திங்கள், 24 ஆகஸ்ட், 2020

விரதம்

 உடல் அதன் ஒவ்வொரு கணுக்களிலும் தேடிக் கொண்டிருக்கிறது. குருதி முழுக்க வடிந்து உறைந்து ஒரு வெளுத்த சல்லாத்துணி போல நடுங்கிக் கொண்டிருக்கிறது. தூரத்தில் புகைப்படலமாய் பல்லாயிரம் உடலங்கள் மோதும் அரவம்.

விரதம் எனும் சொல் என் மூளைக் குழியினுள் நொதித்து கூழ் போன்ற திரவமாய் கொப்பளித்தது. காட்சிகளின் கோர்வையற்ற சலனம் காலமற்று புறத்தே ஓடிக் கொண்டிருந்தது. வண்ணங்களற்ற ஒரு காட்சியில் நான் தன்புணர்ச்சியாய் என்னையே விழுங்குகிறேன். மற்றொன்றில் எனதருமை குதிரவீரன் அங்கசீலனைப் பிடித்து தரையில் குப்புறக் கிடத்தி வன்புணர்வு செய்கிறேன். முழுக்க வடித்த பின் அவன் முகத்தில் காறி உமிழ்ந்து விட்டு திரும்பி பாராமல் செல்கிறேன். என் உமிழ் நீர் பச்சை நிறமாய் அவன் கன்னத்திலிருந்து சளியைப் போலத் தொங்குகிறது.

எனக்குள் நான் தேக்கிக் கொண்டிருந்தது எதை. என் பார்வைக்கப்பால் பிதுக்கி வெளி தள்ளிய பல கோடி உயிர்களின் திரவ நெடி.

என் தந்தையை நினைக்கிறேன்.

என் உயிர் காலத்தின் ஒவ்வொரு சொடுக்கலுக்கும் ஒன்று ஒன்றாக பிரிந்து கொண்டிருப்பதை வேடிக்கை பார்க்கிறேன். அம்புகள் உடலின் அனைத்து அணுக்களிலும் ஒன்று விடாது உள் நுழைந்து முளைத்திருந்தது.

என்னுடைய காலம் முழுவதும் நான் ஒன்றையே நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்காகவே நான் வாழ்ந்தேன். அதுவே நான். அதை விடுத்து என்னுள் எதுவுமே இல்லை.

என் முன்னே அவன் நின்று கொண்டிருந்தான். தன் குறியை ஒரு கழட்டி மாட்டும் கருவி போல கைகளில் வைத்திருந்தான். அவனுடைய முகம் ஏனோ அவளை ஞாபகப்படுத்தியது.

பாவம்! பேதை! என்னை அறியாதவள்.

நான் தந்தையை மறுபடியும் நினைத்தேன். என்னால் அறியமுடியாத மூர்க்கமும் வன்மமும் என்னுள் பெருகுவதை உணர்ந்தேன்.

வேண்டாம்! வேண்டாம்! நான் என் தந்தையின் மைந்தன். அவருக்காகவே வாழ்பவன். அவருக்காகவே துறந்தவன்.

அவரது முகம் ஒரு பல்லியின் முகம் போல உருமாறியிருந்தது. என் கண்களுக்கு நேர் எதிரே அது அசையாது என்னைப் பார்த்தது. அதனுடைய சூடான எச்சம் என் நெற்றியில் விழுந்து என் குருதியில் கரைந்து வழிந்தது.

அய்யோ! வேண்டாம்!

நான் அவளை விரும்பியிருக்க வேண்டும். அவளைப் புணர்ந்திருக்க வேண்டும். இந்தப் பாரத வர்ஷம் முழுக்க என் புத்திரர்களால் நிரப்பியிருக்க வேண்டும்.

என் புத்திரர்கள் மலப்புழுக்கள் போல என்னில் நொதிக்கிறார்கள்.

நான் ஒரு நல்ல தந்தையுமல்ல. மைந்தனுமல்ல!

என்னுள் நிரம்பிக் கொண்டிருப்பது என் அகம் மட்டுமே. அது என்னை விரதம் விரதம் என்று ஆட்படுத்துகிறது. என் விரதம் என்பது என்னை பாலற்றவன் ஆக்கி விட்டதே.

நான் பீஷ்மன். பிதாமகன். சத்திரியர்களில் தலை சிறந்தவன். ஆனால் நான் ஏதுமற்றவன். அனைத்தையும் இழந்தவன். அனைத்தையும் ஒறுத்தவன். எதையும் ஏற்கும் தகுதியற்றவன்.

என்னுடைய விரதம் எனக்கு நானே சூட்டிக் கொண்ட பொய்முடி. தன்னைத் தானே உண்ணும் மிருகம் பார்த்திருக்கிறாயா? அது நான் தான். விலாவிலிருந்து குருதி ஒரு கூழ் உருளை உருளையாய் விழுந்து கொண்டிருந்தது.

நான்! நான்!

பூமியும் வானமும் அற்றவன்.

தந்தை என்னிடம் மன்றாடுவதைப் பார்க்கிறேன். பல நூறு துகள்களாக என் கைகளாலேயே அவரை சிதைத்துத் தூக்கி எறிகிறேன். அதன் ஒவ்வொரு துகள்களும் விழுந்த இடத்திலிருந்து கொடுக்குகள் முளைத்து விஷம் மட்டுமே ஆனதாய் என் உடலம் முழுதும் தொற்றிப் படர்கின்றன.

ஸ்தூலகர்ணனின் சிலை பல அடி உயரத்திற்கு ஸ்தாபிக்கப் பட்டிருக்கிறது. திடமான அவனது உடலின் மார்புகள் நொங்கு போல அலங்குகிறது. அவனது குறி என்பது அவன் நினைத்த மாத்திரத்தில் உருமாறும் ஒரு தனித்த உயிர். தன்னை ஆண் என்றும் பெண் என்றும் ஒரு சேர ஆக்கியவனின் பலி பீடத்தில் பல கோடி ஆண்களின் பெண்களின் குறிகள் அவிசாக்கப் படுகின்றன.

அவனுக்கு நேர் எதிர்புறம் ஆடி பிம்பம் போல ஸ்ரீ கண்டியின் சிலை. வில்லம்புடன் அவனையே உற்று நோக்குகிறது. அவர்களுக்கிடையே சன்னதம் வந்து ஆடிக் கொண்டிருந்தன பல்லாயிரம் உடல்கள் பாலற்றவர்கள். தங்களை இந்த மாபெரும் உடல்களுக்கிடையில் பொருத்தியவர்கள். சந்ததியற்றவர்கள்.

அங்கு பீஷ்மருக்கென்றிருந்த பீடத்தில் ஒரு கூர்மையான ஆண் குறியை ஸ்தாபித்திருந்தனர். அதன் மேல் சொட்டிக் கொண்டிருந்தது காலாதீதமான ஊற்று. அது நனைய நனைய உருகி பின் தனக்குள்ளாகவே தூலமாகிக் கொண்டிருந்தது.

பிறையைப் போல 15 நாட்கள் வளர்ந்தும் பின் குன்றியும் பரிணாமம் கொண்டது. அதற்கு பலிகள் இல்லை. பூசைகள் இல்லை. வருடத்திற்கு ஒரு முறை ஒரு திடமான ஆணை அதில் இருத்துவார்கள். அவனது குதம் அதனுள் ஒருங்கி அப்படியே அவனது பலி ஏற்கப்படும். அதுவும் ஒரு சம்பிரதாயம் தான். வெறுமனே இருத்தி எழுப்பி விடுவார்கள்.

தற்போது யாரையும் கொல்வதில்லை. ஆனால் காலங்காலமாக அது காத்திருக்கிறது. தனக்கானவளுக்காக.

கார்த்திகை மாதத்தில் அதன்முன்னே சொக்கப்பனை ஏற்றுவார்கள். ஒரு பெண் மரத்தை எரியவிட்டு அதன் சாம்பல் கரியை அந்த பீடத்தில் பூசுவார்கள்.

மற்றைய தினங்களில் மறக்கடிக்கப்பட்டு அது தன்னுள் தானே அலைவற்று கிடக்கும் 

என்னுடைய கேள்வி திரும்ப பாட்டனாரையே முட்டி நின்றது. அவரது காம ஒறுப்பு இயல்பானதாய் இல்லை. அவர் முன் பல மணி நேரம் பேச்சற்று நோக்கிக் கொண்டிருந்தேன். எந்த பதில்களுமற்று அது உள் நோக்கியது.        
ஒரு மென் அழுகை. பின் ஒரு ஓலம். அது ஒரு பெண் குரல். வெட்டியெடுத்த முலைகளை இரு பழங்கள் போலக் கொண்டு வந்தாள். மண்டியிட்டு தன் கைகளாலேயே மண்ணைப் பிராண்டி தோண்டி விதைகள் போல அதைப் புதைத்தாள். பின் அதன் மேலேயே சிறு நீர் கழித்து காறியுமிழ்ந்து விட்டு நகரந்தாள். யோசிக்கிறேன், அவளுக்கு முகமே இல்லை. அதில் ஒரு நிழல் மட்டுமே இருந்தது.

நான் அங்கசீலன் போல என்னை உருவகித்து பீஷ்மரை நோக்கினேன். பரிதாபகரமான அவர் முகத்திலிருந்து கண்ணிர்த்துளிகள். ஒரு இருப்பு மட்டுமாகவே இருந்தார். உடல் இல்லை. தன்னை நோக்கி வரும் பிள்ளைகளை எல்லாம் வாரி அணைத்து நெஞ்சுருகி அழும் ஒரு பெரிய தந்தை போல இருந்தார்.

அதே நேரம் தன் பிள்ளைகளை எல்லாம் வன் புணர்வு செய்யும் மனம் பேதலித்த பெரியவர் போலவும் தோன்றினார். என்னால் நிர்ணயிக்க முடியவில்லை.


எனக்கு அந்தப் பழங்குடிகளின் வழிபாடே உகந்ததாக இருந்தது. அவர்கள் தங்களுக்குள் எந்த பேதமின்றி மாறி மாறிப் புணர்வதே எங்கள் வழிபாடு என்றனர்.

அந்த முதிய பாட்டனுக்கான சரியான வழிபாடு அதுதான். 

நுரைக்க நுரைக்க அவன் முன்னே காமத்தைப் படைப்பது.

ஆனால் விரதம் எனும் சொல் காலாதீதாமாய் அப்பீடத்தின் மழுங்கிய தலையில் சொட்டிக் கொண்டிருந்தது.

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

பசி

 "எல்லாம் யோசிக்கும் வேளையில் உண்பதும் உறங்குவதுமாய் முடியும்"

- தாயுமானவன்கால்கள் பதியா நிலம். தலைக்கு மேலும் கீழும் ஏதுமற்ற வெளியைக் காண்கிறேன். மழையில் நனைந்து கரைந்து வீழ்கிறாள். அவளது துகளிற்குள்ளிருந்து முளைக்கின்றன இளம் தாவர நுனிகள். அமைதியற்று அலைகின்றேன். என் கட்டிலின் அடியில் தூங்குகிறது அந்த மிருகம். அறை முழுதும் துர் நாற்றம் ஒரு சாசுவதமான இருப்பாய் ஆயிற்று. சங்கிலிகளில் நெறிபட என் சுவரெங்கும் அலைகிறது. பழுத்த கண்களும் கரிய மயிர்க்கற்றைகளும் அடர்ந்த அந்த வினோத மிருகம். 

நான் பிரார்த்திக்கிறேன். நாட்கள் நிறைவடையாமல் இருக்க. சிலுவையின் மைந்தன் என் முன் ஒரு பசித்த நாய் போல வெறிக்கிறான். அவனுடைய அந்தரங்க உறுப்புகளை பார்க்கிறேன். சீழ் சொட்டச் சொட்ட ரத்த நிறத்தை அவன் அதக்கிக் கொண்டு தெரு முக்கிலிருந்து திரும்பி செல்கிறான். 

இரவே ஒரு பெரிய அளவில் பிரார்த்தனை போல முணங்குகிறது. நான் திரும்பக் கேட்கிறேன். அந்த ஒலி, அதன் குரல் கீரிச்சிட்டு சுவர்க் கோழியின் குரல் போல இரவு முழுதும் அலைகிறது. அது அந்த தனித்த மிருகத்தின் குரல். அது பசித்திருந்தது. என் காதுகளை அறுத்து சுடச்சுட தட்டில் எடுத்து வைக்கிறேன். மிச்சமின்றி நக்கி உண்டது.

அவள் முளைத்த தாவரத்தின் விதைகளைக் காண்கின்றேன். அவளது திராட்சை நிறக் கண்களைப் போன்ற கனிகளை ஈனி தாவரம் மடிந்தது. கண்ணாடிக் குடுவைக்குள் கண்களை தண்ணீர் விட்டு வளர்க்கிறேன். அறை முழுதும் திராட்சை நிறம். கட்டிலின் அடியிலிருந்த மிருகம் நிறத்தை உண்ணத் தொடங்கியது. அதன் அடங்காப் பசியில் நிறங்கள் சிதறின.

வண்ணங்களின் குழைந்த சேற்றை அள்ளி அள்ளி உண்டேன். என் அருகே அமைதியற்று அமர்ந்திருந்தது அந்த மிருகம். அதன் வாயினைக் கிழித்து அதனுள் என் அந்தரங்க உறுப்புகளை வெட்டி உள் தள்ளுகிறேன். ரத்தம் சொட்ட சுவைத்து தின்று அன்று இரவே வயிறு வெடித்து செத்தது. அன்று உறங்கினேன்.

ஜன்னலுக்கு வெளியே மழை. மறுபடியும் மழையிலிருந்து முளைப்பதைப் பற்றி நினைக்கின்றேன். ஆனால் சாம்பல் நிற மழை அறையெங்கும் மூத்திர நெடியுடன் ஓடுகிறது. சிலுவை மைந்தன் அவள் முளைத்த தாவரத்தை உண்டு இன்று பசியாறிக் கொண்டான். தூங்கிக் கொண்டிருக்கும் அவன் விழிகள் திறந்தே இருந்தது. ஒரு பிணம் போலக் கிடக்கிறான். ஆனால் ஒரு சொல் அறையை விதிர்க்கத் தொடங்கியது. தாகம் தாகம் என்று அலையாடியது.

மண்ணைப் பற்றிப் பாடிக் கொண்டே பழுப்பு நிற வெட்டுக் கிளிகள் அறையினைப் போர்வையாய்த் தொற்றுகிறது. அறையே ஒரு மரத்தின் கிளை போல உருமாறிற்று. அதனில் தொங்கும் புழுவாய் நான். பச்சை எனும் சொல்லிலிருந்து முளைத்த அனைத்தையும் தின்று தீர்த்தன. அன்று ராப்பாடி படினான்.

"சோறே சோறே உனக்கு உயிர் இருக்குமெனில் 

நீ என்னவாக விரும்புகிறாய்"

"சோறே சோறே உனக்கு உடல் இருக்குமெனில்

நீ யாரைப் போல இருக்கிறாய்"

"சோறே சோறே உனக்கு இருப்பிருக்குமெனில்

நீ யாரை உண்ண அழைக்கிறாய்"

பசி! பசி! என்று கூவிக் கொண்டு என் அறையை விட்டு நகர்ந்தது அவன் குரல்.

எழுந்து கழிவறைக்குள் சென்று அதக்கி சுயமைதுனம் செய்து விட்டு திரும்பினேன். அதன் பிசுபிசுப்பு என் கை விரல்களில் நொதித்தது. ஜன்னலில் இருந்த மழை அறை உத்திரத்தில் தூக்கிட்டுக் கொண்டிருந்தது. வயிறு வெடித்து சிதறிக் கிடக்கும் மிருகத்தின் இறைச்சி நொதித்து திரவமாகி ஒரு தடாகமாய் அறை நடுவே சுழியிட்டுக் கொண்டிருந்தது. அதன் பிரதிபலிப்பில் நாக்கு தொங்க மழை அலையிடுகிறது. கரையினைத் தொட்டு மீளும் அதன் சுழிப்புகளில் பசி பசி என்ற சொல் பிளாஸ்டிக் கவர் போல மிதக்கிறது.

நான் வெளியை நோக்குகிறேன். அதே சாம்பல் நிற மழை. உள்ளும் புறமுமற்று அறை அந்தரத்தில் கிடந்தது. கால்களுக்கடியில் ஏதுமில்லை. ஆனால் உந்த உந்த அறை நகர்ந்தது. ஒவ்வொரு அசைதலுக்கும் தடாகத்தின் நீர் தழும்பிக் கொண்டிருந்தது. மழையிலிருந்து முளைத்தவளைப் பற்றிய கனவினை நினைவு கூர்ந்தேன். அவள் முளை விட்ட பிரதேசங்களை என் உடலில் தேடினேன். என் உடல் ஒரு தாவர உண்ணியால் உண்ணப்பட்டது. அதன் மக்கிய சாணியில் நான் துடித்துக் கொண்டிருந்தேன். அவள் என்னை முளைக்கச் செய்தாள். நான் ஒரு தாவரம். பச்சை மட்டுமே அனைத்துமாய்க் கொண்டவன். அவளின் உறுப்புகளுக்குள் என் பச்சை நிறத் திரவம் இடைவிடாது நிறைந்து கொண்டிருந்தது.

மழை நின்ற இரவில் திகட்டத் திகட்ட அவள் என்னைத் தின்று கொண்டிருந்தாள். அவளது முகம் நாக்கு தொங்க அன்று கிடந்த நாளை நினைவு கூர்கிறேன். என்னுள் சுழியடிக்கிறது. நான் அவளது வயிற்றில் நொதித்து மலமாகிறேன். கழிவறைப் போனிக்குள் அமிழ்கிறேன். பல்லாயிரம் துகள்களாய் சிதறி ஓடுகிறேன்.

ராப்பாடி திரும்பப் பாடுகிறான்,

"சோறே சோறே உனக்கு இருப்பிருக்குமெனில்

நீ யாரை உண்ண அழைக்கிறாய்"

பசி! பசி! என்று அவள் என்னை இளக்கி வெளித்தள்ளினாள். ஜன்னலுக்கப்பால் சாம்பல் வண்ண மழை இடைவிடாது நனைந்து கொண்டிருந்தது

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

உடல்

உடல் பற்றி நீ என்ன நினைக்கிறாய். ஒவ்வொன்றையும் கலைத்துப் போடுதல் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். என்னுடல் என்பது என்ன? பல்வேறு கூறுகளால் நான் அதனை சிதைத்து வைத்திருக்கிறேன். அதில் என் பால் எனும் திரிபை எப்படி வகைப் படுத்த என்று என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. 

உடல் அதன் சமூகத் தேவையை இழக்கும் பொழுதே சுதந்திரம் அடைகிறது – ரமேஷ் பிரேதன் 

ஆம். நான் ஏன் ஒற்றைப் பாலினத்திற்குள் உழல்கிறேன். என் உடல் அதன் அமைப்பு அதன் ஸ்தூல இருப்பில் நான் யார் என்பதை என்னால் தகவமைத்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் சமூகம் அதன் சொந்தத் தேவைகளின் பொருட்டு என் உடலினை வகைப்படுத்தி விட்டது. நான் ஆண் என்றது. ஆண் எனும் ஒற்றை இருப்பினுள் நான் பல தரப்பட்ட உடல்களை உருவாக்கிக் கொள்கிறேன். 

அந்தக் கோவிலினுள் மூன்று கற்சிலைகள். அவைகள் உடல் உறுப்புகளின் வடிவங்கள். அதில் ஒரு ஆணும் இரு பெண்களும் இருந்தனர். ஆண் என்பது ஒரு விடைத்த ஆண் குறி. பெண் என்பது விரித்த திதலை பூத்த யோனியும், ஒரு ஒற்றை முலையும். 

ஆண் குறிக்கு விந்துவும், பெண் குறிக்கு ரத்தமும், முலைக்கு பாலும் என கோவில் உத்திரத்தில் இருந்து அபிஷேகமாய் பொழிந்து கொண்டிருந்தது. 

ஏனோ அந்த சுடுகாட்டுக் கோவிலிற்குள் நான் மட்டும் தனித்து நின்று கொண்டிருந்தேன். எனக்குள் அழற்படு காதை மனப்பாடம் போல ஓடிக் கொண்டிருந்தது. சக்கரவாளக் கோட்டத்திலிருந்த பேய்கள் எல்லாம் என் செவினுள் ஈக்கள் போல ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. 

நான் ஆண் எனும் இருப்பை சந்தேகப்பட்டேன். உடல் என்பது புணர்தலால் தீர்மானிக்கப்படுகிறது எனில் ஆண் என்பவன் அதில் ஏதுமற்றவன். அவனது குறி என்பது ஒரு அனிச்சை கருவி. அவன் கட்டுப்பாடுகளுக்குள் அதற்கு என்றுமே இடம் இருந்ததில்லை. அவனது விந்து என்பது ஒரு உப பொருள், அதன் பல கோடிக் கணக்கான அணுக்கள் அவனுடையது என்பது பேருக்கு மட்டுமே. அது அவன் செரித்த அனைத்திலிருந்தும் தோண்டத் தோண்ட முளைத்துக் கொண்டே இருக்கும் ஒரு விராட வடிவம். அவனால் தன்னுடைய விந்தொழுக்கை கட்டுப் படுத்த முடியாமையின் விளைவே அவனது புணர்தல். அவனது குறி என்பது ஒரு தனித்த உயிர். அவனில்லாது கூட அதனால் செயல்பட முடியும். 

 நான் பெண் எனும் இருப்பைக் கடக்க முயல்கிறேன். ஏன். ரத்தம் ஒழுக அதிலிருந்து நான் மீள்வதைக் காண்கிறேன். பின் துடிதுடிக்க அதனுள் இறங்கி மறைகிறேன். அது ஒரு பாழ் போல என்னுள் உருவாகியிருந்தது. அதனை ஒரு மாமிசம் உண்ணும் வாய் போல என் கனவுகளில் விதிர்விதிர்த்திருக்கிறேன். ஆனால் அதன் ஈர்ப்பு சகிக்க முடியாமல் மழைக் கால விட்டில் போல அதன் ஜோதியினுள் கரைந்தழிகிறேன். அதனுள் இறங்கிய பின் நான் அது என்ற உணர்வற்றுப் போகிறேன். அங்கு என்னை எப்படி உணர என்ற ஸ்தூலம் கரைந்து அரூபம் ஆகிறேன். ஏன் என் குறியிலிருந்து ரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது. ஏன் நான் அணங்கு ரூபம் கொள்கிறேன். உடல் என்பது புணர்வதால் அறிவதன்று. அது அழிவதால் அறிவது போலும். அவள் என்பவள் என்னுடைய சொந்த சுய வெறுப்புகளின் புள்ளியிலிருந்து தளைக்கிறது. ஆனால் என்னுடைய எண்ணங்களில் நான் யார். அவள் அவன் அது அற்றது என்று ஏதேனும் உண்டா. ஒரு அக்றிணை போல என்னை மாற்றிக் கொள்ள முடியுமா? உண்மையில் நான் அப்படி எண்ணவில்லை. ஒரு பாலற்ற பிறவியாய் ஆவதைப் பற்றி கனவு கண்டு கொண்டிருக்கிறேன். ஆனால் நான் என்பதையோ மறுதலிக்க முடியவில்லை. 

ஒரு பெண்டுலம் போல இரு பால்களுக்கிடையில் நகர்ந்து கொள்கிறேன். அதன் நடு மையத்தில் அமையும் பொழுது பெண்டுலம் துண்டாடுகிறது. நான் தூக்கி வீசப்படுகிறேன். 

வேங்கைக் கானலில் தன்னந்தனியே அவள் நடந்து கொண்டிருந்தாள். நெடுவேள் குன்றத்தின் அருவியிலிருந்து ஆழம் நோக்கி சாடினாள். அவள் தன்னை அம்மணமாக்கி இருந்தாள். அவளது இடது முலையில் குருதி ஒரு மண் தடம் போல பொருக்கோடி உடைந்திருந்தது. முலையறுத்த நொடியைத் திரும்ப நோக்கினாள். தீப்பிழம்பின் உச்சத்தில் உழித்தாண்டவம் ஆடிய காளி, தன் கால்களுக்கடியில் தலையற்ற தன் கணவனின் முண்டத்தை மிதித்து மிதித்து அறைந்தாள். தன் தலையையும் அறுத்து விடவே எண்ணியிருப்பாள். அதன் ரத்தப் பெருக்கைத் தானே அள்ளி குடிக்க வேண்டும். அவனது நொய்ந்த குறியைத் தடவிக் கொடுத்தாள். அது பசித்த தெரு நாய் போன்ற பாவத்துடன் அவளை நோக்கியது. பின் அவனைக் கடித்து உண்டாள். எலும்புகளை மாலையாக்கி சூடிக் கொண்டாள். பின் அவளைப் பின் தொடர்ந்த கருப்பு நிழலைத் துணையாக்கிக் கொண்டு இந்த கானகம் வந்தாள். அது அவனது கணவன் தான். அவன் துணையாகவில்லை. அவளே அவனுக்கு துணையானாள். 

தன் தலை துண்டாகி கூழாகக் கிடக்கையில் அவன் வெம்பிக் கொண்டிருந்தான். ஒரு முறை ஒரே ஒரு முறைக் கூட அவளை நான் புணரவில்லை. அவள் உடலை நான் அறியவே இல்லை. என் அறிதலுக்கு அப்பாற்பட்டு அவள் இருந்தாள். கானல் நீர் போல அவளது உடலை என் அருகாமையில் அறிந்து அதனை அழித்து அழித்து உட்செல்வேன். பின் ஏதுமற்ற வெளியில் கைமைதுனம் செய்து கொண்டு அடங்குவேன். 

நான் அவளாகவும் அவள் நானாகவும் விரும்பினேனா? தெரியவில்லை. பால் எனும் ஒன்றில்லையேல் அதன் அதிகாரம் இல்லையேல் அது சாத்தியப் பட்டிருக்க்குமோ தெரியவில்லை. நான் ஆண் தன்மையுடன் அவளை நோக்கியதில்லை. அவள் அருகிருக்கையில் உள்ளூற பயந்தேன். என் அபத்தங்களின் ஊடுபாவை அவள் அறிவாள். அவளுள் என்னால் நுழைய முடிந்ததே இல்லை. ஆனால் அவள் என்னை ஒரு குழந்தை போல பாவித்தாள். வழிதவறிய ஒரு அப்பாவிக் குழந்தை போல. அது திகட்டும் குமட்டிக் கொண்டு வரும். அவளை வன்மமாக புணர வேண்டும் என்று தோன்றும். அச்சமயங்களில் மதுவும் யாழும் மட்டுமே எனக்கு துணையாக இருந்தது. 

பொறுத்துக் கொள்ள முடியாத பொழுது என் குறியினை அகற்றி விடலாம் என்று தோன்றியதுண்டு. அப்பொழுதெல்லாம் என் துணைக் குறியாய் நான் மாதவியை நினைத்தேன். அவள் ஒரு ஆண். போல என்னை பாவித்தாள். நாங்கள் புணரும் சமயம் உடலற்றுப் போவதை உள்ளூற உணர்ந்தோம். அவள் நான் எனும் இருமை கழன்று நான் அவன் எனும் ஒருமை ஆவதைப் போல ஆவேன். சிறிது நேரம் தான் அதன் பின் அவள் என்னை குழந்தையாக பாவிக்கத் தொடங்குவாள். அப்பொழுது உள்ளூற குரூரம் ஏறும். அவளை அடிப்பேன். அவளை வசைகளைக் கொண்டு நிறைப்பேன். வசைகளையே அவள் உடலாக்குவேன். பின் அந்த உடலைப் புணர்வேன். என் விந்து ஒழுகி நான் இல்லாமல் ஆவது வரைப் புணர்ந்து அங்கேயே மூர்ச்சையற்று விழுவேன். 

ஆனால் சரியாகச் சொல்ல வேண்டுமெனில் என்னிடம் உள்ள இரட்டைதன்மை. ஒரே நேரத்தில் இருபால் உயிரி போல என்னை உணர்வது. நான் கண்ணகியை என்னுடைய ஆண் துணை என்றும் மாதவியை பெண் துணை என்றும் நினைக்கிறேன். அதே நேரம் அது நிலைத்த இருப்புமல்ல. இவர்கள் இருவருக்குள்ளும் தலை கீழாகவும் நடந்திருக்கிறேன். என் உயிர் போகும் சமயம் நான் கண்ணகியை நினைத்தேன். அவள் என்னை காப்பாற்ற வருவாள் என நம்பினேன். அவளது முலை ஒரு நெருப்புக் கோளம் போல மதுரை நகரெங்கும் உருகியோடியது. என் தலையற்ற உடலை அவள் இந்த மலைப் பொத்தையில் தோண்டி எடுத்தாள். என் உடல் நொய்ந்திருந்தது. மொத்த ரத்தமும் வடிந்திருந்ததால் அது ஒரு சவலை போல அவள் கைகளில் ததும்பியது. அவள் என்னை நோக்கினாள். வாரி எடுத்து தன் தொடைகளுக்கிடையில் அதக்கி உள்ளே தள்ளினாள். என்னை ஒரு மலைப்பாம்பு போல விழுங்கினாள். நான் அவளுள் ஒன்றானேன். அவளும் நானும் என்றன்றி ஆம் அதுவே தான் அவள் என்னை அவளுள் இணைத்து அவளின் உடலாகவே ஆக்கி விட்டிருந்தாள். அவள் பாலற்றவள். அவளை வணங்குவோம். 
 
நான் சிந்திய விந்துத் துளிகளுக்கெல்லாம் சேர்த்து தன் ரத்தத்தையும் பாலையும் கொட்டித் தீர்த்த தேவியர்களின் கதைகளைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன். அது என் கதையும் கூடத்தான். 

நான் பாலற்றவன். அதனாலேயே காலங்கள் கடந்தவன். என்னைக் கோவலன் என்றனர். கண்ணகி என்றனர். மாதவி என்றனர். ஆனால் நான் என்னை அது என்றேன். என்னை சமூகம் அற்றவன் என சொல்லிக் கொள்ளத் துடித்தேன். கொய்த என் தலையை ஊருக்கு நடுவே புதைத்திருந்தனர். அதிலிருந்து முளைத்த விருட்சத்தில் பிரதிஷ்டை செய்த ரூபத்தில் எனை லிங்கம் என தற்போது அழைக்கின்றனர்.

 நான் யார்?

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

வானும் மலையும்

மலைப் பாறையினுள் நீர் தேங்கிய பள்ளங்களில் அமைந்திருக்கும் வான நீலத்தை பார்ப்பதைப் போல வானம் தலைகீழாகி இருந்தது. வானத்து இடைவெளிகளில் பூமி நெளிந்து கொண்டிருந்தது. பல்லாயிரம் கேவல்கள் விசும்பை நக்கித் துடிக்கும் பல கோடி சிறகுகள். கோட்டு வெளிச்சமாய் இருளைத் துழாவும் ஒளி. அசைவின்மையை ஒரு கூச்சல் போல சப்தமெழுப்பி காதுகளை அடைத்து பிளிறும் மலை. மலை ஒரு மாபெரும் உடல் போல கிடந்தது. பச்சை அதன் தோலாய்ப் படர்ந்திருந்தது. அதன் உறுப்புகளென மலைக் குன்றுகள் சூழத் தனிமையைக் குடித்துக் கொண்டு இரையெடுக்கும் மிருகம் போல முணங்கிக் கொண்டிருந்தது.

அங்கு காலம் என்பது ஒலியும் ஒலியின்மையும் தன்னைத்தானே பணயம் வைப்பதனால் உருவாகும் பதற்றத்தின் அதிர்வுகள். ஒலி மீள உருவாகும் தோறும் மலை காலம் கடக்கிறது. பின் உறக்கத்திலிருந்து புரண்டு எழும்புகிறது. வெளிச்சமும் இருளுமாய் அது காலத்தை அளக்கிறது, ஒலியின் சுரோணிதம் அதன் பற்பல இடுக்குகளிலிருந்து பொங்கி பள்ளங்களை நிரப்புவதும் பின் வழிந்து வெற்றாவதுமாய் காலம் தன்னைக் கலைத்துப் போட்டு உருமாற்றுகிறது.

ஒரு வானமற்ற இரவில் நட்சத்திரங்கள் உதிர்ந்து மலை முழுதும் வெண்ணிறத் திட்டுகளாய் பதிந்து கிடந்தது. குழந்தை உறங்கி எழும்பும் போது அருகில் தாய் இல்லாமல் போனால் வெறித்து அழுவது போல, மலையின் கேவல் ஒலி, வெண் அருவியாய் சிதறித் தெறித்து வானம் தேடி பூமியை நோக்கி ஓடியது. மண்ணெல்லாம் பரவி விதிர் விதிர்த்து தேடியது. 

இரு எல்லைகளுக்குள் இழுத்து முடுக்கிய கம்பி தன் முயற்சியின்றி அதிர்ந்து கொண்டே இருப்பதைப் போல மண்ணெங்கும் ஆகாசத்தின் அதிர்வலைகள். அவை வானின் பிரதிபலிப்பே அன்றி வானல்ல. வானம் தன் எல்லையற்ற மற்றும் கட்டுப்பாடின்மையை ஒரு மாபெரும் வலை போல சூழ்ந்து கொண்டிருக்கும். அது திசைகளற்றது. காலமுமற்றது. 

ஆனால் வேறு வழியில்லை. மலை தன்னுள் அடங்கி பூமியினுள் கரைந்து கொண்டிருக்கிறது. அதன் மொத்த திரவமும் ஊற்றுகளாய் உடைந்து உப்புப் பறல் போலக் கரைந்து மறையத் தொடங்கியது. வானம் வானம் வானம் என்று அதன் உடைப்பெடுத்த பகுதிகளிலிருந்து நீர்மை பொத்து உதிர்ந்தது.

கரிய இரவினுள் கருமை பூசியது எது. இருளும் ஒளியும் எதனைக் கொண்டு உருவெடுத்தன. கரைந்த மலையின் துகள்கள் தங்களுக்குள் உசாவின. மலை எனும் இருப்பு அற்றுப் போனதும் அதன் எதிரொலிகளால் ஆன கருத்த நிழல் உருவம் பற்றி எரியத் தொடங்கியது. நெருப்பின் நா ஒரு செந்நிற வேங்கை போல எம்பிக் குதித்து ஆடியது.

அந்நா தொட்ட திசைகளிலெல்லாம் இன்மை பரவியது. இன்மை தன்னுள் புசித்த அனைத்தையும் ஒளியிலிருந்து இருளாக்கியது. இருள் பெருங்கடலின் அலை எனக் கரை தொட்டு பின் காலமற்ற வெளியினுள் அமிழ்ந்தது. முன்னும் பின்னுமாய் அது தொட்ட அனைத்திலும் இருள் ஒளி முயங்கிய இரண்டுமற்ற பிரதேசம் உருவாகியது. அதை நீலம் என்றனர். அது தன்னுள் தான் என நிறைந்து பெருகியது. 

பெருகப் பெருக அதுவே பசியாகியது. சூழ்ந்த அனைத்தையும் உண்டுப் பெருத்தது. அதனை விராடம் என்றனர். அனைத்தும் உண்டபின்னும் அடங்கவில்லை.

வானம் என்பது வாய். திசைகளற்ற வாய் என அவர்கள் அறிந்திருந்தனர். உண்ண உண்ணக் குறையாத உணவை பூமியில் விதைக்க அமிர்தம் கடைந்தளித்தனர். உண்டு திளைத்தும் அடங்காப் பசியினை அளிக்கும் பெரும் இச்சையினை இருள் ஆக்கினர். உண்ணும் உணவை ஒளி ஆக்கினர். உண்ணுதல் எனும் செயலே ஒலியும் அதன் இன்மையும் ஆனது.

உண்ண உண்ண வானம் கருவிலிருந்து இருளிலிருந்து துளிர்த்தது. 

உண்ண உண்ண மலை கரைந்தழிந்து மீண்டது.

ஒரு வானமற்ற இரவில் பெய்த மழையில் மலை இன்னும் இன்னும் எனத் தன் தனிமையில் கருமையில் அமிழ்ந்தது.

வானம் தன்னை தலை கீழாக்கி பூமியான பொழுது, நட்சத்திரங்கள் பாளம் பாளமாய் உடைந்திருந்தது. அதன் இடுக்குகளில் நீர்மை மலையின் சுரோணிதப் பாட்டையாய் சுழித்தொடியது.