அவன் முன் மண்டியிடும் பொழுது அது மிக எளிது என்றும். பிரார்த்தனைகள் முடிந்து என் பாவங்கள் என நான் நினைத்துக் கொண்ட அனைத்தையும் அவன் சம்மாட்டில் ஏற்றும் பொழுது அவன் ஒரு பலி என்றும் தோன்றும். ஆனால் ஒரு வினோதக் காதல் அவனை என் காதலியாக்கிக் கொள்ள வேண்டும். ஒரு சோனியாவைப் போல. அப்படி அவனை ஆக்கிக் கொள்ளும் பொழுது திரும்ப எனக்குள் மீள மீள உருவான சொல். பலி. அது நான் பலியாக்கப் படுவது. ஆம். நாமும் அவனைப் போல ஆவது தான் அவனது ஆன்மீகம்.
எப்படி இது சாத்தியப் படும். எங்கும் எதிலும் அதற்கு வாய்ப்பில்லை. ஒரு ஆண் இப்படி இருக்க வாய்ப்பில்லை. உண்மையில் அவன் ஒரு பெண்ணாக இருக்கவே அதிக வாய்ப்பு. ஒரு பரிசுத்தமான வேசி. மனிதனால் சாத்தியப்பட்ட எல்லை அவன். அன்பு எனும் விழுமியத்தை ஒரு தனித்த உயிர் போலவே பாவித்தான். அருகருகே நாம் இருக்கிறோம். பேதங்களற்ற எதிர்பார்ப்புகள் அற்ற அன்பு என்று ஏதேனும் உண்டா என்று தோன்றியது. உண்மையில் இதை விட பாசாங்கான வார்த்தை ஏதும் இருக்க வாய்ப்பில்லை. ஒரு பாவனை விழுமியமாய் ஆகி விட்டது.
மரியத்தை அவன் எப்படி நினைத்திருப்பான். அவனைப் போலவே ஒருத்தனை எந்த பெண்ணுமே விரும்புவாள். நான் அவனை மறுதலித்து கொண்டே இருக்க வேண்டி இருக்கிறது. நடுப் பாலைவனத்தில் தன்னந்தனியே அவன் அமர்ந்திருக்கிறான். சூழ்ந்திருக்கும் இரவின் கார்வை ஒரு புகை போல அவனை இழுத்துப் போர்த்தியது. பதற்றத்துடன் அவன் வெளியை நோக்கினான். முழு நிலவு ஒரு செந்நிறக் ோளையாய் வழிந்தது கரிய வானில். அவன் தன் நம்பிக்கைகள் அனைத்தையும் அடகு வைத்திருந்தான். அங்கு மரியம் வந்தாள். அவனை ஒரு பிள்ளை போல மடியில் ஏந்தினாள். தன் முலைகளை அவன் வாயில் பிதுக்கினாள். வருடிக் கொடுத்தாள். அவனை ஒரு கருவி போல ஏந்திக் கொண்டு இயங்கினாள். இரவு அணையாது ஒரு கடல் வாழ் உயிரினம் போல பாலை வெளியில் மிதந்து கொண்டிருந்தது. விழித்த பொழுது தன் தொடை ஈரமாகி இருந்தது. பாலையின் காற்று ஒரு கனத்த திரவம் போல அவன் தொண்டையில் மெல்ல இறங்கியது. தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான். அன்பு என்று.
அவன் நமக்கு அளிப்பதும் அதுதான். அவனது அற்புதங்கள் அதன் மூலமே சாத்தியப்படிருக்கும். அதற்கு வேறு வழிகள் இல்லை. நீ வா என அவன் லாசரசை அழைத்து தன் கைகளை நீட்டிய பொழுது அவனிடம் எந்த தயக்கமும் இல்லை. அவன் அவ்வளவு நம்பினான். தன் நம்பிக்கைகள் தன்னை விட வலிமையானது என்பதை அவன் மிக நம்பிக்கையுடன் உணர்ந்தான்.
ஆனால் ஆனால் அது தவிடு பொடியாகும் பொழுதும் அவன் நம்பினான். ஆம் அதனாலேயே அவன் தேவன். நாமும் அவனைப் போலவே என்று அவன் நமக்கு அனைத்தையும் கையளித்தான். தன்னை பலியாக்கும் பொழுது முன் நிற்கும் அனைவரையும் பலிகளாக உணரச் செய்தான். அதனாலேயே கல்லெறி பட்டான். அவனது தோல் செதில் செதிலாய்க் கிழிந்து ரத்தம் நிலம் முழுதும் சிதறிப் பெருகியது. அது நிலத்தில் உள்ள ஒவ்வோர் உயிருக்குமான ரத்தமாய் ஆகியது. அவன் ரத்தம் வடிந்து வெளிறி சவமாய் ஆகும் வரை நிலம் காத்திருந்தது. பின் அது அவனாகவே திரும்ப அளிக்கப்பட்டது. ஆம் அவன் மண்ணாலானவன்.
திரும்ப நான் எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன். இவ்வளவு நல்ல தன்மை என்பது மனிதத்திற்கு அப்பாற்பட்டது. அவனிடம் என் பிரார்த்தனைகளை சொல்லிக் கதறும் பொழுது அவன் ஒரு தேவனாக எனக்கு ஆறுதல் சொல்வான். பின் என்னருகே அமர்ந்து என் கைகளைப் பிடித்து என்னைப் போலவே கதறி அழுவான்.
உண்மையில் அவன் ஒரு ஆடி. நம்மை நாமே காணும் பொழுது நமக்கு கொம்பு முளைப்பதை அவன் அறிவான். அவன் நம்மிடம் திரும்பத் திரும்ப இதை சொல்லிக் கொண்டே இருப்பான்.
"நான் சாந்தமும்
மனத் தாழ்மையுமாக இருக்கிறேன்.
அதனால் என் சிலுவையை உன் தோள் மேல் ஏற்றுக் கொண்டு என்னிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்.
அப்போது நீங்கள் ஜெபிப்பீர்கள்"
அவனது மூன்றாவது நாளில் ஒரு பித்தன் போல அவன் நம்மை நோக்கி சொல்லிக் கொண்டே இருந்தான். நாம் கற்களை நம் இடுப்பில் மறைவாய் செருகி வைத்திருப்பதை பார்த்த பிறகும்.