வெண் பழுப்பு நிற ஊற்று பொழிந்த வான். வான் நிறைக்கத் துளிர்த்த ஜோதி. நீ எனும் வடிவம் அடங்கா உருவம். உன் வடிவம் என்பது நிலையற்றது. நொடிகளின் கணத்தில் அலையாடுவது. முகம் வழியும் மஞ்சள் ஜ்வாலை. ஜ்வாலாமுகி. அந்த நிலையின்மையில் குத்திடுகிறேன்.
அழிவற்றது தீ. அழிப்பது தீ. அவிந்த பின்னான மலட்டு
மலையில் அவியாமல் எஞ்சியிருக்கும் கங்குகளைச் சுற்றிய கரி. கீழும் மேலுமான கரி வானம். நீ இந்த இரவாய் இருந்தாய். உன் பிழம்பில் பொலியும் உருவாய் இருந்தேன். உருவற்ற இவ்விரவின் மழை எரி மழை. நாம் நனைந்த மழையின் நனவில் தூங்கச் செல்கிறேன்.
வாசலில் எண்ணெய் வடிந்து திரி கரிந்த அகல் விளக்கின் நுனியைத் தொடுகிறேன். பழுப்பு நிற மழை வாசல் நனைத்து சொட்டிக் கொண்டிருந்தது. தூரத்து சொக்கப்பனை அணையாது அனல் தெறிக்க எரிந்து விழுந்தது. வழியெங்கும் சிதறிக் கிடந்தன நாகலிங்கப் பூக்கள்.
தன் அவிக்காக காத்திருக்கத் தொடங்கியது மலட்டு மலை அடுத்த கார்த்திகைக்காக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக