சனி, 8 மே, 2021

கணியான்

எட்டு முட்டைகளிலிருந்து பிறந்த கதை தெரியுமா? 



பகலின் வெளிச்சம் நீரினுள் அமிழ்ந்து மெல்ல  மழை இரவு முகிழ்ந்து ததும்பியது. இருள் காயல் கடவம் போல அளைந்து அளைந்து அருகில் வருவதுமாய் போவதுமாய் போக்கு காட்டியது. அமைதியற்று காற்று ஒரு சீறிய உறுமலுடன் கடந்து சென்றது. விளையின் ஆலமரக் கிளைகளில் பல்லாயிரம் கூவல். கூடணைந்த பின்னும் அமைதியற்று அலைக்கழியும் சப்தங்களின் தூறல். மெல்லிதாய் தொடங்கி வலுக்க ஆரம்பித்தது மழை.  சுடலை கால் மாற்றி நின்று கொண்டிருந்தான். ஆறு அடிப் பீடத்தின் அடித்தூர் சிறிது இளகி இருந்தது. வெள்ளிக்கிழமை ஆரத்தின் நார் மட்டும் தொங்கிக் கிடந்தது. முதுகில் ஆடு பற்றி ஏறிப் பிறாண்டிய நீள் கோட்டுப் புண் பொருக்கு உடைந்து பழுத்திருக்கும் போல. சற்று சாய்ந்தவாறு இருந்தது பீடம். 


அண்ணாவியின் இழுப்பிற்கேற்ப மகுடம் இரண்டும்  உச்சியேறி இறங்கி பிளிறியது. பெண் கணியான்கள் இருவரும் பீடத்திற்கு இங்கும் அங்குமாய் ஓடி ஆடிக் கொண்டிருந்தனர். 


நாக முட்டைகள் மழைக்கால இரவில் பொரிந்திருந்தது. மொத்தம் எட்டு. நல்ல பாம்புக்குட்டிகள். எட்டும் விஷப்பல் தூக்கி எதிர்வரும் அனைத்தையும் கொத்தும் பாங்குடன் நெளிந்து மொலு மொலுத்தன. விஷம் தோய்ந்த அவைகள் நீலம் மின்னும் கண்களுடன் திசை எட்டும் நோக்கி சென்றன. ஆதி விளைவு என்பது பிழைத்திருத்தல். அதற்கு அவை தன் நாக்கு தீண்டிய அனைத்தையும் விஷம் தோய்த்து விழுங்கின. அஷ்ட திக்கிலிமிருக்கும் அனைத்தையும் விழுங்கிய நாகங்கள் தன் சந்ததிகளை வானம் பூமி பாதாளம் என அனைத்திலும் விரித்துப் பரப்பின. அவைகள் நெளிந்த பிரதேசங்கள் அனைத்தும் நாகங்கள் ஆயின. நீலம் நிரம்பிய தன் அமிர்தத்தை அனைத்திற்குமாய் விளம்பின. நாகங்கள் மட்டுமே வாழும் உலகில் நாகங்கள் தவிர்த்த அனைத்தும் அவைகளுக்கு உணவாயின. எட்டு பதினெட்டாய் பல கோடி முட்டைகளாய் பலப் பல கோடி நாகக் குஞ்சுகளாய் வியாபித்திருக்க ஏனைய உயிர்கள் அனைத்தும் இடமின்றி தவித்தன. ஒரு சமயம் மற்ற அனைத்து உயிர்களும் அழிந்து போக,  நாகங்கள் தங்களைத் தாங்களே உண்ணத் தொடங்கின. அவைகள் மீண்டும் மீண்டும் பிறந்து தங்கள் வாலைத் தானே உண்டு தன்னையே அழித்துக் கொண்டிருந்தன. 


இறுதியில்

எட்டு நாகங்கள் மட்டுமே மீண்டன.  அவைகள் ஒரு வளையம் போல ஒன்று மற்றொன்றை விழுங்கத் துரத்தின .  திக்கிற்கு ஒன்று என அவைகள் உருண்டன. உருள உருள அவைகள் சூழலை உருவாக்கின. பிரபஞ்சம் முழுதும் அச்சுழலில் அடங்கியது. சுழற்சியினால் உருவாகிய அலைகள் காலத்தை உருவாக்கின. காலம் ஸ்தூலத்தை தொட்டு மீண்டன. உயிர்கள் அதன் ஸ்தூல இருப்பில் துளிர் விட்டன. பல்கிப் பெருகின. பல்லாயிரம் காத தூரம் காலம் என நிறுத்த வழியின்றி அவைகள் துரத்திக் கொண்டே இருக்கின்றன. அந்நாகங்களே  நம் மூதாதை. அவர்களே காலத்தை அறிந்தனர். உருவாக்கினர். அவைகள் காளிகள் என்று வழிப்படலாயினர். காலத்தை உண்ட காளிகள். 


அஷ்ட காளிகள். 

முத்துக்காளி 

முப்பிடாதி 

பிடாரி 

பன்றி மாடத்தி  

வண்டி மலச்சி 

வடக்குவாச்செல்வி 

சந்தன மாரி 

மாகாளி  


எட்டு காளிக்கு காவலாம் மாடன்.அந்த மாடனுக்கு ஊட்டு எடுக்க வந்தவனாம் இந்த கணியான்.


என் குருதி தொட்டு அவனுக்க படையல நான் தான் விரவிக் கொடுக்கணும். அப்பத்தான் அவன் திம்பான். இல்லைனா படையல வீசியெறிவான்.அது வாதைகளுக்கு வாய்க்கரிசியாகும்.

அப்புறம் எல்லாம் கட்ட மண்ணா ஆகும். அஷ்ட காளிமார் கொதிப்பாங்க.


ஊரு தாங்குமா. நாடு தாங்குமா. எங்கய்யா மாடா வந்து ஊட்டத் தின்னும் யா!


கணியான் நாக்கிலிருந்து குருதி கூட்டி வெந்த சோறு சூலாடு சூல்ப்பன்றி பப்படம் நெய் கமக்கும் படையலில் சொட்டினான். ஒரு மிருக லயத்துடன் மாடன் சோத்தினுள் மூங்கி எழுந்தான்.


திரும்ப மகுடம் முழங்கியது. கணியான் மாடனைத் தோள் பிடித்து தூக்கினாள். பீடத்தை சுற்றி கறங்கினர். வேதாள முகமூடி அணிவித்தனர். கதைப்பாடல் தொடர்ந்தது.


பூதங்களே வாதைகளே வா வா. பாதாள நாகங்களே வந்துருங்கோ. வந்து படையல் எடுங்கோ. எங்க மாடனுக்கு மக்கமாரே வாருங்கலே. சுற்றி நின்ற அனைவருமே நடுங்கிக் கொண்டிருந்தனர். நடுப் பீடத்தில் கிடா கட்டியிருந்ததது. சூரிக் கத்தி கொண்டு வேதாளம் அதன் ஈரக்குலையை உயிருடன் பிய்த்து எடுத்தது. ஊனும் ரத்தமும் வழிய மாடன் வாயில் திணித்தது. மிச்ச இறைச்சியை எட்டுத்திக்கிற்கும் வானிற்கும் பூமிக்குமாக வீசியெறிந்து அறைந்தது. தப்பட்டை  ஒரு குமுறல் போல தொடங்கி நடுங்கும் அதிர்வலைகளாய் புரண்டது.


அண்ணாவி உச்சஸ்தாயில் மந்திரம் ஓதினார். அவரது குரல் ஏதோ கான் மிருகத்தின் கேவல் போல மாடனின் பீடம் சுற்றி அலையாடியது.


கணியான் மாடனை ஏறிப்புணர்ந்தாள். உலுக்கி உலுக்கி பீடத்தின் நடுவில் ரத்தம் கக்கினாள். பின் மூர்ச்சையுற்று விழுந்தாள்.


கதைப்பாடல் உச்சஸ்தாயில் மாடன் மா இசக்கி கொன்ற கதை பாடியது. அவள் கருவறுத்த கதையை விளம்பியது. காளிப்புலையனின் தலை தனியாய் பிய்த்து மாடன் ஆடிய கதையை சொல்லி முடிக்கும் முன்னே கணியான் எழுந்து மாடனைத் தழுவினாள். மாடன் உக்கிரம் எழ அவள் கூந்தலைப் பற்றி எரி குண்டத்தில் வீசி எறிந்தான். 


எரிந்து கரியாய் மீந்த கணியான் திரும்பவும் மாடன் கதையைப் பாடினாள். அவள் கங்கு முழுதும் கனன்று கனன்று ஆடியது.


ஏ எங்கப்போ எனக்க மாடா எனக்க தெய்வமே எனக்க குலசாமியே 


இந்தா வாரேன் உனக்க குருதி குடுக்க  வாரேன் வந்து ஏத்துக்கோ என்னப்போ எனக்க காளி அம்மே! 


இந்தா வாரேன்!