வியாழன், 17 நவம்பர், 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம்- 75

   


    சபிக்கப்பட்ட சாக்கடலை, அவர்கள் வந்தடையும் பொழுது நண்பகலின் வெம்மை உக்கிரமாகப் பொழிந்து கொண்டிருந்தது. மரணத்தின் வெளிர்வு அவர்கள் ஒவ்வொருவர் முகத்திலும் அப்பி வழிந்தது. உமிழ்நீர் கூடச் சுரக்காது அகமும் புறமும் வற்றி வடிந்திருந்த அவர்கள், எந்த உயிர் நடமாட்டமும் இல்லாத நீர்ப்பரப்பினை வெறித்துப் பார்த்தனர். ஒரு மாபெரும் விஷக் குளம் போல அலைகளின்றி அமைதியாகக் கிடந்தது. ஜோர்டான் நதி வழி வரும் மீன்கள் கூட கடலின் கனத்த நீர்மையைத் தொட்டதும் உயிரிழந்துச் செத்து மிதந்தன. கரையில் சிறிதும் பெரிதுமாய் முள் மரங்கள் மட்டும், முட்களையே கிளைகளாகவும், இலைகளாகவும், வேராகவும் கொண்டு முடைந்துக் குத்தி நின்றன. கனத்த ஈயத்தை உருகி வழித்து விட்டாற் போல நீர்மை அடர்ந்தும், எந்தச்சலனமுமின்றியும் நொதித்தது. பக்தியுடன், இறைவழியை மட்டுமேப் பற்றுதலாய்க் கொண்டிருப்பவன் ஒருவேளை அதைக் காண முடியும். முற்றிலுமாய் அழித்தொழிக்கப்பட்ட சோடோம் மற்றும் கொமோரோ எனும் அவ்விரு நகரத்தை, நதியின் ஆழ்ந்த கரிய அடிப்படிவுகளில், காலாகாலத்திற்குமாக அந்நகரங்கள் அமிழ்ந்து கிடப்பதை உணரமுடியும்.

    ஜீசஸ் சற்று உயரமாக இருந்த ஒரு ஒற்றைப்பாறையில் ஏறி தூரத்தை அளவிட்டான். பாழ் நிலம் மட்டுமே விரிந்து பரவிக் கிடந்தது. சூட்டின் எரிவைக் குடித்துக் கொண்டு பூமியும், வானும் திக்கற்று முயங்கியது. திட திரவ மாறுபாடுகளின்றி காட்சிப்புலனில் காணும் அனைத்தும் உருகி மறைந்தன. நெழிந்து சுழித்தன. அமைதியின் மேற்தோல் தடித்துத் தடித்து, அழுத்தத்தை நிரப்பியது. காற்று, அகப்பட்டுக் கொண்ட குஞ்சுப்பறவை போல அங்கும் இங்கும் திசைகளுற்றுத் ததும்பிப் பின் அடங்கியது. ஜீசஸ், ஆண்ட்ரூவின் தோள்களைப் பற்றிக் கொண்டு விசனத்துடன் நோக்கினான். "எங்கே அவர்? ஞானஸ்நானம் அளிக்கும் ஜான்!, கண்ணுக்கெட்டியத் தொலைவு வரை எந்த உயிர்களையும் காணவில்லையே?"

    "அதோ! தூரே நீட்டமாய் வளர்ந்து நிற்கும் நாணல் புதர்களைத் தாண்டி நாம் போகவேண்டும். அங்கு இந்நதி, உயிருடன் செல்கிறது. அதன் திரவ நுனிகளில், அமைதியின் சலனம் பெருகி ஓடும் ரேகைகளைக் காண முடியும்.  பாறைகளின் இடைவெளி வழியே சதா தன்னைப் புதுப்பித்துக் கொண்டு ஒழுகும் நீர்ப்பரப்பில்தான் அவர் வருபவர்களுக்கு ஞானஸ்நானம் செய்கிறார். வாருங்கள்! நான் உங்களைக் கூட்டிப் போகிறேன்." ஆண்ட்ரூ கைதூண்டித் தொலைவைக் காட்டினான்.

    "நீ இரு. ஆண்ட்ரூ, ஏற்கனவே சோர்வாக இருக்கிறாய்! நீ மற்றவர்களுடன் இங்கேயே ஓய்வெடு. நான் தனித்துச் சென்று அவரைக் கண்டறிகிறேன்"

"அவர் பயங்கரமானவர்! நான் உங்களுடன் வருகிறேன் துறவியே!"

    "நான் தனியாகச் செல்ல விரும்புகிறேன், ஆண்ட்ரூ! நீ அவர்களுக்குத் துணையாக இங்கேயே இரு!"

    ஜீசஸ் நாணல் உயர்ந்து நிற்கும் புதரை நோக்கி விரையத் தொடங்கினான். அவனது இருதயம் காரணமின்றி படபடத்தது. அவன் தன் நெஞ்சில் கைவைத்து அழுத்தி, அமைதியாகு என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். வானம் இன்னும் வெக்கையைக் கைவிட்டிருக்கவில்லை. வெண்மை துலங்கும் ஒளியில் கரு நிறப் புள்ளிகளாக, மொத்தையானக் காக்கைக் கூட்டத்தின் சிறகடிப்புகள், பாலை வெளியிலிருந்து ஜெருசலேமை நோக்கி உயர்வதைக் கண்கள் கூச, அண்ணாந்து நோக்கினான். 

    தனக்குப் பின்னேத் தன்னை யாரோ தொடர்வது போலத் தோன்றவே திரும்பிப் பார்த்தான். யூதாஸ் எந்த உணர்ச்சிகளுமின்றி அமைதியாக வந்து கொண்டிருந்தான்.

    "நீ என்னை அழைக்க மறந்து விட்டாய்!" யூதாஸ் வெறுமனே உதடுகள் பிரியாது சிரித்தான். "இது ஒரு சிக்கலானத் தருணம், நான் உன்னுடன் கண்டிப்பாக இருக்க வேண்டும்"

"வா!" ஜீசஸ் கண்கள் பனிக்க அவனை அழைத்தான்.

    ஜீசஸ் முன்செல்ல, யூதாஸ் பின் தொடர்ந்தான். அவர்கள் நாணல் கற்றைகளை விலக்கி, வெதுவெதுப்பான நதியின் கால்கள் படிந்த சேற்றை மிதித்துக் கொண்டு சென்றனர். ஒரு கருத்த நாகம், பாறைக் குன்றத்தின் இடையில் புகுந்து ஊர்ந்து வெளிவந்தது. பத்தி விரித்துத் தன் பழுத்த செந்நிறக் கண்கள் உருள மிரட்சியுடன் சீறியது. அதன் பாதி உடல் பாறையின் உடலாக ஒட்டி இருந்தது. தலையும், கழுத்தும் விரிந்து விடைத்து நின்றது. ஜீசஸ் பதற்றம் கொள்ளாமல் மெல்லத் தன் கைகளை அசைத்தான். அது அதன் வருகையைத் தான் ஏற்றுக் கொள்வதைப் போல இருந்தது. யூதாஸ் மெல்லத் தன் கையிலிருந்த கம்பை ஓங்கத் தலைப் பட்டதும், ஜீசஸ் அவனைக் கட்டுப்படுத்தும் வகையில், அடித்தொண்டையில் செருமினான்.

"    வேண்டாம்! நண்பா! அதை ஒன்றும் செய்யாதே! அது அதற்கு இறைவன் என்ன அளித்தானோ, அதைத் தானேத் திரும்பச் செய்யும். கடிப்பது தானே அதன் குணம், விட்டு விடு நண்பா!"

    சூடு உராய்ந்து உராய்ந்து பல்கிப் பெருகியது. தீயைக் குடித்துக் குடித்து அந்நிலமும் தீயைப் போலவே ஆகி இருந்தது. பற்றிக் கொள்ளும் அனைத்தையும் நீக்கமற உட்கொள்ளும் அம்மண்ணில் ஆழக் காலூன்றி அவர்கள் முன்னேறினர். தெற்கிலிருந்து சாக்கடல் தொட்டு வீசும் காற்றின் துர்நாற்றம், அழுகியப் பிணங்கள் நொதித்துப் புழுப்பதை ஒத்திருந்தது. ஜீசஸ் அக்குரலைக் கூர்ந்தான். அதன் காட்டுத்தன்மையையும், கனத்தொலிக்கும் கார்வையையும் அவனால் உணர்ந்து யூகிக்க முடிந்தது. இப்பொழுதும் பின் என்றென்றைக்குமாக அவன் கேட்கும் சொல், "...தீ! கோடாரி! மலட்டு மரம்!..." அச்சப்தத்தின் வெம்மையைக்கூட அவன் தன் உடலில் உணர்ந்தான். வருந்து! வருந்து!" அது ஒன்றிலிருந்து பலவாக, எதிரொலிப்புக்கள் அடங்காது திக்குகள் எங்கும் பட்டுத் தெறித்து அவனைப் பேதலிக்க வைத்தது. ஜீசஸ் மெதுவாகவும், மிகுந்த கவனத்துடனும் ஒரு வன்மிருகத்தின் குகைக்குள் செல்வதைப் போல, அச்சொல்லைப் பிடித்துக் கொண்டு சென்றான். நாணல் வெளியைப் பிளந்து செல்லச் செல்லச் அச்சொல்லின் அதிர்வு கூடிக் கொண்டிருந்தது. சொல்! சொல்! சொல்! என அது பின்னிப் பிணைந்து அவனைச் சுறறிப் பெருகியது. "வருந்து! வருந்து!", ஒலி நாண்கள் சுருள் அவிழ்வதைப் போல சட்டென்று அவிழ்ந்து அவன் செவிப்பறைகளைக் கிழித்தது. சொல்லின் மந்திர நெடி, அதன் கனம், அதன் முடிவற்ற அதிர்வுகள், அவனால் தன்னிலையைப் பிடித்து நிறுத்த முடியவில்லை. அகம் சுண்டுவதை, ஒவ்வொரு ஒலித்தூண்டல்களுக்கும், அவனது நரம்புகள் இழுபட்டுத் தளர்வதை, அவனது உடல் ஒரு, நரம்பிசைக் கருவி போல, அமானுட உகிர்களால் நாண்கள் தந்தியதிர்ந்து, விம்முவதை என்ன செய்வதென்றறியாது அவனே உற்று நோக்கிக் கொண்டிருந்தான். விதிர்விதிர்க்க தன் உடல் முழுதும் உமிழும் படிக் கத்த வேண்டும் என இருந்தது அவனுக்கு. ஆம்! சரியாக அங்குதான் அவன் அந்தத் துறவியைக் கவனித்தான். நாணல் போலவே அவரது கால்கள் பாறைக்குன்றத்தின் மேலே துடித்துத் துடித்துக் காற்றின் இழுப்பிற்கு நடுங்கிக் கொண்டிருந்தது. ரோஜாக்களின் ரத்த நிற இதழ்கள் அவரைச் சுற்றிக் குழுமி, ஜோர்டான் நதி ஓட்டத்தைப் பற்றி நகர்ந்தது. "இவர்தானா! இப்பாலை நிலத்தின் வெட்டுக் கிளி!, பசியின் தேவதை! பழியை நிறைவேற்ற வந்திறங்கியத் தேவதூதன்?. கரை பற்றிக் கரையும் அலைகள். காலங்காலமாய் பழி தீர்க்க வந்துதித்த மனிதர்கள் அனைவரும், பாறைகளில், அலைகள் ஒவ்வொருமுறை முட்டி மோதி உடைவதைப் போல உடைந்து நொறுங்கிப் போயினர். எத்தனை குலங்கள்! மனிதர்கள்!. தங்கள் புருவங்களிலும், நகங்களிலும் வண்ணம் பூசிக் கொள்ளும் எத்தியோப்பியர்கள், கனத்த வளையங்களை மூக்கினில் தரிக்கும் சாலடியர்கள், அடர்த்தியாக மீசையைக் காது வரை வளர்த்துக் கொள்ளும் இஸ்ரேலியர்கள். எத்தனை பண்பாட்டினைக் கடந்தும் இச்சொல் அதன் வீரியம் குன்றாது தகித்துக் கொண்டிருக்கிறது என்பதை மையமின்றி நினைத்துக் கொண்டான். 

    தெற்கிலிருந்து வீசும் கனத்தக் காற்றில் இன்னும் அவர் அசைந்து நடுங்கிக் கொண்டிருந்தார். மடித்திருந்த சொற்கள் விரிந்து அவரிலிருந்து வெளியேறியது. "வருந்து, வருந்து! தேவனின் நாள் வந்து விட்டது! கேள்!  இந்த நிலம் ஒரு பாம்புச்சட்டை உரிவதைப் போலத் தன்னைச் சுருட்டிக் கொள்ளப் போகிறது. அவனது மூச்சின் ஆவேசத்தால் இந்த மண் ஒரு தூசுத்துகள்களாய்ப் பொடிந்து கரைந்தழியப் போகிறது. நம் தேவனின் படைகள் கட்டளையிடுகிறது! இந்த நாளில் சூரியன் நண்பகலில் மறையட்டும், சந்திரனின் வெண்துகில்களை உடைக்கக் கடவது, வானும் மண்ணும் இருளன்றி ஏதுமற்றுப் பாழாகட்டும். உனது சந்தோசங்கள் துக்கமாகத் திருப்பப்படும். உனது சங்கீதங்கள் ஒப்பாரிகளாகட்டும். நான் ஒரு சாம்பல் துகள்களாக உங்களை ஊதித் தள்ளுவேன். உங்களின் கை கால்கள் என அங்கங்களின் உறுப்புகள் அனைத்தும் சிதறித் தெறிக்கும் படியாய் ஆணையிடுவேன்" 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக