1
ஒரு தோல்வியுற்ற கணத்தில் தான்
அவனை சந்தித்தேன்
உண்மையில் அவனது மறுமுனையின்
குரலை.
அந்தக்குரலின் ஏக்கமுற்ற
குழறல்கள்
ஒரு பெரிய பாடலின் அல்லது
புதிரின்
விடுபட்ட தடங்கள் போல
தொடர்ச்சியாகவும் பின்
தொடர்ச்சியைத் தொலைத்தும்
வெகுதொலைவிலும் பின்
நெருக்கமாகவும்
பின் தொடர்கிறது
அது ஒரு குடிகாரனின்
போதை முழுமையாகாத உளறலின்
துண்டுப்பிரசங்கங்களைப் போலவும்
உருமாறிக் கொண்டிருந்தது
நீர்மையினுள் அழுத்தம் கூடக்கூட…
வெற்று மிதவையாக அந்தக்குரல்
அலைகளுள் வெறுமனே ததும்பிக்
கொண்டிருந்தது.
யாருடைய காதுகளுக்குமில்லாமல்,
தனக்குத்தானே அது புகார் செய்யத்
தொடங்கிய போது
என்னுடைய சொந்தக்குரலாக,
ஒரு பிரார்த்தனையாக கதற
ஆயத்தமானது.
2
ஒவ்வொரு முறையும் நிறைவின்மையைத் தரிக்கும்
அவனது துளையிட்ட கைகளில்
அன்றும் எந்த மாற்றமும்
தென்படவில்லை
அனிச்சமாய் எனது
கற்பாறைகளுக்கிடையில்
ஒரு மென் மலைச்சுனையாய் நுழைந்து
ஈரப்படுத்தி சென்று கொண்டே
இருந்தான்
அதனால் காரணமேயில்லாது
(காரணமுமிருக்கலாம்)
அவனுக்கு முதுகு காட்டி கேலி
செய்தேன்
என் ஒவ்வோர் பழித்தலுக்கும் ஒரு
வெண்துமியென
நகர்தலே மொழியாய் என்னில் கடந்து
செல்கிறான்
அவனது தேங்கி நிற்கும் குழிகளில்
எனது பிம்பம்
தோல்வியை மட்டுமே பிரதிபலிக்கிறது
திரும்பிச் செல்லும் வழியெங்கும்
சிதறிக் கிடக்கின்றன
எண்ணிலடங்கா முறிந்த சிறகுகள்
எனது பிம்பத்தில் நான் பார்த்த
அதே என்னுடைய சிறகுகள்.
3
என்னைச் சுற்றிக் குழுமுகிறது
உன் நெடி
உன் காய்ச்சல் படிந்த வெம்மை
உள்ளங்கைகளுக்குள்
என் நிர்வாணத்தை அடகு
வைத்திருக்கின்றேன்
தோள்களிலிருந்து நழுவுகிறது
உன்னைத்தாங்கும் சிலுவை
அழுந்தப் பற்றுகையில்
உன் கைகளில்ன் பிரத்யேக மொழியால்
அதற்றுகிறாய்
உன்னிலிருந்து தாவித் தப்பிக்க
முயல்கிறேன்
சபலங்களின் படிகளில்,
நிரந்தரமாய்ப் படிகின்றன உன் கடல்
அலை நுரைகள்.
பாசி பீடித்து வழுகுகிறது
ஒவ்வொரு அலை மீறல்களிலும்
உன் துடுப்புகளுயர்ந்து என்னை
னோக்கி வருகின்றது
உன் உடலை நான்
பார்த்திருக்கவில்லை
உன் முகம் எனக்கு பரீட்சயமுமில்லை
ஆனால் உன் அரூபக்கைகளின் வலுவை
எனக்குத் தெரியும்
என் ஸ்பரிசப் பொந்துகளின் அதைப்
பதுக்கி
விராட ரூபமெடுக்கும் அதன் முளைகளை
வருடி வருடி பெரிதாக்குகிறேன்
என்று என் ஆழம் பீறிடும் குழிகளை
அதில் நான் பார்க்கிறேனோ,
அன்று உன்னைப் போலவே நானும் நம்பியிருக்கிறேன்,
தயை கூறு!
4
அரசவையில் அவளது மடியில்
உட்கார்ந்து கொள்ள
பின் அவளது கழிவறைக்
கிண்ணத்தினடியில் ஒளிந்து கொள்ளவும்
ஊன் உண்ணும் தாவரத்தைப் போல
நீங்கா தாபத்துடன் அவள்
முலைக்கண்களை உறிஞ்சுகிறேன்
ஆனால் சங்கிலிகளால்
கொளுத்தியிடப்பட்ட
எண்ணற்ற அம்மணங்களை
என் மணிக்கட்டில் நிரந்தரமாக
பிணைத்து இறுக்கியுள்ளேன்
அவளது வாசற்படிகளில் குந்தி
அமர்ந்திருக்கிறேன்
இன்றோ! நாளையோ!
தெரியவில்லை…
ஒரு அஸ்தமன நாளில் அதை
உள்வாங்கியிருப்பேன்
நீர்க்குமிழிகளுக்குள்
அகப்பட்டுக் கொள்வேன் அதன்பிறகு.
அன்று
அவளிடம் செல்லத் தயங்க மாட்டேன்
எப்பொழுதும் என்னைத் தொங்கல்களில்
ஊசலாட்டும்
செலுத்த….செலுத்த…
நான் தேடும் பாதையாயன்றி,
மீள, மீள வெளித்தள்ளும் ஒரு
வழிப்பயணமாய் அவள் மாறி விடுகையில்,
என் தயக்கங்களையெல்லாம்
சமர்பித்து விட,
திரும்பவும் அவளது அரசவைக்
கூடத்திற்கு செல்வேன்.
வலிச்சம் காட்டும் குறிகளுக்கு
மத்தியில்,
என் முடிவில்லாக் குறிகள்
வெட்டுண்டு அவிசாக்கப்படும் பொழுது
நித்தியமாக அவளை நான் விரும்பிக்
கொண்டே இருக்க வேண்டும்
என்பது மட்டுமே என் பிரார்த்தனை.
5
ரகசியம் கக்கும் குரல்களின்
கண்ணாடிச்சில்லுகளால்
என் பாதங்கள் கிழிந்து குருதி
வழிகின்றன
சூழும் உடலங்களின் மதமதப்பில்
சாவகாசமாய் வந்திறங்கி அருள்
பாலித்தது
ஒரே ஒரு ஒற்றைக்கை
அதன் உகிர்கள் பழுப்பேறியிருந்தது
ரேகைகள் அழிந்து வெளிறியிருந்தது
நெடு நாள் திரவக்குழியில்
நொதித்துக் கிடந்ததால்
நசுநசுத்து சூம்பி
மழுங்கியிருந்தன விரல் நுனிகள்
அதன் உள்ளங்கையில்
இமைகளற்ற விழிக்கோளம்
அந்தப்பார்வை எந்தச் சிறப்பையும்
பெற்றிருக்கவில்லை
மண்டியிடும் ஜனங்களின் மத்தியில்
முடிவில்லாப் பிரார்த்தனைகளின்
வாதையில்
அதன் இமையாக் கண்களை உற்று
நோக்குகின்றேன்
அது என் சீழ்க்கசியும்
பாதப்புண்ணின்
உள்ளிருந்து வெளியேறும்
சின்னஞ்சிறு புழுவினைப் போலவே இருந்தது.