திங்கள், 24 ஆகஸ்ட், 2020

விரதம்

 உடல் அதன் ஒவ்வொரு கணுக்களிலும் தேடிக் கொண்டிருக்கிறது. குருதி முழுக்க வடிந்து உறைந்து ஒரு வெளுத்த சல்லாத்துணி போல நடுங்கிக் கொண்டிருக்கிறது. தூரத்தில் புகைப்படலமாய் பல்லாயிரம் உடலங்கள் மோதும் அரவம்.

விரதம் எனும் சொல் என் மூளைக் குழியினுள் நொதித்து கூழ் போன்ற திரவமாய் கொப்பளித்தது. காட்சிகளின் கோர்வையற்ற சலனம் காலமற்று புறத்தே ஓடிக் கொண்டிருந்தது. வண்ணங்களற்ற ஒரு காட்சியில் நான் தன்புணர்ச்சியாய் என்னையே விழுங்குகிறேன். மற்றொன்றில் எனதருமை குதிரவீரன் அங்கசீலனைப் பிடித்து தரையில் குப்புறக் கிடத்தி வன்புணர்வு செய்கிறேன். முழுக்க வடித்த பின் அவன் முகத்தில் காறி உமிழ்ந்து விட்டு திரும்பி பாராமல் செல்கிறேன். என் உமிழ் நீர் பச்சை நிறமாய் அவன் கன்னத்திலிருந்து சளியைப் போலத் தொங்குகிறது.

எனக்குள் நான் தேக்கிக் கொண்டிருந்தது எதை. என் பார்வைக்கப்பால் பிதுக்கி வெளி தள்ளிய பல கோடி உயிர்களின் திரவ நெடி.

என் தந்தையை நினைக்கிறேன்.

என் உயிர் காலத்தின் ஒவ்வொரு சொடுக்கலுக்கும் ஒன்று ஒன்றாக பிரிந்து கொண்டிருப்பதை வேடிக்கை பார்க்கிறேன். அம்புகள் உடலின் அனைத்து அணுக்களிலும் ஒன்று விடாது உள் நுழைந்து முளைத்திருந்தது.

என்னுடைய காலம் முழுவதும் நான் ஒன்றையே நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்காகவே நான் வாழ்ந்தேன். அதுவே நான். அதை விடுத்து என்னுள் எதுவுமே இல்லை.

என் முன்னே அவன் நின்று கொண்டிருந்தான். தன் குறியை ஒரு கழட்டி மாட்டும் கருவி போல கைகளில் வைத்திருந்தான். அவனுடைய முகம் ஏனோ அவளை ஞாபகப்படுத்தியது.

பாவம்! பேதை! என்னை அறியாதவள்.

நான் தந்தையை மறுபடியும் நினைத்தேன். என்னால் அறியமுடியாத மூர்க்கமும் வன்மமும் என்னுள் பெருகுவதை உணர்ந்தேன்.

வேண்டாம்! வேண்டாம்! நான் என் தந்தையின் மைந்தன். அவருக்காகவே வாழ்பவன். அவருக்காகவே துறந்தவன்.

அவரது முகம் ஒரு பல்லியின் முகம் போல உருமாறியிருந்தது. என் கண்களுக்கு நேர் எதிரே அது அசையாது என்னைப் பார்த்தது. அதனுடைய சூடான எச்சம் என் நெற்றியில் விழுந்து என் குருதியில் கரைந்து வழிந்தது.

அய்யோ! வேண்டாம்!

நான் அவளை விரும்பியிருக்க வேண்டும். அவளைப் புணர்ந்திருக்க வேண்டும். இந்தப் பாரத வர்ஷம் முழுக்க என் புத்திரர்களால் நிரப்பியிருக்க வேண்டும்.

என் புத்திரர்கள் மலப்புழுக்கள் போல என்னில் நொதிக்கிறார்கள்.

நான் ஒரு நல்ல தந்தையுமல்ல. மைந்தனுமல்ல!

என்னுள் நிரம்பிக் கொண்டிருப்பது என் அகம் மட்டுமே. அது என்னை விரதம் விரதம் என்று ஆட்படுத்துகிறது. என் விரதம் என்பது என்னை பாலற்றவன் ஆக்கி விட்டதே.

நான் பீஷ்மன். பிதாமகன். சத்திரியர்களில் தலை சிறந்தவன். ஆனால் நான் ஏதுமற்றவன். அனைத்தையும் இழந்தவன். அனைத்தையும் ஒறுத்தவன். எதையும் ஏற்கும் தகுதியற்றவன்.

என்னுடைய விரதம் எனக்கு நானே சூட்டிக் கொண்ட பொய்முடி. தன்னைத் தானே உண்ணும் மிருகம் பார்த்திருக்கிறாயா? அது நான் தான். விலாவிலிருந்து குருதி ஒரு கூழ் உருளை உருளையாய் விழுந்து கொண்டிருந்தது.

நான்! நான்!

பூமியும் வானமும் அற்றவன்.

தந்தை என்னிடம் மன்றாடுவதைப் பார்க்கிறேன். பல நூறு துகள்களாக என் கைகளாலேயே அவரை சிதைத்துத் தூக்கி எறிகிறேன். அதன் ஒவ்வொரு துகள்களும் விழுந்த இடத்திலிருந்து கொடுக்குகள் முளைத்து விஷம் மட்டுமே ஆனதாய் என் உடலம் முழுதும் தொற்றிப் படர்கின்றன.

ஸ்தூலகர்ணனின் சிலை பல அடி உயரத்திற்கு ஸ்தாபிக்கப் பட்டிருக்கிறது. திடமான அவனது உடலின் மார்புகள் நொங்கு போல அலங்குகிறது. அவனது குறி என்பது அவன் நினைத்த மாத்திரத்தில் உருமாறும் ஒரு தனித்த உயிர். தன்னை ஆண் என்றும் பெண் என்றும் ஒரு சேர ஆக்கியவனின் பலி பீடத்தில் பல கோடி ஆண்களின் பெண்களின் குறிகள் அவிசாக்கப் படுகின்றன.

அவனுக்கு நேர் எதிர்புறம் ஆடி பிம்பம் போல ஸ்ரீ கண்டியின் சிலை. வில்லம்புடன் அவனையே உற்று நோக்குகிறது. அவர்களுக்கிடையே சன்னதம் வந்து ஆடிக் கொண்டிருந்தன பல்லாயிரம் உடல்கள் பாலற்றவர்கள். தங்களை இந்த மாபெரும் உடல்களுக்கிடையில் பொருத்தியவர்கள். சந்ததியற்றவர்கள்.

அங்கு பீஷ்மருக்கென்றிருந்த பீடத்தில் ஒரு கூர்மையான ஆண் குறியை ஸ்தாபித்திருந்தனர். அதன் மேல் சொட்டிக் கொண்டிருந்தது காலாதீதமான ஊற்று. அது நனைய நனைய உருகி பின் தனக்குள்ளாகவே தூலமாகிக் கொண்டிருந்தது.

பிறையைப் போல 15 நாட்கள் வளர்ந்தும் பின் குன்றியும் பரிணாமம் கொண்டது. அதற்கு பலிகள் இல்லை. பூசைகள் இல்லை. வருடத்திற்கு ஒரு முறை ஒரு திடமான ஆணை அதில் இருத்துவார்கள். அவனது குதம் அதனுள் ஒருங்கி அப்படியே அவனது பலி ஏற்கப்படும். அதுவும் ஒரு சம்பிரதாயம் தான். வெறுமனே இருத்தி எழுப்பி விடுவார்கள்.

தற்போது யாரையும் கொல்வதில்லை. ஆனால் காலங்காலமாக அது காத்திருக்கிறது. தனக்கானவளுக்காக.

கார்த்திகை மாதத்தில் அதன்முன்னே சொக்கப்பனை ஏற்றுவார்கள். ஒரு பெண் மரத்தை எரியவிட்டு அதன் சாம்பல் கரியை அந்த பீடத்தில் பூசுவார்கள்.

மற்றைய தினங்களில் மறக்கடிக்கப்பட்டு அது தன்னுள் தானே அலைவற்று கிடக்கும் 

என்னுடைய கேள்வி திரும்ப பாட்டனாரையே முட்டி நின்றது. அவரது காம ஒறுப்பு இயல்பானதாய் இல்லை. அவர் முன் பல மணி நேரம் பேச்சற்று நோக்கிக் கொண்டிருந்தேன். எந்த பதில்களுமற்று அது உள் நோக்கியது.        
ஒரு மென் அழுகை. பின் ஒரு ஓலம். அது ஒரு பெண் குரல். வெட்டியெடுத்த முலைகளை இரு பழங்கள் போலக் கொண்டு வந்தாள். மண்டியிட்டு தன் கைகளாலேயே மண்ணைப் பிராண்டி தோண்டி விதைகள் போல அதைப் புதைத்தாள். பின் அதன் மேலேயே சிறு நீர் கழித்து காறியுமிழ்ந்து விட்டு நகரந்தாள். யோசிக்கிறேன், அவளுக்கு முகமே இல்லை. அதில் ஒரு நிழல் மட்டுமே இருந்தது.

நான் அங்கசீலன் போல என்னை உருவகித்து பீஷ்மரை நோக்கினேன். பரிதாபகரமான அவர் முகத்திலிருந்து கண்ணிர்த்துளிகள். ஒரு இருப்பு மட்டுமாகவே இருந்தார். உடல் இல்லை. தன்னை நோக்கி வரும் பிள்ளைகளை எல்லாம் வாரி அணைத்து நெஞ்சுருகி அழும் ஒரு பெரிய தந்தை போல இருந்தார்.

அதே நேரம் தன் பிள்ளைகளை எல்லாம் வன் புணர்வு செய்யும் மனம் பேதலித்த பெரியவர் போலவும் தோன்றினார். என்னால் நிர்ணயிக்க முடியவில்லை.


எனக்கு அந்தப் பழங்குடிகளின் வழிபாடே உகந்ததாக இருந்தது. அவர்கள் தங்களுக்குள் எந்த பேதமின்றி மாறி மாறிப் புணர்வதே எங்கள் வழிபாடு என்றனர்.

அந்த முதிய பாட்டனுக்கான சரியான வழிபாடு அதுதான். 

நுரைக்க நுரைக்க அவன் முன்னே காமத்தைப் படைப்பது.

ஆனால் விரதம் எனும் சொல் காலாதீதாமாய் அப்பீடத்தின் மழுங்கிய தலையில் சொட்டிக் கொண்டிருந்தது.

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

பசி

 "எல்லாம் யோசிக்கும் வேளையில் உண்பதும் உறங்குவதுமாய் முடியும்"

- தாயுமானவன்கால்கள் பதியா நிலம். தலைக்கு மேலும் கீழும் ஏதுமற்ற வெளியைக் காண்கிறேன். மழையில் நனைந்து கரைந்து வீழ்கிறாள். அவளது துகளிற்குள்ளிருந்து முளைக்கின்றன இளம் தாவர நுனிகள். அமைதியற்று அலைகின்றேன். என் கட்டிலின் அடியில் தூங்குகிறது அந்த மிருகம். அறை முழுதும் துர் நாற்றம் ஒரு சாசுவதமான இருப்பாய் ஆயிற்று. சங்கிலிகளில் நெறிபட என் சுவரெங்கும் அலைகிறது. பழுத்த கண்களும் கரிய மயிர்க்கற்றைகளும் அடர்ந்த அந்த வினோத மிருகம். 

நான் பிரார்த்திக்கிறேன். நாட்கள் நிறைவடையாமல் இருக்க. சிலுவையின் மைந்தன் என் முன் ஒரு பசித்த நாய் போல வெறிக்கிறான். அவனுடைய அந்தரங்க உறுப்புகளை பார்க்கிறேன். சீழ் சொட்டச் சொட்ட ரத்த நிறத்தை அவன் அதக்கிக் கொண்டு தெரு முக்கிலிருந்து திரும்பி செல்கிறான். 

இரவே ஒரு பெரிய அளவில் பிரார்த்தனை போல முணங்குகிறது. நான் திரும்பக் கேட்கிறேன். அந்த ஒலி, அதன் குரல் கீரிச்சிட்டு சுவர்க் கோழியின் குரல் போல இரவு முழுதும் அலைகிறது. அது அந்த தனித்த மிருகத்தின் குரல். அது பசித்திருந்தது. என் காதுகளை அறுத்து சுடச்சுட தட்டில் எடுத்து வைக்கிறேன். மிச்சமின்றி நக்கி உண்டது.

அவள் முளைத்த தாவரத்தின் விதைகளைக் காண்கின்றேன். அவளது திராட்சை நிறக் கண்களைப் போன்ற கனிகளை ஈனி தாவரம் மடிந்தது. கண்ணாடிக் குடுவைக்குள் கண்களை தண்ணீர் விட்டு வளர்க்கிறேன். அறை முழுதும் திராட்சை நிறம். கட்டிலின் அடியிலிருந்த மிருகம் நிறத்தை உண்ணத் தொடங்கியது. அதன் அடங்காப் பசியில் நிறங்கள் சிதறின.

வண்ணங்களின் குழைந்த சேற்றை அள்ளி அள்ளி உண்டேன். என் அருகே அமைதியற்று அமர்ந்திருந்தது அந்த மிருகம். அதன் வாயினைக் கிழித்து அதனுள் என் அந்தரங்க உறுப்புகளை வெட்டி உள் தள்ளுகிறேன். ரத்தம் சொட்ட சுவைத்து தின்று அன்று இரவே வயிறு வெடித்து செத்தது. அன்று உறங்கினேன்.

ஜன்னலுக்கு வெளியே மழை. மறுபடியும் மழையிலிருந்து முளைப்பதைப் பற்றி நினைக்கின்றேன். ஆனால் சாம்பல் நிற மழை அறையெங்கும் மூத்திர நெடியுடன் ஓடுகிறது. சிலுவை மைந்தன் அவள் முளைத்த தாவரத்தை உண்டு இன்று பசியாறிக் கொண்டான். தூங்கிக் கொண்டிருக்கும் அவன் விழிகள் திறந்தே இருந்தது. ஒரு பிணம் போலக் கிடக்கிறான். ஆனால் ஒரு சொல் அறையை விதிர்க்கத் தொடங்கியது. தாகம் தாகம் என்று அலையாடியது.

மண்ணைப் பற்றிப் பாடிக் கொண்டே பழுப்பு நிற வெட்டுக் கிளிகள் அறையினைப் போர்வையாய்த் தொற்றுகிறது. அறையே ஒரு மரத்தின் கிளை போல உருமாறிற்று. அதனில் தொங்கும் புழுவாய் நான். பச்சை எனும் சொல்லிலிருந்து முளைத்த அனைத்தையும் தின்று தீர்த்தன. அன்று ராப்பாடி படினான்.

"சோறே சோறே உனக்கு உயிர் இருக்குமெனில் 

நீ என்னவாக விரும்புகிறாய்"

"சோறே சோறே உனக்கு உடல் இருக்குமெனில்

நீ யாரைப் போல இருக்கிறாய்"

"சோறே சோறே உனக்கு இருப்பிருக்குமெனில்

நீ யாரை உண்ண அழைக்கிறாய்"

பசி! பசி! என்று கூவிக் கொண்டு என் அறையை விட்டு நகர்ந்தது அவன் குரல்.

எழுந்து கழிவறைக்குள் சென்று அதக்கி சுயமைதுனம் செய்து விட்டு திரும்பினேன். அதன் பிசுபிசுப்பு என் கை விரல்களில் நொதித்தது. ஜன்னலில் இருந்த மழை அறை உத்திரத்தில் தூக்கிட்டுக் கொண்டிருந்தது. வயிறு வெடித்து சிதறிக் கிடக்கும் மிருகத்தின் இறைச்சி நொதித்து திரவமாகி ஒரு தடாகமாய் அறை நடுவே சுழியிட்டுக் கொண்டிருந்தது. அதன் பிரதிபலிப்பில் நாக்கு தொங்க மழை அலையிடுகிறது. கரையினைத் தொட்டு மீளும் அதன் சுழிப்புகளில் பசி பசி என்ற சொல் பிளாஸ்டிக் கவர் போல மிதக்கிறது.

நான் வெளியை நோக்குகிறேன். அதே சாம்பல் நிற மழை. உள்ளும் புறமுமற்று அறை அந்தரத்தில் கிடந்தது. கால்களுக்கடியில் ஏதுமில்லை. ஆனால் உந்த உந்த அறை நகர்ந்தது. ஒவ்வொரு அசைதலுக்கும் தடாகத்தின் நீர் தழும்பிக் கொண்டிருந்தது. மழையிலிருந்து முளைத்தவளைப் பற்றிய கனவினை நினைவு கூர்ந்தேன். அவள் முளை விட்ட பிரதேசங்களை என் உடலில் தேடினேன். என் உடல் ஒரு தாவர உண்ணியால் உண்ணப்பட்டது. அதன் மக்கிய சாணியில் நான் துடித்துக் கொண்டிருந்தேன். அவள் என்னை முளைக்கச் செய்தாள். நான் ஒரு தாவரம். பச்சை மட்டுமே அனைத்துமாய்க் கொண்டவன். அவளின் உறுப்புகளுக்குள் என் பச்சை நிறத் திரவம் இடைவிடாது நிறைந்து கொண்டிருந்தது.

மழை நின்ற இரவில் திகட்டத் திகட்ட அவள் என்னைத் தின்று கொண்டிருந்தாள். அவளது முகம் நாக்கு தொங்க அன்று கிடந்த நாளை நினைவு கூர்கிறேன். என்னுள் சுழியடிக்கிறது. நான் அவளது வயிற்றில் நொதித்து மலமாகிறேன். கழிவறைப் போனிக்குள் அமிழ்கிறேன். பல்லாயிரம் துகள்களாய் சிதறி ஓடுகிறேன்.

ராப்பாடி திரும்பப் பாடுகிறான்,

"சோறே சோறே உனக்கு இருப்பிருக்குமெனில்

நீ யாரை உண்ண அழைக்கிறாய்"

பசி! பசி! என்று அவள் என்னை இளக்கி வெளித்தள்ளினாள். ஜன்னலுக்கப்பால் சாம்பல் வண்ண மழை இடைவிடாது நனைந்து கொண்டிருந்தது

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

உடல்

உடல் பற்றி நீ என்ன நினைக்கிறாய். ஒவ்வொன்றையும் கலைத்துப் போடுதல் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். என்னுடல் என்பது என்ன? பல்வேறு கூறுகளால் நான் அதனை சிதைத்து வைத்திருக்கிறேன். அதில் என் பால் எனும் திரிபை எப்படி வகைப் படுத்த என்று என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. 

உடல் அதன் சமூகத் தேவையை இழக்கும் பொழுதே சுதந்திரம் அடைகிறது – ரமேஷ் பிரேதன் 

ஆம். நான் ஏன் ஒற்றைப் பாலினத்திற்குள் உழல்கிறேன். என் உடல் அதன் அமைப்பு அதன் ஸ்தூல இருப்பில் நான் யார் என்பதை என்னால் தகவமைத்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் சமூகம் அதன் சொந்தத் தேவைகளின் பொருட்டு என் உடலினை வகைப்படுத்தி விட்டது. நான் ஆண் என்றது. ஆண் எனும் ஒற்றை இருப்பினுள் நான் பல தரப்பட்ட உடல்களை உருவாக்கிக் கொள்கிறேன். 

அந்தக் கோவிலினுள் மூன்று கற்சிலைகள். அவைகள் உடல் உறுப்புகளின் வடிவங்கள். அதில் ஒரு ஆணும் இரு பெண்களும் இருந்தனர். ஆண் என்பது ஒரு விடைத்த ஆண் குறி. பெண் என்பது விரித்த திதலை பூத்த யோனியும், ஒரு ஒற்றை முலையும். 

ஆண் குறிக்கு விந்துவும், பெண் குறிக்கு ரத்தமும், முலைக்கு பாலும் என கோவில் உத்திரத்தில் இருந்து அபிஷேகமாய் பொழிந்து கொண்டிருந்தது. 

ஏனோ அந்த சுடுகாட்டுக் கோவிலிற்குள் நான் மட்டும் தனித்து நின்று கொண்டிருந்தேன். எனக்குள் அழற்படு காதை மனப்பாடம் போல ஓடிக் கொண்டிருந்தது. சக்கரவாளக் கோட்டத்திலிருந்த பேய்கள் எல்லாம் என் செவினுள் ஈக்கள் போல ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. 

நான் ஆண் எனும் இருப்பை சந்தேகப்பட்டேன். உடல் என்பது புணர்தலால் தீர்மானிக்கப்படுகிறது எனில் ஆண் என்பவன் அதில் ஏதுமற்றவன். அவனது குறி என்பது ஒரு அனிச்சை கருவி. அவன் கட்டுப்பாடுகளுக்குள் அதற்கு என்றுமே இடம் இருந்ததில்லை. அவனது விந்து என்பது ஒரு உப பொருள், அதன் பல கோடிக் கணக்கான அணுக்கள் அவனுடையது என்பது பேருக்கு மட்டுமே. அது அவன் செரித்த அனைத்திலிருந்தும் தோண்டத் தோண்ட முளைத்துக் கொண்டே இருக்கும் ஒரு விராட வடிவம். அவனால் தன்னுடைய விந்தொழுக்கை கட்டுப் படுத்த முடியாமையின் விளைவே அவனது புணர்தல். அவனது குறி என்பது ஒரு தனித்த உயிர். அவனில்லாது கூட அதனால் செயல்பட முடியும். 

 நான் பெண் எனும் இருப்பைக் கடக்க முயல்கிறேன். ஏன். ரத்தம் ஒழுக அதிலிருந்து நான் மீள்வதைக் காண்கிறேன். பின் துடிதுடிக்க அதனுள் இறங்கி மறைகிறேன். அது ஒரு பாழ் போல என்னுள் உருவாகியிருந்தது. அதனை ஒரு மாமிசம் உண்ணும் வாய் போல என் கனவுகளில் விதிர்விதிர்த்திருக்கிறேன். ஆனால் அதன் ஈர்ப்பு சகிக்க முடியாமல் மழைக் கால விட்டில் போல அதன் ஜோதியினுள் கரைந்தழிகிறேன். அதனுள் இறங்கிய பின் நான் அது என்ற உணர்வற்றுப் போகிறேன். அங்கு என்னை எப்படி உணர என்ற ஸ்தூலம் கரைந்து அரூபம் ஆகிறேன். ஏன் என் குறியிலிருந்து ரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது. ஏன் நான் அணங்கு ரூபம் கொள்கிறேன். உடல் என்பது புணர்வதால் அறிவதன்று. அது அழிவதால் அறிவது போலும். அவள் என்பவள் என்னுடைய சொந்த சுய வெறுப்புகளின் புள்ளியிலிருந்து தளைக்கிறது. ஆனால் என்னுடைய எண்ணங்களில் நான் யார். அவள் அவன் அது அற்றது என்று ஏதேனும் உண்டா. ஒரு அக்றிணை போல என்னை மாற்றிக் கொள்ள முடியுமா? உண்மையில் நான் அப்படி எண்ணவில்லை. ஒரு பாலற்ற பிறவியாய் ஆவதைப் பற்றி கனவு கண்டு கொண்டிருக்கிறேன். ஆனால் நான் என்பதையோ மறுதலிக்க முடியவில்லை. 

ஒரு பெண்டுலம் போல இரு பால்களுக்கிடையில் நகர்ந்து கொள்கிறேன். அதன் நடு மையத்தில் அமையும் பொழுது பெண்டுலம் துண்டாடுகிறது. நான் தூக்கி வீசப்படுகிறேன். 

வேங்கைக் கானலில் தன்னந்தனியே அவள் நடந்து கொண்டிருந்தாள். நெடுவேள் குன்றத்தின் அருவியிலிருந்து ஆழம் நோக்கி சாடினாள். அவள் தன்னை அம்மணமாக்கி இருந்தாள். அவளது இடது முலையில் குருதி ஒரு மண் தடம் போல பொருக்கோடி உடைந்திருந்தது. முலையறுத்த நொடியைத் திரும்ப நோக்கினாள். தீப்பிழம்பின் உச்சத்தில் உழித்தாண்டவம் ஆடிய காளி, தன் கால்களுக்கடியில் தலையற்ற தன் கணவனின் முண்டத்தை மிதித்து மிதித்து அறைந்தாள். தன் தலையையும் அறுத்து விடவே எண்ணியிருப்பாள். அதன் ரத்தப் பெருக்கைத் தானே அள்ளி குடிக்க வேண்டும். அவனது நொய்ந்த குறியைத் தடவிக் கொடுத்தாள். அது பசித்த தெரு நாய் போன்ற பாவத்துடன் அவளை நோக்கியது. பின் அவனைக் கடித்து உண்டாள். எலும்புகளை மாலையாக்கி சூடிக் கொண்டாள். பின் அவளைப் பின் தொடர்ந்த கருப்பு நிழலைத் துணையாக்கிக் கொண்டு இந்த கானகம் வந்தாள். அது அவனது கணவன் தான். அவன் துணையாகவில்லை. அவளே அவனுக்கு துணையானாள். 

தன் தலை துண்டாகி கூழாகக் கிடக்கையில் அவன் வெம்பிக் கொண்டிருந்தான். ஒரு முறை ஒரே ஒரு முறைக் கூட அவளை நான் புணரவில்லை. அவள் உடலை நான் அறியவே இல்லை. என் அறிதலுக்கு அப்பாற்பட்டு அவள் இருந்தாள். கானல் நீர் போல அவளது உடலை என் அருகாமையில் அறிந்து அதனை அழித்து அழித்து உட்செல்வேன். பின் ஏதுமற்ற வெளியில் கைமைதுனம் செய்து கொண்டு அடங்குவேன். 

நான் அவளாகவும் அவள் நானாகவும் விரும்பினேனா? தெரியவில்லை. பால் எனும் ஒன்றில்லையேல் அதன் அதிகாரம் இல்லையேல் அது சாத்தியப் பட்டிருக்க்குமோ தெரியவில்லை. நான் ஆண் தன்மையுடன் அவளை நோக்கியதில்லை. அவள் அருகிருக்கையில் உள்ளூற பயந்தேன். என் அபத்தங்களின் ஊடுபாவை அவள் அறிவாள். அவளுள் என்னால் நுழைய முடிந்ததே இல்லை. ஆனால் அவள் என்னை ஒரு குழந்தை போல பாவித்தாள். வழிதவறிய ஒரு அப்பாவிக் குழந்தை போல. அது திகட்டும் குமட்டிக் கொண்டு வரும். அவளை வன்மமாக புணர வேண்டும் என்று தோன்றும். அச்சமயங்களில் மதுவும் யாழும் மட்டுமே எனக்கு துணையாக இருந்தது. 

பொறுத்துக் கொள்ள முடியாத பொழுது என் குறியினை அகற்றி விடலாம் என்று தோன்றியதுண்டு. அப்பொழுதெல்லாம் என் துணைக் குறியாய் நான் மாதவியை நினைத்தேன். அவள் ஒரு ஆண். போல என்னை பாவித்தாள். நாங்கள் புணரும் சமயம் உடலற்றுப் போவதை உள்ளூற உணர்ந்தோம். அவள் நான் எனும் இருமை கழன்று நான் அவன் எனும் ஒருமை ஆவதைப் போல ஆவேன். சிறிது நேரம் தான் அதன் பின் அவள் என்னை குழந்தையாக பாவிக்கத் தொடங்குவாள். அப்பொழுது உள்ளூற குரூரம் ஏறும். அவளை அடிப்பேன். அவளை வசைகளைக் கொண்டு நிறைப்பேன். வசைகளையே அவள் உடலாக்குவேன். பின் அந்த உடலைப் புணர்வேன். என் விந்து ஒழுகி நான் இல்லாமல் ஆவது வரைப் புணர்ந்து அங்கேயே மூர்ச்சையற்று விழுவேன். 

ஆனால் சரியாகச் சொல்ல வேண்டுமெனில் என்னிடம் உள்ள இரட்டைதன்மை. ஒரே நேரத்தில் இருபால் உயிரி போல என்னை உணர்வது. நான் கண்ணகியை என்னுடைய ஆண் துணை என்றும் மாதவியை பெண் துணை என்றும் நினைக்கிறேன். அதே நேரம் அது நிலைத்த இருப்புமல்ல. இவர்கள் இருவருக்குள்ளும் தலை கீழாகவும் நடந்திருக்கிறேன். என் உயிர் போகும் சமயம் நான் கண்ணகியை நினைத்தேன். அவள் என்னை காப்பாற்ற வருவாள் என நம்பினேன். அவளது முலை ஒரு நெருப்புக் கோளம் போல மதுரை நகரெங்கும் உருகியோடியது. என் தலையற்ற உடலை அவள் இந்த மலைப் பொத்தையில் தோண்டி எடுத்தாள். என் உடல் நொய்ந்திருந்தது. மொத்த ரத்தமும் வடிந்திருந்ததால் அது ஒரு சவலை போல அவள் கைகளில் ததும்பியது. அவள் என்னை நோக்கினாள். வாரி எடுத்து தன் தொடைகளுக்கிடையில் அதக்கி உள்ளே தள்ளினாள். என்னை ஒரு மலைப்பாம்பு போல விழுங்கினாள். நான் அவளுள் ஒன்றானேன். அவளும் நானும் என்றன்றி ஆம் அதுவே தான் அவள் என்னை அவளுள் இணைத்து அவளின் உடலாகவே ஆக்கி விட்டிருந்தாள். அவள் பாலற்றவள். அவளை வணங்குவோம். 
 
நான் சிந்திய விந்துத் துளிகளுக்கெல்லாம் சேர்த்து தன் ரத்தத்தையும் பாலையும் கொட்டித் தீர்த்த தேவியர்களின் கதைகளைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன். அது என் கதையும் கூடத்தான். 

நான் பாலற்றவன். அதனாலேயே காலங்கள் கடந்தவன். என்னைக் கோவலன் என்றனர். கண்ணகி என்றனர். மாதவி என்றனர். ஆனால் நான் என்னை அது என்றேன். என்னை சமூகம் அற்றவன் என சொல்லிக் கொள்ளத் துடித்தேன். கொய்த என் தலையை ஊருக்கு நடுவே புதைத்திருந்தனர். அதிலிருந்து முளைத்த விருட்சத்தில் பிரதிஷ்டை செய்த ரூபத்தில் எனை லிங்கம் என தற்போது அழைக்கின்றனர்.

 நான் யார்?

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

வானும் மலையும்

மலைப் பாறையினுள் நீர் தேங்கிய பள்ளங்களில் அமைந்திருக்கும் வான நீலத்தை பார்ப்பதைப் போல வானம் தலைகீழாகி இருந்தது. வானத்து இடைவெளிகளில் பூமி நெளிந்து கொண்டிருந்தது. பல்லாயிரம் கேவல்கள் விசும்பை நக்கித் துடிக்கும் பல கோடி சிறகுகள். கோட்டு வெளிச்சமாய் இருளைத் துழாவும் ஒளி. அசைவின்மையை ஒரு கூச்சல் போல சப்தமெழுப்பி காதுகளை அடைத்து பிளிறும் மலை. மலை ஒரு மாபெரும் உடல் போல கிடந்தது. பச்சை அதன் தோலாய்ப் படர்ந்திருந்தது. அதன் உறுப்புகளென மலைக் குன்றுகள் சூழத் தனிமையைக் குடித்துக் கொண்டு இரையெடுக்கும் மிருகம் போல முணங்கிக் கொண்டிருந்தது.

அங்கு காலம் என்பது ஒலியும் ஒலியின்மையும் தன்னைத்தானே பணயம் வைப்பதனால் உருவாகும் பதற்றத்தின் அதிர்வுகள். ஒலி மீள உருவாகும் தோறும் மலை காலம் கடக்கிறது. பின் உறக்கத்திலிருந்து புரண்டு எழும்புகிறது. வெளிச்சமும் இருளுமாய் அது காலத்தை அளக்கிறது, ஒலியின் சுரோணிதம் அதன் பற்பல இடுக்குகளிலிருந்து பொங்கி பள்ளங்களை நிரப்புவதும் பின் வழிந்து வெற்றாவதுமாய் காலம் தன்னைக் கலைத்துப் போட்டு உருமாற்றுகிறது.

ஒரு வானமற்ற இரவில் நட்சத்திரங்கள் உதிர்ந்து மலை முழுதும் வெண்ணிறத் திட்டுகளாய் பதிந்து கிடந்தது. குழந்தை உறங்கி எழும்பும் போது அருகில் தாய் இல்லாமல் போனால் வெறித்து அழுவது போல, மலையின் கேவல் ஒலி, வெண் அருவியாய் சிதறித் தெறித்து வானம் தேடி பூமியை நோக்கி ஓடியது. மண்ணெல்லாம் பரவி விதிர் விதிர்த்து தேடியது. 

இரு எல்லைகளுக்குள் இழுத்து முடுக்கிய கம்பி தன் முயற்சியின்றி அதிர்ந்து கொண்டே இருப்பதைப் போல மண்ணெங்கும் ஆகாசத்தின் அதிர்வலைகள். அவை வானின் பிரதிபலிப்பே அன்றி வானல்ல. வானம் தன் எல்லையற்ற மற்றும் கட்டுப்பாடின்மையை ஒரு மாபெரும் வலை போல சூழ்ந்து கொண்டிருக்கும். அது திசைகளற்றது. காலமுமற்றது. 

ஆனால் வேறு வழியில்லை. மலை தன்னுள் அடங்கி பூமியினுள் கரைந்து கொண்டிருக்கிறது. அதன் மொத்த திரவமும் ஊற்றுகளாய் உடைந்து உப்புப் பறல் போலக் கரைந்து மறையத் தொடங்கியது. வானம் வானம் வானம் என்று அதன் உடைப்பெடுத்த பகுதிகளிலிருந்து நீர்மை பொத்து உதிர்ந்தது.

கரிய இரவினுள் கருமை பூசியது எது. இருளும் ஒளியும் எதனைக் கொண்டு உருவெடுத்தன. கரைந்த மலையின் துகள்கள் தங்களுக்குள் உசாவின. மலை எனும் இருப்பு அற்றுப் போனதும் அதன் எதிரொலிகளால் ஆன கருத்த நிழல் உருவம் பற்றி எரியத் தொடங்கியது. நெருப்பின் நா ஒரு செந்நிற வேங்கை போல எம்பிக் குதித்து ஆடியது.

அந்நா தொட்ட திசைகளிலெல்லாம் இன்மை பரவியது. இன்மை தன்னுள் புசித்த அனைத்தையும் ஒளியிலிருந்து இருளாக்கியது. இருள் பெருங்கடலின் அலை எனக் கரை தொட்டு பின் காலமற்ற வெளியினுள் அமிழ்ந்தது. முன்னும் பின்னுமாய் அது தொட்ட அனைத்திலும் இருள் ஒளி முயங்கிய இரண்டுமற்ற பிரதேசம் உருவாகியது. அதை நீலம் என்றனர். அது தன்னுள் தான் என நிறைந்து பெருகியது. 

பெருகப் பெருக அதுவே பசியாகியது. சூழ்ந்த அனைத்தையும் உண்டுப் பெருத்தது. அதனை விராடம் என்றனர். அனைத்தும் உண்டபின்னும் அடங்கவில்லை.

வானம் என்பது வாய். திசைகளற்ற வாய் என அவர்கள் அறிந்திருந்தனர். உண்ண உண்ணக் குறையாத உணவை பூமியில் விதைக்க அமிர்தம் கடைந்தளித்தனர். உண்டு திளைத்தும் அடங்காப் பசியினை அளிக்கும் பெரும் இச்சையினை இருள் ஆக்கினர். உண்ணும் உணவை ஒளி ஆக்கினர். உண்ணுதல் எனும் செயலே ஒலியும் அதன் இன்மையும் ஆனது.

உண்ண உண்ண வானம் கருவிலிருந்து இருளிலிருந்து துளிர்த்தது. 

உண்ண உண்ண மலை கரைந்தழிந்து மீண்டது.

ஒரு வானமற்ற இரவில் பெய்த மழையில் மலை இன்னும் இன்னும் எனத் தன் தனிமையில் கருமையில் அமிழ்ந்தது.

வானம் தன்னை தலை கீழாக்கி பூமியான பொழுது, நட்சத்திரங்கள் பாளம் பாளமாய் உடைந்திருந்தது. அதன் இடுக்குகளில் நீர்மை மலையின் சுரோணிதப் பாட்டையாய் சுழித்தொடியது.

வியாழன், 11 ஜூன், 2020

ஜெபம்

நல்லது அல்லது தூய்மையின் பரிசுத்தமான தன்மை எவ்வளவு ஒவ்வாமையைத் தருகிறது. அடித் தொண்டையில் அமிழ்ந்திருக்கும் கசப்பு போல. எங்காவது ஏதாவது ஒரு கரும்புள்ளி கிடைத்து விட்டால் போதும் ஊதி ஊதிப் பெருக்கி விடலாம். ஒரு குற்ற உணர்வுடனும் பக்தியுடனும் தான் நான் அவனை அணுக முடிந்தது. ஏதோ ஒரு வசீகரத் தன்மையும் அந்த ஈர்ப்பினாலேயே வருகிற அதீத வன்மமும் அவனிடம் தோன்றிக் கொண்டே இருக்கிறது.

அவன் முன் மண்டியிடும் பொழுது அது மிக எளிது என்றும். பிரார்த்தனைகள் முடிந்து என் பாவங்கள் என நான் நினைத்துக் கொண்ட அனைத்தையும் அவன் சம்மாட்டில் ஏற்றும் பொழுது அவன் ஒரு பலி என்றும் தோன்றும். ஆனால் ஒரு வினோதக் காதல் அவனை என் காதலியாக்கிக் கொள்ள வேண்டும். ஒரு சோனியாவைப் போல. அப்படி அவனை ஆக்கிக் கொள்ளும் பொழுது திரும்ப எனக்குள் மீள மீள உருவான சொல். பலி. அது நான் பலியாக்கப் படுவது. ஆம். நாமும் அவனைப் போல ஆவது தான் அவனது ஆன்மீகம். 


எப்படி இது சாத்தியப் படும். எங்கும் எதிலும் அதற்கு வாய்ப்பில்லை. ஒரு ஆண் இப்படி இருக்க வாய்ப்பில்லை. உண்மையில் அவன் ஒரு பெண்ணாக இருக்கவே அதிக வாய்ப்பு. ஒரு பரிசுத்தமான வேசி. மனிதனால் சாத்தியப்பட்ட எல்லை அவன். அன்பு எனும் விழுமியத்தை ஒரு தனித்த உயிர் போலவே பாவித்தான். அருகருகே நாம் இருக்கிறோம். பேதங்களற்ற எதிர்பார்ப்புகள் அற்ற அன்பு என்று ஏதேனும் உண்டா என்று தோன்றியது. உண்மையில் இதை விட பாசாங்கான வார்த்தை ஏதும் இருக்க வாய்ப்பில்லை. ஒரு பாவனை விழுமியமாய் ஆகி விட்டது.

மரியத்தை அவன் எப்படி நினைத்திருப்பான். அவனைப் போலவே ஒருத்தனை எந்த பெண்ணுமே விரும்புவாள். நான் அவனை மறுதலித்து கொண்டே இருக்க வேண்டி இருக்கிறது. நடுப் பாலைவனத்தில் தன்னந்தனியே அவன் அமர்ந்திருக்கிறான். சூழ்ந்திருக்கும் இரவின் கார்வை ஒரு புகை போல அவனை இழுத்துப் போர்த்தியது. பதற்றத்துடன் அவன் வெளியை நோக்கினான். முழு நிலவு ஒரு செந்நிறக் ோளையாய் வழிந்தது கரிய வானில். அவன் தன் நம்பிக்கைகள் அனைத்தையும் அடகு வைத்திருந்தான். அங்கு மரியம் வந்தாள். அவனை ஒரு பிள்ளை போல மடியில் ஏந்தினாள். தன் முலைகளை அவன் வாயில் பிதுக்கினாள். வருடிக் கொடுத்தாள். அவனை ஒரு கருவி போல ஏந்திக் கொண்டு இயங்கினாள். இரவு அணையாது ஒரு கடல் வாழ் உயிரினம் போல பாலை வெளியில் மிதந்து கொண்டிருந்தது. விழித்த பொழுது தன் தொடை ஈரமாகி இருந்தது. பாலையின் காற்று ஒரு கனத்த திரவம் போல அவன் தொண்டையில்  மெல்ல இறங்கியது. தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான். அன்பு என்று.

அவன் நமக்கு அளிப்பதும் அதுதான். அவனது அற்புதங்கள் அதன் மூலமே சாத்தியப்படிருக்கும். அதற்கு வேறு வழிகள் இல்லை. நீ வா என  அவன்  லாசரசை அழைத்து தன் கைகளை நீட்டிய பொழுது அவனிடம் எந்த தயக்கமும் இல்லை. அவன் அவ்வளவு நம்பினான். தன் நம்பிக்கைகள் தன்னை விட வலிமையானது என்பதை அவன் மிக நம்பிக்கையுடன் உணர்ந்தான். 

ஆனால் ஆனால் அது தவிடு பொடியாகும் பொழுதும் அவன் நம்பினான். ஆம் அதனாலேயே அவன் தேவன். நாமும் அவனைப் போலவே என்று அவன் நமக்கு அனைத்தையும் கையளித்தான். தன்னை பலியாக்கும் பொழுது முன் நிற்கும் அனைவரையும் பலிகளாக உணரச் செய்தான். அதனாலேயே கல்லெறி பட்டான். அவனது தோல் செதில் செதிலாய்க் கிழிந்து ரத்தம் நிலம் முழுதும் சிதறிப் பெருகியது. அது நிலத்தில் உள்ள ஒவ்வோர் உயிருக்குமான ரத்தமாய் ஆகியது. அவன் ரத்தம் வடிந்து வெளிறி சவமாய் ஆகும் வரை நிலம் காத்திருந்தது. பின் அது அவனாகவே திரும்ப அளிக்கப்பட்டது.  ஆம் அவன் மண்ணாலானவன்.

திரும்ப நான் எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன். இவ்வளவு நல்ல தன்மை என்பது மனிதத்திற்கு அப்பாற்பட்டது. அவனிடம் என் பிரார்த்தனைகளை சொல்லிக் கதறும் பொழுது அவன் ஒரு தேவனாக எனக்கு ஆறுதல் சொல்வான். பின் என்னருகே அமர்ந்து என் கைகளைப் பிடித்து என்னைப் போலவே கதறி அழுவான்.

உண்மையில் அவன் ஒரு ஆடி. நம்மை நாமே காணும் பொழுது நமக்கு கொம்பு முளைப்பதை அவன் அறிவான். அவன் நம்மிடம் திரும்பத் திரும்ப இதை சொல்லிக் கொண்டே இருப்பான்.

"நான் சாந்தமும்
மனத் தாழ்மையுமாக இருக்கிறேன்.
அதனால் என் சிலுவையை உன் தோள் மேல் ஏற்றுக் கொண்டு என்னிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்.
அப்போது நீங்கள் ஜெபிப்பீர்கள்"

அவனது மூன்றாவது நாளில் ஒரு பித்தன் போல அவன் நம்மை நோக்கி சொல்லிக் கொண்டே இருந்தான். நாம் கற்களை நம் இடுப்பில் மறைவாய் செருகி வைத்திருப்பதை பார்த்த பிறகும்.

திங்கள், 8 ஜூன், 2020

ஆண் பால்

கோவில் பிரகாரங்களில் உள்ள சிலைகள் ஒவ்வொன்றையும் பார்த்த வண்ணம் வந்து கொண்டிருக்கிறேன். எதிலும் மனம் ஒன்றவில்லை. நேற்று பார்த்த WWF உடல்களை திரும்ப மீள் உருவாக்கம் செய்து ஓட்டிக் கொண்டிருந்தேன். எதிரில் அனுமன் சிலை. புடைத்த வலுவான கை கால்கள். மிகப் பெரிய உடலில் கூப்பி நிற்கும் கைகளில் மெல்ல சாய்ந்து நிற்கும் கால்களில் வெண்ணெய் அப்பிய மார்புகளில் தோளின் குவைகளில். ஒரு பெரிய ஆண் குரங்கு. அதன் ஆண் தன்மையினாலேயே அழகாக இருந்தது. பல்லைக் காட்டி இளித்துக் கொண்டிருக்கும் அதன் பாவம். உலகில் வேறு எதை விடவும் அழகானது உடல் தான். அதுவும் ஆணுடல்.

கால்களுக்கடியில் குழையும் சேற்றுப் பரப்பு. அமிழ அமிழத் தான் அது உடல் என்று தெரிந்தது. உடைகளைக் களைந்து அம்மணமாய் நின்றேன். முகம் பார்க்கும் கண்ணாடியில் ஒவ்வொரு உறுப்புகளாய்ப் பார்க்கிறேன். மிக அருகில் அது ஏதோ மிருகம் போல விடைத்து தெரிந்தது. ஒவ்வொன்றையும் வருட கொஞ்சம் ஆசுவாசமாகவும் இருந்தது. என் அறைச் சுவர்களில் பார்ப்பதற்கும் முகம் பார்க்கும் ஆடிகளையே சுவரின் எல்லா திசைகளிலும் பொருத்தி வைத்திருப்பேன். உடைகள் பெரிய அளவில் உறை போல. என்னைச் சுற்றிக் கொள்ளும் பொழுது நான் ஆடியில் பார்ப்பேன். முகம் மட்டுமே தெரியும். உடல் அற்ற தலை மட்டுமே கொண்டவன். 

கொஞ்சம் விரிந்து கொடுக்க எண்ணெய் தேய்த்து தடவிக் கொண்டேன். ஒரு சின்னஞ்சிறிய குமிழ் ஆர்டர் செய்து வந்திருந்தது. நல்ல வெள்ளி நிறத்தில். முதலில் விரல் விட்டு நன்றாக அழுத்தி உள்ளே விட்டேன். வலி பின்  மென்மையான காந்தல். ஆண் அமீபா போல  அல்லது மண் புழு போல. தனக்குள்ளேயே ஆண் பெண் ஆனவன். ஒரு விதத்தில் பாலற்ற பிறவி.

பால் தன்மை என்பது ஒரு பாவனை. உண்மையில் அப்படி ஒரு ஸ்தூல வடிவம் எதற்கும் இல்லை. வித விதமான புணர்ச்சிகளை இதற்குள் பார்க்கப் பழகி இருந்தேன். வாயிலோ குதத்திலோ திணியும் பொழுது குறி எனும் உறுப்பு தனித்த ஒரு உயிரி போல செயல்படுவதை பார்த்திருக்கிறேன். தன்னைத் தானே புணர்வது போல அது. ஏனெனில் குறி என்ற ஒன்றின் மூலமே நாம் பிரித்தாளப் படுகிறோம். புணர்ச்சியில் ஒரு உடல் எனும் தன்னை மறந்து ஒற்றையாக மாறுவது இவ்விரு வழிகளில் தான் என்று தோன்றியது. இன்னொன்று மலத் துவாரம் வழியே என் உடல் நுழையும் பொழுது ஒப்பனைகள் அற்றதாய் ஒரு பெண் என்பதையும் அவள் உடலையும் நான் மறுதலிக்கிறேன். அதற்கு வெறும் உடல் ஒன்றே போதும். பால் என்பதைக் கடந்த புணர்ச்சி.

இன்னொன்றிற்கு என்று நாம் நினைக்கும் பொழுதோ அதை அப்படியே நம்பும் பொழுதுதான் நாம் அளிக்கப்பட வேண்டியவர்கள். இதில் ஒரு சேர சுயநலமும் பெருமிதமும் ஏற்படும். நாம் அவர்களுக்கு என்பதில் உள்ள பொறுப்பின்மை. இன்னொன்று எடுத்தாளப் படுவதில் உள்ள அதிகார மாற்றம். அதை நமக்கும் அவர்களுக்குமாய் மாற்றி மாற்றி செய்து கொள்வது. நாம் இரட்டைத் தன்மையை விரும்புபவர்கள். அரணையைப் போல இங்கும் அங்கும் தாவிக் கொண்டே இருக்கும் பால் மாற்றம்.
ஆம். நீ ஆணாய் இருக்கும் பொழுது நான் பெண்ணாய் இருக்கிறேன் தலை கீழாகவும். மேலும் நீ ஆணாய் இருக்க நானும் ஆணாய். அதே போல பெண்ணாகவும். சில நேரங்களில
இரண்டுமற்றும் நாம் பிரவேசிக்கலாம். நாம் எண்ணிலடங்கா உடலம் கொண்டவர்கள். ஒன்றிற்குள் ஒன்று என நாம் பல்கிப் பெருகும் தோறும் ஒரு பகடை ஆட்டம். நொடிக்கு நொடி பால் தன்மையை மாற்றலாம் இழக்கலாம். உடலைப் பணயம் வைப்பதில் இருந்தே நாம் புணர்ச்சியைத் தொடங்குகிறோம். உண்மையில் இன்னொரு உடல் என்றே ஒன்று இல்லாதது போலத் தோன்றியது.

முதன் முதலில் உண்ணும் உணவு என்பது உடல் தான். உடலைத் தின்றே நாம் உயிர் வளர்த்தோம். அதனால் அது பால் பேதமற்றது. ஆனால் அதன் போதாமையும் அறியும் பொழுது தான் வெறி கொள்கிறது. அப்பொழுது உடலை அழிக்க வேண்டும். அதைக் கிழித்து உள் நுழைந்து வெளிவர வேண்டும். ஒரு தோட்டாவைப் போல நிணத்துடன் அது உடலில் பிதுங்கி இருக்கும் பொழுது ஒரு விடைத்த குறி போலத் தென்னி அழகாய் நிற்கும். 

அப்படித் தான் உடல்களுடன் என்னுடைய புணர்ச்சியும். நான் என்னை மிக அழகாக்கிக் கொள்கிறேன். ஒரு கட்டு மஸ்தான உடலை எனக்காக உருவாக்கிக் கொண்டேன். என் உதடுகள் எப்பொழுதும் சிவப்பாய் இருக்கத் தீட்டிக் கொண்டேன். என் உடைகள் என் மார்புகள் நன்றாகப் புடைத்து தெரியும் படி இறுக்கமாய் இருக்கும். நான் அழகன் என்று சொல்லிக் கொள்வேன். கண்ணாடியில் என்னுடைய பிம்பத்தினுள் இருந்து தோன்றுபவன் காமம் மட்டுமே ஆனவன். வேறு எந்த உணர்ச்சியும் அதன் மூலமே உருவாக்கத் தெரிந்தவன். 

தொடர்ந்து 22 நாட்கள். இவர்கள் என்னை என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். என்னருகில் ஒவ்வொரு முறை வரும் பொழுதும் காறி உமிழ்கின்றனர். என்னை அசிங்கப் படுத்த தன் மிக அசிங்கமான குறியினைத் திணிக்கின்றனர். நான் அப்படியொன்றும் பெரிய தவறு செய்து விடவில்லை. எனக்கு பிடித்தமான குறிகளை அவர்களில் உடல்களிலிருந்து வெட்டி எடுத்துக் கொண்டேன். இதில் என்ன பெரிதாய் நடந்து விட்டது. எனக்கு புரியவில்லை. நான் அக்குறிகளை பாடம் செய்து அதனை ஒரு கருவி போல ஆக்கிக் கொண்டேன். ஒரு நிஜக் கருவி. ஒரு நிஜக் குறியைக் கொண்டு உனக்கு பிடித்தது போல இயங்குவது. இது எத்தனை உயிர்களுக்கு வாய்க்கும். 

ஒரு சமயம் உடல் ஒரு ஊதிய பலூன் போல தோன்றும். ஆனால் நம் பிறப்புறுப்புக்கள் அப்படி அல்ல. அது தான் அப்பலூனிற்குள்ளிருக்கும் காற்று. ஊதப்பட்டும் உறிஞ்சப்பட்டும் வாழ்வது தானே வாழ்க்கையே. பிரபஞ்சமே ஊதியும் உறிஞ்சப்பட்டும் பல கோடி காத தூரம் நகர்ந்து கொண்டேதானே இருக்கிறது.

இதற்கு ஒரே வழி தான் நான் பிறப்புறுப்பு அற்றவன் ஆவது. அப்பொழுது என்னை ஒன்றும் செய்ய முடியாது. நான் என்ற அகமும் அற்றவன். என்னை அடையாளப் படுத்த இவர்களுக்கு ஒன்றும் இருக்காது. ஆம் கடவுள் போல. அவன் அவள் அது அற்றுப் போதல். என்னைத் தண்டித்தல் என்பது என் பால் தன்மையை தலை கீழாக்க முயற்சிப்பதும் அதை கேலி செய்வதும் தவிர வேறொன்றும் இல்லை.

ஆண், ஆணிலி, பெண், பெண்ணிலி இவர்கள் அனைவருமாய் ஆகி இருப்பேன். இவர்கள் அனைவருமாய் நான் புணர்வேன். நான் என்ற ஒற்றை இருப்பை இல்லாமல் ஆக்குவேன். பின் இருப்பு என்பதே இல்லாமல் ஆகும். அதற்குத்தான் இப்படி வெவ்வேறு வகைமைகளில் ஆன உறுப்புகளை சேமிக்கிறேன். 

இது வரை 12000 உறுப்புகளை வைத்திருக்கிறேன். நான் என் உடல் முழுதும் அதைத் தைத்துக் கொண்டேன். பின் அம்மணமாய் என்னைப் பார்த்தேன். என் தலை தவிர்த்து உடலெங்கும் குறிகள். உடலே குறி. உடலே விடைத்திருந்தது. அனைத்தையும் அவர்கள் உச்சத்தில் இருக்கும் பொழுது வெட்டி எடுத்தது. விரைப்பைகளை நாசுக்காக அறுத்து அதன் களச்சிகளை பிதுக்கும் பொழுது அது உள்ளங்கையில் இருந்து நழுவி கீழே விழும். அதனை ஒவ்வொன்றாய் தனித் தனி கண்ணாடிக் குடுவைகளில் அடைத்து வைத்திருப்பேன். தனியறை மீன்கள் போல அவைகள் மிதக்கும். அளவுகளேற்றாற் போல குடுவைகளை வைத்திருந்தேன். அதனுள் சின்னக் கண்களுடன் தெளிந்த நீரில் அவைகள் மிதக்கும். தினமும் தவறாது அதற்கு இரையிடுவதும் பின் நீர் மாற்றுவதும் பிராணவாயுக் குத்தி குடுவைக்கு ஒன்றாக வைத்து பத்திரமாக பாதுகாத்து வருகிறேன். 

இது வாக்கு மூலம் அல்ல. ஒரு எளிய உயிராய் ஒரு அமீபா போல ஒரு மன் புழு போல வாழ விரும்பும் ஒரு ஆண்பால் உயிரியின் ஏதோ ஒரு பக்கத்தின் டைரிக் குறிப்பு என்று வேண்டுமானால் வைத்துக் கொள்வோம்.

23 நாட்கள் கழிந்த பிறகு நான் குறியற்றவனாய் இருந்தேன்
 ஆனாலும் ஆணாகத்தான் இருந்தேன். என்னை அவன் என்றே அடையாளப் படுத்தினர்.  குறி உடலில் குறிகள் அனைத்தும் வெட்டி எறியப்பட்டிருந்தது. காற்று போன பலூன் போல நான்  ஒரு ஆண்பால்.

சனி, 6 ஜூன், 2020

கார்த்திகை


அழிந்து விட்ட எரிமலைக் குன்றில் தீ. மாபெரும் தீயின் கீழடியில் சின்னச் சின்ன தீக்குமிழ்கள். அந்தியில் சுடர் விட்டு இரவில் எரிந்து கரிந்து மொட்டை மலையாய் விடியும் காலை. ஐம்பூதங்களும் ஒன்றில் ஒன்றாய் கரைந்து வானமாய் மாறும் நாள். நீர்மையில் துளிர்த்த வெம்மை. வெம்மை பற்றிய ஒளி. ஒளி பரவிய கனல். கனல் துடிக்கும் ஆகாசம். ஆகாசம் கரிந்த மண். ஊருக்கு நடுவே எரிந்தெரிந்து அழல் பொழிந்த காமம் கரைந்து நொய்ந்து கிடக்கும் மொட்டவிழ்ந்த மலை அடிவாரத்தில் பூத்துக் கிடக்கிறது லிங்கம். அணையாது எரியும் காமத்தைத் தொடுத்து மலையெங்கும் லிங்கப் பூக்கள். துடித்துத் துடித்து சொட்டிக் கொண்டிருக்கும்  அதன் விந்து ஊற்று. 

வெண் பழுப்பு நிற ஊற்று பொழிந்த வான். வான் நிறைக்கத் துளிர்த்த ஜோதி. நீ எனும் வடிவம் அடங்கா உருவம். உன் வடிவம் என்பது நிலையற்றது. நொடிகளின் கணத்தில் அலையாடுவது. முகம் வழியும் மஞ்சள் ஜ்வாலை. ஜ்வாலாமுகி. அந்த நிலையின்மையில் குத்திடுகிறேன். 

அழிவற்றது தீ. அழிப்பது தீ. அவிந்த பின்னான மலட்டு
 மலையில் அவியாமல் எஞ்சியிருக்கும் கங்குகளைச் சுற்றிய கரி. கீழும் மேலுமான கரி வானம். நீ இந்த இரவாய் இருந்தாய். உன் பிழம்பில் பொலியும் உருவாய் இருந்தேன். உருவற்ற இவ்விரவின் மழை எரி மழை. நாம் நனைந்த மழையின் நனவில் தூங்கச் செல்கிறேன்.

வாசலில் எண்ணெய் வடிந்து திரி கரிந்த அகல் விளக்கின் நுனியைத் தொடுகிறேன். பழுப்பு நிற மழை வாசல் நனைத்து சொட்டிக் கொண்டிருந்தது. தூரத்து சொக்கப்பனை அணையாது அனல் தெறிக்க எரிந்து விழுந்தது. வழியெங்கும் சிதறிக் கிடந்தன நாகலிங்கப் பூக்கள்.

தன் அவிக்காக காத்திருக்கத் தொடங்கியது மலட்டு மலை அடுத்த கார்த்திகைக்காக.

வெள்ளி, 15 மே, 2020

ரத்தம்


மரணத்தை அனுபவிப்பது என்பது அதைப்பற்றி திரும்பத் திரும்ப சிந்திப்பது மட்டுமல்ல. அது அதற்கு முன் பின் வாழ்வைப் பற்றி அறிய முனைவதும். ஆனால் அது பெரும்பாலும் அவ்வாறு எளிதில் முடிவதில்லை. முடியும் தருவாயில் அது எவ்வாறு அமைந்து விடுகிறது என்பதை திரும்ப வந்தவர்களால் கூட தெளிவாக உரைக்க முடியவில்லை. 

நான் மரணித்தலை உண்மையில் விரும்பினேனா? தெரியவில்லை. ஆனால் அதன் எல்லையின் விளிம்பில் சதா தொங்கிக் கொண்டு இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கான சூழலை நானே உருவாக்கிக் கொள்ள அதிகம் முனைந்தேன்.

தன்னைத் தானே கொல்வது. உடல் எனும் பரப்பு ஒரே நேரத்தில் சில்லுக் கண்ணாடிகளில் பிரதிபலிக்கும் பிம்பம் போல பல விதமாய் உருமாறிக் கொள்ள அனுமதித்தல். சின்னஞ்சிறு உடலிலிருந்து மாபெரும் உடல் வரை தனக்குள் தானே ஆகிக் கொண்டே இருப்பது. ஒரு தொடர் நிகழ்வு போல அதை செய்வது. அதன் மூலம் அது ஒரு எளிய செயலாக மாறிக் கொள்ளும் என்று நினைத்துக் கொள்வேன். எனக்கு மரணம் பற்றி அத்தனை தெளிவான பதில்கள் இருந்தன.  அது எனக்கு அளிக்கப் போகும் அனைத்தைப் பற்றியும் கனவு கண்டேன்.

"ஆகாயத்துப் பறவைகள்
விதைப்பதுமில்லை
அறுவடை செய்வதுமில்லை"

மரணம் ஒரு பறவை போல. சிறகுகள் மட்டுமே உடலாகக் கொண்ட பறவை. அந்தக் கடைசி விருந்தினை என் நண்பர்களுடன் நான் அருந்திக் கொண்டிருக்கையில் அவர்களுக்கும் எனக்கும் நான் என்ன தர வேண்டும் என்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். அவர்கள் அனைவருக்குமே அது தெரிந்திருந்தது. 

நான் என் சதையையும் இரத்தத்தையும் அவர்களுக்கு திங்கக் கொடுப்பேன். அவர்கள் என் உடலாவார்கள். நான் எப்படி சாக வேண்டும். வலி வலி வலி என்று சொல்லிக் கொண்டேன். வலியின் மூலம் மரணம் என்பது ஒரு மிக எளிய நிகழ்வு போல ஆகி விடும். நடக்கும் போது தன்னிச்சையாக நம் கால்களும் கைகளும் அடுத்த நகர்விற்கு அசைவது போல மரணமும் ஒரு அனிச்சை செயலாய் என்னை ஆட்கொள்ளும். ஒரு தனித்தவனாய் நான் இருக்கும் பொழுதே இந்த மொத்த பிரபஞ்சமும் என்னுள் வலி எனும் உணர்வு மூலமாய் ஒன்றிணையும் என்று நினைத்தேன். 

வலி பாரபட்சமின்றி உயிர் உள்ளது அல்லது அனைத்திற்கும் தருவிக்கப்பட்டது. அது ஒரு நிகழ்தகவு போல. அதனால் நான் வலியை நம்பினேன். என் மரணம் அதன் உச்சஸ்தாயில் ஒரு இசை போல நிகழும் என்று சொல்லிக் கொண்டேன். என் நண்பர்கள் என்னுடைய சொற்களில் அமிழ்ந்திருந்தனர். அவர்கள் என்னை அப்பொழுது மிகவும் வெறுத்தனர். நானாவது பற்றி அவர்கள் கற்பனையில் கூட நினைத்திருக்க மாட்டார்கள் 
நான் 13 தலைகளும் 26 கைகளும் கொண்ட மாபெரும் உடல். ஒரு நுண்ணுயிரி. இப்பூமியின் மேற்பரப்பில் மிதந்து கொண்டிருக்கிறென். மிக அழகான சிவந்த நிற கொடுக்குகள் தலைக்கு இரண்டாக எனக்கு இருந்தது. நான் எண்ணிலடங்கா கால்களைக் கொண்டிருந்தேன். காண்பவை அனைத்தையும் கொட்டுவதே எனக்கு அளிக்கப்பட்டிருந்தது. உண்மையில் காண்பது அல்ல. உணர்வது. எனக்கு கண்கள் இல்லை. உணர் கொம்புகள் மூலமே நான் அனைத்தையும் அறிந்தேன். 
என் தலைகள் முரண்படும் பொழுது ஒன்றினை ஒன்று விழுங்கத் தொடங்கின. நீர்த் துளிகள் தரையில் சிதறுவது போல நான் சிதறிக் கொண்டிருந்தேன். எல்லா தலைகளும் விழுங்கிய ஒற்றை தலை பாரம் தாங்காமல் சரிந்து விழுந்தது. பின் நான் உடல் மட்டுமே ஆனேன். நான் உணர்வதை எல்லாம் என் உடல் கொண்டே விழுங்கினேன். நான் பெருத்து சிதறிய நாளில் முட்டைகள் ஈனினேன். கரும்பழுப்பு நிற முட்டைகள். என் உதிர்ந்த தலை அதை ஒவ்வொன்றாக விழுங்கியது. 

விதிர்த்தெழுந்த பொழுது ரத்த விளாராய்க் கிடந்தேன். தோல் கிழிந்தும் பிளந்தும் என் உடல் பல்லாயிரம் வாய்களால் ஆனது போல இளித்தது. ரத்தம் வாய்களிலிருந்து கசிந்து என்னைச் சுற்றி தேங்கி நின்றது. நான் கூவினேன். என் முட்டைகள் உடையவில்லை உடையவில்லை என்று மண்ணைப் பார்த்து கூவினேன்.

12 அப்போஸ்தலர்கள் என் வருகையை அறிவிக்கும் நிமித்தம் என் பிணத்தின் முன் அமைதியுடனும் மிகுந்த சிரத்தையுடனும் நின்று கொண்டிருந்தனர்.  அவர்கள் அனைவரும் வானையே அணுகினர். அவர்கள் தங்கள் ஒவ்வொருவரின் வலது முழங்கையிலிருந்து மூன்று துளி ரத்தம் வீதம் என் முன்னே சொட்டினர். என் பிணம் நாறிக் கொண்டிருந்தது. அவர்கள் மந்திரம் போல ஒன்றாக திரும்பத் திரும்ப சொல்லினர்.

"ரத்தம் மூலமே நீ இறவாதிருந்தாய்
ரத்தமே உன்னை அறிவித்தது
ரத்தமே உன்னை விடுவித்தது
ரத்தமே உன் சொல்
ரத்தமே உன் மொழி
ரத்தமே உன் இருப்பு
ரத்தமே நீ"

உன் ரத்தம் மூலம் மீண்டும் எழுந்தருள்வாய் என் தேவனே!"

ஒரு கருவி வேண்டும். தன்னந்தனியாக மரணத்தை அனுபவிக்க ஒரு கருவி. எனக்காக நானே உருவாக்கிக் கொள்ள வேண்டும். என் சொந்த கைகளினால். அது எப்படி இருக்க வேண்டும். ஒரு குமிழ் போலத் தொடங்கி கடல் ஒதம் போல வலியை உருமாற்றும் கருவி. நான் விடுவிக்க விடுவிக்க என்னை இறுக்கிக் கொண்டே இருக்கும் ஒன்று. உயிர் என்பது உடலின் ஒவ்வொரு அணுக்களிலும் நிறைந்திருப்பதை அதன் மூலம் உணர்வேன். நான் வலியை மறுதலிக்க விரும்புகிறேனோ என்று தோன்றியது. இல்லை காலமற்றிருப்பதை விரும்பினேனா. தன் சொந்த மரணத்தை சூதாடி பணயம் வைப்பதைப் போல நான் பணயம் வைத்தேன். அதன் மூலம் நான் அடைந்தது தான் என் ரத்தம்.

என் குறிப்பேட்டில் என்னுடைய வார்த்தைகளையே நான் திரும்பத் திரும்ப எல்லா பக்கங்களிலும் எழுதிக் கொண்டிருந்தேன். அது என் மரணத்தின் சொல்.

ஆம்.

தேடுங்கள் தரப்படும்
தட்டுங்கள் திறக்கப்படும்.

என் பிணம் ஒரு அழுத்திச் சப்பிய மாங்கொட்டை போல சியொன் மலைக் குன்றில் கிடந்தது. அவர்கள் ஜபித்துக் கொண்டிருந்தனர்.

"ரத்தம் மூலமே நீ இறவாதிருந்தாய்
ரத்தமே உன்னை அறிவித்தது
ரத்தமே உன்னை விடுவித்தது
ரத்தமே உன் சொல்
ரத்தமே உன் மொழி
ரத்தமே உன் இருப்பு
ரத்தமே நீ"

உன் ரத்தம் மூலம் மீண்டும் எழுந்தருள்வாய் என் தேவனே!"

செவ்வாய், 12 மே, 2020

மாசறு கழீஇய யானை - குறுந்தொகை

இந்த பெருமழைக் காலத்தில் மலைகளைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருக்கிறேன். இம்மலைகள் இதன் நிலைத்த தன்மை. மேகங்களுக்கிடையில் தியானித்திருக்கிறேன். நான் நான் என்று அறைகிறது மழை. மழை அனைத்தையும் தருவித்துக் கொண்டிருந்த இரவில் மலைகள் என்ற தனி நிலம் காணாமல் ஆகியது. நீரினுள் அமிழ்வதும் உன்னில் ஆழ்வதும் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். இருமை அவிழ்ந்த நிலை. உண்மையில் அவிழ அவிழ நீ துலங்கி வருகிறாய். மாசற்ற நிலம் உன் உடல். நீல வெளியின் கருமையிலிருந்து முகிழ்த்த நீர்மை உன் தேகத்தின் ஈரம். ஆனால்  இரவில் தனித்துப் பொழியும்  ஆழிமழையின் கண்களில் உப்பின் சுவை. உன் சுவை.

அது அடைய இயலாது தனித்துப் பொழிந்தது. அதனாலேயே அளவற்றிருந்தது.

நள்ளென்றன்றே யாமம்- குறுந்தொகை


இரவிற்கு குரல் உண்டா. நிறம் உண்டா. யாருமில்லாத குளத்து படித்துறையில் என் அமைதியற்ற நாட்களின் இருள் இரவுகளை முழுதுமாய்  கழித்திருக்கிேறன். அப்பொழுது குளம் நடு நடுங்கிக் கொண்டே இருப்பதைப் பார்ப்பேன். அக்கரை உள்ளீடற்றதாய்ஆகியிருக்கும். நீரின் குரல் ஒரு குழந்தையின் மழலை போல அந்தியில் இருக்கும். இருளில் முழுக முழுக அது வயசாளியின் குரலாய் ஆகியிருக்கும். அதுவரை அது சேமித்து வைத்திருந்த குளிரை ஒரு மிகக் குறுகிய வாய் வழியே தெளிப்பது போல உணர்வேன். அது இருளை இன்னும் அணுக்கமாக அறிவது. என் கனவுகளில் நீரலைகள் கொந்தளித்துக் கொண்டிருக்கும. அதில் உடல்கள். அவளின் உடல்கள். அப்பொழுது குளம் கடலாய் உருமாறத் தொடங்கும். நள்ளிரவின் கடல் ஒரு அலகு நீண்ட பறவையை போல இருந்தது. 

குருதிப் பூ - குறுந்தொகை

செங்களம் படக் கொன்ற அவுணர்த் தேய்த்த
செங்கோல் அம்பின் செங்கோட்டி யானைக்
கழல் தொடிச் சேஎய் குன்றம்,
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே.

மலைத் தொடர்களுக்கிடையே செம்மையின் துளி. உருகி உருகி கருமை முழுதும் வழிந்து பெருகியது. பெரிய கரும்பாறையின் முதுகிலிருந்து மத்தகம் வழியே ஒழுகிய திரவம் எப்பொழுது தீயாகியது. வான் நோக்கி தழலும் செந்தழல். தீ மலராகி எரிந்தது. அணையா எரி. தீயின் மகரந்தங்கள்  மலை முகடுகளிலும் பாறை இடுக்குகளிலும் பொருக்கு போல படிந்திருந்தது. தோண்டத் தோண்டக் குருதி. செங்குருதி.

ஞாயிறு, 10 மே, 2020

மாடத்தி

மடுத்துப் போச்சு மக்கா. இதுக்கொரு வாழி பாடி ஓய்ச்சு விடலான்னா, நடக்க மாட்டுக்கு. இந்த திருப்பு கொடைக்கு நிக்க மாட்டேன் கேட்டியா. சரியான உழுந்தரைச்ச அம்மி மக்கா நான். பாரு இன்னும் சொர்ணாவிட்டிருக்கேன்.
மாமா! நீங்க போய்ட்டா, யாராடுவா? இன்னும் பத்து நாள்ள கார்த்திகை வந்திரும்.
ஒனக்கு வெளங்காது லெ. தரித்திரியம். இங்கன இருந்தா அவ என்னக் கடிச்சு திம்பா. அதான் ஒருக்கே நடக்க போகு.
மெதுவாக பிளாஸ்டிக் குவளையில், கட்டிங் ஊற்றினேன்.
லே! என்னத்தல வாங்கிருக்க. நம்ம பாய் கடைலயா?
இல்ல மாமா. எசக்கிக்க.
அரதப்பயலுக்க பொறைந்தைக. வேகாதத தந்திருக்கான். சவக்கு சவக்குனு. ரப்பர் மாறி.
இரவின் நிசப்தம். பொட்டல் வெளியில் மாடன் மட்டும் ஏழடி உயரத்தில். நிலவைக் குடிக்கும் அவரது நிழல் நாங்களிருக்கும் மண் மேட்டைத்தாண்டி படர்ந்து கிடந்தது.
இவனைப்பாரு, அவனக்க ஒலக்க மூட்ட, நீட்டிட்டு கெடக்கான்.
மாமா! அந்தப் பறக்குடிக்கு இப்பம் போகதுண்டா!
லேய், நாரப்பயலே. நீ என்ன வாக்குமூலம் வாங்குதையாக்கும். சவட்டிப்போடுவேன் அந்த தேவடியாள.
                மாமா! எனக்கு உங்கள்டே வருத்தமுண்டு. அன்னைக்கு ஏன் அப்படி செஞ்சேங்க.
                எதைல சொல்லுக.
                சட்டில பீயள்ளி, விடுமாடனுக்கும், மாடத்திக்கும் மேல எறிஞ்சேங்கல்லா!
                நா எப்பம்ல எறிஞ்சேன்.
                பொறவு ஆராக்கும்.
                ஆமாண்டே. நீயே பாரு, எத்தன வருசமாச்சுடே.
                எனக்க இருவத்து நாலு வயசுல இருந்து ஆடுதேன். இப்ப நாப்பத்தேழு. எதாம் ரெட்ச உண்டா.
                அந்த ஆஸ்ராமங்காரி, அத்துட்டு போய்ட்டா. எனக்க பிள்ளைகளக் கூட காணிக்க மாட்டுக்கா. ஒத்தைல கெடக்கேன்.
                உம்ம மேல கொறையே இல்லைலா? போ வே!
சரிடே! ஊத்து.
அதாண்டே. கிறுக்கு புடிக்கு. இந்தத் தெருவ விட்டு போயிராலான்னா. எதான் வழி கெடைக்குன்னு பாத்தா, அவ...அவதாம்லே அந்த சிறுக்கிவிள்ள உட்டாத்தானே. பட்டியப் போல ஆக்கிட்டா. ஒரு கெதிக்கும் வழியில்ல. காஞ்ச பீ மாறி இருக்கேன் மக்கா இங்கன.
சரி. விடும் வே! இந்த திருப்பு நீ இல்லைனு வச்சுக்கிடும். கொடை கழியாது. போன கொடைல நீர் மட்டையாயிப் போட்டேரு. மாடத்தி வருத்தில்ல. மாடன் ஊட்ட ஏக்கல. மகராச மாமாக்கு செவுட்டுல அடி உழுந்து. அதுக்கப்பொறவு அவரு கோயிலுக்கே வர மாட்டேண்டார். உமக்கு தெரியாதா!
ஆமா! அவனக்க ஒரு ஊட்டு. மயிராண்டிக்க சுன்னியெழும்பி வருசமாச்சு. இப்பங்கெடக்கது கிழட்டுப்பய. அவனுக்க ஒரு கொடை. அந்த மண்ணு மூட்ட இடிச்சு தள்ளனும். சில நேரங்களில் மாமாவின் குரல் அவருடையதைப் போலவே இருக்காது. அதுவும் மாடனைப்பற்றிப் பேசினாலே கொதிப்பார் கெடந்து.
நான் போய்ருக்கணும். இந்த ஊரப் பாரு. எவன் மூஞ்சிலயாது களை இருக்கா. இவன், இவந்தான் மக்கா, எல்லாத்துக்கும் காரணம். இந்த பொளையாடி மகனுக்கு கொடை மயிரு வேற.
காறி உமிழ்ந்தார். இரவுப்பூச்சிகளும், கொசுக்கடியும் அதிகமாக இருந்தது. தூரத்து மின் கம்பத்தில், வெளிச்சம் கழுத்திறுபட ஊசலாடிக் கொண்டிருந்தது. பழையாற்றின் தேங்கல் நீரில், நீர்க்கோழிகள் முழுக, கலந்திருக்கும் சப்தம் அலையாடியது.
மாமா, ஒரு புரோட்டா மாஸ்டர். ஒழுகினசேரில அவர் அளவுக்கு சால்னா, சூப், புரோட்டா, கொடல் கறி, மட்டன் ரோஸ்ட் வைக்க இன்னொருத்தன் பொறந்து வரணும். எந்த கடைலயும் அவர் ஒழுங்கா நிக்க மாட்டாரு. ஒரு வாரம். அதுக்குள்ள கிறுக்கு புடிக்கும், ஃபுல் போதைல எங்கயாவது சாக்கடைக் கெடைல கெடப்பார். இது வரைக்கும் நாலு பொண்ணு, எனக்குத் தெரிஞ்சு. மத்தது கதைகள் எத்தனையோ! பொண்டாட்டி அவர தொரத்தி உட்டுட்டா. பைசா வாங்கதுக்கு மட்டும் அப்பப்ப வந்து கலையரசி டீக்கடைக்கிட்ட நிக்கத பாத்திருக்கேன்.
லேய். கமுத்திப் போடு. வெரல நல்லா இறுக்கிக் கெட்டு. குண்டியக் கழுவுல. பேதி போய்ருக்கு.
களபம் எடுத்தியா! தண்ணி நறைய ஊத்திட்டே. கொவுந்திட்டு.
பன்னீரக் கொளைச்சு, அடை. நாடிக்கெட்ட இப்படியால கட்டுவான்.
கண்டாற வோளிக்கு சூத்தப்பாத்தியாலே.
கதம்பைய இங்கன வை. அங்க ரெண்டு வை. ரைட்டு.
தலைய இந்த செய்டு வைக்கணும். என்னத்தல படிச்ச நீ!
செம்மண் கொளைக்கும் போது தண்ணிய செய்டுல விட்டு கொளையும், மூத்திரம் பெய்ஞ்ச மாறி, இங்க கொடும் வே.
கங்கு…கங்கு எங்க? லேய் சுத்து போதும். திரும்பி பாக்காம சட்டிய உடு.
கங்கைப் பொதிந்து கதம்பைகளுக்கிடையில் செருக, உயிர் புகை மூட்டமாய் கமறியது. குளைத்த செம்மண்ணை பனை ஓலைப்பாயில் கொண்டு வந்து கொட்டினார்கள்.
லேய் இரு! ஒரு நிமிட்… கோட்டர் உடைத்து பிரேதக்குழியில் ஊற்றினார்கள்.
இல்லைனா...இவன் வேகவே மாட்டான் கேட்டியா. சிரிப்புச்சத்தம் அடங்குவதும், மூன்று ஓட்டைகளின் வழி வெண் புகை உத்திரத்தை நிரப்பி வெளியை பொத்துக் கொண்டு சிதறுவதுமாய் இருந்தது. வேப்ப மரத்திலிருந்து உதிர் சருகுகள் ஓயாது ஏதோ ரகசியம் சொல்ல விளைவது போல முணுமுணுத்து, காற்றோட்டத்தில் நின்றவர்களின் கால்களுக்கிடையில் இறைஞ்சிக் கொண்டிருந்தது. தோர்த்தும் சோப்பு டப்பாவுமாக நின்றவர்கள் நகர்ந்து வடக்காத்துப்படித்துறையை நோக்கி சென்றனர்.

நையாண்டி மேளம் உருவ, தென்னை ஓலை எரியும் நெருப்பில் தப்பட்டைகளை சூடு காட்டினார்கள். ஒத்தைக்கொட்டு உறுமிக் கொண்டு ஆரம்பமானது. நாதஸ்வரங்கள் இருபுறமும் மேலெழும்பி, ஒரு பிளிறலைப் போலவும், கனைத்தலைப் போலவும் சப்தித்தது. அது பின்னர் ஓயாது பிறாண்டும் மென் உகிர் போல பிடறியில் சொரிந்து கொண்டிருந்தது. அவ்வையார் வழக்கம் போல மஞ்சனையை விழுங்கிக் கொண்டு, கமுகம் பூவை முகத்தில் அறைந்து, மறுகையால் முந்தானையையும் சரி செய்து கொண்டிருந்தாள். மாடன் கிராமத்து படித்துறையில் பால்குடமெடுக்கும் நிகழ்விலிருந்து கோவிலை நோக்கி வந்து கொண்டிருக்கிறான். கச்சைகள் குலுங்க உடலெல்லாம் சந்தனம் மொழுக, கோலுடனும், தடியுடனும், விடைத்த காது கொண்ட தலைக் கச்சை அணிந்து, துள்ளலே நடையாக நகர்ந்து கோவிலை நோக்கி வருகிறான்.
என்னுடல் என்னுடையதல்லாதது போல சத்தங்களின், ஒலிகளின், நாதங்களின் இழுப்புகள் தாளம் தடுமாற கை, கால்கள் விடைக்க, நாக்கு பற்களுக்கிடையில் மடிந்து இழுபட, கண்கள் ரத்தக்கனலாய்த் தெறிக்க சுழன்று கொண்டிருக்கிறேன். நான்கு பேர் என்னைப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். மஞ்சனையை என் முகம் முழுதும் பூசிக் கொண்டிருக்கிறேன். கைகளில் சூலமும், கமுகம் பூவும், சம்மந்தி மாலையும் நாசியில் மணம் நிறைக்கிறது. என்னைச் சூழ்ந்து கொண்டு தப்பட்டை அறைகிறது. கொட்டின் எண்ண ஓட்டங்கள் என் மூளை நரம்புகளுக்குள் கிழிபடுகிறது. நாதஸ்வரம் உயர்கையில் மூச்சின் கடைசிக் கார்வை அறுபட்டு நான் அந்தரத்தில் மிதக்கிறேன். திரும்ப தரையில் கால்கள் அழுந்துகையில், வெறிக்கூச்சல் என் குரல் வளையிலிருந்து எழுந்து கோவிலின் உள்ளறைகளில் எதிரொலிக்கிறது. இது நான் மட்டுந்தானா? உடலினுள் இருப்பு தங்காது வெளியில் குதிக்க எண்ணும் இன்னொரு குமிழ் என்னுள் எம்பிக் கொண்டிருக்கிறது. நான் அதை வேடிக்கை பார்க்கிறேன்.
அங்கு நானல்லாது என்னுள் நிகழ்ந்து கொண்டிருக்கும் இன்னொன்றிடம் வினவ முயல்கிறேன். அதன் கோரைப்பற்கள் என்னை விழுங்கத் துடிக்கிறது. ஒரே சமயத்தில் கெஞ்சலும், உறுமலுமாக பெண்குரலில் ஆடிக் கொண்டிருக்கிறது என்னுடல். இடுப்பில் பாவாடை. மார்பில் மேற் கச்சை. கைகளில் சூலம். ரத்தம் ஊறும் நாக்கு. கோரைகளாக சிதறித் தழலும் கூந்தல். ஆட்டின் கிழிந்த கழுத்தை வாயில் உறிஞ்சிக் கொண்டிருக்கிறேன். பாதங்கள் கிழிந்து குருதி வழிய அந்த மண் பீடத்தில் மூர்ச்சையற்று வீழ்வது வரை, மேலிருந்து எண்ணிலடங்கா கயிறுகள் என் உடலில் முடிச்சிட்டிருக்கிறது. அறிய இயலாத அந்த கைகளின் அசைவில் என்னுடல் அகப்பட்டுக் கொண்டிருந்ததை நான் பின்பு மீள் செய்கையில் உணர்ந்தேன்.
காடாத்துக்கு எலும்பு பொறுக்கிக் கொண்டிருந்தார்கள். கபாலம் சிதைந்து மண் துகள்களாக இருந்தது. அதில் எஞ்சிய பெரிய ஓட்டையும், கைகால்களின் நொறுங்கிய எலும்புகளையும் வாழை இலையில் அடுக்கி வைத்தனர். மஞ்சள் பிடித்து பூஜை செய்த பின், கெண்டி நீரில் எலும்புகளைக் கழுவி, பாலூற்றி, மலர்கள் தூவி சூடங்கொழுத்தி கும்பிட்டு பிளாஸ்டிக் பொதியில் கட்டிக் கொண்டனர். சங்கிலித்துறையில் எலும்புகளை விட்டு விட்டு திரும்பி பாராது நகர்ந்து வந்தேன். மூதாதைகள் வாழும் பாதாள லோகமொன்று இதன் அடிமண்டிய பிரதேசத்தில் உண்டு எனும் நம்பிக்கை.
மாடத்தி கூட அங்க இருந்து தான் வந்தாளோ?
மக்கா, நம்ம விடுமாடத்தி என்னைக்கு வந்தாளோ அன்னைக்கு புடிச்ச சனியன் மக்கா. வாழ்க்கைய தொலைச்சாச்சு.
நடு நிசி தாண்டிய பின்னிரவு. கூகை இழுத்து விடும் ஓங்கார விளி. பழையாற்றுக்கரைச் சாக்கடையில் பன்றிகள் உருளுவதும், பின் உறுமுவதும், இடையில் நிற்கும் வேப்பமரத்துக் கிளைகளின் இடைவெளியாய் என்னுடைய போதத்தில் வந்திறங்கியது.
லேய்! அவ ஒரு தேவடியா கேட்டியா. நான் இருக்கம்போவே அவனக் கூட்டிட்டு வருவா. இன்னைய நாளு வரை என்ன மனுஷணா அவ மதிச்சதே இல்ல.
ஆமா! உம்ம சீருக்கு மதிக்கவா முடியும். எனக்குள்ளேயே முணுமுணுத்தேன்.
லேய். நான் யாரு? யாருன்னு நெனைக்க. மாடத்தியாக்கும்.
மாமாவின் குரல் இளகியது.
என்னாச்சு! என்னாச்சு…
ஒன்னும்மில்லடே. இதாக்கும். இதாக்கும் எல்லாத்துக்கும் காரணம்.
அதாண்டே ஒனக்கு வெளங்காது. லேய். தீந்தா!
கடைசி கட்டிங்கை இருவரும் நிரப்பிக் கொண்டோம்.
மக்கா. சாமியாடுதுன்னா. என்னனு நெனைக்க. அது நமக்கு கெடைக்கது இல்ல. அவ வந்து விழது. நமக்கு வேற வழியெல்லாம் கெடையாது. அது பாதாளக்குழியாக்கும். உள்ள போனவன் திரும்பதுக்கு ஒக்காது. அங்கனயே கெடந்து சாக வேண்டியதான்.
இவ, நம்ம மாடத்தி இருக்காள்ளா, லேசுபட்டவளா. செரியான உக்கிரம் பிடிச்சவ. யார் கம்பைக்கும் அடங்க மாட்டா. அவ கதை தெரியுமா உனக்கு.
சிவங்கிட்ட வரம் வாங்குனவளாக்கும். இங்க ஒழுகினசேரி ஊருக்கு அங்க எங்கயோ கெழக்க இருந்து வந்திருக்கா. தேவிக்க உடமபுல இருந்து சப்த தேவதைகள் வந்தாங்களாம். அதுல அவளுக்கு நாக்குல இருந்து அவதாரம் எடுத்தவளாக்கும்.  மகிசாசுரன்னு அரக்கன கொல்லதுக்கு உருவானவள்ள மொதல்ல வந்தவளாக்கும். அவன தலைய வெட்ட வெட்ட அந்த ரத்தத்தில இருந்து திரும்ப உருவாயிருவான். அதுனால சிந்தச் சிந்த ரத்தத்த குடிச்சவளாக்கும் நம்ம மாடத்தி. அதான் மூணு ஆட்டு ரெத்தத்த குடிச்சாலும் அடங்க மாட்டுக்கா.
எங்கிருந்தோ ஒரு ஒரு இரவுப்பறவை எங்கள் தலைக்கு மேலே சிறகுகள் படபடத்த பறந்து சென்றது.
ஆங்…சத்தியம்!
அப்படியாக்கும் இங்க வந்தா. முன்னைலா, மனுஷ பலியாக்கும். இப்பம் ஆடுங்கெடையாது. முட்டையும், தடியங்காயும், கோழியும் கொடுத்து பசி தீக்காணுகோ. கள்ளவாளிப்பயக்கோ.
சரி அது கெடக்கு, நான் சொல்ல வந்தது அதில்ல டே. கேட்டியா!
அவள வருத்தி ஆடுதம் பாத்தியா. அவ எப்பவும் ஏங்கூட இருக்க மாறி ஆயிட்டு.
அதுக்குத் தான் இந்தக் குடி. இது இல்லைனு வை. நான் செத்தேன். அவ என்ன தின்னு போடுவா.
உனக்கு தெரியாது. அன்னைக்கு எனக்க மத்தவா, அவ உண்மையிலேயே பாத்துட்டா.
பொறவு நான் இப்பம் எங்கயும் போகதுங்கெடையாது.
என்ன நடந்துச்சு.
ஒன்னுமில்லடே. நான் அவக் கழுத்த நெறிக்கேன். எனக்கு தெரியல. அவ பாத்தது அங்க என்னைய இல்ல. அவ நல்லா பயந்துட்டா. அங்க களபமும், மஞ்சனையும் மணந்துனு அதுக்குப்பொறவு ஒரு நா போதைல இருக்கம்போ சொன்னா.
ஆமா மக்கா, நான் தனியா இருக்கம்போ கண்ணாடிய பாக்கவே மாட்டேன்.
அன்னைக்கு நான் பாவாடைக்கட்டிக்கிட்டு என் முலைய, நானே உறிய மாறி சொப்பனம். எந்திரிச்சா ஒரு ரெண்டு மணியிருக்கும். அடுத்த நாளாக்கும் ஆடிப்பூரம்.
அவ என்ன உட மாட்டா.
என்னத்த செய்யதுக்கு, குடிச்சேன்னு வை. ஸ்டடி ஆயிரும். பொறவு போட்டி மயிருனு நான் பாட்டுக்கு இருப்பேன்.
என் பொண்டாட்டி ஒரு நா சொன்னா, உனக்கு மேல நாத்தம் அடிக்குனு. எனக்கு புரியல. என்னட்டினா, பொண நாத்தம் அடிக்கு மனுசா. எங்க கெடந்து வாரியும் இங்கனனு கேட்டா. அதுக்க முன்னாடித்தான் குளிச்சு சூடங்கொழுத்தி மாடத்தியக் கும்பிடுட்டு வந்தேன்.
ஒன்னுஞ்செரியில்ல கேட்டியா. இங்க இருந்து போனா விமோசனம்.
சரி விடும் வே. நான் பீடியைச் சொருகி பற்ற வைத்தேன். தொண்டைக்குழி வழி அந்த புகை நெஞ்சுக்கூட்டில் இறங்குவது வரை இழுத்து விட்டார்.
காற்றில் பீடத்தின் மணிச்சத்தம் மெல்ல அலங்கிக் குலுங்கியது.
லேய்! நான் மாடத்தியாக்கும் லேய். வெட்டிழுத்தது போல அவரது கண்கள் சொருகி மேலே சென்றது. நாசி வழி ரத்தம் கசிந்தது. மண்ணில் கமுந்து கைகால்கள் இழுபட நெஞ்சு, சரளைக் கற்களில் உராயத் துடித்துக் கொண்டிருந்தார்.
ஆம்! நீங்கள் யூகித்தது சரிதான். நான் கேட்டது ஒரு உக்கிரமான் பெண் குரல்.


புதன், 6 மே, 2020

ஏதோ ஒன்று

மீட்ட இயலாத இசைக் கருவியை வைத்திருக்கிறேன்
என் பாடல்கள் பாடப்படவே இல்லை
இரவின் கமகங்கள் 
ஒரு தூறல் மழை போல அலைக்கழிகிறது
பகலின் மேகமற்ற வானம் 
கால்களற்ற ஊர்வன போல
நகர்கிறது
அவள் முகமோ குரலோ வாசமோ ஏதும் இன்று இல்லை
ஒரு கதைப்பாடல் போல அவள் என்றோ உருமாறியிருந்தாள்
ஒரு வேண்டாத உறுப்பு போல இந்த இசைக் கருவியை வைத்திருக்கிறேன்
அதன் நரம்புகளில் இருந்து ஒரு பழைய பாடல் 
பழுத்த இலை போல உதிர்கிறது
சருகுகளின் அடிப் பொழுதுகளில்
உறங்குகிறேன்
அவள் முகமோ குரலோ வாசமோ ஏதோ ஒன்று


இசை

இரு வானங்களுக்கிடையில் என்ன உண்டு 
மௌனம் என்றாய்
என் இசைக் கருவிகள் துருப்பிடித்திருந்தன
நீ வெறுமனே என் முன்னே அமர்ந்திருக்கிறாய்
உன் இருப்பில் 
நான் அமைதியற்றிருந்தேன்
இறுதியில் நீ அதனை செய்தாய்
சுக்கு நூறாகும் படி அனைத்தையும்
உடைத்தெறிந்தாய்
இரு மண் துகள்களுக்கிடையில் என்ன உண்டு
ஒரு வானம் என்றாய்
பின் ஒரு மௌனம் என்றாய்

- தாகூர்

பறத்தல் அல்லது பாடுதல்

நீ என்னைப் பாட அழைத்தாய்
குழந்தை அன்னை அறியாது மறைத்து வைத்திருக்கும் 
மிட்டாய்த் துணுக்கினைப் போல என் பாடல்களை வைத்திருந்தேன்
சங்கடங்களும் திருப்தியின்மையும்
ஒரு கூன் போல என் குறுக்கில் பொதியப் பட்டிருப்பதைப் பார்த்தாய்
எனக்கு நீலச்சிறகுகளை அளித்தாய்
நான் அறிவேன்
நான் அழிவற்றதைப் பாடுபவன்
உன் விரல் சுட்டிய திசையினில்
நான் பறக்கிறேன்
எல்லையற்று விரிந்த இந்த நீர்மையின் உப்பினைப் பருகுவேன்
நீ பறத்தல்
நான் என் சிறகுகள்

- தாகூர் 


வேணு

நீ என்னை முடிவற்றவனாய் ஆக்கினாய்
இவ்வுடைந்த வெற்றுப் பாத்திரத்தில் 
மீள மீள நிரம்பிக் கொண்டிருக்கிறது
உன் மழை
சின்னஞ்சிறிய என் துளைகளின் வழி முகிழ்க்கிறது உன் மூச்சின் பாடல் 
நீ! உன் ஸ்பரிசம் தொட்டு மீண்டதும்
அழிவற்றதாகிறது
என் உலகம்
என் கைகளுக்குள் அடைபடாத ஒன்றை எப்பொழுதும் பரிசளிக்கிறாய்
இன்னும் இன்னும் என்னுள் நிரம்புகிறாய்
நீ நிரம்ப நிரம்ப நான் நெகிழ்ந்து
கொண்டே இருக்கிறேன்
நீ என்னை முடிவற்றவனாய் ஆக்கினாய்!

தாகூர்

யூமா வாசுகி


இந்த அகால இரவின் சன்னல்களின் வழியேயே அறிகிறேன் உன்னை.  இருண்ட மழை நாளின் ஈசல்களாய் உன் முகம். என் உள்ளறையினுள் தனிமையில் அமர்ந்திருக்கிறேன். அவ்வப்பொழுது எரிந்தணையும் வெளிச்சத் துளிகளிலிருந்து வரைந்தெடுக்கிறேன், உன்னை வெறுப்பதற்கான நியாயங்களை. என் ஓவியத் திரையினுள் என்னவாயிற்று. ஒவ்வொரு முறை  என் வெளிச்சத்தைத் தேடி வரும் உன் முகத்தின் ஈசல்கள். அதைப் பற்றிக் கொள்கையிலேயே செத்து வீழும் உன் சிறகுகளின் கடைசித் துடிதுடிப்பு. ஆம். திரும்பத் திரும்ப என்னிலிருந்து உதிரும் வன்மத்தின் ஈரத் துணுக்குகளின் பல்லாயிரம் நிறங்களைச் சிதறடிக்கிறது உன் ஞாபக ஊற்று. என்னுள் சொல்லிக் கொள்வதும் உடைந்தழுவதும், மீற மீற முயற்சிப்பதும் தோற்று, உன்னுள் வந்து விழுகிறேன். உன் முகமல்லாத ஒன்று என் வெளிச்சத்தினுள் அணைவதில்லை. நீயல்லாத இந்த ஓவியத்தாள் வெளிச்சத்தின் கனத்த வெம்மையினுள் பொசுங்கிக் கொண்டிருக்கிறது. சன்னல்களை  இனி மூடப்போவதில்லை. நிறங்களின் ஈரம் உருகியோடுகிறது. இருண்ட மழை நாட்கள் முடியப் போவதே இல்லை.


அப்பாவின் டைரி


இரண்டு விதமான கவிதைகளை அறிந்திருந்தேன்.

வலியின் ரணமும், ரணத்தின் ஆசுவாசப்படுதலும்.

அப்பாவின் டைரியில் பெரும்பாலானவை பிரார்த்தனைகள். அதுவும் ஒரு மன்றாட்டு. அப்பாவின் கடவுளும் அப்பாவைப் போலவேதான். தன் அப்பாவிடம் மன்றாடிக் கொண்டிருந்தார். ஆனால் நான் திடுக்கிட்டது அதன் மத்தியில் செருகி வைத்திருந்த படம். நிர்வாணமான ஒரு கருத்த பெண், இன்னும் கருமையான விடைத்த முலைக் காம்புகளுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

கவிதை இவ்வாறு தொடங்கியது.

உன் கனவினுள் மட்டுமே
நான் வாழ்கிறேன்
வலியினால் உருக்கொண்ட நிலம் என் உடல்
தன்னந்தனியினுள் அமிழ்ந்திருக்கிறது
அதன் கொடுக்குகள்
நான் இங்கிருக்கிறேன்
என் உடலினுள் மீள மீள அதை சுவீகரிக்கிறேன்
எல்லையின் இப்புறமும் அப்புறமும்
பல நூறு துண்டுகளாய் சதைத்து
உதிர்த்து வைக்கிறேன்

வலியினால் உருக்கொண்டது என் நிலம்
உன் கனவினுள் வாழ்கிறது என் வலி

தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது மலை. இரவுகளில் என் தனிமையுடன் அமர்ந்திருக்கின்றன. சொல்லொணா ஒன்றினை அவைகள் தன்னில் மடித்து வைத்திருக்கின்றன. நாற் புறமும் இருள் சூழ அமர்ந்திருக்கிறேன். கண்கள் பழக்கப்பட இயலாத இருள். ஒரு அடர் திரவம்.

இறைவா! அவனை மன்னித்து விடு.


ஹிப்பி

கட்டுப்பாடின்மை ஒரே சமயம் தன் இரு புறங்களைக் கொண்டுள்ளது. முழுக்க முழுக்க பாவனையானதாகவும், குழந்தைத்தனமானதாகவும். மனிதர்களுக்குள் பெரும்பாலும் இந்த பாவனையின் அதன் பல்வேறு பிம்பங்களின் ஊடாக மட்டுமே சுதந்திரத்தனம் என்பது நிலை கொள்வதை மிக அணுக்கமாக என் மூலமே உணர்ந்திருக்கிறேன். இருப்பது போல ஆனால் இல்லை.  ஆனால் பழங்குடித் தன்மை அப்படி அல்ல. அது கொண்டாட்டத்திற்காக ஒன்றிலிருக்கும் ஆதி மிருகம். அதே சமயம் அதன் மூர்க்கமும் வன்மமும் கூடத்தான். பாலினம் கடந்த வன்மம். ஓஷோ அதைத் தவற விட்டிருந்தாரா? இல்லை அதை சிதறடித்து கலங்கடித்தார் என்று சொல்லலாம். எல்லாவற்றிலும் நம்பிக்கை இழக்கும் சமூகம் என்னவாகும். ஒன்று முழுக்க தன்மய நோக்குடன் அத்தனையும் நோக்கும் ஒரு சமூகம் உருவாகியிருக்குமோ. இரு உலகப் போர்களுக்குப் பின் முற்றிலும் அபத்தக் குழியில் விழத் துடிக்கும் இளைஞர்களின் தலைமுறையில் ஹிப்பித் தனம் பீடித்தது. அவர்கள் தன்னளவிலேயே கலகக் காரர்களாக இருக்க விரும்பினர். மதம் கடந்த பால் கடந்த உடல் கடந்த ஒரு சமூக அமைப்பை உருவாக்க எத்தனித்தனர்.

உண்மையில் போதை எப்பொழுது இயற்கையினுள் ஒன்றுகிறது என்ற கேள்வியே அபத்தமாக இருந்தது. மொத்த இயற்கையும் சற்று போதைத் தனத்துடன் தான் இருக்க முடியும். தர்க்க ஒழுங்கற்ற அதன் மர்மமே அதன் இயல்பு. மனிதன் அதிலிருந்து தப்ப விளைபவனாகவும் அதனுள்ளே மூழ்கி சாகக் கூடியனாகவும் இருக்கிறான். அது தான் அவன் பிரச்சனை. ஒரே நேரத்தில் அவன் அதனால் ஈர்க்கவும் அதை வெறுக்கவும் நினைக்கிறான். இந்த முரண்களுக்குள் தான் ஹிப்பியும் இருந்திருக்க முடியும். அவன் அதனை அள்ள அள்ள இன்னும் இன்னும் என்று அது நிறைந்து கொண்டிருந்தது.

கடலினுள் நான் இருக்கிறேன்
என்னுள் கடல் இருக்கிறது

போதையினுள் சுய போதமின்றி குதிக்கிறோம். பின் திரும்பவும் ஒரு மைதுனம் போல அதனைத் திரும்ப திரும்ப செய்யத் துடிக்கிறோம். கட்டற்று இருப்பது என்பது போதையன்றி வழியின்றி போகும் பொழுது நாம் முழுக்க தோற்கடிக்கப்பட்டிருப்போம்.

தன் தர்க்கங்களிற்குள் அதனை அகப்படுத்திக் கொள்ள அவன் கலையைப் படைத்தான். ஆனால் கலை இயற்கையை மறு உருவாக்கம் செய்வதன்றி வேறென்ன. அதன் ஒழுங்கற்ற ஒன்றே அதை அழகாக்குகிறது.

ஒழுங்கற்றது வடிவமற்றதாய் உள்ளது. 
பிரக்ஞைக்குள் அகப்படாது இருப்பதை கடவுள் ஆக்குகிறோம். மூலமாய் வடிவம் ஒழுங்கு அமைகிறது. பின் நிலைத்த தன்மையை அதற்கு அளிக்கிறோம். மாறாத ஒன்றாய் அதை ஆக்குகிறோம். கட்டுக்குள் அகப்பட்டுக் கொண்டிருக்கும அதனுள் பீறிடக் காத்திருக்கும் எதிர் நிலைக் கடவுளர்களை உருவாக்குகிறோம். முரண் தனக்குள் சமநிலையை அடைகிறது.

ஆனால் எப்பொழுதும் நேர் எதிர் நிலைகளில் அது அப்படி அமைந்து விடுவதில்லை. ஒரு இரண்டுமற்ற நிலை மனிதர்களாகவே நாம் பெரும்பாலும் இருக்கிறோம். 

கனவு

கனவு மொழியாவதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். வெவ்வேறு தளங்களுக்குள்புகுந்து வெளிவருதல். கால இடமற்ற வெளி ஒன்று ஸ்தூலமாக உருவாகிக் கொண்டிருக்கும் பொழுதே இல்லாமல் ஆவதும். காலம் என்ற அளவை உடலால் பிளவுறுதல். உடல் வலி மட்டுமே ஆனதாய் அந்த வலியினால் உருவாகும் மொழி கொண்டதாய் ஆகி விடுதல். 

மரணம் நித்தியத்துவத்துடன் அலையாடியது. மரணம் பற்றி நான் இவ்வாறு நினைத்துக் கொண்டேன்.

"கடல் அலையினில் அலைக்கழியும் மதுக்குப்பி போல"

துரத்திக் கொண்டிருக்கும் ஒன்று திடுமென்று நின்றது. அருகில் அன்போடு அழைத்தது. அதன் சொற்கள் அழைத்துச் சென்ற தூரம் ஒளி கொண்டிருந்தது. ஒளி என்பது நிலையற்றதாய் இருந்தது. சிறிது துளிர் போதும். இருள் வந்து அணைந்து கொள்ளும். பின் இருள் மட்டுமே ஆனது.  இருள் தன் பிரத்யேகமான காட்சியினை ஒளிர்த்தது. 


சனி, 8 பிப்ரவரி, 2020

உப்புக் கவிதைகள்

நடு நிசியின்கடலை நான் அறிவேன்
அலைகளுக்குள் உருவாகிக் கொண்டிருக்கும்
மலைக்குவடுகளில் மழை பெய்கிறது
நீர்மை நீரினுள் கலந்த பின் அமைதியற்றிருந்தது
எம்பி நிற்கும் பாறை களினுள் தேங்கி இருக்கிறேன்
நீ சரிவிலிருந்து வீழ்கிறாய்
நொதிக்கும் உன் பெருக்கினுள் நான் கையடிக்கிறேன்
நுரை தள்ளித் ததும்பும் கறையினில் அலை உன்னைப் போலில்லை
நடு நிசியின் கடலை நான் அறிவேன்
அது உன்னைப் போலவே தூங்கிக் கொண்டிருக்கிறது

வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

உப்பு

நான் ஒரு கட்டற்ற ஒன்றினை வைத்திருக்கிறேன்
அது உப்பாலானது
நேற்று அதனிடம் இப்படி சொன்னேன்
உன் குமிழிகளின் மூலமே என் உயிர் நிலைக்கிறது. நீ விடைத்தெழும் ஒவ்வொரு நொடியிலும் உன்னுடன் உப்பாகி விடுவது மட்டுமே நான் விரும்புவது. அது நீயாவதும் கூட. இந்த மிகப்பெரிய நீ உன் அலைகளைக் கொண்டு என்னை உடைத்துக் கொண்டிருக்கும் பொழுதே சாவதானமாக அங்கே அமர்ந்திருக்கிறாய். கடல் தன் பன்னிலடங்கா கரங்களால் என்னைத் தழுவிக் கொண்டிருக்கிறது. பாசி பீடித்த என் தோலினுள் அறைந்து அறைந்து நக்குகிறாய். நான் உப்பால் ஆனவன் உன்னைப் போலவே.

என்னை இன்னொரு முறையும் முத்தமிடு.

வெள்ளி, 10 ஜனவரி, 2020

அவளை வணங்குவோம்- அம்புதாயனத்துக் காளி- பிரபு கங்காதரன்
ஊருக்கு நடுவில் மலந்து கிடக்கிறாள் வண்டி மலச்சி. தெருவை நிறைத்துக் கிடக்கிறது அவள் உடல். அவள் அருகில் சின்னச் செப்பு சிலையாய் அமைந்திருக்கிறான் முத்து வைரவன். மிகச்சிறிய உடல். குன்றாக் காமத்திற்கு அருகில் வெறித்துக் கொண்டிருக்கும் உடல். தின்ன இயலா மாபெரும் புல் வெளியை அளைந்து கொண்டிருக்கும் எருமை போலக் காமம் கொப்பளித்துக் கொண்டிருக்கிறது.

அதை வணங்குவோம். வேறு வழியில்லை இச்சிறிய உடல்களுக்கு.
ஆனால் அது மாபெரும் வெளியாய் உருவாகும் தருணம் உண்டு. அது உடல் தன் ஸ்தூலத் தன்மையைக் கலைத்து எல்லாவற்றிலும் கலந்து தோற்றம் கொள்வது. தின்னத் தின்ன திகட்டாதது. அங்கு எங்கும் எதிலும் அவள் உடலாக ஆவதும். அவள் உடல் எல்லாமாமும் ஆவதும்.

மூணு சீட்டுக் காரனைப் போல மொழி அமைந்து விடும் பொழுது இந்தக் கலைதல் உருவாகி விடுகிறது. இந்த ஒற்றைக் கட்டிலில் தன்னந்தனியே வெறுமனே அமர்ந்திருக்கும் பொழுது வெளியை ஜன்னல் வழி நோக்குகிறேன். பாலையின் இம்மழைக் காலம், வானம், காற்று அண்ணாந்து நோக்க சிதறிக் கொண்டிருக்கும் கரு நீலப் பெருவெளி, சலசலத்து தூத்திக் கொண்டிருக்கும் மழை, உள்ளுள் பிரவாகமெடுக்கும் காமத்தை அதக்கி அதக்கி உருண்டையாக்கிக் கொண்டிருக்கிறேன். அது மெல்ல காட்சி ரூபமெடுக்கிறது. என் முன் அதன் அந்தர வெளியில் அவள், அவள் உடல், நீர், காற்று, மண், மணம், சுவை, ஸ்தூலமாய் நிற்கும் அனைத்தும் உடல் மட்டுமே கொண்டதாய் உருவாவதை தவிர்க்க இயலவில்லை. அவள் மட்டுமே ஆனதான லோகம் இது.

அவளை ஸ்பரிசித்த நொடிகளை எண்ணிப் பார்க்கிறேன். நாக்கு எனும் உறுப்பு கண்டறிந்த எண்ணிலடங்கா சுவைகளை அவள் உடல் எனக்கு தந்திருந்தது. உடல் கொண்டு மட்டும் அறிய இயலா மாய நதி என் மீது படர்ந்து நான் அடிக் கூழாங்கல்லாய் ஆகி விட, அவள் உடல் என்னை மூழ்கடித்து நகர்ந்து கொண்டிருந்தது.

அந்த நிலம் எப்படி இருந்தது?

மரங்களால், செடிகளால், கொடிகளால், புதர்களால் பச்சை சூழ்ந்தது. அங்கு அவள், எதுவும் அவள் வாசனை.

காலம் தனக்கேயான தனித்தன்மைகளுடன் அவளை வாரி வாரி இறைத்தது. காரையார் அணையின் பானதீர்த்தத்தின் அடியில் பத்து நிமிடங்களுக்கு மேல் நிற்பவன் இறந்து போவான். வேறு வழியில்லை.

கார்காலம் - ஆவணி, புரட்டாசி
கூதிர்காலம் - ஐப்பசி, கார்த்திகை
முன் பனிக்காலம் - மார்கழி, தை
பின் பனிக்காலம் - மாசி, பங்குனி
இளவேனிற்காலம் - சித்திரை, வைகாசி
முது வேனிற்காலம் - ஆனி, ஆடி

இக்காலங்களின் பிரத்யேக குணமும் மணமும் சுவையும் அந்தரங்கமாய் மொழியாவது. மொழி மூலம் அதைத் தொட்டு தொட்டு உவப்பது. அக்காலங்களின் மொட்டவிழும் பூக்களின், காய்களின், கனிகளின் அத்துணை ரகசியங்களும் மெல்ல மெல்ல உன் உடலாய் உருக்கொள்வது.

ஆம். நான் உன் உடலைக் கண்டேன். தொட்டேன். முகிழ்த்தேன். சுவைத்தேன். விழுங்கினேன். விக்கலெடுத்தே செத்தேன். விழுங்க விழுங்க இன்னும் இன்னும் என்று என் உடல் முழுக்க நீயானாய். நானும் நீயானாய். ஒரு சரணாகதி. அது மட்டுமே வாய்த்த வெறும் ஆணுடல் நான். அதன் குறைபாடுகளுடன் உன்னிடம் வந்தேன். நீ அத்தனையும் தந்தாய் மழையைப் போல.

"நிதம்ப மயிர் நாற்றம்"

"களி மண் வெட்ப்புகளுக்குள் வயல் நண்டு ஊடுறுவுவது"

" ஊழித் தாண்டவத்தில் எரியும் பெருவனம்"

"கோடை வனத்தின் மக்கிய வாசனை"

"ஆம்பல் குளத்தி களி மண் வாசம்"

"நொச்சியின் கிறங்கடிக்கும் மணம்"

"காயும் ஈர வெம்பின் வாசம்"

"மார்கழியின் பரங்கிக் கனிகள்"

"அளவிற் பெரிய பௌர்ணமியை தனித்துக் கடப்பது"

"நீலம் பாரித்த கழுத்தில் பூக்கும் விஷக் காமம்"

"
மீனூறும் வாசம் ஒத்த உன் முதல் திரவம்"

"பாம்புக்கு நீர் கொண்டு போகும் நத்தை"

"உன் பின்னங்கழுத்தெங்கும் பொங்கும் தாழம்பூ"

"வெள்ளப் பெருக்கெடுப்பில் கரையும் பாசி மணம்"

"பனியில் ஊறிக் கிடக்கும் நெல்"

"குறுவை நன்னீரின் வாசம்"

"இலுப்பை மரங்களுக்கடியில் அந்தியில் வீசும் மணம்"

"எருக்கம் பூ பிசுபிசுப்பு"

"கோடை மழையின் மண் வாசம்"

"இள நுங்கின் மணம்"

"தீதலை பூத்த கரிய அல்குல்"

"சிறியா நங்கையின் மணம்"

"சக்கரை வள்ளி அவிக்கும் மணம்"

"விதைப்பு வயலின் கருவைப் பிசின் வியர்வை"

"இளவெயில் சூடு"

"வயலெலி விழுங்கிய சாரைப்பாம்பின் ஊறல்"

"சித்திரை வெயில் ஒத்த உன் அல்குல்"

"நுணா மரப்பூக்களின் நறுமணம்"

"நறை வழியும் இடும்ப மரம்"

"கொடுக்கா புளியின் துவர்ப்பும் புளிப்பும்"

"மிக நீண்ட பயணத்தின் கட்டுச்சோறு வாசனை"

"தின்னத் திகட்டா கிழுவைத் தளை"

"கிழட்டு புளியமர வேர் நிறம்"

"நறும் பச்சைக் களி மண்"

"எரியும் கருப்பங்காடு"

இது ஒவ்வொன்றும் அவள் அவள் உடல் அவள் காமம்.
காலங்களின் மாறாத தன்மையினுள் முயங்கும் உடல்கள். பெண் உடல் ஆண் மனத்தில் எப்படியெல்லாம் உருக்கொள்கிறது. அவளே இப்பிரபஞ்ச லீலையாகி விடுகிறாள். விட்டில் பூச்சிகள் போல ஆண் அவ்வைணையா சோதியில் கலக்கத் துடித்து சாகிறது. ஒரு வகையில் அதுதான் அவனுக்கான கடைத்தேற்றம் போல.உண்மையில் காளியின் மகா உடலைத் திரும்பத் திரும்பக் கடக்க முயலும் ஒரு  எளிய ஆணின் பிதற்றல் போல பித்தாகி விட்டது. அதே நேரம் காளியைப் புணர்ந்ததாலேயே சிவனாகி விடும் பித்து வாய்த்து விடுகிறது.

நம் மரபின் சாக்த மரபின் கண்ணி இது. உடல் எனும் ஒற்றை பெரும் பரப்பில் அள்ளி அள்ளி இட்டும் நிரம்பா பிலத்தினுள் காலாதீதமாய் சொட்டிக் கொண்டிருக்கிறது ஆணின் சுக்கிலம்.


வணங்குவது என்பது அவளை புணர்வைதைத் தவிர வேறென்ன.

அதனால் அவளை வணங்குவோம்.