வெள்ளி, 15 மே, 2020

ரத்தம்


மரணத்தை அனுபவிப்பது என்பது அதைப்பற்றி திரும்பத் திரும்ப சிந்திப்பது மட்டுமல்ல. அது அதற்கு முன் பின் வாழ்வைப் பற்றி அறிய முனைவதும். ஆனால் அது பெரும்பாலும் அவ்வாறு எளிதில் முடிவதில்லை. முடியும் தருவாயில் அது எவ்வாறு அமைந்து விடுகிறது என்பதை திரும்ப வந்தவர்களால் கூட தெளிவாக உரைக்க முடியவில்லை. 

நான் மரணித்தலை உண்மையில் விரும்பினேனா? தெரியவில்லை. ஆனால் அதன் எல்லையின் விளிம்பில் சதா தொங்கிக் கொண்டு இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கான சூழலை நானே உருவாக்கிக் கொள்ள அதிகம் முனைந்தேன்.

தன்னைத் தானே கொல்வது. உடல் எனும் பரப்பு ஒரே நேரத்தில் சில்லுக் கண்ணாடிகளில் பிரதிபலிக்கும் பிம்பம் போல பல விதமாய் உருமாறிக் கொள்ள அனுமதித்தல். சின்னஞ்சிறு உடலிலிருந்து மாபெரும் உடல் வரை தனக்குள் தானே ஆகிக் கொண்டே இருப்பது. ஒரு தொடர் நிகழ்வு போல அதை செய்வது. அதன் மூலம் அது ஒரு எளிய செயலாக மாறிக் கொள்ளும் என்று நினைத்துக் கொள்வேன். எனக்கு மரணம் பற்றி அத்தனை தெளிவான பதில்கள் இருந்தன.  அது எனக்கு அளிக்கப் போகும் அனைத்தைப் பற்றியும் கனவு கண்டேன்.

"ஆகாயத்துப் பறவைகள்
விதைப்பதுமில்லை
அறுவடை செய்வதுமில்லை"

மரணம் ஒரு பறவை போல. சிறகுகள் மட்டுமே உடலாகக் கொண்ட பறவை. அந்தக் கடைசி விருந்தினை என் நண்பர்களுடன் நான் அருந்திக் கொண்டிருக்கையில் அவர்களுக்கும் எனக்கும் நான் என்ன தர வேண்டும் என்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். அவர்கள் அனைவருக்குமே அது தெரிந்திருந்தது. 

நான் என் சதையையும் இரத்தத்தையும் அவர்களுக்கு திங்கக் கொடுப்பேன். அவர்கள் என் உடலாவார்கள். நான் எப்படி சாக வேண்டும். வலி வலி வலி என்று சொல்லிக் கொண்டேன். வலியின் மூலம் மரணம் என்பது ஒரு மிக எளிய நிகழ்வு போல ஆகி விடும். நடக்கும் போது தன்னிச்சையாக நம் கால்களும் கைகளும் அடுத்த நகர்விற்கு அசைவது போல மரணமும் ஒரு அனிச்சை செயலாய் என்னை ஆட்கொள்ளும். ஒரு தனித்தவனாய் நான் இருக்கும் பொழுதே இந்த மொத்த பிரபஞ்சமும் என்னுள் வலி எனும் உணர்வு மூலமாய் ஒன்றிணையும் என்று நினைத்தேன். 

வலி பாரபட்சமின்றி உயிர் உள்ளது அல்லது அனைத்திற்கும் தருவிக்கப்பட்டது. அது ஒரு நிகழ்தகவு போல. அதனால் நான் வலியை நம்பினேன். என் மரணம் அதன் உச்சஸ்தாயில் ஒரு இசை போல நிகழும் என்று சொல்லிக் கொண்டேன். என் நண்பர்கள் என்னுடைய சொற்களில் அமிழ்ந்திருந்தனர். அவர்கள் என்னை அப்பொழுது மிகவும் வெறுத்தனர். நானாவது பற்றி அவர்கள் கற்பனையில் கூட நினைத்திருக்க மாட்டார்கள் 
நான் 13 தலைகளும் 26 கைகளும் கொண்ட மாபெரும் உடல். ஒரு நுண்ணுயிரி. இப்பூமியின் மேற்பரப்பில் மிதந்து கொண்டிருக்கிறென். மிக அழகான சிவந்த நிற கொடுக்குகள் தலைக்கு இரண்டாக எனக்கு இருந்தது. நான் எண்ணிலடங்கா கால்களைக் கொண்டிருந்தேன். காண்பவை அனைத்தையும் கொட்டுவதே எனக்கு அளிக்கப்பட்டிருந்தது. உண்மையில் காண்பது அல்ல. உணர்வது. எனக்கு கண்கள் இல்லை. உணர் கொம்புகள் மூலமே நான் அனைத்தையும் அறிந்தேன். 
என் தலைகள் முரண்படும் பொழுது ஒன்றினை ஒன்று விழுங்கத் தொடங்கின. நீர்த் துளிகள் தரையில் சிதறுவது போல நான் சிதறிக் கொண்டிருந்தேன். எல்லா தலைகளும் விழுங்கிய ஒற்றை தலை பாரம் தாங்காமல் சரிந்து விழுந்தது. பின் நான் உடல் மட்டுமே ஆனேன். நான் உணர்வதை எல்லாம் என் உடல் கொண்டே விழுங்கினேன். நான் பெருத்து சிதறிய நாளில் முட்டைகள் ஈனினேன். கரும்பழுப்பு நிற முட்டைகள். என் உதிர்ந்த தலை அதை ஒவ்வொன்றாக விழுங்கியது. 

விதிர்த்தெழுந்த பொழுது ரத்த விளாராய்க் கிடந்தேன். தோல் கிழிந்தும் பிளந்தும் என் உடல் பல்லாயிரம் வாய்களால் ஆனது போல இளித்தது. ரத்தம் வாய்களிலிருந்து கசிந்து என்னைச் சுற்றி தேங்கி நின்றது. நான் கூவினேன். என் முட்டைகள் உடையவில்லை உடையவில்லை என்று மண்ணைப் பார்த்து கூவினேன்.

12 அப்போஸ்தலர்கள் என் வருகையை அறிவிக்கும் நிமித்தம் என் பிணத்தின் முன் அமைதியுடனும் மிகுந்த சிரத்தையுடனும் நின்று கொண்டிருந்தனர்.  அவர்கள் அனைவரும் வானையே அணுகினர். அவர்கள் தங்கள் ஒவ்வொருவரின் வலது முழங்கையிலிருந்து மூன்று துளி ரத்தம் வீதம் என் முன்னே சொட்டினர். என் பிணம் நாறிக் கொண்டிருந்தது. அவர்கள் மந்திரம் போல ஒன்றாக திரும்பத் திரும்ப சொல்லினர்.

"ரத்தம் மூலமே நீ இறவாதிருந்தாய்
ரத்தமே உன்னை அறிவித்தது
ரத்தமே உன்னை விடுவித்தது
ரத்தமே உன் சொல்
ரத்தமே உன் மொழி
ரத்தமே உன் இருப்பு
ரத்தமே நீ"

உன் ரத்தம் மூலம் மீண்டும் எழுந்தருள்வாய் என் தேவனே!"

ஒரு கருவி வேண்டும். தன்னந்தனியாக மரணத்தை அனுபவிக்க ஒரு கருவி. எனக்காக நானே உருவாக்கிக் கொள்ள வேண்டும். என் சொந்த கைகளினால். அது எப்படி இருக்க வேண்டும். ஒரு குமிழ் போலத் தொடங்கி கடல் ஒதம் போல வலியை உருமாற்றும் கருவி. நான் விடுவிக்க விடுவிக்க என்னை இறுக்கிக் கொண்டே இருக்கும் ஒன்று. உயிர் என்பது உடலின் ஒவ்வொரு அணுக்களிலும் நிறைந்திருப்பதை அதன் மூலம் உணர்வேன். நான் வலியை மறுதலிக்க விரும்புகிறேனோ என்று தோன்றியது. இல்லை காலமற்றிருப்பதை விரும்பினேனா. தன் சொந்த மரணத்தை சூதாடி பணயம் வைப்பதைப் போல நான் பணயம் வைத்தேன். அதன் மூலம் நான் அடைந்தது தான் என் ரத்தம்.

என் குறிப்பேட்டில் என்னுடைய வார்த்தைகளையே நான் திரும்பத் திரும்ப எல்லா பக்கங்களிலும் எழுதிக் கொண்டிருந்தேன். அது என் மரணத்தின் சொல்.

ஆம்.

தேடுங்கள் தரப்படும்
தட்டுங்கள் திறக்கப்படும்.

என் பிணம் ஒரு அழுத்திச் சப்பிய மாங்கொட்டை போல சியொன் மலைக் குன்றில் கிடந்தது. அவர்கள் ஜபித்துக் கொண்டிருந்தனர்.

"ரத்தம் மூலமே நீ இறவாதிருந்தாய்
ரத்தமே உன்னை அறிவித்தது
ரத்தமே உன்னை விடுவித்தது
ரத்தமே உன் சொல்
ரத்தமே உன் மொழி
ரத்தமே உன் இருப்பு
ரத்தமே நீ"

உன் ரத்தம் மூலம் மீண்டும் எழுந்தருள்வாய் என் தேவனே!"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக