செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

வானும் மலையும்

மலைப் பாறையினுள் நீர் தேங்கிய பள்ளங்களில் அமைந்திருக்கும் வான நீலத்தை பார்ப்பதைப் போல வானம் தலைகீழாகி இருந்தது. வானத்து இடைவெளிகளில் பூமி நெளிந்து கொண்டிருந்தது. பல்லாயிரம் கேவல்கள் விசும்பை நக்கித் துடிக்கும் பல கோடி சிறகுகள். கோட்டு வெளிச்சமாய் இருளைத் துழாவும் ஒளி. அசைவின்மையை ஒரு கூச்சல் போல சப்தமெழுப்பி காதுகளை அடைத்து பிளிறும் மலை. மலை ஒரு மாபெரும் உடல் போல கிடந்தது. பச்சை அதன் தோலாய்ப் படர்ந்திருந்தது. அதன் உறுப்புகளென மலைக் குன்றுகள் சூழத் தனிமையைக் குடித்துக் கொண்டு இரையெடுக்கும் மிருகம் போல முணங்கிக் கொண்டிருந்தது.

அங்கு காலம் என்பது ஒலியும் ஒலியின்மையும் தன்னைத்தானே பணயம் வைப்பதனால் உருவாகும் பதற்றத்தின் அதிர்வுகள். ஒலி மீள உருவாகும் தோறும் மலை காலம் கடக்கிறது. பின் உறக்கத்திலிருந்து புரண்டு எழும்புகிறது. வெளிச்சமும் இருளுமாய் அது காலத்தை அளக்கிறது, ஒலியின் சுரோணிதம் அதன் பற்பல இடுக்குகளிலிருந்து பொங்கி பள்ளங்களை நிரப்புவதும் பின் வழிந்து வெற்றாவதுமாய் காலம் தன்னைக் கலைத்துப் போட்டு உருமாற்றுகிறது.

ஒரு வானமற்ற இரவில் நட்சத்திரங்கள் உதிர்ந்து மலை முழுதும் வெண்ணிறத் திட்டுகளாய் பதிந்து கிடந்தது. குழந்தை உறங்கி எழும்பும் போது அருகில் தாய் இல்லாமல் போனால் வெறித்து அழுவது போல, மலையின் கேவல் ஒலி, வெண் அருவியாய் சிதறித் தெறித்து வானம் தேடி பூமியை நோக்கி ஓடியது. மண்ணெல்லாம் பரவி விதிர் விதிர்த்து தேடியது. 

இரு எல்லைகளுக்குள் இழுத்து முடுக்கிய கம்பி தன் முயற்சியின்றி அதிர்ந்து கொண்டே இருப்பதைப் போல மண்ணெங்கும் ஆகாசத்தின் அதிர்வலைகள். அவை வானின் பிரதிபலிப்பே அன்றி வானல்ல. வானம் தன் எல்லையற்ற மற்றும் கட்டுப்பாடின்மையை ஒரு மாபெரும் வலை போல சூழ்ந்து கொண்டிருக்கும். அது திசைகளற்றது. காலமுமற்றது. 

ஆனால் வேறு வழியில்லை. மலை தன்னுள் அடங்கி பூமியினுள் கரைந்து கொண்டிருக்கிறது. அதன் மொத்த திரவமும் ஊற்றுகளாய் உடைந்து உப்புப் பறல் போலக் கரைந்து மறையத் தொடங்கியது. வானம் வானம் வானம் என்று அதன் உடைப்பெடுத்த பகுதிகளிலிருந்து நீர்மை பொத்து உதிர்ந்தது.

கரிய இரவினுள் கருமை பூசியது எது. இருளும் ஒளியும் எதனைக் கொண்டு உருவெடுத்தன. கரைந்த மலையின் துகள்கள் தங்களுக்குள் உசாவின. மலை எனும் இருப்பு அற்றுப் போனதும் அதன் எதிரொலிகளால் ஆன கருத்த நிழல் உருவம் பற்றி எரியத் தொடங்கியது. நெருப்பின் நா ஒரு செந்நிற வேங்கை போல எம்பிக் குதித்து ஆடியது.

அந்நா தொட்ட திசைகளிலெல்லாம் இன்மை பரவியது. இன்மை தன்னுள் புசித்த அனைத்தையும் ஒளியிலிருந்து இருளாக்கியது. இருள் பெருங்கடலின் அலை எனக் கரை தொட்டு பின் காலமற்ற வெளியினுள் அமிழ்ந்தது. முன்னும் பின்னுமாய் அது தொட்ட அனைத்திலும் இருள் ஒளி முயங்கிய இரண்டுமற்ற பிரதேசம் உருவாகியது. அதை நீலம் என்றனர். அது தன்னுள் தான் என நிறைந்து பெருகியது. 

பெருகப் பெருக அதுவே பசியாகியது. சூழ்ந்த அனைத்தையும் உண்டுப் பெருத்தது. அதனை விராடம் என்றனர். அனைத்தும் உண்டபின்னும் அடங்கவில்லை.

வானம் என்பது வாய். திசைகளற்ற வாய் என அவர்கள் அறிந்திருந்தனர். உண்ண உண்ணக் குறையாத உணவை பூமியில் விதைக்க அமிர்தம் கடைந்தளித்தனர். உண்டு திளைத்தும் அடங்காப் பசியினை அளிக்கும் பெரும் இச்சையினை இருள் ஆக்கினர். உண்ணும் உணவை ஒளி ஆக்கினர். உண்ணுதல் எனும் செயலே ஒலியும் அதன் இன்மையும் ஆனது.

உண்ண உண்ண வானம் கருவிலிருந்து இருளிலிருந்து துளிர்த்தது. 

உண்ண உண்ண மலை கரைந்தழிந்து மீண்டது.

ஒரு வானமற்ற இரவில் பெய்த மழையில் மலை இன்னும் இன்னும் எனத் தன் தனிமையில் கருமையில் அமிழ்ந்தது.

வானம் தன்னை தலை கீழாக்கி பூமியான பொழுது, நட்சத்திரங்கள் பாளம் பாளமாய் உடைந்திருந்தது. அதன் இடுக்குகளில் நீர்மை மலையின் சுரோணிதப் பாட்டையாய் சுழித்தொடியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக