வெள்ளி, 27 டிசம்பர், 2019

அபி கவிதைகள் பற்றி


ஒரு தொடர் நிகழ்வு, அதன் புள்ளியிலிருந்து விலகி திடூமென என்னைப் பார் பார் என்றது. பழுத்த சருகுகள் அனிச்சமாய் உலவிக் கொண்டிருந்தது. அதன் திசைகள் எங்குமே வகுக்கப் பட்டிருக்கவில்லை. அல்லது எங்குமாய். அந்தி அதனை தன் சொந்த நிறத்தில் கொண்டிருந்தது. சருகுகளுக்கடியில் வாழ்தல் பற்றிய கேள்வி மெல்ல மெல்ல பிறாண்டத் தொடங்கியது. ஒன்றைப் பற்றிக் கொள்ளுதலும் அதிலிருந்து விலகுதலுமாய் ஒரே நேரத்தில் உணர்தல். பாதுகாப்பே தன்னுள்ளே கொண்டிருக்கும் விபரீதத்தை அதன் நிர்ணயமற்ற திசைகளை உணர்த்துதல் மூலமாய் கொஞ்சம் பிசுபிசுத்த தன்மையை உருவாக்கிக் கொண்டிருந்தது.

மொத்த பிரபஞ்சமும் அந்த உதிர்ந்த சருகுகளுக்கடியில் பொதிந்து கொண்டிருக்கிறது. அதன் நிழல் ஊடுருவும் அடிப்பரப்புகளிலிருந்து ஒளி தன்னை உறிஞ்சியும் பின் விடுவித்தும் கொண்டிருக்கக்கூடும். அமைதியற்றிருந்த யதார்த்தம் அதை அலைக்கழித்துக் கொண்டிருக்கும் பொழுது அதன் அடியில் போய் ஒளிந்து கொள்வதை விட வேறு என்ன சாத்தியம் இருந்து விடக் கூடும்.

ஒளி தன்னுள்ளேயே தன் இன்மையையும் கொண்டிருக்கிறது. அதனாலேயே அந்தியை நான் தேர்ந்தெடுக்கிறேன். அந்தி சாயைகளினால் தன்னைக் கட்டவிழ்க்கிறது. ஆனால் அது ஒரு ஊர்ந்து செல்லும் பறவை போல. இல்லையேல் உடலன்றி சிறகுகள் மட்டுமே கொண்ட பறவை.

அந்தியை சருகுகளுக்குள் சிறுதுண்டுகளாய் உருமாற்றிக் கொண்டிருக்கும் பொழுது அது தன் படபடத்தல் மூலமாய் தன் இருப்பை வெளிக்கிறது.

ஒளி இருள் தனக்குள் முணங்கத் தொடங்கியது.

அந்தி அடங்கும் பொழுது அதன் ஆசுவாசமற்ற அடிப்பொழுதுகளில் வெறுமனே தொற்றிக் கொள்கிறேன்.

"அருமையாய்க் கழிந்தது
சருகுகளடிப் பொழுது"

மாலை- சருகுகளடிப் பொழுது

சருகுகளினடியில்
புதையுண்டு
லேசாக மூச்சு முட்டிய
சுகம்.
எல்லாவற்றிலும் தொடப்பட்டு
எதையும் தொட இயலாதிருந்ததின்
மருட்சி,
வலிக்காமல்
தொற்றிக் கிடந்த துக்கம்
அறியாமையின் மீது
பதியப்பதிய
ஊர்ந்து திரிந்த பரவசம்,

பெயர் தெரியாத பறவைகளின்
அந்திப்படபடப்புகள்
உடம்பை ஊடுருவிப் போயிருக்கலாம்

சிறுமணிகளின்
இடையுறா ஒலியைப் போல
ஒரு கதகதப்பு
அஸ்தமனம் உதிர்ந்த சருகுகள்டயில்
படர்ந்திருக்கலாம்

எவரையும்
என்னையும்
நுழைய விடாதிருந்த
பிரக்ஞ்சயின் வெற்றிடம்
அந்தியின் தடவலில் இணங்கிக் கொள்ள

அருமையாகக் கழிந்தது
சருகுகளடிப் பொழுது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக