புதன், 14 ஆகஸ்ட், 2019

உன் சமூகம் எனக்கு முன்பாகச் செல்லும்

ஒவ்வொரு முறை அவனை நினைக்கும் பொழுதும் இதைத் தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

அப்பா ஏன் அப்படி அவனை வைத்திருந்தார் என்று.

அவனை எப்பொழுதும் கடவுள் ஸ்தானத்தில் இருந்து அவர் இறக்கியதே இல்லை. ஆனால் அதனாலேயே அவனை என்னால் இன்னும் அதிகமாக புரிந்து கொள்ள முடிந்தது. அவன் என்றைக்குமே அதை விரும்பியிருக்க வாய்ப்பில்லையோ என்ற அய்யப்பாடும் உண்டு என்னிடம். அவன் உண்மையில் கடவுளாக விரும்பினான் என்றே நான் நினைக்கிறேன். அவன் மனிதனாக வாழவும் நினைத்தது தான் மிகத் தவறாகி விட்டது.

அப்பா ஏன் அப்படி எழுதி இருந்தார் என்று அப்பொழுது தான் புரிந்தது. அவரும் அதைத் தான் அவனிடம் எதிர்பார்த்திருந்தார். அவரது டைரியில் இந்த வசனம் எப்பொழுதும் இருக்கும்.

"என் சமூகம் உனக்கு முன்பாகவே செல்லும்"

இது கொஞ்சம் விட்டேத்தி தனமாக இருந்தாலும் இது அப்பாக்கும் தான் என்று தோன்றியது. அவனும் இந்த வசனத்தை தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டிருந்திருப்பான். ஏனென்றால் அவனது நம்பிக்கைகள் தவிடு பொடியாகிக் கொண்டிருக்கும் பொழுது அவன் அதனை ஒரு ஜபம் போல சொல்லிக் கொண்டிருக்கக் கூடும்.

இன்னொன்று
"மாட்டுத் தொழுவத்தில் பிறந்தாலும் மன்னரின் மணிமுடிகள் அவனது காலடியில் கிடந்தது"

இது அப்பாவின் வசனம். இது அப்பா தனக்காக எழுதிக் கொண்டது. அதனால் இதில் அவனின் பங்கு என்று ஒன்றுமில்லை. ஆனால் அவனும் அப்படித்தான் நினைத்திருப்பான், அதற்காகவே அப்பாவின் ஒரே தெய்வமாக அவன் இருந்திருக்கவும் கூடும்.

அவன் ஏன் சிலுவையில் கிடந்தான் என்று தோன்றும் பொழுது இந்த வசனம் தான் மனப்பாடம் போல என்னுள் உருண்டு கொண்டு வெளி வரும்.

"நீ எதைக் கொண்டு அளக்கிறாயோ அதைக் கொண்டே நீயும் அளக்கப்படுவாய்"

திடுக்கிட்டு எழுந்து அமர்ந்த பொழுது அப்பா நடந்ததை மிக விளக்கமாக என்னிடம் சொன்னார்.

அவன் இறக்கவே இல்லையாம். அது எல்லாம் சித்து விளையாட்டாம். Passion of christ படத்தை போட்டுக் காண்பித்து. பார் பார் என்று அங்கலாய்த்தார். எனக்கு விளங்கவில்லை. அப்பா ஒரு நூறு முறை இந்த படத்தை பார்திருக்கக் கூடும். ரத்த விளாறாய் அவன் கிடக்கும் பொழுது அப்பா மிக மும்முரமாய் ஜபம் சொல்லிக் கொள்வதை நான் அருகிருந்து பார்த்திருக்கிறேன். அப்பா யாருக்காகவும் எதற்காகவும் வேண்டிக் கொண்டதில்லை. அவரது வேண்டுதல்கள் எல்லாம் அவனைப் பற்றி மட்டுமே. அப்பா கனவு கண்டு கொண்டிருந்தார் அவன் தேவ மைந்தன் தேவ மைந்தன் என்று சதா சொல்லிக் கொண்டிருப்பார்.

ஆனால் ஒரு சள்ளைத்தனம் வேண்டுமென்றே செய்தேன். கலீல் கிப்ரானை அப்பாக்கு அறிமுகப் படுத்தினேன். அவர் முதலில் நம்பவில்லை. பின் அந்த ஏழு முறை அறையப்பட்டதை நினைத்து நினைத்து அப்பா என் மீது மிக இரங்கலானார். ஏன் இப்படி அவன் இருக்கிறான். ஏன் அவன் மேரியிடம் பேசவே இல்லை என்று மன்றாடினார்.

அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று நினைத்து நான் அவரிடமே உண்மையை போட்டு உடைத்து விட்டேன். அது பௌர்ணமி தினமாக இருந்தது. இரவு முழுதும் தன்னந்தனியே குடித்துக் கொண்டே இருந்தார். அப்பா அப்படி இருந்து நான் பார்த்ததே இல்லை. அவர் ஜபிக்கவும் இல்லை என்பதை அறிந்தவுடன் நான் பயம் கொள்ள ஆரம்பித்தேன்.

நான் அதை சொல்லியிருக்கக் கூடாது தான்.

அதில் ஒரு தீர்வு இருந்தது போல தோன்றியது எனக்கு. அவன் இறந்து விட்டான் என சொல்லும் பொழுது இன்னும் ஆசுவாசமாக் இருந்தது. ஆனால் அப்பா அதை முழுக்க நம்பியே விட்டார். ஒரு வேளை அப்பா அப்படி நான் என்றேனும் சொல்வேன் என்று எதிர்பார்த்திருந்தாரோ என்னவோ.

ஆனால் அடுத்த ஞாயிற்றுக் கிழமை ஜபத்தில் அப்பா உருகிக் கொண்டிருந்தார். இரண்டு மணி நேரங்கள் கிட்டத்தட்ட முட்டிப் போட்ட படியே இருந்தார். பின் பாவமன்னிப்பு கூடத்தில் கலந்து கொண்டு அழுது கொண்டே வெளியே வந்தார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் அந்த வசனத்தை ஒரு முறை எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டிருந்தேன்.

அப்பா மெல்ல என் அருகே வந்து என் தோள்களைப் பற்றிய படியே கேட்டார். அந்த மூன்றாம் தினம் என்று என்று. நான் வெறுமனே அவரது கண்களைப் பார்த்தேன். அவர் நேற்று முழுதும் குடித்திருந்தார். அவரால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவர் ஏன் அதை எதிர்பார்த்தார். இல்லை அதனை சாக்காக கொண்டு இப்படி ஆகி விட்டாரா என்று எனக்கும் புரியவில்லை.

நான் அந்த டைரியின் முதல் வசனத்தை இப்பொழுது சொல்லிக் கொண்டேன். ஆம் .அது அப்படித்தான் நடந்து விட்டது போல.

அன்று இரவு என்னை அருகே அழைத்து கட்டிப் பிடித்துக் கொண்டு முத்தம் கொடுத்தார். நான் செய்வதறியாமல் திகைத்து பின் வெறுமனே சிரித்தேன். அவரது கண்களை உண்மையில் பார்ப்பதை தவிர்த்தேன்.

அப்பா என்னிடம் இப்படி கேட்டார்.

அவன் ஏன் இப்படி என்னிடம் நடந்து கொள்கிறான்.

நேற்று நம் வயல் வெளியைத் தாண்டிய கோயிலிலில் தன்னந்தனியே அவன் மட்டும் தொங்கிக் கொண்டிருந்தான். யாருமே இல்லை. துணைக்கிருந்தவர்கள் என்று நான் நினைத்த யாருமே ஏன் மேரி கூட அங்கு இல்லை. அவன் செத்துக் கிடந்தானா என்று நினைத்து அருகே சென்றேன். இன்னும் உயிர் இருந்தது. ஆனால அவன் என்னிடம் இவ்வாறாக சொன்னான். என்னால் நம்ப முடியவில்லை. ஆனால் நான் நம்பினேன்.

அதனால் தான் கேட்கிறேன். அவந் ஏன் என்னிடம் அவ்வாறு நடந்து கொண்டான். உனக்கு ஏதேனும் புரிகிறதா?

அவன் தன்னை இறந்தவன் என்றான். தான் காலாவதி ஆகி வெகு நாட்கள் ஆகிறது என்றும். இன்று உன்னிடம் பேசுவது உண்மையில் என் பழைய இருப்பிலிருந்து மிச்சம் வந்த சின்னஞ்சிறிய எச்சம் என்றும். அன்று மேரி என்னிடம் தோற்றுப் போனவன் நீ என்று சொல்லி சென்றாள் என்றும். என் அன்னை என்னைப் பார்த்து விட்டு, காறி உமிழ்ந்தாள் என்றும் நான் அதைப் பார்த்து விட்டே அந்த வசனத்தை திரும்பவும் நினைத்துக் கொண்டேன் என்றும் சொல்லிக் கொண்டான். உண்மையில் அவன் தனக்குள்ளேயே இதை சொல்ல நினைத்திருந்தான். என்னிடம் சொல்லும் பொழுதும் என் முகத்தை அவன் பார்க்கவே இல்லை. அவன் திரும்ப பள்ளி முழுதும் அதிர சத்தமாக கூவினான்.

"உன் சமூகம் எனக்கு முன்பாகச் செல்லும்"

அப்பாவிடம் நான் இவ்வறு சொன்னேன். அவன் உன்னை ஏமாற்ற நினைக்கிறான். அவனிடம் உன் பிரார்த்தனைகளை சொல்லிப் பார். ஒரு வேளை அவன் இதையே வேறு மாதிரி உன்னிடம் சொல்லக் கூடும்.

" பாவப்பட்டவர்களுக்கே சொர்க்க ராஜ்ஜியம்" என்று உன்னிடம் அவன் சொல்லக் கூடும்.


ஆம். அதுவும் ஒரு முறை நடந்தது. அது அப்பா தன் கழிவறை ஜபத்தில் இருக்கும் பொழுது. முக்கிக் கொண்டே அவர் அதை நினைத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அவருக்கே தோன்றியது.

உண்மையில் அந்த மூன்றாவது நாளில் என்ன நடந்திருக்கும் என்று அப்பொழுது தான் எனக்கு புரிந்திருந்தது.



திங்கள், 12 ஆகஸ்ட், 2019

அபி கவிதைகள் பற்றி

"இங்கே படரும் இருளைச்
சிறிது சுண்டினால் கூட
என் மலை எனக்கு பதில் சைகை தரும்"

"என்னைச் சுற்றி நிரம்பும் காட்டுக் களிப்பு"

என் வாசற் படிகளிலிருந்து நகர்ந்து கொண்டிருந்தேன். பிறிதொரு நாளில் நோக்கிக் கொண்டிருக்கும் பொழுது திட திரவமற்றிருந்தேன். ஒளியும் இருளுமற்றிருந்தேன். கால்களுக்கடியில் குழைவாய் என் நிலம். சுற்றிலும் உயிர்த்துடிப்புகளின் அமைதி. சலனங்களிற்குள் புகுந்து துளிகளாய் உருமாறிக் கொண்டிருந்தேன். தவிரவும் இன்றிலிருந்து மட்டுமே முளைக்கும் தாவரங்களின் வேர்களைத் தொற்றிக் கொண்டு எனக்கான பசியினை ஆற்றிக் கொள்ள விளைகிறது. ஆம். மொழி அதன் அர்த்தப்பாடுகளை இழந்து விட்டிருந்தது. பொருள்கள் அதன் ஸ்தூல இருப்பினை களைந்து விட்டிருந்தது. என்னிடம் பகிர்ந்து கொள்ள ஏதுமே இல்லாத பொழுது வெறுமனே வாசற் படிகளில் வந்திருக்கிறேன். என் இருப்பு புகையாய் ஆகியது. எல்லாவற்றிலும் நான் ஆகியது. எல்லாமுமே நான் இன்றி ஆனது. ஊளையிடும் வானத்திலிருந்து இறங்கி வந்தது எனக்கான மேய்ச்சல் நிலம். தள்ளாடி தள்ளாடி உருள்கிறது மொழி. முயற்சியின்றியும் அமைதியின்றியும் அலைவுற்றுத் திரிந்து கொண்டிருந்த காலம், மிகப் பெரிய தடாகம் போல மையத்திலிருந்து விளிம்பை தன் முடிவற்ற அலைகளினால் விழுங்க விழுங்க, நிலங்கள் புரண்டு படுக்கத் தொடங்கின.

"அறிந்தவைகளின் மறுபுறங்கள் திரண்டு
மின்னி இழுத்து
வெறியோடு வருகின்றன
அல்ல அல்ல அல்ல என்று
பொழிந்து பிரவகிக்க
அழித்துத் துடைத்து எக்களிக்க
வருவது தெரிகிறது"

எடையிழந்திருந்தது அனைத்து சூழலும். பலூன்கள் போல ஆகியிருந்தது உண்மையில். சில சமயங்களில் தழல் போலவே பற்றிக் கொண்டது. அப்பொழுது எதனுடனும் இணைந்து கொள்கிறேன்.அவைகளும் என்னைப் போலவே உருமாறும் வரை விடுவதாய் இல்லை. சரியாக சொல்ல வேண்டுமெனில் வாசல்களிலும் ஜன்னல்களிலும் ஊடுருவிக் கொண்டிருக்கும் வெளி ஒன்றிலிருந்து அந்த எடையின்மை நீரினைப் போல வழிந்து நிறைந்தது. அப்பொழுது ஒன்றினுள் ஒன்றன் மேலாய் ஒன்றை ஏற்றிக் கொண்டு பிறிதொன்றாய் அதை ஆக்கி வைத்திருப்பேன். அந்தி மட்டுமே அதற்கு ஏதுவாயும் இருந்தது. அதன் பதுங்கு குழிகளுக்குள் காலாதீதமாய் சாம்பல் வண்ணம் நிறைந்து கிடந்தது. மற்ற நிறங்களுக்கில்லாத வசீகரம் இந்த நிறத்தில். இது எதுவுமில்லாத எதனையும் ஏற்றிக் கொள்கின்ற நிறம் போல. அந்தி அதன் எல்லையின்மையைத் தொட்டு உசுப்பி விடுகிறது. அதன் நிறம் பழுத்து இருளாகிறது. அங்கு கோடுகள் அதன் மஞ்சள் வண்ணத்தை அழித்துக் கொண்டே இருக்க ஊர்கள் ஊராகிக் கொண்டே இருப்பது. ஒரு பூரணமான தொடர் நிகழ்வு.

"பொழுதின் நினைவும்
நினைவின் பொழுதும்
இடைச்சுவர் தகர்ந்து
ஒன்றினுள் ஒன்றாகி
ஊர் ஆகின்றன"

ஊர் தன் மிகச்சிறிய புள்ளியில்"

வெளிச்சமும் இருளும். இந்த முரணிலிருந்து இது இரண்டும் முயங்கி விட்டிருந்த ஒன்றை அடைய எத்தனிப்பதே பிரயாசை. நடமாட்டங்களில்லாத தெருக்களில், கவிந்த நிழல் பரப்புகளில், நிதானமாய் கிளை பரப்பிக் கொண்டிருக்கும் வேர்களில், திட திரவமற்ற இருப்பாய் வியாபித்து உயர்ந்து நிற்கும் மலைகளில், கால்களுக்கடியில் பதுங்கிக் கொள்ள விளையும் தன்னிருப்புகளில், அலைந்து கொண்டே இருக்கும் எண்ணங்களின் நினைவுகளில், பால்யம் தீற்றி விடுபட்டிருந்த அறைகளுக்குள் மெல்லக் கவிந்து உருக்கொள்ளும் ஞாபகங்களினுள் திடூமென முரணற்ற ஒன்றைக் கண்டு திகைத்து உள் திரும்பிக் கொள்வதுமாய் பித்து பிடித்துக் கொண்டிருந்தது மொழி வழி.

"கனவு அன்று எனத் தோன்றினாலும்
கனவாகவே இருக்கலாம்"