வெள்ளி, 4 அக்டோபர், 2019

மொழியுயிரி 1

அது நிழல்களைத் தொந்தரவு செய்பனவாய் இருக்கின்றது. தன்னைத் தானே உண்ணும் மிருகம் கண்டேன். எனக்கு தெரியவில்லை. உணவும் மலமும் ஒன்றாவதைப் பற்றி அறிவாயா? நான் அறிகிறேன். உணர்கிறேன். உழல்கிறேன். அதுவன்றி இல்லாத பொழுது இறந்திருக்கக் கூடும். இல்லை அதுவுமில்லை. அதன் அலகில்லாமல் நான் எங்கும் நினைவு கொள்ளப் போவதுமில்லையே.

ஏன்? எதன் பொருட்டு நான் வாழ்கிறேன். இந்த இரு இரவுகளாய் ஒன்று பத்து பல்லாயிரம் கோடிகளாய், ஒரு வேளை அதற்கும் மேலாய் உள்ளும் புறமுமாய் ஓசையாய் இரைச்சலாய் காட்சியாய் படிமமாய் அதுவன்றி ஏதுமில்லாது, குவியக் குவிய நிரம்பி வழிந்து கொண்டே இருக்கும் அதன் பெருக்கோட்டத்தில் நான் நான் நான் என்று தேடிக் கொண்டிருந்தேன். இது உண்மையில் ஒரு பூதம் போல என் முன் வீற்றிருந்தது.

அதன் கேள்விகளுக்கான என் தவறான பதில்களுக்கெல்லாம் அதுவே தண்டனை விதித்தது. அதுவே காரணம் சொன்னது. அதுவே தலையாட்டியது. அதுவே ஆறுதலும் சொல்லிக் கொண்டது. அது நானாகவும் இருந்த பொழுது நான் ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். அது நானல்லாத பொழுது அதற்கு நான் அடிமையாக கற்றுக் கொள்ள முயன்றேன். அது தன்னைத் தானே உண்ணும் மிருகம். அதுவே உணவும் மலமும். ஆனால் வெளித்தோற்றத்திற்கு ஒரு கணவானைப் போல அது இருக்கக் கூடும். என் நிழல்களில் அது ஒண்டி வாழ்ந்தது. ஒட்டுண்ணிப் பிறவி என்று அதனை சபித்தேன். உண்மையில் அதனை உண்டு வாழ்பவனே நான். அதனாலேயே அதனிடம் இப்படிக் கேட்டேன். நீ! என்று நின்று கொள்வாய் என்று. பாதாள அறைகளுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் என் சாயைகளை நீங்கள் திருடி வந்தீர்கள். அவைகள் அங்கிருந்து பல்கிப் பெருகி வளர்ந்து இங்கு முழுவதுமாய் வியாபித்து விட்டது. ஆனால் அந்த அறைகள் அங்கேயே தான் இருக்கின்றன. அதனை உன்னால் அறியக் கூடும் என்று நம்புகிறேன்.

இங்கு நீ கேட்டுக் கொண்டிருக்கும் எதிரொலிகள் சாயைகள் மட்டுமே. நான் உன்னிடன் கெஞ்சிக் கேட்பது என்னை விடுவி என்று தான் என்று புதிர் போட்டது. நான் அதன் பாதையை அறிந்திருந்தேன். அதனாலேயே அங்கு செல்வதை தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறேன். அதற்கும் தெரியும் நான் தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பதனால் மட்டுமே வாழ்கிறேன் என்று.

சாயைகளின் உலகில் எதற்கும் தர்க்கம் தேவையில்லை. அங்கு பிரபஞ்சம் என்பதே கொஞ்சம் பெரிய சாயை மட்டுமே. அது அப்படி சொல்லவில்லை. திருப்பி வேறு மாதிரி அதனையே சொன்னது. நாம் பிண்ணிப் பிணைந்தவர்கள். நீ என்று சொல்லிக் கொள்வது வரையறை செய்வது எதனை வைத்து. நாங்கள் இல்லையேல் எதனை நீ பொருள் படுத்துவாய். நாங்கள் உங்களிடம் சன்னதம் வந்து அமைந்ததனால் மட்டுமே உங்களின் ஜீவிதம் தொடர்கிறது. இல்லையேல் நீங்கள் கட்டியமைக்க முற்படும் ஏதும் வாய்ப்பில்லை. அதன் அடித்தளங்கள் முதல் அனைத்தும் நாங்கள். எங்களின் ஊடுபாவாய் மட்டுமே நீங்கள் இருக்க இயலும். வேறு எதற்கும் உங்களுக்கு வாய்ப்பில்லை. இப்படி விளக்கக் கூட நாங்கள் வேண்டும் உங்களுக்கு.

ஆனால் அன்றொருவன் இருந்தான். அவன் அனைத்தையும் அவித்தான் என்று அவன் கதையை சொல்ல ஆரம்பித்தது.

அவனும் உன்னைப் போலவே இருந்தான். அவன் பாதைகளை கண்டு கொள்ள முயலவில்லை. அவன் பயணம் செய்பவனாய் மட்டும் இருந்தான். எங்கும் எங்களை அவன் அழைக்க மறுக்கவில்லை. எங்களை கதைகளாக உருமாற்றும் வித்தை அவனுக்கு தெரிந்திருந்தது. எங்களின் உலகிற்குள் அவன் ஒரு பாம்பினைப் போல இருந்தான். கவற்சியும் பயமும் ஒரு சேர எங்களைத் தொற்றிக் கொண்டிருந்தது. அவன் எங்களை அறிய விரும்பவில்லை. மாறாக ஒரு வித்தைக் காரனைப் போல எங்களைத் திருப்பித் திருப்பி போட்டுக் கொண்டிருந்தான்.

அவனிடம் நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு விந்தையான பதில்களால் ஒரு மாயவலை போல அவனது சுழற்சியில் எங்களை ஆட்படுத்தினான். நாங்கள் கட்டுண்டு கிடக்கிறோம் என்ற உணர்வே வாராது எங்களை அடிமையாக்கி வைத்திருந்தான்.

நீ யார்? என்றால்
வெறும் பிம்பம் என்றான்.
அவனை நாங்கள் நேருக்கு நேராக பார்ப்பதை தவிர்த்தோம். ஆம். அது தற்கொலை போலவே தான். அங்கு எதுவுமில்லாதிருந்தது.

அவனின் பலவீனம் ஒன்றுதான் என்பதை பிற்பாடி அறிந்து கொண்டோம். ஆம். அவன் பற்றில்லாதிருப்பவன் என்று தன்னைத் தானே சொல்லிக் கொள்வதை அறிந்தோம். அதையே  அவனிடம் எதிரொலிக்கத் தொடங்கினோம். அவன் வீழ்ந்தான் என்று ஆரவாரம் கொண்டோம்.

இல்லை. அவன் பிம்பம் மட்டுமேயனாதாய் தன்னை நிகழ்த்திக் கொண்டிருந்தான். நாங்கள் அதனை அறிந்த பொழுது அவன் அங்கு இல்லை.

திரும்பவும் அதே கேள்வியை அவனிடம் நாங்கள் கேட்டோம்.

அவன் ஆம் என்றான்.

சாரைப்பாம்புகளைப் போல அவன் உடலெங்கும் ஊறினோம். அவன் ஆம்! ஆம்! என்றான். அப்பொழுது அவன் தன் மலத்துவாரத்தின் வழி ஆம்! ஆம்! என்று எங்களை வெளியேற்றிக் கொண்டிருந்தான்.

ஆம்! ஆம்! என்பது எங்களைத் தின்றது. பின் செரித்துக் கழித்தது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக