யூதாஸ், ஜீசஸைப் பிடித்திழுத்துக் கொண்டு முன்னே சென்றான். "கேட்கிறதா? பார்! பார்! அவர் தான். அவர்தான் மெசியா! மெசியாவால் மட்டும் தான் அப்படி பேச முடியும்!"
"இல்லை! யூதாஸ்! என் நண்பா! அவர் மெசியாவின் வருகைக்கானப் பாதைக்கு வழி செய்பவர். அவர் கோடாரியைக் கொண்டு அதைத்தான் பண்படுத்திகிறார். அதற்காகத் தான் அவர் ஆவேசத்துடன் பிரசங்கிக்கிறார். அவர் மெசியாவாக இருக்க வாய்ப்பில்லை!" ஜீசஸ் மெதுவாகக் குனிந்து செற்றையாகக் கிடக்கும் நிலத்தில், உயரமுனையும் ஒரு ஒற்றைப் புல்லின் நுனியைக் கிள்ளி வாயிலிட்டு மென்னிக் கொண்டே நகர்ந்தான்.
"எவனொருவன் நம் தளைகளிலிருந்து விடுவிப்பதற்கான வழியைத் திறக்கிறானோ, அவனே மெசியா!" செந்தாடிக்காரன் கோபத்துடன் கூறினான். ஜீசஸைப் பின்னாலிருந்துப் பிடித்து முன்னே போகுமாறு உந்தித் தள்ளினான். ஜீசஸ் நிலைதடுமாறி நாணலின் கூர் நுனிகளை மிதித்துக் கொண்டு, விழுந்து விடாமல் இருபுறமும் கைகளால் விலக்கிக் கொண்டே சென்றான்.
"செல்! முன்னே செல்! உன்னை அவர் பார்க்கட்டும், நீ யார் என்பதை அவர் எங்களுக்குத் தெரிவிக்கட்டும்!" யூதாஸ் தன் காய்த்துப் போனக் கைகளால் ஜீசஸின் முதுகைப் பற்றிக் கொண்டு, இருபுறமும் உயர்ந்து நிற்கும், முட்கிளைகளையும், தாவரங்களையும் அழுத்தி மிதித்துக் கொண்டே ஓட்டமும் நடையுமாக விரைந்தான்.
சட்டென வெட்டவெளியை அடைந்த ஜீசஸ், கூசும் கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தான். கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தது. சூரிய வெளிச்சம், பழுத்து நிலத்தில் சாரம் சாரமாக ஒழுகியது. சரியாக அடி எடுத்து வைக்க இயலாது தள்ளாடிக் கொண்டே நிமிர்ந்து முன்னே நிற்க முயன்றான். சற்றுத் தொலைவில், நதியில் அவனுக்கு முதுகு காட்டிக் கொண்டு ஒரு மனிதன், மந்திரங்கள் ஜபிக்க நின்று கொண்டிருந்தான். சுற்றியிருக்கும் அனைத்தும் மறைந்து, அம்மனிதனும் ஜீசஸும் தவிர மண்ணில் ஒன்றுமே இல்லாமல் ஆகியது. அவனது உடல் விதிர்விதிர்த்தது. கனவிலும் நனவிலுமாகக் கண்ட உருவம். மயிர்க்கால்கள் முளைத்துக் கொள்ள, அவர்தான்! அவர்தான்! என விம்மியது. அவனது ஆன்மா, இரு துடிக்கும் சிறகுகளாக அவரை நோக்கிப் பறந்து சென்றது. நீருக்கடியில், அவரது ஆகிருதி ஆழமாகப் பதித்து நிற்கும் பாதங்களைத் தொட்டு, நாணல் போலவே வளைந்து நெகிழும் கால்களை வருடியது. பின் அவர் உடல் முழுதும் ஸ்பரிசித்து, நெருப்புமிழும் தலையில் அமிழ்ந்துத் தானும் இரு தீச்சிறகுகளாக எரிந்து கொண்டே வானம் நோக்கி உயர்ந்தது. அவர் திரும்பி நோக்கினார். இன்னதென்று விளக்க முடியாத ஆட்படலில் தன் உடல் கவரப்படுவதை உள்ளும் புறமும் உணர முடிந்தது. சற்றேத் தன்னை உலுக்கும் பொழுது, அந்த இறுக்கம் இன்னும் இறுகுவதை, அதன் பார்வை நுனிகளின் கூர் முனைகள், பல நூறுப் புள்ளிகளாக அவரது உடல் முழுவதும் குத்தி அதிர்வதை, ஏற்பதைத் தவிர அவருக்கு வேறு வழி இருக்கவில்லை. தலையை இடமும் வலமும் அசைத்துக் கொண்டு, பொருளின்றிக் கத்தினார். ஒரு வெண்கல உலோகம், அதிர்வதைப் போல அக்குரலின் ஆன்மா உராய்ந்துப் பரவியது. இன்னும் முழுமையாகத் திறவாதக் கண்களுடன் ஒளி கூசும் வெளியை ஆத்திரத்துடன் நோட்டமிட்டார். "இவன்,யார்? யார்! அசைவற்று என் முன்னே அமைதியாக நிற்கிறானே! இந்த இளைஞன் யார்?, ஏன் என்னை இப்படிப் பார்க்கிறான். வெண்ணுடை தரித்து நிற்கும், இந்த மெலிந்த உருவினை நாம் இதற்கு முன் எங்காவது பார்த்திருக்கோமோ? என்னால் யூகிக்க முடியவில்லையே! ஆனால் நான் இவனை அறிகிறேன். எங்கு? காலமற்று அலையடித்துக் கொண்டிருக்கும் இவனது நீல விழிகள் எனக்கு மிகவும் பரிட்சயப்பட்டதா? தெரியவில்லை! ஆனால் இவன்! இவன்! என் உடலும், உள்ளமும் இவனை அறிந்திருக்கிறது. எங்கே! எப்பொழுது? எனக்குத் தெரியவில்லை. இல்லை! இவனை நான் என் சொப்பனத்தின் நிழல் வெளியில் ஒரு அமானுட வெளிச்சமாகக் கண்டேனா? நிச்சயம் ஒரு உடலாக அல்ல! ஒரு இருப்பாக, இன்னும் ஒரு ஓளியாக, வெளிச்சத்துகளாக! நெடியாக! சொல்லாக! ஆதியிலிருந்தே என் காத்திருப்புகளின், இதோ! இந்தத் திரவவெளியின் நித்திய இருப்பினுள் அமிழ்ந்திருக்கும், அழியாப் பொருண்மையாக!"
விளக்கவே முடியாத ஒன்றினைப் பற்றி, பலப் பல வழிகளில் திரட்டிக் கொள்ள முயன்றுத் தோற்றார். அவரது சொப்பனத்தின் கடலில், அலையடித்து மீண்டது. அது ஒரு வெண்ணிறம் மட்டுமேயாக உள்ளும் புறமுமாய் ஜொலிப்பதை நினைவு கூர்ந்தார். ஆனால் அப்பொழுது அந்த ஒளிப்பெருக்கினைக் குடித்துக் கொண்டு அமைதியாக மட்டுமே அவரால் நிற்க முடிந்தது. அதனருகில் செல்லும் பொழுதெல்லாம், அவரால் புரிந்து கொள்ள முடியாத இறுக்கம் பின் தளர்வு என, தனக்குள் ஏந்திக் கொள்ள முடியாத ஒரு பேருவகையையும், அதே நேரம் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முயலும் எதிர்ப்பையும்தான் அவரால் செய்ய முடிந்தது. சரியாக அவர் அந்த உலுக்கிக் கொண்டு எழும்பும் பொழுது, அவ்வொளியின் மாயக்கரங்கள் மெல்லப் புகையாய் உயரத்தொடங்கும்.
அவரால் தன் பார்வையை ஜீசஸை விட்டு விலக்க முடியவில்லை. அடக்க முடியாமல் கண்ணீர் பெருகியது. அவரால் அச்சொல்லை நினைவு கூற முடிந்தது. "அது நம் மூதாதை, தீர்க்கதரிசி எசாயாவின் சொல், ஆட்டுத் தோலில் பதிக்கப்பட்டிருந்த அந்த எழுத்துக்கள், பரல் மீன்கள் துள்ளுவதைப் போல, சொற்களின் பொருள்களின், காட்சிப்புலத்தை சிதறடித்தது. "ஆம்! ஒரு நாள்! இந்த மலைகள், பாறைகள், நிலம், மனிதர்கள், இந்த முட்புதர்கள், தாவரங்கள், நாணல் வெளிகள் என அனைத்தும் மறைந்தழியும். தீப்பிளர்க்கும் காற்று, பறையொலிக்கும், சிறகடிக்கும், வானம் ஒரு மாபெரும் பறவையாகி உயரும். அது கேவக் கேவ நிலம் பிளறும். நம் மூதாதையின் தீர்க்கம் பொருந்திய சொற்கள் திறக்கும், நான் காண்கிறேன். என் மெசியாவின் வருகையை! இதோ என் முன்னால் நிற்கும் இந்த மெலிந்த இளைஞனைப் போலவே வெண்ணுடை தரித்து, இப்பாலை நிலத்தில், வெற்றுக் கால்களுடன், இவனைப் போலவே பச்சைப் புல்லை வாயினில் அதக்கிக் கொண்டு அமைதியாக நிற்கும் என் மெசியாவை! ஆம்! ஆம்! இவன் தான்! இவன் தான்! உணர்வெழுச்சி பொங்க அவர் கத்தினார்.
ஒரு சேரப் பயத்திலும், சந்தோசத்திலும் அவரது சுருக்கங்கள் அடர்ந்த முகம் மேலும் சுருங்கி விரிந்தது. இமையடைக்காது ஒருவித மயக்கத்துடன் தான் இன்னும் அந்த இளைஞனைக் கண்டு கொண்டிருந்தார். அவரால் நம்பமுடியவில்லை. ஆனால் அவரது காத்திருப்பின் அர்த்தப்பாடுகள் நிறைவடையும் என்று தனக்குள் சொல்லிக்கொண்டார். கால்கள் பரபரத்தன. கால்கள் பதித்திருந்த பாறையிலிருந்து வழுக்கி நதியில் குப்புற விழுந்து எழுந்தார். உடலின் அதிர்வுகள் இன்னும் அடங்கியிருக்கவில்லை.
"யார் நீ? சொல்! யார் நீ?" எதிர்பார்ப்பின் குரல் வறண்டிருந்தது.
"உங்களுக்குத் தெரியவில்லையா?" ஜீசஸ் கேட்டான். பின் மெல்ல அவரை நோக்கி வந்தான். உண்மையில் அவனது விதி, அவர் சொல்லும் பதிலில் தான் இருக்கிறது என்பதை அவன் முழுமையாக உணர்ந்திருந்தான்.
"அவன் தான்! ஆம்! அவன் தான்!" அவர் தனக்குள் குமுறினார். அவரது இருதயம் ஒரு தந்திக்கருவியைப் போல அதிர்ந்து கொண்டிருந்தது. இல்லை! இல்லை!" தெளிவாக அவருக்கு இன்னும் முடிவெடுக்கும் தைரியம் வரவில்லை. திரும்ப அவர் அவனை நோக்கிக் கத்தினார். "சொல்! நீ யார்?"
"நீங்கள் நம் மூதாதைகள் அறிவித்த தீர்க்கதரிசனத்தை அறிந்தவர்தானே?" ஜீசஸ் சற்றுத் தயக்கத்துடன், ஆனால் தைரியத்தை வருவித்துக் கொண்டு விசனமாகக் கேட்டான். "சொல்லுங்கள்! ஞானவானே! நம் தீர்க்கதரிசி எசியாவின் அறிவிப்பு என்ன? உங்களுக்கு ஞாபகம் இல்லையா? சொல்லுங்கள்! நீங்களே முன்னோடி! நீங்களே அதை அறிவீர்!"
"அது நீதானா?" முனகிக் கொண்டே அந்தத் துறவி ஜீசசை முறைத்துப் பார்த்தார். அவனது தோள்களைப் பற்றினார். கைகளை அழுத்தினார். அவரால் இன்னும் நம்பமுடியவில்லை. அவனை முழுமையாகப் பார்த்துத் திரும்பத் திரும்ப சோதனை செய்தார்.
"நான் வந்து விட்டேன்..." ஜீசஸின் குரல் நடுங்கியது. மூச்சிரைக்கத் தன்னை அமைதிப்படுத்த முயன்றான். கைகளை இறுக்கிப் பிடித்திருந்தான். அவனது உடல்மொழி, தண்டனைக்குத் தன்னை உட்படுத்துவதைப் போலக் குன்றியிருந்தது. அடுத்த காலடி எடுத்து வைத்தால் விழுந்து விடுவோமோ என்ற பயத்தில், தனது வலது கை விரல்களால் நெற்றியை அழுத்தியிருந்தான்.
அந்தக் காட்டுமிராண்டித் துறவி, அவனை மேலிருந்து கீழ் வரை அளந்தார். அவரால் இன்னுமே நம்பமுடியவில்லை. ஜீசஸின் உதடுகளிலிருந்து எழுந்த சொல்லின் வீரியம், ஒரு மலைப் பாம்பைப் போல அவரது அகத்தின் உடலைக் கட்டி இறுக்கியிருந்தது. நெறிபட நெறிபட அவர ஆனந்தத்தில் திளைத்தார்.
"ஆமாம்! நான் வந்துவிட்டேன்...!" மேரியின் மகன் திரும்பவும் கூறினான். அது சற்றுத் தொலைவில் தன் செவிகளை கூர்ந்து நின்றிருந்த யூதாசுக்குக் கூட சரிவரக் கேட்கவில்லை. அவ்வளவு மென்மையுடன் ஜீசஸின் குரல் ஞானவான் ஜானினைத் தழுவியது. இந்த முறை அவர் ஜீசஸை அறிந்து கொண்டார்.
"என்ன?" அவர் தலையை உதறினர். கற்றையான சடை முடிக்கற்றைகள் குறுமணிகள் போல அங்கும் இங்கும் குலுங்கின.
ஒரு ஒற்றைக்காகம், அழுவது போலக் கரைந்து கொண்டு தலைக்கு மேலே நகர்ந்தது. அது நீரில் அமிழ்த்தி ஒரு உயிரைச் சாகடிக்கும் பொழுது முனகும் இரைச்சலைப் போலிருந்தது. அதன் விளி, ஜானைச் சலனப்படுத்தியது. அவர் காலுக்குக் கீழே இருந்தக் கல்லை எடுத்து வானத்தை நோக்கித் திட்டமின்றி வீசினார். பறவை பறந்த பின்னும் வானம் விலகுவதில்லை. மேகங்கள் வானின் ஒளியைப் பிரதிபலித்து மயங்கியது. அதனுள்ளிருந்து வெளிச்சக்கீற்றுக்கள் நீள்பட்டைகளாய் நீலம் நிரப்பி வெளியேறியது. வானம் நம் கைக்கு அடங்காமையினால் அதன் திண்மையை இழந்து புகை மூட்டமாய், வெளிச்சத்தைச் சீழ் போலத் துப்பியது. ஞானவானான ஜான், தன்னை ஆற்றுப்படுத்த முனைந்தார். எதிர்பார்ப்புகள் உரப்பாகியதும், ஏதோ இழந்ததைப் போலவும் அதே நேரம் காத்திருப்புக்களின் காலமின்மையும் திடத்தன்மைக் கரைந்து திரவ மினுக்கத்துடன் தன் முன்னே வெளிச்சம் பொங்க ஒளிர்வதையும் கண்டார். ஒருவகையில் சுழிகள் அடங்கி, சலனமற்று உள்ளேத் திரும்பிக் கொள்ளும் நீர்மையின் அனிச்சக் கைகளைப் பற்றிக் கொண்டார். அது அமைதியையும் சலனத்தையும் அவரைச் சுற்றி நிரப்பியது.
"வா!" அவர் அவனை சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டேக் கூறினார். எந்த சினேக பாவமுமில்லை.
ஜீசஸால் உண்மையில் நம்பமுடியவில்லை. அவன் பயந்தான். ஆனால் பரவசமும். தீர்க்கதரிசியின் அழைப்பு தனக்கானது தானா என்பதைப் பலமுறை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டான். ஜீசஸ் அதனைத் தனக்குத் தான், என ஏற்றுக்கொண்ட பொழுது, அவனைச் சூழ்ந்திருந்த சிதல்கள் பொடிந்துதிர்ந்தது. அது போல, இனி தான் என்பதன் அர்த்தப்பாடுகளும், கலக்கங்களும், குழப்பங்களும், அதிகப்படியான அதன் பொறுப்புகளும் அவனை உண்மையில் கலக்கியது. ஆனால் அதனை ஏற்பதன் வசீகரம் தான் அவனை இன்னும் உயிர்ப்புள்ளவனாகவும், தன் சொந்த மீட்சியின் பலன் எனவும் உள்ளூற உணரவும் வைத்தது.
ஞானவான், ஜீசஸை உற்று நோக்கினார். பின் அவரது பார்வை தான் ஏற்றிருந்த, நிலத்தைச் சுற்றிச் சுழன்றது. ஜோர்டான் நதியின் நிச்சலனம் அவருள், புழையாய் ஒழுகியது. முன்னே சுழியிட்டு முனகலாய் நகரும் நதியிடம் ஒப்படைப்பதை போல, தத்தமது பாவங்களை மண்டியிட்டு ஒப்புவிக்கும் மானுடர்களைக் கண்டார். சுருங்கியக் கண்களைத் துடைத்துக் கொண்டு கீழே மண்டியிட்டு அமர்ந்தார். கைகளில் மண் பொத்தைச் சாம்பலை எடுத்துத் தன் நெஞ்சில் அழுத்தித் தேய்த்தார். அது அவரின் விடைபெறல் போல இருந்தது. "ம்ம்! இப்பொழுது நான் புறப்படலாம் இல்லையா!" அவர் ஜீசஸைப் பார்த்து வினவினார்.
"இன்னும் இல்லை, மூத்தவரே!, முதலில் நீங்கள் எனக்கு ஞான முழுக்கு அளிக்க வேண்டும். ஜீசஸ் தீர்க்கமாகவும், உறுதியுடனும் பதிலளித்தான்.
" நானா? நீர் தான் எமக்கு ஞானமுழுக்கிட வேண்டும்...தேவனே!"
"சத்தமாகப் பேசாதீர்கள். அவர்கள் நாம் பேசுவதைக் கேட்கப் போகிறார்கள். என்னுடைய நேரம் இன்னும் வரவில்லை. அதனால் நான் சொல்வதைப் புரிந்து கொள்ளுங்கள். "ம்ம்! நடக்கட்டும்!"
என்ன முயன்றும் யூதாசால் அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று அறிய முடியவில்லை. அவனால் ஒரு முணுமுணுப்பை மட்டும் தான் கேட்க முடிந்தது. நதியின் இரு வெவ்வேறு அலைகள் மோதித் தன்னைத் தானே விழுங்கிக் கொள்ளும் ஓசை. திரும்பத் திரும்பத் தீராத அதன் ஓட்டங்கள், உட்கொள்வதும், வெளியேறுவதுமாய்க் குமிழியிடும் முயக்க நடுக்கமன்றி வேறெதையும் அவனால் உணர அது வாய்ப்பளிக்கவில்லை.
கரையில் மண்டியிட்டுப் பிரார்த்திக்கும் மனிதக் கூட்டம் அவர்கள் வந்ததும் மெல்ல விலகி வழி விட்டது. ஒளியையே உடலாக வரித்துக் கொண்டுத் தங்களைக் கடக்கும் இந்த யாத்ரீகன் யாராக இருக்கும். இத்தனை நிமிர்வுடனும், நம்பிக்கையுடனும் முன்னே செல்லும் இந்த மானுடனிடம் பாவங்களே அண்டாது போல! அவனது மிளிர்வே அவன் உறுதியையும், திடத்தையும் தெரிவிக்கிறது, என அவர்கள் வியப்பிலும், குழப்பத்திலும் ஆழ்ந்தனர். ஞானவானான ஜான் முன்னே செல்ல, இளைஞன் பின் தொடர்ந்தான். அடர்த்தியான மூட்டமாய் நீலம் கனக்கும் நதியின் உள்ளே உந்திக் கொண்டு செல்லும் அவர்களைச் சுற்றி சுழிப்புடன் நதி வழியைத் துலக்கியது. நடுமையத்தில் காலமற்றுக் கிடக்கும் குமிழ் போன்றப் பாறைப் பரப்பிற்கு மேலே ஜான் மெல்ல உக்கி ஏறிக் கொண்டார். அருகில் ஜீசஸ், தன் பாதங்கள் நதியின் அடிமண்ணில் நன்குப் பதிய நின்று கொண்டு சுற்றிலும் முகிழ்க்கும் திரவ வெளிக்கு முகம் காட்டி அமைதியாகப் பார்த்தான். ஓடும் நீர், பாறைப் பரப்பில் பட்டுத் தெறித்தது. அதன் குளிர்மையின் ஸ்பரிசம், இளைஞனின் மார்பிலும், தோளிலும், கன்னங்களிலும் தொட்டு மீண்டது.
சரியாக அத்தருணத்தில் ஜான் கைகளில் நீரள்ளி ஜீசஸின் தலையில் முழுக்கிட்டார். தன்னிலை இழந்த ஆட்படலுடன், தன் மூதாதைகளின் ஆசிர்வதிக்கப்பட்டச் சொற்களின் மந்திரலயம் அவரது நாவில் அனிச்சையாக உறைந்திருந்தது. கரையில் நின்று கொண்டிருந்த மானுடர் குழாம் மொத்தமும் ஒருசேர அழத் தொடங்கின. நதியின் உயிர்த்தன்மைக் கூடிக் கூடி, அதன் நிச்சலனத்தின் நீள்வட்டங்கள் மெல்ல மெல்ல அமர்ந்து, நதி முற்றிலுமான மோனத்தில் ஆழ்ந்தது. பல வண்ண மீன்கள் அங்கும் இங்குமாக அவர்களைச் சுற்றிக் குதூகலித்துக் குதித்தன. செவுள்களை அசைத்தும், துடுப்புகளால் நீர் வெளியைக் கலக்கியும், அது அவைகள், அறியாத ஒன்றின் ஆட்படலில் பீடிக்கப்பட்டது போன்றப் பரவசத்துடனும், மூர்க்கத்துடனும் நடனமிடுவது போல இருந்தது. அவனைச் சுற்றிய அனைத்தும் உயிர் பெற்றிருந்தது. புத்தம் புதிய உயிர்மையின் இருப்பு துடிப்பே உடலாகப் பறந்தது. நதி வானாகியது. பாறைத்துண்டங்கள் மேகங்களாகின. துடிப்புகளெல்லாம் விண்மீன்களாகியது. சூரிய சந்திரர்கள் இருபெரிய ஒளிர் விண்மீன்களாய் துடுப்புகள் அடித்து அவனைச் சுற்றிக் குழுமி வட்டமிட்டது. தலைக்கு மேலும் கீழும் சன்னதம் பீறிட்டது. அவன் இதுவரை அறிந்தே இராத துடிப்புகளின் சங்கீதத்தைக் கேட்டான். திகைப்புடன் தன் முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கும் கொண்டாட்டத்தை, பயம் கலந்த கவர்ச்சியுடன் கண்டு கொண்டிருந்தான்.
கூட்டத்தால் நிகழ்வதன் அதிசயத்திலிருந்துத் தங்களை மீட்க இயலவில்லை. அவர்கள் சொற்களற்றுத் தங்கள் முன் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒளித்தூண்டுதல்களை, அதன் நடனத்தை, சீற்றத்தை, அதன் கணக்கில்லா சன்னத ரூபங்களை வெறுமே கண்ணடைக்காது காண மட்டுமே முடிந்தது. பலர் அதன் விம்மலின் அனலைத் தாள இயலாது மண்ணில் தலை புதைந்துக் கண்களைப் பொத்திக் கொண்டனர். சிலர் தாங்கள் இதுவரை இருந்தத் திண்மம் குலைந்து, ஒரு புகை வெளியாய் உருமாறியதைப் போல, உடலதிர அங்கும் இங்கும் குதித்தும், தரையில் அறைந்தும், பொருளற்ற விளிகளால், கூச்சலிட்டும், வெறிகொள்ளக் கத்தினர். ஒரு முதியவர், தன்னைப் பிடித்துக் கொள்ள முடியாமல் அதிர்ந்து கொண்டே மண்ணில் முகம்பட விழுந்து எழுந்தார். கலனில் கொதிக்கும், கொப்புளங்களின் துளிகள் வெளியே தெறிப்பதைப் போல, சொல் அவரிலிருந்து அனிச்சையாகத் தெறித்தது. அக்குரல் அமானுடமாய் இருந்தது. "ஆம்! இதுதான் ஜோர்டானின் ஆன்மா!" என்று இரைந்து கொண்டே அவர் மண்ணில் மயங்கி விழுந்தார்.
அத்துறவி, ஒரு குழிந்த நத்தை ஓட்டினை, நதியின் ஆழத்திலிருந்துப்பிடுங்கி வெளியெடுத்து, அதனுள் நதியை நிரப்பி ஜீசஸின் முகத்தில் ஊற்றினார். " நம் தேவனின் சேவகன் ஞானமுழுக்கடைந்து விட்டான்...." பின் எதையோ சொல்ல முயன்று நிறுத்திக் கொண்டார். அவனை என்ன பெயரிட்டு அழைப்பது என்று அப்பொழுதுதான் அவருக்கு உறைத்தது.
அவர் திரும்பி ஜீசஸைப் பார்த்து வினவ எத்தனித்தார். அங்கே இருந்த அனைத்துமேத் திரும்பி அவனையே எதிர்பார்ப்புடன் உற்று நோக்கியது. பெயர்! பெயர்! என அவைகள் ஒவ்வொன்றும் அதிர்ந்து கொண்டிருந்தன. இரு வெண்ணிறச் சிறகுகள் ஒடுங்கிக் கொண்டு நிலத்தில் அமர்ந்து அவனைப் பிரயாசையுடன் பார்த்தது. அது ஒரு பறவையைப் போல அல்லாது, ஜெகோவாவின் சிம்மாசனத்தில், அவரைத் தாங்கிக் பொருந்தியிருக்கும் தேவதைத் தோற்றம் கொண்டிருந்தது. ஒரு தீ ஜ்வாலையைப் போல அது முன்னேப் பாய்ந்து அவர்களின் முன்னே அமர்ந்தது. ஜானின் தலை இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தது. அப்பறவை எந்த சலனமுமின்றி ஜீசஸின் கண்களை மட்டுமே, ஒருவிதப் பித்துடன் ஆதுரமாக எதிர்பார்ப்புடன் கூர்ந்தது. பின் திடீரென மெல்லத் தன் கூர்மையான உகிர்களால் மண்ணை உந்தி அந்தரவெளியில் சுற்றிச்சுழன்று மூன்று முறை படபடத்தது. பின் வளையம் போல ஒளியினைப் பெருக்கி மூன்று முறை வானுக்கும் மண்ணுக்குமிடையேச் சுழற்றி ஒளிர்ந்தது. ஒளியின் மகா இசைவினை, வெளி கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சி உள்ளும் புறமுமாய் ஒளியன்றி ஒன்றுமில்லாததாகியது. அது தழும்பித் தழும்பிப் பெயர்! பெயர்! என தாகித்துப் பின் நடுங்கும் திரவ மினுக்கத்துடன் அப்பெயரைப் பிரகடனப் படுத்தும் வகையில், ஒரு கார்வையான அழுகையாய், சுருள் ஒளிப் புள்ளிகளாய் அவர்களின் அகத்தில் சுழன்றது. அமைதி பல்லாயிரம் கால்கள் கொண்டப் பூரான் போலத் தலைக்கு மேலே ஊர்ந்தது. நிலம் புரண்டு தலைகீழாகியது. படபடத்தலின் அவசர நுனிகள், வானத்தைத் தூண்டியது. மேகக் குவைகளிலிருந்து, ஞானவானின் விளிக்கு பதில், ஒரு மின்னல் கீற்றாய், நதியைக் கிழித்துத் துண்டாய் விழுந்தது.
சிறகடிப்புகள் அடங்கவில்லை. மக்களின் காதுகளில் அச்சொல் ரீங்காரமிட்டது. அவர்களால் அதை உணரமுடிந்தது. ஆனால் விளக்க முடியவில்லை. எல்லோருமே பதற்றத்துடன் விம்மிக் கொண்டிருந்தனர். "அது தேவனின் குரலா?, இல்லை இப்பறவையின் துடித்தலா? எதையும் யூகிக்க வழியிருக்கவில்லை. பிளந்த நதிப்பரப்பில் வானின் தொடுகை, ஒரு அதிசயம் போல அவர்கள் முன்னே நிகழ்ந்தது. ஜீசஸ் விரைத்து நின்று, தன் உடலே காதாக அச்சொல்லைக் கூர்ந்தான். அக்கீற்றின் நிழல்களில் உருக்களாய்த் துடிக்கும் சொல்லின் அடியைப் பிடிக்க முயன்றான். அது தன் உண்மையானப் பெயர்தான் என்பதை அவன் மட்டுமே உணரும்படியான நிமித்தத்தை அவன் உணர்ந்தான். ஆனால் அவனால் அதனை நிரூபிக்கவோ விளக்கவோ இயலவில்லை. இல்லை! உண்மையில் அவனுக்கு அது தேவைப்ப்படவில்லை என்றே தோன்றியது. ஆயிரம் சிறகுள்ள நிழல் பறவை ஒன்று ஒரேசமயம் தன் அனைத்து சிறகுகளினாலும் அப்பெயரைத் துடித்தது, அது சொல்லாக, விம்மலாக, தாளாத வாதையாக, வலியாக, உவகையாக, வன்மமாக, தீரா இன்மையின் இருப்பாக, வான் நோக்கிக் கரைந்து ஒளிக்குள் ஒளியாக, மின்னி மறைந்தது.
இக்கொடிய பாலை நிலத்தில், காலங்களற்றுத் தனிமையைக் குடித்துக் கொண்டு வீற்றிருக்கும், இத்துறவிக்கு மட்டுமே அது சாத்தியம். தேவனின் சொல்லை அறிந்து கொள்வதென்பது தீயில் தன்னைத் தானே எரித்துக் கொள்வதன்றி வேறென்ன! அச்சொல்லின் மர்மத்தை, உண்மையைத் தேவனும், இந்த தீர்க்கதரிசியுமே அறிவர். இந்த நாள் புண்ணியமடைந்தது. அவர் நிறைவினால் தழும்பிக் கொண்டிருந்தார். "தேவனின் சேவகன், தேவகுமாரன், இம்மானுட குலத்தின் ஒரே நம்பிக்கை!, ஆம்! இந்த மண்ணும் வானும் இன்று திருப்தியடைந்தது" குரலின் நடுக்கம் இன்னும் அடங்கியிருக்கவில்லை.
அவர் நதியைச் சுண்டினார். "செல்! இன்றைய நாளின் சடங்குகள் நிறைவுற்றது, செல்!" ஜோர்டான் நதி திரும்பவும் தன் ஓட்டத்தை அமைதியாகத் தொடர்ந்தது.