இருளுக்குள் செல்லும்
பொழுதெல்லாம் அதை உணர்கிறேன். என் அறையின் கதவிடுக்குகளின் வழியே கனத்த திரவமாக வழிந்து
உள் நுழையும் கருமை. வீட்டின் முன் இருக்கும் விளையில் மண்டிக்கிடக்கும் புதர்களுக்கிடையில்
அரவம் போல சுருண்டு கிடக்கிறது. சுவர்க்கோழியின் அகவல், இருட்டுடன் முயங்கும் நொடியில்
அடிப்பாதங்களில் ஊறல் போல அதை அறிகிறேன். தெள்ளத் தெளிவான இருட்டு என்று சொல்வார்களே
அதனைத் தேடிக் கொண்டே நகரத் தொடங்கும் என் பிரஞ்சை. சட்டையின் கீழ் நுனிகளில் அதக்கிய
எச்சில் துளிகள் இன்னும் ஈரம் காயாமல் பிதுங்கி இருப்பதைப் போல விளையைத் தாண்டிய தென்னை
மரங்களின் உச்சியில் அது பிதுங்கிக் கொண்டு இருப்பதை, புற வாசலில் பொட்டல் வயல்களில்
சதா ரீங்கரித்துக் கொண்டிருக்கும் உருண்டை வண்டுகள் வெளிச்சம் தெரிந்ததும் கப்பிக்
கொண்டு துடி துடிப்பதைப் போல அது என்னை ஈர்த்துக் கொண்டது.
சுற்றிலும் மலைகள்
இரவினுள் பதுங்கியிருக்கிறது. நிலவொளியில் சுனைக்கரையைத் தாண்டிச் செல்கிறேன். மெல்ல
ஸ்தூல உருவமெடுக்கும் இரவின் நிழல் தண்ணீரினுள் கலங்கி மலை போல பெரிதாகிக் கொண்டே இருக்கிறது.
இரவு தனக்கே உரிய கண்களுடன் நம்மை அண்ணாந்து நோக்கிக் கொண்டிருக்கிறது. மிக உயரத்தில்
அது பனங்குலைகள் போல அந்தர வெளியில் மிதக்கிறது. ஒத்தையடிப்பாதையில் மனித குமாரன் ஆளரவமற்ற
வெளியில் தனியே தொங்குகிறான். சர்ச்சைக் கடந்து மெல்ல வரப்பைத் தாண்டிக் குளத்துக்கரையில்
அமர்கிறேன். வெளிச்சம் இருளில் பூனைக்குட்டிகளைப் போலக் கண்கள் விரிய விரியச் சொட்டிக்
கொண்டிருந்தது ஆங்காங்கே.
படித்துறையில்
மிதிபடும் கற்களுக்கிடையில் தேய்ந்த உருளைக் கல். இருளிற்குள் அம்மிக் குழவி போல உருண்டு
கொண்டிருந்தது. அது ஒவ்வொரு அலையடிப்பிற்கும்
இருளைத் துழாவி சப்தித்தது. இறங்கி அதனை எடுத்துப் பார்த்தேன். கை கால்களற்ற முண்டமான
மதலை. படபடக்க அதனை கீழே போட்டுக் கொண்டு தலை தெறிக்க ஓடி வந்தேன்.
ஒத்தைக் கொட்டு
மெல்ல மெல்ல வளையிலிருந்து படம் காட்டும் நாகம் போல சூழலினுள் உறுமியது. சுற்றிலும்
களப நெடி. மஞ்சனை அவிந்த வீரப் பற்கள் தெறித்த உக்கிரக் கண்கள். ஊட்டு கொடுக்க வாயில்
துணி கெட்டிக் கொண்டு மகராச மாமவும், லெட்சுமண சித்தப்பாவும் நின்று கொண்டிருந்தனர்.
கச்சை கட்டி மணிகள் கிலுங்க விடைத்த காதுள்ள கங்கணம் கட்டிக் கொண்டு சுந்தரம்பிள்ளை
மாமா விடுமாடன் முன் நின்று கொண்டிருந்தார். சுற்றிலியிருக்கும் வயல் வெளிக்கு நடுவே
விடுமாடன். இந்த வயல் வெளி வெறும் இடுகாடாகக் கிடந்ததாக ஆச்சி மாடன் கதையை சொல்லும்
பொழுதெல்லாம் சொல்லுவாள். இருளினுள் முளைத்திருந்தது பந்த வெளிச்சம். ஒத்தைக் கொட்டு
மெல்ல மெல்ல பாதங்களுக்கடியிலிருந்து பீய்ச்சும் சுனை போல தாளத்தை உமிழத் தொடங்கியது.
“இல்லை இல்லை,
வேண்டாம் வேண்டாம்”
“பிலேய்…எனக்க
வேண்டாம்”
ஒரு மனிதக் குரல்
போலவே இல்லாத விளி. சந்தனம் மெழுகிய கரிய இறுகிய
தேகத்தில் பந்த ஒளி பாய்ந்து சலனிக்க, கண் பொருத்தினார் மகராச மாமா. நாதஸ்வரம் பிளிரத்
தொடங்கியது. நின்றிருந்தவர்களின் நிழல்கள் பூதங்களாய் உருமாறியிருந்தது. ஆறறை அடி மண்
பீடத்தின் மேல் மனித முகத்துடன் கூடிய விடு மாடன் அங்கியில் இப்பொழுது கண்கள் இல்லை.
மதலை….மதலை…
தூண்டா மணி விளக்கு…
சுடர்….மனிதப்
பிண்டம்…
மா இசக்கியின்
பிணம் கோரை கோரையாய்க் கிழிந்து இலந்தை மரத்தடியில் குருதிக் கூழாய்க் கிடந்தது. சூல்
கொண்டிருந்த வயிற்றிலிருந்து சிதறித் தெறித்த பனிக்குடம். அருகில் தொப்புள் கொடியுடன்
கழுத்தொடிந்த மதலை. இலந்தை மரத்தின் வேரிலிருந்து குருதிக் குமிழ்ந்து திட்டுத் திட்டாய்ப்
பரவி கனத்த இருள் திரவமாய் என் அறையினுள் கதவிடுக்கு வழியே ஒழுகிக் கொண்டிருந்தது.
எம்மா! எம்மா….
என்னாச்சு…என்னாச்சு
மக்கா.
என்னலே! சொப்பனம்
கண்டயா. இந்தா! தண்ணி குடி.
விடுமாடா! எம்பிள்ளைக்கு
தொணையா இருய்யா! அம்மா திருநீறை பட்டையாய்ப் பூசி விட்டு மெல்ல நெஞ்சில் தட்டி உறக்காட்ட
முயன்றாள். படபடவென்று அடித்துக் கொண்டிருந்த இதயத்துடிப்பிலிருந்து மெல்ல வில்லுப்பாட்டு
எனக்குள் கேட்க ஆரம்பித்தது.
தூண்டா மணி விளக்கு!
ஆமா! 32 வது மாடத்துல உள்ள மணி விளக்குல போய் நில்லு பார்வதி.
அவன் சுடரா உன்
முந்தானைல வருவான். அவனுக்கு சுடலைன்னு பேர் வை. உம் மகனா இந்த கைலாயத்துல வளரட்டு.
ஆமா!
வெறும் சதைப்
பிண்டமாய் இருந்தது குழந்தை. கை கால்கள் தலையுமற்ற அம்மிக் குழவி போன்ற உரு.
எனக்கப்போ! என்ன
ஏய்ச்சுப் புட்டேளே! நீர் என்னவாக்கும் வரம் மயிரு தந்தேரு வேய்…
பிள்ளையத் தரச்
சொன்னா பிண்டத்த தந்திருக்கிரு
பார்வதி கைலாயம்
பிளக்க கீறினாள்
அகிலமே அரண்டு
வியர்த்து நின்றது.
என்னத்தட்டி பாத்தே!
தள்ளு.
அட! ஆமா! பிள்ளைக்கு
நான் கண்ணு மூக்கு மொகம் வரையேன். கை கால்கள் மொளைக்க வைக்கேன்.
உனக்கிஷ்டத்துக்கு
வளத்துக்கோ! ஆனா இவன் என் மயான சொரூபன் பாத்துக்கோ. உன் கம்பைக்கெல்லாம் அடங்க மாட்டான்.
ஆமா! போவேய்.
அத நான் பாத்துக்கிடுகேன்.
நீர் உம்ம சோலியப்
பாரும்.
பிள்ளைக்கு மாயாண்டி
சுடலை ஈசன் என்று பெயரிட்டு வளர்த்தாள். பச்சிளம் பாலகனாய் இருந்த பிள்ளை பால் குடிக்கு
பதிலாய் குருதிப்பால் குடித்து வளர்ந்தான்.
கைலாயம் எங்கும்
பிணவாடை, குழந்தையின் தொட்டிலைச்சுற்றி மனித எலும்புகள்.
அய்யோ! யார்?
யார் இதை செய்தது? அழுது புலம்பினாள் பார்வதி!
சிவன் பெருஞ்சினத்துடன்
வந்தான். பிள்ளையைத் தூக்கி எறிந்தான் பூலோகத்தில்.
ஸ்தம்பித்து நின்றாள்
அவள்.
நான் தான் சொன்னனே
அவன் மசாணத்தில் இருக்கவேண்டியவன்னு என்று சொல்ல, பார்வதி விம்மி அழுதுக் கொண்டே இருந்தாள்.
அவனுக்கு துணையாய்
நீயும் போ என்று பார்வதியயையும் அனுப்பி தன்னந்தனியே மோனத்தில் அமர்ந்தான்.
கைலாயம் னா என்னது
ஆச்சி!
பாட்டி வீட்டு
வெளித்திண்டிற்கு கூட்டிப் போய் தூரத்தில் வரைவுகளாய்த் தெரியும் ஆனை முதுகுகள் போன்ற
மலை முகட்டைக் காண்பித்தாள்.
அந்தா இருக்குல்லா!
அந்த மலை தாம் லே கைலாயம். அங்கன இருந்து தான் இங்க நமக்கு கொல தெய்வமா சிவன் அம்சமா
நம்ம தெருவில இருக்கான் இந்த விடுமாடன் என்றாள்.
சிமிழுக்குள்ளே
அடைத்தாலும் சிவன் அறியா மாயமுண்டோ
அறைக்குள்ளே அடைத்தாலும்
அரன் அறியா மாயமுண்டோ
என்று அந்த பகவானும்
என்று அந்த பகவானும்….
மென் சலனித்த
பெண் குரலில், வெகு தூரத்திலும் அருகிலுமாய் மாறி மாறிப் பாடிக் கொண்டிருந்தது. கோவிலில் இரவு பகல் பாராமல் எரிந்து கொண்டிருக்கும்
மணிவிளக்கிலிருந்து வெளிச்சம் சல்லாத்துணி போல தெரு முழுதும் அணைந்து ஒளிர்ந்து கொண்டிருந்தது.
திரும்ப இரவையே
நினைத்துக் கொள்கிறேன். நள்ளிரவில் கோல் கொண்டு தரையில் தட்டிக் கொண்டே செல்லும் காலடி
சத்தத்தை எல்லா இரவுகளிலும் கேட்டிருக்கிறேன். களபம் கலந்த வாடை கடந்து செல்வதையும்.
ஆனால் காளிப்புலையன் தலை தெறித்துக் கிடந்ததை தண்டவாளத்தில் நான் காணாத வரை இதை நம்பியிருக்கவே
மாட்டேன்.
முண்டன் கோவிலில்
கால்கள் இழுபட தரையில் குப்புறக் கிடந்து நெற்றி உராய்ந்து குருதி வழிய ஆண்டாள் மாம
காளிப்புலையனாய் அதிர்ந்து உறுமிக் கொண்டிருப்பதை ஒவ்வொரு ஒடுக்கத்தி வெள்ளியும் கண்டிருக்கிறேன்.
சுந்தரமாம சொல்லும் கதைகளில் வன்மம் மிகுந்த காமக்கொடூரனாக மாடன் உருவாவதை தவிர்க்கமுடியவில்லை.
கற்பழித்துக் கொன்ற மா இசக்கியின் சடலமும், இந்திராணியின், கணியாளின் இன்னும் எத்தனை
ஆயிரம் பெண்களின் சடலத்தின் முன் ஊளித் தாண்டவம் ஆடியிருப்பான் மாடன்.
எட்டு அடுக்கு
அம்பாரமாய் ஊட்டு மலை போல் குவிந்திருந்தது. புழுங்கல் அரிசியின் வெந்த மணம் கமழ்ந்து
நாசி அடைத்தது. தடியங்காயும் முட்டையும் பிளந்து ரத்தம் கன்ற கிடந்தது மாட விளக்கின்
சுடரொளி முன்.
சூல்ப்பன்றி,
சூலாடு, சேவலும், கிடாவும், முட்டையும் மனிதச் சதையுமாய் அடுக்கடுக்கி வைக்கப்பட்ட
ஊட்டின் முன் ஒத்தைக் கொட்டும் நாதஸ்வரமுமாய் வருத்திக் கொண்டே இருந்தனர். மிருக லயத்துடன்
கர்ஜித்து கொதிக்க கொதிக்க அதனுள் வீழ்ந்து புரண்டான் மாடன். பச்சிளங்குழந்தைகளின்
தொடைச் சதையை பற்களில் நர நரக்க ஊன் ஒழுக ஒழுக குடித்துக் கொண்டிருந்தான்.
படித்துறையிலிருந்து
எழுந்து மாடன் கோவிலை நோக்கி சென்று கொண்டிருந்தேன். இருள் சிவந்து கனத்த சுவர் போல
என்னைச் சுற்றி எழும்பிக் கொண்டே இருந்தது. நாய்களின் ஊளை, வயல் வரப்பெங்கும் ஓடைகளில்
ஒழுகிக் கொண்டிருக்கும் சப்தம், பொட்டல் வெளியாய்க் கிடந்த வயல்களுக்கு நடுவே தூண்டா
மணி விளக்கு அணையாது மகுடிக்கு ஆடுவது போல ஊசலாடிக் கொண்டிருந்தது. தன்னந்தனியாக இருட்டு.
அதனுள் கோட்டு வெளிச்சமாய் மாடன். பொந்தந்தடியிலிருந்து எரிந்தணைந்த கங்கின் வீச்சமும்
புகையுமாய்க் கிடந்தது. பீடத்திற்கு சற்று பின்னே ஏதோ முணங்கல். நட்சத்திரமற்ற கரிய
வானம். தேய் பிறை நிலவு ஊன் மிருகத்தின் கூர்ந்த ஒற்றைக் கண் போல மேகங்களுக்குள் சிமிட்டிக்
கொண்டிருந்தது. முணங்கல் எழும் ஒலியை நோக்கி வரப்பைத் தாண்டி கால்களை அரவமின்றி வைத்து
நகர்ந்தேன்.
ஆம்! அது உருண்டு
கொண்டிருப்பதைப் பார்த்தேன். கை கால்கள் தலையற்ற சதைப் பிண்டம் பெரிய குன்றாக என் முன்னே
கரியதாய் உருக்கொண்டது.