வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

கருப்பு வெள்ளை

கருப்பு வெள்ளைகளில்
தேய்ந்து கொண்டிருந்தது
தன்னந்தனி நிலா
சலனமில்லா இரவின் தொடக்கத்தில்
அவர்கள் வந்தனர்
தங்களுக்குள் எந்த அறிமுகமுமின்றி
புணர்ந்து கொண்டனர்
தவிரவும் அவர்களுக்குள்
இடர்பாடற்ற உடல் இருந்தது
அவர்கள் விட்டுச் சென்ற நிலத்தில்
ஆவாகனம் செய்யப்பட்டது
பலிபீடம்
இடர்பாடற்ற மனித உடல்கள் 
அங்கு அமர்த்தப்பட்டன
சலனமில்லா இரவின் நுனியில்
அவர்கள் தூக்கிலடப்பட்ட பின்பு
ஒரு பகல் உருவாகியது
அதன் பின் வந்த 
எல்லா இரவுகளிலும்
கருப்பு வெள்ளைகளில்
தேய்ந்து கொண்டிருந்தது நிலா
நேற்றைய இரவைப் போலவே...

சொல்

ஒரு முற்றுப்பெறாத தன்மையுடன் தொடங்கியது சொற்களின் உலகம். அதில் ஒன்றை பொருள் கொள்ளும் முன்னமே இன்னொன்றை அளித்து விலகுகிறது. பிறிதொன்றின் முனையில் தொக்கிக் கொண்டு நிற்கும் சொல்லை  மெல்ல அவிழ்த்து எடுக்கையில் அது காயம் கன்றிய இடம் போலக் காத்திருக்கிறது. மொழி எனும் அலகு உருவெடுக்கும் மாய வெளியில் உப்புக் கரித்துக் கொண்டே இருக்கிறது. ஓயாது அலை மீறும் அதன் கரைகளில் அமைதியற்று அலைவுறுகிறது நான் தொலைத்த பிய்ந்த செருப்புகள். இங்கு அளக்கும் எல்லாவற்றிலும் பதுங்கிக் கொண்டு காத்திருக்கும் மொழியின் வேட்டை குழிகளை என் அறையின் ஒவ்வொரு இருள் முக்குகளிலும் காண்கின்றேன். இங்கு அறை என்பதே மொழி மட்டுமே உருப்பெருக்கிய ஒரு வளை போல உருமாறி விட்டது. சத்தங்களின் எண்ணங்களின் தேற்றல்களின் களியின் காமத்தின் உருவின் அருவின் இல்லாததின் இருப்பதின் அனைத்துமே ஒன்றிலொன்று முயங்கிய சொல் வெளியாகத் தான் இருக்கிறதோ. சொல்லற்ற மொழியற்ற ஒன்றில் எதைக் கண்டு கொள்கிறோம். அதுவும் சொல்லால் ஆனது தானே.

எந்த ஒரு பழமும் 
தனக்குப் போதுமான இனிப்பைக்
கொண்டிருக்கவில்லை
எனக்கானப் பழரசத்தில்
சர்க்கரை சேர்க்கிறேன்

எந்தவொரு சொல்லும் 
தனக்கான எல்லைக்குள் நின்று
ஒரு பொருளையுணர்த்துவதில்லை
எனக்கான சொல்லசைவுகளில்
உருவகங்களைச் செய்கிறேன்

எந்தவொரு மனித உடம்பும்
தனக்கான வெளியை மட்டும்
எடுத்துக் கொள்வதில்லை
எனவே நான் எனக்கான
போரைச் செய்கிறேன்
உள்ள அளவை அதிகரிக்க.

-ரமேஷ் பிரேம்