வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

பசி

 "எல்லாம் யோசிக்கும் வேளையில் உண்பதும் உறங்குவதுமாய் முடியும்"

- தாயுமானவன்கால்கள் பதியா நிலம். தலைக்கு மேலும் கீழும் ஏதுமற்ற வெளியைக் காண்கிறேன். மழையில் நனைந்து கரைந்து வீழ்கிறாள். அவளது துகளிற்குள்ளிருந்து முளைக்கின்றன இளம் தாவர நுனிகள். அமைதியற்று அலைகின்றேன். என் கட்டிலின் அடியில் தூங்குகிறது அந்த மிருகம். அறை முழுதும் துர் நாற்றம் ஒரு சாசுவதமான இருப்பாய் ஆயிற்று. சங்கிலிகளில் நெறிபட என் சுவரெங்கும் அலைகிறது. பழுத்த கண்களும் கரிய மயிர்க்கற்றைகளும் அடர்ந்த அந்த வினோத மிருகம். 

நான் பிரார்த்திக்கிறேன். நாட்கள் நிறைவடையாமல் இருக்க. சிலுவையின் மைந்தன் என் முன் ஒரு பசித்த நாய் போல வெறிக்கிறான். அவனுடைய அந்தரங்க உறுப்புகளை பார்க்கிறேன். சீழ் சொட்டச் சொட்ட ரத்த நிறத்தை அவன் அதக்கிக் கொண்டு தெரு முக்கிலிருந்து திரும்பி செல்கிறான். 

இரவே ஒரு பெரிய அளவில் பிரார்த்தனை போல முணங்குகிறது. நான் திரும்பக் கேட்கிறேன். அந்த ஒலி, அதன் குரல் கீரிச்சிட்டு சுவர்க் கோழியின் குரல் போல இரவு முழுதும் அலைகிறது. அது அந்த தனித்த மிருகத்தின் குரல். அது பசித்திருந்தது. என் காதுகளை அறுத்து சுடச்சுட தட்டில் எடுத்து வைக்கிறேன். மிச்சமின்றி நக்கி உண்டது.

அவள் முளைத்த தாவரத்தின் விதைகளைக் காண்கின்றேன். அவளது திராட்சை நிறக் கண்களைப் போன்ற கனிகளை ஈனி தாவரம் மடிந்தது. கண்ணாடிக் குடுவைக்குள் கண்களை தண்ணீர் விட்டு வளர்க்கிறேன். அறை முழுதும் திராட்சை நிறம். கட்டிலின் அடியிலிருந்த மிருகம் நிறத்தை உண்ணத் தொடங்கியது. அதன் அடங்காப் பசியில் நிறங்கள் சிதறின.

வண்ணங்களின் குழைந்த சேற்றை அள்ளி அள்ளி உண்டேன். என் அருகே அமைதியற்று அமர்ந்திருந்தது அந்த மிருகம். அதன் வாயினைக் கிழித்து அதனுள் என் அந்தரங்க உறுப்புகளை வெட்டி உள் தள்ளுகிறேன். ரத்தம் சொட்ட சுவைத்து தின்று அன்று இரவே வயிறு வெடித்து செத்தது. அன்று உறங்கினேன்.

ஜன்னலுக்கு வெளியே மழை. மறுபடியும் மழையிலிருந்து முளைப்பதைப் பற்றி நினைக்கின்றேன். ஆனால் சாம்பல் நிற மழை அறையெங்கும் மூத்திர நெடியுடன் ஓடுகிறது. சிலுவை மைந்தன் அவள் முளைத்த தாவரத்தை உண்டு இன்று பசியாறிக் கொண்டான். தூங்கிக் கொண்டிருக்கும் அவன் விழிகள் திறந்தே இருந்தது. ஒரு பிணம் போலக் கிடக்கிறான். ஆனால் ஒரு சொல் அறையை விதிர்க்கத் தொடங்கியது. தாகம் தாகம் என்று அலையாடியது.

மண்ணைப் பற்றிப் பாடிக் கொண்டே பழுப்பு நிற வெட்டுக் கிளிகள் அறையினைப் போர்வையாய்த் தொற்றுகிறது. அறையே ஒரு மரத்தின் கிளை போல உருமாறிற்று. அதனில் தொங்கும் புழுவாய் நான். பச்சை எனும் சொல்லிலிருந்து முளைத்த அனைத்தையும் தின்று தீர்த்தன. அன்று ராப்பாடி படினான்.

"சோறே சோறே உனக்கு உயிர் இருக்குமெனில் 

நீ என்னவாக விரும்புகிறாய்"

"சோறே சோறே உனக்கு உடல் இருக்குமெனில்

நீ யாரைப் போல இருக்கிறாய்"

"சோறே சோறே உனக்கு இருப்பிருக்குமெனில்

நீ யாரை உண்ண அழைக்கிறாய்"

பசி! பசி! என்று கூவிக் கொண்டு என் அறையை விட்டு நகர்ந்தது அவன் குரல்.

எழுந்து கழிவறைக்குள் சென்று அதக்கி சுயமைதுனம் செய்து விட்டு திரும்பினேன். அதன் பிசுபிசுப்பு என் கை விரல்களில் நொதித்தது. ஜன்னலில் இருந்த மழை அறை உத்திரத்தில் தூக்கிட்டுக் கொண்டிருந்தது. வயிறு வெடித்து சிதறிக் கிடக்கும் மிருகத்தின் இறைச்சி நொதித்து திரவமாகி ஒரு தடாகமாய் அறை நடுவே சுழியிட்டுக் கொண்டிருந்தது. அதன் பிரதிபலிப்பில் நாக்கு தொங்க மழை அலையிடுகிறது. கரையினைத் தொட்டு மீளும் அதன் சுழிப்புகளில் பசி பசி என்ற சொல் பிளாஸ்டிக் கவர் போல மிதக்கிறது.

நான் வெளியை நோக்குகிறேன். அதே சாம்பல் நிற மழை. உள்ளும் புறமுமற்று அறை அந்தரத்தில் கிடந்தது. கால்களுக்கடியில் ஏதுமில்லை. ஆனால் உந்த உந்த அறை நகர்ந்தது. ஒவ்வொரு அசைதலுக்கும் தடாகத்தின் நீர் தழும்பிக் கொண்டிருந்தது. மழையிலிருந்து முளைத்தவளைப் பற்றிய கனவினை நினைவு கூர்ந்தேன். அவள் முளை விட்ட பிரதேசங்களை என் உடலில் தேடினேன். என் உடல் ஒரு தாவர உண்ணியால் உண்ணப்பட்டது. அதன் மக்கிய சாணியில் நான் துடித்துக் கொண்டிருந்தேன். அவள் என்னை முளைக்கச் செய்தாள். நான் ஒரு தாவரம். பச்சை மட்டுமே அனைத்துமாய்க் கொண்டவன். அவளின் உறுப்புகளுக்குள் என் பச்சை நிறத் திரவம் இடைவிடாது நிறைந்து கொண்டிருந்தது.

மழை நின்ற இரவில் திகட்டத் திகட்ட அவள் என்னைத் தின்று கொண்டிருந்தாள். அவளது முகம் நாக்கு தொங்க அன்று கிடந்த நாளை நினைவு கூர்கிறேன். என்னுள் சுழியடிக்கிறது. நான் அவளது வயிற்றில் நொதித்து மலமாகிறேன். கழிவறைப் போனிக்குள் அமிழ்கிறேன். பல்லாயிரம் துகள்களாய் சிதறி ஓடுகிறேன்.

ராப்பாடி திரும்பப் பாடுகிறான்,

"சோறே சோறே உனக்கு இருப்பிருக்குமெனில்

நீ யாரை உண்ண அழைக்கிறாய்"

பசி! பசி! என்று அவள் என்னை இளக்கி வெளித்தள்ளினாள். ஜன்னலுக்கப்பால் சாம்பல் வண்ண மழை இடைவிடாது நனைந்து கொண்டிருந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக