செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

அச்சுறுத்தல்

எப்பொழுதும் போலயே இருக்கிறாய் 
உன் கண்களிலும் ஸ்பரிசத்திலும் வனப்பிலும்
எந்த மாற்றத்தையும் கண்டறியவில்லை.
பின் என்னவாயிற்று.
தவிர்க்க முடியாத ஒரு சின்னஞ்சிறிய அச்சுறுத்தல்,
உன் உதடுகளின் ரேகைகளுக்குக் கீழ் ஒளிர்கிறது.
உன் குமிழ் நாடியில் பதுங்கி ஒதுங்குகிறது.
காற்றில் செய்கையிடும் உன் நீள் விரல்கள்
ஏதோ அகப்பட்டது போல இறுக மடிந்திருப்பதேன்.
அடிக்கடி பின்னுக்கிழுக்கும் உன் கோதலின்றி கசங்கிப் புரள்கிறது
முன் நெற்றியில் அது.
தாமதிக்காது உன்னருகில் வந்து காதுரசும்
என் குரல் கீற்றுகள்
மழை ஈசல்கள் போல உன் கதகதப்பின் ஜோதியில்
விழுந்து புரண்டு கொண்டே இருக்கிறது.
எப்பொழுதும் போலயே நீ இருக்கிறாய்.
உன் நனைந்த சருகுகளுக்கடியில் தடுமாறி ஊறிக் கொண்டே வந்தடைந்தேன்.
நான் தவற விட்டிருந்த உன் முத்தம்
ஒரு நீண்ட படுகையாய் உருமாறியிருந்தது. கவனத்துடன் உன் சதுப்பில் நான் புதையும் பொழுதும்
நீ எப்பொழுதும் போலயே இருந்தாய்.

செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

வான் நிலா நிலா அல்ல

என் கைகளுக்குள் மெல்லப் பதுங்கித் திமிறுகிறது,
ஒரு வெண் பறவை.
அதன் கதகதப்பானஅடிப்பாகத்தில்
எழுதியிராத மொழியின் சீழ்க்கை.
என் ரேகைகளின் அடிவாரத்தில் ஊறிச் சுரக்கிறதே
இது என்ன?
ஒரே நேரம் ராட்சசமும், தேவமும்
என் விரல்கள் வழி ஊடி அழுந்தித் தெறிப்பதேன்.
சிறகுகள் மெல்ல மெல்லப் பிரிய முனையும்.
துடிதுடிப்பினில் ஒரு சமயம் இழுத்துப் பற்றினேன்,
பின் விடுவித்து தளர்ந்தேன்.
நளினத்துடன் என் உள்ளங்கைகளில்
அது உந்துகிறது.
வட்டம் வட்டமாய் சுழல்கிறது.
வானம் வந்து ஏந்திக் கொண்டதும்
எல்லாம் தலைகிழாகியிருந்தது.
இப்பொழுது
இந்த தாமரைக் குளம்
பூமியைச் சேர்ந்ததல்ல.

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

தீ

நீயே தீ,
இந்தக் கானல் நதிக்கரையில் ஊற்றெடுக்கிறது
உன் உள் பாதங்களின் உப்பு வியர்வை.
உன் முத்தங்களின் வேனல் கட்டிகளை
ஒரு தேசாந்திரியின் தோள் பையாய்  தூக்கி சுமக்கிறேன்.
வழியில் தென்படும் படுகைகளிலெல்லாம் செவ்வரியோட்டம்.
ஒருக்கழித்துக் கிடந்த உன் தேகத்தடம்.
அப்பால் மொட்டைப்பாறையின் உச்சந்தலையில்
நீ கடித்த பற்தடத்தின் எரி.
தேங்கி வழியும் அந்தியின் கடைசி நொடித் தணல்.
படித்துறையில் ஈரம் சொட்டச் சொட்ட
சிந்திச் செல்கிறாய்.
துவட்டியதும் அறை முழுதும் வியாபித்து விரிகிறாய்.
புழுக்கம் வியர்த்த அடிக்கழுத்தில்
துளித்துளியாய் உருண்டோடுகிறாய்.
வெம்மை மிகுந்த இரவில்,
சாளரங்களில் அடங்காத இந்நதியின் ஓலம்.
உனைக் கவிதைக்குள் ஆற்றுப்படுத்த நினைத்தது எத்தனைப் பிழை.
உன் கடித்தடத்தை ஏந்திக் கொள்ள ஒரு மொட்டைப்பாறையாயினும் ஆகி இருக்கலாம்.

புதன், 14 பிப்ரவரி, 2018

மாடத்தி

காட்டுக்குருவியைப்  போல கூடணைகிறது
இந்த இரவு.
இரையெடுக்கும் மலை நாகமாய் சுருண்டு மலங்குகிறது அதன் நிழல்.
ஆகாச நதி,
பரல் துள்ளத் துள்ள,
மதமதக்கிறது கழி ஓதம்.
நான் பூசிக் கொண்டிருக்கிறேன்,
இந்த கொழும் கரும்பசையை.
என் தெய்வத்திற்குள் உடல் புக்கிறேன்.
புடைத்த என் விழிகளில் ததும்பத் ததும்ப விரிகிறது அவள்.
சாபம் துளிர்க்கும் கொடும் முட்களால் தலைக்கிரீடம் சூட்டுகிறேன்.
யார்? யார்? எங்கு? எங்கு?
அவள் சொற்கள்
சொரியச் சொரிய விரிகிறது.
மதலைச் சளுவையாய்
நிலம் சொட்டச் சொட்ட ஏந்திக் கொள்கிறது விரிவான்.
காலம் சப்பிச் சப்பித் தீர்ந்த பின்
கிடைக்கல்லின் முன் பலிப்பிரசாதமாய்  எஞ்சுகிறது நான்.
நதிக் கரையின் இருமுனையிலும்
சிறகுள்ள இரு கைகளால் அள்ளி அள்ளி விழுங்குகிறாள்
அவள்.

செவ்வாய், 6 பிப்ரவரி, 2018

கன்னியாகுமரி

இந்த எரிச்சுனையின் கரையில்
கால நேரமின்றி
மழுங்கிக் கிடக்கிறது நான்.
உன் பாசி பூத்த படித்துறையில்
தேகம் தழுவிக் கரையாமல்
மீதமிருக்கும்
அழுக்கு நுரைகள்.
அந்தியின் கழுத்திறுக்கிய
தாம்புத் தடத்தில்
நீ வருடிச் சென்ற ரேகைகள்.
என் உச்சந்தலையில் நீ பதித்த கால்தடம்.
உன் பாவாடைத் தும்பை
நான் அதக்கிய
உமிழ் நீர் மழையுடன்
இருக்கிறது நீ.
சுற்றிலும் வற்றிய பாழ் குளத்து நடு மண்டபம்
என் தனிமை.
தெப்பத் திருவிழாவில்,
உன் பாதத்திற்கடியில் ஊறி நிரம்புகிறது நான்.
கால நேரமற்று.

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

மிக மிகத் தூய்மையானது!?!?

பக்கெட்டிற்குள் அகப்பட்ட
எலிக்குஞ்சைப் போல இருக்கிறது
என் காதல்.
நாள் முடிந்த பின்னிரவில்
ஆண்மையின் புகார்களிலிருந்து
மெல்ல மெல்ல மேலெழும்பும் அது,
தன்னை முழுக்கடிக்கும்
பெரிய குமிழிகளைத் தேடிச் சோர்கிறது.
ஒரு சமயம் இதன் பொருட்டு
நன்றியுணர்வோடு பெருவிரலை நக்கும்.
பின் வெறியுடன் முன்னம் பற்களால்
கவ்வி விழுங்கும்.
மிகத்தூய்மையானது என்ற ஒன்றை
நான்  இந்தக் காதலைக் கொண்டு
மீட்க நினைத்த
ஒரு மத்தியான வேளையில் மீன் முட்களைக் கரக்முரக்கென கடித்துக் கொண்டிருந்த
பூனையிடம் இதைப் பற்றி வினவினேன்.
அது தன் சிவந்த நாக்கினால் உடலை
அழுத்தி அழுத்தி நக்கத் தொடங்கியது.
ஒரு வேளை அதுதான் பதிலோ!

முடிவுறாதது

இந்த இசைக் கோர்வைக்குள் பதுங்கும் உன் முத்தங்கள்.
நினைவுக் கடலில் தவற விட்டு
ஒவ்வொரு அலைமீறலிலும்
விரல்களுக்குள் அகப்பட மறுக்கும்
உன் பிசுபிசுப்பு.
இந்த அந்தியின் நிறத்தில்
மெல்லத் தீற்றும் வான் மொழியில், வெண்ணுருவாய் என் கடலுக்குள் ஒலிக்கிறது
உன் குரல்.
முடிவுற்ற பின் அமையும் முடிவுறாத்தன்மையுடன் எஞ்சியிருக்கும்
இடைவிடாத முத்தச் சத்தம்.

வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

அனைத்தும் உதிர்ந்த பின்

அனைத்தையும் உதிர்த்த ஒற்றை மரம்.
கைவிடப்பட்ட நகரின் வரைபடம் போல
நிலத்தில் கிடக்கிறது.
அந்த நகரில் வானம் தொலைத்த சிறகுகளின் வழிகள் இருந்தன.
பூமியைத்தேடும் தூவிகள் பிறாண்டிய புதைகுழிகளைப் பார்த்தேன்.
நடுமையமான இளைப்பாறும் பிரதேசத்தில்
இடைவிடாது கூவிக் கொண்டிருந்த
அந்த இணைப் பறவையையும்.
ஆனால் அதன் எல்லைகளை என்ன செய்வது.
இந்த இரவின் நிறத்தில்
அதன் நிழல்
கூட்டில் பசியுடன் அலைக்கழியும் குஞ்சுகளைப் போல குமைகின்றனவே.