திங்கள், 28 பிப்ரவரி, 2022
கிறுஸ்துவின் கடைசி சபலம் - 56
கிறுஸ்துவின் கடைசி சபலம் -55
சரி! நீ போகிறாய்! தாமஸ் ஆவேசத்தில் கத்தினான். ஆனால் உனக்குத்தெரியுமா, யூதாசும் அங்குதான் போய்க்கொண்டிருக்கிறான். அவன் கைகளில் கத்தியும் உள்ளது. உன்னிடம் கத்தி இருக்கிறதா?
"அதை நான் வைத்திருப்பதால் மட்டும் என்ன பயன்?" மேரியின் மகன் இன்னும் தன் தலையை உயர்த்தாமல் அதே உணர்வற்றக் குரலில் கேட்டான்.
தாமஸ் வெறுமனேப் பற்களைக் காட்டிச் சிரித்தான்.
"ஆடு....ஆடு...ஆடு...!" என்று ஆட்டைப் போலவேக் கனைத்து அவனைப் பரிகாசம் செய்தான். பின் தன் மூடையை எடுத்துத் தலையில் ஏற்றிக் கொண்டான்.
"சரி, நான் விடைபெறுகிறேன். உனக்கு என்ன விருப்பமோ அதைச்செய்!, நான் உன்னைத் திரும்பப்போகச் சொல்கிறேன். நீயோ, போய்த்தான் தீருவேன் என்று அடம் பிடிக்கிறாய். போ! சீக்கிரம் போ! பிறகு தாமதமாகி விடப்போகிறது. உன்னை நீயேதான் மிதித்து அதை நோக்கித் தள்ளுகிறாய். இதில் நான் செய்ய என்ன இருக்கிறது". என்று வெறுப்பானக் குரலில் முணுமுணுத்தான் தாமஸ்.
தன் மாறுக்கண்களைச் சுருக்கிச் சிமிட்டுக்கொண்டுத் திரும்பவும் வந்த வழியில், ஊதுகுழலை ஊதிக்கொண்டே, இப்பொழுது மேடாக இருக்கும் நிலத்தை நோக்கி உந்தி முன்னேறினான்.
இரவின் இருள் தீவிரமாக இறங்கியிருந்தது. ஏரியின் நீர்ப்பரப்பின் சலசலப்பைக் கேட்க முடிந்தது. இருளினுள் அது மூழ்கி வெளித்தது. பறவைகள் தங்கள் சிறகுகளை ஒடுக்கி நித்திரையில் ஆழ்ந்தன. இரவுப் பறவைகள் கூட்டிலிருந்துக் கிளம்பி இரைக்காக அங்காங்கே காத்துக்கொண்டிருந்தன. அதன் கார்வையானக் குழறல் ஒலிக் கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்க ஆரம்பித்தது. எண்ணிலடங்கா விண்மீன்கள் வானத்தை ஆக்கிரமித்திருந்தன. அரைக்கோள வடிவ நிலா நிலைத்திருந்தது. தலைக்கு மேலும், கால்களுக்குக் கீழும் இருள் சூழ்ந்திருந்தது. மூடுபனியின் சில்லிட்டக் காற்று சுருள் சுருளாகப் பரவத் தொடங்கியது. இரவின், குரலின் மொத்த சலசலப்புகளுக்குள்ளும், கிராமத்தின் முதல் வீட்டிலிருந்து விளக்கொளி இருளினுள்ளிருந்து முளைத்தது.
இது ஒரு புனிதமான நேரம். நான் போவதற்கு சரியானத்தருணம். இருளினுள் யாரும் நம்மைக் கண்டுகொள்ள மாட்டார்கள். போகலாம்! மேரியின் மகன் பயணத்தைத் தொடங்க எத்தனித்தான்.
தாமசின் சொற்கள் அவன் எண்ணங்களில் சுழன்றது.
எது கடவுளின் விருப்பமோ அது நடந்தே தீரும்! என்று சொல்லிக் கொண்டவன் தொடர்ந்து விரைவாக நடந்தான்.
என்னுடைய மரணத்திற்காகத் தான் அவர் என்னை உந்துகிறார் என்றால், சீக்கிரமே நான் கொல்லப்படவேண்டும். அதுவே என்னால் செய்ய முடிந்தது. அதை நான் செய்வேன் என்று சொல்லிக் கொண்டே ஒரு முறைத் திரும்பிப் பார்த்துக் கொண்டான்.
நாம் போகலாம் என்று கண்ணுக்குத்தெரியாத தன் துணையிடம் சொல்லிக் கொண்டவன் ஏரிக்கு மிக அருகில் வந்திருந்தான்.
இரவு ஈரப்பதத்துடனும், மெல்லியக் காற்றுடனும் அமைதியாகக் கடந்து கொண்டிருந்தது. மீனின் கவுச்சியான வாசனையும், மல்லிச்செடியில் பூக்கள் மொட்டவிழ்க்கும் நறுமணமும் கார்பெர்னத்தின் தெருக்களிலும், வீடுகளின் முற்றத்திலும் வீசியது. தன் வீட்டின் முற்றத்தில் முதிய செபெதீ தன் மனைவி சலோமியுடன், ஓய்வாக அமர்ந்திருந்தார். அங்கு நிலத்தில் கட்டையாகக் கிளைகள் விரித்திருந்தப் பாதாம் மரத்தினடியில் அவர்கள் தங்கள் இரவுணவை அருந்துகின்றனர். உள்ளே அறையில் ஜேக்கப் தன் கால்களைப் பின்னிக் கொண்டு படுத்துக்கிடந்தான்.
அவனுக்கு உறக்கம் வரவில்லை. மனதினுள் எரிந்து கொண்டிருக்கும் காட்சிகளின் படலம் அவனது எண்ணங்களைத் தாறுமாறாக அலைத்தது. எந்த வாய்ப்புமற்று சிலுவையில் அறையப்பட்ட புரட்சியாளனின் முகமும், கடவுளால் அநீதி இழைக்கப்பட்ட விவசாயிகளின் புலம்பல்களும், அரற்றல்களும் அவனுள் நிழலாடின. தன்னை ரோமானியர்களுக்கு விற்றுவிட்ட, அந்த உளவாளியான மேரியின் மகனின் முகமும் ஒரு இடைவெளிச்சம் போல அவன் முன் தோன்றியது. எல்லா முகங்களும் குழைந்தும் கலைந்தும் அவனை அலைத்தது. அவனால் உறங்கமுடியாது புரண்டுக் கொண்டே இருந்தான். பத்தாதற்கு தன் தந்தை வெளியே உரையாடிக் கொண்டிருப்பது அவனை இன்னும் எரிச்சலூட்டியது. அவனது உளம் ஆத்திரத்தில் கொதித்துக் கொண்டிருந்தது. அங்கிருந்துக் குதித்து எழுந்தவன் அறையை விட்டு வெளியே வந்து முற்றத்தைக் கடந்தான்.
எங்கே போகிறாய்? கவலையுடன் அவனது அம்மா அவனைக் கேட்டாள்.
நான் ஏரிக்கரைக்குச் சென்றுக் கொஞ்சம் காற்று வாங்கப் போகிறேன். உள்ளே புழுக்கமாகவும் எரிச்சலாகவும் இருக்கிறது என்று எரியும் குரலில் பதிலுரைத்தவன் அங்கிருந்து மணற் பரப்பை நோக்கி விரைந்தான்.
முதிய செபெதீ! வெறுமனேத் தலையை அசைத்துக் கொண்டு பெருமூச்சிட்டார். அவனிடம் எதுவும் பேசவில்லை.
"உலகம் முன்பு போல இல்லை", அவர் தன் மனைவி சலோமியிடம் பேசத்தொடங்கினார்.
"இன்று, இரண்டுப் பருத்த, நன்கு சதைப்பற்றுள்ள இளம் மீன்கள். அவை மீன்கள் கூட இல்லை! பறவைகள், சிறகுள்ளப் பறவைகள். அந்தப் பறக்கும் மீன்கள் துள்ளிக் குதித்ததை நீ பார்த்திருக்க வேண்டும். அதற்கு இந்தக் கடல் ரொம்பச் சின்னது. அதற்கு எல்லையற்ற இப்பெருவெளியே காணாதுதான். அதனால் நீரிலிருந்து உந்தி உந்திப் பறக்கப் பார்க்கிறது. ஆனால் அதனால் ரொம்ப நேரம் தாக்குப் பிடிக்க முடியாது. திரும்பவும் கடலிற்குள்ளேயே வந்து வீழும். பிறகுத் திரும்பவும், திரும்பவும் குதித்துக் குதித்து, அவைகளால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு தூரம் குதிக்கும். எதற்கு இருப்பு கொள்ளாமல் இந்த மீன்கள் இப்படிச் சாடிக் கொண்டே இருக்கிறது? அன்று உன் இளையமகன் ஜான், அவனே என்னிடம் வந்து சொன்னான், நான் மடத்திற்கு செல்லவேண்டும் என்று. நான் இறைவனுக்குச் சொந்தமானவன். அவனுக்காக பிரார்த்தனைகளும், நோன்பும் செய்வதுதான் எனக்கான வழி என்றான்.
இந்த மீன் பிடிப்படகுகள் அவனது இருப்பிற்கு மிகச்சிறியது, அந்த மீன்களைப் போலவே. அவனால் இதில் குறுக்கி இருக்க முடியாது. இப்பொழுது உன் மூத்தமகன் ஜேக்கப்பை நினைத்தாலும் எனக்குக் கவலையாக இருக்கிறது. கொஞ்சமாவது இவனுக்கு மண்டையில் ஏதாவது இருக்கும் என்று நினைத்தேன். வேண்டுமென்றால் பார்! இவனும் அதே வழியில்தான் தன் சுக்கானைச் செலுத்திக் கொண்டுப் போகிறான். பார்த்தாயா! வீடு அவனுக்கு எவ்வளவுச் சின்னதாக இருக்கிறது. அவனால் இதனுள் இருக்க முடியவில்லை. இந்தக் கோபமும், எரிச்சலும். எப்படிச் சூடாக வார்த்தைகளை உன்முன் உதிர்க்கிறான். ஒரு வெறி நாய் போல இருக்கிறது அவனின் முகம். எக்கேடு கெட்டாவது போகட்டும். எனக்கு அதைப்பற்றிக் கவலையில்லை. ஆனால் எனக்கு பின் என் படகுகளை, இந்த மீனவர்களை, என் தொழிலை யார் பார்த்துக் கொள்வார். அதுதான் என் பிரதானப் பிரச்சனை. என் உழைப்பெல்லாம் வீணாகிப் போய்க்கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. எனக்கு உண்மையில் இந்தப் பயல்களை நினைத்தால் பயமாக இருக்கிறது. எனக்குக் கொஞ்சம் மதுவும், கணவாப் பொறியலும் கொடு. நான் என்னை சமாதானப் படுத்திக் கொள்கிறேன்.
சலோமிக் கிழவி செவிடி போல உட்கார்ந்திருந்தாள். அவளது கணவன் ஏற்கனவே மூக்கு முட்டக் குடித்திருக்கிறான் என்பது அவளுக்குத் தெரியும்.
பேச்சை மாற்ற நினைத்தவள், "அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள், சின்னப்பயல்கள், அவர்கள் வழியில் சரியாகி விடுவார்கள். விடுங்கள்" என்றாள்.
ஆமாம்! நீ சொன்னது சரிதான். அவர்களுக்கான வழிகளில் அவர்களே ஒரு வழிக்கு வரட்டும். உனக்கும் மூளை இருக்கிறது. இதற்குத்தான் உன்னிடம் விஷயங்களைக் கேட்க வேண்டும் என்பது, என் அன்பு சலோமியே! எதற்கு நான் இப்படி உட்கார்ந்துக் கொண்டு தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டும். அதானே! அவர்கள் வாலிபர்கள். வாலிபத்துடிப்பிலும், ஆர்வக் கோளாறிலும் எதிலாவது ஈடுபடுகிறார்கள். வாலிபம் உண்மையில் ஒரு நோய். எல்லோரும் அதைக்கடந்துதான் வரவேண்டும். நானும் என் இளமையில் பலமுறை இதைப் போலத்தான் கோபாவேசப்படுவதும், படுக்கையில் தூக்கம் வராமல் முறுக்கிக் கொள்வதுமாய் இருந்திருக்கிறேன். அப்போது நான் என்னவோ கடவுளுக்கான தேடலில் இருப்பதாக எண்ணிக் கொள்வேன். ஆனால் உண்மையில் ஒரு பெண்ணிற்காகத்தான் அப்படி ஏங்கிக் கொண்டிருந்தேன். உன்னைப் பார்த்தேன், கல்யாணம் செய்துகொண்டேன். எல்லாம் அமைதியாகிவிட்டது. நம் பையன்களும் அதுபோலவே தெளிவடைந்து விடுவார்கள். வேறு எதுவும் பேசாதே! நான் இப்போதுதான் திருப்தியாக உணர்கிறேன். எனக்குக் கொஞ்சம் நொறுக்குத்தீனிகளும், கணவாப் பொறியலும் எடுத்து வை. கொஞ்சமே கொஞ்சம் மது, உன் ஆரோக்கியத்திற்காக! என்று சிரித்துக் கொண்டே தன் மனைவியிடம் கேட்டார் கிழவர்.
முதிய ஜோனா தன்னுடையக் குடிலில் தனியே அமர்ந்திருந்தார். வலையில் பின்னிக் கிடக்கும் சிக்கலான முடிச்சுகளை உதறி உதறி சரிசெய்து கொண்டிருந்த்தார். செபெதீயின் விட்டிலிருந்து கூப்பிடும் தொலைவில்தான் அவரின் குடில் இருந்தது. முதியவர் தன் எண்ணங்களில் ஏதோ முடிச்சுகள் இடுவதும், அவிழ்ப்பதுமாய் இருந்தார். மீன்களுடன் மட்டுமேயான அவரின் தனிமையின் நாட்கள் ஓய்ந்த பாடில்லை. சிந்தனையில் ஆழ்ந்திருந்தவரின் கைகள் அனிச்சையாக வலை முடிச்சுகளில் போராடிக் கொண்டிருந்தது. அவர், ஒரு வருடம் முன்பு போய்ச் சேர்ந்தத் தன் அன்பு மனைவியைப் பற்றியோ, இல்லை அந்த மாட்டு மூளைக்காரன், அறிவற்ற மடைப்பயல் ஆன்ட்ரூவைப் பற்றியோ, இல்லை இன்னும் நாசரேத்தின் மதுக்கடைகளில் சுற்றித்திரியும் தன் இன்னொருமகன் பீட்டரைப் பற்றியோ நினைக்கவில்லை. மாறாக செபெதீயின் வார்த்தைகளைத்தான் அவர் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார். தன்னை ஒரு தீவிர விசாரணைக்கு உட்படுத்தியிருந்தார். ஒருவேளை தான் ஒரு தீர்க்கதரிசியா என்று கேட்டவர், தன் கை, கால்களை, உடலை ஒருமுறை உற்றுப்பார்த்தார். அவரின் மூச்சிலும், வியர்வையிலும் கூட மீன் வாடைதான் அடித்தது. முந்தைய நாள் தான் தன் மனைவியின் பிரிவினை எண்ணி தன்னந்தனியேத் தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்ததை நினைத்தார். அவரது கண்ணீரும் மீனின் மணமன்றி வேறில்லை. மற்றும் அந்த செபெதீ கபடமாக ஒன்று சொன்னானே, என் தாடிக்குள் நண்டின் கொடுக்குகள் இருப்பதாக...அதனால் தான் தீர்க்கதரிசி ஜோனாதான் என்று, ஆனால் அவன் என்னிடம் சரியாகப் பேசும் மனநிலையில் இன்று இல்லை. இருந்தும் அவனின் சொற்கள் என்னுள் நங்கூரம் போல நிலை குத்தி நிற்கிறது என்று சிந்தனைக்குள் ஆழ்ந்தார்.
நிலத்தில் நடக்கும் பொழுது எப்பொழுதும் ஒரு வித தடுமாற்றமும், விழுந்து விடுவோமோ என்றக் கலக்கமும் அவருக்கு இருந்தது. ஆனால் நீரினுள், படகில் காலூன்றி நின்று விட்டால் அப்படி ஒரு மகிழ்ச்சி, நீரில் இறங்கியவுடன் மனநிம்மதியும், சந்தோஷமும் கொள்கிறார். நீர்மை அவரை மென்மையாகத் தழுவிக் கொண்டு ஒரு காதலியைப் போல அவர் காதுகளில் கிசுகிசுக்கிறது. தானும் ஒரு மீன் என்றே அவர் உணர்ந்தார். மீனைப் போலவே நீரில்லா விடில் வாழ முடியாதவர். நினைவுகளின் நிலைத்த தப்படிகளின் சப்தங்களினுள் அமிழ்ந்து தன் வலையை இன்னும் சரிபார்த்துக் கொண்டிருந்தார் அந்த முதியவர்.
" எனக்கு எந்த சந்தேகமுமில்லை. நான் தீர்க்கதரிசி ஜோனா" அவர் தனக்குதானே சொல்லிக்கொண்டார். இந்தச் சுறாமீன் என்னைத் திரும்பவும் கக்கி வெளியேற்றுகிறது. நான் உயிர்த்தெழுகிறேன். ஆனால் இம்முறை நான் சிறிது புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளவேண்டும். நான் ஒரு தீர்க்கதரிசி என்பது ஒருபுறமிருக்கட்டும். ஆனால் ஒரு மீனவன் போலவே என்னைக் காட்டிக் கொள்ளப் போகிறேன். என்னைப்பற்றிய உண்மையை யாரிடமும் கூறப் போவதில்லை. திரும்பவும் என்னை வாதைக்குள்ளாக்கித்தான் இதைக் கண்டறியவேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை என்று சொல்லிக் கொண்டவர், தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டு அமைதியானார். இத்தனை வருடங்கள் யாரும் இதைப்பற்றி அறிந்துவிடவில்லை. எப்படியோ இந்த விஷயத்தை நான் லாவகமாக இது நாள்வரை சமாளித்து வந்துவிட்டேன். செபெதீ இதைப் பற்றிக் கூறாத வரை எனக்கும் இது தெரிந்திருக்காது. நல்லது! அவன் என் கண்களைத் திறந்துவிட்டான்.
இரு கிழவர்களும் வெவ்வேறு வகையில் தங்களைத் திருப்திபடுத்திக்கொண்டு அமைதியுறும் போது, மேரியின் மகன் ஏரிக்கரையின் ஓரமாகப் போய்க்கொண்டிருந்தான். தன் எண்ணங்களில் ஆழமாக மூழ்கியிருந்தான். கண்டிப்பாக அவன் தனியாக இல்லை. அவனைத் தொடர்ந்து வரும் காலடிகள், மண்ணில் நிலைத்து ஊன்றிப் பின் தொடர்கிறது.
புதிய வியாபாரிகள் மேரியின் குடிலுக்கு வந்துவிட்டார்கள். அங்கே முற்றத்தில், எப்போதும் போலக் கூழாங்கற்கள் பாவியத் தரையில் குந்தி அமர்ந்து, தங்களுக்குள் வம்பளந்து கொண்டும், பேரீச்சைகள் மற்றும் நண்டுக்கறிகளை சுவைத்துக் கொண்டும் தங்களின் அழைப்பிற்காக அமைதியற்றுக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மடாலயத்தில் துறவிகளும், மடாதிபதியும் அவரவர் அறைகளில் விழிப்புடன் அமர்ந்து, கடவுளைத் தியானித்துக் கொண்டிருக்கின்றனர்.
அவன் மூச்சை இழுத்து விட்டுக் கொண்டான். தன் முன்னே திறந்திருக்கும் கதவுகள் வழியே உள்ளேத் தன் நீண்டகண்கள் விரியப் பார்த்தான். அவனது மெலிந்து வெளுத்த முகத்தில், எதையோ கேட்க நினைத்து தயங்கி நிற்கும் பாவம்.
துறவிகள், வாதிலில் அவனைக் கண்டதும், தங்களுக்குள் கிசுகிசுத்தனர். இந்த இளைஞன் என்ன யோசித்துக் கொண்டு கேட்பதற்குத் தயங்கி நிற்கிறான் என்று அவர்களுக்குக் குழப்பமாக இருந்தது.
"ஒருவேளை நாசரேத்திலிருந்து வந்த முதியத்துறவி, அவரைக் குணப்படுத்த வந்துவிட்டாரா இல்லையா"
"இல்லை,கரியச் சிறகுகள் கொண்ட மரணத்தின் தேவதூதன் அருகில் வந்துகொண்டிருக்கிறானா இல்லையா"
"அதுவும் இல்லையெனில், மெசியாவின் காலடிகள் நம்மை நோக்கி வந்துகொண்டிருக்கிறதா"
இப்படி ஏதேனும் கேள்விகள் கேட்பான் என்று அவனை எதிர்நோக்கினர்.
அக்கணம் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு ஸ்தம்பித்து நின்றனர். ஒவ்வொருவரின் ஆன்மாவும் நிகழுப்போகும் அற்புதத்தை எதிர்கொள்ளத் தயாராகியது. தங்கள் செவிகளைக் கூர்ந்து அமைதியாக நின்றுகொண்டிருந்தனர். ஆனால் மாறி மாறிச் சுத்தியல் அறையும் சப்தம் மட்டும் தான் காற்றில் அலைவுறுகிறது. சிறிது தூரத்தில் இருக்கும் வெளியில் யூதாஸ் தன் பட்டறையில் உலை அமைத்து தீ மூட்டியிருந்தான். செம்பை நழுக்கி அறையும் "நங்க், நங்க்...என்ற சப்தம் மட்டும் தான் இரவினுள் தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டிருந்தது.
கிறுஸ்துவின் கடைசி சபலம் -54
ஜேக்கப் கோபத்துடனும், வெறுப்புடனும் கார்பெர்னம் நோக்கி, முன்னே செல்வதை பார்த்துக்கொண்டிருந்தான் மேரியின் மகன். சரிந்து விழுவதைப் போல நிலத்தில் குத்திட்டு அமர்ந்தான். இன்னும் ஒரு அடி கூட நகர முடியாததை உணர்ந்தான். ஏதோ ஒரு பெரிய மனத்தடை அவனை நிலைத்திருந்தது. நடந்தவை எல்லாவற்றையும் அசை போட்டுக்கொண்டிருந்தது அவனது மனம்.
ஏன் தன் உள்ளம் நேசிக்கவும், நேசிக்கப்படவும் இப்படி ஏங்குகிறது? ஏன் என் விழிப்பிலும், உறக்கத்திலும் கூட மனிதர்களின் வெறுப்பினால் அது தளர்வுறுகிறது? இது என் சொந்தத் தவறு. நிச்சயமாக கடவுளுடையது அல்ல. எந்த மனிதர்களாலும் அல்ல, இது நான் மட்டுமே உருவாக்கிக் கொண்டப் பிழை. ஏன் ஒரு கோழையைப் போல நடந்து கொண்டேன்? ஏன் ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்தும், அதில் தொடர்ந்து இறுதி வரைப் பயணப்படத் தயக்கம் கொள்கிறேன். நான் மனதளவில் ஒரு தோல்வியுற்றவனாய், ஒரு பயந்த விலங்காய் என்னை ஏன் பாவித்துக் கொள்கிறேன். ஏன் மாக்தலேனாவை அங்கிருந்து அழைத்துச் செல்ல, என் மனைவியாக ஏற்றுக் கொள்ளத் திராணியற்றவனாய் இருக்கிறேன். அவளை இந்த மாபெரும் அவமானத்திலிருந்தும், மரணத்திலிருந்தும் காப்பதற்கு வாய்ப்பு கிடைத்தும் செய்யாமல் தவறவிடுகிறேன். எப்பொழுதெல்லாம் கடவுளின் கூர் உகிர்கள் என் மூளைக்குழியினைப் பிளந்து என்னை எழுப்புகிறதோ, அப்பொழுதெல்லாம் மண்ணைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுத் தரையோடுத் தரையாகப் புதைந்து விட வேண்டும் போலக் கிடக்கிறேன். இப்பொழுது எதையும் எதிர்கொள்வதற்குப் பயந்து பாலை நிலத்திற்குச் சென்று என்னை மறைத்துக் கொள்ளப் பார்க்கிறேன். ஏன்? கடவுளால் அங்கும் வந்து என்னைப் பீடித்துக் கொள்ள முடியும் என்பதை நான் சிந்திக்கவில்லையா? அலைக்கழிந்து சிதறிக் கொண்டிருந்தது அவனது எண்ணங்களும், நினைவுகளும். எல்லாவற்றையும் மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு இன்னும் தனக்கிருப்பதாக ஒரு முறை நினைக்கிறான். ஆனால் மறுமுறைத் தன்னை மீறிய ஒன்றிடம் தான் சதா போராடிக் கொண்டிருக்கிறோம் என்று பதறுகிறான். ஒரு பக்கம் ஒளியும், ஒரு பக்கம் இருளும் அவனை ஆட்கொள்கிறது. அவிழ்க்கவே வாய்ப்பற்ற, தூரத்தொலைவில் கொளுத்தியிடப்பட்டிருக்கும் சங்கிலியின் கண்ணிகள் அவன் கால்களில் நிலையாகக் கட்டப்பட்டிருக்கிறது. அதை அவிழ்க்க முனையும் பொழுதெல்லாம் அவன் சிதைந்து போவது ஒன்றுதான் திரும்பத் திரும்ப நிகழ்கிறது என்று நினைத்துக் கொண்டான். ஆனால் எல்லாவற்றையும் ஏதோ ஒன்றிடம் அவன் கையளிக்க முடியவில்லை. இதற்குத்தான் தான் காரணம் என்று தன்னைக் குற்றப்படுத்திக் கொண்டுத் தன் சுயத்தை வதைக்கிறான். இது ஒரு வகை ஆறுதலாகவும், எரிச்சலாகவும் அவனிடம் வெளிப்பட்டது.
நண்பகல் சூரியன் சரியாகத் தலைக்கு மேலே எரிந்தது. மிச்ச மீதிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தவர்களும், புலம்பிக்கொண்டிருந்தப் பெண்களும் நிறுத்திக் கொண்டனர். இந்தப் பேரழிவின் பாதிப்புகளால் கவலையுற்று எந்தப் பயனுமில்லை, அதற்காக அழுது புலம்பினாலும் எதுவும் மாறப் போவதில்லை, என்று தங்களைத் திடப்படுத்திக் கொண்டு அமைதியாகினர். ஆயிரம் வருடங்களாய் அவர்கள் தண்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். கண்ணுக்குத் தெரியும் சக்திகளாலும், தெரியாதவைகளாலும் அவர்கள் தூக்கியெறியப்படுகிறார்கள். வரலாறு நெடுகிலும் அநீதி இழைக்கப்பட்டு, பட்டினி கிடந்து மடியவேண்டும் என்பது அவர்களின் என்றைக்கும் அழியாத விதி! அதனால் தங்கள் வாழ்க்கை முழுதும் அவர்கள் பொறுமையாக, பிரச்சனைகளை எதிர் நோக்கியிருப்பதே வாடிக்கையாகிவிட்டது.
பச்சோந்தி ஒன்று சாலைக்குக் குறுக்கே, ஒரு பாறையின் மேலே வெயிலைக்குடித்துக்கொண்டும், சுற்றும் முற்றும் தன் உருள் கண்களை அங்கும் இங்கும் அலைத்துக் கொண்டும், மெல்ல மெல்ல காலடி எடுத்து வைக்கிறது. பின் நின்ற இடத்திலேயே அசைவற்றிருக்கிறது. மனித அரவம் கேட்டதும் கழுத்தை உள்குழித்து, இன்னும் நிலைத்த கண்களுடன் கூர்கிறது. பாறையின் நிறத்திலேயே அதுவும் இருப்பதால் அருகில் வரும் வரை அதை யாரும் கவனிக்க முடியாது. தன்னந்தனியேத் தனக்குமுன் இருக்கும் மனிதனை உற்று நோக்கியது. அதன் செதில்களடர்ந்த தேகத்தின், கால் விரல்களுக்கிடையிலும், கால்கள் உடலுடன் சேரும் பகுதியிலும் சவ்வு போன்று விரிந்து சுருங்கும் மென்மையான வெளுத்தத் தோலைக் கொண்டிருந்தது. கொம்புகள் போன்று, இரு உருளைக் கண்களுக்கும் நேர் மேலே செதில்கள் கூர்மையாய் வளர்ந்திருந்தன. உடல் முழுதும் சிறிதும் பெரிதுமாகத் திரட்சியாய்ச் செதில்கள் இருந்தது. அதன் சவ்வுகள் அது எளிதில் தாவிப் பறப்பதற்க்கு உதவியாக இருந்தது. அதனருகில் தரையில் அமர்ந்திருந்தான் மேரியின் மகன். அவன் அதனை இன்னும் கவனிக்கவில்லை. அதன் அடிப்பாகம் மென்மையாகவும், மேற்பாகம் கடினமானதாகவும் இருந்தது. அவனருகில் சடாரெனக் குதித்த அந்தப் பல்லி அவன் தலையில் பறந்து வந்து அமர்ந்து கொண்டது. ரத்தத் துணுக்குகளாலான குட்டையை முகர்ந்தது. தன் நீண்ட நாக்கினை நீட்டி அந்த ரத்தததை நக்கிப் பார்த்தது. பின் அங்கிருந்து பறந்துக் குதித்துத் தரையில் கால்களை ஊன்றி அசையாமல் நின்றது. இது எல்லாமே கண நேரத்தில், ஜீசஸ் நிதானிக்கும் முன்னமே சட்டென்று நடந்தேறியது. அவன் தலையை உலுக்கிக் கொண்டு குறுக்கே நகர்ந்து செல்லும் அப்பல்லியைப் பார்த்தான்.
அதற்குள் வேறு ஒரு எண்ணத்தை உருவாக்கியது. அந்தப் பல்லி. அவனுக்கு கடவுளின் இருப்பை அது அறிவித்தது. அவனது செய்தி ஒரு இடிமுழக்கமாகவோ இல்லை கூர்மையான உகிர்களைப் போலவோ எப்போதும் வருவதில்லை. சில நேரங்களில் இந்த ஊர்வன போலக் கூட வந்து ஞாபகப்படுத்திச் செல்லக்கூடும் என்று நினைத்து இன்னும் அதே இடத்தில் உட்கார்ந்திருந்தான்.
குத்திட்டு அமர்ந்திருந்த அவன் கால்களுக்கடியில் ஏதோ ஊறுகிறது. கீழே குனிந்துப் பார்த்தான். திரள் திரளாக கருப்பும், மஞ்சளும் கலந்த நிறங்களிலான கடி எறும்புகளின் வரிசை, அவசர அவசரமாக கீழே அவன் இடம் விட்டிருக்கும் வளைவுகளின் வழியே சென்று கொண்டிருந்தது. இரண்டு அல்லது மூன்று எறும்புகள் ஒரு குழுவாகக் கீழே சிந்திக்கிடக்கும் கோதுமைகளைத் தங்கள் தாடைகளால் முட்டுக் கொடுத்துத் தூக்கி வருகின்றன. ஒரு நீண்ட வரிசையில், ஒன்றன் பின் ஒன்றாக, ஒவ்வொரு தானியங்களாக அவைகள் தங்கள் புற்றினை நோக்கிக் கடத்திச் செல்கின்றன. அவைகள் தங்கள் கடவுளான பெரிய எறும்பிடம் வேண்டிக்கொள்வதெல்லாம், கதிரடிப்புக் களத்தில் தானியங்களெல்லாம் மனிதர்கள் சேமித்து வைக்கும் சமயத்தில் சரியாக நீ வெள்ளத்தினை அனுப்பி வைக்க வேண்டும் என்பதுதான்.
அவைகளுக்கு எந்த பாதிப்புமில்லாமல் இருக்கும்படி மேரியின் மகன் சற்றுத் தள்ளி அமர்ந்துகொண்டான். எறும்புகளும் கடவுள் உருவாக்கிய உயிர்தானே!
இந்த மனிதர்கள், பல்லியினங்கள், வெட்டுக்கிளிகள், ஆலிவ் மரங்கள், இரவில் ஊளையிடுகிறதே கழுதைப்புலிகள், இந்த வெள்ளம், பசி எல்லாம்....எல்லாமே அவன் உருவாக்கியதுதானே!...
ஏதோ சப்தம் தன் பின்னால் வருகிறது. நீர்க்குமிழிகள் கொப்பளிப்பதைப் போல அச்சப்தம் பின்னால் ஊடுருவுகிறது. வெகு நேரம் அவனும் கூட மறந்து விட்டான். அவள் அவனை எத்தருணத்திலும் மறக்காமல் சரியாகப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறாள். இப்பொழுது அவன் உணர்கிறான், தன் முதுகுக்கு பின்னே ஒளிரும் கூர்க்கண்களை. சம்மணமிட்டு அமர்ந்தவன், மூச்சினைப் பலமாக இழுத்து வெளிவிட்டான்.
"இந்த சாபமும் கூட கடவுளின் படைப்புத்தான்!" அவன் முணுமுணுத்தான்.
அவன் தன்னைச்சுற்றி எப்பொழுதும் ஆண்டவனை உணர்ந்திருந்தான். அவரின் சுவாசத்தின் அணுக்கமின்றி அவன் இருந்ததில்லை. அவனைச்சுற்றிக் குழுமும் கடவுளின் இருப்பு சில சமயம் அவனில் கதகதப்பும், கருணையும் கொண்டிருக்கும். சில சமயம் காட்டுமிராண்டித்தனத்துடன் வெறிகொள்ள ரணங்களாய்த் துரத்தும். இந்தப் பல்லிகள், வண்ணத்துப் பூச்சிகள், எறும்புகள், என் சாபங்கள் எல்லாமேக் கடவுளின் செய்கைகள் தான்.
பொருளற்றக் குரல்களும், மணிச்சப்தங்களும், சாலையைக் கடந்து கொண்டிருந்தது. ஏதோ விலையுயர்ந்த பொருட்களை ஏற்றிக் கொண்டு ஒரு ஒட்டக மந்தை நிரைப் பாதையில் வருகிறது. ஒரு வயதானக் கழுதை அதனை வழிநடத்துகிறது. இந்த வணிகக் கும்பல் எப்படியும் வெகுதொலைவு பயணப்பட்டிருக்கும். இந்த மதிப்புமிக்கப் பொருட்களின் வியாபாரம், நம் மூதாதை ஆப்ரஹாமின் சந்ததிகள் வாழும் பள்ளத்தாக்கு நிலமான நினேவாவிலிருந்தும், பாபிலோனிலிருந்தும் தொடங்கியிருக்கும். அங்கிருந்து பாலைவனங்களைக் கடந்து, பட்டு, யானைத்தந்தங்கள், ஏலக்காய், இலவங்கம், கிராம்பு, பட்டை மற்றும் பலப்பல ஆண், பெண் அடிமைகளையும், ஏற்றுமதி, இறக்குமதி வாணிபம் செய்கின்ற மகாசமுத்திரத்தின் துறைமுகத்தின் வழியேக் கடந்து இங்கே வந்து கொண்டிருக்கிறது.
நீண்ட ஊர்வலம் போல அவர்கள் வந்து கொண்டே இருந்தார்கள். முடிவடையாது நீண்டு கொண்டே சென்ற ஒட்டகங்களின் நிரை ஒருவழியாக முடிந்தது. கருத்த தாடியும், நீண்ட சிகையும் கொண்ட பருமனான வணிகர்கள் அதன் பின் வந்து கொண்டிருந்தனர். தலையில் பச்சை நிறத் தலைப்பாகையும், காதுகளில் தங்க வளையங்களும், கழுத்தில் முத்து மற்றும் பவளங்களால் செய்த மாலைகளும் அணிந்திருந்தனர். தங்களுக்குள் எதையோ மிகத்தீவரமாக உரையாடிக் கொண்டும், முன்னே செல்லும் மந்தையை, அடிமைகளைக் கவனித்துக் கொண்டும் வந்தனர். அவர்களின் நகைப்பொலிகளும், வெடிச்சிரிப்புகளும், ஒட்டகங்களின் குளம்படிகளும், மணிச்சப்தமும், அவைகள் அசைபோட்டுக்கொண்டே நரநரக்கும் பொருளற்றக் கனைப்பொலியும் இணைந்து சாலையேக் குலுங்கும் வண்ணம் அதிர்ந்து கொண்டிருந்தது.
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த மேரியின் மகனின் உடல் நடுங்கியது. இவர்கள் எப்படியும் மாக்தலாவில் ஓய்வெடுக்க நிற்பார்கள். மேரியின் கதவுகள் இரவும் பகலும் மூடுவதே இல்லை. இவர்களும் அங்குக் கண்டிப்பாகச் செல்வார்கள். நான் அவளைக் காப்பாற்ற வேண்டும். என்னால் மட்டும் தான் அது மடியும்! மாக்தலேன்! ஐயோ! நான் இஸ்ரவேலத்தைக் காக்கும் இப்பந்தயத்திலில்லை.என்னை விட்டு விடுங்கள். நான் ஒன்றும் தீர்க்கதரிசியில்லை. நான் வாயைத் திறந்தால், என்ன பேசுவேன் என்று எனக்கே ஒன்றும் தெரியாது. என் உதடுகள் வழியே அனல் தகிக்கும் வார்த்தைகளை அவன் அருளியிருக்கிறானா? இல்லை, ஒரு இடிமுழக்கத்தினை என் உடலினுள் புகுத்தி என் உடல், பொருள் ஆவி அனைத்தையும் எரிய வைத்து என் வெம்மையை இம்மக்களுக்கெல்லாம் பரப்பும் வலுவை எனக்குத் தந்திருக்கிறானா? வெறி கொள்ள இத்தெருவின், இச்சதுக்கத்தின் மையத்தில் நின்று கூச்சல் போட்டு மக்கள் எல்லோரையும் அழைத்து நான் என்னப் பேசப் போகிறேன். அது என் குரல்! ஆனால் அது என் சொற்களாக இருக்கப் போவதில்லை. உண்மையில் என்னிடம் எந்த சொற்களுமில்லை. என் வார்த்தைகள் கடவுளுடையதாய் இருக்கக்கடவது. நான் எதுவும் செய்யப் போவதில்லை. வெறுமனே என் வாயைத் திறந்து அமைதியாகக் காத்திருப்பேன். அவன் என் வழியே பேசிக் கொள்ளட்டும். நான் ஒன்றும் புனிதனல்ல, தீர்க்கதரிசியுமல்ல. ஒரு வெறும் பயல் நான். ஒரு சாதாரண மனிதன் நான். எல்லாவற்றிற்கும் பயந்து பதுங்கிக் கொள்ளும் ஒரு சாமானியன் தான். என்னால் உன்னை இந்த அசிங்கமானப் படுக்கையெனும் படுகுழியிலிருந்து மீட்க முடியாது மாக்தலேன்! எனக்கு இதைத்தவிர வேறு வழியில்லை. நான் இந்தப் பாலைவனத்திற்குத் தான் போகப் போகிறேன். அங்கே அந்த புனித மடத்திற்கு சென்று உனக்காக நான் உளம் உருகிப் பிரார்த்தனை செய்கிறேன். மேரி! பிரார்த்தனைகள் பெரியவைகள்! அவை மனிதனை விட வல்லமை கொண்டவை. நமது மூதாதை மோசஸ் போர்களின் போது கையை உயர்த்தி வானத்தை நோக்கி மன்றாடினார், அவர்கள் வெற்றியடைந்தார்கள். சோர்ந்து தளர்ந்து தன் கைகளை அவர் இறக்கும் பொழுதெல்லாம் தோல்வியுற்றார்கள். நானும் இரவும் பகலும் உனக்காக வேண்டி என் கைகளை சொர்க்கத்தை நோக்கி உயர்த்திக் கொண்டு காலமற்றுப் பிரார்த்திக் கொண்டே இருப்பேன் மேரி! ஆம்! நாம் நம்பிக்கை மீது நம்பிக்கை கொள்வோம் மேரி! தனக்குள் புலம்பிக் கொண்டே இருந்தான் ஜீசஸ்.
அவன் மெல்ல வானத்தைப் பார்த்தான். அந்தி இறங்கும் சமயம் நெருங்கிக் கொண்டிருந்தது. இருளில் அங்கிருந்து பயணிக்க வேண்டும் என எண்ணிக் கொண்டான். அப்பொழுதுதான் தன்னை எந்த மனித உயிரும் கண்டுவிடாது. தானும் கார்பெர்னத்தைக் கடந்து ஏரியின் வழியாக, பாலைவனத்தை அடையலாம் என நினைத்தான். அவனது மனவலிமை முற்றிலுமாக வடிந்திருந்தது. இங்கிருந்து எப்படியாவது தப்பித்து விட்டால் போதும். எப்போது நாம் அந்த துறவிகளின் மடாலயத்தை அடைவோம் என்று விசனப்பட்டும், கலக்கமுற்றுமிருந்தான்.
ஆம்! ஆழம் குறைந்த ஏரியின் பாதை வழியேக் கடந்தால் இன்னும் சீக்கிரம் பாலையை அடைந்து விடலாம் என எண்ணிக் கொண்டவன். மூச்சினை இழுத்து விட்டுக் கொண்டு தன்னை சமப்படுத்த முயன்றான்.
சூரிய ஒளியின் துலக்கத்தில், பாறையில் ஒட்டிவைத்தாற் போல இன்னும் வெயில் காய்ந்து கொண்டிருந்தது அந்தப் பச்சோந்தி. வண்ணத்துப்பூச்சிகள் சில எம்பிப் பறந்து மறைந்து விட்டன. எறும்புகள் தங்கள் அறுவடையை வெகு சிறப்பாக நகர்த்திக் கொண்டு போய்ப் புற்றுகளில் இருக்கும் களஞ்சியத்தை நிரப்பிக் கொண்டுத் திரும்பவும் அதே பாதையில் சென்றுத் தானியங்களின் பாரங்களை சுமந்து வருகின்றன. அந்தி கொஞ்சம் கொஞ்சமாக இறங்கத் தயாரானது. சூரிய வெளிச்சத்தின் சீறிய செவ்வொளிக் கிளர்ந்து நிலமெங்கும் பரவியது. ஏரி நீர்ப்பரப்பு வண்ணங்களின் கலங்கல்களால் சிதறித் தெறித்தது. சென்னிறம், கருமை, வெண்மை, நீலம், கண்ணாடி நிறம் என அதன் வெவ்வேறான தூரங்களின் அளவைகளில் பிம்பங்களின் வெவ்வேறான நிறங்களை உட்கிரகித்துக் கொண்டு எதிரொளித்தது, ஒட்டு மொத்த ஏரியும் அந்தியைத் தாங்கிக் கொண்டிருந்தது. மேற்கு வானத்தில் ஒரு பெரிய நட்சத்திரம் பொட்டு போல ஒளிர்வு கொண்டது. எந்த வழிப்போக்கற்களும் இல்லை. பாதை வெட்டையாய்க் கிடந்தது. பறவைகளின் தொடர்ச்சியான கிரீச்சிடல். நீரினுள் இன்னும் முழுக்கிட்டுக் கொண்டிருந்தன நீர்க்கோழிகள். அவைகள் தங்கள் கழுத்தை நீட்டி வானத்தைப் பார்த்துக் குழப்பமடைந்தன. கடற்காகம் ஒன்று சிறகுகளை உலர்த்திக் கொண்டு இன்னும் தன் இரை பிடிப்பினை நிறுத்திக் கொள்ளாமல் நீர்மையின் அலையடிப்பில் வட்டமிட்டது. ஒருமித்து அழுத்தம் நிறைந்த பிற்பகல் காற்றும் தங்கள் மூட்டுகளை விடுவித்து ஆசுவாசமாக வீசத் தொடங்கின. சூழல் ரம்மியமாகவும், அழகாகவும் ஆகியது.
இன்னும் கொஞ்ச நேரம் தான். இருட்டி விடும். கடவுளின் கரியப் பெண்குழந்தை வந்து விடுவாள். அவளின் துணைவர்களாக எண்ணிலடங்கா விண்மீன்களால் வானம் முற்றும் நிரம்பிவிடும். அவைகள் வரும் முன்னரே மேரியின் மகனின் அகவானத்தில், எல்லா நட்சத்திரக் கூட்டங்களும் துளிர்த்து மிளிர்ந்து கொண்டிருந்தன.
ஏதோ உலுக்கி விட்டது போல, அவன் பயணத்திற்குத் தயாரானான். ஒரு ஊதுகுழல் சத்தம், யாரோ தன்னை விளிப்பதைப் போல உணர்ந்தான். பின்னாலிருந்து ஒரு வழிப்போக்கன் அவன் பெயரைச் சொல்லிக் கூவி அழைத்துக் கொண்டே வந்தான். தூரத்தில் அந்தி ஒளியில் மங்கலாக ஒரு உருவம் வலுவான ஏதோ ஒரு பாரத்தை, மூட்டையாகத் தூக்கிக் கொண்டு இறக்கத்தில் ஒட்டமும் நடையுமாக அவனை நோக்கி வந்து கொண்டிருந்தது. யாராக இருக்கும் என்று கேட்டுக் கொண்டவன் அந்த வழிப்போக்கனை சரியாக அடையாளம் கண்டறியப் போராடினான். அந்தக் குள்ள மனிதனை எங்கோ பார்த்திருக்கிறோம். வெளுத்த முகமும், தட்டையான ஒடுங்கியத் தாடையும், கற்றையாய் நாடியில் மட்டும் தொங்கும் தாடியும், சிறிய தலைக்கு சம்பந்தமில்லாத பருத்த உடலும், வளைந்து சிறியத் தண்டுகள் போன்றக் கைகளும் அவனைத் தான் முன்னாடியேப் பார்த்திருக்கிறோம் என்று தன் நினைவுகளினுள் போராடினான்.
"சரிதான்! கடைசியில் அவன் இங்கேயே சுற்றிச் சுற்றி வந்து விட்டான், தாமஸ்!" என்ற பெயர் அவனுக்கு இறுதியில் ஞாபகத்திற்கு வந்தது.
ஊரெல்லாம் சுற்றித் திரிந்து வியாபாரம் செய்யும் தாமஸ் மேரியின் மகனை மூச்சிறைக்க அணுகினான். தன் தலையில் இருந்த சம்மாட்டினைத் தரையில் மெதுவாக வைத்தான். நெற்றியிலிருந்து முகம் முழுதும் வழியும் வியர்வையைத் தன் தலைக் குட்டையால் அழுத்தி ஒற்றித் துடைத்தான்.அவனின் தந்திரமான, தெளிவற்றக் கலங்கலான மாறுகண்கள், அவன் உண்மையில் எங்கு யாரைப் பார்க்கிறான் என்ன சொல்ல வருகிறான் என்பதை எப்பொழுதுமே சரியாக யூகிக்க முடியாமல் ரகசியம் போல எதிராளியைக் குழப்பமடையச் செய்யும்.
ஜீசஸுக்கு அவனை ரொம்பப் பிடிக்கும். எப்பொழுதும் தனது மரப்பட்டறைக்கு அவன் வேலையெல்லாம் முடித்துவருவான். அவன் தன் இடுப்பில் ஒரு ஊதுகுழல் வைத்திருப்பான். வியாபாரத்திற்குச் செல்லும் வழியில் அதை ஊதித்தான் மக்களை அழைப்பான். ஒவ்வொரு நாளும் அந்திப் பொழுதில் அவன் பட்டறைக்கு வந்துத் தன் சாக்குப்பையை எடுத்து இருப்புபலகையில் வீசி விட்டு காலை நீட்டி அமர்வான். அன்று அவன் பார்த்தது எல்லாவற்றையும் ஒன்று விடாமல் மேரியின் மகனிடம் சொல்வான். நடந்த சம்பவங்களை, ஆண்களைப் பெண்களை, அவர்களின் அபத்தங்களைப் பரிகாசம் செய்வதும், நையாண்டி செய்வதும் தான் அவனது வாழ்வியல். அவனுக்கு எதிலுமே நம்பிக்கையில்லை. கடவுளோ! சாத்தானோ! மீடபனோ! அற்புதங்களோ! எதிலும் அவனால் நீடித்த நம்பிக்கை வைக்க முடியாது அவனுக்கே உரிய சந்தேகங்களை அவன் எழுப்பிக் கொண்டே இருப்பான். எதிலும் நம்பிக்கையின்மையால் எல்லாவற்றையும் கேலி செய்வான். நம்மை இறைச்சிக்காக வளர்க்கும் குடியானவர் தான் இக்கடவுள் என்பது அவன் சித்தாந்தம். அதனால் அவனைக் குறித்து நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. கடவுளினை எரித்து நறுமணத் தூபமாக்கி, சத்தமாக துதிப்பாடல்கள் பாடி சந்தோசிக்க வேண்டும் அதுதான் ஒரு நல்லப் பிரார்த்தனை! என்பான். அவன் சொல்லிக் கொண்டிருப்பதை ஜீசஸ் உன்னிப்பாகவும் கவனமாகவும் கேட்பது தான் அவனது உள்ளொடுங்கிய இதயத்தின் ஒரே ஆறுதல். இந்த மாதிரி ஒரு போக்கிரித்தனமான நோக்கினால் அவன் எல்லாவற்றையும் தலைகீழாக்கிவிடுகிறான். தனக்கிருக்கும் ஏழ்மையோ, இந்த அடிமை வாழ்வையோ, இல்லை நம் மாறாதக் கவலைகளையோ அவன் தன் பகடியையும் சிரிப்பையும் கொண்டு மடை மாற்றி விடுகிறான். இந்த வாழ்வே ஒரு பெரும் அபத்தம். அது முழுக்கமுழுக்க சிரிப்பதற்கும் பரிகாசம் செய்வதற்கும் மட்டுமே உகந்தது என்பது அவன் எண்ணம்.
தாமசுக்கும் மேரியின் மகனை ரொம்பப் பிடிக்கும். அவன் ஜீசசை ஒரு பாவப்பட்ட ஆட்டினைப் போலப் பாவிக்கின்றான். தன் வாதையிலும், வலியிலும், காயங்களின் வழியாகக் கடவுளைத் தேடுவதின் மூலம் தன் சொந்த நிழலை மறைத்துக் கொள்ளும் இளைஞன் என எண்ணிக் கொள்வான்.
நீ ஒரு ஆடு, மேரியின் மகனே! திரும்பத் திரும்ப அவனைப் பார்க்கும் போதெல்லாம் தாமஸ் சொல்லிக் கொண்டே இளிப்பான். ஆனால் இந்த ஆடு தன்னுள்ளில் ஒரு ஓநாயைக் கொண்டிருக்கிறது. அது எந்தத் தருணத்திலும் அந்த ஆட்டை அடித்துச் சாப்பிடும் என்று சொல்லிக் கொண்டு, தன் ஆடையினுள் மறைத்து எடுத்துவந்த திருட்டு ஆப்பிள்கள், பேரீச்சைகள், மாதுளைகளை அவனுக்கு அன்பளிப்பாக அளிப்பான்.
உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி! மேரியின் மகனின் கைகளைக் கனிவாகப் பிடித்துக் கொண்டு மூச்சைப் பிடித்துக் கூறினான்.
"கடவுள் உன்னை விரும்புவார்" என்று சொல்லிச் சத்தமாகச் சிரித்தான்.
எங்கே போகிறாய்?
மடாலயத்திற்கு, ஏரியினைக் கைத்தூண்டிக் காண்பித்து ஜீசஸ் பதிலுரைத்தான்.
அப்படியென்றால் உன்னைப் பார்த்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி! கொஞ்சம் இங்கே திரும்பி உன் முகத்தைக் காட்டு!
"எதற்காகப் போகிறாய்?"
"கடவுள்----"
எனக்காக ஒரு உதவி செய்வாயா! தாமஸ் வெடிப்பது போல அவனைப் பார்த்து சீறினான். தயவு செய்து கடவுளைப்பற்றி ஆரம்பிக்காதே! எல்லைகளே அற்ற அவனுக்கு எதில் அக்கறை இருக்கப் போகிறது. நீயும் உன் வாழ்நாள் முழுதும் நடக்கிறாய்! இங்கே! பின் அங்கே! தொடர்ச்சியாக அவனைத் தான் தேடிக் கொண்டிருக்கிறாய். ஆனால் அந்த ஆசிர்வதிக்கப்பட்டக் கடவுள் முடிவற்று நழுவிக் கொண்டே இருக்கிறார். அதனால் அவரைப் பற்றியப் பேச்சை மறந்துவிடு. நம்மிடையே உள்ளக் காரியங்களில் அவரைக்கலக்காதே!
இங்கு நம்முடைய பேரம், மனிதனுடன். நேர்மையற்ற, ஏழுமடங்கு புத்திசாலியான மனிதனுடன். நீ செல்வதற்கு முன் இதைச் சொல்ல வேண்டும். அந்த செந்தாடிக்காரன் யூதாஸ், அவனிடம் கவனமாக் இரு. நான் நாசரேத்தை விட்டு வெளியேறும் முன் அவனை அங்கே செத்துப்போன புரட்சியாளனின் அன்னையுடன் பார்த்தேன். அவனுடன் இருந்த பராபஸ்ஸும், இன்னும் சிலர், அவர்களின் சகோதரக்குழுவிலுருந்தவர்களும் உன் பெயரைச் சொல்லி ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். அதனால் நீ மடாலயத்திற்கு இப்போதைக்கு போகாதே! ஜாக்கிரதையாக இருந்து கொள்!
ஜீசஸின் பார்வை நிலத்தில் குத்திட்டிருந்தது.
"எல்லா உயிர்ப்பிறப்புகளும் கடவுளின் கைகளில். அதில் யார் உயிர் வாழ வேண்டும்! யார் கொல்லப்பட வேண்டும் என்பது இறைவனின் விருப்பம். அதனால் நான் செல்லத்தான் போகிறேன். கடவுள் எனக்கு உதவி செய்யட்டும்" என்று எந்த உணர்ச்சியுமற்றுக் கூறினான்.
ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022
கிறுஸ்துவின் கடைசி சபலம் -53
மீனவர் வெடித்துச் சிரித்தார். அவர் சிரிப்பது எதற்கென்று புரியாதது போல செபெதீ, தன் தந்திரக் கண்களால் பார்த்தார்.
"பேசு! மனிதக் கடவுளே! நீ அந்தத் தீர்க்கதரிசி ஜோனா அல்லவா!
முதிய ஜோனாத் தன் தலையை வெறுமனேக் குலுக்கினார். அவருக்குத் தெரிந்து நினைவு கொள்ளும்படியாக அப்படி ஒரு நிகழ்வு ஏதும் நடக்கவில்லை. எந்த ஒரு மீனும் தன்னை இதுவரை விழுங்கவில்லை. ஒரு வேளை பலகாலங்கள் மீன்களுடன் போரிட்டுக் கொண்டிருந்தால் அதற்கு சாத்தியமிருந்திருக்கலாம். நியாபங்களின் எண்ண ஓட்டங்களில், நினைக்கும்படியாக என்ன இருக்குறது என்று தன்னுள் துழாவிக் கொண்டிருந்தார்.
ஆம்! இது அவர்தான்! அவர்தான்! செபெதீ கூட்டத்தைப்பார்த்து அங்குமிங்கும் கண்களை உருட்டிக் கத்தினார். "
வினோதமானச் செய்கைகளைக் கொண்ட இந்தத் தீர்க்கதரிசிகளை உண்மையில் நம்பமுடியாது. அவர்கள் காற்றினில், கடலினில், தீயினுள் மறைந்து காணாமல் போய்விட்டார்களோ என்று நினைக்கும் பொழுது, சடாரென்று கண்முன்னே வந்து நிற்பார்கள். எப்படி நமது புனிதர் எலிஜா சொர்க்கத்திலிருந்து ஒரு ஒளிமழையாய்ப் பூமியில் இறங்கினார். இன்றும் நித்தியனாக நம்மை ஆட்சி செய்கிறார். எந்தப் புனித மலையின் உச்சிக்குச் சென்று அவரை அழைத்தாலும் சரி!, நம் முன்னே அவர் காட்சியளிப்பார், அதே ஒளி ரூபனாக, காற்றாக, மழையாக அவரை நாம் உணர முடியும். அது போலத் தான் எனோச்சும். அவர்கள் அழிவடையாதவர்கள், இறப்பற்றவர்கள். நமது புனிதர் ஜோனாவும் அவர்களைப் போல ஒரு தீர்க்கதரிசிதான் .
ஆனால் ஜோனாவோ எதுவும் விளங்காதது போலப் பாவனை செய்கிறார். ஒரு சாதாரண மீனவன் போலத் தன்னைக் காட்டிக் கொள்கிறார். தான் ஒரு தகப்பன் மட்டுமே என்கிறார். தம் பிள்ளைகளுக்காக வருந்துகிறார். ஆனால் இந்தத் தீர்க்கதரிசிகளை மரியாதையுடனும், கனிவுடன் நடத்தவேண்டும். இல்லையேல் அவர்கள் தங்கள் எதேச்சதிகாரத்தாலும், பிடிவாதக்குணத்தாலும், தங்களைக் கவனிக்காதவர்களுக்கு தக்கப் பாடம் புகுத்திவிடுவார்கள் என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டார் செபெதீ.
"அன்புக்குரிய ஜோனா, நீ யாரைத்தேடுகிறாய் என்று தெரியும். ஜேக்கப்பத்தானே! அவன் வெகுதூரம் பயணப்பட்டக் களைப்பில் வீட்டிற்கு சென்று விட்டான். உன் மகனைப் பற்றி உனக்குத் தெரிய வேண்டுமில்லையா? பீட்டர் அங்கு நலமாக இருக்கிறான் என்று அவன் சொன்னான். ஒன்றும் பயப்படத்தேவையில்லை. கூடிய விரைவில் அவன் இங்கு வந்துவிடுவான். நீங்கள் கவலை கொள்ளாமல் நிம்மதியாக இருக்கும்படியும் சொல்லியிருக்கிறான். நீ நான் சொல்வதைக் கேட்கிறாயா? என்று ஆதுரத்துடன் வினவினார் செபெதீ. அசைவற்று எதிரில் நின்று கொண்டிருந்தார் ஜோனாஹ்.
"யாருக்குத்தெரியும், ஒரு வேளை எதிரில் நிற்கும் இம்மனிதன் ஒரு தீர்க்கதரிசியாக இருக்கக் கூடும்! அதனால் அவனை சிறப்பாகக் கவனித்துக் கொள்ள வேண்டும்" என்று தன் திடமானத் தோள்களைக் குலுக்கிக் கொண்டு புன்முறுவலுடன் ஜோனாவை அணுகினார் செபெதீ!
முதிய ஜோனா, குனிந்து சட்டியிலிருந்த சிறிய சிங்கிறால் துண்டை முழுதாக எடுத்து வாயினுள் திணித்தார். கற முற என்று அதை நொறித்துச் சவைத்து விழுங்கிக் கொண்டார்.
சரி! நான் செல்கிறேன்! என்று அனைவரின் முகங்களைப் பார்த்து சொல்லிக் கொண்டே கண்களைச் சுருக்கி, அவர்களுக்கு முதுகுகாட்டிக் கொண்டு நடந்து சென்றார் மீனவக்கிழவர். திரும்பவும் கூழாங்கற்களில் அவரது அழுத்தம் திருத்தமான காலடிகளின் சப்தம் கேட்டது. ஒரு கடற்காகம் அவர் தலைக்கு மேலே வட்டமிட்டுப் பறந்தது. அவர் தலைமுடிக்குள் எதுவும் இரை மறைந்திருக்கிறதோ என்று நோட்டமிட்டது. அதைக் கவனித்த கிழவர் அண்ணாந்து பார்த்தார். சிறகுகளைப் பட படவென்று அடித்துக் கொண்டு, ஒருக் கம்மலானக் கூவலை விளித்து அங்கிருந்து ஏரியினை நோக்கி வீறிட்டது பறவை.
பார்த்தீர்களா! என் உள்ளுணர்விலிருந்து சொல்கிறேன் நிச்சயமாக இவன் ஒரு தீர்க்கதரிசி தான். பீட்டர் வேறு அவனுக்குத் துணையில்லை. உங்களில் இருவர் அவனுக்கு உதவி செய்யுங்கள். இல்லையேல் நமக்கு என்ன வேண்டுமானாலும் நடந்துவிடலாம். என்று செபெதீ அவர்களுக்கு கட்டளையிட்டார்.
அவர்களில் இருந்த இரு திடமான வாலிபர்கள், எழுந்து ஜோனா போகும் திசை நோக்கிச் செல்ல எத்தனித்தனர். அவர்களுக்கு பயமும் கிண்டலும் ஒரு சேரத் தோன்றியது.
"முதலாளி! உங்களுக்கேத் தெரியும், இந்தத் தீர்க்கதரிசிகளெல்லாம் காட்டுவிலங்குகள் போல. நீண்டு கிடக்கும் நீல வெளியிலிருந்து தங்கள் அகன்ற வாயினைத் திறந்து எங்களை உயிருடன் விழுங்கி விடவும் வாய்ப்புகள் உண்டு. அதனால் என்ன நிகழ்ந்தாலும் நீங்கள் தான் பொறுப்பு. சரி வா! நாம் போகலாம்!"
"போய் வருகிறோம் முதலாளி" என்று சொல்லிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தனர்.
செபெதீ சம்மணமிட்டிருந்தக் கால்களைத் தளர்த்தித் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். எப்படியோ இந்த ஜோனாவை சமாளித்து விட்டோம் என்று உள்ளூர நகைத்தவர், தன் எஞ்சியத் தத்துப்பிள்ளைகளைப் பார்த்து வேலைகளைச் செய்ய உத்தரவிட்டார்.
"ம்ம்! குவிந்து கிடக்கும் மீன்களைக் கூடையில் நிரப்புங்கள். நேரம் ஏற்கனவேக் கடந்து விட்டது. சீக்கிரம்! விரைவாக! என் ஆண் பிள்ளைகளா! கிராமத்திற்கு செல்லும் பொழுது, மிகக்கவனம்! இந்த விவசாயிகள், நாம்! மீனவர்களைப் போல நல்லவர்கள் கிடையாது. தந்திரமாக ஏதாவது சொல்லிக் காரியம் சாதித்துவிடுவார்கள். கவனமாக இருக்கவேண்டும் தெரிந்ததா! எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவாக மீன்களைக் கொடுத்து, எவ்வளவு பேரம் பேசமுடியுமோப் பேசி அவர்களிடமிருந்து நல்ல அளவாகக் கோதுமை, எண்ணெய், திராட்சை ரசம், கோழிகள், முயல்கள் ஆகியவற்றை வாங்கி வரவேண்டும். மிச்சம் இருக்கும் மீன்களையும் பத்திரமாக்த் திரும்பக் கொண்டு வரவேண்டும். என்னப் புரிந்ததா? எதிலும் எந்தக் குறைவுமிருக்கக் கூடாது? என்ன? இரண்டும் இரண்டும் நான்கு!" என்று கள்ளத்தனமாகக் கண் சிமிட்டிக் கொண்டார்.
அவர்களும் விரைவாகக் கூடைகளில் மீன்களை நிரப்பத் தொடங்கினர்.
தூரத்தில் ஒட்டகத்தின் குளம்படிச்சத்தம் கேட்டது. ஒரு இளைஞன் அதில் வேக வேகமாக வந்து கொண்டிருந்தான். முதிய செபெதீ கைகளை நெற்றியில் நிழலாக வைத்துக் கொண்டு கண்கள் கூர்ந்துப் பார்த்தார்.
வருவது நம் ஜானைப் போல இருக்கிறதே! அவன் தானா! பதைபதைப்புடன் கேட்ட அவர் கண்கள் கலங்கின.
அவன் அவர்களுக்கு அருகில் வந்து கொண்டிருந்தான்.
அது அவனே தான்! ஆமாம்! அவனே தான்! மீனவர்களும் கத்தினர். உங்கள் இளையமகன் ஜான் தான் வந்து கொண்டிருக்கிறான்.
ஒட்டகத்தில் அமர்ந்திருந்தவன் மிக அருகில் வந்து அவர்களை வணங்கும் வகையில் நெஞ்சில் கைவைத்தான். பின் மீனவர்களைப் பார்த்து நெற்றியில் விரல்களைக் குவித்து வாழ்த்தினான்.
ஜான்! வார்த்தைகள் வராமல் தடுமாறினக் கிழவருக்கு!
"எங்கு இப்படி அவசரமாகப் போகிறாய்! கொஞ்சம் நில் உன்னை சரியாகப் பார்த்துக் கொள்கிறேன் மகனே! என்று நடுக்கத்துடன் கூறினார்.
"மடாதிபதி இறந்து கொண்டிருக்கிறார், நான் சீக்கிரம் போக வேண்டும், நேரமில்லை"
என்னாயிற்று அவருக்கு?
அவர் உணவுண்ணாமல் பட்டினி கிடக்கிறார். சாக விரும்புகிறார்?
ஏன்? எதற்காக?
ஜான் நிற்காமல் சென்றதால், அவனது வார்த்தைகள் காற்றின் அலைச்சலில் குழறிக் குழறிக் கேட்டது.
ஓடி வந்த முதிய செபெதீ சற்று இறைத்துப் பின் இருமினார். கடவுள் தான், தனது புனிதத்துவத்தால் எங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறி விரக்தியாக உதடுகளைச் சுழித்துக் கொண்டார்.
கிறுஸ்துவின் கடைசி சபலம் -52
முதலாளியும், தொழிலாளர்களும் அன்றைய நாளின் உழைப்பிற்கான சிறந்த அறுவடையாகக் கிடைத்த உணவை சந்தோஷமும், திருப்தியுமாகச் சாபிட்டுக் கொண்டே ஏரியின் கரைச்சதுப்பின் நுரையையும், கலங்கலையும் பார்த்தனர். ஒரு தாயைப் போல அதன் நீர்மையின் குளிர்ச்சி அவர்களை அணைத்துக் கொண்டது. அச்சமயம் சரியாக ஜேக்கப் அங்கு வந்து நின்றான். மீனவர் கூட்டம் அவனுக்கு இடம் கொடுத்துச் சற்றேத் தள்ளி அமர்ந்தனர். வெகுதூரம் நடந்து வந்ததில் முட்டி வரை புழுதி அப்பியிருந்தது. தலைமுடியைக் கைகளால் காற்றின் திசைக்கு சரிசெய்து கொண்டே அவன் செபெதீயை அணுகினான். அவர் மகிழ்ச்சியான மனநிலையிலிருந்தார். வா! என் மூத்தவனே! நீ அதிர்ஷ்டக்காரன் தான்! உட்கார்! முதலில் சாப்பிடு! சரி! என்ன விஷயம் சொல்! என்றார்.
அவன் கீழே அவனது அப்பனைப் பார்த்து அமர்ந்திருந்தான். ஆனால் வெம்மையாய் மீன் மணக்கும் சூப் இருக்கும் சட்டுவத்தை நோக்கி கைகளை நீட்டாமல் அவர்களுக்குள் ஒருத்தனாக வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தான்.
முதிய செபெதீ அவனது முகத்தை ஏறிட்டுப் பார்த்தார். தலையை இல்லை எனப் பாவனை செய்வது போல இங்கும் அங்கும் அசைத்தார். அவனது அமைதியற்ற வெறிக்கண்கள் அவரை அசௌகரியமாக்கியது. அவருக்கு அவனைப் பற்றி நன்றாகத் தெரியும்.
"என்னாயிற்று? உனக்கு பசிக்கவில்லை? ஏன் உன் முகம் இப்படி வெளிறியிருக்கிறது? இந்த நேரத்தில் யாருடன் சண்டை போட்டுக்கொண்டு வந்திருக்கிறாய்? ஜேக்கப்" என்று கலக்கத்துடன் கேட்டார்.
"கடவுள், சாத்தான், மனிதர்கள் எல்லோரிடமும்" ஆத்திரத்துடன் பதிலுறைத்தான் அவன். எனக்குப் பசிக்கவில்லை."
சரிதான்! இவன் சுவையான இந்த சூப்பையும், சூழலையும் கெடுக்கத்தான் வந்திருக்கிறான் என்று நினைத்துக்கொண்டவர். தன் இயல்பான நகைச்சுவை உணர்வை வலுக்கட்டாயமாகத் தருவிக்க முயன்றார். தன் மகனின் தாடையைப் பிடித்து, கனிவாகப் பேசத்தொடங்கினார்.
"ஹேய்! போக்கிரிப்பையா! வரும் வழியில் நீ யார் கூடவெல்லாம் பேசிக் கொண்டு பயணப்பட்டாய்? என்று கண்களை சிமிட்டுக் கொண்டே புன்முறுவலுடன் வினவினார்.
"யார் சொன்னார்கள் உனக்கு?
அப்போ! நம்மிடையேயும் உளவாளிகள் உண்டு! அப்படித்தானே!
நான் யாரிடமும் பேசிக்கொள்ளவில்லை" என்று மறுத்தான்.
எழுந்து ஏரியை நோக்கிச் சென்று, கால் கைகளை நன்றாகக் கழுவத் தொடங்கினான். திரும்பத் தன் குழுவினை நோக்கி வந்தான்.
"எவ்வளவு மகிழ்ச்சியாக இவர்கள் இங்கு உணவு உண்கிறார்கள், ஆனால் அங்கே நாசரேத்தில் உங்களுக்காக நாங்கள் சிலுவையில் அறையப்பட்டுச் சாக வேண்டும்". வெறுப்பும், கோபமும் வரத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டுப் பார்வையை வேறுபக்கம் திருப்பிக்கொண்டான்.
அவர்களைப் பார்ப்பதைத் தவிர்த்து, கிராமத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான். இவர்களின் செய்கைகளை நினைத்து, தனக்குள்ளேயே வாதிட்டுக் கொண்டு ஏதோ காற்றில் செய்கைகள் காண்பித்து முணுமுணுத்துக் கொண்டே சென்றான்.
பின்னாலிருந்து அவன் போவதைப் பார்த்துக் கொண்டிருந்தார் முதிய செபெதீ. என் மகன்கள் என் உடலில் முளைத்த முட்கள். ஒருத்தன் பக்திமான், மென்மையான உறிஞ்சுகுழல்கள் கொண்டவன். இன்னொருத்தன் முரடன், கூர்மையான ஊசிகள் கொண்டவன். இருவரும் அவர்களுக்கான முறையில் என் ரத்தத்தைக் குடிக்கின்றனர். ஒரு உண்மையான மனிதனாய் அவர்கள் ஆகப் போவதேயில்லை. மென்மையும், கடினமும் இணைந்து, சில நேரம் கருணையுடனும், சில நேரம் ஒரு வேட்டை நாய் போலக் குரைத்துக் கொண்டும். மனிதன் அப்படித்தானே இருக்க வேண்டும் தேவதைத்தன்மையும், மிருகத்தன்மையும் ஒருங்கே கொண்டு. ஆனால் அவனுக்குத் தெரிய வேண்டும், சந்தர்ப்பங்களின் பொருட்டு யாரிடம் எதனை வெளிப்படுத்த வேண்டும் என. ஆனால் எனக்கோ இப்படி வாய்த்துவிட்டது. சரி! அது கிடக்கட்டும்! என்று தனக்குள் சொல்லிக்கொண்டவர், அந்தக் கணத்தின் கசப்பினை வெளியேற்ற ஒரு விளமீன் துண்டைச் சட்டியில் இருந்து எடுத்து முகர்ந்தார்.
"நல்லது! நமக்கு இந்த மீன்கள் இருக்கின்றன! எங்களை உருவாக்கிய இந்த ஏரிக்கும், இந்த ஏரியை உருவாக்கிய கடவுளுக்கும் எங்கள் நன்றி!" என்று புசிக்கத் தொடங்கினார்.
தன் குழுவினைப் பார்த்தார் கிழவர்,
"பார்! அங்கே பாறை மேல் அமர்ந்து கொண்டு தன் மகன் ஆன்ட்ரூவை நினைத்து ஜெருசலேமை நோக்கித் தினமும் கண்ணீர் வடிக்கும் ஜோனாவை! அவன் என்ன செய்தான்? பாவம்! அவன் ஒரு உதாரணம் நமக்கு"
"அவர்கள் என்ன சொன்னார்கள், நாங்கள் தீர்க்கதரிசையை கண்டறியும் வழியில் செல்கிறோம். அதன் புனிதவழிகளில் எங்களை ஒப்புவிக்கிறோம் என்றனர். வெறும் வெட்டுக்கிளிகளையும், தேனையும் உண்டு உயிர்வாழ்கின்றனர். அங்கே அப்பாவி மக்களைப் பிடித்து அவர்களின் பாவங்களைக் கழுவுகிறேன் என ஜோர்டான் நதியில் முழுக்கிடுகின்றனர்"
"ஆனால் நாம் என்ன சொன்னோம்! பிள்ளைகள் நம் சந்ததிகள். நமக்கான வழித்தோன்றல்கள். நம் செழிப்பினையும் ,உழைப்பினையும் கடத்திச்செல்ல வேண்டியவர்கள். "
"அடேய்! இன்னும் திராட்சை ரசம் முடியவில்லை, அந்த பூசணிக்காய் கூட்டை எடுத்துவை" எனக்குப் பேச இன்னும் கொஞ்சம் வலு வேண்டும்."
கூழாங்கற்களை ஆழமாக மிதித்து அருகில் வரும் தப்படிகளை அனைவரும் ஒருங்கேக் கேட்டனர். முதிய செபெதீ திரும்பிப் பார்த்தார். மெதுவாக அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தார் ஜோனா.
வா! ஜோனா! அவன் ஒரு நல்லவன்! உங்களுக்குத்தெரியுமா! என்று குழுவைப் பார்த்து கைகளை ஆட்டினார். தன் தாடியைத் துடைத்துக்கொண்டு மரியாதையுடன் அவரை அருகில் அமரச்சொன்னார் செபெதீ.
"என் பிள்ளைகளுடன் இப்போதுதான் விளமீன்களால் செய்த இந்த அருமையான சூப்பை அருந்தத் தொடங்கினேன், வா! வந்து கொஞ்சம் சுவைத்துப்பார்!, வேறு என்ன, உன் மகன் புனித ஆண்ட்ரூவைப் பற்றி செய்திகள் ஏதும் உண்டா?
குட்டையான, பருமனான தேகம் குலுங்க, வெற்றுக் காலுடன், சூரியனிற்கு கீழே எரிய அவர்களுக்கு முன்னே வந்து நின்றார் அம்முதிய மீனவர். நன்கு பழுத்தப் பூனைக் கண்கள், தலைமுடி மொத்தமும் நரைபூத்து வெளுத்திருந்தது. கைகளில் சுருக்கங்கள் அடர்ந்தும், தாடைச்சதை கழுத்து வரைத் தொங்கியதால், கழுத்தே இல்லாதது போலும் தோன்றியது. வெயிலில் காய்ந்து காய்ந்து மரத்துத் திடமாக இருந்தது தேகம். வந்து நின்றவர் ஒவ்வொருத்தர் முகங்களாகப் பார்த்தார்.
"யாரைத்தேடுகிறாய்! ஜோனா! இல்லை, நீயும் பேசமுடியாமல் சோர்வடைந்துவிட்டாயா?" என்று கேட்டார் செபெதீ.
செபெதீத் தன்னைக் கவனித்தார். கால்களுக்கடியில் தின்றுப்போட்ட மீன் முட்கள், பாசிகள், எஞ்சிய மீன் சதைத்துணுக்குகள் கிடந்தன. இன்னும் மீனை வாயில் சவைத்துக் குதப்பிக் கொண்டும், சப்பிக் கொண்டும் இருந்தார். அவருக்கு சிரிக்க வேண்டும் எனத் தோன்றியது. ஆனால் ஏதோ வேகத்தில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார். சந்தேகத்துடன் ஜீரவேகத்தில், சற்று பயத்துடனும் எதிரில் நிற்கும் ஜோனாவை வரவேற்கும் வண்ணம் தன் கைகளைக் குவித்து, அவர் தன் அருகில் அமருவதற்காக சற்று விலகி அமர்ந்தார்.
பேசு! ஒரு தீர்க்கதரிசியைப் போல பேசு! ஜோனா!, இருந்த இடத்திலேயேக் குதித்து வந்து முதிய மீனவரின் முழங்கால்களைப் பிடித்து அமரும் படி செய்கை செய்தார். இத்தனை காலம் எங்களுடன் இருந்தும், நீ உன்னை வெளிக்காட்டியதே இல்லை. நான் உன்னிடம் விரும்பி வேண்டுகிறேன், கடவுளின் பெயரால் தயவுசெய்து பேசு!. நான் ஒரு முறை புனிதர் ஜோனாவின் கதையை நமது மடத்தின் அருளாளர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஒரு முறை ஒரு பெரிய சுறா மீன் புனிதர் ஜோனாவை விழுங்கிவிட்டது. ஆனால் பின் அந்த சுறா மீன் அதன் வயிற்றிலிருந்து அவரை உயிருடன் வெளித்தள்ளியது. அதனால் கடவுளே எனக்கு உதவும், அந்த அருளாளர் விளக்கிய அந்த ஜோனாவைப் போலத்தான் இவனும் இருக்கிறான். பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அவரின் வாயிலிருந்த பாசியைத் துப்பினார். அது எச்சிலுடன் அவர் மார்பில் ஒட்டிக் கொண்டிருந்தது. ஒரு எச்சரிக்கையானத் தந்திரமானப் பார்வை செபெதீயிடம் மிளிர்ந்தது. கிழவரின் தாடிக்குள்ளிருந்த கொடுக்குகள் வெளித்தெரிவது போலத் தோன்றியது அந்த முதிய மீனவருக்கு. அதை அவரின் கண்களைப் பார்த்தே அறிந்து கொண்ட செபெதீ, எதற்கும் அலட்டிக்கொள்ளாமல் தொடர்ந்து பேசினார்.
"அது ஒன்றும் பெரிய குற்றமில்லை, ஜோனா! நான் வேண்டுமென்றால் பந்தயம் கட்டுகிறேன், உன் தாடிக்குள்ளும் இதே போல கொடுக்குகள் இருக்கும்" அதனால் பேசு!" என்றார்.
கிறுஸ்துவின் கடைசி சபலம் -51
அடக்கமுடியாமல் பெருமூச்சுகளிட்டுக்கொண்டே வந்தான் மேரியின் மகன். அவனால் உண்மையில் தாங்கமுடியவில்லை என்பது அவன் உடல்மொழியைப் பார்த்தாலே புரிந்துவிடும்.
"அவர்கள் பசியால் சாகாமலிருக்கப் பட்டினி கிடந்து சாவதற்கு ஒருவன் தயாராக இருப்பின், அப்படியொரு தீர்வு இதற்கிருக்கக் கூடாதா" அவன் அழுதுகொண்டே விட்டு விட்டு மூச்சிழுத்து சொன்னான்.
ஜேக்கப் தன் ஓரக்கண்களால் அவனை ஏளனமாய்ப் பார்த்தான். உன்னால் ஒரு கோதுமையாக மாற முடிந்தால் உன்னை உண்டு அவர்கள் பசியாற நீ சம்மதிப்பாயா என்ன? என்று அலட்சியமாகக் கேட்டான்.
யார் செய்ய மாட்டார்கள்? என்றான் மேரியின் மகன்.
ஜேக்கப் தன் கூர்மையானக் கண்களை உருட்டி ஜீசஸை உற்றுப் பார்த்தான்.
"நான்", அவன் பதிலளித்தான்.
மேரியின் மகன் எதுவும் சொல்லவில்லை. ஜேக்கப் அவனை புண்படுத்தும் வகையில் தொடர்ந்தான். எதற்காக நான் அழிந்துபோக வேண்டும். கடவுள்தானே இந்தப் பெருவெள்ளத்தை அனுப்பினார். நான் இதில் என்னத் தவறு செய்தேன். கோபமாக வானத்தைப் பார்த்தான். எதற்கு கடவுள் இதைச்செய்தார்? அவரின் நோக்கம் தான் என்ன? இந்த மக்கள் தான் என்ன பாவம் செய்து விட்டனே? எனக்கு ஒன்றும் புரியவில்லை. உனக்கு? மேரியின் மகனைப் பார்த்து ஜேக்கப் சீறினான்.
எதையும் கேட்காதே? என் சகோதரா! அது பாவம்.
சில நாட்களுக்கு முன்பு நானும் இப்படித்தான் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் இப்பொழுது எனக்கு புரிகிறது. எப்படி அந்த நாகம் முதன் முதலாக, ஒரு மனிதஉயிரைப் பிளவு படுத்திக் கடவுளின் கோபத்திற்கு ஆளாக்கி, காலாகாலத்திற்கும் பூமியில் சதா கேள்விகளுடன் உழல விட்டதோ, அதேதான்.
அதனால் என்னிடம் கேள்விகளில்லை! என்றான் மேரியின் மகன்.
"அப்படியென்றால்? எனக்குப்புரியவில்லை"
"கேள்விகள் கேட்பது"
"எனக்கு ஒன்றும் புரியவில்லை, என்று சொல்லிக் கொண்டு விரைவாக செல்லத்தொடங்கினான் செபெதீயின் மகன்.
அவன் சிலுவை செய்பவனின் துணையை விரும்பவில்லை. அவனது சொற்களின் பாரம் அவனுக்கு தாங்கவொன்னாததாக இருந்தது. அவனின் அமைதியோ அதைவிட அதிகமாக அவனை சித்ரவதை செய்தது.
ஒரு மேட்டுப் பகுதியைக் கடந்து அவர்கள் நோக்கினர். சிறிது தூரத்தில் நீல வெளியாய் ஜென்னசரேட் அலையிடுகிறது. வானத்தின் கதிர்கள் அதில் முட்டி மோதி நீர்மையின் மினுக்கம் சிமிட்டுகிறது. படகுகள் நடு ஏரியில் நிலையிட்டிருந்தன. மீன்பிடிப்பு ஏற்கனவேத் தொடங்கிவிட்ட்டது. அவர்களின் நிலைத்த பெரிய வலைகளின் மிதவைகளின், சென்னிறங்கள் அங்காங்கே நீர்க்குமிழிகள் போலத் தென்படுகின்றன. பாறைகளில் பறவைகளின் கிரீச்சிடல். அதன் ஓரத்தில் சூரிய ஒளியின் செம்மஞ்சள் ஒளியில், கிராமத்தின் பெரிய சந்தைப்பகுதி தெளிவாகத் தெரிந்தது.
ஜேக்கப் தங்களின் படகுகளை அடையாளம் கண்டுகொண்டான். அவன் மனது முழுதும் மீன்கள் தங்கு தடையின்றி நிரம்பின. அவன் தாங்கமுடியாத துணையாக அருகில் நின்று கொண்டிருந்த மேரியின் மகனைப் பார்த்தான்.
"எங்கே நீ போகிறாய், ஜீசஸ், அதோ அங்கு கார்பெர்னம் நகரத்தின் சந்தைப்பகுதி தெரிகிறது" என்றான்.
அவன் தலைதாழ்த்தி ஜேக்கப்பிடம் விடைபெறத் தயாரானான். தான் மடாலயத்திற்கு சென்று துறவியாகப் போகிறேன் என்று அவனிடம் சொல்ல ஜீசஸிற்கு குறைச்சலாக இருந்தது.
ஜேக்கப் வெறுமனே தலையை அசைத்துக் கொண்டான். அதைக் கேட்காமல் அவனால் இருக்க முடியவில்லை.
"நீ எப்படியும் சொல்ல மாட்டாய். ஏதோ ரகசியத்தை மறைத்துக் கொண்டிருக்கிறாய். ம்ம்! போ! போ!" என்றவன் ஜீசஸின் கைகளை வலுவாக அழுத்திப் பிடித்தான்.
"சொல்!, யார் உன்னை அனுப்பியது" என்று கடுமையான குரலில் அதற்றினான்.
மேரியின் மகன் மூச்சிறைத்தான். "எனக்குத் தெரியாது, எனக்குத் தெரியாது" ஒரு வேளை அது கடவுளாக இருக்கலாம், இல்லை...
அவன் தயங்கினான். உண்மையில் பயமாகவும் இருந்தது. "ஒருவேளை சாத்தானினால் அனுப்பப்பட்டவனாகத் தான் இருந்தால்" என்று நினைத்தவன், எதுவும் சொல்லாமல் கைகளை உதறினான்.
ஆம்! அதேதான்! இவன் அந்த ரோமானியப் படைத்தலைவன் அனுப்பிவைத்த உளவாளியாகத்தான் இருக்க வேண்டும். புதிதாகக் கிளர்ச்சியாளர்கள் மலைகளிலிருந்தும், பாலைவனத்திலிருந்தும் கிராமங்களுக்குள் இறங்கியிருப்பதை அறிந்துகொண்டு, இவன் மக்களோடு மக்களாகப் பழகி, அவர்களிடம் சுதந்திரம், புரட்சி என்று மழுப்பலாகப் பேசி உண்மைகளைக் கறந்து விடுகிறான். எங்களின் திட்டங்களைத் தெரிந்து கொள்ளும் நோக்கில் , அந்த ரத்தம் உறிஞ்சும் ரோமப் பிசாசுகளின் கைப்பாவையாக இவன் இங்கு நகரங்களிலும், கிராமங்களிலும் சந்தேகம் வராத வகையில் நடமாடுகிறான். இந்த யூதப் பிறப்பு, சிலுவை செய்யும் இழிமகன் நிச்சயமாக அவர்களின் உளவாளிகளில் ஒருவன் தான். என்று தன்னுள் உறுதிப்படுத்திக் கொண்டான் ஜேக்கப்.
ஜேக்கப்பின் நெற்றிச்சுருக்கங்கள் முடிச்சிட்டன. இமைகளை உயர்த்தி ஜீசசை ஏறிட்டு நோக்கினான்.
"கேள்! தச்சனின் மகனே, இங்கே நாம் பிரிந்துக் கொள்வோம், உனக்கு ஒரு வேளை தெரியாமல் இருக்கலாம் எதனுள் நீ தலை விட்டிருக்கிறாய் என்று. ஆனால் எனக்குத்தெரியும். இப்போது நீ போ! ஆனால் இது நிச்சயமாக நமது கடைசி சந்திப்பாக இருக்காது. நம் பாதைகளில் எப்படியும் நீ என்னைக் காண்பாய். இதுவரை நீ என்னுடன் துணைக்கு வந்தாய். அது விஷயமில்லை. நான் உன்னைப் பின் தொடர்ந்தேன். எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் பாதிப்பு என்னவோ உனக்குத்தான் நேரப்போகிறது. அதைத்தான் நான் சொல்லவந்தேன். நீ தேர்ந்தெடுத்திருக்கும் இப்பாதை அபாயகரமானது. எப்படியும் நீ உயிரோடு மீளப்போவதில்லை. என்று சொன்னவன் சிறிதும் தாமதியாமல், திரும்பிக்கூடப் பார்க்காமல் அங்கிருந்து ஏரியை நோக்கி ஓடிக் கொண்டிருந்தான்.
செபெதீயின் தத்துப்பிள்ளைகள், ஒரு அகன்ற செம்புப் பாத்திரத்தில் உணவு தயாரித்துக் கொண்டிருந்தனர். சூப் தயாராகியிருந்தது. சுற்றி வட்டம்போட்டு உட்கார்ந்திருந்தவர்களில், முதிய மீனவன் தன் கரண்டியைப் பாத்திரத்தில் துழாவி இருப்பதிலேயே பெரிய மீனை எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தான். சட்டென்று நிறுத்தியவனுக்குத் தான் பிரார்த்தனை செய்ய மறந்துவிட்டோம் என்ற நியாபகம் அப்பொழுதுதான் வந்தது.
உணவைச் சவைத்துக் கொண்டிருந்த முதிய செபெதீ, தன் மரக்கரண்டியை உயர்த்திப் பிடித்து இஸ்ரவேலத்தின் கடவுளுக்கு நன்றி தெரிவித்தார். மீன்களையும், தானியங்களையும், திராட்சை மதுவினையும், என்ணெயையும் குறைவின்றி இந்த எபிரேயச் சந்ததிகளுக்கு அளித்துக்கொண்டே இருக்கும் கருணையின் தேவனே உனக்கு நன்றி! எங்களின் மீட்பனின் வருகையின் நாள் வரைத் தாங்குவதற்கும், உழைப்பதற்குமான வலுவினை அளித்து, எங்களை பசியின்றி வாழவைக்கும் கடவுளே உனக்கு நன்றி!. நம் மெசியாவின் வருகையால் நம் எதிரிகள் அனைவரும் தவிடு பொடியாவார்கள். உலகமே இஸ்ரவேலத்தின் காலடியில் வீழும். எல்லாக் கடவுளர்களும் இஸ்ரவேலத்தின் ஒரே தெய்வத்திடம் மண்டியிட்டு வணங்கும். ஆம்! அதற்காகத்தான் நாம் உண்கிறோம். அதற்காகத்தான் நாம் திருமணம் செய்து பிள்ளைகள் பெறுகிறோம். அதற்காகத்தான் நாம் உயிர்வாழ்கிறோம். எல்லாம் உன் கருணையும் மாட்சிமையும் இறைவா! சொல்லி முடித்து ஒரு முழு மீனை அப்படியே விழுங்கினார் முதியவர்.
கிறுஸ்துவின் கடைசி சபலம் -50
உலர்த்திக்கிடந்த வலைகளை மீனவர்கள் தங்கள் தோள்களில் ஏற்றியதும், காலைப்பொழுது ஏரியில் இறங்கி முழுக்கிடுவதும் சரியாக இருந்தது. பகல் வெளிச்சம் மங்கிக் கொண்டு வருகிறது. இன்னும் சற்றுத் தொலைவில் காத்துக்கொண்டிருக்கும் அந்தியின் கரங்களை உசாவிக்கொள்ளத் தயாராவது போல, சூரியனின் கதிர்கள் சாய்ந்து வீழ்கின்றன. மேரியின் மகன் ஜேக்கப்புடன் பயணம் செய்கிறான். அவர்கள் மாக்தலாவைக் கடந்து வந்து கொண்டிருந்தார்கள். வழியில் பெண்கள் வயல்வெளிகளில் நிலத்தில் சிதறிக் கிடக்கும் எஞ்சியத் தானியங்களைப் பொறுக்க அவர்களும் நின்று உதவி செய்தும், பின் அங்கிருந்து தொடர்ந்து பயணித்தும் வந்து கொண்டிருந்தனர். மூடுபனியின் குளிரில் விரைத்த ஜேக்கப்பின் உடல் அப்போதுதான் சகஜ நிலைமைக்கு மாறியிருந்தது. அவன் மாக்தலேவாவில் ஒரு நண்பனின் வீட்டில் முந்தைய இரவுத் தங்கியிருந்து விடியற்காலையிலேயே பயணத்தைத் தொடங்கியிருந்தான்.
தள்ளாடித் தள்ளாடித் தரையைத் தேய்த்து மெதுவாக நடந்துவந்தவன், எப்படியாவது ஜென்னசரேட்டை அடைந்து விட வேண்டும் என்றக் கவலையுடன் பயணித்துக் கொண்டிருந்தான். முந்தைய நாள் நாசரேத்தில் நிகழ்ந்த அனைத்தும் அவனைக் கடந்திருந்தது. அதன் கசப்பை விழுங்கித்துப்பியும் விட்டான். ஒரு பழைய ஞாபகமாக வெகு சீக்கிரமே மாண்ட புரட்சியாளன் மாறிப்போனான். திரும்பவும் தன் சாதாரண தினசரி வாழ்க்கைக்குள் மூழ்கி விட நினைத்தான். தந்தை செபெதீயும் அவர் படகுகளும், மீனவ அடிமைகளும் அவன் நினைவில் வந்து போயினர். மழையில் ஆங்காங்கே உருவாகியிருந்த குழிகளைப் பாதி இருட்டில் கவனமாகத் தாண்டி வந்து கொண்டிருந்தான். மரங்களின் கிளைகள் காற்றில் மெதுவாக அசைந்து கொண்டிருந்தன. தலைக்கு மேலே வானத்தின் சிறகடிப்புகள். தூய நீல வானம் பொலிந்து வியாபிக்கத் தொடங்கியது. காற்றின் திசைகளில் ஏரியை நோக்கி பறவைகள் வலசை சென்று கொண்டிருந்தன. மொத்தத்தில் நிதானமான அமைதியான நாளாக இன்றிருக்கும் என வேண்டிக் கொண்டான். ஆனால் வெளிச்சம் ஏற ஏற, இரவில் மழை வெள்ளம் எப்படி நிலமெங்கும் சேதப்படுத்தியிருக்கிறது என்பது அவனுக்கு விளங்கியது. கொத்து கொத்தாக அறுவடைக்காக காத்திருந்த பயிர்கள் அழிந்து சாலைகளிலும், குட்டைகளிலும், சேற்றுப்பரப்பிலும் சிதைந்து கிடக்கிறது என்பதைப் பார்த்துக் கொண்டே வந்தான். விவசாயிகளின், அவர்களின் மனைவிகளின் புலம்பல்கள் தான் முதலில் அவன் காதில் விழுந்தன. தூரத்தில் உழவு நிலத்தில், சதுப்பில் அவர்களுடன் குனிந்து எஞ்சியிருக்கும் தானியங்களைப் பொறுக்கிக் கொண்டிருக்கும் மேரியின் மகனை அதிர்ச்சியுடன் பார்த்தான் ஜேக்கப்.
அவன் கைகளில் இருந்த கவைக்கோலை இறுக்கமாகப் பிடித்து அடிக்கும் பாங்கில் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தான். நாசரேத் திரும்பவும் அவன் எண்ணங்களில் சுழலிட்டது. சிலுவை, புரட்சியாளன், அவன் வலியின் முணகல்கள், ரத்தம் எல்லாம் சேர்ந்து அவனைக் கிறக்கியது. எதிரில் சிலுவைசெய்பவன் நிற்கிறான். எந்த பாவமுமற்று மக்களோடு மக்களாக அவன் உழவு நிலத்தில் நிற்பது எதுவுமே பொருந்தா வண்ணம் இருந்தது. கோபமும் வெறுப்பும் அப்பிக் கொண்டது. அருவருக்கத்தக்க, அடித்துக் கொல்ல வேண்டிய ஒருத்தன் அமைதியாக இங்கு என்ன செய்து கொண்டிருக்கான். பாவிப்பயல்! என்ன தைரியம் அவனுக்கு! இங்கு வந்துத் தன் பாவங்களைக் கழுவிக் கொள்ள இடம் தேடுகிறானா என்று அங்கலாய்த்தான். தன் தந்தையின் அத்தனைக் குணங்களும் ஒரு சேர அவனில் திரண்டன. அவன் தாய் சலோமி ஒரு புனிதவதி. அவ்ளைப் போலவோ இல்லை தன் தம்பி ஜானைப் போலவோ எந்தப் பொறுமையும், இரக்கமும் அவனிடமில்லை. வேகமாக கம்பை நீட்டிக் கொண்டு அவனை அடிப்பதற்காக வயல் நிலத்தில் பாய்ந்தான் ஜேக்கப்.
சரியாக அதே தருணத்தில் இன்னும் கன்னங்கள் வழியே வடியும் கண்ணீருடன் மேரியின் மகன் தன் பயணத்தைத் தொடரும் வகையில் திரும்பிச் சாலையை நோக்கி வந்து கொண்டிருந்தான். இரு முதியபெண்கள் அவனைப் பிடித்துக் கொண்டு, கைகளில் ஆழமாக முத்தமிட்டனர். ஒரு வழிப்போக்கனாக அவர்களுக்கு ஆறுதல் சொல்ல அவனிடம் எந்த வார்த்தைகளுமில்லை, தன் கண்ணீரைத் தவிர. அவர்கள் முத்தமிடும் பொழுதுகூடத் தன்னைக் குறுக்கிக் கொள்ளத்தான் முடிந்தது அவனால். ஒரு அருவருக்கத்தக்க ஜந்துவைக் கூட இவர்கள் ஒதுக்கி விடாமல் இத்தனை அன்பைத் தருகிறார்களே என்று அதிர்ச்சிதான் அடைந்தானே தவிர, அவனது செய்கைகளுக்கு அவன் எவ்வகையிலும் பெருமை கொண்டிருக்கவில்லை.
"அழாதீர்கள், அழாதீர்கள்! நான் நிச்சயம் திரும்ப வருவேன்! என்று சொல்லிக்கொண்டே தன் கைகளை அம்முதிய உள்ளங்கைகளிலிருந்து விடுவித்தான்.
உண்மையில் ஜேக்கப்பிற்கு ஆச்சர்யமும் திகைப்புமாக இருந்தது. அவன் வரும் வழியிலேயே நின்று கொண்டு பார்த்தான். சிலுவை செய்பவன் ஒருவித ஒளிர்வில் இருப்பதைப் போல இருந்தது. அவனது பொலிவுறும் முகத்தில் கலங்கியக் கண்கள் மிளிர்ந்தன. வானிற்கும் பூமிக்கும் சொந்தமானவன் போல இருந்தது அவனது மிதக்கும் நடை. வயலில் இன்னும் குடியானவர்கள் குனிந்து நிலத்தில் தானியங்களைப் பொறுக்கிக் கொண்டிருந்தார்கள்.
இவன் தானா அந்த சிலுவை செய்பவன்! தச்சன் மகன்! ஆனால் இவனின் தோற்றமும், ஒளிர்வும் பார்ப்பதற்கு தீர்க்கதரிசி எலிஜாவினைப் போல இருக்கிறான். ஜேக்கப் தனக்குள் சொல்லிக்கொண்டான்.
மேரியின் மகன் வயலின் வரப்பைத் தாண்டிக் குதித்து வந்தான். எதிரே ஜேக்கப்பை அடையாளம் கண்டுகொண்டவன், தன் நெஞ்சில் கைவைத்து, கண்களை ஒரு கணம் மூடி அவனுக்கு வணக்கங்களைத் தெரிவித்தான்.
எங்கே செல்கிறாய், மேரியின் மகனே! ஜேக்கப் வினவினான். பதிலை எதிர்பார்க்காமல், நாம் சேர்ந்து செல்வோம். பாதையோ நீண்டது, பயணமோ துணை ஒன்றை எதிர்பார்க்கிறது"
சேர்ந்தே செல்வோம் என்று சொல்லிக் கொண்டே இருவரும் இணைந்து கார்பெர்னம் நோக்கி செல்லும் பிராதானப் பாதையில் நடையிடத் தொடங்கினர்.
அவர்கள் தங்களுக்குள் எதுவும் பேசாமல் போய்க்கொண்டிருந்தனர். வழியெல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாக, வயல் வெளியெங்கும் தானியங்களைப் பொறுக்குவதும், புலம்புவதும், பிலாக்கணம் செய்வதும், தங்களுக்குள் வாதிட்டு கூச்சலிட்டுக் கொள்வதுமாய் இருந்தனர். அவர்களின் ஒரு வருட உழைப்பும் மண்ணோடு மண்ணாகப் போன துக்கம் அவர்களைத் திரும்பத் திரும்ப எரிச்சலூட்டியது. யாரை சபிக்க! யாரிடம் மன்றாட! என்று எதுவும் அறியாமல் தங்கள் நிலங்களில் புரள்வது மட்டுமே அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது.
கிறுஸ்துவின் கடைசி சபலம் -49
மனிதர்களையா?
பிறகு, ஆடுகளையாக் கொல்லச்சொல்கிறேன்.
நான் இதுவரை எந்த மனிதனையும் கொன்றதில்லை. ஆனால் என்னால் கொல்ல முடியும். கடந்த மாதம் ஒரு எருதை என் கையாலேயே தான் கொன்று, அதன் தோலை உரித்து இறைச்சியை எடுத்தேன்.
எங்களுடன் வா! ஒரு மனிதனைக் கொல்வது அதனைக் காட்டிலும் வெகு எளிது என்று உனக்குக் காட்டுகிறேன்.
பிலிப்பின் குரல் நடுங்கியது. நீ, புரட்சியாளர்களில் ஒருவனா? பதறிய முகத்தில் வியர்வை வழிந்தது. அவன் அவர்களைப் பற்றி ஏற்கனவே தெரிந்து வைத்திருந்தான். சகோதரத்துவம் என்ற பெயரில் அந்தத் தீவிரவாதக் கூட்டம் செயல்படுகிறது. புனிதக் கொலையாளிகள் என்று மக்களால் அவர்கள் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் ஹெர்மான் மலையிலிருந்து கீழே சாக்கடல் வரை எதிராளிகள் அனைவரையும் அச்சுறுத்துகின்றனர். இன்னும் தெற்கே இதுமியாவின் பாலை நிலம் வரை அவர்கள் தங்கள் போராளிகளை, உளவு பார்க்கவும், எதிரிகளைத்தீர்த்துக் கட்டவும் மக்களோடு மக்களாகப் பதுங்கி நோட்டமிடுகின்றனர். எதிரிகளுக்கு அவர்கள் தலை வணங்குவதில்லை. நமக்கிருப்பதோ ஒரே ஒரு கடவுள்! யூதர்களின் தெய்வம்! அவரின் புனிதச்சட்டங்களுக்கு அடிபணியாத எல்லா யூதர்களையும் கொல்லவேண்டும். கடவுளின் எதிரியாகிய ரோமானியர்களுடன் அணுக்கம் கொள்ளும், அவர்களுடன் இயைந்து பழகுபவர்களையும், வேலை செய்பவர்களையும், பாரபட்சமின்றிக் கொல்லத்தான் வேண்டும். மெசியா வருகின்ற பாதையில் எந்தத் தடையும் இருக்கக் கூடாது. நாங்கள் கொலைகளின் மூலம் உலகைத் தூய்மைப் படுத்துகிறோம். தெருக்களின் வழிப்பாதைகளை அவனுக்காகத் திறந்து வைத்துக் காத்திருக்கிறோம். அவன் வந்து கொண்டிருக்கிறான் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ளனர்.
அவர்கள் கிராமங்களிலும், நகரங்களிலும் பகலின் பெரும் பொழுதுகளில் ஒரு வேட்டை நாய் போல உலாவுகின்றனர். யாரிடமும் எந்த பச்சாதபமுமில்லை அவர்களுக்கு. எந்த ஒரு நம்பிக்கை துரோகம் செய்கின்ற யூதனையும், தங்கள் ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் ரோமானியர்களையும் அவர்கள் கொல்வதற்குத் தயங்குவதில்லை. நிலச்சுவான்தார்கள், பாதிரியார்கள், பிஷப்புகள் எல்லோரும் அவர்களின் பெயரில், தங்கள் உயிரைக் கையில் பிடித்துகொண்டு நடங்குகிறார்கள். அவர்கள் தங்கள் விசுவாசமின்மைக்காக, சொந்த நிலத்தை அடகு வைத்ததற்காக, இவர்களுக்கு எதிராக, ரோமன் படைகளில் புகார் செய்து அவர்களைக் காட்டிக் கொடுத்ததற்காக என்று கொன்று புதைக்கப்பட்டனர். படுகொலைகள் அங்காங்கே அவ்வப்பொழுது, தேவைப்படும் கால இடைவெளிகளில் நடந்தேறிய வண்ணம் இருந்தது. யூதர்களின் ரத்தப்பெருக்கு ஒரு ஆறாக நிலமெங்கும் வழி தேடி ஓடிக் கொண்டிருந்தது.
நீயும் அந்தக் கிளர்ச்சியாளர்களில் ஒருவனா? பிலிப் தாழ்ந்தக் குரலில் அவனிடம் கேட்டான்.
பயப்படுகிறாயா? என் பெருமை மிகு நண்பா! செந்தாடிக்காரன் வெறுப்புடன் பற்களைக் காட்டிச் சிரித்தான். என்ன எச்சரிக்கைக் கொள்கிறாயா? புனித ஆடே! நாங்கள் ஒன்றும் கொலைகாரர்களல்ல. நம் விடுதலைக்காகப் போராடும் போராளிகள். நம் கடவுளின் சங்கிலிகளை உடைத்தெறிய, நம் ஆன்மாக்களைக் கட்டுண்டிருக்கும் பிணைகளை முறித்து வெளியேற்ற வந்திருக்கிறோம். எழு ஆண்மகனே! உனக்கானத் தருணம் இது, நீ ஒரு ஆண் என நிரூபிக்க! வா! எங்களுடன் இணைந்து கொள்.
ஆனால் பிலிப்பின் பார்வைத் தரையில் குத்திட்டிருந்தது. யூதாசின் தங்குதடையற்றுப் பீறிடும் முழக்கங்களிலிருந்து அவன் தன்னை விலக்க முயற்சித்துக் கொண்டிருந்தான். பெருமை மிகுக் கோஷங்கள் எல்லாம் சரிதான். அதை நாம் நம் நண்பனுடன் அமர்ந்து நன்றாகச் சாப்பிட்டுக், குடித்து ஓய்வாகப் பேசிக் கொள்ளும் போது, "நான் செய்கிறேன், உனக்கு என்னவென்று காட்டுகிறேன் பார்!"என்று முஷ்டியை மடக்கிக் கத்தும் பொழுது உண்மையில் சுகமாக இருக்கும். அரிப்பினைச் சொரிந்து கொள்வதைப் போல. ஆனால், ஆனால்...அதன் கடுமையானப் பாதைகளில் செல்லும் துணிச்சல்! அதுதான்! அப்பொழுது, அகம் பாதுகாப்பாக இரு! எதைப்பற்றியும் அதிகம் சிந்திக்காதே! உண்மையில் சாவைப் பற்றியும், கொல்வதைப் பற்றி எண்ணும் பொழுது, பின் வாங்குகிறது. அழிவினை நெருங்கும் பொழுதுதான் சொந்த அகம் தான் யார் என்று காட்டுகிறதோ என்னவோ!
யூதாஸ் அவனைக் கண்ணுக்குக் கண் நேரடியாகப் பார்த்து நிமிர்ந்து நின்றான். தன் கைகளால் அவன் தோள்களைத் தழுவிக் கொண்டு மெல்லியக் குரலில் பேச ஆரம்பித்தான்.
மனிதனின் வாழ்வு என்பது என்ன? அதற்கு என்ன அர்த்தம் இருக்கிறது? அவன் கட்டுண்டு கிடந்தால். நாம் அதனை விடுவிக்க வேண்டும். அதற்கே போராடுகிறோம். நான் சொல்கிறேன். நீ எங்களுடன் இணைந்து கொள்.
பிலிப் இன்னும் அமைதியாக நின்றுகொண்டிருந்தான். யூதாசின் வலுவானக் கைகள் அவன் தோள்களில் தான் இன்னும் இருந்தது.
நீ ஒரு மனிதன். நீயே முடிவெடு! உன்னிடம் கத்தி இருக்கிறதா?
ஆமாம்.
எப்பொழுதும் அதை உன்னிடம் வைத்துக் கொள். எந்தத் தருணத்திலும் அது உனக்குத் தேவைப்படலாம். நாம் மிகக்கடுமையான நாட்களைக் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. என் சகோதரா!
உன்னால் அவனின் காலடிச் சப்தங்களைக் கேட்க முடிகிறதா? கனத்துக் கனத்து மிதந்து வரும் நம் மெசியாவின் ஒலியை நான் உணர்கிறேன். அவனது வருகையின் பொழுது நமது பாதைகள் எதுவும் அடைந்திருக்கக்கூடாது. ஒரு ரொட்டித்துண்டத்தை விட ஒரு கத்தி அதற்காக நமக்கு உதவும். இங்கே என்னைப் பார்!
அவன் தன் மேலங்கியைத் திறந்து தன் இடுப்பில் சொருகி வைத்திருக்கும் இருமுனைகளும் கூர்மையான, நாடோடிகள் உபயோகிக்கும் கத்தியைக் காண்பித்தான். சூரிய ஒளிக்கதிர்கள் அவனது மேலுடலில் அப்பியிருந்த புழுதியைத் தழுவியது.
செபெதீயின் அலைவுறும் மனநிலை கொண்ட மகன் ஜேக்கப்பிற்காக இது துடித்துக் கொண்டிருக்கிறது. அந்தத் துரோகியின் இருதயத்தை இன்று எப்படியானாலும் இதன் கூர் முனைகளால் குத்திப் பிளப்பேன். நேற்று நாசரேத்தை விட்டு வெளிவரும்பொழுது அவனின் சகோதரத்துவத்தை நாங்கள் சரிவர அறிந்து கொண்டோம். அவனுடைய மரணமே அதற்குப்பரிசாக அவனுக்கு அளிக்கப்படவேண்டும்.
யார்?
அவனைக் கொல்கின்ற பாக்கியம் என் கைகளுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது.
யாரை? பிலிப்பின் கால்கள் நடுங்கின. திரும்பவும் விசனத்துடன் கேட்டான்.
அது என்னுடைய வேலை. மற்றவர்கள் விவகாரங்களில் நீ தலையிட வேண்டாம் என்று பேச்சைத் திசை திருப்ப முயன்றான்.
என் மேல் நம்பிக்கையில்லையா?
யூதாஸ் பிலிப்பை உற்றுப்பார்த்தான். பின் அவனது வலுவானக் கைகளால் அவனைப் பிடித்து உலுக்கினான்.
நான் சொல்வதைக் கவனமாகக் கேள் பிலிப்! யாரிடமும் இதைப்பற்றி மூச்சு கூட விட்டுவிடாதே! இல்லையென்றால் உனக்குத்தான் பாதிப்பு. நான் இங்கிருந்து பாலைவனம் வழியாக அங்கிருக்கும் மடாலயத்திற்கு செல்கிறேன். அங்கு ஏதோ சில இரும்புப் பொருட்கள் செய்துத் தர வேண்டித் துறவிகள் அழைத்திருக்கின்றனர். இன்னும் சில தினங்களில், இரண்டு அல்லது மூன்று நாட்களில், உங்கள் ஆட்டு மந்தைகள் பட்டியிட்ட, கூடாரம் வழியாகத்தான் நான் கடப்பேன். நாம் உரையாடிக் கொண்டதைத் திரும்பவும் உன் மனதில் நிறுத்திக் கொள்! நீயே ஒரு முடிவெடு! இதைப்பற்றி வெளியில் பேசிக்கொள்ளாதே! நீ ஒரு ஆண் மகன் எனில், சரியான வழியையேத் தேர்ந்தெடுப்பாய்! அப்பொழுது நான் உனக்கு நம் திட்டங்களைப் பற்றி சரியாக விளக்குவேன்.
எந்த அவசரமுமில்லை. நிதானமாக முடிவெடு. நீ இன்னும் எங்கள் குழுவில் இணைந்துவிடவில்லை. எங்கள் சகோதரர்களில் ஒருவனாக ஆகிவிடவில்லை. அவனது வலியக் கைகளைத் தோள்களில் இருந்து தளர்வித்தான். போய் வருகிறேன் பிலிப்! இப்போது வரை நீ எதுவுமில்லை. நீ உயிருடன் இருந்தாலும் இல்லை செத்தாலும் யாரும் கண்டுகொள்ளப் போவதில்லை. எல்லாமும் ஒன்றுதான். நானும் அப்படித்தான் இருந்தேன். எப்பொழுது நான் அவர்களின் குழுவில் ஒரு சகோதரனாக ஏற்றுக் கொள்ளப்பட்டேனோ அன்றிலிருந்து எல்லாமும் மாறிவிட்டது. நான் புதியவனாகி விட்டேன். நான் ஒரு ஆண்மகனானேன். அதன் பிறகு நான் கொல்லனோ, யூதாசோ இல்லை. ஒரு அடிமை எருதினைப் போல என் பட்டறையில் உழைத்துக் கொண்டு லாடங்களையும், அசிங்கமான இம்மனிதர்களுக்கு ஆபரணங்களையும் செய்து கொடுத்து என் வாழ்க்கையினை ஓட்ட வேண்டிய அவசியம் இனி இல்லை. நான் ஒரு பெரிய லட்சியத்தின் பால் என்னை வழிநடத்த ஒப்புவிக்கிறேன். ஒரு உயர்ந்த லட்சியத்திற்காக எவனொருவன் தன் வாழ்வினை அர்ப்பணிக்கிறானோ, அவனின் செயல் சிறியதாயினும், அவன் மனிதருள் மாமனிதன் ஆகிவிடுகிறான். புரிந்ததா! அதைத்தான் நான் உன்னைச் செய்யச் சொல்கிறேன். சரி! நான் வருகிறேன்" தன் கழுதையை ஓட்டிக் கொண்டு, பாலைவனத்தை நோக்கி செல்லத் தொடங்கினான் யூதாஸ்.
பிலிப், தன்னந்தனியாக நின்று கொண்டிருந்தான். தன் துரட்டியினை அங்கும் இங்கும் அசைத்தான். தொலைவில் சென்றுகொண்டிருக்கும் யூதாசின் விரைவானத் தப்படிகளைக் கண்ணுற்றான். வேக வேகமாக பாறைகளைக் கடந்து, வெற்று நிலங்களைத் தாண்டி அவன் புள்ளியாக மறைவது வரை அவனின் திசையையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் பிலிப்.
பார்! இந்த செந்தாடிக்காரன் நன்றாகப் பேசுகிறான். ஒரு புனிதனைப் போல சிந்திக்கிறான். நிறையத் தற்பெருமை அடித்துக் கொள்கிறான். அது யாருக்கு வேண்டும். அவனது வார்த்தைகளைக் கேட்கும் போது ஆவேசம் பொங்குகிறது. மனம் அவனின் வழிப்பாதையில் செல்ல விரைகிறது. தான் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்டவன். உயர்ந்த லட்சியத்திற்காக நாமும் நம் உயிரைக் கொடுக்க வேண்டும் எனத் தோன்றி விடுகிறது. ஆனால் செயலில் இறங்கும் பொழுதுதான் எல்லாமே தடுமாறுகிறது.
"கவனமாக இரு, பிலிப்" உன் பாவப்பட்ட ஆடுகளைப் பற்றி நினைத்துப்பார்த்தாயா! இந்தத் தொழிலில் எந்தப் பிரச்சனையுமில்லை. நிம்மதியாக உறங்க முடிகிறது. பேசாமல் இதையே செய். இந்த ஆடுகளுடன் உனக்கு எந்தப் பாதகமும் ஏற்பட்டுவிடாது. தேவையில்லாமல் குழப்பிக் கொள்ளாதே! வார்த்தை ஜாலங்கள் எப்பொழுதும் வயிற்றுக்கு உதவாது. என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொண்டு பேசாமல் காத்திரு. அதுதான் உனக்கேற்ற வழி. பிலிப் தனக்குள்ளேயே சமாதானப் படுத்திக் கொண்டான்.
தன் துரட்டிக் கம்பினைத் தோள்களில் பொருத்தியவன், ஆடுகளின் கிலுங்கும் மணிச்சப்தத்தைக் கேட்டான். விசிலடித்துக் கொண்டே சத்தம் வந்தத் திசை நோக்கி விரைந்தான்.
செபெதீயின் தத்துப்பிள்ளைகள் சமையல் செய்துகொண்டிருந்தனர். ஒரு புறம் அடுப்பில் மீன் சூப் கொதித்துக் கொண்டிருந்தது. பாறைமீன்கள், கடல் ஊமத்தைகள், சிப்பிகள், நவரை மீன்கள் எல்லாம் இட்டு, சிறிது நறுமணப்பாசிகளையும், மிளகுப்பொடியும் உப்பும் அளவாக இட்டுக் கலக்கிக்கொண்டிருந்தனர். மீன்களின் கவுச்சி மணம் மாறி வெம்மையான அதன் நெய் மணம் காற்றில் பரவியது. இன்னொருபுறம் விளமீனையும், மடவையையும் அரிந்துக் கழிவிக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் அதுவும் பானையில் இடுவதற்காகத் தயாராகிக் கொண்டிருந்தது. எப்படி வெறும் பாறைமீன்களையும், சிப்பிகளையும் கொண்டு அவர்கள் பசியாற முடியும். அவர்கள் அனைவரும் அடுப்பைச்சுற்றிப் பசியுடன் நின்றுகொண்டு தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். இன்றைக்கு சரியாக வாங்கிக் கட்டிக் கொண்டார் கிழவர் என்றான் ஒருவன். அந்தக் கொல்லன் அவர் முகத்தையே சொற்களால் கிழித்துவிட்டான். பொறுமை! ஒரு நாள் பாவப்பட்டவர்கள் முன்னேறி வருவார்கள். பணக்காரர்கள் கீழிறங்குவார்கள். அதுதானே நியதி.
நீ நினைக்கிறாயே! அப்படி ஏதும் அதிசயம் இந்தப் பூமியில் நிகழும் என்று. பிறந்ததிலிருந்தே பசியை மட்டுமே அறிந்த ஒருவன் பொறுமையற்றுச் சற்றுக் கண்டிபான குரலில் கத்தினான்.
ஒரு கடவுள் இருக்கிறார்? அவர் நிச்சயமாக இருக்கிறார் என்று நம்புகிறோம் இல்லையா! அப்படியென்றால் அவருக்குத்தெரியும், எதை எப்பொழுது செய்ய வேண்டும் என்று, அதனால் நிச்சயமாக அது நடக்கும். பொறுமை, நம்பிக்கை இது இரண்டும் தான் நமக்கு கடவுளால் அளிக்கப்பட்டச் சொற்கள். அதனால் நம்பு! என்றார் அதிலிருந்த ஒரு முதியவர்.
என்ன, அங்கே குசுகுசுவெனச் சப்தம், செபெதீ அவர்களைப் பார்த்து அதற்றினார்.
திடீரென உள்ளே நுழைந்தவரை யாரும் எதிர்பார்க்கவில்லை. குரல் வந்தத் திசை நோக்கி சந்தேகமாகப் பார்த்தார்.
"நீங்கள் உங்கள் வேலைகளைச் சரியாகவும், முதலாளிக்கு விசுவாமாகவும் செய்யுங்கள், கடவுளிற்கு நீங்கள் வேலை சொல்லிக் கொடுக்க வேண்டாம். அவனுக்குத்தெரியும், அடுத்து என்ன செய்யவேண்டும் என்று"
அனைவரும் ஒருமித்து அமைதியாகினர். வயதான மீனவன் தன் மரக்கரண்டிகளை எடுத்துக் கோப்பையில் ஊற்றி வைத்திருந்த சூப்பை ஊதி ஊதி உறிஞ்சத் தொடங்கினான்.
சனி, 26 பிப்ரவரி, 2022
கிறுஸ்துவின் கடைசி சபலம் -48
நீ நரகத்திற்கு போ! செந்தாடிக்காரா! என்றுத் தான் விட்ட வேலையைத் தொடர்ந்தார், செபெதீ. வலையின் அடிப்பகுதி தரை தட்டியது. பாரம் இருமடங்கானது. குவியலாக விளைமீன்களும், மடவைகளும் துடித்துக் கொண்டிருந்தன.
இருவருக்கும் இடையில் நின்று கொண்டிருந்த பிலிப்பிற்கு எந்தப்பக்கம் செல்வது என்று குழப்பமாக இருந்தது. யூதாஸ் சொன்னதுதான் உண்மை. தைரியமாகவும் மிகச்சரியாகவும் அவன் அதை விளம்பினான். பிலிப்பும் இது போலத்தான் அதிகாரமாக அக்கிழவனின் முகத்தை நோக்கிப் பேச வேண்டும் என்று நினைப்பான். ஆனால் கிழவன் அவ்வூரின் பெரிய ஆள். நிலச்சுவான்தார் வேறு. இவன் தன் மந்தைகளை அவருக்குச் சொந்தமான புல்வெளியில் தான் மேயவிடுகிறான். அதனால் அவனால் கிழவனை மறுத்து எக்காலத்திலும் பேச முடியாது. அதற்கு ஒன்று, தான் அதிகாரத்தில் இருக்கவேண்டும் இல்லையேல் கிறுக்கனாக இருக்க வேண்டும். அவன் இரண்டுமல்லன். அவன் வெறுமனே நிறைய நிறையப் பேசுவான் ஆனால் கிழவரிடம் கேலி பேசுவதோ, சண்டை போடுவதோ அவனைத்தான் பாதிக்கும் என்று அவனுக்கு நன்றாகத் தெரியும்.
அவன் பதிலுக்கு எதுவும் பேசாது அவர்களின் சண்டையை வேடிக்கை பார்த்தான். தயக்கமும் வெட்கமும் கொள்ள யூதாஸ் சென்று கொண்டிருப்பதை நோக்கினான். மீனவர்கள் வலையின் பெரும்பகுதியை கரைக்கு இழுத்து வந்துவிட்டனர். செபெதீ ஏரியினுள் மூழ்கி வலையைக் கரை நோக்கி உந்திக் கொண்டிருந்தார். பிலிப்பும் அவர்களுடன் சேர்ந்து வலையைப் பிடித்து கரைக்குத்தள்ளிக் கொண்டிருந்தான். கிழவர் நீரினுள் முங்கித் தள்ளுவதும், மீனவர்களைக் கண்காணிப்பதுமாய் இருந்தார். அவர் சொல்லுக்கு வேலையாட்களும், மீன்களும் கட்டுப்பட்டிருந்தன.
அவர்கள் வலையை முழுதுமாக இழுத்து கரைக்குக் கொண்டு வந்துவிட்டனர். கொத்துக் கொத்தாக துள்ளுகிற துடிக்கிற மீன்களின் குவியல் வலை முழுதும். பாரம் அழுந்த மண்ணில் அழுந்தியது. அவர்கள் அனைவரும் குதூகலித்தனர். செந்தாடிக்காரனின் குரல் அங்கு பாறைகளுக்குப் பின்புறம் இருந்து எதிரொலித்தது.
ஹேய்! செபெதீ!
கிழவர் எதுவும் கேட்காதது போல நடித்தார்.
திரும்பவும் அதே கரகரப்பானக் குரல், ஹேய்! செபெதீ, நான் சொல்வதைக் கொஞ்சம் கேள். போ! போய் ஜேக்கப்பைப் பிடித்துக் கொண்டு வந்துவிடு!
"ஜேக்கப்!" தாள மாட்டாது கிழவரின் குரல் தழுதழுத்தது. அவரது இளையமகன். அவர் தன்னுள் எதுவோ முறிந்தது போல உணர்ந்தார். மூத்தவனை நான் பறிகொடுத்தேன். இப்பொழுது இவனையும் இழந்துவிடுவேனா என்று புலம்பினார். அவருக்குள்ளது இரு மகன்கள். இவனும் இல்லாமல் அவரால் வாழமுடியாது. "ஜேக்கப்!" அவர் யூதாசைப் பார்த்து கவலையுடன் கத்தினார். அவன் எங்கிருக்கிறான். உனக்கேதும் தகவல்கள் தெரியுமா?
அவனை நான் கடைசியாக நாற்சந்திகள் சந்திக்கும் சாலையில் கண்டேன். அவன் அந்த சிலுவைகள் செய்பவனுடன் ஏதோ தொடர்ச்சியாக ஆதுரத்துடன் பேசிக்கொண்டிருந்தான்.
என்ன சிலுவை செய்பவனா! ஐயோ! அந்தப்பாவியுடனா! என்று கதறினார்.
ஆம்! அந்தத் தச்சனின் மகன். நம் தீர்க்கதரிசிகளையெல்லாம் கொல்பவன். என்ன செய்ய, ரொம்பத்தாமதம்! ஒன்றும் செய்வதற்கில்லை. நீ உன் இந்த மகனையும் இழந்துவிட்டாய்க் கிழவா! ஒருத்தனைக் கடவுள் பிடித்துக் கொண்டார். இன்னொருத்தன் சாத்தானின் வசம் சென்று விட்டான்.
முதிய செபதீயின் உடல் முழுதும் தீப்பட்டது போல எரிந்து கொண்டிருந்தது. அவர் வார்த்தைகள் எதுவும் உதிர்க்கவில்லை. வெறுப்புடன் தூரத்தை அளந்து கொண்டிருந்தார். வலையிலிருந்து ஒரு மீன் பறந்து வெளியே சாடியது. துடித்துத் துடித்து நீரினுள் சென்று ஏரியினுள் நுழைந்து மறைந்தது.
கெட்ட சகுனம்! இது கெட்ட சகுனம்! பதைபதைக்க முணுமுணுத்தார் செபெதீ. இந்த மீனைப் போல என் மகனும் என்னைத் தனியாக விட்டு விட்டு ஆழ்ப்புதைக் குழிகளில் மூழ்கப் போகிறானா?
அ வர் பிலிப்பைப் பார்த்தார். நீ அந்த மீனைப் பார்த்தாயா? இவ்வுலகில் எந்த நிகழ்வும் சும்மா நிகழாது. சொல்! இதற்கு என்ன அர்த்தம். அந்த மீன் துள்ளத்துடிக்க நீர்மையினுள் மூழ்கி மறைந்தும் விட்டது. நீ சொல் பிலிப்! என்று கிழவர் அதிர்ச்சியில் குழறினார்.
ஒரு ஆட்டுக்குட்டி என்றால் என்னால் சொல்லியிருக்க முடியும். ஒரு வழிதவறிய ஆட்டுக்குட்டியின் பாதைகளை, ஒரு மேய்ப்பனாக. நான் நன்கு அறிவேன். ஆனால் மீன்களைப்பற்றி எனக்கொன்றும் தெரியாது ஐயா! என்று சற்றுப் பணிவுடன் சொன்னான். அவனது சொற்கள் அவருக்குக் கோபத்தைத்தான் கிளப்பியது. யூதாசைப் போல ஒரு ஆண்மகனாய் இவன் என்னிடம் தைரியமாகப் பேச வாய்ப்பில்லை என்று, அவனைக் கேட்டதற்கு தனக்குள் நொந்து கொண்டார்.
பிலிப் தன் துரட்டியைத் தோள்களில் வைத்துக் கொண்டு, யூதாஸ் சென்ற திசை நோக்கி பாறைகளைத்தாண்டிக் குதித்து சென்று கொண்டிருந்தான்.
நில்! என் சகோதரனே! நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்.
போ! போய் உன் ஆடுகளின் குண்டிகளை முகர்ந்து அதனை வழி நடத்துக் கோழையே! திரும்பிப் பார்க்காமலேயே செந்தாடிக்காரன் பதிலுரைத்தான். உன் கவலைகளை உன் மந்தையிடம் போய்க்காட்டு. மனிதர்கள் அவர்களது பிரச்சனைகளைத் தீர்க்கட்டும். என்னை சகோதரன் என்று அழைக்காதே! நான் யாருக்கும் சகோதரன் அல்ல.
கோபப்படாதே! நான் உன்னிடம் பேச வேண்டும். கொஞ்சம் நில்!
யூதாஸ் நின்று அலட்சியமாக அவனைப்பார்த்தான். ஏன் நீ வாயைத்திறக்க மாட்டுக்கிறாய்? எதற்கு இவ்வளவு பயம் அந்தக் கிழவனிடம்? என்ன நிகழகிறது எனத்தெரிந்தும் எதற்காக ஒரு பேடியைப் போல நடந்துகொள்கிறாய்? எதற்காக நாம் நம் தலைகளை சுவற்றில் முட்டிக்கொண்டிருக்கிறோம்? யார் வருகிறார்? இல்லை, நீ எதையுமே புரிந்துகொள்ளத் திராணியற்ற முட்டாள் ஜென்மமா?
நல்லது! கேள்! காலம் நெருங்கி விட்டது. நம் யூதர்களின் அரசன், தனது மகிமைகளை அளிக்க நம்மை நெருங்கிவிட்டான். கோழையாக இருப்பதற்கு வெட்கம் கொள், இழிஞனே!
இன்னும், யூதாஸ், இன்னும்! பிலிப் மன்றாடினான். என்னை உன் துரட்டிக்கம்பால் அடித்து இழுத்துச்செல். கொஞ்சமாவது ஒரு சுயமரியாதை வேண்டாமா!, ஒரு ஆண்மகனுக்கு! என் முகத்தில் காறித்துப்பு யூதாஸ்! நான் என் பயங்களை மடியில் வைத்துக் கொண்டு மிகவும் சோர்ந்துவிட்டேன்.
யூதாஸ் அவன் கைகளை இறுக்கிப்பிடித்துக் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தான். நீ உண்மையிலேயே உன் இதயத்திலிருந்து என்னிடம் பேசுகிறாயா? இல்லை! வெற்றுச் சொற்களால் பசப்புகிறாயா?
எனக்கு என்னைப் பார்த்தாலேக் கேவலமாக இருக்கிறது. நான் எப்படிப்பட்டப் பிறவி. என்னால் இதற்கு மேலும் தாங்க முடியுமா என்று தெரியவில்லை.
நீ எனக்குக் காட்டு! யூதாஸ்! நீ வழியை எனக்குக் காட்டு! நான் தயார்! என்று பிலிப் அழுகுரலில் கதறினான்.
செந்தாடிக்காரன் சுற்றும் முற்றும் பார்த்தான். தாழ்ந்தக் குரலில் அவன் கண்களை நோக்கிக் கேட்டான்.
"பிலிப்! உன்னால் கொலை செய்யமுடியுமா?"
கிறுஸ்துவின் கடைசி சபலம் -47
சிரித்துக்கொண்டே தான் தத்தெடுத்த பிள்ளைகளைப் பார்த்தார். "உயிர்ப்புடன், பெருமையாக கால்களை முன்வைத்து உழையுங்கள் என் பிள்ளைகளே! அப்பொழுதுதான் திருப்தியாக நாம் நம் உணவை உண்ண முடியும். பார்! சூரியன் மேலெழும்பி வானை நிறைத்துவிட்டான். இன்னும் நாம் எதையும் முடிக்கவில்லை.
பிலிப் அங்கிருந்து நகர்ந்து தன் மந்தைகளை நோக்கி விரைந்தான். ஒரு கழுதையின் கனைப்பொலி அவன் காதில் விழுந்தது. ஏரியின் கரையைத் தொட்டு இணையாகச் செல்லும் நேர்ச்சாலையில் ஒரு கழுதை பொதிசுமந்து கொண்டு பையப்பைய வருகிறது. அதன் பின்னே ஒரு தடியன் தன் மேலங்கியைக் காற்றில் பறக்கவிட்டு, ஒரு குச்சியால் அதை விரட்டிக் கொண்டே அவசர அவசரமாக வெற்றுக்காலுடன் ஓட்டமும் நடையுமாக வருகிறான்.
பார்! அவன் தான் அந்த சாத்தான் மண்டையன், யூதாஸ் இஸ்காரியெட் வந்துவிட்டான். பிலிப் உரக்கக் கூவினான். தன் துரட்டிக் கம்பைத் தரையில் ஊன்றிக் கொண்டு அவன் வருகையை எதிர் நோக்கினான். கிராமம் முழுதும் அலைந்து திரிந்து, லாடம், வெட்டுக்கத்தி என்று வேண்டியவற்றை நம் ஜனங்களுக்கு செய்து கொடுப்பது அவன் தொழில். ஆனால் முரட்டுப்பயல். முடிந்தவரை, மக்கள் மண்டையைக் கழுவிவிடுவான். உண்மையில் சுற்றுவட்டாரத்தில் அவனைப் போலத் திறமையானக் கொல்லன் கிடையாது. அவனது முரட்டுத்தனமும், எதிலும் உடன் போகாதப் பிடிவாதக்குணமும்தான் ஒருவித பயத்தையும், வசீகரத்தையும் அவனிடம் உண்டாக்குகிறது. பாம்பினைப் பார்ப்பதைப் போல. என்று நினைத்துக்கொண்டவன். வரட்டும் என்ன சொல்வதற்காக இன்று வருகிறானோ என்று மனதிற்குள் ஆரவாரித்தான்.
ஒரு கொள்ளை நோய் போல வருகிறான், அவனது தாடியைப்பார். அது எனக்குப் பிடிப்பதேயில்லை. அது அவனது முதுபாட்டன் காயினை எனக்கு நினைவுபடுத்துகிறது. முதிய செபெதீ, தன் சுருங்கியக் கண்களால் அவனைப் பார்த்தார்.
இந்த அதிஷ்டமற்ற முரட்டுப்பயல் இதுமியாவின் பாலை நிலத்தில் பிறந்தான். இன்னும் சிங்கங்கள் உலாவும் பிரதேசம் அது. அதனால் அவனிடம் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ளக்கூடாது. பொத்திக்கொண்டு நிற்போம் என்ற பிலிப், அவனை நோக்கி விசில் அடித்தான்.
வா! யூதாஸ்! உன்னைப்பார்த்ததில் மகிழ்ச்சி. இங்கே அருகில் வா! உன்னை சரியாகப் பார்த்துக் கொள்கிறேன்.
யூதாஸ் அவர்களைக் கண்டதும், நிலத்தில் காறி உமிழ்ந்து விட்டு, வெறுப்பானப் பார்வையுடன் அருகில் வந்தான். அவனுக்கு அந்த இருவருமையேப் பிடிக்காது. ஒட்டுண்ணிப்பயல்கள் என்று நினைத்துக்கொண்டான். இருந்தும் தான் ஒருக் கொல்லன், எனவே எதாவது தேவையிருக்கும் என்று எண்ணிக்கொண்டே அவர்களை அணுகினான்.
என்னாயிற்று, நம் வயல் வெளிகளில், கிராமங்களில் என்ன அசம்பாவிதம் நடந்துவிட்டது என்று அவனிடம் வினவினான் பிலிப்.
தன் கழுதையின் வாலைப்பிடித்து நிறுத்தியவன். அவர்களைப் பார்த்து வெறுமனே நகைத்தான். ஒன்றுமில்லை. எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. இறைவனின் திருநாமத்தின் பெயரால், எல்லாம் வெகுசிறப்பு. நம் கடவுள் தான் எத்துணைக் கருணையுடன் நம்மிடம் நடந்து கொள்கிறார்.
நாசரேத்தில் நம் தீர்க்கதரிசிகளைச் கிலுவையில் அறையவிட்டுக் காவு கொடுப்பார். இங்கே கிராமங்களில் வெள்ளத்தைத் தருவித்து, நம் ஜனங்களின் அடிமடியில் கைவைப்பார். அவர்கள் பசித்து சாக ஆசிர்வாதங்களை அருள்வார். உனக்குக் கேட்கவில்லையா, அவர்களின் அலறல்களும், புலம்பல்களும். பெண்கள் நிலத்தில், அதன் சதுப்புகளில் சிதறிக்கிடக்கும் எஞ்சியத் தானியங்களைப் பொறுக்கிக் கொண்டிருக்கிறார்கள். தன் பிள்ளைகளுக்கு ஒரு அப்பன் இதை விட என்ன செய்துவிடமுடியும்.
கடவுள் எதைச் செய்தாலும் நன்மைக்கே, செபெதீ அவனை மறுதலித்தார். இப்பேச்சுகள் எரிச்சலூட்டுகிறது. நாம் செய்ய வேண்டிய வேலைகளைத் தடுத்து நம்மை முடமாக்குகிறது. எனக்கு அவர் மேல் முழு நம்பிக்கை உண்டு, என்ன நிகழ்ந்தாலும். உலகில் உள்ள எல்லோருமே மூழ்கி நான் மட்டும் பிழைத்தாலும், இல்லை நான் மட்டும் மூழ்கி உலகில் உள்ள எல்லோரும் பிழைத்தாலும் எனக்கு ஒன்றுதான். கடவுள் என்னைக் காப்பாற்றிவிட்டார் என்றுதான் நான் நினைப்பேன். இரண்டும் இரண்டும் நான்கு என்ன!
அவரது ஜாலங்களைக் கேட்டுக்கொண்டிருந்த செந்தாடிக்காரன், தான் வாய்க்கும் வயிற்றிற்கும் பிழைக்கும் தொழிலாளியாக இருந்ததை இக்கிழவன் எப்படி மறந்தான் என்று நினைத்துக் கொண்டான். இன்று இம்மக்களை நம்பியே இவன் பிழைப்பு. அவர்களின் உழைப்பை இவன் கூலியாக்கி வாழ்கிறான். இதில் இந்த பம்மாத்து உத்திகள் வேறு, இந்த மனநிலை தான் இவர்களின் ஆகப்பெரிய சுமை. அதைத்தான் முதலில் ஒழிக்க வேண்டும் என எண்ணிக் கொண்டான்.
உனக்கு நம்பிக்கை இருக்கும், செபெதீ! ஏனென்றால் எல்லாம் வல்ல இறைவன் நீயும், உன் குடும்பமும் படுப்பதற்கு சொகுசான படுக்கைகளை அளித்திருக்கிறான். உனது வழிபாடு உனது ஐந்துப் படகுகளுடன் தான். அதைவைத்துத்தான் நீ இறைவனின் செயற்கரிய செயல்களைச் செய்கிறாய். நீ எப்படியும் ஐம்பது அடிமைகளை வைத்திருப்பாய். அவர்களுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு உணவிட்டு போஷித்து வளர்ப்பாய். அப்பொழுதுதானே அவர்களும் வலுவுடன் உனக்காக உழைப்பார்கள். இல்லையென்றால் பசியில் அவர்கள் இறக்கவேண்டியதுதான். அவர்களின் உழைப்பின் மிகுதியால், உனது எஜமானன் தனது கருவூலத்தில், பொருட்களையும், பணத்தையும் மிகுதியாக நிறைத்து உன்னை மகிழ்விப்பான். அதனால் நீ சொல்லலாம்! "கடவுள் மகிமையானவர்! எனக்கு நம்பிக்கையுண்டு", இந்த உலகம் மகிழ்ச்சிகரமானது, நான் நம்புகிறேன் இது எப்பொழுதும் மாறாது" என்று.
நம்மை விடுவிப்பதற்காக, மற்ற நாளில் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டானே! நம் புரட்சியாளன், அவன் எதற்காகத் தன் உயிரை விட வேண்டும். நம் விவசாயிகள் வருடம் முழுதும், ராவும் பகலும் கண்ணும் கருத்துமாய்ப் பேணிய அத்தனை உழைப்பும் ஒரு நாள் இரவில் நாசமாகப் போய்விட்டது. ஜனம், தரையில் உருண்டும் புரண்டும் கொண்டிருக்கின்றனர். மிச்ச மீதி தானியங்களையாவதுக் காப்பாற்றிக் கொள்ள. அவர்களுடமெல்லாம் உனக்கு எந்தக் கேள்விகளுமில்லை. அவர்களின் கோபங்கள், வதைகள், வலிகள், வருத்தங்கள், ஆற்றாமைகள் அதைப்பற்றியெல்லாம் உனக்கு எந்தக் கவலையுமில்லை. உனக்கு உன் உலகம், உன் தொழில், உன் உழைப்பு. அது பாதிக்காத வரை உனக்குப் பிரச்ச்னையில்லை. உன் கடவுளிடம் நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்வாய்! ஆனால்! ஆனால்!...
இல்லையென்றால் என்னிடம் கேள்! நான் இந்தக் கிராமம் முழுதும் அலைந்து திரிந்து இங்கு வந்திருக்கிறேன். இஸ்ரவேலத்தின் அழுகுரல்கள் தான் எங்கும் ஒலிக்கின்றன. எதற்காக நாம் இத்தனை வாதைகளைத் தாங்கிக் கொண்டிருக்கிறோம் என்று உனக்கு நீயே என்றாவது கேட்டிருப்பாயா?, செபெதீ!
உண்மையில் எனக்கு இந்த சிவப்புத்தாடிக் காரர்களிடம் நம்பிக்கையில்லை, முதியவர் பதில் சொன்னார். நீங்களெல்லாம் காயினின் வழிவந்தவர்கள். சொந்தச் சகோதரனையேக் கொன்றவனின் சந்ததி. சாத்தானிடம் போய் சொல், உன் பிரசங்கங்களை. உன்னைப்போன்ற ஒருத்தனிடம் பேசுவதற்கு எனக்கு விருப்பமில்லை.
சொல்லிக் கொண்டு திரும்பியவர் அங்கிருந்து விலகினார்.
தனது கையில் வைத்திருந்த முள்கம்பால் கழுதையின் முதுகில் ஓங்கி ஒரு அடி கொடுத்தான் செந்தாடிக்காரன். அது தலையைத் திருப்பித் தன் எஜமானனைப் பார்த்தது, பின் நுகத்தினுள் சரியாகப் பொருந்திக்கொண்டு, முன்நோக்கிப் போக உந்துகிறான் என்பதைப் புரிந்து கொண்டு ஓடுவதற்குத் தயாரானது.
பயப்படாதே, ஒட்டுண்ணிப்பிறவியே! மெசியா வருவார். வந்து எல்லாவற்றையும் சரியான முறையில் ஒழுங்குபடுத்துவார். யூதாஸ் கத்திக் கொண்டே ஓடினான்.
பாறைகளைக் கடந்தவன் திரும்பி பார்த்தான், நமக்கு வாய்ப்பு கிடைக்கும் போது இதைப்பற்றி உரையாடுவோம் செபெதீ. எப்படியும் ஒரு நாள் நம் மெசியா வந்துவிடுவார். நிச்சயமாக நுகத்தடியுடன் தான். எல்லாத் திருட்டுப்பயல்களையும் அதற்கதற்கான வழியில் ஒழுங்குபடுத்துவார். உனக்கு மட்டுமில்லை! எனக்கும் நம்பிக்கையிருக்கிறது. திரும்பவும் சந்திப்போம்! நமது தீர்ப்பு நாளில். யூதாஸ் அச்சூழலை விட்டு விலக எத்தனித்தான்.
கிறுஸ்துவின் கடைசி சபலம் -46
அவன் அந்த ஜோனாவிடம் போய் இழுத்து இழுத்துக் கதைப் பேசிக்கொண்டிருக்கட்டும். அவன் அங்குதான் தன் வலையை வீசிக் கொண்டு நிற்கிறான். பையன்களா, நமக்கு வேலை இன்னும் முடிஞ்ச பாடில்லை. இதிலே இவன் வேற! என்று அங்கலாய்த்துக்கொண்டே கயிற்றின் முடிச்சுகளைக் கொண்டு பலம் கொண்டு இழுத்துக் கொண்டிருந்தார்.
அவரின் வேலையாட்கள் எதற்கும் பதிலற்றுத் தங்கள் வலையை இழுத்துக் கொண்டும், பொருளற்ற அப்பாடலை ஒருமித்துப் பாடிக் கொண்டும் முன்னேறி வந்து கொண்டிருந்தனர். இன்னும் நீரினுள் மிதந்து கொண்டிருக்கும் சிவப்புச் சுரைக்காய் மிதவைகளில் தான் அவர்கள் கண்ணும் கருத்தும் இருந்தது. அதுதான் அதன் எடையை யூகிப்பதற்கான வழி.
வலையின் கருப்பை போன்ற அடிப்பகுதி தெரிய ஆரம்பித்தது. உள்ளே துடித்துக் கொண்டே இருக்கும் மீன்களின் குவியலைப் பார்த்தனர். இன்னும் வேகமெடுத்து அவர்கள் கரையை நோக்கி இழுத்தனர். கரையைத்தாண்டி அழுகுரல்களும், ஓலங்களும் சற்று தொலைவில் இருந்து அவர்களின் காதுகளில் விழுந்தது. முதிய செபெதீ அதைக் கூர்வதைப் போல காதில் கைவைத்துக் கவனித்தார். இதுதான் சமயம் என வேலையாட்கள் கைகளைத் தளர்த்திக் கொண்டு நிறுத்தினர்.
என்ன ஆச்சு! பையன்களா! அங்கே ஏதோ பெண்களின் ஓப்பாரிச்சத்தம் கேட்கிறதே!
யாரோ பெரியவர் செத்துப் போய்ட்டார் போல! கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளைத் தரட்டும் முதலாளி!
முதியவர் பாறை மேல் ஏறி அங்கே கொஞ்ச தூரத்தில் இருக்கும் சமவெளி நிலத்தைப் பதற்றத்துடன் பார்த்தார். அங்கே ஆண்களும் பெண்களும் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். கீழே விழுந்து எழுந்தும் செல்லும் அவர்களின் கூக்குரல்கள் தான் அங்கு அறையிட்டது போல என்று நினைத்துக் கொண்டார். மழை ஓய்ந்து வெளுத்துக் கிடந்தது வானம். கண்ணுக்குத்தெரிந்தவரை ஓடைகளும், குட்டைகளும், சதுப்புகளும் அங்காங்கேப் புதிதாய் உருவாகியிருந்தது.
முழுக்கிராமமும் மேட்டிலிருந்து கீழ் நோக்கி வயல் வெளிகளை நோக்கி சென்று கொண்டிருந்தன. மக்கள் அங்காங்கே குந்தி அமர்ந்திருந்தனர். பெண்கள் தங்கள் தலை முடிகளை விரித்துக் கொண்டு ஓடுவதும் புலம்புவதும் அழுவதுமாய் இருந்தனர். செபெதீக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் ஏதோ பெரிய அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கிறது என்று மட்டும் நினைத்துக் கொண்டார்.
அவரைக் கடக்கும் ஒருத்தனைக் கூவி அழைத்தார். நிலத்தில் குத்திட்டிருந்தப் பார்வையை உயர்த்தி அவரைப் பார்த்தான்.
என்னாயிற்று? எங்கே ஓடுகிறீர்கள்? ஏன் பெண்கள் அழுது கொண்டிருக்கிறார்கள்? ஏதும் மரணமா? கத்தினார் செபெதீ.
அவரைக் கண்டு கொள்ளாமல் அவசரகதியில் கதிரடிக்கும் தளத்தை நோக்கி அவன் ஓடிக்கொண்டிருந்தான்.
ஹேய், யாரப்பா செத்தது? என்று அவருக்கு அருகில் வரும் ஒரு பருமனான மனிதனை நிறுத்திக் கேட்டார்.
"கோதுமை" என்று பதிலளித்தான் அவன்.
இந்த கேலிப்பேச்செல்லாம் வேறு யாரிடமாவது வைத்துக்கொள். நீ செபெதீயுடன் பேசிக் கொண்டிருக்கிறாய். சொல்! யார் செத்துப்போனது?
கோதுமை! பார்லி! ரொட்டிகள்! அவன் அழுதுகொண்டே பதில் சொன்னான்.
அப்பொழுதுதான் செபெதீக்கும் விஷயம் புரிந்தது. "வெள்ளம்" என்று முணுமுணுத்தார்.
அவர்களின் கதிரடிக்கும் தளத்தில் வைத்திருந்த தானியங்கள், முற்றி விளைந்து அறுப்பிற்காக காத்திருந்த அத்தனைப்பயிர்களும் இரவில் பெய்த பெரும் மழையில் அழிந்துவிட்டது என்று புரிந்துகொண்டார். பாவம்! நாம் ஒன்றும் இதில் செய்வதற்கில்லை என்று நினைத்துக் கொண்டார்.
அழுகுரல்கள் வயல் வெளிகளிலிருந்து கூடிக்கொண்டே இருந்தது. ஒட்டுமொத்த கிராமமும் அங்கு இருந்தது. பெண்கள், கதிரடிப்புதளங்களில் சிந்திக்கிடக்கும் தானியங்களைக் கைகளால் அள்ளினர். மழையில் நசிந்து அழுகிப்போயிருந்த அதனை வாரி வாரி முகர்ந்தனர். கொத்தாகச் சதுப்பாகக் கிடந்த தானிய உருள்களை நிலத்தில் கைகளால் கிளர்த்து கிளர்த்தி மாரில் அறைந்துகொண்டே ஒப்பாரி வைத்தனர். செபெதீ வெறுமனேக் கைகளை உயர்த்தி எல்லாவற்றையும் பார்த்தார். பின்னே கரையில் நின்று கொண்டிருந்த வேலையாட்கள் வலையை இழுப்பதை நிறுத்தி விட்டு தங்களுக்குள் குசுகுசுத்தும், ஏதோ கேலி பேசிக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தனர். பாறையிலிருந்துக் கீழே குதித்த செபெதீ விரைவாக அவர்களை நோக்கி வந்தார்.
ம்ம்! இழுங்கள்! செபெதீயின் குரல் உயர்ந்தது. சீக்கிரம்! இழுங்கள்!.அவரும் கயிற்றினைப் பற்றி இழுக்கத் தொடங்கினார். நாமெல்லாம் மீனவர்கள், கடவுளுக்கே மகிமை! நாம் விவசாயிகள் இல்லை. நல்லகாலம்! நம் மீன்களெல்லாம் நீந்துவதில் வல்லவர்கள். எந்தப் பெருமழையிலும் கூட மூழ்கிவிடாது. இரண்டும் இரண்டும் நான்கு என்று அவர்களைப்பார்த்துக் கண்ணடித்தார்.
பிலிப் அவனது மந்தையை அப்படியே விட்டு விட்டு ஒவ்வொரு பாறையாககக் குதித்து வந்தான். அவனுக்குப் பேச வேண்டும். ஆவேசத்துடன் அவன் கத்திக் கொண்டே அவர்களிடம் வந்தான். "பிரளயம், இதுப் புதிய பிரளயம், பையன்களா!.
நிறுத்துங்கள்! கடவுளின் பெயரால் சொல்கிறேன், நிறுத்துங்கள், அழிவிற்கான நேரம் நெருங்கி விட்டது. உலகம் அழியப் போகிறது. இப்பேரரிடர்களே அதற்கு சாட்சியம். ஒரு நாள் முன்பு அவர்கள் நம் நம்பிக்கையினை, நம் புரட்சியாளனை சிலுவையில் அறைந்தனர். நேற்று வானம் இடிந்து பூமியில் விழுந்தது போலக் கொட்டித் தீர்த்தது மழை. நம் பயிர்கள் மொத்தமும் அழிந்துபட்டன. எதுவும் மிச்சமின்றித் துடைத்துப் போய்விட்டது இக்காற்றும் மழையும். கொஞ்ச நாள் முன்பு என் ஆடுகளில் ஒன்று இரட்டைத்தலைக் கன்றினை ஈன்றது. ஆக நாம் இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டோம். வேலையை நிறுத்துங்கள்! கடவுளின் அன்பிற்காக நாம் பேசுவோம் என்று அவர்களைப் பார்த்துக் கலக்கத்துடன் கூறினான்.
தீப்பற்றியது போல இருந்தது, செபெதீக்கு. இன்னும் வலையை முழுதுமாக இழுத்துவந்துவிடவில்லை. நேரம் வேறு சென்று கொண்டிருக்கிறது. இங்கிருந்து போய்த் தொலை! பிலிப். எங்களை வேலை செய்ய விடு! எரிச்சலும் கோபமுமாய்ப் பற்களைக் கடித்துக் கொண்டு அவனைப் பார்த்து சத்தம் போட்டார்.நாங்கள் என்ன சும்மவா நின்று கொண்டிருக்கிறோம்! பேசாமல் போய்விடு!
நாங்கள் மீனவர்கள்! நீ ஆடு மேய்ப்பவன்! விவசாயிகள் வந்து அவர்களின் கவலைகளைச் சொல்லட்டும். எங்களுக்கென்ன வந்தது! அவனவன் வேலையை அவனவன் பார்க்கட்டும். இப்போது நீ இடத்தைக் காலி பண்ணு!
உனக்கு கொஞ்சம்கூடப் பரிதாபம் இல்லையா! செபெதீ! விவசாயிகள் அங்கே பசியில் துடித்து சாவார்கள்! அதைப்பற்றி உனக்கென்ன. அவர்கள் இஸ்ரவேலத்தவர்கள், நம் சகோதர்கள், நாமெல்லாம் ஒரே மரத்தில் விளைந்தவர்கள், ஒரு தாய் மக்கள். எல்லாவற்றிற்கும் மேலே அவர்கள் உழவர்கள். அவர்கள் விளைவித்தால் தான் நமக்கும் உணவு. இது எல்லாமிருக்கட்டும், நாம் எல்லோரும் செத்துப் போய்விடுவோம், என்று வைத்துக்கொள், பிறகு மெசியா வந்து யாரைக் காப்பாற்றப் போகிறார். முடிந்தால் இதற்குப் பதில் சொல் செபெதீ! என்று மறுத்துப் பேசினான் பிலிப்.
செபெதீ இன்னும் கயிற்றினை இறுக்கி இழுத்துக் கொண்டிருந்தார். சின்னதாய் அவரைக் கிள்ளிவிட்டால் போதும் மனிதர் எத்தருணத்திலும் வெடிக்கக் கூடியவர் என்பது பிலிப்புக்கு நன்றாகவே தெரியும்.
"போ! உன் கடவுளையும் அவர் அன்பையும் கருணையும் தூக்கிக் கொண்டு,
ஏற்கனவேக் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போய் விட்டது இந்த மெசியாக்களின் கதைகளை. ஒருத்தன் மாற்றி ஒருத்தன் வந்து சிலுவையில் அறையப்பட்டு வதைபடுவார்கள். இன்னுமா உனக்கு இதிலிருந்து புரியவில்லை கடவுளின் செய்தி என்ன என்று. ஆன்ட்ரியூ அவனது அப்பன் ஜோனாவுக்கு என்ன செய்தியைச் சொன்னான்; எங்கே வேண்டுமானாலும் நீ செல், ஆனால் அங்கே வழிகளில் எங்கெல்லாம் நீ நிற்கிறாயோ, அங்கு ஒரு சிலுவையைக் காண்பாய். இங்குப் புதைகுழிகள் மெசியாக்களால் நிரம்பி வழிகின்றன. ஐயோ! போதும்! போதும்! நாம் மெசியாக்கள் இல்லாமலே வாழப் பழகிக் கொள்வோம் . அவர்கள் உண்மையில் நம் கால்களில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருக்கும் உலோகக் குண்டுகள், தொல்லைகள். போ! போய் எனக்குக் கொஞ்சம் பாலாடைக்கட்டிகள் கொண்டு வா, நான் உனக்கு சட்டி நிறைய மீன்களைத் தருகிறேன். அது தான் நம் மெசியாக்கள்! என்று சொன்னவர், அழுத்தமாகவும், கேலியாகவும் பிலிப்பைப்பார்த்தார்.