கிறுஸ்துவின் கடைசி சபலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிறுஸ்துவின் கடைசி சபலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 4 பிப்ரவரி, 2019

கிறுஸ்துவின் கடைசி சபலம் 11


நகர் முழுதும் அறிவித்துக் கொண்டிருந்தான் அந்த நிமித்தோன். செல்லும் இடமெல்லாம் மக்கள் கூடி நின்று சலசலத்துக் கொண்டிருந்தனர். செந்தாடிக்காரன் அறை ஜன்னல் வழியே கவனித்துக் கொண்டிருந்தான்.

பெருமைப்படு. உன் சகோதரனுக்காக!

எரிச்சலுடன் கால்களை நிலத்தில் மாறி மாறி அறைந்தான்.

உன் சகோதரன் சைமனை விரோதியாக்கியதற்காக பெருமைப்படு தோழனே!

இளைஞன் கிழ் நோக்கி குத்திட்டிருந்தான். திடுக்கென்று விதிர்த்துக் கொண்டு அழுதான்.

அழுகையுடன் பேசத் தொடங்கினான்.

என்னுடையது தான். எல்லாம் என்னுடைய பிழை தான். அவன் துரத்தப்பட்டது என்னால் தான். என்னைக்  காரணமாய்க் கொண்டே அம்மா அவனை வெளியே அனுப்பினாள். நான்! நான் மட்டுமே தண்டிக்கப்பட வேண்டியவன்.

அலட்சியமாய் நமட்டுச் சிரிப்புடன் இளைஞனை பார்த்தான் அவன்.

ஒன்றே ஒன்று தான் என்னிடம் உள்ளது சகோதரா! என் வாழ்வு. அதை நான் சமர்ப்பிக்கிறேன். அதற்கான முழு உரிமையும் எனக்குண்டு என நான் நம்புகிறேன்.

அது வரை இருந்த அசைவின்மை மெல்ல நகர்ந்தது. அது ஒரு ஸ்தூல வடிவெடுத்து எடுத்து சுழலத் தொடங்கியது. ஒளி உயிருள்ள பொருள் போல தனக்குள் தானே முணங்கிக் கொண்டிருப்பது போல அறையெங்கும் அலையாடியது. அதற்கும் இளைஞனின் அழுகைக்கும் ஒத்திசைவு ஆனது போல மெல்ல சுருங்கி விரிந்து துண்டாகி நீண்டு கொண்டிருந்தது.

உன்னுடைய வாழ்வு?
அதை வைத்து யாருக்காக சூதாடுகிறாய்?
உன் சகோதரனின் கழுத்துடையும் தளைகளை உன் வாழ்வினைக் கொண்டு உருவாக்குகிறாயா?
சொல்! ஏன் நிலத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறாய். என்னைப் பார்த்து சொல். நீ கூறும் இந்த வாழ்விற்கு என்ன அர்த்தம்?

ஓன்றுமில்லை!

கேட்காதே! சகோதரா. என்னிடம் எதைப்பற்றியும் கேட்காதே!

மெல்ல அருகமர்ந்த செந்தாடிக் காரன், அவனது கண்களையே உற்று நோக்கினான். சலனத்துடன் துடிதுடித்துக் கொண்டிருந்த வண்ணத்துப்பூச்சி இறகுகளைத் தான் அவனால் எண்ண முடிந்தது. ஆம்! ஏன் இத்தனை பரிதவிப்பு. ஆழ்ந்த மௌனத்துடன் பெரு மூச்சிட்டான். பின் மெல்ல நகர்ந்து வெளியே செல்ல எத்தனித்தான்.

நகரெங்கும் மக்கள் ஆரவாரத்துடன் கூச்சலிட்டும், பேசிக் கொண்டும் இருந்தனர். அறிவிப்பினைப் பற்றி மட்டுமே அனைவரது பேச்சும் இருந்தது.சக மனிதனின் மரணத்தை அருகிருந்து பார்ப்பதைப் பற்றிய எண்ணம் அவர்களிடம் இருந்திருக்கக் கூடுமோ என்பதை ஊகித்தறிய முடியவில்லை. ஆனால் எல்லோருமே கிளர்ச்சி நிலையில் இருந்தனர். தண்டனைப் பற்றியதன்றி வேடிக்கை பார்க்கும் மனோ நிலைக்கு எல்லோறூம் இருக்கின்றனரோ என்று யோசிக்கத் தோன்றியது.


கிராமத்திற்கு நேர் எதிரே அந்த மலைக்குன்று இருந்தது. குத்துச்செடிகளும் கூரிய முட்கள் அடர்ந்த விஷச்செடிகளும் அதிகமும் அடர்ந்த வழிப்பாதை. அலையலையாய் அனல் படர்ந்த வெளிர் சாம்பல் மலை.


உன் கனவினுள் மட்டுமே நான் வாழ்கிறேன்
வலியினால் உருக்கொண்ட நிலம் என் உடல்
தன்னந்தனியினுள் அமிழ்ந்திருக்கும் வலியின் நீள் கொடுக்குகள்.
உனக்குள்ளிருந்து ஒலிக்கிறது
சாசுவதத்தின் நீள் வட்டச்சுழல் அதிர்வுகள்.
நான் இங்கிருக்கிறேன்
என்னுடன் அமர்ந்திருக்கிறது அது
என் உடலினுள் மீள மீள அதனை நான் சுவீகரிக்கிறேன்
அதன் நீர்மையினுள் காலாதீதமாய்
வீங்கிக் கிடக்கிறது தனிமைப் பிணம்
வா!
வா!
நாளையும் அதன் மறு நாளும்
இன்றிலிருந்து ஆரம்பிக்கிறது அதன் தனிமைக் கோடு
எல்லையின் 'இப்புறமும் அப்புறமும்
பல நூறு துண்டுகளாய் சதைத்து உதிர்த்து வைத்துக் கொண்டிருக்கிறேன்
வலி என்பதிலிருந்து உன்னைத் தொடர்கிறேன்
வலி என்பதிலிருந்து உன்னை அழைக்கிறேன்
வலி என்பதிலிருந்து உன்னை வெறுக்கிறேன்
வலி என்பதிலிருந்து உன்னை அடைகிறேன்
வலி என்பதிலிருந்து உன்னை கடக்கிறேன்
வலி
வலி
வலி
வலியினால் உருக்கொண்டது என் நிலம்
உன் கனவினுள் வாழ்கிறது என் வலி


எந்த உணர்ச்சியுமின்றி அவனை உற்று நோக்கினான் செந்தாடிக்காரன். பின் வெளியே சென்றான்.

வெளிர்ந்து அடர்ந்த உதிரம் உறிஞ்சும் அட்டைப் பூச்சியைப் போல அந்த நிலம் காட்சியளித்தது. மக்கள் தங்கள் இறுதிப் பிரார்த்தனைகளை அங்கு ஒரு ஆரவாரத்துடன் கூச்சலிட்டனர். அது பாம்புகள் மொலுமொலுப்பதைப் போல சூழலில் அடர்ந்தது.

மந்தையை வழி நடத்தும் கிழவன் சிமியோன். வளைந்த முதுகு. தோல் சுருங்கி திமிறும் நெஞ்செலும்புகள். குழி விழுந்த பொக்கை கன்னங்கள். பழுத்து சிவந்த புரையோடிய கண்கள். புடதியில் மட்டும் உதிராது தொங்கிக் கொண்டிருக்கும் வெண் மயிர். முட்ச்சிட்ட புருவங்கள். வரியோடிச் சுருங்கிய முன் நெற்றி. உள்ளொடுங்கிய மார்பு புடைத்து துருத்தும் தோள். காற்றிலாடும் சிறு செடியைப் போல அலையாடும் உடல். சூனியக் கிழவனின் கைகளில் சிலுவை முத்திரை.

மக்கள் அனைவரது கைகளிலும் உருளைக் கற்கள். தங்களுக்குள் பய பக்தியுடனும் அமைதியுடனும் அவர்கள் எதிர்பார்த்து நின்றிருந்தனர்.

நின்று கொண்டிருந்த மக்களை யூதாஸ் பார்த்தான். எதிரெதிர் காந்தத் துண்டங்களுக்கிடையில் நகரும் உலோகக் குண்டைப் போல ஊசலாடியது அகம்.

இன்று! இன்று! நாளையல்ல!
இன்றே! தேவனின் அற்புதம் நிகழும் நாள்.

வெறியுடனும் இளைஞனின் இல்லத்தை நோக்கி முதற் கல்லை எறிந்தாள் அவள்.

சிலுவைகள் செய்யும் இழிமகனே! செத்தொழி!

வசைகளால், நொதிக்கும் சளிப்படலம் போல தெரு உருமாறியது. எதிரில் நின்றிருந்த அனைவரும் கத்தினர். கற்கள் பெருகி பெருகி பெரும் பாறாங்கல்லாய் அந்த வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. செந்தாடிக்காரன் கதவை இழுத்து மூடினான்.

இளைஞன் மெல்ல நகர்ந்து தன் சிலுவை முன் குந்தி அமர்ந்தான். சுத்தியலை எடுத்து வேலையை தொடங்கினான். வெளி அவனை அணுகவே இல்லை.

மரத்துண்டுகளை உளி பிளப்பது போல காலமும் பிளந்து நகர்ந்தது.

செந்தாடிக்காரன் அவனை தவிப்புடன் மீண்டும் பார்த்தான். அவனிடமிருந்து சுத்தியலைப் பிடுங்கி, சிலுவையை தன் தலைக்கு மேல் தூக்கி சுவற்றில் எறிந்தான்.

நீ இதைக் கொடுக்கப் போகிறாயா?
ஆமாம்.
உனக்கு கூசவில்லை?
இல்லை.
தரையில் காறித் துப்பினான் செந்தாடிக்காரன்.

அங்கும் இங்குமாய் பரபரத்து தேடி வாய்ச்சியை எடுத்தான் இளைஞன்.

செந்தாடிக்காரனை நோக்கி மன்றாடினான்.

விட்டுவிடு! நண்பா! என்னை விட்டு விடு!
என் வழியில் நான் செல்கிறேன்.

எந்த வழி?
பெரு மூச்சுடன் அமர்ந்தன் செந்தாடிக்காரன்.

இத்தனை நாட்களில் என் நண்பனுக்கு என்னவாயிற்று?
ஏன் இப்படி இருக்கிறாய்?

கடவுள்! என சொல்ல முயன்று அடிச் சிரிப்புடன் தன்னை அடக்கிக் கொண்டான் இளைஞன்.

விடு நண்பா! நான் எனக்குள்ளேயே போராடிக் கொண்டிருக்கிறேன்.

ஏன்?

தெரியவில்லை.

யூதாஸ் பொறுமையிழந்திருந்தான். அசையாது நின்றிருந்த இளைஞனை உற்றுப் பார்த்தான். அவனது பார்வை உலகைக் கடந்திருந்தது. அவிழ்க்கவே இயலாத இருள்.

பார்வைக்கு எட்டிய தொலைவு வரை இருள். அப்பால் பள்ளத்தாக்கு. மலையுச்சியின் மோனம். காற்றின் உள்ளீடற்ற கமகங்கள். முகில்களின் மர்ம நகர்வு. ஒளி பின்னிய நிழல் உச்சிப்பாறையில் தெளிந்து அலைந்தது. அதனுள் அவன் வீசியெறிந்த சிலுவை ஒளியிலிருந்து இருளை நோக்கிக் கொண்டிருந்தது.

பார்வையை விலக்கினான் யூதாஸ்.

உன்னால்...நீ! நீ! பேச முற்பட்டு திக்கித்தான்.

சதுக்கத்தில் ஊன்றி நிற்கும் தனித்த மரத் தூண் போல மரத்து நின்றான்.

இளைஞனின் கண்கள் இறுக்க மூடியிருந்தது. அதில் தெளிவாக அந்த ஒற்றை மனிதனை அவன் அறிந்திருந்தான். அது கால காலமாய் அவனைத் துரத்திக் கொண்டிருக்கும் முகம்.





















ஞாயிறு, 2 டிசம்பர், 2018

கிறுஸ்துவின் கடைசி சபலம் 10

அவர்கள் தான்! அவர்கள் தான்!

கதவு இறுக்க மூடி அடைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொண்டான். குளம்பொலிகள் மிக அணுக்கமாய் நகர்ந்து கொண்டிருந்தன. நீர்மையினுள் கொதி குமிழியிடுவதைப் போல இருளும் ஓலியும் குலைந்த சமனற்ற ஒன்று அவனைச் சூழ்வதை. முகங்கள் மாறிக் கொண்டே இருக்கும் எண்ணற்ற ஆடிப்பிம்பங்களினுள் நிலைக்கும் தீற்றலான ஒன்று. ஆம்! ஆம்! மரப்பட்டைகளினுள்ளிருந்து பிசின் உமிழ்வது போல, அது மெல்ல மெல்ல பொள்ளிக் கொண்டிருந்தது.

அன்று புழுவைப் போல நெளிந்து கொண்டிருந்தேன். பலவீனமான என்னிடமிருந்து அவர்கள் அதைத் தான் எதிர் பார்த்திருக்கக் கூடும். எப்பொழுதும் எப்பொழுதும் சுற்றியிருக்கும் பார்வைகளில் முழுக்க நிர்வாணப்பட்டிருப்பதை நான் உணர்கிறேன். சிறு வயதிலிருந்தே எந்த களியிலும் எவருடனும் இணையாமலேயே தனிக்கப்பட்டிருந்தேன். பின்பான சமயத்தில் பொருக்குகளை உடைத்துப் பிய்க்கும் வதையில் ஆசுவாசப்பட்டுக் கொள்வேன்

இன்னும் என்னை அவன் தொடர்ந்து கொண்டிருக்கிறான். நெருக்கமாக நகரும் இந்த சப்த அலைகள் அந்த வருகையத் தான சலனிக்கின்றன.

கதவு உந்தி இழுபட்டது. வெளியிலிருந்து யாரோ அல்லது எதுவோ முழு வலுவுடன் அதை மோதியது. தாழ்ப்பாள் உடைந்து சிதறியது. அலையும் கதவுகளின் இடைவெளி வழியே அவன் தெரிந்தான். செந்தழல் சுருட்டை முடியும் நீள் தாடியும் கொண்ட மனிதன். வேட்டை மிருகம் போல இளைஞனை நோக்கிக் கொண்டிருந்தான் வெளியிலிருந்து.

மெல்ல் அறையினுள் நுழைந்தவன்.  அறையெங்கும் சிதறிக்கிடந்த பொருள்களை ஒவ்வொன்றாக நோக்கினான். அறை முற்றிலுமாக உலகினிலிருந்து தனித்து விடப்பட்டிருந்தது. வெளியின் ஜன நடமாட்டம், பல்லாயிரம்  புழுக்கள் ஒரு சேர நெளிவது போல நகர்ந்து கொண்டிருந்தது வீதியெங்கும்.

முக்கில் கிடந்த இருப்பு பலகையில் அமர்ந்து உத்தரத்தில் தொங்கும் சிலந்தி வலைகளை மையமின்றி வெறித்துக் கொண்டிருந்தான்.
நிசப்தம் பல்லிடுக்கில் மாட்டிக் கொண்ட உணவுத்துணுக்கு போல தென்னியது.

நீ தயாராகி விட்டாயா?

செந்தாடிக் காரன் மெல்ல அவனின் மணிக் கட்டுகளை அழுத்தி பழுப்பு நிற பற்கள் தெரிய அருகமர்ந்தான்.

நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?

வெளியிலிருந்து நீண்ட பட்டைக் குழாயாய் ஒளி அறையினுள் குமிழ்ந்தது. பாதி இருளினுள் அவனது முகம், பாதி ஒளிர்ந்தது. வலியினால் இம்சித்துக் கொண்டே இருக்கும், ஏக்கங்களால் தீய்ந்து கொண்டே இருக்கும் ஒரு பாதி. மற்றொன்று அடர்ந்து கனத்த தோல். அசைவின்றி அமிழ்ந்து கிடக்கும் உலோகத்துண்டு. ஒன்றில் ஒன்று முரணிட்டு குலைந்து குவிந்து முயங்கி அளைந்து கொண்டிருந்தது.

நீ தயாராகி விட்டாயா?

முரசரைந்து வந்து கொண்டிருந்தது  ரோமன்படைவீரர்களின் அணிவகுப்பு!

இன்று! இன்று! இஸ்ரவேலின் தெய்வமே! நாளையல்ல!
இன்று! இன்று மட்டுமே!

தன்னுள் நடுங்கிக் கொண்டிருந்த இளைஞனை உலுக்கிக் கேட்டான். ஆம்! நீ தயாராகி விட்டாயா?

இல்லை! வேண்டாம். நீ அதை செய்யக் கூடாது. நீ அதை தூக்கி வராதே!

மக்கள் அனைவரும் சதுக்கத்தில் குழுமியிருந்தனர்.

செந்தாடிக் காரன் இளைஞனை கூர்ந்து நோக்கினான். அறையின் ஓரத்தில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த சிலுவையைக் கீழே சரித்து உடைக்க முயன்றான். காறி உமிழ்ந்தான். நீ! நீ! நீ!

அவன் வருகையை நீ அறிகிறாயா? அந்த வெற்றிக் கூச்சல் உனக்கு கேடகவில்லையா? அது அறிவிக்கப்பட்டு விட்டது. உனது மாமா, அந்த போதகரிடம் போய்க் கேள்.

உனது போதகர், நேற்று பிரார்த்தனைக் கூட்டத்தில் முறையிட்டார்.

ஏன், நமது ரட்சகன் வரவில்லை. அவன் வரப்போவதுமில்லை. நாம் நம் காலம் முழுமைக்கும் பாவங்களில் புதைந்துழன்று வழியின்றி பரிதவித்து பின்னும் பின்னும் அதன் கனத்த கண்ணிகளில் கொளுத்தப்பட்டு, நம் நம்பிக்கைகளெல்லாம் பிடுங்கப்பட்டு அம்மணமாய் தொங்க விடப்படுவோம். எதிர்காலத்தின் நிச்சயமின்மையால் நம் பார்வைகள் குருடாக்கப்படும். சொற்களின் பலனின்றி செவிடாக்கப்படுவோம். முடிவிலி தொலைவு வரை கடவுளர்களுடன் சண்டையிட்டு பலியாவதே நமக்கு விதிக்கப்பட்ட ஊழ்.

ஆம்! அது உண்மையும் கூட. நமக்கு கடவுளர்கள் போதாது. கழுத்து கவ்வத் துடிக்கும் அதன் கூரிய பற்களை நான் தினமும் காண்பவன். நாம் மோதியே ஆக வேண்டும். காலம் அனைத்தையுன் நிர்ணயிக்கட்டும்.

நீ எங்கிருக்கிறாய்? என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்? கனவுக் கண்களுடன் இமைக்கும் இளைஞனை உலுக்கினான் செந்தாடிக்காரன்.

இன்றே! இன்றே! அவன் நாதியற்று தொங்கப்போகிறான்.  என்ன செய்வது. ஒருவேளை அவன் தானா? நாம் தேடிக் கொண்டிருக்கும் ஒருவன். நம் ரட்சகன்.  இஸ்ரவேலைக் காக்கும் தேவமைந்தன். எந்த உதவிகளும் கிடைக்கும் வழியின்றி வலியில் துடிதுடிக்க சாகப் போகிறானா? தன்னை வெளிப்படுத்தும் சிறுகணம் கூட அறியப்படாமல் பிணமாகப் போகிறானா? துருவேறிய ஆணிகளினுள் அவன் கைகால்கள் அறையப்படும் பொழுது, முழுக்க முழுக்க மனிதனாய் வதைபட்டு வெற்றுக்கூடாய் ஆன பிறகு. என்ன நிகழ்ந்து விட முடியும்.

செந்தாடிக்காரன் பேசுவது பெரும்பாலும் தனக்குள்ளேயே தான். எதிராளி ஒரு வெற்று சுவர். தன்னுள் தர்கித்து ஒரு சுழல் போல அவனது குரல் அறையெங்கும் அலையெழுப்பிக் கொண்டிருந்தது.

இல்லை! இல்லை!

அவனை காப்பாற்றியாக வேண்டும். அவனை மீட்கும் பொருட்டு எதிர்ப்பவர்கள் அத்தனை பேரையும் கொல்லலாம்.  நாம் அவனைக் காப்பாற்றியாக வேண்டும். அதிசயங்கள் நிகழும். நம்பிக்கையின் மீது நம்பிக்கை கொள்வோம். நாங்கள் சாக விடமாட்டோம். டேவிட்டின் ஒளி பொருந்திய முடி அவன் தலையினை அலங்கரிக்கும். அவனே விண்ணிற்கும் மண்ணிற்கும் அரசன்.

நீ கேட்கவில்லையா? தச்சன் மகனே?

எதிரே பழுத்த சுவரைப் பிளந்து அறையப்பட்டிருந்த களிம்பேறிய ஆணியில் குத்திட்டு நின்றது இளைஞனின் கண்கள். அதன் முனையின் வட்டச்சுழியில் நிலைத்திருந்தது அது. அடுத்த அறையிலிருந்து கிழவரின் வலி பொருந்திய சொல் அடித்தொண்டையிலிருந்து விம்மி உடைந்து சிதறி அரையெங்கும் உதிர்ந்தது.

எதிரெதிர் கூர் நுனிகள். எதிரொலிக்கும் பள்ளத்தாக்குகள். அசைய மறுக்கும் குத்துப்பாறைகள்.  சுழன்று கொண்டே இருக்கும் நீள் வட்டச்சுருள்கள்.

மனிதன்! மனிதன்! எல்லாம் போலி! போலி!

நமது ரட்சகன் இந்த வழியில் வரப் போவதில்லை. சுவரை வெறித்துக் கொண்டே நடுங்கும் குரலில் இளைஞன் பேச ஆரம்பித்தான்.

ஆம்! என்றுமே இங்கு வரப்போவதுமில்லை.

தேவனோ மனிதனோ யாருமே வரப்போவதில்லை. நாம் பூனையின் கூர் நகங்களுக்குள் பந்தாடப்படும் சுண்டெலி போல மரணத்திற்கிடையில் நித்தியமாய் அகப்பட்டுக் கொள்வோம். எந்த மணி மகுடமும் அரசாண்மையும் அவனுக்கு கிடைக்காது. அம்மணமாய் அவன் சிலுவையில் தன்னந்தனியே அறையப்படுவான். காலத்தினுள் கரைந்தொழிவது ஒன்றே அவனுக்கு சாத்தியப்படும். கொதிக்கும் குத்துப்பாறைகளுக்கிடையில் தனித்த பிணமாய் அவன் எஞ்சுவான். எந்த தேவனும் அவனுக்காக வந்திறங்கப் போவதில்லை.

உனக்கெப்படி தெரியும்? யார் சொன்னார்கள்?

பதிலேதுமின்றி ஜீர வேகத்தில் எழுந்தான். பகலின் வெளிச்சம் அறையின் அந்தரங்கங்களை ஊடுருவிப் பரவியது. கையில் உளி, சுத்தியல் மற்றும் ஆணிகளை எடுத்துக் கொண்டு கீழே கிடந்த சிலுவையினை அணுகினான்.

உனக்கு வெட்கமாக இல்லை. எல்லோரும் எல்லா தச்சர்களும், நாசரேத்திலும் கனாவிலும் கப்ரேனிலும் ஒதுக்கிய கீழ்மைச் செயலை நீ செய்து கொண்டிருக்கிறாய்.

இளைஞனைப் பிடித்திழுத்து சுவரோடு சுவராக பதித்து, ஓங்கி அறைந்தான்.

நீ ஒரு சுய நலமி என்றான். ஆனால் அவனது கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்தான். ஏன்? ஏன்? அது மிகுந்த தன்னிரக்கத்தை உண்டு பண்ணியது.

பசித்த மிருகத்தின் மூச்சினைப் போல, பாலைக் காற்றின் அலைச்சல்.  காய்ந்த முட் பரப்பாய் சாம்பல் வான். உள்ளும் புறமுமாய் பூச்சிகளின் மென் உராய்தல். மரங்களின் பருத்த அடித்தண்டை ரம்பத்தினால் கீறுவது போல, அந்தக் குரல் அன்னகரின் வீடுகளின் சுவர்களைப் பிளந்தது. செந்தாடிக் காரன் மெல்ல கதவினருகில் வந்து கவனித்தான்.  பெரும் மக்கள் திரள். அவர்களின் அழுகை, விம்மல், எல்லாம் குழம்பி துண்டிக்கப்பட்ட இசைக்கருவியின் ஒற்றை நரம்பைப் போல ஓலமிட்டது.

மக்களே! ஆப்ரகாமின் உதிரத் துளிகளே! ஈசாக்கின் வழி வந்தவர்களே! ஜேகோபின் பிள்ளைகளே!

கேளுங்கள்!

மாட்சிமை பொருந்திய நம் பேரரசின் கட்டளை என்னவென்றால், நமது வீழ்ச்சியடையா செங்கோல் ஏந்திய மாமன்னரின் ஆணை. அவரை எதிர்த்த கலகக்காரனுக்கான தண்டனையை நிறைவேற்றப் போகிறோம்.  நாட்டின் துரோகியை சிலுவையில் அறைந்து கொல்லும் தண்டனையை நாட்டு மக்கள் அனைவரும் காணவேண்டுமென்பது அரச கட்டளை!

-The Last Temptation of Christ -Nikos Kazantzakis


சனி, 24 நவம்பர், 2018

கிறுஸ்துவின் கடைசி சபலம் 9

அறை முழுதும் வியாபித்திருந்த உள்ளீடற்ற தன்மை.

முடியவில்லை! முடியவில்லை! வேண்டாம்!

ஒரு படலமாய் காட்சிகள் உருளத் தொடங்கின. நினைவின் பொந்துகளிலிருந்து மெல்லப் பத்தி உயர்த்தியது நிகழ்வுகள். நெசவு ஓடத்தைப் போல முன்னும் பின்னும் நகர்ந்தது காலம்.

ஒரு திருமண நாளாக அது இருந்திருக்கக் கூடும். காலைப் பொழுதின் ஒளியின் பச்சை அரும்புகள் தளிர்த்த சைப்ரஸ் மரங்கள், பெண்டுலம் போல அசைந்தாடிக் கொண்டிருந்தது. ஈச்ச மரங்களில் குருவிகளின் கீச்சிடல். பல்லாயிரம் சிறகடிப்புகள் தலைக்கு மேலே. பனி படர்த்திய மேகங்களின் இடைவெளியினுள்ளிருந்து ஒளி மஞ்சள் பிரகாசத்துடன், துலக்கமற்ற ஒளியினூடாக அவர்கள் அந்த தோட்டத்தினுள் நின்று கொண்டிருந்தனர். விசேஷ நாளுக்கே உரிய குதூகலம் ததும்பும் முகத்துடன் அவர்கள் தங்களுக்குள் உரையாடிக் கொண்டும் வரவேற்றுக் கொண்டும், விசாரித்துக் கொண்டும் இருந்தனர்.

ஜோசப் மிகுந்த மகிழ்ச்சியுடன் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்றுக் கொண்டிருந்தார். வைன் மற்றும் மாவினால் செய்யப்பட்ட இனிப்பு பலகாரம் எல்லோருக்கும் பரிமாறப்பட்டிருந்தது. ஒவ்வொருவரையும் தனித்தனியே அருகில் சென்று அணைத்து ஜோசப் உரையாடிக் கொண்டிருந்தார்.

ஏன்? ஏன்? அது நிகழ்ந்தது?
கேவிக் கேவி எழும் அழுகை...
நான்! நான்! நான்! என்று பிதற்றிக் கொண்டே இருந்தான் இளைஞன்.

தனது தந்தைக்கருகில் பிரமை பிடித்தவன் போல நின்று கொண்டிருந்தான் அவன். அவரைத் தூக்க கூட முயற்சிக்காமல் வெறுமனே வெறித்தான். தலை குப்பற அவன் முன்னே கைகால்கள் முறுக்கிக் கிடக்கும் ஜோசப்பின் நிலை குத்திய விழி அவனை சந்தித்து ஸ்தம்பித்து நின்றது. மெல்ல அவரை மடியில் இருத்தி கன்னங்களை தடவிக் கொடுத்தாள், செவுளில்  இரு முறை அறைந்து அவரை பெயர் சொல்லி விளித்தாள், அவனின் தாய் மரியம்.

நானும் அவரது நகல் தான் ஒரு வகையில்.  ஆம்! பயம்! அதிலிருந்து தப்பிக்கவும் அதனுள் சிக்கி அலைக்கழியவும் தானே நானும் செய்து கொண்டிருக்கிறேன் அவரைப் போலவே. தன்னால் ஆழம் காண முடியாத, மறுமுனை எங்கோ பிணைக்கப்பட்டு கட்டுண்டு கிடக்கும் வன விலங்கைப் போல.

என்னால் என்ன செய்ய முடிந்தது?

இவர்கள் அனைவருக்கும் நான் அளிப்பது ஒரு நுகத்துடியைத் தான். அவர்களை விட்டு காலத்துக்கும் அகலாத பாரத்தை நான் அளித்துக் கொண்டிருக்கிறேன்.

என் தந்தை? மக்தலேனா? இவர்கள் ஏன் என் வாழ்வினுள் வந்து சிதைந்து கொண்டிருக்கின்றனர்?

உனது சொந்தத் தேடலுக்கு பலியிடப்பட்டவர்களா அவர்கள்?

சொந்தக் காயங்களை  தன் நாவினாலேயே நக்கி நக்கி  ஆசுவாசப்பட்டுக் கொள்கிறேன். ஒவ்வொரு இரவிலும் அது நீண்டு கொண்டே இருக்கிறது, என்னைச் சுற்றி நானே உருவாக்குகிறேன் இந்த பாழ் குழியை. அதனுள் அடியாழமேயற்ற சூனியத்துனுள் விழுந்து கொண்டே இருப்பதையே என் கனவுகளிலும் நனவிலும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

ஒரு பிரார்த்தனை போதும் என்னை மீட்டெடுக்க. சுயமிழந்து விடுதல். உன் பெரும் மழையின் ஒற்றைத் துளியாவது. உன் வானத்தில் இலக்கற்ற சிறகுகளாவ்து! உன் பூமியில் மறுதலிக்க முடியா விதையாவது! உன்னிலிருந்து முளைத்துக் கொண்டே இருப்பது. ஆனால்! ஆனால்! நான் நான்! எங்கும் முளைக்கப் போவதில்லை.

ஒற்றைச்சொல்! தந்தையின் நாவிலிருந்து வழுகி வழுகி தரையெங்கும் நசுனசுத்தது.

தன்னை ஒவ்வொரு அணுவாகப் பிளந்து கொள்வதைப் போல, கூர்மையான உகிர்களால் அந்தக் குரல் அவனிடத்தில் இறைஞ்சிக் கொண்டிருந்தது. அண்டை வீட்டிலிருந்து மெல்ல முன் நகர்ந்து கொண்டிருந்தது ஒரு ஒற்றை விளி.

மரங்களும் தளிர்களும் புல் பூண்டுகளும் நிலமெங்கும்  ஆகாயத்தின் ஈரத்தை உறிஞ்சி காலையை எழுப்பியது. சந்தடிகளில் மனிதர்களின் நெடி. ஒளித்துளிகள் விண்ணின் நாவாய் தன் கிரகணத்தின் வெண் சிவப்பால் நேற்றையதின் அழுக்குகளை ஒற்றியெடுத்துக் கொண்டிருந்தது.

அவன் தன் முன்னே வெறிக்கும் பழுப்பு நிறச்சுவரை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

தெருக்கள் வழமையாய் ஓடத் தொடங்கியது. ஒரு மீறலின் ஓலம். பித்து மொழியில் அவனை சூழ்ந்து குழுமியது.

நீ மரந்து விட்டாயா? ஓ! இஸ்ரவேலின் தெய்வமே! இன்னும் எத்தனை காலம்? இந்த ஏழைகளை நீ ஏமாற்றி விட்டாயா?

தழும்பும் நீரலைகளைப் போன்ற கேவலுடன் தயக்கமுற்று அந்தக் குரல் அந்தர வெளியில் நடுங்கிக் கொண்டிருந்தது.

முன் நெற்றி தரையில் வீழ அவர் பரிதவித்தார். தேவனே! எம்மை ஏற்றுக் கொள்ளும்! ஆற்றாமையின் ஏக்கத்தின் பலவீனத்தின் அலைவுகளுடன் ததும்பிக் கொண்டிருந்தது அந்த பிரார்த்தனை.

இளைஞன் தன்னுள் அழுந்துவது போல சுவரை ஓங்கி அறைந்தான். உள்ளங்கையின் அடிப்பாகம் கன்றிச் சிவந்தது.

தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான்...ஆம்! பிரார்த்தனைகள். மறுமையைத் தேடிக் கொண்டிருக்கும் அனல் கங்குகள். பற்றிக் கொள்ள விழையும் தழல் நுனிகள். இவையல்ல! இவையல்ல! நான் தேடுவது. குளக்கரையின் நுனிகளில் எந்த இலக்குமின்றி அலைந்து கொண்டிருக்கும் பாசிகளைப் போல இருக்கின்றன எனது தேடல்களும் பிரார்த்தனைகளும்.

தொய்ந்து ஊசலாடும் ஆடைகள், தோளிலிருந்து நழுவி தொங்கியது. வெளிரியிருந்த அவனது உடலில், புஜங்களும் உள்ளங்கைகளும், மணிக்கட்டை நரம்புகளும் சற்றே புடைத்திருந்தன. அனிச்சையாய் ஆடைகளை இழுத்துக் கொண்டே அவரது காலடிகளில் தளர்வுற்று வீழ்ந்தான், தாகம் கொண்ட வனமிருகம் தடாகத்தினுள் தலை முக்கிக் கொள்வது போல.

உள்ளொடுங்கிய வாதை மீதிறும் பதற்றம் தொக்கிய மிரட்சி ஒரு நிலைத்த பாவமாய் அவன் முகத்தில் இருந்தது. கன்னங்களில் தாடையில் அடர் சுருள் தாடி. சற்றே நீண்ட வளைவில்லாத மூக்கு. வரியோடிய உதடுகள் பிரிகையில் பழுப்பு நிறப் பற்கள் தெரிய சிரித்தான். தகிக்கும் விழிகள், சொப்பனங்களின் நீள் வட்டத்தை சதா சுற்றிச் குழன்று கொண்டே இருக்கும் போதைத்தன்மையைக் கூட்டியது.

தொலைவின் அப்பால் பல்லாயிரம் நிழல்களின் அடர்சுழல்.

-The Last Temptation of Christ -Nikos Kazantzakis

புதன், 21 நவம்பர், 2018

கிறுஸ்துவின் கடைசி சபலம் 8

அவனது கட்டிலைச் சுற்றி பல்லாயிரம் கால்களுடன் ஊறும் பூரானைப் போல ஒரு குரல் இல்லை ஒரு முணங்கல். சுவாசம் திணறத் திணற அடைபட்டு திமிறிய இளைப்பில், அது ஒரு மனித விளி போலவே இல்லை. பக்கத்து அறையில் இருந்த அவனது தந்தை. இளைப்பு நோயால் இரவு முழுமைக்கும் விடுபட்டு விடுபட்டு முணங்கிக் கொண்டிருந்தார். முடக்கு வாதத்தால் ஒடுங்கிய உடல், முதுகெங்கும் புண்கள். உறக்கமின்றி ரத்த சிவப்பாய்க் கன்றியிருந்தன கண்கள். வார்த்தைகளை கோர்க்க முயன்ற எத்தனிப்பில் சிதறிய மொழியாய் அவரது குரல் எதொரொலித்தது.வாயோரத்திலிருந்து வழிந்த எச்சிலை புறங்கையாய் துடைக்க எண்ணி இழுபட்டு முறுக்கினார். ஒரு ஒற்றைச்சொல்! ஒலிப்படலமாய் அறையின் சுவரெங்கும் சார்த்தியது,
பிதாவே! என் பிதாவே!

ஒற்றைச்சொல்லைத் திரும்பத் திரும்பத் திரட்டிக் கொண்டிருந்தார். நாள் முழுமைக்குமான பிரார்த்தனையாக அது இருந்தது.

இது என் தவறு! பெரும்பாவம்! பெரும்பாவம்!

இளைஞன் தன்னுள் ஆழ்ந்து அழுது கொண்டிருந்தான். இரவு இத்தனை அமைதியாக இருப்பது சூழலை இன்னும் கனத்தது. அந்த ஒற்றைச்சொல் மந்திர உச்சாடனை போல இவனது நாவிலும் நிலைத்தது.

அகன்ற கிணற்றின் சுவர்களில் முளைத்துக் கொண்டிருக்கும் தாவரங்களைப் போல உறக்கம். பாதி செதுக்கி வைத்திருந்த குறுக்கும் நெடுக்குமான கட்டைகளைத் தாண்டி வாசலில் நின்று கொண்டிருந்தான் செந்தாடிக் காரன். தழலிடும் புன்னகையுடன் அதை நோக்கினான். ஒரு முழு மனிதனை தொங்க வைக்க ஏதுவாக அது அமைக்கப்படிருப்பதை பார்வையாலேயே கணக்கிட்டுக் கொண்டு மெல்ல அவன் அருகில் நெருங்கினான்.

கனவுதான் கனவல்ல. வெளிச்சத்திலிருந்து இருள் நோக்கி செல்லும் நிலம். உறக்கம் துளை வண்டாக உரு மாறி அவனுள் குடைந்து குடைந்து மெல்ல முன்னேறிக் கொண்டிருந்தது.

சுவரை வெறுமனே பார்த்து வெறித்துக் கொண்டிருந்தான் இளைஞன். தலைக்கு மேலே வார்ப்பட்டை தொங்கிக் கொண்டிருந்தது. அதன் கூர்நுனிகளில் இன்னும் முழுதாய் காயாத ரத்தம் தோய்ந்திருந்தது. நிணத்தின் உப்பு நாற்றம் இன்னும் அடங்கியிருக்கவில்லை. வலி! உண்மையில் அதைப் போல ஆசுவாசப்பட என்ன இருக்கிறது. தனிமையினுள் அதை மட்டுமே துணைக்கு வைத்திருக்கிறேன். ஆம் அருகில் ஸ்தூலமான இன்னொரு உடல் போல அது எப்பொழுதும் என்னுடனேயே இருக்கிறது. மறுதலிக்க முடியாத ஒன்றை கூட்டாக வைத்திருப்பதன் மூலம் நான் என்ற ஒன்றிலிருந்து வெளிவந்து விடுகிறேன். என்னைச் சுற்றிக் குழுமும் அனைத்திலும் ஊதி ஊதி பெருக்கிக் கொள்ள என்னிடம் என் வலி உண்டு என்பது மட்டுமே இன்னும் ஒரு இரவைக் கடப்பதை சாத்தியமாக்குகிறது.

தன்னைத் தானே கொல்ல விரும்பும் உவகை! உடல் மட்டுமேயானது நம்முள் நிரம்புகையில் அதன் குறுகிய எல்லையினை, அதனுள் பதுங்கிக் கொள்ளும் பொழுது உருவாகும் போதையினுள் மெல்ல மெல்ல அமிழத் தொடங்கி விடலாம். அதன் பின்னான உறக்கத்தில் நான் எனும் உணர்வற்ற ஒன்றை உருவாக்கிக் கொள்வான். தன்னிலிருந்து மீள வேறு ஆது வழியும் அவன் அறிந்திருக்கவில்லை.

ஆனால் உறக்கம் அதனை மட்டும் கொண்டிருக்கவில்லை. சுயமற்ற ஒன்றினுள் முழுகியவுடன் வேறோரு திறப்பினுள் வந்து வீழ்வான். அங்கு கட்டுண்ட தனது உடலையே மறுபடியும் காண்பான். நெருங்க நெருங்க கை கால்கள் இழுபட தசைகள் முறுக்க கீழே விழுந்து துடித்துக் கொண்டிருப்பான். வாயில் நுரை தப்ப அரைபடுகையில் கட்டுப்பாடற்ற வன் கரங்களின் மத்தியில் நசுக்கப்பட்டுக் கொண்டிருப்பான். விழிப்பு தட்டியதும் தன்னிரு கைகாளலேயே தன் உடல் முழுமைக்கும் தொட்டுப்பார்த்துக் கொள்கையில், அந்த ஒற்றைச்சொல் எதிரொலிக்கத் தொடங்கும். பல்லாயிரம் குரல்களின் ஊடாக அதனைக் கோர்த்துக் கொண்டிருக்கும் சரடாய் இருள் அறையினுள் அங்கும் இங்குமாய் நகர்ந்து கொண்டிருக்கும்.

-The Last Temptation of Christ -Nikos Kazantzakis

செவ்வாய், 20 நவம்பர், 2018

கிறுஸ்துவின் கடைசி சபலம் 7


குறுக்கு மறுக்காக வெட்டிப் பிணைக்கப்பட்ட நீள மரத்துண்டுகள். இன்னும் முழுதாய் சீவி முடித்திருக்கவில்லை. செதில்கள் பிளந்து தடிமனாய், மேடும் பள்ளமுமாயிருந்தது. மரச்செதுக்கியும் மற்ற உபகரணங்களும் அங்காங்கு சிதறிக் கிடந்தது. குன்றியிருந்த அறை வெளிச்சத்த்தை ஜன்னல் கம்பிகளின் இடைவெளி வழியே உறிஞ்சிக் கொண்டிருந்தது இருள். மேகங்களற்ற வானம். மலைத்தொடரின் கோட்டு வெளிச்சத்தில் உப்பிக் கொண்டிருந்தது. நட்சத்திரங்கள் குழந்தைக் கண்களின் வியப்பில், வெளியை சுழற்றி மீண்டது.

கை கால்களை அசைக்க முடியவில்லை.  அது மார்பின் மேலே அழுந்திப் புரண்டது. தொண்டைக் குழியில் சிக்கிக் கொண்டிருந்தது வெளியிடத் துடித்துக் கொண்டிருந்த அலறல். அழுத்தம் கூடக் கூட தண்ணிருக்குள் உணர்வது போன்ற விரைப்பு அவனது உடல் முழுமைக்குமாய் அதிர்வுற்றது. பெரும் பாறாங்கல்லை நகர்த்தும் பாவத்துடன் எழுந்தடங்கினான். அசைய முடிந்தது. பதற்றத்துடன் எழுந்து உட்கார்ந்தான். முதுகுக்கு பின்னால் பயங்களின் அரூப உருவம் ஒன்று முளை விட்டுக் கொண்டிருப்பதைப் போல. அறை இருளின் குழியிருந்து புகை போல தன்னைச் சுற்றி பரவுவதாய் நினைத்து விதிர் விதிர்த்தான்.

அறையினுள் வெளிச்சம் முழுதாய் உட்கிரகிக்கப் பட்டு இருள் தன்னுள் போர்த்திக் கொண்டது. காற்று கூட புக முடியாத வண்ணம் அறையினுள் இருந்த திறப்புகளையெல்லாம் அடைக்கத் தொடங்கினான். இருளினுள் தான் மிக பாதுகாப்புடன் இருப்பதைப் போலவும் அதே நேரம் வெகு காலமாய் இதற்காகவே காத்துக் கிடந்த ஒன்றின் வாயினுள் தான் அகப்படுவதைப் போலவும் ஒரு சேர உணர்ந்தான். இருந்தும் வெளியுடன் இருந்த தொடர்பை முற்றிலும் தவிர்ப்பது மூலம் தப்பித்து விடலாம் என்று ஜீர வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தான்.

அது நெருங்கிக் கொண்டிருக்கிறதா?
அவர்கள் வந்து விட்டனரா?

சுவரோடு சுவராக தன்னைப் பதிந்து கொண்டு தன்னை நோக்கி வந்து கொண்டிருக்கும் அந்த இரைச்சலை கவனித்தான். ஆம்! ஆம்! நான்! நான்!

இருளினுள் சப்தங்கள் முளைக்கும் ஒவ்வோர் தருணத்திலும் முணுமுணுத்தான்.

நான்! நான்!

கொப்புளமிட்டு சுருங்கி விரியும் உருவங்களின் திமிறல். மொத்த கிராமமும் நீரின் அடியில் வயிறு வெடித்து ஊறிக் கனத்துக் கிடக்கும் வன மிருகம் போல மிதந்து கொண்டிருந்தது. இரவின் அடர் கருமை விழுதுகள் முளைத்து நிலைத்து பதிகிறது. விழிப்புக்கும் போதைக்குமிடையில் நகர்கிறது பிரஞ்சை. என்னெதிரே கிடக்கிறது பல்லாயிரம் தடவை குதறப்பட்ட பிணம். என்னுடலா?

என்னுடலா?
எழுந்திரு! எழுந்திரு! எழுந்திரு!

நிழல்கள் மட்டுமே சூழ்ந்திருந்தது அறையினுள். துண்டு வெளிச்சம் மெல்ல மெல்லப் பரவத் தொடங்கியதும் சுற்றிலுமிருந்த பொருள்கள் உருக்கொண்டன. வெளியின் காற்றை அகம் உணர்ந்தது. சருகுகள் இடையில் குமைந்தது அகம். உதிர்ந்து கொண்டிருந்த சருகுகள் ஆழம் பொதிந்த நதியைப் போல அறையின் விளிம்புகளில் அலையாடியது. ஏதோ மன்றாட்டைப் போல, அந்த ஊளை நிசப்த்ததை துளைத்துக் கொண்டு அரையெங்கும் எதிரொலித்தது. ஒவ்வொன்றும் ஒவ்வொன்றிலும் ஸ்பரிசித்து தொடர்புறுத்தியது. கட்புலனாகாத சமிக்ஜைகள் அங்குமிங்குமாக பரவிக் கொண்டிருப்பது, முடிவேயற்ற கண்ணிகளில் கோர்க்கப்பட்டுக் கொண்டே இருக்கும் சப்தங்களின் தொடர்ச்சியான நிகழ்வுகள் அவனுள் இன்னும் தன்னுள்ளே இருந்து வெளி வர இயலாத, அச்சத்தை மேலும் மேலும் கூட்டிக் கொண்டே இருந்தது. அறை உயரமான மலைப்பாறையாக உருமாறியது, எங்கும் நீக்கமுறக் குளிர். எதிரொலிகள் அவனுள் இருந்து கிளம்பி அவனுள்ளே சென்று பல்லாயிரம் பிம்ப அதிர்வுகளாக அவனை மூடியது.

தான் ஒருவன் மட்டுமே இவ்வுலகில் மிச்சமிருப்பதைப் போல தொண்டை நரம்புகள் இழுபடக் கத்தினான். அவனது குரல் பாளம் பாளமாய் நொறுங்கத் தொடங்கியது.

-The Last Temptation of Christ -Nikos Kazantzakis

திங்கள், 19 நவம்பர், 2018

கிறுஸ்துவின் கடைசி சபலம் 6

நீங்கா தண்டனைகளின் பெரும்பாரம் சுமக்க வாய்க்கப்பட்டவர்களே! சுமடுகளின் கனம் தலையழுந்துகிறதா? துதித்து மரணியுங்கள். மரணித்திருப்பது மட்டுமே உங்களுக்கு விதிக்கப்பட்டது. தன் உப்பின் துளியிலிருந்து உங்களைப் படைத்தான். கீழ்மையின் அடிமண்டிய பரப்பில் மிதக்கும் அமைதியில்லாத வேதனையின் குரல்களை அவனறிவான்.

நீங்கள் பிரார்த்திக்கிறீர்களா?

உண்மையை, நன்றியுணர்தலை தொட்டதுண்டா நீங்கள்? உங்களின் பாவங்களுக்காக இறக்கும் கடவுளை நோக்கியிருக்கிறீர்கள். உங்களின் முதுகுத்தோல் செதில் முளைத்திருப்பதை பார்க்கிறேன். இரைக்காக சதா காத்துக்கொண்டு உருண்டு கொண்டிருக்கும் பார்வையினுள் அதை நான் எப்பொழுதும் கண்டிருக்கிறேன்.

இன்னும் எத்தனை காலம். பிதாவே! இன்னும் எத்தனை காலம்! காலம்  எங்களை மலைப்பாம்பை போல  சுருட்டி விழுங்கிக் கொண்டிருக்கிறது. அண்ணாந்து வானத்தை நோக்கினான். விண்மீன்களின் அனந்தப் பெருவெளி. ஓராயிரம் விழிகளுடன் சொர்க்கத்தின் தூயமணிகள் கிணுங்க பூமியைப் பார்த்து சிமிட்டிக் கொண்டிருக்கிறது. காற்றின் தாள கதி மெல்ல மெல்ல உயர்ந்து குறுகிப் படர்ந்து ஒரு சிலந்தி வலை போல அவர்களைச் சுற்றிக் குமைந்தது. தூய வானின் கீழ் பலிக்காக காத்திருக்கும் இரைகளைப் போல அந்தர வெளியில் அவர்கள் அசைவின்றி நின்றிருந்தனர். பாலை மணற்துகள்கள் பதற்றமுற்ற முதியவனின் விரல்களைப் போல அவர்களி ஸ்பரிசம் தொட்டு தொட்டு இறைஞ்சியது.

செந்தாடிக்காரன் ஒவ்வொருவராய் தனித்தனியாய் பார்த்து சிரித்தான். ஏதோ விழுங்க இயலாத ஒன்றை மெல்ல மெல்லக் கரைத்து தனக்குள் இட்டது போல  பற்களும் ஈறுகளும் தெரிய வாய் பிளந்து சிரித்தான். ஆனால் சப்தம் ஏதும் வெளிப்படவில்லை.

கிறுக்கன்! கிறுக்கன்!
எல்லாம் இழந்தாகி விட்டது. அறிவு! உள்ளுணர்வு! புத்தி!
நம் தேவதூதனுக்காக அலையும் அனுமானிக்க வழியற்ற பாதையில் பயணம் செய்கிறோம் நாம்.

யாருமே இல்லை என்னுடன். மனைவியும் பிள்ளைகளும்...
தனியனாய் என்னை பலி கொடுப்பதாயினும் செய்வேன்.

அவர்களின் முன் எல்லாம் தெளிவாக இருந்தது. ஒரு சூட்சுமமான மையச்சரடுஅவர்களின்  ஒவ்வோர் இடைவெளிகளிலும் முடிச்சுகளை இட்டுக் கொண்டே இருந்தது.

இருளுக்குள் ஒளி நுழைந்து கொண்டிருந்தது. வானம் சடையடர்ந்த மயிர்க்கற்றைகளைப் போல வரையிட்டிருந்தது. ஆழமற்ற சேற்றுக் குழியினுள் கால்கள் புதையும் பொழுது உருவாகும் பதற்றமும் மெல்ல அடுத்த அடியில் நகக் கண்களில் கூர்மையாகும் அகமும் போல மென் குமிழியிட்டு ஒளி பழக்கப்பட்ட திசையில் ஒளிரத் தொடங்கியது.

அவன் தூரத்தை பார்த்துக் கொண்டிருந்தான். பழுத்திருக்கும் மண் அவன் ஞாபகங்களில் அலையிட்டது. காறி உமிழ்ந்தான். சருகுகளிடை ஊர்ந்து கொண்டிருந்த வீரியன் குஞ்சுகளின் மொலுமொலுப்பு. அவர்கள் நின்று கொண்டிருந்த மலைக்குன்றுகள் ஒரு பெரிய சுருக்குக் கயிறைப் போல அந்த கிராமத்தின் கழுத்தை சுற்றிப் படர்ந்திருந்தது. அந்த சின்னன்சிறு சரிவான பாதையின் வழியே பாதங்கள் நரனரக்க கூர் கற்களை மிதித்துக் கொண்டே ஓட்டனமும் நடையுமாய் நகர்ந்தான்.

உறக்கம், கடைசியாக ஒலி அடங்கிய நுனியிலிருந்து சொட்டத் தொடங்கியது. முகங்களின் பெருங்கடல். அலைகளின் வழியே அந்தரங்கமாய் விதிர்க்கும் உணர்ச்சிகளின் கூச்சல். கலங்கல் குளத்தில் அலையும் கரைப்பாசி. செம்மண் நீரில் மிதக்கும் சாம்பல் மரத்துண்டு. வடிவங்களின் வடிவின்மை. கானல் நீரின் பிரவாக வெளி. நிறங்களின் ஊசலாட்டம். கட்டமைப்புகள் சிதையச் சிதைய துண்டாடி உருளும் பாழ் நிலம். முண்டங்களின் குரல். சப்தமின்மையின் கவந்த வாய்.

இளைஞனின் இமைகள் முடிச்சிட்டுத் திணறின. கனவின் கடிய கார்வை செவியடைத்தது. நிழலின் ஆடி பிம்பங்களாய் உருகியோடின உருக்கள். ஜன்னல்கள் யாருடைய குரலையோ வாங்கிச் சிதறிச்சாத்தியது. இருள்! இருள்!

அவனை நோக்கி வந்து கொண்டிருந்தது.

-The Last Temptation of Christ -Nikos Kazantzakis

ஞாயிறு, 18 நவம்பர், 2018

கிறுஸ்துவின் கடைச் சபலம் 5

அவர்கள் பன்னிருவர் இருந்தனர். ஒவ்வொருவரையும் தனித்தனியே நோக்கினான். சுற்றிலும் பெரும் பாலை நிலம். வானம் தாய் மிருகத்தின் அடிவயிறு போல சுருங்கி விரிந்து மூச்சிழைத்தது. அதன் நீலத் துணுக்குகளில் வெண்ணிற முடிக் கற்றைகள் போல விண்மீன்கள் சுருண்டிருந்தது. அவர்களின் இருப்பு அந்த இருள் நதியினுள் உதிர்ந்து விழுந்த இலைக் கற்றைகள் போல சலனமின்றி அலையாடியது. குழப்பத்துடன் அவர்கள் ஒவ்வொருவரையும் தொட்டு மீள்கையில் அவனது உறுதிப்பாடு அவர்களிடையில் கடத்தப்பட்டது. ஒரு பெரிய சிலையின் பூதாகர உறுப்புகள் போல அவர்கள் இருந்தனர். ஆனால் தனித்தனியே அவர்கள் நதியினுள் சலனமின்றி பாசி பீடித்து உறங்கிக் கிடக்கும் பாறைகள் போல எண்ணங்களே இன்றி இருந்திருக்கக் கூடும். தங்களுக்குள் பேசிக் கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் அறிந்திருந்தனர். செந்தாடிக் காரனின் சொற்கள் எண்ணங்களாய் உருமாறும் முன்னரே அவர்கள் உணர்ந்தனர். அமைதியாக அவன் வழி நடப்பதையே அவர்களும் விரும்பினர். இருந்தும் அவர்கள் தியாகத்தை அஞ்சினர். மரணம் என்றும் தியாகமாவதில்லை. அதன் இறுதிச் சொல் நிச்சயம் வன்மத்துடன் தான் இருக்க முடியும். யாதொரு மனிதனும் தியாகத்தின் பொருட்டு தன்னை முழுக்க ஒப்புக் கொடுத்திட முடியாது என்றே நம்பினர். ஆனால் அவர்கள் ஒற்றை உடலாக ஆகுகையில் எதனையும் செய்யும் ஒரு இயந்திர பாவம் அவர்களுள் உருவாகி விடுகிறது. அதன் பின் எதன் முன்னும் முட்டி மோதி அவர்கள் நகர்ந்து கொண்டே இருப்பர். கடவுளர்களின் சொற்களால் வழி நடத்தப்படுவதாகவே அவர்கள் முழுக்க நம்பினர். நம்பிக்கையின் பேரில் நம்பிக்கை கொண்டனர். அதனால் கொலைகள் மானுடத் தூய்மையை நோக்கியே எனும் பெரும் லட்சியத்தின் முன் அவர்கள் அதன் கருவிகளாக தங்கள் கடமையை செய்வதாகவும் தங்களுக்கு மீட்பு உண்டு என்றும் உறுதி கொண்டனர்.

காலத்தின் நிழலில் சர்ப்பம் போல நெளிந்து தலைகீழாகியது காட்சிகள். கனவும் அல்லாததும் குழம்பிய சேற்று வண்டலாய் சொத சொதத்துக் கிடந்தது.

யாரை ஏமாற்றுகிறாய். நீ! அந்த இறவாப் பேறுடைய ஆப்ரகாமின் மைந்தன். நீதானே! பயத்தினை ஒழித்தவன். தீமை அண்டாத தூயன். கருணை உருவாய் ஆனவன். வெற்றுப் பிண்டங்கள். உன் நல்லொழுக்கங்களை குப்பையில் வீசியெறி. அண்டிப்பிழைக்கும் அற்பக் கூட்டங்களே. சுயமில்லாத முதுகற்ற புழுக்களே.

ஓ! நீ! மத்தேயுவின் புத்திரனல்லவா! சந்தைக் கடைகளில் தேவனின் ராஜ்ஜியத்தை விற்றுக் கொண்டிருக்கிறீர்களே. உங்களுக்கு வெறும் பொருள் தானே அவன்.

கடவுளர்கள் உங்கள் கிடங்குகளில் ஊற வைக்கப்பட்டிருக்கும் போதை ரசம். உங்களின் இன்பக் களியாடல்களில் அவர்களை இருத்தி வியாபாரம் செய்து கொள்வீர்கள். ஜெகோவாவை அறிவீர்களா நீங்கள்? அவனது குகைக்கருகில் செல்லும் தைரியம் உண்டா உங்களுக்கு? உங்களது சொற்களுக்குள் அவரது பெயர்கள் எத்தகைய விலையைப் பெறுகின்றன.

உன் அகங்காரத்தையும் வன்மத்தையும் உன் முட்டாள் தனங்களையும் கொண்டு நீ வரைந்த உன் ஆடிப்பிம்பம் உன் கடவுள். அதன் முன் உன்குறைகளை மண்டியிட்டு அழு.

தெருவெங்கும் ஓடுகிறது, பலிபீடங்களிலிருந்து சிதறிதெறிக்கும் அடர் குருதி. ஆம். அவனது சொந்தக் குருதி. அவர்களிடமிருந்து பறித்ததைக் கொண்டு அவர்களுக்கு உதவுங்கள். தயாளர்களே! இந்த நன்மைகளின், அன்பின் விசுவாசத்தின் ஆன்ம தியாகத்தின் ஒவ்வோர் துளிகளையும்... தேவா! உன் நாமத்தால்...

உன் நாமமே! எங்களுக்கு கிடைத்த கொலைக் கூர் வாள்.

மறுமையின் காரியங்களை செய்து கொண்டிருக்கும் துர் நாற்றம் அண்டிய செல்வக் கிடங்குகளில். கால்கள் இறுக்க கண்ணிகளால் கட்டப்பட்டு விலைப்பட்டியல் இடப்பட்டு தலை கீழாக தொங்க விடப்பட்டிருக்கும் கடவுளர்களின் இறைச்சியைக் கண்டிருக்கிறேன். நீ காறி உமிழவும் மலம் கழிக்கவும் அமைக்கப்பட்ட கூடாரங்களில் தன்னந்தனியே அகப்பட்டுக் கிடக்கும் அந்த அனாதரவான கடவுளை நான் அறிவேன். உனது சொந்த நியாயங்களுக்கும் காரியங்களுக்கும் உன்னுடன் புணர்ந்து கொள்ள ஒரு உருவம் கிடைத்தே விட்டது. உனது வன்மங்களின் சபலங்களின் நிமித்தத்தின் பொருட்டு நீ தேடிக் கிடைக்கும் கீழ்மைகளின் சிக்கல்களுக்கு வழியமைத்துக் கொடுக்கவும் ஒரு உருவம். கால பேதமற்ற ஒன்றை நீ உனக்காகவெ உருவாக்கிக் கொண்டாய். மரணக்கிழியின் அனத்தத்தில் நான் உன்னை சந்த்திப்பேன். அதுவே உன்னிடம் நான் பகிர்ந்து ஏதேனும் உள்ள ஒரு இடம். கால் கைகள் முடுக்கி வெறும் பிண்டமாய்க் கிடக்கும் அது நீதானா? உனக்கு பெயருண்டா? மதிப்புண்டா? இருப்பு ஏதெனுமுண்டா? நீ யார்? நாற்றம். நாற்றம். மறுமையின் வருகையில் அழுகிக் கொண்டிருக்கிறது. ஆசிர்வதிக்கப்பட்ட மறுமை.


பன்னிருவர்களும் வார்த்தைகளின்றி இருந்தனர். தங்கள் முன் நிற்கும் தலைவனின் ஒவ்வொரு அலைக்கழிதலும் நீரலை போல அதிர்வுற்று அதிர்வுற்று அவர்கள் ஒவ்வோர் உடல் கணுக்களிலும் நெளியத் தொடங்கியது.

-The Last Temptation of Christ -Nikos Kazantzakis


வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

கருப்பு வெள்ளை

கருப்பு வெள்ளைகளில்
தேய்ந்து கொண்டிருந்தது
தன்னந்தனி நிலா
சலனமில்லா இரவின் தொடக்கத்தில்
அவர்கள் வந்தனர்
தங்களுக்குள் எந்த அறிமுகமுமின்றி
புணர்ந்து கொண்டனர்
தவிரவும் அவர்களுக்குள்
இடர்பாடற்ற உடல் இருந்தது
அவர்கள் விட்டுச் சென்ற நிலத்தில்
ஆவாகனம் செய்யப்பட்டது
பலிபீடம்
இடர்பாடற்ற மனித உடல்கள் 
அங்கு அமர்த்தப்பட்டன
சலனமில்லா இரவின் நுனியில்
அவர்கள் தூக்கிலடப்பட்ட பின்பு
ஒரு பகல் உருவாகியது
அதன் பின் வந்த 
எல்லா இரவுகளிலும்
கருப்பு வெள்ளைகளில்
தேய்ந்து கொண்டிருந்தது நிலா
நேற்றைய இரவைப் போலவே...

திங்கள், 30 ஜூலை, 2018

கிறுஸ்துவின் கடைச் சபலம் 4

அவன் ஒரு தச்சனா? வெறும் தச்சனா? ஆமை தன் ஓட்டினுள் பதுங்கிக் கொள்வதைப் போல இங்கு வாழ்கிறான். இவனா நாம் தேடித் திரியும் ஒருவன். ஒரு அந்தரங்கமான நடுக்கத்துடன் படுத்திருந்தான் இளைஞன். தன்னுள் ஒடுங்கிய மெலிந்த தோற்றம், கூச்ச சுபாவம் மிகுந்த உள்முகமாய் இருக்கும் ஒரு பயந்தவனாய் பார்ப்பதற்கு தோன்றியது. குடிகாரனைப் போல போதை ததும்பிய சிவந்த விழிகள். நிலை கொள்ளாத பார்வை. நீள் முகத்தில் தீட்சண்யமாய் ரேகைகள். மெலிந்திருந்தாலும் வலுவான புஜங்கள், அவன் ஒரு தச்சன் என்பதை நினைவுறுத்தியது. மணிக்கட்டுகளிலிருந்து கிளம்பும் பச்சை நரம்புகள் முழங்கை வரை புடைத்திருந்தது. தோள்பட்டை அகன்று சற்று உயரமான பெரிய உடல் வாகு கொண்டவனைப் போல இருந்தான். ஆனால் எதன் பொருட்டோ உருவாகிய அனிச்சை பாவம், ஒரு தீர்க்கமான நோக்கு அவனை அலைக் கழித்துக் கொண்டே இருந்ததை அவனது உடல் மொழி உணர்த்தியது. உறக்கத்தில் கூட ஒடுங்கி குறுகி அவ்வப்பொழுது விதிர்த்து உயரும் அவனது உடல் ஒரு பைத்தியக் களையையும் அதே நேரம் ஒருமித்த ஒரு தேடலும் சதா போராடிக் கொண்டிருப்பதாய் உணர்த்தியது.

அவன் தான். அவனே தான். இனி தப்பிக்க வழியேதுமில்லை.
வீரர்களே, தேவனுக்குத் தெரியும். அவனே அறிபவன். இவனையும் பின் வரும் அனைவரையும் அவன் தன் இமையா விழிகளுடன் நோக்குகின்றான். காலங்களின் மூப்பும் தொய்வும் அணக்கமும் அலைவும் கடந்ததின் இருப்பதின் வருவதின் சூட்சுமம் அறிந்தவன் அவன்.

செந்தாடிக் காரனின் கால்கள் பாலை மணலில் அழுந்தப் பதிந்தன. அவனது கால் விரல்களிடை வெண் மணல் திரவக்குமிழ் போல கொப்பளித்தது. ஆனால் அவனது வீரர்களான குள்ளர்கள் அவனைப் பற்றிக் கொண்டு முன்னேறிச் செல்ல விடாமல் தடுத்தனர்.

அங்கே பழைய அழுக்கு உடைகளில் தச்சனைப் போல அதிகம் பேர் இருக்கின்றனரே! எவ்வாறு நாங்கள் அவனைக் கண்டறிவோம்?

அவன் எங்குள்ளான். பார்க்க எப்படி இருப்பான். ஏதேனும் குறிப்புணர்த்துங்கள். நாங்கள் பதற்றமடைகிறோம். அவனது தோற்றம் வடிவம் ஏதாவது சொல்லுங்கள். உங்களின் குரலுக்காக தயாராக இருக்கிறோம்.

நான் முத்தமிடுவேன். என் மார்பழுந்த இறுக்கி அவனை என் கைகளுக்குள் துடிதுடிக்க அணைத்து முத்தமிடுவேன்.

வெளிச்சம் இன்னும் முழுமையடைந்திருக்கவில்லை. இரவு முடிவே அடையாத தொடர் நிகழ்வாய் சுழலை பாதி உண்ட இரை போலக் கவ்விக் கொண்டிருந்தது. கோட்டான்களின் குழறல் ஒலி. இரவின் நிழல் வடிவங்கள் மறைந்தும் பின் வெளிப்பட்டும் வடிவங்களைச் சிதைத்து, உருவாக்கிக் கொண்டிருந்தது. முற்றிலுமான சப்தமின்மை.

ஆம்! முன்னேறுங்கள். படுக்கை விரிப்புகளுக்கடியில் ஊறும் முட்டைப் பூச்சிகளைப் போல அதிர்வின்றி அவர்கள் நகர்ந்தனர். அறையினுள் இருள் ஒரு வளர்ப்பு மிருகம் போல அவனது எண்ணங்களினுள் மடிந்து கிடந்தது.

தப்பித்து விடக்கூடாது. தங்களுக்குள் கட்டளைகளை அவர்கள் உணர்ந்து கொண்டனர். காலம் ஒரு அணங்காய் உச்சபட்ச கவர்ச்சியுடன் அவனது கழுத்தை இறுக்கியது. கனவினுள் ஆழ்ந்திருந்தான் இளைஞன். கனவினுள் பலியாவதை அவன் விரும்பியிருந்தான். ஆனால் யாரும் கனவிற்குள் சாவதில்லை. அதன் எல்லை வரை சென்று மீளும் சாகசத் தூண்டல் இருக்கலாம். ஆனால் அவன் உள்ளூர தன்னை ஒப்புக் கொடுத்திருந்தான். தன்னைத் துரத்தும் அதன் வேர்களை அறியும் ஆர்வத்தில் மேலும் மேலும் கனவினைத் தன் வாழ்வனுபவமாக மாற்றியிருந்தான். ஒவ்வொரு நொடிப்பொழுதும் தன்னை இம்சித்துக்கொண்டே இருக்கும் இந்த கூர் நுனியில் அமிழ்ந்து உயிர் விட எண்ணினான். அது அவன் வழக்கமாக காணும் கனவு தான். தினம் இந்த சித்திரவதைக்குள் தன்னை அகப்படுத்தி மீள முடியாத எல்லைக்குள் புதையப் புதைய தன்னுள் உருவாகும் நடுக்கத்தை ரசித்தான்.

வீரர்களே! பிரபஞ்சமெங்கும் நிலைத்திருக்கும் கடவுளின் பெயரால். ஆம்! மீட்சியடையும் வழியைக் காட்டும் என் பிதாவே!

சூரிய சந்திரர்களையும் வானையும் மண்ணையும் அனலையும் குளிரையும் அளித்த, எதனிலும் உட்படுத்த முடியா கட்டுகளிலடங்கா செறிவும் நுட்பமும் ஒரு சேரக் கொண்ட பரலோகத்திலிருக்கும் எங்கள் பரம பிதாவின் பெயரால். இவனையும் இவனுக்கு பின் வருபவர்களையும்...

ஒருமித்த குரலாய் அவர்கள் நிலம் அதிரக் கத்தி ஆரவாரமிட்டனர்.

முட்கிரீடம் வைத்திருந்தவன் அகலாது அங்கேயே நின்றிருந்தான். அவனது ஒரு கண் வெண்ணிறச் சதைக் கோளமாய் இருந்தது. முதுகு  சற்றே வளைந்து மேடிட்டு கூன் விழுந்திருந்தது. அவன் கதறி அழுதான். மனிதக் குரல் போலவே இல்லாத ஒரு விளி. உடலெங்கும் தீப்பற்றுகையில் உருவாகும் மரண விளி. என்ன இது? நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம். இனியும் இதுதானா நம் விதி. நாம் வேட்டை மிருகங்கள். எத்தனை உயிர்கள். எத்தனை சாவு. இந்த இரவு நாம் கொன்று புதைத்த பிணங்களின் குத்திட்ட விழிகள் போல என் முன் வெறிக்கிறது. வேண்டாம். வேண்டாம். தனக்குள் விம்மித் தளர்ந்து ஓங்கரித்தான்.

இதுமியாவில் எந்தத் துறவியையும் விட்டு வைக்கவில்லை. பாவப்பட்ட அந்த லாசரசை பெத்தனியில் எந்தப் பிரயோஜனமுமின்றிக் குத்திக் கொன்றோம். ஜோடார்ன் நதிக்கரையில் அந்த பித்து பிடித்த சாமியாரிடம் போய் நின்றோம். அவனுமில்லை. பிணங்களின் துர் நாற்றம் என் உள்ளுறுப்புகளில் புகுந்து நவதுவாரங்கள் வழி வெளியேறுகிறது. சவங்களின் பெருங்குழியில் காலமின்றி நொதித்துக் கொண்டிருக்கிறோம்.

சே! எங்களுக்கு வேறு வழியுமில்லை. உன்னுடன் வருவதைத் தவிர.

எங்குமே இல்லை அவன். அவன் இல்லாதவன். தேடி அவன் கிடைக்கப்போவதுமில்லை. ஜெருசலேமில் அலைந்தோம். பொய்யர்கள், பரத்தை மகன்கள், கொள்ளையர்கள், கொலை செய்பவர்கள், சுய நலமிகள், வம்பர்கள், ஒழுக்கமற்றவர்கள் என்று நாம் கண்டது அனைத்தும் அவனது வெவ்வேறு பிம்பங்களா? ஒரு ஆடிச்சுழியில் அவனை நிற்க வைத்து பிரதியெடுத்த ஓராயிரம் பிம்பங்களில் அவன் தன்னை மறைத்து வைத்திருக்கிறான். கொலைகளின் வழி மரணத்தை நாம் அறைக்கூவலிடுகையில் அவனது வெறுமையின் இளிப்பை நான் காண்கின்றேன். இல்லாத ஒருவனை நாம் தேடுகின்றோம்.

ஒருவன். ஒரே ஒரு மேன்மை மனிதனை. ஒழுக்கத்தில் சிறந்த உண்மையானவனை. தேவனுக்கு கீழ்படியும் மானுடத் தூயனை நாம் தேடினோம். கனாவிலும், பெத்தைசிலும், காப்ரீனிலும், அலைந்தோம். ஒவ்வொரு முறை அவனை நாம் கண்டறியும் பொழுதும் அவன் அழுது கொண்டிருப்பான். நீயே அந்த ஒருவன் எனில் ஏன் மறைந்திருக்காய். ஏன் பயப்படுகிறாய். வா! இல்லையேல் செத்தொழி. வா! இந்த நிலத்தை இந்த மானுடத்தை காப்பாற்று.

ஒருவன். அந்த ஒருவன். எவனுமற்ற ஒருவன். மானுடத்தை உண்மையாய் உணர்ந்த மானுடன். மானுட மீட்சியின் வழியை தன் குருதியினால் உணர்ந்தவன். நாம் அவனைக் கண்டு கொள்வதும் இது முதன்முறை அல்ல.  கழுத்தறுபடும் முன் வெறித்து பார்க்கும் கன்றின் பார்வையைத் தான் நான் அவனில் கண்டேன்.

நம் கொலைக்கருவிகளைக் காணும் போதெல்லாம் அவனது விழிகளை நான் சந்திக்கிறேன். நம்மைக் கண்டதும் அவன் உள்ளூற அதனை எதிர்பார்த்துக் காத்திருப்பதைப் போல உணர்ந்தேன். மரணம் தன்னை விடுவிக்கும் என்றும் அதன் மூலம் தன்னை அவன் நிரூபித்துக் கொள்வதாகவும் நினைக்கிறான். மொத்த பிரபஞ்சத்தின் முன்னும் நெஞ்சு வெடித்து அழுகிறான். அந்த மகத்தானவன் நானில்லை என்று.

ஆம்! இங்கு யாருமே மகத்தானவர்களில்லை. மகத்தானது என்று இவ்வுலகில் என்னதான் உண்டு. நம் கொலைக் கருவிகள் அதைத்தானே நம்மிலிருந்து எதிர்பார்க்கின்றன. அதிலிருந்து சிந்திக் கொண்டிருக்கும் ரத்தத் துளிகள் அறியும் உலகில் மகத்தானது எது என்று.

மதுவின் தித்திப்பில், இளம்பெண்களின் தேக லயிப்பில் அவனைத் தூக்கி எறிவோம். ஆம் மகத்தானது. மயக்கம் தரும் சுயமழிப்பை அவன் அறியட்டும். பரத்தையர்களுடன் பொருந்திக் கிடக்கையில் அவன் பீய்ச்சும் விந்து அறியும் மகத்தானது எது என்று. அப்பொழுது அவனைப் பிடிப்போம். அவனைக் காறி உமிழ்ந்து மகிழ்வோம். ஆம்! மகத்தானது இது என்று.

மன்னித்து விடுங்கள். திரும்பத் திரும்ப நான் இதனையே புலம்புகிறேன். என்னுள் தகிக்கும் ஒன்று பல்லி வால் போல அறுந்து தனியே துடிக்கிறது. அதற்கு உயிரில்லை. அது ஒரு ஏமாற்று. உண்மையில் அப்படி ஒருவனை நாம் அறியும் பொழுது அவனும் அதைப் போலவே இருப்பான் என்று நான் நம்புகிறேன். கடவுளர்களின் எக்காளம் எங்கள் காதுகளில் குடைகிறது. இந்தப் பயணம் முழுதுமான பிணங்கள், அவர்கள் மரணிக்கும் நொடி நேரத்தில் அவர்களின் ஒருவர் கூட சாக விரும்பவில்லை. அவர்கள் பயந்தார்கள். மரணமே கடவுள். ஆம் மகத்தானது அப்படித்தான் இருக்கும்.

செந்தாடிக் காரன் தன் வலுத்த கைகளால் அவன் பிடரியைப் பற்றித் தூக்கினான். அந்தரந்தில் கால்கள் இழுபட மூச்சுத்திணற அல்லாடினான் கூனன்.

ஹா! ஹா! ஹா! தாமஸ்! ஓ! தாமஸ்! சந்தேகப்படுகிறான். தயங்குகிறாயா எனதருமை தாமஸ். நீ எப்பொழுதுமே இப்படித்தான். விழி பிதுங்கிய கூனனின் வாயிலிருந்து எச்சில் வழிந்தது. அவனை விடுவித்தான். தொண்டை நரம்புகள் இழுபட வேகமாக மூச்சிரைத்து மெல்ல சரளைக்கற்கள் உருளும் மண்ணில் கால்கள் அறைபட எழுந்து செந்தாடிக்காரனை ஆதுரத்துடன் நோக்கினான்.

இந்த வேசி மகன் நம்மை வழி நடத்தட்டும். என்ன தாமஸ். மகத்தானதை நீ கண்டறிவாய். உண்மை உன்னிடம் மட்டுமே உறைகிறது இல்லையா?

நிமிர்ந்து தன் முன் நிற்கும் கூட்டத்தினை வெறிக் கண்களுடன் நோக்கினான். நாம் உருவாக்கிக் கொண்டது எதனை? மரணத்திடம் நாம் சொல்வோம். நாங்கள் இம்மண்ணின் மைந்தர்கள். தயங்குபவர்கள் இந்த நொடியே கொல்லப்படுவீர்கள். உங்களுக்கு மானுடத்தின் மீட்சி என்ன என்பதை நான் உரைப்பேன். கடவுளர்கள் உருவாக்கிய இந்த நிலத்தினை மீட்கும் பொருட்டு நாம் தியாகம் செய்வோம். அன்பும் கருணையும் கொண்ட நம் பிதாவின் வாக்கு என்றைக்குமே தப்புவதில்லை. சந்தேகங்கள் தீக்கங்குகள் போல. புகை விட்டுக் கொண்டிருக்கும் அதனை நாம் நம் வயிற்றிற்குள் செருகி அணைப்போம். ஒன்று திரள்வோம்.

The Last Temptation of Christ-Nikos Kazantzakis



ஞாயிறு, 29 ஜூலை, 2018

கிறிஸ்துவின் கடைசி சபலம் 3

வானம் வெளுத்திருந்தது. ரத்த நாளம் போல வெண் மலைப் பாறைகளுக்கிடையில் பீறிட்டு சாடியது நதி. பெரிதும் சிறிதுமாய் சரளைக்கற்கள் பரந்த கரை. முட்டி அளவு ஆழத்தில் அவர்கள் முழுக்க அம்மணமாய் நின்றிருந்தனர். தேன் கூட்டின் ரீங்கரிப்பு போல மந்திர ஜபம் அத்துவான வெளியில் இறைந்தது. தலைவிரி கோலமாய் பெண்கள் கூச்சலிட்டு அழுதனர். ஆண்களும் பெண்களும் முழுக்க நிர்வாணமாய் அந்த நதியினுள் அமிழ்ந்திருப்பது ஒரு சேரக் கவர்ச்சியும் அச்சமும் தொற்றியது. கரையில் இருந்து பழுத்த மணற்துகள் காற்றின் கீறலில் சீறிட்டு அவர்களின் உடல் எங்கும் படிந்தது. ஒவ்வொரு மந்திர ஒலிக்கும் ஒரு சூழல் நதியினுள் உருவாகிக் கலைந்தது.

பெரிய அங்கியுடன் கனத்து நுரைக்கும் வெண்தாடியும் பின் வழுக்கைத் தலையும் பாலைக்கே உரிய நீண்ட முக ரேகைகளுடன் ஒரூ வயதானவன் அவர்கள் நடுவில் நின்றான். ஒவ்வொருவர் தலையிலும் நதியின் செந்நீரைத் தெளித்து பைத்தியக் களையில் வானை நோக்கி பிதற்றி அழுதான். சூழல் வலுத்துக் கொண்டே இருந்தது. செந்நிற நதி ஒரு குழம்பாய் கொப்புளங்களாய் நொதிக்கத் தொடங்கியது. மணல் காற்று ஒரு கணத்த போர்வையாய் சூழ்ந்து மூடியது.

கலங்கி வடிந்த பின் அடிமண்டிய ஆனால் ஆழம் மிகுந்த சேற்றுக் குழியாய் குழைந்தன எண்ணங்கள். கனவினைத் தொகுக்க முயல சாரமற்ற காட்சிப் பிம்பமாய் நினைவினில் அலையாடியது. கண்களை இறுக்க மூடி தனக்குள்ளேயே முணங்கிக் கொண்டிருந்தான். பாலைக்குள் இருள் தாவர உண்ணியைப் போல கதவிடுக்குவழி அசை போட்டுக் கொண்டிருந்தது.

இரு வெற்றுப் பாளங்களுக்கிடையில்
முளைத்தெழுகிறது ஒரு அனிச்சை சொல்
தலை கீழாய் படம் விரிக்கின்றன நடசத்திரங்கள்
 உள் நுழைகின்றன ஒளி நாக்குகள்
வெளிச்சத்தின் தீ
ஒரு அனிச்சை சொல்
மந்திரமாவது எப்போது
தாழ்ந்து உயர்கிறது
கனவின் நிலம்
இரு வெற்றிடங்களுக்குள்
இடைவிடாது நிரம்புகிறது...
அது...

வெளிச்சம் புண்ணிலிருந்து பிதுங்கி வழியும் பழுத்த கோழையாய் அடர்ந்தது. பின் அதுவே மந்திரம் படிந்த பல் வேறு குரல்களில் அறையெங்கும் வளையம் வளையமாய் நெளியத் தொடங்கியது. கனவு நிலம் நீரில் மிதக்கும் பிம்பம் போலத் தடமழிந்தது.

தியிட்ட சிதல் புற்றில் இருந்து கிளர்ந்தெளும் கரையான் கூடடத்தை போல நாலா புறமும் சிதறித் தெறித்தது மனித உடல்கள். அவன் முதுகுக்கு பின் குத்திட்டு காத்திருந்தது கட்டுண்ட மிருகத்தின் வெறிப்பார்வை. வெகு தொலைவில் ஒளியை ஊடுருவிக் கொண்டே நகர்ந்து வரும் பல நூறு உருவங்கள். புள்ளிகள் பெர்தாகிக் கொண்டே வட்ட வடிவம் கொண்டது. அதன் நிழல்களின் மொத்தையான கருமை வெளிச்சத்தினுள் இருந்து வெளிவர, சுருண்டு புரளும் வீரியன் குட்டிகள் போல ஒளி மொலுமொலுத்தது. நெருங்க நெருங்க முரணான அங்கங்கள் கொண்ட விகார ரூபங்களாய் அந்த குள்ள மனிதர்கள் வந்து கொண்டிருந்தனர். அடித்து சப்பிய முகங்களும் இழுபடும் நார்த்தாடிகளும் கொண்ட குள்ளர்கள் வசைகளால் சபித்துக் கொண்டே இவனை நோக்கி வெறி பிடித்தார் போல் ஓடி வந்தனர்.

இரும்பாலான கூர் ஊசிகள் கொளுத்தப்பட்ட வார்ப்பட்டை, கத்திகள்,கோடாரிகள், கொக்கிகள், துருவேறியா நீள் ஆணிகளுடன் மரணத்தின் அறைக் கூவலுடன் அவர்கள் நெருங்கினர். கனவிற்குள்ளும், அதிலிருந்து வெளியேறி நினைவிற்குள்ளும் தாவிக் கொண்டே இருக்கும் பிரங்ஜை. தூசுப்படலம் போல திரையினுள் காட்சிகள் மாறி மாறிக் கலைந்தது.

மாட்சிமை பொருந்திய மகுடத்தை அவர்களில் ஒரு மாறுகண் குள்ளன் தன்னிடம் இறுக்கப் பற்றிக் கொண்டிருந்தான். தரையில் சதைக் கோளங்களாய் அமிழ்ந்து கிடக்கும் மூன்று குள்ள உடல்கள். செந்தாடிக்காரனின் கைகளில் பெரிய அகன்ற மனிதத் தலை, கண்கள் பிதுங்க ஊசலாடிக் கொண்டிருந்தது. முடிக்கற்றையை இறுக்கி பிடித்து வைத்திருக்கும் அவனது புடைத்த நரம்புகளில் குருதி சேற்றுக்குழம்பல் போல சிந்தியது. அவந்து இடுப்பில் இருந்த உடைவாளில் படிந்திருந்த நிணத் துணுக்குகளை மெல்ல தனது வார்க் கச்சையால் துடைத்துக் கொண்டே எதையும் நிலையாக பாராது அங்குமிங்கும் நோட்டமிட்டான்.

அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் நம்பவில்லை. நம்பிக்கையற்றவர்கள் கொன்றழிக்கப்பட வேண்டியவர்கள். கடவுளின் ராஜ்ஜியத்தில் நம்பிக்கை கொள்வோம். அவர்கள் உயிரின் பயனில்லாதவர்கள்.நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. வலிமை பொருந்திய செம்பட்டை மயிரடர்ந்த புஜங்களை உயர்த்தி தொண்டை நாளங்கள் புடைக்க தனது படையினரைப் பார்த்து கர்ஜித்தான்.உங்களின் முன்ணே பரந்து விரிந்து கிடக்கும் இந்த வெற்று நிலத்தை பாருங்கள். அவன் இங்குதான் இருக்கிறான்.

தலைவா! எங்களால் எதையுமே காண முடியவில்லை. இருள் மட்டுமே நிரம்பிக் கிடக்கும் இந்த பிரதேசத்தில் அவனை எவ்வாறு கண்டறிவோம்?

நம்பிக்கையில்லாதவனுக்கு எதுவும் தெரிவதில்லை. அவன் விழிகளிருந்தும் குருடனே!

வெட்ட வெளியில் மர்மமாய் தூவிக் கொண்டிருக்கும் பனிப்படலத்தின் கீழே அவன் கைகளைத் தூண்டிக் காட்டினான். இரையெடுத்த மலைப்பாம்பின் நிசப்தத்துடன் ஒரு நீல ஏரி. உறங்காது உற்றுப்பார்க்கும் ஒட்டக விழியினைப் போல இருளினுள் ஒளிர்ந்தது. சூழ்ந்திருக்கும் வெளி ஜில்லிட்டு சலசலத்தது. பேரிச்சையின் நிழற்தாங்கலில் வெண்மை ததும்பும் சின்னஞ்சிறிய குடில்கள். பளிங்கின் மிருதுவாய்க் குழாங்கற்கள் அந்தக் கரை நிலம் முழுக்க பொதிபொதியாய் கிடந்துருண்டது. கரை மருங்கிலும் சாய்ந்து பரத்தும் வயல் வெளி. காய்ந்த புல் வெளி சூழ்ந்த அந்த பெரும் நிலப்பரப்பை சுட்டிக் காட்டினான். அவன் அங்கு தான் உள்ளான்.

விடியலின் பேரமைதி. மெல்ல மெல்ல சாரைப் பாம்புகளைப் போல விடியல் அக்கிராமத்தினுள் மென் முணுமுணுப்புடன் இருளைச் சுருட்டிக் கொண்டிருந்தது. முழுவதுமாக வெளிச்சம் படராது அங்கும் இங்குமாய் வானின் நீலம் ஊன் மிருகங்களின் மேற் தோல் புள்ளிகள் போல படர்ந்தது. வெளிச்சங்கள் கோடுகளாக ஆவதில்லை. அது புள்ளிகளிலிருந்து பல சுருள்களாய் உருண்டு வியாபிக்கத் தொடங்குகிறது. அதனால் அது தன் நிலையற்ற தன்மையுடன் ஒளிரத் தொடங்கியதும் இருளுக்குள்ளிருந்து உருப்பெறும் நிலம் தனக்கென எந்த எல்லையும் வடிவமும் பெற இயலாது. நாம் காணும் வடிவும் ஒளியன்றி வேறில்லை. ஒளி மட்டுமே வடிவினைத் தருகிறது பின் எடுத்துக் கொள்கிறது. ஒட்டிப் பிறந்த ரெட்டை உயிரினங்கள் போல அது மானுடர்களிடம் போக்கு காட்டுகிறது. ஆனால் ஆதியில் இருளே இருந்திருக்கும். அதற்கு வடிவங்கள் ஒரு பொருட்டல்ல. வடவற்ற ஒன்றை மனிதன் அறிய இயலாது. அதனால் எளிதில் ஏற்றுக் கொள்கிறான். ஒளி உருவாக்குகின்ற வடிவங்கள் அவனை காலத்திற்கு அப்பாற்பட்டு வழி நடத்துவதாக உருவாக்கிக் கொள்வது வெறும் மாய எண்ணமே. ஒளி உருவாக்குவது நாம் காண எண்ணிய வடிவை மட்டுமே ஆதலால் நாம் இருளைப் பூசிக் கொள்ளலாம். இருள் நமக்கு வழிகாட்டும். திசை திருப்பாது. ஒளியினூடாக உருவாக்கும் நிலம் அதன் தனித்தன்மையை இழந்து உருமாறிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

இருளுக்குள்ளிருந்து ஊற்றெடுப்பது போல ஒளி எல்லையை விரித்து பீறிட்டது. உறக்கம் தலைக்கு மேலே ஒரு மென் சுனையாய் ஓடிக் கொண்டிருந்தது. இரவின் கருமை பூசிய மென் படலம் அறையைச் சுற்றி இன்னும் பதுங்கியிருந்தது. மெல்ல கோதம்பு மணிகளின் இறைச்சி நிறம். செந்தாடிக் காரனின் மணிக்கட்டை நரம்புகளின் பச்சைக் குருதி நிறம். நூற்சரடில் தொங்கி அலையும் உலோகக் குண்டாய் கனவிலிருந்து உருவெளி வடிவாய் நிறங்கள் உருகி வழிந்தது.

கனவு அல்ல எனவும் கனவுதான் எனவும் தொலவற்றதும் அருகிருப்பதுமாய் ஒரு மாபெரும் கரிய நிழற் தோற்றம் அவனைச் சுற்றி மெல்ல மெல்ல குழுமிக் கொண்டே இருந்தது. அனைத்தையும் தொட்டு விட முயன்று எதுவும் மீளாத மருட்சியில் கண்களைக் கசக்கிக் கொண்டே எழுந்திட உந்தினான். முக்கி முணகி எழ முயல கனவு கண்ணாடிப்பரப்பு போல அவனையே பூதாகரமாய் உருப்பெருக்கிக் காட்டியது. பின் பல்வேறு உருவங்களிலான உடல்களாலான செதில் வெளியாய் சிதறிச் சிதறிக் கலைந்தது.

கனவு! ஆம். வெறும் கனவு. கனவாக மட்டும் இருந்து விட்டுப் போகட்டும். கண்களை மூடிக் கொள்கையில் திரும்பவும் பெரும் பெரும் சங்கிலிகளால் இறுக்க கட்டிய தன்னைச் சுற்றி அசைய முடியாத வண்ணம் சுவர்கள் எழுப்பப்பட்டது போல அந்த கனவு அவனை உட்கொள்ளத் தொடங்கியது.

The Last temptation of Christ-Nikos Kazantzakis.

புதன், 25 ஜூலை, 2018

கிறுஸ்துவின் கடைசி சபலம் 2

நாள் முழுதும் செய்த வேலையின் அயர்ச்சியில் மரத்தூள் படிந்த தேகத்துடன், ஆழ்ந்த சுவாசம் மீறிட படுக்கையில் வீழ்ந்தான். சிலந்தி வலையாய் உருமாறிய கரு நீல வெளியினுள் முடிச்சுகளுக்குள்ளிருந்து அகப்பட்டுத் துடிதுடிக்கிறது விடிவெள்ளியின் ஒளித்துணுக்கு, பாரம் அழுந்தும் அவன் தலைக்குப் பின்னிருந்து வேர் முண்டுகள் முளைப்பது போல கழுத்தினடியில் ஊறியது. ஆழ்ந்த உறக்கத்தில் மெல்லிய மூச்சுக்கள் ஒன்றன் பின் ஒன்றாக நீர்த்தும்பிகள் சலசலப்பது போல அந்த அறையினுள் குமுழியது.
மங்கிய வெளிச்சத்தினுள் செந்தாடிக்காரன். வியர்வை ஒட்டிய தேகம். சுருக்கங்கள் படர்ந்த நெற்றி. கங்கு தனக்குள் அமிழாமல் காற்று ஊடுருவ ஊடுருவப் புகை கக்கிக் கனல்வது போல எண்ணங்கள் கொத்திக் கொண்டிருந்தது. நிலையாமை இல்லாத பார்வையுடன் வெறித்துக் கொண்டிருந்தான். பிதற்றல் போகப் போகப் ரணம் உமிழும் சொற்களுடன் கீறிக் கொண்டிருந்தது. எதிலும் மையமற்ற வார்த்தைகளின் சுழல் அலைந்து அலைந்து முட்டிக் கொண்டே இருக்கும் கடல் நுரை போல, அடிபட்ட வன் மிருகம் போல தழலிட்டுக் கொழுந்தது.
“பிதாவே, எத்தனை நாட்கள்? இன்னும் எத்தனை காலம்?
முதுகில் முட்கள் கொண்ட பல்லிகள் தங்கள் பார்வையில் பெரும் சோகத்தைத் தேக்கிக் கொண்டிருக்கும். அதே மிருகம் ஊன் உண்ணும் பொழுது நோக்குகையில் அந்தக் கண்களின் பித்துப் பார்வை. அது மெல்ல மெல்ல லாவகமாய் உணவை முழுவதுமாய் விழுங்கத் தொடங்கும். சொற்களும் அடிப்படையில்  ஊரும் ஊன் மிருகங்கள் தான். அது அதற்கான பசியுடன் சுற்றிக் கொண்டும் பதுங்கிக் கொண்டும் நோக்கும். அதன் பலி கிடைக்கையில் அங்கு எந்த விதிகளும் செல்லுபடியாகாது. பெரும் சோகம் கனத்த வெறியாக உருக்கொள்ளும். பசியுடன் இந்த பாலை நிலத்தில் பதுங்கியிருக்கும் ஜீவ ராசிகள் எல்லாவற்றிலும் உறைந்திருப்பது அது. சொற்களின் கனத்த ஊற்று புரண்டு உருவாகிய வெளுத்த மணல்வெளியின் ரேகைகளிலெல்லாம் நினம் பிதுங்கி முயங்குகிறது.
தனக்குள் உருவாகிக் கொண்டிருக்கும் சொற்களைத் திரும்பத் திரும்பக் கடைவாயில் அதக்கிப் பிழிந்துக் காறி உமிழ்ந்தான். பசித்த மணல்வெளி நாகங்கள் போன்றது. உறிந்து கொண்டே இருக்கும் அதன் நாளங்களில் நெருப்பு ஜிவாலை எரிகிறது. அனல் விஷக் கண்களுடன் தன்னைத் தானே உற்று நோக்கி மேலும் மேலும் அதைப் பெருக்கி எரிக்கிறது.
இறைவன் அளித்த நிலம், இதனைக் கானான் என்றனர். தூரத்து விளக்கொளியின் நடுக்கத்துடன் மினுங்கும் நிலத்தின் எல்கை முடிவிலாத் தூரம் வரை கையளிக்கப்பட்டிருந்தது. தெற்கே இதுமியா. ஊர்ந்து கொண்டே இருக்கும் நிலம். அரவங்கள் தங்கள் பாதைகளைக் கண்டறியும் தோறும் அது விரிந்து கொண்டே இருக்கிறது. நிலங்கள் தங்கள் மனிதர்களைக் கண்டறியும் பொழுது அது காந்தச் சுழற்சியில் அதிறும் இரும்புத் துகள்கள் போல உருமாறத் தொடங்குகிறது. ஆனால் நிலம் மனிதனிடம் எப்பொழுதுமே இருப்பதில்லை. மனிதர்கள் உருவாக்கிக் கொண்டிருப்பது வெறும் எல்லைகள் தானே. ஆனால் பற்றிப்படரும் வேர் முண்டுகளில் ஒளிந்திருக்கும் ஆதி வெறி தனது எல்லைகளைத் தனக்குத் தானே உருவாக்கிக் கொள்ளும். இது கடவுளர்களின் நிலங்களுக்கும் பொருந்தும்.
மறு எல்லையில் கனத்து நொதித்துக் கிடக்கும் மரணக்கடல். அலைகளின்றி இரையெடுத்த கரு நாகம் போல சுருண்டு அயர்கிறது. மரணமும் கடலும் ஒன்றே தான். ஒவ்வொரு மரணமும் மிகவும் கரிப்புடனேயே நம்முள் உறைகிறது. அது நம் மரணம். நாக்குகள் இல்லாத உலகில் மரணம் மென் சுனை போல அடித் தட்டி முணங்கிக் கொண்டிருக்கும். ஆழமற்ற அதன் கரைகளில் பாசித் துணுக்குகளாய் அல்லாடுகிறது நிலமெனும் காட்சிப்பிழை. ஜெருசலேமின் மக்களின் நிலம். அது கட்டளைகளை நியமிக்கிறது. கட்டளைகள் மனிதர்களைக் களிமண் பிண்டமாய் உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன. கட்டளைகளின் பாதுகாப்பு நெடி அவர்களின் குதத்தில் நிரந்தரமாக பொதிக்கப்படுகிறது. அவர்கள் அமைதியுடனும் நிம்மதியற்றும் ஒன்றாக வாழ்கின்றனர். தத்தமது குதங்களை முகர்ந்து கொண்டு வாழ்வதின் ஊடாக அவர்கள் நிச்சயத் தன்மையெனும் பிண்டத்தை உருவாக்கி வணங்கினர்.
நகர் நடுவே வணிகச் சந்தையின் ஊடாக புனலெடுத்து வழிந்து ஊடுகிறது குருதி. ஆடுகளும் தீர்க்க தரிசிகளும் தான் பலிக்கு உகந்தவர்கள். அவர்களின் பலி இறைச்சியின் மென் சூட்டினைப் பிழிய பிழியக் கதைகளை உருவாக்கி விடலாம். கடவுளின் பாதத் தூளிகளில் நெளியும் இறைச்சித்  துணுக்குகளில் தூபங்கள் எரிகின்றன. மானுடம் நிலம் எனும் பெருங்கனவிலிருந்து தங்களது கடவுளர்களுக்கு படைக்கப்படும் ஓராயிரம் கனவுகளில் இந்த ரத்தத்தின் சிவப்பன்றி ஏதும் உகந்ததல்ல. சிவப்பினைப் படைப்பதன் வழி நாம் உருவாக்குகிறோம் ஒரு நித்தியத்துவத்தை. அழியாத ஒன்றின் மூலமாய் உருவாக்கிய சொற்களின் மந்திரம் இந்த செங்குருதியினால் கழுவப்படும் பொழுது மட்டுமே பூரணமாகிறது, நிலையற்ற வாழ்வின் பெருஞ்சுழற்சி. அதன் பின் அழுக்கு படிந்த சுமேரியா. கடையெல்லையில் வெம்மையும் பசுமையும் சூழந்த சிறு நிலம் கலீலி.

ஜோடான் நதிக்கரை. கண்ணாடிக் குழாய்கள் போல பெருக்கெடுக்கிறது நதி. ஆழமும் ஆழமின்மையும் நொதிக்கும் திரவக் குழி. கரைகளில் தழும்பிக் கொண்டிருக்கும் மணற் துகள். குவிமையமின்றி காட்சி பிளர்ந்தது. முன் பின்னற்ற காலவெளியில் துடுப்பின்றி அலைக்கழிந்தது. இங்கும் அங்குமாய் உருவாகின வெளிச்சக் கீற்றுகளும் இருளின் அடர்ந்த நிழல்களும். தவிப்புடன் ஒவ்வொரு முறை அந்த இளைஞன் மீட்க முயன்றபொழுது அவனது மூடிய இமைகளினுள்  தூண்டில் மீன்கள் போலத் துடிதுடித்தன விழிகள்.  

 The Last Temptation of Christ- Nikos Kazantzakis

திங்கள், 23 ஏப்ரல், 2018

கிறுஸ்துவின் கடைசி சபலம் 1

குளிர் நீலம் மிளிரும் காற்று. மறைந்து விசித்திரமாய் புன்னகைக்கும் நட்சத்திரங்கள். மொட்டவிழ்ந்த வான் வழி ஒளியின் மகரந்தங்கள் துளித்துளியாய் நிலமெங்கும் சிதறிக் கிடந்தது. பாறைத்துண்டங்களின் மெல்லிய முணங்கல். அனல் அலை அலையாய் மிதந்து கிடந்தது அந்த அத்துவான வெளியில். எங்கும் நிசப்தம் சூழ்ந்த மௌனம். அமைதி மென் சுனை நீருருண்டைகளாய் வானிலிருந்து நிலம் நோக்கி நகர்ந்தது. காற்றின் ஈரம்படிந்த எண்ணங்களுடன் பிரார்த்தனையில் அமிழ்ந்திருந்தான் அந்த இளைஞன். கீழே புகை மண்டித் திணறும் சுவாசங்கள். குட்டைப்புதர்களுள், பொந்துகளில் முணங்கும் மிருகங்களைப் போல கிராமம் நித்திரையுடன் போராடித் தளர்ந்திருந்தது.

அமைதியின்றி அடர்ந்து ஓலமிடத் தொடங்கியது காற்று. மனிதர்களும் விலங்குகளும் பிராணிகளும் படர்ந்த மூச்சு  வியர்வையுடன் உவர் நாற்றத்துடன் அங்கு பரவிக் கிடந்தது. புன்னை எண்ணையின் வாசனை பெண்களின் கூந்தலிலிருந்து நாசி துளைத்தது.  புளித்த வாடையுடன் ரொட்டி அடுப்பிலிருந்து சுடச் சுட எடுத்து வைக்கப்பட்டிருந்தது.

நீ எதை நோக்கினாய். உன் கண்கள் இருளை நோக்குகிறதா? சைபரஸின் அடித்தண்டு இருளைத் துளைத்து வேறுபடுவதை, பேரீச்சை ஒரு நீரூற்றாய் உருமாறி காற்றின் அலையடிப்பில் நெகிழ்வதை, அடர்த்தி குறைந்த ஆலிவ் மரங்கள் கருமையினுள் ஓளிர்வதை.

நீ இங்கு பார்க்கும் சிதறுண்ட பாழ்குடிகள், இந்த நிலவெளியெங்கும் மூச்சின்றி கிடக்கிறது. இந்த வீடுகள் உருவாக்கிய இரவின் இடைவெளியில் சேறும் சுடுமணலும் அப்பிக் கிடக்கும் வெண்ணிறப்பூச்சு. கூரைகளுக்கு மேலே வெறித்த வான் நோக்கிக் கிடக்கும் மக்கள். உன்னிடம் வந்து இறைஞ்சுகிறது அம்மக்கள் திரளின் நிணச் சொற்கள். சொற்களற்ற மௌனம். மொழியில் பிதற்றும் நம்பிக்கைகளின் காய்ந்த புண். புண் மொய்க்கும் எண்ணக் குமிழிகள். குமிழிகளிலிருந்து பொட்டித்து தெறிக்கும் பழுத்த வாழ்வின் சீழ்.

அமைதி தலை தெறிக்க ஓடியது. தனித்திருந்தது சூன்யம். அவர்களின் கை கால்கள் பிணைந்து முறுக்கியிருந்தது. அனாதைகளாய் கை விடப்பட்டிருந்தனர். இதயங்களின் பெருமூச்சுகள் கணப்புகளில் சிதறித் தெறிக்கும் பாளங்களாய் முறிந்தது. ஓலங்களின் இறைஞ்சல். அழுகைகளின் பிடிவாதக் கார்வை. துடைத்தழிந்து கிடந்தது வாழ்வு. இன்னும் எங்களிடம் என்ன எதிர் பார்க்கிறாய்.

கிராமத்தின் நடுவே  உயரமான கூரையிலிருந்து  அந்தக் கதறல் பீறிட்டுச் சாடியது.

"இஸ்ரவேலின் தெய்வமே! இஸ்ரவேலின் தெய்வமே! பிதாவே!
இன்னும் எத்தனை காலம். ஒரு மன்றாட்டு. செத்த இறைச்சியை பிய்த்துக் குதறும் காட்டு நாய்களின் நரனரப்பும் வன்மமும் புதைந்த மன்றாட்டு.

மொத்த கிராமமும் யாருடைய கனவிலோ விழுந்ததைப் போல கூச்சலிட்டது. வசைகளைப் பொழிந்து காறி உமிழ்ந்தது. இஸ்ரவேலின் நிலமெங்கும் செத்து மீந்த எலும்புத்துண்டங்கள்.

அல்குல் பிளந்த மண். அலறும் பிறப்பு. மூட்டிய பேரமைதிக்குப்பின் அழுகையின் மென் ஓலம்.

"இன்னும் எத்தனை நாட்கள்? எத்தனை காலம்? நாய்களின் ஊளை அனல்கிடங்காய் மூடியது ஒட்டு மொத்த வெளியையும். வலுக்கும் குரல்களின் சப்தங்களின் கலங்கிய பரப்பில் மூர்ச்சையுற்று புரண்டான் அவன்.

கனவின் பிடியிலிருந்த முடிச்சுகள் இன்னும் இன்னும் என இறுக்கியது.

இருள் கோடுகளில் அந்தக்குன்றின் உள்முகம் வெளிப்பட்டது. அது பாறைகளால் ஆனதல்ல. மங்கிச் சுழன்றது, தலைகீழாகிப் பரவியது ஆழ மிதிக்கும் காலடி இரைச்சல். கருமையிலிருந்து கோட்டு வெளிச்சமாய் நகர்ந்து வந்து கொண்டிருந்தது உருவங்களின் இருள் பொதிந்த மூச்சுகள். பெரிய புருவங்களும், கைகால்களும், கரடுமுரடான  தாடி மீசைகளும் வைத்திருந்தனர். நீண்டுக் குறுகிப் பிரிந்து உருமாறி புகை கலைந்ததைப் போல வடிவற்று மறைந்தனர்.

இருள் ரசம் மங்கிய கண்ணாடிப்பாளமாய் பிம்பங்களை இழந்தது. உறக்கம் பாம்புச்சட்டை போல உரிய உரிய விழிப்பு குளத்தினுள் துளிர்த்த முதல் அலையடிப்பாய் பின் எண்ணிலடங்கா அலைகளாய் மெல்ல மெல்ல கரையைத் தாண்டி சிதறியது. விழிப்பு தட்டியவுடன், அந்த முகங்களின் இழிபட்ட வரைவு ஒரு கோட்டுச்சித்திரத்தைப் போல அறையின் விரிசலிட்ட ஒளியில் மிதந்து கரைந்தது. வண்ணங்களற்ற அந்த சாம்பல் உருவங்கள் எதைத் தேடியது. ஏன் அத்தனை வன்மத்துடன் அதன் கண்கள் என்னை உற்று நோக்கின. தலையழுந்தும் பாரத்துடன் அவன் வீழ்ந்த கடைசி நொடியத் திரும்பவும் நினைவு படுத்த முயன்று இரு உள்ளங்கைகளாலும் தலையை அழுந்திப்பற்றி சொற்களற்ற மொழியில் தனக்குள்ளேயே பிதற்றினான்.

கவிந்திருக்கும் குவையில் மேகங்கள் சதையும் எலும்புமாய் ஒழுகியது. யாரோ திணறிக்கொண்டிருப்பதைப் போலவும், ஊடுவது போலவும் உணர்ந்தான். செந்தாடிக் காரன் மலைக்குன்றின் உச்சியில் திரும்ப வந்து கொண்டிருந்தான். அவனது மேலாடை திறந்து கிடந்தது. வியர்வை ஒழுக வெற்றுக்கால்களில் வந்து கொண்டிருந்தான். மூச்சைப்போல பின் தொடரும் அவனது வீரர்கள் பின் வந்து கொண்டிருந்தார்கள். பாறைகளின் நிலைத்த நெரிசலின் நடுவே ரகசியங்கள் சிமிட்டின. கீழ்வானத்தில் குவியும் வெளியில் வெள்ளிப்பிழம்பாய் திரண்டது ஒற்றை விண்மீன். நாள் சில்லுகளாய் உடைந்து முடிந்திருந்தது.