வெள்ளி, 24 மே, 2019

மாக்தலேனா

நான் தனியனாகவே சென்று கொண்டிருந்தேன். முன்னும் பின்னும் மனிதர்கள் இருந்தார்களா? நிச்சயமாக சொல்லத் தெரியவில்லை. சைப்ரஸ் மரங்களுக்கிடையிலிருந்து ஒளி மென் படலம் போல என்னைச் சுற்றிப் படர்ந்து கொண்டிருந்தது. எப்பொழுதும் என்னுடனான அழைக்கழிப்பின் எண்ணங்கள் அந்தகாரத்தில் மிதந்து மிதந்து சொற்களாக திரண்டு ஓயாது மந்திரம் போல என் செவிகளுக்குள் ரீங்காரமிட்டது. ஆம். நான் ஓயாது உச்சரித்துக் கொண்டிருந்ததும் அதைத்தான்.
என்னை மன்னித்து விடு!

ஒரு தனித்த கார்வை, மெல்ல கமகங்கள் சுழலத் தொடங்கியது. மேகங்கள் இரவிற்குள்ளிருந்து முனகியது. பல்லாயிரம் கண்களுடன் வானம் நோக்கிக் கொண்டிருந்தது. நீர்க்குமிழிகள் முழுகியிடுவது போல, இருள் சலனமிட்டு அதிர அதிர மேய்ப்பனின் குழல் ஓசை மூட்டமாய் சூழ்ந்து மாமழை போல நனைக்கத் தொடங்கியது. வண்ணங்கள் இடம் பெயர்ந்தன. தனிமையே தன்னைத் தான் என பல்லாயிரம் ஓசைகளால் அனைத்திலும் தொட்டுப் படர்ந்து மறைந்தது. எங்கும் நனைதலே அன்றி ஒன்றுமே இல்லாமலாகியது. தன் இருப்பின் ஒரு பகுதியிலிருந்து அவன் அனைத்தையும் நோக்கினான். குழலை இரண்டாய் மூன்றாய் சுக்கு நூறாய் உடைத்தான்.  கண்ணியிழந்த ஒலிச்சங்கிலிகள், சில்லுகளாய் நொறுங்கிக் கொண்டே இருந்தது. காலமற்ற பெரு வெளியினுள் கடைசியாய் சொட்டிய மழை நீரின் துளி பொதிந்த ஒற்றை விதையை மட்டும் அவன் தன் உள்ளங்கைகளுக்குள் பொத்திக் கொண்டு அழுது கொண்டே சொன்னான்.
என்னை மன்னித்து விடு!

விதிர்த்தெழுந்த பொழுது அதே சொல், அதே குரல், அவிழ்க்கவே முடியாத முகக் கவசம் போல.

சொர்க்கத்திற்கு செல்லும் கதவு, வெண்மையும் கருமையும் இரண்டறக் கலந்த சர்ப்பங்கள் வாயிற் காவலில் நின்று கொண்டிருந்தது.

உன்னால் உடலை இழக்க முடியுமெனில் வா இங்கு.

உன்னால் மாமிசத்தை தின்ன முடியுமெனில் வா இங்கு.

உன்னால் இரவை விழுங்கி விட முடியுமேனில் வா இங்கு

உன்னால் சாவை மறுதலிக்க முடியுமெனில் வா இங்கு.

நீ வாதையை அருந்துவாய். அதன் பொருட்டு நீ என்னிடம் வருகிறாய்.

எப்பொழுதும் என்னிடம் இருந்து கிடைக்கப் பெறா மன்னிப்பை நீ வேண்டுகிறாய்.

என் உடலினை தாண்டி செல்ல உன்னால் முடிந்தால், என் யோனியினுள் முகம் புதை. என் முலைகளுக்குள் நீ அதை பெற வாய்ப்புண்டு.

ஆனால் நீ உடல் மட்டுமே ஆனவன். என் அறையினுள் கால்கள் கட்டுண்டு ஊறும் முள் ஓணானுக்கும் உணக்கும் என்ன பெரிய வித்தியாசம் கண்டு விட்டாய்.

பார். உனக்கு முன்னும் பின்னும் மனிதர்கள் உள்ளனர். அவர்கள் உடலிலிருந்தே நீ அந்த இசையினை அறிந்தாய். அது துண்டு துண்டாய் உடைந்த பிறகும், அதன் அதிர்வுகளினால் என்னுள் அவர்களை நிறைக்கிறேன்.

நீ அவர்களில் ஒருவன் அல்ல. உனக்கு என் உடல் வேண்டாம். உன் உடல் வேண்டாம்.

ஆம். நீ மரணத்தை மறுதலிக்க விரும்புகிறாய். ஆனால் நீ மனிதன். எளிய மனிதன்.

போ. என் கூடாரத்தில் உனக்கு இடமில்லை.

அவன் உள்ளங்கைகளுக்குள் துடித்துக் கொண்டிருந்தது சொல் எனும் விதை.

என்னை மன்னித்து விடு.

நான் மண்ணாலனவள். மண்ணின் மூலமே அனைத்தையும் அறிகிறேன். நீ என்னை அறிய வேண்டுமானால் உடல் கொண்டு வா. மண். மண்ணால் மட்டுமே நான் ஆணை அறிவேன். என்னில் முழுதும் பிசுபிசுத்து நொதித்துக் கொண்டிருப்பது மண் மட்டுமே.

என் தவறுதான். என்னை மன்னித்து விடேன்.

நீயும் உன் கடவுளையும் தூக்கிக் கொண்டு செல் கோழையே. நீ என்னிடம் ஏதனை எதிர் பார்க்கிறாய். உன்னால் என் உதடுகள் பொருத்தி முத்தமிட முடியுமா?

உன்னை உன் மன்னிப்பினால் கடைத்தேற்ற முயல்கிறேன் நான்.
ஆம் உன் கடவுளர்கள் இதற்கு முன் இதே அறையில் தான் என்னுடன் பொருந்திக் கொண்டிருந்தனர். உனக்கு தெரியுமா நீ உன் சதையை தூக்கிக் கொண்டு திரிகிறாய். உன் கடவுள் உன்னிடம் ஏழு சாத்தான்களைப் பற்றி சொல்லிக் கொண்டு என் கூடாரத்தில் கால் கடுக்க நின்று கொண்டிருப்பதை நான் தினமும் தான் காண்கிறேன்.

இல்லை. இல்லை. அது ஏழு புண்கள். காயங்கள்.

இத்தனை பேர் என்னைப் புணர்ந்து கொண்டிருந்தனர். என் நிர்வாணத்தின் ஒவ்வொரு சதை அசைவையும் நீ பார்த்துக் கொண்டிருந்தாய். உன்னால் என்னைக் கடந்து விட முடியும் இந்த மண்ணைக் கடந்து விட முடியும் என்று நினைக்கிறாயா.

உன்னை என் கடவுளின் பெயரால், நான் அழைத்து செல்வேன் மேரி.

பெண்ணை பயக்கிறாயே. பெற்றாள்  மகள். நித்தியத்தில் அன்னை. ஆனால் உன்னைப் போல பேடிக்கல்ல.

நீ என்னை கடைத்தேற்றுவாய் என்றால் புணர். என் உடலுடன் இணைந்து கொள். என் பிள்ளைகளை கொடு. ஒரு மனிதனாய் ஆணாய் என்னைக் கூட்டிச் செல்.
இல்லையேல் விட்டொழி. கடைசி வரை இத்தனை பேர் என்னுடன் புணர்ந்து கொண்டிருந்ததை தனியனாய் பார்த்துக் கொண்டிருந்ததாயே. உன் கடவுளின் பெயரால் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறாய் கோழையே.

நான் ஒரு சுயநலமி மேரி. என்னை மன்னித்து விட்டேன் என்று சொல்.

இல்லை அய்யா. உனக்கு தர என்னிடம் ஒன்றுமே இல்லை. என் உடலைத் தவிர.

நான் செல்ல வேண்டும் மேரி.

செல். உன் எல்லைகளின் தூரம் வரை செல் துறவியே. என் பொருட்டு உன்னிடம் ஒன்றுமில்லை.

கனத்த குரலில் வெளியை நோக்கி இறைஞ்சினாள். வேறு யாரும் ஆண் மகன் உள்ளேர்களா.

நடுநடுங்கும் விரல்களினால் அவளின் காலைப் பற்றினான் தச்சன் மகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக