிட்டிக் கொண்டே, மின் விசிறிகளுக்கிடையில் அரைபட்டுக் கொண்டிருந்தது. கால்களுக்கிடையில் சதுப்பு நிலமாய் ஆகியிருந்தது. புதையுண்ட பாதங்களில் நசிந்து உடைந்து, உடைந்த இடத்திலிருந்தே குத்தி உயர்ந்தது மரங்கள். மரங்களில் இலைகளுக்கு பதிலாய் கட்டுண்டு கிடந்தன சிறகுகள். மரங்களின் வேர் முண்டுகளில் சுருக்கிட்டு தலை கீழாய் தொங்கிக் கொண்டிருந்தன அதன் கூடுகள். நான் மண்ணுக்கடியிலிருந்து வான் நோக்கி உயர்ந்து கொண்டே இருக்கும் மரங்களைக் காண்கின்றேன். அதன் உள்ளறைகளின் இடைவெளிகளில் பற்றிப் படர்ந்து கொண்டிருந்தன முகில்கள். வானம் மாபெரும் கடல். அதன் அலை நுனிகளிலிருந்து பொழியும் வண்ணங்களின் மழையிலிருந்து, துளிகள் என் உடலெங்கும் நொதித்து உப்பு வீச்சத்துடன் உள்ளிறங்கியது. உப்பு வீச்சம் என் சொந்தக் குருதியாய் இருந்தது.
தாகம் அடங்கும் வரைக் குடித்துத் தீர்த்தேன். கண்கள் இருக்கும் பகுதியில் விதைகளும், அதிலிருந்து முளைத்த மரங்களுமாய் நிறையத் தொடங்கியது என் உடற் காடு. காட்டின் மேட்டு நிலத்திலிருந்து வெண் பட்டுத்திரை போல மஞ்சள் கோளம். நான் நான் என்று சொல்லிக் கொண்டு என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.
“விண்மீன் உறங்கும் நேரத்தில்”
“முன்பு ஒரு பயணத்தில்”
இப்பொழுது மேலும் ஒரு இழுப்பு.
கால்களுக்கடியில் பச்சை நிறம். கண்ணுக்கெட்டிய தொலைவு வரை பச்சைக் கடல்.
பச்சைப்புள்ளிகளிலிருந்து அந்த மலை நுனி தெரிந்தது. உச்சியில் தேங்கியிருந்த குட்டையின் உள்ளிருந்து எழுந்து வந்தான் அவன். தன்னை திகம்பரன் என்றான். சுற்றிலும் புல் பூண்டுகளற்ற மொட்டைப் பாறையின் மேற் தட்டுகளிலிருந்து குளிர் ஒரு மலைச்சுனை போலவே அவனைச் சுற்றி தழும்பிக் கொண்டிருந்தது. அம்மணம் காலங்களற்றதாய் அவனுள் நிறைந்திருந்தது.
மெல்ல என் காதுகளில் முணங்கினான்.
அம்மணமற்றதே நிரந்தரமானது
உடலன்றி ஏதும் தரப்படுவதில்லை
காலமற்றது உடல் ஒன்றே
சிறகுகளற்ற மரங்கள் எங்கும் முளைப்பதேயில்லை
கல் விளக்கின் ஒளியில் நான் மட்டுமே நின்று கொண்டிருந்தேன். தூரத்துப் பறவையின் கேவல். கூகையாக இருந்திருக்கக் கூடும். குட்டையினுள் அலைகளின் துடிப்புகளில் கரைப் பாசிகள் கிசுகிசுத்துக் கொண்டிருந்தது.
கரையான் புற்றுகளிலிருந்து நாகமுட்டைகள் பொரிந்து வெளிவந்தது. குஞ்சுகளின் கண்களில் உயிரின் நர நரப்புடன் மொலுமொலுத்து படர்ந்து மண் துகள்கள் படர உருண்டது. சுழல் தெரியத் தொடங்கியது.
அது மனித சஞ்சாரமற்ற நிலம். தலைக்கு மேலும் கீழும் நீல நதிகள் பாய்ந்தோடும் காடு. மரங்களின் சிறகுகள் வேரை இழுத்து இழுத்து உயர்ந்து கொண்டே இருந்தது. பாதாளங்களிலும் விண்ணிலும் மரமன்றி வேறு ஒன்றில்லாத படி நிறைந்து முழுங்கின.
“முன்பு ஒரு பயணத்தில்
விண்மீன் உறங்கும் நேரத்தில்”
கனவுகளற்ற வெளியில் இன்னும் பனி படர்ந்திருந்தது. கண்ணுக்கு தெரியாத நாட்களை அங்கு புதைத்து மூடி விட்டு திரும்பி பார்க்காமல் சென்று கொண்டிருக்கிறேன்.
என் கனவுகளின் உடைகளினால் உன் அம்மணத்தை மூடி விடுகிறேன்.
நீ நிரந்தரமானவனாகு!
நான் தேவனாக விரும்பவில்லை. என்னை விட்டு விடேன். நடுனடுங்கும் விரல் நுனிகள் பதற்றத்துடன் என் கழுத்தை தொற்றிக் கொண்டு பின் இறுக்க அணைத்துக் கொண்டது.
மதுக்கோப்பையில் அந்த கருங்க்சிவப்பு நிறத் திரவத்தை ஊற்றினேன். சோடா வேண்டாம் என்று மறுத்து விட்டார். தண்ணீர் பாதி டம்ளர் நிறைய ஊற்றி விட்டு சியர்ஸ் அடித்துக் கொண்டோம். மெல்ல உதட்டருகே கொண்டு சென்று முழுதுமாய் உறிஞ்சிக் கொண்டார்.
உன்னில் பாவம் செய்யாதவன் எவனோ அவனே முதல் கல்லடிக்கு தகுதியானவன் என்றார்.
ஆம்! ஆம்! என்று உள்ளூற நகைத்துக் கொண்டேன்.
நீ அங்கு தன்னந்தனியே தொங்கிக் கிடந்ததும் அதனால் தான் உனக்கு தெரிகிறதா?
நான் திரும்ப வரவேயில்லை என்று உனக்காகவாது தெரியுமா?
எனக்கு தெரியும். நீ உடல் கொண்டு வரவில்லை என்பது. ஆனால் நீ நிச்சயமாக் திரும்ப வந்திருந்தாய்.
என் அப்பா எப்பொழுதும் தன் டைரியின் முதற் பக்கத்தில் ஒன்றை மட்டுமே எழுதிக் கொள்வார். அவர் வரை அது சரியானதும் கூட.
மாட்டுத் தொழுவத்தில் பிறந்தாலும் மன்னரின் மணி முடிகள் அவன் காலடியில் கிடந்தன. ஏன்?
எளிமையும் அன்பிலுமாய்!
நீ அதை மட்டுமே கொண்டிருந்தாய். தேவாலயங்களில் மொத்த பகட்டிற்கும் உள்ளே நீ தன்னந்தனியே தொங்கிக் கிடப்பதை பார்க்கும் பொழுது நான் ஒன்றை மட்டுமே கடவுளை வேண்டிக் கொண்டிருந்தேன்.
ஏன்? இவனை மனிதனாய் பிறப்பித்தாய். நீ எவ்வளவு சுய நலமானவன். உன் பிள்ளையைக் கூட நீ அடகு வைத்து உன் சாம்ராஜ்யத்தை உருவாக்கும் வல்லமை படைத்தவனல்லவா!
அடுத்த ரவுண்ட் அடித்த பிறகே தெரிந்தது. அவன் மிக மிக நொடிந்து போயிருந்தான். எனக்கே எனக்கென்று இருந்தவளை நான் தவற விட்டு விட்டேன் என்றான்.
காதல் என்றும் அன்பு என்றும் சொல்லி பிதற்றினான்.
உண்மையில் இந்தப் பிதற்றல்கள் இன்றி நாம் மட்டும் எப்படி வாழ்ந்து விட முடியும்.
நீ தஸ்தாயெவ்ஸ்கியிடம் சென்றிருக்க வேண்டும். முன்பு சென்றது போலவே என்னிடம் தவறுதலாக வந்து விட்டாய்.
அவன் மட்டுமே உன்னை நன்கு அறிவான். ஆனால் அவன் மட்டும் என்ன சொல்லி விட்டான். குழந்தைகளின் ராஜ்ஜியம் தெய்வத்துடையது என்று சொல்லும் பொழுதே உடல் உடல் என்று தானே கூவிக் கொண்டிருந்தான்.
உன் பிணத்தை அவன் மிகவும் விரும்பியிருக்கக் கூடும்.
அதன் முன்னே மண்டியிட்டுக் கிடப்பது மட்டுமே தனக்கு விதித்ததாய் அவன் நம்பியிருந்தான்.
காதலை எப்பொழுதும் உன்னைப் போலவே புனிதத்தன்மை படுத்திக் கொண்டிருந்தான். அவன் உன் உண்மையான் விசுவாசியாய் இன்னும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறான்.
ஆனால் நான் அவன் பொருட்டும் உன் பொருட்டும் மன்னிப்புக் கேட்கிறேன்.
இதை மட்டுமே என்னால் உண்மையாக உன்னிலிருந்து கற்றுக் கொள்ள முடிந்தது.
உன்னை மனிதனாக்க மட்டுமே நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். என்னால் அது முடியுமென்றால் அன்று உன்னை தன்னந்தனியே விட்டுச்சென்ற சியோன் மலைக் குன்றின் உச்சியில் உன்னுடன் நானும் அமர்ந்து கொண்டிருப்பேன். உன் கோப்பையில் என் குருதித் துளியை உன்னைப் போலவே பகிர்ந்து நானும் உண்பேன்.
ஆனால் நடந்தது வேறென்னவோ?
மஞ்சள் நிறத்தை மட்டுமே தன் வாழ்வாக கொண்டவன் என் எதிரில் உன்னைப் போலவே வந்து நின்றான். சற்றே இறைஞ்சும் பாவத்துடன்.
கையில் இன்னும் உலராக் குருதியுடன் தன் சொந்தக் காதினை வைத்திருந்தான்.
எனக்கு தீ வேண்டும் என்றான். வானம் நோக்கி தழலும் மஞ்சள் தீ.