புதன், 16 நவம்பர், 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம்- 74

 

    கார்ந்த வெளிச்சப் பட்டைகள், தடிமன் குறைந்து மெல்ல மெல்ல மெலியத் தொடங்கியது. கடுமை அடங்கி ஒளி, கருமையை உறிஞ்சிக் கொண்டது. செந்நிறமும், ஊதா நிறமும் கலந்து பாறைத் திட்டுக்களில் படிந்து பரவியது. தூரத்தில் இதுமியாவின் மலை அடுக்குகள், சூரியனின் அயர்வை உள்வாங்கிக் கொண்டு, இளஞ்சிவப்பு நிறத்தை ஓர்த்தது. கூசும் வெண்ணிற ஒளி மறைந்துக் கண்களைத் திறந்து உற்று நோக்க முடிந்தது. பாதையின் வளைவில் அவர்கள் திரும்புகையில், நிலம் மொத்தமும் திடீரென உருமாறித் தன்னைத் தானேப் புதுப்பித்துக் கொண்டிருந்தது. வெம்மையின் முடிச்சுக்கள் அவிழ்ந்து குளிரின் மென்பதம் பிசுபிசுப்புடன் ஆக்கிரமிக்கத் தொடங்கியது. அவர்களின் உடலும் மனமும், அதனை உள்வாங்கிக் கொள்ளவும், பசுமை வெளிர்க்கும் தூயப் புல்வெளிகள், சாம்பல் மணல்பரப்புகளைத் தாண்டி, எல்லையற்று விரவிக் கிடப்பதைக் கண்டனர். ஈரத்தின் தத்தல்கள் தழும்பி நிறையும் கிலுக்கு சப்தத்தை அவர்கள் உணர்ந்தனர். பழுத்த மாதுளையின், இனித்த மணம் ஆக்கிரமித்தது. தொலைவில் வெண் புள்ளிகள் போலக் குடில்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது. பருத்த இலைகள் அடர்ந்த காட்டுமல்லி மற்றும் ரோஜாப் பதியன்கள் விரியும் நறுமணமும் கலந்து, தொலைவினை மேலும் குளிர்மையாக்கியது.

    "ஜெரிகோ" ஆண்ட்ரூ குதூகலத்தில் கத்தினான். "அங்கு உலகிலேயே அதி உன்னதமான இனிப்பைக் கொண்ட பேரீச்சையும், அபூர்வமான வண்ணங்களில் ரோஜாக்களும் உண்டு. அவைகள் அழிவற்றதும் கூட. ஒருவேளை அவைகள் வாடினாலோ, நொய்ந்து போனாலோ, அவற்றை இந்தத் தண்ணீரில் முக்கி எடுத்தால் மட்டும் போதும், மறுபடியும் புத்தம் புதியதாக ஆகி விடும்"

    இரவின் நீள் கரங்களுக்குள் நிலம் தன்னைப் பொதிந்து கொண்டது. சட்டென இருளின் தீட்சண்யமானக் கோடுகள் அடர்ந்து வானமும் பூமியும், அப்பாலுள்ள பெரிய மொத்தையான உருவின் நிழல் போர்த்தியதைப் போல் முற்றிலுமாகக் கருமையை சுவீகரித்தது. முதல் விளக்கு ஒளியின், வெளிச்சக் கீற்றுக்களின் மஞ்சள் நிறத்தின் துடிப்புகள், ஒரு திரவமிணுக்கத்துடன் அலைந்து அலைந்து முன்னேறுவதை அவர்கள் கண்டனர்.

    "பயணம், இருளின் நீங்கா அமைதியினுள்,  இந்த அறிந்திராதக் கிராமத்தினுள், இரவின் முதல் ஒளித் தூண்டியிருப்பதை வழித்துணையாகக் கொண்டு உண்பதற்கு கைகளில் ஏதுமற்று, அயரவும், உறங்கவும் எந்த தாங்கல்களுக்கும் உரப்பு இல்லாது, இறைவனின் நீங்காக் கருணையினையும், மனிதனின் தீர்ந்துவிடாத நன்மையையும் மட்டுமே நம்பிப் பயணிப்பது!, ஆம்! அதுதானே உண்மையும், தூயதும், மகத்துவமுமான இவ்வுலகின் பேரின்பம் இல்லையா!" ஜீசஸ் சற்று நிமர்ந்து தூரத்தில் அவர்களுக்காகக் காத்திருக்கும் காருண்யத்தை நெஞ்சில் இருத்தி, அந்த நொடிப்பொழுதின் ஆன்மத் தேற்றலின் அளக்க இயலாத நிறைவின் இன்பத்தை உள்வாங்கிக் கொண்டிருந்தான்.

    நாய்கள் பழக்கப்படாத மனித வாடைகளினால் விசனித்து, குரைக்கத் தொடங்கின. கதவுகள் திறப்புதும், பின் ஊர்ந்து வீட்டினுள்ளே நுழைய முயலும் இருளைத் துண்டித்து மறைவதுமாய் இருந்தது. துணைவர்கள் ஒவ்வொருக் கதவுகளையும் அணுக, அவர்கள் கை நிறையத் தேவையான ரொட்டித் துண்டங்களும், மாதுளைப் பழங்களும், ஊறவைத்துக் கனிந்த பச்சை ஆலிவ் பழங்களும் இருந்தன. இறைவனின் கைகள் எப்பொழுதுமே அளவைக் கொண்டதல்ல. மனிதனின் இருதயம், என்றுமே இருள் பூசிக் கொள்வதில்லை. அதன் அளவிட முடியாத ஒளியே அவர்களைச் சோம்ப விடாமல், தளர்ச்சியடையும் பொழுதுகளிலெல்லாம் தன் வலுவானக் கரங்களினால் தாங்கி நிற்கிறது என்பதை உறுதியாக நம்பினர். தோட்டத்தின் ஓரத்தில், சிறுதாவரங்கள் பதிந்த நிலத்தில், தலைக்கு மேலே விண்மீன்கள் துளிர்க்கத் தொடங்குகையில், அவர்கள் திரட்டிய உணவினை நன்றாக உண்டு, நாளின் மொத்த அயர்வையும், ஒரு தூசுப்படலத்தை விலக்கிக் கொள்வதைப் போல விலக்கிக் கொண்டு தன்னிலை மறந்து உறங்கினர். பாலைநிலத்தின் பழுத்த வெண்ணிற ஒளிக் கூச்சல் அவர்களின் கனவினைக் கூட ஆக்கிரமித்திருந்தது. அது சலனிக்கும் காட்சிகளின் நெழிவு, விரிந்து விரிந்து மணல்வெளியும், கற்பாறைகளும், கரையினில் மீள மீளத் துடிக்கும் அலைப்படிவங்களாக மாறியது. பின் மண் நெகிழ்ந்து, நீர்மையின் தழும்பல்களால் அவர்களை முழுக்கியது. சுழிகள் உருவாகி விளிம்புகளில் உடைந்து, விரிந்து, மீண்டும் மீண்டும், அதக்குவதும் வெளித்தள்ளுவதுமாய் உடல்கள் நிரம்பி வழிந்தன. ஆனால் உறக்கத்தின் ஆழ்மையில் ஜீசஸ் மட்டும் தனித்திருந்தான். தோல் கருவிகளின் ஓசையின், தாளகதி தளர்ந்தும், உயர்ந்தும் முன்னும் பின்னும்  அவன் கனவில் போக்கு காட்டியது. சுற்றியிருக்கும் நிலம் நகர்வது போலவும், ஜெரிகோவின் சுவர்கள் பொடிந்து அவர்களைச் சுற்றி விழுவது போலவுமாக காட்சியின் பாதைகள் தளர்ந்துச் சுருங்கிப் பின் புள்ளியாகி மறைந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக