சனி, 8 பிப்ரவரி, 2020

உப்புக் கவிதைகள்

நடு நிசியின்கடலை நான் அறிவேன்
அலைகளுக்குள் உருவாகிக் கொண்டிருக்கும்
மலைக்குவடுகளில் மழை பெய்கிறது
நீர்மை நீரினுள் கலந்த பின் அமைதியற்றிருந்தது
எம்பி நிற்கும் பாறை களினுள் தேங்கி இருக்கிறேன்
நீ சரிவிலிருந்து வீழ்கிறாய்
நொதிக்கும் உன் பெருக்கினுள் நான் கையடிக்கிறேன்
நுரை தள்ளித் ததும்பும் கறையினில் அலை உன்னைப் போலில்லை
நடு நிசியின் கடலை நான் அறிவேன்
அது உன்னைப் போலவே தூங்கிக் கொண்டிருக்கிறது

வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

உப்பு

நான் ஒரு கட்டற்ற ஒன்றினை வைத்திருக்கிறேன்
அது உப்பாலானது
நேற்று அதனிடம் இப்படி சொன்னேன்
உன் குமிழிகளின் மூலமே என் உயிர் நிலைக்கிறது. நீ விடைத்தெழும் ஒவ்வொரு நொடியிலும் உன்னுடன் உப்பாகி விடுவது மட்டுமே நான் விரும்புவது. அது நீயாவதும் கூட. இந்த மிகப்பெரிய நீ உன் அலைகளைக் கொண்டு என்னை உடைத்துக் கொண்டிருக்கும் பொழுதே சாவதானமாக அங்கே அமர்ந்திருக்கிறாய். கடல் தன் பன்னிலடங்கா கரங்களால் என்னைத் தழுவிக் கொண்டிருக்கிறது. பாசி பீடித்த என் தோலினுள் அறைந்து அறைந்து நக்குகிறாய். நான் உப்பால் ஆனவன் உன்னைப் போலவே.

என்னை இன்னொரு முறையும் முத்தமிடு.