சனி, 7 ஜூலை, 2018

தனித்திரு விழித்திரு பசித்திரு


மஞ்சள் உறைய உறைய கருங்கல் மேனி மெல்ல நெளியத் தொடங்கியது. அதன் உலகம் வேறு. அங்கு காலம் வெற்றுப் பாலித்தீன் பை போல உருமாறிக் கொண்டிருந்தது. காலமற்ற வெளி திரவக்குமிழ்களாய் உடைந்து கரைந்து அலை படிந்து கரை தொட்டு ததும்பி சுழன்று கொண்டே இருந்தது. நெளிய நெளியப் பின்ன பின்ன உடல்கள் ஜடத் தன்மையை இழக்க ஒரு பக்கம், அதுவே சுழன்று ஸ்தூல உருவமாகிக் கொண்டிருந்தது.

லிங்க ரூபமெடுக்கும் என் குறியைப் பிளந்து வெளி நுழைகிறது பாம்பு வால். இரு உடல்கள். இரு இருப்பு. இரு புள்ளிகள். இரு வழிகள். இரட்டை இரட்டை. புணர விடைத்த இரு குறிகளா? ஊறி நிற்கும் பிளந்த நாக்குகளின் விடம் உருவும் நொடித் தீண்டல். ஆலகாலம் முளைக்கும் அதல பாதாளப் புற்று. புற்றினுள் ஒளிந்து கொள்ளும் சர்ப்பம். ஒற்றைக் கரு நாகம். பாதையெங்கும் உரித்தெடுத்த தோல்கள். உரியாத மினுக்கம் உறைந்த கருங்கல் சிலை.

இரட்டைப் பாம்புகள் பிணைந்து பிளந்த லிங்க ரூபம். மண்டை பிளந்த அருவ உருவம். இரும்பைக் கோவில். பாசி தெறித்த குளக்கரை. பிணம் உயிர் வாழும் நீர்மை. கரு நீலம் துய்க்கும் விடம். காலம் அளந்து கிடக்கும் இரட்டைப் பாம்புகள். ஒன்றை ஒன்று கவ்வ முனைய பிய்த்தெறியப்பட்ட அழுகிய ஆண் குறிகள். சூம்பிய விதைப்பைகளுடன் கோயில் கருவறையில் வீற்றிருக்கிறது ராஜ ராஜனின் பெரும் நாகம். பிய்த்துப் புணர தன் ஆழ் பாதாளங்களின் இருள் வெம்மையை உவர்த்தும் நீலம். நீலம், ஆலகாலம். விஷம் விஷம் விஷம். நீலம், வெம்மை வெறி சாபம் மொய்க்கும் இருள். நீலம், காலம் ஒளி பாதாளம் படரும் நிழல். நீலம் நீங்கா இருண்மையின் ஒற்றைக் குமிழ். நீலம் பெண்மை காமம் பிறப்பு இறப்பு. நீலம் நீலம் நீலம். நீ...நீ...நீ.

நீலம் போதம் குலைந்த திரவ ஒளி. நீலம் இறுக்கிப் பிணைந்த ஒற்றைக் குறி. நீலம் கவ்விக் குதறும் குருதி உடல். நீலம் அவள். அவள் நாகம். நாகம் உறைந்த புற்று. புற்றில் உறைந்த பெரும் லிங்கம். லிங்கம் முழுகிய அணையா நெருப்பு.நெருப்பு படரும் நீல வெளி. நீலமெங்கும் அவள் பிய்த்தெரிந்த ஒற்றை முலை. முலையிலிருந்து பெருகி ஊடும் வற்றாப் பகை. பிணைந்து முறுக்கிய இரட்டைப் பாம்புகள். இடையிலிருந்து முட்டித் தெறிக்கும் சிவ ரூபம். சிவ ரூபம் மழுங்கிக் கிடக்கும் காலம் தொலைத்த பொந்துகள். ஆழம் விழுங்கிய இருள் குழிகளிலிருந்து முளைதெழுகின்றன நல்ல பாம்பின் கதைகள்.

நல்லபாம்பு: நீல அணங்கின் கதை - ரமேஷ் பிரேதன் பற்றி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக