வெள்ளிகிழமைகளின் நடு நிசிகள், அதிர அதிர உறுமும் சப்தங்களின் மத்தியில் போர்வையில் புரண்டு கெடையில் மோண்டிருப்பேன்.இரவின் கனவுகளில் என் தலைக்கு மேலே அந்த நதி மெல்லிய சிணுங்கல்களுடன் நகர்ந்து கொண்டிருக்க, அடிக் கூழாங்கற்களாய் அகம் கவிழக்கவிழ, நடு மத்தியிலிருந்து புறப்பட்டு அலைகள் விளிம்புகளில் உடைந்து கரையும். கோதைகிராமத்து களத்து வீட்டில், சித்தியும், தம்பியும் நானும் படுத்திருப்போம், களத்தை தாண்டிய நிலத்தில் மூன்று பீடங்கள். பன்றிமாடனும் மாடத்தியும், முத்தாரம்மையும். அந்த சாமத்தில் கேட்ட உறுமல்கள் பன்றிமாடனுடையது. சாமி கொண்டாடி முட்டிக் கொண்டே இருந்தார். நடு மண்டையில் குருதி தெறிக்க மண்ணை பிறாண்டிக் கொண்டே இருக்கிறார். களபம் கமக்க சுற்றிலும் ஒத்தைக் கொட்டின் மெல்லிய உசுப்பலில், முன்னும் பின்னுமாய் கால்களை அதக்கி பீடத்துப்படியில் முட்டிக் கொண்டிருந்தது அந்த பன்றி. புடைப்புகளாய் நகர்ந்து கொண்டிருக்கையில் அதை நான் திரும்பவும் பார்த்தேன். மாமல்லபுரம் பாறைக் குன்றுகளுக்கிடையில் அது தன் மடியில் மாடத்தியை ஏந்திக் கொண்டு அதே கொம்பன் பன்றியாக, வெறிக்க வெறிக்க உற்று நோக்கியது. என்று அது இந்த வராக ரூபமெடுத்து பெருந்தெய்வமாக உருவெடுத்தது.
காதுகள் விடைக்க, இடுப்புக் கச்சை மணிகள் கிலுக்க, கால் தண்டைகள் இழுபட, உக்கிரக் கண்களில் நான் பார்ப்பது எதனை. அபயக் கரங்களுடன் அது சங்கும் சக்கரமும் ஒளிர சாந்தபாவத்துடன் என்னைப் பார்க்கையில், ரத்த வாயுடன் ஆட்டின் கழுத்தை உறியும் லெட்சுமண சித்தப்பாவின் உறுமல் ஒலி என்னுள் நிறைந்து வழிகிறது. தெளிவற்ற அந்த குரல்களின் நடுவில், குளம்படியோசைகளுக்கிடையில் செய்ட்லுஸ் தன் ஆழ்மனத்துடன் இணைந்து கொள்வது எங்கே? அங்கு ஒரு பாகன் தெய்வம் அவருள் குடியேறுவதை, அதன் பலிகளும், களிகளும், கும்மாளங்களும் இணைந்து அந்த பலிச்சோறை உண்பதாக உணர்ந்தேன். அந்த லௌசீக நிலையில், தெளிவு என்பதே தேவையில்லை. வாழ்வை வாழ்ந்தால் மட்டுமே போதுமானதாக இருந்தது. சாத்தியமான வகையில்.
ஆனால், கேள்விகள்? இருப்பு என்பது என்னவாகப் போகிறது. ஜய விஜயர்கள் காத்திருக்கிறார்களா? எமனின் பாசக்கயிறு சுருக்கிடப் போகிறதா? கரிய அதன் காலடிகளின் சப்தத்தில் அனைத்தும் ஒடுங்கப் போகிறதா? வாழ்வதன் அர்த்தம் என்ன? வெறும் மூளைப் பிண்டம் தான் மனிதனா? எதையுமே அறிய முடியாத ஒரு எளிய உடலாய் மட்டும் மனிதன் இருக்கிறானா? எல்லைக்குட்பட்ட அவனது புரிதலில் அவன் நிகழ்த்திக் கொள்வது மட்டுமே தற்கால நிஜமாக அவன் உருவகித்து அதனுள்ளேயே மாண்டு விடுகிறானா? மதமும், ஆன்மீகமும், கடவுளும் அவனுக்கு எதையுமே தரப்போவதுமில்லையா? அப்படியெனில் அவன் அறிந்து கொள்வது எதனை. அவனது சங்கிலியின் கண்ணிகள் எங்கு கொளுத்தப்பட்டிருக்கின்றன. எதனுடைய, யாருடைய கனவுலகின் சுவைகளுக்காக அவனது நாக்குகள் துண்டாடப்படுகின்றன. அறியாது விழிக்கிறேன். சபலங்களின் பிடிகளில் நித்தியமாய் முடிச்சியிட்டுக் கொள்வது எளிதாக உள்ளது. அதன் பலவீனங்களை அப்படியே ஏற்றுக் கொள்வது அவ்வளவு எளிதில்லையா? ஒரு தூய மிருகமாக வாழ்வதென்பது மனிதனுக்கு அளிக்கப்படவில்லை என்பது எவ்வளவு காத்திரமாக உணர்த்துகிறது அந்த போப் செய்ட்லஸை கேலி செய்யும் கிங்கரர்கள் வழி.
எங்குமே மீட்பில்லாத மனிதன் எதன் பொருட்டு, எதை நிகழ்த்த, எதை அறிய வாழ்கிறான். அவன் ஒரு சோதனை எலியைப் போல பூமியில் உழல்கிறானா? அறியும் ஆவலுடன் நீர்க்குழாய் மின்னி வழிய வழிய என் முன் அம்மை இடுப்புகளில் இருக்கும் குழந்தைகளின் கண்களைப் பார்க்கின்றேன். எவ்வளவு சாத்தியங்கள் இருக்கின்றன அவற்றுள். ஆனால் பழுப்பேறிக் கிடக்கும், வயோதிகர்களின் சுளிப்பில், திருப்தியின்மையில் அதன் இடைவெளி எதனால், இப்படிக் கூளங்களால் நிரம்பி ஒன்றுமற்றதாக உருமாறிக் கிடக்கிறது. சாத்தானின் சம்பாசனைகளின் அதை அறிய விளைந்தேன். “அங்கு ஒன்று உள்ளது, அது இன்மையாகவும் உள்ளது” என்றது அது.
ஒரு குரூரமான பகடியாக இருக்கிறது. உண்மையை அறிதல் மனிதனுக்கு சாத்தியமில்லை என்று சொல்லி நகைக்கிறது. பின் தொடரும் மரணத்தின் முன் அமைதியின்றி அழலெரிய உருகிக் கொண்டிருக்கும் மனித மனத்தில் எதைக்கொண்டு அவியாக்க. வாழ்வது என்பது ஒரு பெரிய பகடியாக உரு மாறுமிடத்தில், ஒன்றும் ஒன்றும் பெரிய ஒன்றாக மாறுவது எத்தனை எளிது. அதைப் பிடித்துக் கொண்டு வாழ்ந்து விடலாமே என்று ஏங்குகிறது மனம்.
அங்கு எந்த இடைவெளிகளும் இல்லாதது போல உணர்கிறேன். ஒரு எளிய உயிரியாய், எதிர்பார்த்தல்களின்றி நிதர்சனத்தில் இயல்புடன், பலவீனங்களுடன் வாழ்வதென்பது சாத்தியமான ஒன்றுதானே. ஆனால் இந்த எளிய சுயக் கேலி சாத்தியப்படுமா…இன்னும் தெரியவில்லை. மூர்க்கமாக நான் சோரை வழிய முட்டிக் கொண்டு இருக்கவே முயல்கிறேன். அங்கு என் தன்னுணர்வில், நான் பெரியவன் என்றும், அறிய முற்படுபவன் என்றும் காட்டிக் கொள்ள முயல்கிறேன். வாழ்வின் முன் தோற்கடிக்கப்படும் ஒவ்வோர் தருணங்களிலும், சிதைந்து போன இந்தக் கேள்விகளில் அல்லாடுகிறது. கடவுள் உண்மையில் உண்டா? இல்லை வெறும் அணுக்களின் விளைவுதானா? ஆன்மா உண்டா? இல்லை. வெறும் மூளைப் பிதுங்கல் தானா? நாம்.
எப்பொழுதும் இப்படி இருமுனைகளிலும் ஊசலாடிக் கொண்டே இருக்கிறது.