உடல் அதன் சமூகத் தேவையை இழக்கும் பொழுதே சுதந்திரம் அடைகிறது – ரமேஷ் பிரேதன்
ஆம். நான் ஏன் ஒற்றைப் பாலினத்திற்குள் உழல்கிறேன். என் உடல் அதன் அமைப்பு அதன் ஸ்தூல இருப்பில் நான் யார் என்பதை என்னால் தகவமைத்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் சமூகம் அதன் சொந்தத் தேவைகளின் பொருட்டு என் உடலினை வகைப்படுத்தி விட்டது. நான் ஆண் என்றது. ஆண் எனும் ஒற்றை இருப்பினுள் நான் பல தரப்பட்ட உடல்களை உருவாக்கிக் கொள்கிறேன்.
அந்தக் கோவிலினுள் மூன்று கற்சிலைகள். அவைகள் உடல் உறுப்புகளின் வடிவங்கள். அதில் ஒரு ஆணும் இரு பெண்களும் இருந்தனர்.
ஆண் என்பது ஒரு விடைத்த ஆண் குறி. பெண் என்பது விரித்த திதலை பூத்த யோனியும், ஒரு ஒற்றை முலையும்.
ஆண் குறிக்கு விந்துவும், பெண் குறிக்கு ரத்தமும், முலைக்கு பாலும் என கோவில் உத்திரத்தில் இருந்து அபிஷேகமாய் பொழிந்து கொண்டிருந்தது.
ஏனோ அந்த சுடுகாட்டுக் கோவிலிற்குள் நான் மட்டும் தனித்து நின்று கொண்டிருந்தேன். எனக்குள் அழற்படு காதை மனப்பாடம் போல ஓடிக் கொண்டிருந்தது. சக்கரவாளக் கோட்டத்திலிருந்த பேய்கள் எல்லாம் என் செவினுள் ஈக்கள் போல ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.
நான் ஆண் எனும் இருப்பை சந்தேகப்பட்டேன். உடல் என்பது புணர்தலால் தீர்மானிக்கப்படுகிறது எனில் ஆண் என்பவன் அதில் ஏதுமற்றவன். அவனது குறி என்பது ஒரு அனிச்சை கருவி. அவன் கட்டுப்பாடுகளுக்குள் அதற்கு என்றுமே இடம் இருந்ததில்லை. அவனது விந்து என்பது ஒரு உப பொருள், அதன் பல கோடிக் கணக்கான அணுக்கள் அவனுடையது என்பது பேருக்கு மட்டுமே. அது அவன் செரித்த அனைத்திலிருந்தும் தோண்டத் தோண்ட முளைத்துக் கொண்டே இருக்கும் ஒரு விராட வடிவம்.
அவனால் தன்னுடைய விந்தொழுக்கை கட்டுப் படுத்த முடியாமையின் விளைவே அவனது புணர்தல். அவனது குறி என்பது ஒரு தனித்த உயிர். அவனில்லாது கூட அதனால் செயல்பட முடியும்.
நான் பெண் எனும் இருப்பைக் கடக்க முயல்கிறேன். ஏன். ரத்தம் ஒழுக அதிலிருந்து நான் மீள்வதைக் காண்கிறேன். பின் துடிதுடிக்க அதனுள் இறங்கி மறைகிறேன். அது ஒரு பாழ் போல என்னுள் உருவாகியிருந்தது. அதனை ஒரு மாமிசம் உண்ணும் வாய் போல என் கனவுகளில் விதிர்விதிர்த்திருக்கிறேன். ஆனால் அதன் ஈர்ப்பு சகிக்க முடியாமல் மழைக் கால விட்டில் போல அதன் ஜோதியினுள் கரைந்தழிகிறேன்.
அதனுள் இறங்கிய பின் நான் அது என்ற உணர்வற்றுப் போகிறேன். அங்கு என்னை எப்படி உணர என்ற ஸ்தூலம் கரைந்து அரூபம் ஆகிறேன். ஏன் என் குறியிலிருந்து ரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது. ஏன் நான் அணங்கு ரூபம் கொள்கிறேன். உடல் என்பது புணர்வதால் அறிவதன்று. அது அழிவதால் அறிவது போலும். அவள் என்பவள் என்னுடைய சொந்த சுய வெறுப்புகளின் புள்ளியிலிருந்து தளைக்கிறது. ஆனால் என்னுடைய எண்ணங்களில் நான் யார். அவள் அவன் அது அற்றது என்று ஏதேனும் உண்டா.
ஒரு அக்றிணை போல என்னை மாற்றிக் கொள்ள முடியுமா? உண்மையில் நான் அப்படி எண்ணவில்லை. ஒரு பாலற்ற பிறவியாய் ஆவதைப் பற்றி கனவு கண்டு கொண்டிருக்கிறேன். ஆனால் நான் என்பதையோ மறுதலிக்க முடியவில்லை.
ஒரு பெண்டுலம் போல இரு பால்களுக்கிடையில் நகர்ந்து கொள்கிறேன். அதன் நடு மையத்தில் அமையும் பொழுது பெண்டுலம் துண்டாடுகிறது. நான் தூக்கி வீசப்படுகிறேன்.
வேங்கைக் கானலில் தன்னந்தனியே அவள் நடந்து கொண்டிருந்தாள். நெடுவேள் குன்றத்தின் அருவியிலிருந்து ஆழம் நோக்கி சாடினாள். அவள் தன்னை அம்மணமாக்கி இருந்தாள். அவளது இடது முலையில் குருதி ஒரு மண் தடம் போல பொருக்கோடி உடைந்திருந்தது. முலையறுத்த நொடியைத் திரும்ப நோக்கினாள். தீப்பிழம்பின் உச்சத்தில் உழித்தாண்டவம் ஆடிய காளி, தன் கால்களுக்கடியில் தலையற்ற தன் கணவனின் முண்டத்தை மிதித்து மிதித்து அறைந்தாள். தன் தலையையும் அறுத்து விடவே எண்ணியிருப்பாள். அதன் ரத்தப் பெருக்கைத் தானே அள்ளி குடிக்க வேண்டும். அவனது நொய்ந்த குறியைத் தடவிக் கொடுத்தாள். அது பசித்த தெரு நாய் போன்ற பாவத்துடன் அவளை நோக்கியது. பின் அவனைக் கடித்து உண்டாள். எலும்புகளை மாலையாக்கி சூடிக் கொண்டாள். பின் அவளைப் பின் தொடர்ந்த கருப்பு நிழலைத் துணையாக்கிக் கொண்டு இந்த கானகம் வந்தாள். அது அவனது கணவன் தான். அவன் துணையாகவில்லை. அவளே அவனுக்கு துணையானாள்.
தன் தலை துண்டாகி கூழாகக் கிடக்கையில் அவன் வெம்பிக் கொண்டிருந்தான். ஒரு முறை ஒரே ஒரு முறைக் கூட அவளை நான் புணரவில்லை. அவள் உடலை நான் அறியவே இல்லை. என் அறிதலுக்கு அப்பாற்பட்டு அவள் இருந்தாள். கானல் நீர் போல அவளது உடலை என் அருகாமையில் அறிந்து அதனை அழித்து அழித்து உட்செல்வேன். பின் ஏதுமற்ற வெளியில் கைமைதுனம் செய்து கொண்டு அடங்குவேன்.
நான் அவளாகவும் அவள் நானாகவும் விரும்பினேனா? தெரியவில்லை. பால் எனும் ஒன்றில்லையேல் அதன் அதிகாரம் இல்லையேல் அது சாத்தியப் பட்டிருக்க்குமோ தெரியவில்லை. நான் ஆண் தன்மையுடன் அவளை நோக்கியதில்லை. அவள் அருகிருக்கையில் உள்ளூற பயந்தேன். என் அபத்தங்களின் ஊடுபாவை அவள் அறிவாள். அவளுள் என்னால் நுழைய முடிந்ததே இல்லை.
ஆனால் அவள் என்னை ஒரு குழந்தை போல பாவித்தாள். வழிதவறிய ஒரு அப்பாவிக் குழந்தை போல. அது திகட்டும் குமட்டிக் கொண்டு வரும். அவளை வன்மமாக புணர வேண்டும் என்று தோன்றும். அச்சமயங்களில் மதுவும் யாழும் மட்டுமே எனக்கு துணையாக இருந்தது.
பொறுத்துக் கொள்ள முடியாத பொழுது என் குறியினை அகற்றி விடலாம் என்று தோன்றியதுண்டு.
அப்பொழுதெல்லாம் என் துணைக் குறியாய் நான் மாதவியை நினைத்தேன். அவள் ஒரு ஆண். போல என்னை பாவித்தாள். நாங்கள் புணரும் சமயம் உடலற்றுப் போவதை உள்ளூற உணர்ந்தோம். அவள் நான் எனும் இருமை கழன்று நான் அவன் எனும் ஒருமை ஆவதைப் போல ஆவேன். சிறிது நேரம் தான் அதன் பின் அவள் என்னை குழந்தையாக பாவிக்கத் தொடங்குவாள். அப்பொழுது உள்ளூற குரூரம் ஏறும். அவளை அடிப்பேன். அவளை வசைகளைக் கொண்டு நிறைப்பேன். வசைகளையே அவள் உடலாக்குவேன். பின் அந்த உடலைப் புணர்வேன். என் விந்து ஒழுகி நான் இல்லாமல் ஆவது வரைப் புணர்ந்து அங்கேயே மூர்ச்சையற்று விழுவேன்.
ஆனால் சரியாகச் சொல்ல வேண்டுமெனில் என்னிடம் உள்ள இரட்டைதன்மை. ஒரே நேரத்தில் இருபால் உயிரி போல என்னை உணர்வது. நான் கண்ணகியை என்னுடைய ஆண் துணை என்றும் மாதவியை பெண் துணை என்றும் நினைக்கிறேன். அதே நேரம் அது நிலைத்த இருப்புமல்ல. இவர்கள் இருவருக்குள்ளும் தலை கீழாகவும் நடந்திருக்கிறேன்.
என் உயிர் போகும் சமயம் நான் கண்ணகியை நினைத்தேன். அவள் என்னை காப்பாற்ற வருவாள் என நம்பினேன். அவளது முலை ஒரு நெருப்புக் கோளம் போல மதுரை நகரெங்கும் உருகியோடியது. என் தலையற்ற உடலை அவள் இந்த மலைப் பொத்தையில் தோண்டி எடுத்தாள். என் உடல் நொய்ந்திருந்தது. மொத்த ரத்தமும் வடிந்திருந்ததால் அது ஒரு சவலை போல அவள் கைகளில் ததும்பியது. அவள் என்னை நோக்கினாள். வாரி எடுத்து தன் தொடைகளுக்கிடையில் அதக்கி உள்ளே தள்ளினாள். என்னை ஒரு மலைப்பாம்பு போல விழுங்கினாள். நான் அவளுள் ஒன்றானேன். அவளும் நானும் என்றன்றி ஆம் அதுவே தான் அவள் என்னை அவளுள் இணைத்து அவளின் உடலாகவே ஆக்கி விட்டிருந்தாள்.
அவள் பாலற்றவள். அவளை வணங்குவோம்.
நான் சிந்திய விந்துத் துளிகளுக்கெல்லாம் சேர்த்து தன் ரத்தத்தையும் பாலையும் கொட்டித் தீர்த்த தேவியர்களின் கதைகளைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன். அது என் கதையும் கூடத்தான்.
நான் பாலற்றவன். அதனாலேயே காலங்கள் கடந்தவன். என்னைக் கோவலன் என்றனர். கண்ணகி என்றனர். மாதவி என்றனர்.
ஆனால் நான் என்னை அது என்றேன். என்னை சமூகம் அற்றவன் என சொல்லிக் கொள்ளத் துடித்தேன். கொய்த என் தலையை ஊருக்கு நடுவே புதைத்திருந்தனர். அதிலிருந்து முளைத்த விருட்சத்தில் பிரதிஷ்டை செய்த ரூபத்தில் எனை லிங்கம் என தற்போது அழைக்கின்றனர்.
நான் யார்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக