செவ்வாய், 30 ஏப்ரல், 2019

இணை

வெகு தூரத்தில் தூர்ந்து கொண்டிருக்கும்
வான வெளியில்
தன்னந்தனியே உன்னை நோக்கிக் கொண்டிருக்கிறேன்.
வற்றிப் போன  மண் தடம் அறிந்திருந்தது,
நீர் உறைந்த வழித் தடத்தினை.
விரல் இடைவெளிகளில் இறுக்க முடியாத வெற்றிடம்.
முன்னும் பின்னுமாக சுழன்று கொண்டே இருக்கும் கடிகார முட்களில்,
முடிச்சிட்டுக் கொண்டிருக்கிறேன்.
சுருக்குகள் தாடை எலும்பினை நொறுக்கும் கண நேரம்
என்னிடம் சொல்லிக் கொள்கிறேன்,
உன்னை நான் நோக்கிக் கொண்டிருக்கிறேன்,
வெகு தூரத்தில் தன்னந்தனியே.
வெகு தூரம்
வெகு காலம்
வெகு நேரம்
என் வெற்றிடங்களில் முளைத்துக் கொண்டிருக்கின்றன
காளான்கள்.
தலைக்கு மேலும் கீழுமாய்
உன் உப்பு நதியில்,
அலைக்கழிந்து
மிதந்து கொண்டிருக்கிறது
என் நாள் பட்ட பழைய உடல்.

வெள்ளி, 26 ஏப்ரல், 2019

ஒற்றை மதம்

கனவுலக வாசியிடமிருந்து வருகின்ற துர் நாற்றம்
மஞ்சள் வண்ணம் பூசிக்கொண்டு வலம் வருகிறது.
கிழக்கும் மேற்குமற்ற வான வெளியில் நிலவு தோணி போல அசைந்து கொண்டுருக்கிறது.
கால்களுக்கு கீழே அரைந்து அரைந்து நெழிகின்றன கனவுகள்.
முகங்கள் கலைந்து கொண்டே இருக்கும் பிம்ப வெளியில் நான் அவனைக் கண்டேன்.
தன்னை பரிசுத்த ஆவி என்று அழைத்துக் கொண்டான்.
தெளிவற்ற இரவின் சாலை வெளியில் சடைப் பின்னலுடன் அவள் எதிர் வந்தாள்.
நடுக்காட்டின் இசக்கி என்றாள்.
காலை 3 மணியில் பிரார்த்தனை கடிகார முள்ளினுள் ஒலித்தது.
என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும் என்று விதிர்த்து அடங்கியது.
தெரு முக்கில் இருந்து தன்னைத் தானே எதிர்த்து குறைத்துக் கொண்டிருந்தது கருப்பு நாய்.
மஞ்சள் வண்ணத்துடன் கோயில் மணி நாசி நிரம்பி வழிந்தது.
அத்துவான வெளியில் சிறகடிப்புகள் வானைத் தேடிக் கொண்டே
உதிர்ந்து வீழ்கின்றன.

ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

கனவு

இரு பிளந்த மலைகுன்றுகளுக்கிடையில்
கனவுகளை வாழ்க்கையாக கொள்ள நினைத்தவனின்
சடலம் கேடபாரற்று கிடக்கிறது.
தினம் தினம் அவன் பலி பீடத்தில் பல வண்ணங்களில் கனவுகள் கழுத்து ஒடித்து அவியாக்கப்பட்டன.
என் சாம்பல் நிறக் கனவு மலத்துவாரம் வழியே வெளித் தள்ளப்பட்டுக் கொண்டிருந்த நடு நிசியில்,
வெடி மருந்தினைப் போல படுக்கையைச் சுற்றிப் படர்ந்து கிடந்த சிவந்த கனவினையும்,
அக்குளுக்குள் இருந்து புழு போல நெளியும் பிங்க் வண்ணக் கனவினையும்,
யாருக்கும் தெரியாது என் பிறப்புறுப்புக்கிடையில் பதுங்கி இருந்த வெண்ணிறக் கனவினையும்,
ஒரு மடக்கில் பொதிந்து அவனிடம் சென்றேன்.
அவன் முன் பொதியிலிருந்து அவை சர்ப்பங்களாய் விரிந்தன.
அகன்ற வாய் திறந்து என்னை ஒட்டு மொத்தமாய் விழுங்கின.
இரு பிளந்த மலைகுன்றுகளுக்கிடையில்
 கனவுகளை வாழ்க்கையாக கொள்ள நினைத்தவனின்
சடலம்
தன்னந்தனியே
கேடபாரற்று கிடக்கிறது.