ஞாயிறு, 1 ஜனவரி, 2023

கிறுஸ்துவின் கடைசி சபலம் - 82



The Last Temptation of Christ - Nikos Kazantzakis

    ஜீசஸ் வெறுமனேப் புன்னகைத்தான். உலகமே ஒரு மாபெரும் மரத்தின் கிளைதனில் முகிழ்ந்த மலரைப் போல, அதன் மலர்ச்சியின் இதழ்கள் விரிகையில், சிறகுகள் உயர்த்திப் பறவையாகி, அது எல்லையற்ற பிரபஞ்சவெளி நிறைத்துப் பறக்கத் தொடங்கிவிடும் என்று நினைத்து மகிழ்ந்தான். கீழ்மையில் தரக்குறைவாக, நடக்கும் அரசன், தன் பாவங்களை உணர்ந்து ஞானஸ்நானம் பெற்று, தன் ஆன்மாவைத் தூய்மைபடுத்துவான். அவன் தனது சகோதரனின் மனைவியான ஹெரோடியஸை விடுவித்து, அவள் கணவனிடம் சேர்ப்பிப்பான். முதன்மைப் பூசாரிகளும், நல்ல மனிதர்களும் தங்கள் தானிய சேமிப்புக் கிடங்குகளையும், கருவூலங்களையும் திறந்து, பாவப்பட்ட ஜீவன்களுக்கு, பொன்னையும், தானியங்களையும், உடைகளையும் பகிர்ந்தளிப்பர். அவர்கள் தங்கள் மனதிற்குள் இதுவரை ஊறிக் கிடந்த வெறுப்பையும், சுய நிந்தனையையும், கோபத்தையும், பொறாமையையும் விட்டுத்தள்ளி, மனதாரத் தங்கள் இருதயத்துடன் ஒன்றி அமைதியடைவர். ஜீசஸ் தன் கைகளை விரித்து ரேகைகளை ஆராய்ந்தான். காட்டுத்துறவி ஜான், தன் கைகளில் ஒப்படைத்த வலுவானக் கோடாரி, ரேகைகளின் ஊடேக் கிளைபரப்பி, இலை துளிர்த்து, பசுமை அடர்கிறது. வெண்மை விரிந்த பூவிதழ்கள் முளைக்கின்றன. இளஞ்சிவப்புத் தாதுக்கள் அடர்ந்த மகரந்தங்கள் கிளர்ந்து மணம் பரப்புகின்றன.

    அவனது உணர்வுகள் அடங்கின. பாரம் விலகியிருந்தது. கைகளைத் தலைக்கு முட்டுக் கொடுத்து, ஒருக்கழித்துக் கால்களை ஒடுக்கிப் படுத்துக் கொண்டான். எண்ணங்கள், நினைவுகள் எல்லாம் மறைந்து, உறக்கம் அவனை அணைத்துக் கொண்டது. அமைதி ஒரு கூடாரம் போல அவனைச் சுற்றி எழும்பத் தொடங்கியது. நள்ளிரவு கடக்கையில், தன் உறக்கத்தினுள், முன்னே நீரோட்டம் குமிழியிடும் சப்தம், ஏற்கனவே பார்த்த முயல்கள், குதித்துச் சண்டையிடுகின்றன. ஒரு மூக்கு, ஈரமான நாசி, பதுங்கிப் பதுங்கி மோப்படுவதை உடல் முழுதும் அறிந்தான். ஓநாய் ஒன்று, தனித்தும் பசித்தும் அவனை முகர்கிறது. ஜீசஸ் தன் சொப்பனத்தின் வெளியில், அது தன்னைச் சுற்றிச் சுற்றி வருவதைப் பார்த்தான். ஒரு சவம் போல அசையாமல் கிடக்கும் தன் உடலின் எந்தப் பாகத்தில் வாய் வைக்கலாம் என்று அந்த மிருகம் எச்சரிக்கையுடன் ஆலோசித்துக் கொண்டிருந்தது. அவன் தன் நெஞ்சைப் பிளந்து, இருதயத்தைப் பிய்த்து, ரத்தத்துடன் அதற்கு உணவாக அளிக்க வேண்டும் என்று நினைத்தான். தன் மற்ற மாமிசத்தை அவன் மனிதர்களுக்காக ஒதுக்கி வைத்திருந்தான்.

    விடியலுக்கு முன்னேயே எழுந்து வானை நோக்கினான். விண்மீன்களின் வலைப்பின்னல். மெல்லியக் காற்றின் அனல் சற்று குறைந்திருந்தது. பூமி ஒரு ஆடியினைப் போல நீல வெளியைப் பிரதிபலித்தது. மணற்துகள்களின் ஓயாத நடுக்கம். ஆகாயத்தின் அடர்த்தி கூடிக் கூடி, தலைக்கு மேலே தொட்டு விடும் உயரத்தில் விரிந்திருந்தது. மூட்டமான அமைதி. சமிஞ்சைகள் ஒளிவட்டங்களாக நட்சத்திரங்களின் பின்னே, விரிந்தும் சுருங்கியும் மூச்சிழைக்கிறது. சரியாக அத்தருணத்தில், காகங்களின் சிறகடிப்புகள், கரைதல்கள். கிராமங்கள் முழிக்கின்றன. மனிதர்கள் வெளிச்சத்தைப் பிடித்துக் கொண்டு உறக்கம் விடுத்தனர். சூரியனின் கிரணங்கள் எல்லா வீடுகளின் உள்ளும் சென்று, தன் நீள்பட்டைக் கரங்களால் அவர்களை எழுப்பியது. பிள்ளைகள் வீறிட்டலற, அதன் அம்மாக்கள் அவர்களை மார்போடு அணைத்துப் பாலூட்டுகின்றனர். பாலை நிலம் ஊர்களாக, வயல்களாக, சந்தைக் கூடங்களாக, நதியாக, சதுக்கங்களாக உருமாறியது. மனிதக்குரல்கள், ஆடுகள், சேவல்களின் குளறல்கள். மெல்ல மெல்லக் குளிர் குறைகிறது. காற்றின் நடுக்கம் கூடுகிறது. வெக்கை தன் பல்லாயிரம் கரங்களால் அனைத்தையும் பிடித்து விழுங்குகிறது!.....அவனது இருதயத்தின் துடிப்புகள் நின்று மீண்டன. "இந்த குளிரின் சுகந்தம் மாறாதது, நிலைத்தது என்று தவறாக நினைத்திருந்தேன். கடவுளின் எண்ணங்கள் மாறானவை. அது ஒரு பிலம் போல. ஆழம் காண இயலாது. அவனது அன்பு ஒரு படு குழியினைப் போன்றது. அவனே இவ்வுலகத்தை நட்டான். அது வளர்ந்து, கிளை விரித்து பழம் தரும் தருணம் அதனை அழித்துத் தரை மட்டமாக்குகிறான். பின் புத்தம்புதியதாகத் திரும்பவும் நடுகிறான். துறவியின் சொற்கள் அவனுள் துளைத்தன. "யாருக்குத் தெரியும்! உண்மையில் அன்பு, கோடாரியை ஏந்திக் கொண்டுதான் வரவேண்டும் போல...." அவனுள் நடுக்கம் கூடியது. கீழே தரையைப் பார்த்தான். மணற்துகள்கள் அவனைப் போலவே சதா நடுங்கிக் கொண்டும், குமைந்து கொண்டும். எங்குமே நிலையாகக் கால்பாவிக்க முடியாமல், காற்றின் திசை உந்துதலுக்குத் தன்னை ஒப்புக் கொடுத்து அலைந்து கொண்டே இருந்தது. வெம்மை படியப் படிய ஒளி கூடி எடையிழந்தது. வானத்தின் செம்மை நிலத்தை ஆக்கிரமித்தது. சூரியனுக்குக் கீழே அனைத்தும் சிவந்துப் பழுத்திருந்தது. அவனது எண்ணம் அங்கும் இங்கும் ஊசலாடிச் சுழன்றது. மணற்புயல் வருவதைப் போல சீதோஷணம் மாறி, வானம் கங்கினைப் போலக் கனன்றது. காற்றின் துடி, வெந்தெரியும் புழுதி நெடி. சோடோம், கொமோரா.....கோட்டை கொத்தளங்கள், சதுக்கங்கள், காட்சிக் கூடங்கள், விற்பனைச் சந்தைகள், மதுக்கடைகள், வேசிகள்....அவனது எண்ணங்கள் நெழிந்து நெழிந்து, தன் பாதையை மணலில் பரத்தும், மணற்பல்லியினைப் போல பரத்திக் கொண்டுப் பயணித்தது. ஆப்ரஹாமின் கதறல், "கருணை காட்டுங்கள் ஆண்டவரே! எங்களை எரித்து விடாதீர்! நீ படைத்த உயிர்களின் மேல் இரக்கம் கொள்ளும்! நீ நியாயவான் இல்லையா!  நாங்கள் தாழ்ச்சியுறுகிறோம்! உம் கோபத்தினால் எங்களைப் பொசுக்கிவிடாதீயும்!", கடவுளின் பதில் அமைதியாக ஒலித்தது. " நியாயத்தின் பொருட்டே நான் அனைத்தையும் எரிக்கப்பண்ணுவேன்!"

    "இதுதான் தேவனின் வழியா?. உண்மையில் நம் தேவனின் சொல் இதுவெனில், இரு

தயம் எனும் இந்தப் பொடிந்து போகும் மட்பாண்டம் ஏன் என்னிடம் இவ்வாறு உரைக்கிறது. அது தன் சொந்தத்துடுக்குத்தனத்தால் தேவனின் சொல்லை மறுதலிக்கிறதா? அது அனைத்திற்கும் எதிராக நின்று பதற்றத்துடன் கதறுகிறதே! நில்! நில்! அமைதியுறு! அய்யோ!....உண்மையில் நீ செய்ய வேண்டியது என்ன?" நிலைகுலைந்து தனக்குள்ளேயேப் பிதற்றினான். "எந்த எதிர்ச்சொல்லுமின்றி, இந்த மாபெரும் மணல்வெளியில், எல்லாம் வல்ல ஆண்டவனின் சுவடுகளைப் பிடித்துக் கொண்டு நானும் செல்ல வேண்டும். தேவனின் வருகையின் அடையாளங்களை, சோடோமிலும், கொமோராவிலும், சாக்கடலிலும் உறுதியாகக் காண்கிறேன். அவரே இந்நகரங்களை அழித்து மூழ்கடித்தார். ஆம்! இப்பொழுது மீண்டும் வருகிறார். திரும்பவும் அனைத்தும், ஒட்டுமொத்தமாக அழிந்துபடும். இப்பூமியின் ராஜாக்கள், பெரிய பெரிய பூசாரிகள், சடங்குகள், வழிபாடுகளை ஒருங்கிணைக்கும் பரிசேயர்கள், யூதக்குடியின் வலிமை மிகுந்த சதுசேயர்கள் அனைவரும் மண்ணோடு மண்ணாவர்கள். 

    சமநிலையிழந்து ஜீசஸ் கத்தத் தொடங்கினான். அவனது அகம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. எழுந்திருக்க முயல்கையில், அவனது முழங்கால் அசையவில்லை, உடல் ஒத்துழைக்கவில்லை. தேவனின் பாதையில் எழுச்சியுடனும், சீற்றத்துடனும் முன்னேறத் துடிக்கும் அவனது உள்ளத்தின் சொற்கள் உந்துகையில், உடல் எதிர்வினையாற்றவில்லை. மூச்சைப் பிடித்துக் கொண்டு அப்படியே அந்தப் பாறையின் மேல், கைகளால் ஊன்ற முயன்று, பிடிமானமின்றி சரிந்து விழுந்தான். "உனக்குத் தெரிகிறதா? என்னால் இயலவில்லை?"எரிந்து கொண்டிருக்கும் வானத்தைத் தன் கலங்கிய விழிகளை, கசக்கிக் கொண்டு பார்த்தான். "ஏன்? ஏன்? என்னைத் தேர்ந்தெடுத்தாய்? நிற்கக் கூட வலுவற்ற இந்த நலிந்தவனை எதற்காக இங்கு வரவழைத்தாய்?, என்னால் தாங்க முடியவில்லை! வேதனையுடன் சத்தமாக, உதவி கோரும் தொனியில் அழத் தொடங்கினான். அக்கணம் அவன்  முன்னே, மணற்துகள்கள் சரிந்தெழுந்து புழுதிக் கோளகமாய் ஒரு கருத்த ராட்சச உருவம் தோன்றியது. கால்கள் நான்கும் நால் திசைகளில் விரிந்து கிடக்க, வயிறு வீங்கி வெடித்து, குடல் கொத்தாக வெளித்தள்ளி சீழுடன் அது அழுகிக்கிடப்பதைப் பார்த்தான். அதன் கண்கள், அதன் மிரட்சி, காலமற்ற விதிர்த்தல், பயம், நடுக்கம், குலைவு, அசைவின்மை. அவனைப் பீடித்தது. அது அவன் தான். அது அவனது கண்கள். அழுகும் அவனது சொந்த உடல். " நான் தான் அந்தப் பலியாடு, தேவன் தனது பாதையில் என்னை இருத்துகிறார். நான் யார்? எங்கு சென்றடைந்திருக்கிறேன் என்பதை உணர்த்த இதனை நிகழ்த்துகிறார்" ஜீசஸ் தனக்குள் முனகினான். "வேண்டாம்! வேண்டாம்! எனக்கு உனது பாதைகள் வேண்டாம். என் தனிமையின் கனம் என்னை இம்மண்ணிற்குள் புதைத்துவிடும். பயத்தைத் தவிர நான் எதையுமே உணரவில்லை. என்னைக் காப்பாற்றும்!. ஒரு ஓநாய் என் அடிவயிற்றினைக் கிழித்து ரத்தமும் சதையுமாக், குடலைக் கவ்விக் கொண்டு, இப்புழுதி வெளியெங்கும் உடலுடன் தரதரவென இழுத்துச் செல்கிறது. காகங்கள் தன் கூர் அலகினால், என் கண்களைக் குத்திச் சுவைக்கின்றன. புழுக்கள் என் உடல் முழுதும் மொலுமொலுத்து உண்கின்றன. எரியும் நிலத்தில் என் உடல் கொளகொளவென நெகிழ்ந்து விட்டது. மண்ணின் உயிர்கள் அனைத்திற்கும் நான் தீனியாகிக் கொண்டிருக்கிறேன். இனிமேலும் எந்த சோதனைகளும் வேண்டாம். என்னை விட்டுவிடு!தாழ்ச்சியுறுகிறேன்! என்னைக் காப்பாற்றும் தந்தையே!"

    தனது முன் நெற்றி, தரையில் பதிய ஜீசஸ் பயத்துடன் வேண்டிக்கொண்டிருந்தான். அவனது அழுகுரல் எங்கோ தூரத் தொலைவில் பட்டு, பல்லாயிரம் மனித விளியாக வெளியெங்கும் எதிரொலித்தது. சட்டெனக் காற்றின் நிசப்தம். அதன் வெம்மை மறைந்து குளிர் ஆட்கொண்டது. பூதாகரமாய் உருவெடுத்த அழுகிய உடல் மறைந்தது. நறுமணம் கூடிக் கூடி சூழலை நிறைத்தது. தேவனின் சொல்லிற்காக, சூழுரைத்திருந்தவனைச் சுற்றி, நிசப்தத்தைக் கிழிக்கும் பலவிதக் குரல்கள். ஓடும் நீரின் திரவலயம், வளையல் குலுங்கும் சிரிப்பொலி. அது எட்டாத தொலைவிலிருந்து ஒலி மினுக்குகளாக, செவிகளை அடைந்தது. குளிரின் இதம் அவனது உடல் நிறைத்தது. கண்ணிமைகள் அதனை உள்வாங்கிக் கொண்டது. அக்குள் எரிச்சல் சற்று குறைந்தது. தூரம் மெல்ல மெல்லக் குறைந்து கொண்டிருந்ததை ஒலியால் உணர்ந்தான். தொண்டையைச் செருமிக் கொண்டான். ஒளி, ஓரிடத்தில் குவிந்து பின் சிதறியது. அவன் வரைந்த எல்கையின் முன்னே, ஒரு வினோதமான உருவம் நின்று கொண்டிருந்தது. ஒரே சமயம், ஒரு பாம்பினைப் போலவும், பெண்ணைப் போலவும் மாறி மாறிக் காட்சிகள் பெயர்ந்து சிதறியது. அதன் தலையில் உருளும் இரு பழுத்தக் கூர்மையானக் கண்களில், கரியக் கோளகம் போன்ற உள்விளி உற்று நோக்கியது. சீறும் ரெட்டை நாக்கு நொடிக்கொருதரம் வெளி வந்து மறைந்தது. ஆனால் வடிவான மார்புகங்களும், ஒசிந்த இடுப்பும், உடற்கட்டும் கொண்ட அம்மணப் பெண்ணுடல். ஜீசஸால் எதையுமே நிதானிக்க முடியவில்லை. நடுக்கத்துடன் பின்வாங்கினான். அதன் உடல் மணம் அவனது நாசி நிரப்பியது. "இது என்ன, ஒரு பாம்பா? இல்லை பெண்ணா? இல்லை இந்தப் பாலை நிலத்தில் அலைந்து  உயிரினங்களைத் தந்திரமாகப் பிடித்துத் திங்கும் அரக்கியா? இல்லை! இந்தப் பாம்புதான் அந்த முதல்  மனிதனை சபலப்படுத்தி, முதல் பெண்ணுடன் கூட வைத்து, பாவத்தைச் சம்பளமாகப் பெற வைத்ததா? சிரிப்பொலி கனத்து உயர்ந்தது. மயக்கும் ஒரு பெண்ணின் குரல் அதன் நாவிலிருந்து வெளிவந்தது.

    " நான் உனக்காக வருந்துகிறேன். என் அன்பான மேரியின் மகனே! நீ வேண்டினாய் அல்லவா! உனது அழுகையையும் கதறலையும் நான் கேட்டேன். நீ தனித்திருக்க வேண்டிய அவசியமென்ன? உன் அபயக்குரலிற்கு செவிமடுத்து நான் இங்கு வந்தேன். வருந்தாதே! இங்கு நீ தனித்தவனில்லை. சொல்! நான் உனக்காக என்ன செய்ய வேண்டும்!"

"எனது ஆன்மா!"

    "என் ஆன்மா!" ஜீசஸ் என்ன செய்வதென்றறியாதுக் கூச்சலிட்டான். பின் கண்களை மூடிக் கொண்டான், திடமின்றித் தன் அகத்தினுள் பயணித்தவன் , திக்குகளற்றுக் கண் திறந்தான்.

    "ஆம்! உனது ஆன்மா!. தனிமை உன்னைக் கொன்றுவிடும் என்று பயக்கிறாய். உன் மூதாதை ஆதாமும் உன்னைப் போலவே பயந்தான். உன்னைப் போலவே, உதவிக்காக வேண்டினான். அவனது உடலையும் ஆன்மாவையும் ஒன்றாக்கினேன். அவனது விலாஎலும்பினை  ஒரு பெண்ணாகப் படைத்து அவனுக்குத் துணையாக்கினேன்".

    "நீ எனக்குத் தேவையில்லை? போய்விடு! ஆதாமுக்கு நீ ஆப்பிளை அளித்ததை நான் அறிவேன். அது கொலைவாளுடன் நிற்கும் ஒரு தேவதை போல இருந்தது என்று நினைக்கிறேன்."

    "உன்னால் ஞாபகப்படுத்த முடிகிறதா? அப்படியென்றால் ஏன் வலியில் துடிக்கிறாய்? ஏன் உன் பாதையைக் கண்டறிய முடியாது பயந்து சாகிறாய்?  நான் கூறுகிறேன். உனக்கானச் சரியானப் பாதையை நான் காட்டுகிறேன். உன் கையைக் கொடு. திரும்பிப் பார்க்காதே! திரும்ப எதனையும் அழைக்காதே! பார்! என் முலைகள் உனக்கான வழியை உரைக்கும். என் அன்பே! அதனைப் பின் தொடர்ந்து வா! அது உன்னை சரியானப் பாதைக்கு அழைத்துச் செல்லும்!"

    "நீ என்னை அந்த இனிமையானப் பாவத்தின் படுகுழிக்கே அழைத்து செல்ல நினைக்கிறாய்! என்னுடைய பாதை வேறு! போய்விடு!"

    பாம்பு, பத்தியை உயர்த்தியது. அதன் சிவந்த ஒளிர்விழிகள் அவனது நடுங்கும் கண்களை நோக்கியது. தன் விஷப்பல்லை வெளிக்காட்டி ஏளனத்துடன் அவனைப் பார்த்து சீறியது. "ஓ! நீ ஆண்டவரின் பாதையில் செல்ல விளைகிறாய்! இல்லையா! உண்மையில் அந்த ராஜாளியின் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கும் நீ, மண்ணில் புதைந்து மறைந்து வாழும் ஒரு புழு என்பதை அறிவாயா? புழுவே! எனதருமை தச்சனின் மகனே! மானுடம் கொணர்ந்த ஒட்டுமொத்த  பாவத்தை மூட்டையாகத் தலைச் சம்மாட்டில் தூக்கிச் செல்ல விளைந்திருக்கும் அற்பப் புழுவே! உன்னுடைய சொந்தப் பாவங்களால் உன்னால் திருப்தியடைய முடியவில்லை இல்லையா! எந்தப் பிடிமானத்தில், இல்லை! எந்த தைரியத்தில், இல்லை! எந்த முட்டாள் தனத்தில் இந்த உலகத்தை மீட்கப் போகும் மாபெரும் கடமையை, உனக்கு நீயே அளித்துக் கொண்டாய், அன்பே!"

    "ஆம்! ஆம்! அவள் சரியாகத் தான் சொல்கிறாள்!" ஜீசஸின் உள்ளம் சொற்களை மறுதலித்தது. குழப்பத்துடன் தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தான். "உண்மையில் ஒரு முட்டாள் தான், இந்த உலகத்தைத் தான் மீட்கப் போவதாகவும், அதனையே தன் ஒரே கடமையாகவும் கொள்வான்!"

    "உனக்கு ஒரு ரகசியம் வைத்திருக்கிறேன்!, மேரியின் மகனே!,  இன்பம் மட்டுமே உடலாகக் கொண்ட மயக்கும் பெண் குரல். இடதும் வலதுமாக அது தன் தலையை சதா அசைத்துக் கொண்டும், ரெட்டை நாக்கினால் மூச்சு விட்டுக் கொண்டும், வசியம் செய்ததைப் போல அவனைப் பிடித்திருந்தது. அதன் முலைகள் அசைவிற்கேற்ப அங்குமிங்கும் அலங்கியது. இரு தொடைகளுக்கிடையில் கரிய மயிரடர்ந்தப் பாதை வழி நீர்மை எல்லையற்று விரிந்துக் குமிழியிடுவதைப் போல மயக்கு. நதிகள் கரையும், கடலின் விரிவு. அலைகள் மருங்கும் ஓதத்தின் சப்தங்கள். அது தன் உடலைச் சுருக்கித் தரையில் படர்ந்தது. மெல்ல மெல்ல ஊர்ந்து அவன் வரைந்த எல்லையின் விளிம்பு வரை வந்து சட்டெனத் தலை உயர்த்தியது. கண்கள் இன்னும் ஒளி கூடியிருந்தது. இரு முலைக்காம்புகளின் வட்ட நெளிவு இருளை இன்னும் மூட்டமாக அவன் முன்னேக் கிடத்தியது. அமர்ந்திருக்கும் அவனது தோள் வரை உயர்ந்து, தன் சிவந்த நாக்கினால் அவனது கன்னத்தை நக்கியது. அதன் ஈரக்குளிர்மை ஒரு ஆழ்ந்த தடமாய் அவனுள் படிந்தது. அதன் குரல், சீறல், மூச்சொலி, அது தூரத்திலிருந்தும் அருகிலிருந்தும் அவனிடம் பேசியது. அக்குரலின் கார்வை, அதன் தவிப்பு, ஏக்கம், தாபம், நிதானிக்க முடியாத தன்மை. நிசப்தம் முற்றிலுமாகக் கரைந்து குரல், குரல்கள் என அவன் அலையத் தொடங்கினான். அக்குரல் கலீலியைத் தாண்டி ஜென்னசரேட் ஏரியின் விளிம்பின் கரையினில் படிந்திருப்பதை அவன் உணர்ந்தான்.

"மாக்தலேன்.....என் மாக்தலேன்! மாக்தலேன்..."அய்யோ! என்னவாயிற்று? என் மாக்தலேன் என்னவானாள்?"

".....மாக்தலேன்! நீ அவளைக் காப்பாற்ற வேண்டும்!" பாம்பின் சீறல் ஒலி, தீர்க்கமானது. அது ஒரு கட்டளையைப் போல அவனிடம் தெரிவித்தது. "இந்த உலகத்தை அல்ல! அவளை! உன் தேவதையை! அன்பே! உன் மாக்தலேனை நீ மீட்க வேண்டும்!"

    பாம்பு மேலும் நெருங்கி வந்திருந்தது. அதன் சீறலின் துடி அவனை அசைய விடவில்லை. அவன் மறுதலிக்கும் தொனியில், தலையை இருபுறமும் அசைத்து விலக்க முயன்றான். கைகளால் உந்தித்தள்ள எத்தனிக்கையில் அது இன்னும் பலமாகத் தன் நாக்கினால், அவன் காதுகளை நக்கியது. அருவருப்பும் பயமுமாக ஜீசஸ் விதிர்விதிர்த்துத் தரையில் விழுந்தான். "அவளது தேகம் முழுமையானது, அழகானது. குளிர்ச்சி ஒரு சுனை போல ஒழுகும் அத்தேகத்தில், உலகின் ஆண்மகன்கள் அனைவரும் பாரபட்சமின்றி, விடாய் தீர்த்திருக்கின்றனர். ஆனால் அவள் உனக்கானவள். தேவன், அவள் பிறக்கும் பொழுதே அவளை உனக்கென்று எழுதி விட்டார். அவளை எடுத்துக்கொள்! ஆணையும் பெண்ணையும் இணைந்திருக்கவே கடவுள் படைத்திருக்கிறார். அவளைத் திறந்து கொள். உன் சாவியினால் அவளது வாசலைத் திற! உன்னுடைய பிள்ளைகள், அவளினுள் உணர்ச்சியற்று உறங்கிக் கிடக்கின்றனர்.  உன் வருகையினால் அவர்கள் உயிர் பெறட்டும். இம்மண்ணின் மைந்தர்களாக, சூரியனின் முன்னே தாழ்ச்சியின்றி அவர்கள் வாழ, வகை செய்வாய்! உனக்குப் புரிகிறதா? நான் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று!, என் முகத்தை நிமிர்ந்து பார்! என் அன்பே! நான் உனக்காக என்ன கொண்டு வந்திருக்கிறேன் பார்! உன்னுடைய மனைவியை உனக்காக நான் தருவிக்கிறேன்! உன்னுடைய தாபங்களைத் தீர்க்கும், தேகத்தினை உன் முன் அளிக்கப்பண்ணுவேன். பார்! உன் மனைவியை!"

"என் மனைவியா?"

    "ஆம்! உன்னுடையவளே! அங்கே உன் தந்தை, ஜெருசலேம் எனும் பரத்தையை, மணந்து கொண்டாரே! உலகத்து ஆண்கள் அனைவரும் அவளைக் கடந்து சென்றனர். ஆனால் அவர் அவளைத்தான் தன் மனைவியாக்கிக் காப்பாற்றினார்.அது போல. நம் தீர்க்கதரிசி ஓசேயா எவ்வாறு டெபேலியத்தின் மகளாகிய வேசை கோமேரை மணந்து கொண்டார், அதைப் போல! அவளை ஏற்றுக் கொள் எனதருமை மேரியின் மகனே. மாக்தலேன் உன் மனைவி. அவள் உனக்கானவள். அவள் மூலம் உன் பிள்ளைகளைப் பெற்றெடுத்து அவளை மீட்பதே, ஆண்டவர் உனக்கிட்டிருக்கும் கட்டளை. அடிபணி!"

    பாம்பு, நெருக்கமாக அவன் தோள்களைப் பற்றிச் சுருண்டது. அதன் குழுமையான மார்பகங்கள் அவனது முழங்கைகளில் அழுந்தியது. அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. அவனது கைகள் சூழலை மறந்து, அதனைப் பற்றிக் கொள்ளத் துடித்தது. நிமிண்டும் முலைக்காம்புகளின் ஈரம் அவனை உள்ளும் புறமும் எரிக்கத் தொடங்கியது. ஆனால் அவன் அசைவற்றிருந்தான். எல்லாமும் பெண்  உடல்களாக உருமாறியது. இருளின் கனம் கூடிக் கூடிப் பெண் உருவங்களாகியது. உடலின் அனைத்துத் துகள்களும் தேகம்! தேகம்! எனத் தாபித்து நின்றன. வானமே ஒரு மாபெரும் முலைக் காம்பினைப் போலக் குமிழ்ந்து அவன் தலைக்கு மேலே உருள்கிறது. கைதொடும் தூரத்தில் அதனைப் பிசைய முடியும். அவனது விரல்கள் நடுங்கின. உடல் முழுதும் ரத்தம் பீறிட்டுக் கிளம்பியது. அவன் அசையாதுத் தன் கண்களை மூடினான். மாக்தலேனின் கடை வாசல். உடல்கள், முயங்கி நொதித்துக் கரைகின்றன. ஜோர்டானின் பாதை வழியே அவனை வந்தடைந்த, அவளின் கொதிக்கும் மூச்சினை அவன் உணர்ந்தான். அவள் விரிந்து விரிந்து மணல் முழுதும் பரந்தாள். பார்க்கும் திசைகளெல்லாம் அவளன்றி ஏதுமற்றிருந்தது. அவளைப் பற்றிய எண்ணங்கள், நினைவுகள், அவளது தேகவெளியின் நறுமணம் அவனைப் பெயர் சுட்டி வா! வா! என்று காலமற்று அழைத்தது. அவன் அவளது எல்லையின் விளிம்பில் நின்று கொண்டிருந்தான். சற்று தொட்டாலும் உடைந்து அவிழும் நீர்மை ஒன்று பம்மி விரிந்து அவன் தொடுகைக்காக விம்மிக் கொண்டிருந்தது. ஒரே ஒரு ஒற்றைத் தொடுகை, ஒரு கண் சிமிட்டல் போதும். பெரு வெடிப்பென அவளது தேகம் பொங்கிப் படரும். அவனது உடல், ஒரு திரவக் கோளகமாய் உருண்டு, எல்லைகள் விரிந்து அவளைத் தொட்டது. இன்பம்! இன்பம் மட்டுமேயான ஒரு உலகம். உள்ளும் புறமும் மனிதனுக்கு மட்டுமே சாத்தியமான, தேகலயம் அவனை அணைத்துக் கொள்கிறது. எல்லாம் மறைந்தன. பசி! தாகம்! ஏக்கம்! தாபம்! அனைத்தும் கரைந்து உடல் பல்லாயிரம் திரட்சிகள் கொண்ட, அதன் ஒவ்வொரு நுனிகளும் வழிந்து பெருகும் மலர்ச்சியின் மகரந்தங்கள், சதா ஒழுகிக் கொண்டே இருக்கும் ஒரு ராட்சச மலரினைப் போல ஆகியது. வற்றாத அதன் ஊற்றுக் கண்ணிலிருந்து நிரம்பி வழிகிறது, ஆனந்தம். "இது தான் வழி! எல்லா அதீதங்களும் ஒதுங்கிக் கொண்டன. அவன் திரும்பவும் தான் நாசரேத் நகருக்குச் சென்று தன் அன்னையைக் காண்பதையும், தன் சகோதரர்களுடன் சமாதானமாகப் போவதைப் பற்றியும் யோசித்தான். தான், தன் மனைவி, தன் பிள்ளைகள் என ஒரு இயல்பான ஆண் மகனாகத் தன்னை உருவகித்துக் கொண்டான். எந்தக் குழப்பங்களுமற்ற ஒரு மனிதன். எந்தத் தரிசனங்களைப் பற்றியும் மீட்பைப் பற்றியும் சட்டை செய்து கொள்ள வேண்டாம். நான் என்னுடைய பட்டறையில் என் அப்பனைப் போலவே தச்சு வேலையைச் செய்யலாம், என் மாக்தலேன் தன் பழைய வாழ்க்கைக்குத் திரும்பலாம். கைவினைப் பொருட்களைச் செய்வதும், தன்னையும் தன் பிள்ளைகளும் பார்த்துக் கொள்வதும் அவளை மகிழ்விக்கும். ஒரு சரியானக் குடும்பத் தலைவனாக நான் அவளை, என் பிள்ளைகளைப் பாதுகாக்கலாம். இதைத்தவிர என்ன பேறு இருக்கப் போகிறது. என்னுடைய அமைதியான உலகத்தில் நான், என் மனைவி பிள்ளைகள் என்று வாழ்வை இன்பத்துடன் கழித்து விடலாமே! ஆர்வக்கோளாறுகளும், இளமைக்கே உண்டான முட்டாள் தனங்களுடன் அல்லவா! நான் உலகைக் காக்க, அதற்காக என் உயிரைப் பணயம் வைக்கத் துணிந்து விட்டேன் என்று அங்கலாய்த்துக் கொண்டு தனக்குள் சிரித்துக் கொண்டான். ஊர் மக்கள் அவனை மதிப்பார்கள்.வாரம் முழுதும் உழைத்து, சனிக்கிழமை, தன் மனைவி, தனக்காகத் துவைத்து நறுமணமிட்டு வைத்திருக்கும் பட்டும், பருத்தியும் நேர்த்தியுடன் நெய்த அங்கியையும், விலை உயர்ந்த தலைக் குட்டையையும் அணிந்து கொண்டு  ஜெப ஆலயத்திற்கு, குடும்பத்துடன் சென்று தேவனை[ப் பிரார்த்தித்து நன்றி தெரிவிக்கலாம். பின் மூத்தவர்களுடன் கடைத் தெருவிற்கு ச் சென்று வாயடிக்கலாம். இந்தக் கோவில் குட்டிகளும் ,மடையர்களும் சதா விவாதித்துக் கொண்டிருக்கும் பொழுது மறித்து, வேதங்களின் வசனங்களைக் கூறி விளக்கம் கேட்கலாம். தான் கூறும் அழகான விளக்கங்களினால் அவர்களைப் பரிகாசம் செய்யலாம். மனைவி, பிள்ளைகள் மற்றும் தேவைக்கான உழைப்புடன் வாழ்வதே வாழ்வு என அவர்களுக்கே பாடம் எடுக்கலாம். அமைதியாக நண்பர்களுடன் இரவுப் பொழுதில் சற்று மதுவினை அருந்திக் கொண்டு ஊர்க்கதை பேசிச் சிரித்து, வயிறார உண்டு விடுமுறை நாளில் இன்புற்றிலிருக்கலாம். என்று பலவாராக சிந்தித்து மகிழந்தன ஜீசஸின் எண்ணங்கள்.

    கண்களைத் திறந்து, வெற்று மணல் வெளியைப் பார்த்தான். வெளிச்சம் கூடடைந்து கொண்டிருந்தது. விளிம்பில் செந்நிறம் கசிந்து சோகை இழந்து, இருளைச் சூடுகிறது. காற்றின் வேகம் சற்றும் குறைந்திருக்கவில்லை. பாம்பின்  மிருதுவான முலைக்கண்கள் அவனது இடது முழங்கையை இறுக்கிப் படிந்திருந்தது. அதன் கனத்த சீறல் ஒலி குறைந்து, சாந்தமாக ஒலித்தது. அது மறுக்க ஒக்காத சீண்டலுடன், பரிவினை வேண்டி நிற்கும் முறையிடலுடன் மென்மையாக அவனுக்கு மட்டும் கேட்கும் வகையில் காதுகளில் ஓதியது. வானம் இருளடைந்து அந்தி இறங்கும் நேரம், கிரீச்சிடலாக மணற்துகள்களின் அனத்தம் ஒரு தாலாட்டினைப் போல, பாறைகளைக் குடைந்து செல்லும் காற்று. முழுப் பாலைநிலத்திலும் வாரி இறைக்கும் நிலை கொள்ளாமையின் பாடல், ஒரு தாய் பிள்ளையை உறக்காட்ட முயலும் தாலாட்டினைப் போல ஏறியும் இறங்கியும் மணற்துகள்கள் அலைந்து கொண்டிருந்தன.

    "நான் காத்திருக்கிறேன்..... நான் காத்திருக்கிறேன்!..." அக்குரல் சமநிலை இழந்ததைப் போலச் சலிப்புடன் அவனை இன்னும் நெருங்கியது. " இரவு நம்மை முழுக்கடித்துவிடும்!, குளிரும் கூடிக் கொண்டு வருகிறது. ஒப்புக் கொள்! ஒரு மெல்லிய தலை அசைத்தல் போதும்! முடிவெடு! என் அன்பே! மாக்தலேன் அங்கு உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறாள்! ம்ம்! சீக்கிரம்!, காலம் கடந்து கொண்டிருக்கிறது!" 

    எண்ணங்கள் நிலையின்றி, எல்லாத் திசைகளிலும் சுழன்றது.

    ரத்தம் அதன் அழுத்தம் நிறைந்து ஒரு நீண்டப் பட்டைக் கோடாய்ப் பதிந்திருந்தது. அதை அழிக்கவோ இல்லை மறைக்கவோ முற்படவில்லை.

        மலை முகட்டில் நின்று கரிய விழி போல முன்னால் குமிழும் நீர்மையினைப் பார்த்தான். ஒரு அழைப்பு போல இல்லையேல் ஒரு சின்னஞ்சிறியக் கேவல் போல மலை அருகமர்ந்து அதிர்ந்தது. அதன் ஒவ்வொரு அதிர்வுகளுக்கும் எதிர் பதிலாய், நிலத்தில் குத்திட்டுச் சிறு நீர் பெய்தான். அது ஒரு சிறகடிப்பு போல அதிர்ந்து பள்ளம் நோக்கி விலகி ஓடி ஆழம் விழுந்துக் கரைந்தது. மெல்ல அருகிலிருந்த பசும் கத்தாழையின் மணத்தை முகர்ந்தான். அது அவள்! அவள்! என விக்கித்துப் பின் அமைதியானது.

    மனம் அதன் பல்லாயிரம் கண்களுடன் நோக்கியது, செம்பழுப்பு நிற அனல் முன்னே அலையாடியது. நிலம் நா தீண்டிய அனைத்தையும் விழுங்கத் துடிக்கும் அவசரமும் ஆவேசமும். மெல்லக் கைகளை முன்னே எரியும் தீயினுள் விட்டான். பிரகாசமானது. கைகள் துண்டாகும் வரைத் தாக்குப் பிடித்துக் கொண்டான். வெந்தத் தன் சொந்தக் கைகளின் ஊனை, ஒரு ஓநாயைப் போலக் கடித்துத் தின்றான்.

"தன்னையே உண்ணுதல் மூலமாய் பிறிதொன்றிலாத ஒன்றை அறிகிறேன். பசிக்குத் தன் சொந்தக்குடலை அறுத்துத் தின்பவன், காலமற்றவன். காலம், அவன் விரலிடுக்குகளில் அதங்கிக் கொண்டிருக்கிறது."

    தன் முன் வியாபிக்கும் அனைத்தும் ரத்தமாய் இருந்ததைப் பார்த்தான். தன்னையே ஒரு ரத்த உருளையைப் போல!

    மெல்ல ஒரு கிசுகிசுப்பினைப் போல அக்குரல். அவளின் குரல். ஒரு அழைப்பு. ஒரு திண்மை. எல்லாம் மறைந்துப் பின் வெளித்தது போல. மலையைத் திரும்பவும் நோக்கினான். இம்முறை அது ஒரு மழையின் மணத்துடன் அவனிடம் வந்தது. ஆம்! ஆம்! என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான். தன்னை மெல்ல வருடினான். தன் ஆண் குறியையும், விதைப்பையையும் மெதுவாகச் ஸ்பரிசித்தான். பின் கைகளை முகரும் பொழுது தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். வலி!

    இரவு மெல்ல இருள்கிறது. கூர்முட்கள் போலத் திட்டுத் திட்டாய் ஈரம் முதுகில் படிகிறது. காற்றின் சில்லிப்பில் மெல்ல உதறிக் கொண்டான். தன் முன்னே விரியும் ஒரு புதிர்ப்பாதையை பதைப்புடன் பார்த்தான். உமிழ் நீர் தொண்டையில் ஒரு வலி உருளை போல நின்றது.

    தன் பால்யம் முன்னேக் கரைந்து ஒரு நிழல் வெளியாய் ஓடுவதைப் பார்த்தான். எதுவும் செய்யாது வானத்தை வெறிப்பதை, நட்சத்திரங்களை உண்பதைப் பற்றிக் கனவு காண்பதை, இரவெல்லாம் கண் விழித்துப் பகலில் அயர்வதை. மலைக்குன்றிலிருந்து வான் நோக்கிப் பறக்க எத்தனித்துக் கால் உடைந்துக் கிடந்ததை. தன் முதுகுக்குப் பின்னே சிறகுகள் முளைக்க முழு நேரமும் பிரார்த்தித்தை எல்லாம் ஒவ்வொன்றாக நினைத்தான்.

    கூர்மையான அலகும், தட்டையானக் கழுத்தும், விரிந்தச் சிறகுகளும், நீல மணிக் கண்களும் கொண்ட  ஒரு பறவை.

மரணத்திற்கும் அதனைத் தள்ளிப்போடுவதற்கும் சிறகுகளையே நம்பினான். அது நிலத்திற்கும் வானிற்கும் இடைப்பட்ட வெளியில் அலைதலைப் பற்றியப் பிரயாசை. சட்டென உடலற்ற இரு நீண்டச் சிறகுகள் மட்டும் வானில் பறப்பதைப் பார்த்தான்.

    நினைவுகள் ஒரு சுழல் பிம்பத்தைப் போல அவனைச் சுற்றிப் படர்ந்து முடிவே அற்று அவனை ஆக்கிரமித்துக் கொண்டது.

அவன் சரியாக அக்குரலின் கேள்விக்கு ஆம்! எனச் சொல்ல நினைத்த அக்கணம், கை கால்கள் இழுத்துக் கொள்ள, ஜீசஸ் ஒரு பொட்டலம் போலச் சரிந்து விழுந்தான். கண்கள் சொருகிக் கொண்டன. பயம், ஒரு ராட்சசப் பூச்சியைப் போல அவனைத் தொற்றிக் கொள்ள, தன்னிலை இழந்துக் கீழே கிடந்தான். சிறிது நேரம் நிசப்தம் அனைத்திலுமாய் நிறைந்து வழிந்தது. கண்களைத் திறந்தவன், தன்னை மீட்டுக் கொள்ளும் தொனியில், உடல் முழுதும் தொட்டுத் தடவி, அசைத்துப் பார்த்து மூர்ச்சையுற்றான். மேலிருந்து ஏதோ ஒன்று, கடுமையாகத் தன்னை உற்று நோக்குவது போல உணர்ந்தவன் அண்ணாந்து வானைப் பார்த்தான். இரு கண்கள், இரு கரும் வட்டப் பொட்டுகள், அதன் மேல் வெண்ணிற மயிரடர்ந்த புருவங்கள். இருளினுள் இருந்து முளைத்தக் காரிருள் விழிகள். அது அவனிடம் ஏதோ சொல்ல விளைந்தது. தாறுமாறாகத் துடித்துக் கொண்டிருந்தது அவனது இருதயம். கைகளால் மார்பினைத் தடவி மெல்ல சீர்படுத்த முயன்றான். அதன் சொற்கள், சமிஞ்சைகளாக அவனுள் ஊடுருவியது. "வேண்டாம்! வேண்டாம்!" எனும் சொல் அவனைத் தீண்டியது. திரும்ப அவ்விழிகளை நோக்கிக் கத்த வேண்டும் போல அவனுக்கு இருந்தது.  "நான் தனித்திருக்க வேண்டும்! அனுமதி கொடு! என்னிடம் கோபம் கொள்ளாதே!" ஒரு மன்றாட்டாக அவ்விழிகளிடம் இறைஞ்சினான். ஆனால் அதன் கடுமை இன்னும் அடர்ந்தது. பயமுறுத்தும் வகையில், புருவங்கள் முடிச்சிட்டு விழிகள் ரத்தசிவப்பாகியது.

    "வேண்டாம்! வேண்டாம்!" ஜீசஸ் தாளமுடியாமல் பிதற்றலுடன், கத்தி அழத் தொடங்கினான். கண்ணீர் குமிழ்ந்து இரு நீள் கோடுகளாகப் பிசுபிசுத்து தாடை வழியே  மண்ணில் சிந்தியது.

    சரியாக அதே சமயம், பாம்பு மெல்லச் சுருண்டு அவனை விடுவித்தது. முணுமுணுக்கும் அதன் மூச்சின் நெடி வெடித்துக் கிளம்பியது. காற்று சட்டென துர்நாற்றமெடுத்தது.

    பிடி தளர்ந்ததும், கால்களைத் தரையில் பாவிக்க முடியாமல், ஜீசஸ் தலை குப்புற மண்ணில் விழுந்தான். அவனது கண்கள், நாசி, வாய் என அனைத்திலும் மண் துகள்கள் படிந்தது. முற்றிலும் வெறுமையாக உணர்ந்தவனின், பசி, தாகம் எல்லாம் மறந்து விட்டது. தன் மனைவி, பிள்ளைகள் அனைவரும் இறந்து விட்டதைப் போலவும், தான் இங்கு வாழவே அருகதையற்றவன் எனவும், தான் பாழாக்கியத் தன் வாழ்வினைப் பற்றியும் நினைத்துத்  தேம்பித் தேம்பி அழத் தொடங்கினான்.

    துவர்க்கும் மணலை அதக்கிக் கொண்டு, தனக்குள்ளேயே முணுமுணுத்தான். "தந்தையே! என் தேவனே!, உனக்குக் கருணையே இல்லையா? நீ என்ன நினைக்கிறாயோ அது தான் நடக்க வேண்டும் இல்லையா! எத்தனை முறை, எத்தனை முறை நான் உன்னிடம் இதைப் போலவே நின்று தேம்பியிருப்பேன். இன்னும் எத்தனை முறை நான் உன்னிடம் மன்றாட வேண்டும். சோர்வும், பயமும், நடுக்கமும் மட்டுமே உன்னால் இவ்வாழ்வில் எனக்குத் தர முடிந்தது. ஆனால் அதற்குப் பதிலீடாக நான் என்னைப் பணயம் வைக்க வேண்டும். உன் சொல்லிற்கு அடிபணிய வேண்டும்!, சொல்! எனக்குப் புரியவில்லை!"

    ஓரு தனித்தப் புலம்பல். இது முதல் முறையும் அல்ல. அடி நாக்கில் படிந்த மணலை அப்படியே எச்சிலுடன் விழுங்கியவன் உறங்கிப் போனான். கண்கள் மூடியதும் அகம் திறந்து கொண்டது. 

    மணல் வெளி பரந்து சர்ப்பம் நெழிகிறது. அதன் உடல் பூதாகரமாகியது. மேற்தோல் சுருங்கியும் விரிந்தும் அது எல்லைகளை விஸ்தாரமாக்கியது. வானம் பூமி, எனும் இருமைகள் அழிந்து முன்னே அந்தப் பாம்பினைத் தவிர அனைத்துமே மறைந்தன. தன் கிழிந்த வாயைத் திறந்து அமைதியாக இருந்த அதன் கண்கள் மோனத்தில் ஆழ்ந்திருந்தன. எந்த அசைவுமில்லை. இரு கூர்மையான விஷப் பற்களும், ரத்தக் குழம்பு போலச் சிவந்த உள் நாக்கும் கொண்டிருந்த அது, தன்னிலை மறந்து சவம் போலக் கிடந்தது. அதன் வால் நுனியிலிருந்துச் சிறகுகள் கிரீச்சிடும் சப்தம். சாம்பலும், கருமையும் தீற்றலாகப் படிந்த சிறகுகள். தத்தும் அதன் பச்சை அடர்ந்த குச்சிக் கால்கள். சிறகுகள் மடிந்து கிளர்த்த முடியாது உட்குழிந்திருந்தன. பறக்க எத்தனித்துப் போராடிக் கொண்டிருந்தது. உதவி கோரும் குழறல். பின் படபடத்தல். சரிந்து விழுந்து மீண்டும் எழுந்து, பலம் கொண்டுத் தன் சொந்தச் சிறகுகளை உந்தி எழுப்ப முயன்று கொண்டிருந்தது. இருளின் பாதையில் தான் எங்கிருக்கிறோம், எங்கு செல்கிறோம் எங்கே வீழ்ந்து கிடக்கிறோம் என்ற போதமற்றுத் தன்னுள்ளேயே போராடிக் கொண்டிருந்தது அந்தச் சின்னஞ்சிறியப் பறவை. பாம்பின் அகலத் திறந்த வாய் அப்படியே அதனருகில் அசைவற்று இருந்தது. காலமற்று இந்தப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. அது வலுவிழந்து வீழ்வதும் பின் எழுந்திருத்துத் திரும்பவும் பறக்க எத்தனித்துத் தளர்வதுமாய்க் காலம் கடந்து கொண்டிருந்தது. மெல்ல மெல்ல அது நகர்ந்து அதன் வாய்க்கருகில் வந்து சேர்ந்தது. மடிந்திருந்த சிறகுகள் சற்று வெளி வந்திருந்தன. ஆனால் முழுமையாகப் பறக்கும் திராணி இல்லை. கால்கள் தரையில் நிற்க முடியாமல் நடுங்கிக் கொண்டிருந்தன. தான் எங்கிருக்கிறோம் என்று கூட அதனால் யூகிக்க முடியவில்லை. இபொழுது அது, பாம்பின் வாய்க்கருகில் நின்று கொண்டிருந்தது. முடிவேயற்றப் பிலம் போல விரிந்திருக்கும் அதனுள் மெல்லத் தன்னை உந்தியது. பின் எந்த விசனங்களுமற்று அது உள்ளே சென்றது. பாம்பு இப்பொழுதும் பெரிய அசைவுகளற்றுத் தான் வாயை மெல்ல ஒரு வாசலை, அழுத்தி சாத்துவதைப் போல அடைத்துக் கொண்டது. பறவை ரத்தமும், சதையும் உமிழ் நீருமாக, ஒரு மாமிசக் கூழாக அதன் வயிற்றினுள் இறங்குகிறது. உடலற்ற இரு சிறகுகள் மட்டும் தனித்த உயிர் போல அங்கும் இங்கும் துடித்துக் கொண்டிருந்தது.

    திடுக்கிட்டு விழித்தெழுந்தவன். முன்னே வெளியெங்கும் செந்நிறம் படிந்திறங்கி அலை அலையாக நெகிழும்  வானத்தைப் பார்த்தான்.

    சூரியன் மெல்ல வானில் எழுகிறது. "அது என்ன? நிச்சயம் அது நம் ஆண்டவர் தான்! அப்படியென்றால் அந்த பாவப்பட்டப் பறவை?"

    தன்னுள்ளே எதுவோ முறிந்ததைப் போல உணர்ந்தான். அவனால் எதுவும் சொல்ல முடியவில்லை. உள்ளூற அறிய மட்டுமே முடிந்தது.

".....மனித ஆன்மா! அப்பறவை, மனிதனின் புனித ஆன்மா!"

    நேரம் கடந்து கொண்டிருந்தது. சூரியன் தலைக்கு மேலே நகர்ந்து நிலமெல்லாம் எரித்துகள்களாக்கியது. அவன் இன்னும் அந்தக் உருவெளியின் எண்ணங்களிலேயே மூழ்கியிருந்தான். வெளிச்சத்தின் நீண்டக் கதிர்கள், ஒரு கூர்மையானப் பட்டையாய் செங்குத்தாக அவனது மண்டைக்குள் இறங்கியது. கொதிக்கும் மண்டை வழியே, உள் இறங்கி, தொண்டை, மார்பு வயிறு வழ சூடு, உடல் முழுதும் பரவியது. குடல்கள் மேலும் சுருங்கி, முந்திரிப் பருவம் முடிந்தப் பின், மேற்தோல் சதைந்துக் கூழாக, வெறும் பொருக்குகளாக நிலத்தில் எஞ்சும் திராட்சைக் கொத்துக்களைப் போல, வறண்டு, கொப்பளிக்கும் திரவக்குமிழ்கள் அனைத்தும் ஆவியாகி இழுத்து சுருங்கி விரிந்தது. நாக்கு உமிழ் நீர் சுரப்பற்று மேல் அன்னத்தில் ஒட்டிக் கொண்டது. விரல் நுனிகள் நீலம் பாரிக்கத் தொடங்கியது. சூடு தாங்காது மேற்தோல் உரிந்து, சிவந்த அடித்தோல் கிழிந்துக் கன்றியிருந்தது. உடல் முழுதும் காந்தலும் அரிப்பும். தகிக்கும் மணற் துகள்கள் காயத்தில் படிந்து மேலும் எரிச்சலுண்டாக்கியது. அவனது உடலும், ஆன்மாவும், ஒரு மரக்கட்டையைப் போல எரிந்துப் புகையாகுவதைப் போல உணர்ந்தான்.

    காலம் ஸ்திரமற்று, வெயிலின் உக்கிரத்தால் அமைதி இழந்தது. அவன் தனது மார்புகளில் கை வைத்துக் கொண்டான். கூடிக் கூடிச் செல்லும் அதன் துடிப்புகள், ஆழ்ந்து பரிதவிக்கும் சுவாச இழைப்பில், காலம் சுருங்கிச் சிறியதாகியது. பின் ஒரு புள்ளியில் மொத்தப் பிரபஞ்சமும், அவனைப் போலவே மூச்சிழைக்கையில், அது தன் துடிப்பினை உள்வாங்கிக் கொண்டுத் தன்னைப் போலவே அமைதியின்றித் தாறுமாறாகத் துடிக்கையில், விரிந்து மரணம்! மரணம்! எனும் விதிர் விதிர்த்துப் பெரிதாயிற்று. பசி, தாகம் எனும் உணர்வுகள் அர்த்தமிழந்தன. மனைவி, பிள்ளைகள் குடும்பம் என்று எந்த ஏக்கமும் அவனிடமில்லை. ஒரு ஒத்திசைவு, அவனது உடலும் ஆன்மாவும் அனைத்துமாய் உருமாறியிருந்தது. கேள்விகளோ, பதில்களோ இல்லை. வெளிச்சத்தின் தீவிரத்தால் பார்வை மங்கியது. ஆனால் கண்களே உடலாக எரியும் நிலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு ராட்சச வாய் ஒன்று தன் முன்னே விரிந்திருக்கிறது. அதன் கீழ் தாடை தரையிலும், மேற்தாடை ஆகாசத்திலும் இருந்தது. அடியாழமற்றக் குகை போல அது அவன் முன்னே திறந்துக் கிடப்பதைப் பார்த்தான். வலி! எனும் உணர்வு உடல் முழுமைக்கும் ஆக்கிரமித்திருந்தது. அதை அவன் சொல்லாக்குகையில், தீவிரமிழக்கும் சூட்சுமத்தைப் புரிந்து கொண்டான். திரும்பத் திரும்பத் தனக்குள் அச்சொல்லைச் சொல்வதன் மூலம் அப்படி, ஒன்று தனக்கு வெளியே யாருக்கோ நிகழ்வதைப் போல உருவகித்துக் கொண்டான். 

    நாட்கள் இரவும் பகலுமாக, வெளிச்சமும், இருளுமாக உருண்டு கொண்டிருந்தது. ஆனால் காலம் அவனுக்கு ஸ்தம்பித்து விட்டது. ஒற்றை நாளினுள் அமர்ந்திருந்தான். அது நகரவே இல்லை, அவனைப் போலவே. முன்னே மின்னி மறைகிறது வலி, எனும் ஒற்றைச் சொல்.ஒரு நள்ளிரவில், அவன் ஒரு ஆண் குரலைக் கேட்டான். ஒரு சிங்கம் கவனத்துடன், மெல்லக் காலடியெடுத்து அவன் முன்னே வந்து நின்றது. தன் உடலை உலுக்கித் தங்க நிறப் பிடறி மயிரைச் சிலுப்பியது. 

    "வெற்றியாளனே, வருக, என் குகைக்கு!. சின்னஞ்சிறியச் சபலங்களுக்கும், களிப்புகளுக்கும், இன்பங்களுக்கும் தன் மனதைத் தவற விடாதவனுக்கு, நான் தலை வணங்குகிறேன். எளியதையும், நிலையற்றதையும் நாம் எப்பொழுதுமே விரும்பியதில்லை. நமது பார்வை விசாலமானதும், மேலும் சிக்கலானதும் கூட. மாக்தலேன்!...." தனக்குள் செருமிக் கொண்டு மீண்டும் தொடர்ந்தது அக்குரல். "மாக்தலேன்! உனக்கு தகுதியானவள் அல்ல. உண்மையில் இது ஒரு ஒற்றைப் பெண்ணினால் முடியும் காரியமுமல்ல. அவள் நமக்குப் போதாது. நீ இந்த உலகையே மணக்க வேண்டியவன். எல்லையற்று விரியும் நம் ஆகிருதி அதைத்தானே நமக்கு உணர்த்துகிறது. துறவியே!.நீயே மணமகன். கேள்! இந்த மண்ணின் பெருமூச்சினை. வானத்து விளக்குகள் தூண்டப்படுகின்றன. எங்கும் பெருகும் விழாக்கோலம். விருந்தினர்கள் வந்துவிட்டார்கள். வா! நாம் போகலாம்!"

" யார் நீ?"

    "நான் நீ தான்!--- உன் இதயத்தினுள் பசியுடன் காத்திருக்கும் சிங்கம். சிங்கங்கள் இரவின் இருளினுள் ஆட்டுப்பட்டிகளைத் தானே குறி வைக்க முடியும். ஆம்! அதுவே இந்த உலகின் ராஜாங்கம். எத்தருணத்திலும் அதனுள் குதித்து இரையைக் கவ்வுவதைப் பற்றியக் கவனத்துடன் அது எடை போடுகிறது. நான் பாபிலோனிலிருந்து ஜெருசலேமிற்கும், ஜெருசலேமிலிருந்து அலெக்சாண்ட்ரியாவுக்கும், பின் அங்கிருந்து ரோமுக்கும் என சதா தலை தெறிக்க ஓடிக் கொண்டிருக்கிறேன். எனக்கு பசி! இந்த உலகம் முழுவதையும் திங்கத் துடிக்கும் பசி! அந்தி மயங்குகையில் நான் திரும்ப உன் மார்பினுள் நுழைந்து என்னை மறைத்துக் கொண்டேன். ஒரு பயங்கரமான சிங்கம் ஆட்டின் தோலைப் போர்த்தித் தன்னை மறைத்துக் கொண்டது. எந்தப் பற்றுதலும், விருப்பங்களுமற்றத் துறவியே, நீ ஒரு கோதுமை மணியினைப் போல, ஒரு துளி உயிர்த் திரவம் போல, உன் அப்பாவித் தனம் என்னைச் சீண்டியது. சொல்! உன் உண்மைத் தன்மையின் ரகசியம் என்ன?, நீ மனத்தில் இருத்தும் இந்தப் பரலோகத்தின் தந்தை....உனக்கென்ன அளித்தார். வலியும், துக்கமும், இறக்கி வைக்கவே முடியாத பாரமும் தானே உன்னை அமிழ்த்திக் கொண்டிருக்கிறது. சொல்! என் வீரனே! தூய்மையின் சொரூபமாய் உன்னைக் காண்கிறேன். உன் பரிசுத்தத்தின் வெளிச்சம், இவ்விருளைக் கூட வெளிச்சமாக்கப் பண்ணி விடும் என்று அறிகிறேன். அதனால் இருளுக்காகக் காத்திருந்தேன். இரவு தொடங்கியதும், என் பொய்த்தோலைக் கழற்றிக் கொண்டு, பாபிலோனையும்,ஜெருசலேம், அலெக்சாண்ட்ரியா மற்றும் ரோமையும் தாண்டி நேரடியாக உன்னிடம் வந்திருக்கிறேன். இதோ! இந்த வன் மிருகத்தின் தோற்றமே இயல்பானது. பாசாங்குகளற்றது."

    "நீ யாரென எனக்குத் தெரியவில்லை?, உண்மையில் என் தேவனின் சொர்க்க ராஜ்ஜியமே எனக்குப் போதுமானது. இவ்வுலகின் ராஜ்ஜியம் அழிந்துபடும். அதற்கு நான் விரும்பியதுமில்லை!"

    "இல்லை நண்பா! போதும்! உனக்கு நீயே பொய் சொல்லிக் கொள்ளாதே! நிச்சயம் அது உனக்குப் போதுமானதில்லை. உன்னிடமே கேட்டுக் கொள்! உன் உள்ளே அதற்கான விருப்பம் சிறுதுளி கூட இல்லை என்று நம்புகிறாயா!. என்னை ஏன் சந்தேகத்துடன் பார்க்கிறாய்? நிச்சயமாக நான் உன்னை ஏமாற்றவோ, உன்னைச் சபலப்படுத்தித் தூண்டி விடவோ நான் வரவில்லை. உன் உண்மைத் தன்மையை உனக்கு அறிவிக்கவே உன்னிடம் வந்தேன்.  என்னிடம் எந்தத் தந்திரங்களுமில்லை. உன்னை வழி நடத்தும் உத்தேசமும் எனக்கு இல்லை. துறவியே! நீயே சிந்தித்துப் பார்! உனக்கு வெளியிலிருந்து உன்னை யாரேனும் சபலப்படுத்த சாத்தியமுண்டா?  உனக்கு இதன் மேல் இருக்கும் விருப்பத்தின் வலிமையே, என்னை உன்னிடம் சேர்ப்பித்திருக்கிறது. உன் ஆழ்மனதின் குரலே ஒரு வெளிப்பாடாக என் வழி ரூபம் கொண்டிருக்கிறது. உன்னுள் இருக்கும் சிங்கத்தின் உருவே, நானாக உன் முன்னே தெரிகிறேன். உன்னை ஒரு ஆடிபிம்பம் போல என் வழி காண்கிறாய்.  மறவாதே! நீ ஒரு ஆட்டுத்தோலைப் போர்த்திய சிங்கம். மனிதர்கள் அதனை நம்பி உன்னை அணுகுகையில், சரியானத் தருணத்தில் பதுங்கியிருந்து, நீ அவர்களைப் பிடித்து விழுங்கி விடுவாய். உனக்கு நினைவிருக்கிறதா? நீ சிறுவனாக இருக்கும் பொழுது, ஒரு சாலடியச் சூனியக்காரி, உன் கை ரேகைகளைக் கணித்தாளே! 'உன் கைகளில் நட்சத்திரங்களின் தீற்றல்கள் குறுக்கு வெட்டாகப் போகிறது. நீ ராஜாவாகப் போகிறவன்' என்று சொன்னாளே' என் அதனை மறந்ததைப் போல என்னிடமே நடிக்கிறாய்? எனக்குத் தெரியும் நண்பா! இரவும் பகலும் நீ இதனை அடைவதை மட்டுமே, பலவாறாக நினைத்துக் கொண்டிருந்தாய்! எழுக! டேவிட்டின் மைந்தா! உன் ராஜ்ஜியத்தினை வென்றெடு!"

    ஜீசஸ் தலை குனிந்து அக்குரலைக் கேட்டுக் கொண்டிருந்தான். பரிட்சயமான அக்குரலை நடுக்கத்துடன் கூர்ந்தான். தன் சொப்பனத்தினுள் அக்குரல் கேட்டதா? என்று? எப்பொழுது?சிறுவயதில் யூதாஸ் அவனை அடித்துத் தள்ளிய பொழுதா?, மற்றொரு சமயம் தான், பகலிரவு பாராமல் வெளியே சுற்றித் திரிந்து, பசியுடன் வீடு திரும்புகையில் தன் சகோதரர்களான நொண்டி சைமனும், பக்திமான் ஜேக்கப்பும் கூச்சலிட்டுக், கேலி செய்து, ஊளையுடன் தன்னை வரவேற்பதற்காக வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்தப் பொழுது, பின் அந்தக் கலகக் காரனின் தண்டனை நாளில், தான் சிலுவையைத் தூக்கிச் செல்லும் பொழுது, ஒரு அருவருப்பான ஜந்துவைப் போல, இம்மக்கள் தன்னைப் பார்த்து விலகியும், வசவுகள் பொழிந்தும், காறி உமிழ்ந்தும், இகழ்குகையில், ஆம்! இதே சிங்கக் குரல்! ஒரு ஆண் மகனின் குரல். தன்னுள் குதித்து எழுந்ததை. ஒருவிதமான ஆக்ரோஷத்துடன் அதன் காலடிகள் தன்னுள எம்பிக் குதித்ததை அவன் உணர்ந்திருந்தான்.

நள்ளிரவின் நடுக்கும் குளிர். பூச்சிகளின் ரீங்கரிப்பு. புழுதி அப்பியக் கண்களுடன் தன் முன்னே இருக்கும் உருவத்தைக் கவனித்தான் ஜீசஸ். குளிர் தேங்கித் தேங்கிக் கனம் கூடிக் கொண்டிருந்தது. ஒரு மண் பானையின் அடிப்பகுதி போல, வானம் குமிழ்ந்து தலைக்கு மேலிருந்து அவனை அழுத்தியது. சிங்கத்தின் பார்வை அவனை விட்டு அகலவில்லை. அதன் சீறும் மூச்சின் வெம்மையை அவனால் தெளிவாக உணரமுடிந்தது. அது தன் உடலை முகர்ந்து கொண்டே, பின்னங்காலினால் விலாப்பகுதியில் அழுத்திச் சொரிந்தது. எதிர்ப்பைக் காட்டுவதைப் போல உடலை உலுக்கியது. திடீரென புகை உருவாக, ஒரு கலங்கல் தோற்றமாக உருமாறிய அது தன் மயிரடர்ந்த வாலினை, அவன் தலைக்கு நேராகச் சுழற்றிப் போக்கு காட்டி மறைந்தது, பின் வெளித்தது. அதன் நிழல் தோற்றத்தின் கர்ஜிக்கும் குரலை அவனால் கேட்க முடிந்தது. அது தோன்றி மறையும் கணம், ஏதோ ஒன்று அவனுள் ஊடுருவிச் செல்கிறது. அவனது உடல் உள்ளீடற்றதாக மாறி விட்டதைப் போல உணர்ந்தான். துடித்து வெடித்து விடும் நெஞ்சில் கை வைத்து அமைதிப்படுத்த முயன்றான். நிழல் உடல் மெல்ல மெல்ல அவனை நெருங்கி அவனைச் சுற்றி ஒரு இருள் வளையமாய் எல்லை விரித்தது.  

"சரிதான்! பசி, வலி, துயரம், பயம், இகழ்ச்சி இவைகளைத் தானே என்னுடைய தாழ்ச்சியின் பெயரால் இதுவரை நான் உள்வாங்கியிருப்பேன். வேறென்ன பெரிதாய்! ஒரு கன்னத்தை அடித்தவனிடம் மறு கன்னத்தைக் காட்டினால், அவன் அதிலும் தன் வன்மம் தீர அடிப்பான். அதில் எந்த மாற்றமமுல்லை. உண்மையில் என்னை உயிருடன் தின்று கொண்டிருக்கும் இந்தக் கடவுள். எல்லாம் வல்லத் தந்தையின் பெயரால் ஒரு ஒரு முறையும், நான் ஏமாற்றப்படுகிறேன். பதிலீடாக, என் சகோதரர்களின் சாபம், என் தாயின் தீராத அழுகை. நான் என் கண்முன்னே காண்கிறேன். இதோ சந்தைக் கூடத்தில், என்னை ஒரு கோமாளியைப் போல, கிறுக்கனைப் போல காணும் கண்களை. எல்லோரும் சிரிக்கிறார்கள். கேலி செய்கிறார்கள். நான் சிறுத்து சிறுத்து, இறுதியில் என்னை ஒரு மனிதப் பிறவியாக என்னாலேயே நம்ப முடியவில்லை. இதோ! இவர்கள் உண்கிறார்கள். குடிக்கிறார்கள். எக்காளமிடுகிறார்கள். மகிழ்ந்து நடனமிடுகிறார்கள். கோபம் வந்து சண்டை போடுகிறார்கள். வகை தொகையின்றிக் கூடிக் கும்மாளமிட்டுக் களிக்கிறார்கள். நான் என் கனவுலகின் வாசலில் மண்டியிட்டுக் காத்திருக்கிறேன். தேவனின் சொல் ஒரு தேன் துளியாக, ஒரு வறுத்த மணமான இறைச்சித்துண்டாக, நன்கு புளித்த, நுரைத்த மதுவாக, அழகியப் பெண்களாக வேண்டிப் பிரார்த்திக்கிறேன். வெறும் காற்றை மட்டும் குடித்துக் கொண்டு, இது எல்லாமே எங்கோ சொப்பன வெளியில் யாருக்கோ நிகழ்வதைப் போல, ஏக்கத்துடன் நானும், பல காலமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இது எல்லாமும் எனக்கும் உண்மையில் நடக்கும். நானும் மற்ற ஆண் மகன்களைப் போல, உயிர் வாழ முடியும் என்று  நம்புவதற்கான ஒன்றும் நிகழவில்லை. இவர்களின் முன் ஒரு பேடியைப் போல, என்னை மறைத்துக் கொண்டுப் பயந்து, தப்பி ஓடுவதை மட்டுமே, இந்த பரலோக ராஜ்ஜியத்தின் ஒரே தந்தை எனக்கு ஒழுங்காக சொல்லிக் கொடுத்திருக்கிறார். போதும்! போதும்! ஒரு நோயுற்றவன் போன்ற என் வாழ்க்கை! இனிமேலும் முடியாது! இது என்ன! என் மூதாதையின் சொற்கள் எனக்கு வேண்டாம். நான் டேவிட்டின் வழித்தோன்றல் இல்லை. யாருடைய ராஜ்ஜியமும் எனக்குத் தேவையில்லை. இந்த நிழல் என்னிடம் சொல்வது சரிதான். எனக்குத் தேவையானது இதோ, நான் நிற்கிறேனே, இந்தத் திடம். என் முன்னே, என் அறிதலுக்குட்பட்ட இந்த மண்ணும், கல்லும்,  இதன் மாமிசமும் தான். இதுவே எனக்கான ராஜ்ஜியம்! வானத்தையும், அதன் சொர்க்கத்தையும் அந்தத் தேவனே பார்த்துக் கொள்ளட்டும். 

அவன் எழுந்து நின்றான். வலுவைத் திரட்டி, நின்ற இடத்திலேயேக் குதித்தான். கண்ணுக்குத்தெரியாத வாளின் மினுக்கம் போல, ஒளி அவனைச் சுற்றி இறுக்கியது. அவன் தன் உடலை வலு கொண்ட மட்டும் நிமிர்த்தி முன்னே தெரியும் வெட்ட வெளியை நோக்கினான். சிங்கத்தின் கர்ஜனை அவனுள் இறங்கியது. " நான் வெறும் மனிதன் இல்லை. இதோ இந்த எல்லையற்ற மண்ணின் மைந்தன். நான் தயார்! போகலாம்!" அவன் தனக்குத் தானே சத்தமாகச் சொன்னான். சூழலின் நிச்சலனம் கலைந்து, பின் காற்றின் நிலைத்த அனக்கம் மீண்டும் தொடர்ந்தது. "போகலாம்! ஆம்! போகலாம்!" சட்டென சிங்கத்தின் நிழல் உரு, மணல் துகள்களாகக் கரைந்து மறைந்தது.

 இருள் வெளியில் ஒளித்துணுக்குகள் மெல்ல மெல்லக் கூடி வருகிறது. அண்ணாந்து வானத்தைப் பார்த்தான். ஒளியின் திண்மை பெரிதாகி விரிந்தது. அது குரல் கொண்டு அவனை அழைத்தது. பார்! பார்! என அவனை நிமிண்டியது. ஒளி விழுந்த நிலத்தில் காட்சிகள் ததும்பின. சதுக்கங்களும், கோட்டை கோபுரங்களுமாக நகரத்தின் வண்ணம் மாறி மாறி அலைத்தது. அதனைச் சுற்றி வளையமாகப் படர்ந்திருக்கும் மாபெரும் வெற்று நிலம். மலைகளும் கடல்களும் சூழந்த நிலங்களின் சாயைகள் துடித்து அடங்கிக் கொண்டிருந்தன. பாபிலோன், ஜெருசலேம், அலெக்சாண்ட்ரியா என கணத்திற்குக் கணம், காட்சிகள் மாறின. காட்சி வெளிக்கப்பால் ஸ்தூலமாகத் தெரிந்தது ரோம் நகரம். மறுபடியும் அத்தீர்க்கமான குரலின் வெளிப்பாடு,

"பார்! தெரிகிறதா உனக்கு, பார்!"

விரிந்த விழிகளுடன் ஜீசஸ், தன் முன்னே விரியும் காட்சிகளின் நிலத்தில் கட்டுண்டிருந்தான். மஞ்சள் நிறச் சிறகுகள் கொண்ட தேவதை ஒன்று  வானிலிருந்து மெல்லத் தரையில் அமர்ந்தது. புலம்பல்களும், கூச்சல்களும் கேட்கின்றன. நான்கு ராஜ்ஜியங்களின் மக்களும் கைகளை உயர்த்தி வானை நோக்கி மன்றாடிக் கொண்டிருந்தனர். ஆனால் எல்லா மனிதர்களையும் தொழு நோய் ஆட்கொண்டிருந்தது. அவர்களின் விரல்கள் மழுங்கியிருந்தன. பிண்டங்கள் போல அமர்ந்திருந்த அவர்களின் உதடுகள் சிதைந்து அழுகத் தொடங்கியிருந்தது. அவர்கள் குரல்கள் வெற்றுப் பிதற்றல்களாய் வானை நோக்கிச் சிதறியது. கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் உடல் உறுப்புகள் அழுகி விழ ஆரம்பித்தன. தெரு முழுதும் மனித உறுப்புகளின் துண்டங்கள் அழுகல் நெடியுடன், மீன் குஞ்சுகள் துடிப்பதைப் போலத் துடித்துக் கொண்டிருந்தன. 

ஜீசஸால் தன் முன்னே நிகழும் எதையுமேத் தாங்க முடியவில்லை. கைகளை உயர்த்தி மண்டியிட்டு அழத் தொடங்கினான். "தேவனே! வேண்டாம்! எங்களிடம் கருணையுடன் இருங்கள். ஏன்! மனிதர்களை இப்படிக் கைவிடத் துணிந்தீர்! வேண்டாம்! தந்தையே!"

இரண்டாவது தேவதை, கழுத்திலும், கால்களிலும் மணிகள் குலுங்கத் தரையில் விழுந்தது. அதன் கண்கள் முட்டை வடிவில் பெரிதாகவும், காது வரை வாய் கிழிந்து இளிப்பே முகமாகக் கொண்டிருந்தது. எல்லோரது முகங்களிலும் அதன் பைத்தியக் களை பற்றிக் கொண்டது. கொப்பளிக்கும் வெறிச்சிரிப்பு. கண்கள் பிதுங்க எலும்புக் கூடுகளாக இருக்கும் மக்கள் கூட்டம், தன்னுள் இருக்கும் மிச்சம் மீதி உயிரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக