ஞாயிறு, 13 நவம்பர், 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -72

    


    ஜெருசலேம் பச்சையுடுத்தி நின்றிருந்தாள். தெருக்கள், கூரைகள், சதுக்கங்கள் மற்றும் சந்தைப்பகுதிகள் எல்லாமே வசந்தத்தை வரவேற்கத் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. ஆலிவ் கிளைகள் மற்றும் திராட்சைக் கொடிகளாலும், ஈச்ச மரக் கொம்புகளாலும், தேவதாரு மரங்களின் அடிமரங்கள், அதன் கூம்பு இலை அமைப்புகள் மாறாது ஸ்தாபிக்கப்பட்டு, இஸ்ரவேலத்தின் கடவுளின் பெயரால், ஆயிரமாயிரம் கூடாரங்கள் நிலமெங்கும் எழுப்பப்பட்டிருந்தன.  தங்கள் மூதாதைகள் இவ்வனாந்தரத்திற்குத் ஒப்புக்கொடுத்த ஆதிகாலங்களின், தியாகங்களின் நினைவாகவும் மக்கள் இந்நிகழ்வைக் கொண்டாடுகின்றனர். வயல் அறுவடையும், கொடி முந்திரிப் பருவமும் பெரும்பாலும் முடிவடைந்து இந்த வருடமும் கிடைத்த நல்ல விளைச்சலால் மக்கள் திருப்தியடைந்திருந்தனர்.  நன்கு ஊட்டப்பட்டுத்  திடமாக வளர்க்கப்பட்ட ஒரு கொளுத்தக் கிடா, சதுக்கத்தின் மையத்தில் கட்டப்பட்டிருந்தது. கருப்பு நிறக் கழுத்தும், நெற்றியில் சாம்பல் வண்ணமும் தெளித்த அந்த செங்கிடா, தன் வளைந்த கொம்புகளை ஆட்டியும், தீவனமாக அளிக்கப்பட்டப் புற்கற்றைகளைச் சவைத்து அசை போட்டுக் கொண்டும்,  தன் பழுப்பு நிறக் குமிழ்க்கண்களால் சுற்றி நிற்கும் மக்கள்கூட்டத்தை வெறித்துப் பார்த்தது. இஸ்ரவேலத்தவர்களின் பாவங்களைச் சுமக்கப் போகும் அதன் தலை அங்கும் இங்கும் சதா நிற்காமல் ஆடிக்கொண்டிருந்தது. பாவங்களின் சுமையை ஆட்டின் மீது இறக்கி வைப்பது ஒரு சடங்காகப் பல காலம் நிகழ்ந்து கொண்டிருந்தது. அது தங்கள் ஆதித்தந்தைக்கு பலியாக பாலைவெளியில் அவிழ்த்து விடப்படும். அதன் மூலம் தேவன் ஜெகோவா, சாந்தப்படுவார் என்றும், மறுமை நாளில் தங்களை சொஸ்தப்படுத்துவார் என்றும்  அம்மக்கள் நம்பினர். பலவிதமான அளவைகள் கொண்ட வளையங்களை, ஆட்டின் கழுத்தில், அவரவர்கள் பாவங்களை ஓதிக் கட்டுவர். கயிற்றில் கோர்க்கப்பட்ட பாவங்களின் பழு, கழுத்தை இறுக்க பாலைவனத்திற்கு அது விரட்டியடிக்கப்படும். அவர்களின் ஆன்மா இதன் மூலம் தூய்மையாக்கபட்டு, புதிய வருடத்தைத் தூய்மையுடன் தொடங்குவர். கடவுளின் உடனான புதிய உடன்படிக்கையில் அவர்கள் தங்களையும் அதன் மூலம்  இணைத்துக் கொள்வதாக நம்பினர். விழாவில் தொடர்ந்து எட்டு தினங்கள் குடித்தும், நன்றாக உண்டும் வசந்தத்தின் பெருநாளைக் கவலையின்றிக் கொண்டாடுவர். பசுமை அடர்த்திய கூடாரங்களில் அமர்ந்து, தேவன் தருவித்த வளங்களுக்காகவும், தொய்வடையாத அவனின் காருண்யத்திற்காகவும், நன்றி தெரிவித்துப் பிரார்த்தனைகள் செய்து, அவர் பெருமைகளின் சங்கீதத்தைப் பாடி, இன்னும் இன்னும் தங்களின் நிலம், அவரின் வற்றா ஈரத்தில் செழிக்க வேண்டிச் சடங்குகளைச் செய்வர். பாவங்களைச் சுமக்க, இறைவனால் அளிக்கப்பட்ட இந்தக் கிடாவிற்காகவும், ஆம்! நம் மீட்சியின் அடையாளமான இந்த விலங்கின் நற் பெருமைக்காகவும் அவர்கள் இறைவனைத் துதிப்பர். அது, பாவங்களின் சுமை கழுத்தில் இறுபடப் பசியின் வேதனையுடன் பாலைவனத்தில் பாதையற்று அலைந்து, வயிறு வெடித்துக் குடல் வெளித்தள்ளி சாகும் பொழுது, மக்களின் பாவங்களும் அதனுடன் ஒன்றாகச் களையப்படும்.

    விரிந்து அகன்றிருக்கும் ஆலயத்தின் சதுக்கம், ரத்தத்தால் நிறைந்திருக்கிறது. அதன் தகன பலிப் பீடத்தில் மந்தை மந்தையாக இறைவனுக்கானப் பலி, தொடர்ந்து நடந்து வருகிறது. புனித நகரம் எங்கும் மாமிசத்தின் வீச்சம் தடையற நிரம்பி வழிந்தது. பலியிடும் மிருகங்களின் மலம் நிலமெங்கும் வெவ்வேறு வடிவங்களில் திட்டுத்திட்டாகச் சிந்திக் கிடக்கிறது. பிரட்டும் அதன் நெடி ஒரு தனித்த இருப்பாக ஆலயத்தைச் சுற்றி வீசியது. இந்நகரின் புனிதக் காற்று, நாற்றத்துடனும், கொம்புகளின், ஊதுகுழல்களின் முழக்கங்களில் ஒரு பசித்த ரோமங்கள் அடர்ந்த வன்மிருகம் போல ஊளையிடுகிறது. அதிகமாகத் தின்றும் குடித்தும் பருத்திருக்கும் நகரத்தின் மக்கள், தங்கள் பழுவான ஆன்மாவை ஒரு வீக்கமடைந்த உறுப்பைப் போலத் தூக்கிச் சுமக்கின்றனர். முதல் நாளின் சடங்குகளில், சங்கீதங்களும், பிரார்த்தனைகளும் நடத்திக் கண்களுக்குப் புலனாகாத் தந்தை ஜெகோவாவின் பெயரினால், அவர்கள் தங்கள் கூடாரங்களில், குடித்து, நிறைவாக உணவு உண்டு மகிழ்ந்தனர். இரண்டு மற்றும் மூன்றாம் நாட்களில், பலி தொடர்ந்து அளிப்பட்டுக் கொண்டிருந்தது, நேர்ச்சைக்காக வளர்க்கப்பட்ட மிருகங்களின் ஊனும் குருதியும் அளவில்லாமல் படைக்கப்பட்டது. மதுவின் கிறக்கத்திலும், மாமிசத்தின் மதர்ப்பிலும் அவர்கள்  தன்னிலையிழந்துத் திளைத்தனர். மதுக்கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவர்கள் தங்களுக்குள் ஆபாச செய்கைகள் செய்தும், கேலியும், கிண்டலும் பேசிக் கூத்தடித்தனர். அங்கங்களை வர்ணிக்கும், கொச்சையானப் பாடல்களைப் பாடிக் களித்தனர். ஆண்களும் பெண்களும் பாரபட்சமின்றிக் குடித்து, வெட்கமின்றி அசிங்கமாகக் குழைந்தும், நடமாடியும், வெளிச்சத்தில் காண்பவர் கூசும் செயல்களைச் செய்தனர். முதலில் அவர்களின் கூடாரத்திலும், பின் தெருக்களிலும், வழிப்பாதைகளிலும், பின் அதனடுத்து வியாபித்துக் கிடந்த புல்வெளியிலுமாகக் கிடந்துத் தங்கள் அந்தரங்கத் தேவைகளைத் தீர்க்கும் முயக்கத்தில் ஈடுபட்டனர். பக்கத்து கிராமங்களிலும், ஊர்களிலுமிருந்த, பேர் வாங்கியப் பரத்தையர்களின் கூட்டம் மொத்தமும் ஜெருசலேமில் குழுமியிருந்தது. அந்தப் பெண்கள் அதீதக் கவர்ச்சியை ஏற்படுத்தும் அலங்காரங்களுடன், நறுமணத்தைலம் பூசிக் கொண்டு, கையில் அகப்படும் ஆண்களை மயக்கி, வழிப்பறி செய்து கொண்டிருந்தனர்.கானான் நிலத்தின் கடைசி எல்லை வரை இந்த எளிய விவசாயிகளும், மீனவர்களும் இந்த அளப்பறியாப் புனிதங்களின் வசீகரத்தில் வீழ்ந்து இன்புற்று ஆரவாரித்தனர். தங்கள் வாழ்வில் இதுவரை அனுபவித்திராத உடல்களின் திரட்சியை, முத்தங்களின் பல்வேறு சுவைகளை, அதன் கலையானுபவத்தை ஆழ்ந்து உள்வாங்கிப் போதையுற்றுக் கிடந்தனர்.

தன் மூச்சைப் பிடித்துக் கொண்டு கோபத்துடன், வேகமாக நகரின் தெருக்களின் வழியே  ஜீசஸ் வந்து கொண்டிருந்தான். வழிப்பாதையில், போதையில் அரை நிர்வாணமாக மண்ணில் விழுந்து கிடக்கும் ஆண்களைப் பார்த்தான். மதுவின் புளித்த நெடி, கொப்பளிக்கும் மனித நாற்றம், அருவருப்பும், குமட்டலுமாக முன்னேறிக் கொண்டிருந்தான். "சீக்கிரம்! சீக்கிரம்!" தன் பின்னால் வருபவர்களை விரைவுபடுத்தினான். வலது புறம் ஜானும், இடது புறம் ஆண்ட்ரூவும் அவனுக்குத்துணையாக முன் ஏகினர்.

    ஆனால் பீட்டர் தான் நின்ற இடத்தை விட்டு நகரவில்லை. கலீலியிலிருந்து விழாவிற்கு வந்திருந்த யாத்திரீகர்கள் அளித்த மதுவும், நன்று சுட்டு வேகவைத்த சுவையான இறைச்சியையும் விட்டு வர அவனுக்கு மனம் வரவில்லை. கூடுகையில் பேசிக் கொண்டிருந்த உரையாடலில் இருந்து வெட்டி விட்டு வெளியேற ஒக்காமல் அங்கேயே நின்று கொண்டிருந்தான். அவன் யூதாசையும், ஜேக்கப்பையும் கூட பேச அழைத்தான். ஆனால் அவர்கள் தங்கள் நண்பர்களைப் பற்றி புகார் கூற விரும்பவில்லை. ஆனால் முன்னே சென்று கொண்டிருந்த அம்மூவர்கள் மட்டும் பதற்றத்துடன் நகர்ந்து கொண்டே இருந்தனர். மற்றும் வழியில் இருக்கும் தடைகளைப் பற்றி சொல்லிக் கொண்டே மற்றவர்களையும் அங்கிருந்து வந்து விடுமாறு சத்தமாக உரக்கக் கூறிக் கொண்டே சென்றனர்.

    "நல்ல கடவுள், இந்த ஆசிரியன் நம்மைக் கொஞ்சம் ஆசுவாசமாக மூச்சுக் கூட விட விடமாட்டான் போல இருக்கிறது. நாமும் மனிதை பிறவிகள் தானே" என்று சலித்துக் கொண்டே முணுமுணுத்தான். "நாம் அப்படி என்னப் பெரிதாய் செய்து விட்டோம் என்று இந்த மனிதன் இப்படி அங்கலாய்க்கிறான்"போதையின் களிப்பில் ஏற்கனவே திளைத்திருந்த ஜேக்கப்பின் சொற்கள் குழறின.

    "இத்தனை காலம் நீ எங்கிருந்தாய் எனதருமை பீட்டர்?" தலையை சற்றே சாய்வாக ஆக்கிக் கொண்டு கிண்டல் கலந்த தொனியில் யூதாஸ் கேட்டான். "என்ன நினைத்து நீ எங்களுடன் வந்தாய்? நாமென்ன கல்யாண விருந்திற்கா போய்க் கொண்டிருக்கிறோம். எந்த நம்பிக்கையில் நம் பாதையின் தளங்களைப் பற்றி நீ, நன்றாக இருக்கும் என்று நீ யூகிக்கிறாய்?, எனக்குப் புரியவில்லை பீட்டர்!"

    அவர்களும் அமூவரைப் பின் தொடர்ந்து விரையத்தொடங்கினர். ஒரு கனத்த கார்வையான ஆண்குரல் ஒன்று அங்கிருந்த ஒரு கூடாரத்தில் இருந்து பீட்டரை விளித்தது. "ஹேய் பீட்டர், ஜோனாவின் மகனே! நில்!, நாற்றம் பிடித்த கலீலியனே! நாம் நேருக்கு நேர் தலையில் முட்டிக் கொண்டும் என்னை  நீ கவனிக்கவில்லையா?, வா! கொஞ்சம் மது அருந்தி விட்டே பேசலாம் வா!, அப்பொழுதுதான் உன் வீங்கிய மண்டை கொஞ்சம் சுருங்கி நீ தெளிவடைவாய். எதிராளி யார்? எங்கிருக்கிறோம் என்ற போதம் கூட அன்றி எங்கு போவதற்கு இப்படி துடித்துக் கொண்டிருக்கிறாய்"

    அப்பொழுதுதான் பீட்டர் சரியாக அக்க்குரலின் மனிதனைக் கவனித்தான். " அட! நீயா! என் அருமைக் கொழுத்த சிரியனே! சைமன் மெதுவாக மற்ற இருவர்களையும் தன் ஈறுதெரிய சிரித்துக் கொண்டே பார்த்தான்.

    "பயல்களே! இந்த முறை நீங்கள் தப்பிக்க வாய்ப்பில்லை. வாருங்கள்! ஒரு குவளையாவது மது அருந்தாமல் நான் உங்களை விடப் போவதில்லை". சைமன் ஊருக்கே தெரிந்த மொடாக் குடிகாரன். டேவிட்டின் வாசலிற்கருகே அவனது மதுக்கூடம், இன்பங்களின் களிப்பிற்கும், போதையின் உச்சக் கட்டத் திளைப்பிற்கும், உறுதியளிக்கும் நம்பகமானவன். ஆம்! அதனால் சரியாக அவனது கழுத்தை இறுக்கித் தூக்கிலிட எல்லாத் தகுதிகளும் கொண்டவன். ஆனால் அப்படி ஒன்றும் மோசமானவன் அல்ல. நாம் அவனுக்குத் தகுந்த மரியாதையை அளித்தால் போதும்." பீட்டர் தன் நண்பகளிடம் சொல்லிக் கொண்டான்.

    உண்மையில் சைமன் நல்லவன். பெரிய புகார்கள் இல்லாதவன். இளமையில் சிரியாவிலிருந்து இங்கு வந்து மதுக்கடை ஒன்றைத் திறந்தான். ஒவ்வொருமுறையும் பீட்டர் ஜெருசலேமிற்கு வரும் பொழுதெல்லாம் அவந்து வீட்டில் தான் தங்குவான். கடையும் வீடும் ஒன்றுதான். அங்கு அவர்கள் குடித்தும், நன்றாகத் தின்றும், பலவிதமானக் கதைகள் பேசியும் பொழுதைக் கழிப்பார்கள். ஏதேதோ கிழுகிழுப்பான பாலியல் கதைகளையும், ஊரில் நடந்த வேடிக்கையான நிகழ்வுகளையும், இருவருக்கும் தெரிந்தவர்களைப் பற்றியக் கேலில் கிண்டல்களையும் பேசிப் பேசி இரவைக் கடப்பர். சிலசமயம் ஏதோ நாட்டுப்புறப் பாடல்களைப் பாடிக் களிப்பர். சிலசமயம் அடி போட்டுக் கொள்வர். எல்லாம் அடங்கியப் பின், அடர்த்தியானப் போர்வையால் தன்னைச் சுருட்டிக் ஒண்டு பீட்டர் அயர்வான். சைமன் மிச்சம் மீதி இருக்கும் மதுவையும் விடாமல் குடித்துத் தீர்த்து, போதம் கழன்று நின்ற இடத்திலேயே அப்படியே விழுவான். விட்ட இடத்திலிருந்து பாடலின் வரிகளைத் தேடி எடுத்துத் தனக்குத் தானே உளறலான மொழியில் பாடுவான். கையில் இருக்கும் குவளையில், மீதம் இருக்கும் மது கொஞ்சம் கொஞ்சமாக நிலத்தில் சொட்டிக் கொண்டிருக்கும். குடிப்பதற்காக வாழ்பவன் என்று அவனை ஒத்துக் கொள்ளலாம்.

    அவர்கள் இருவரும் ஆழத் தழுவிக் கொண்டனர். இருவருமே அரைபோதையில் இருந்தனர். ஒருவரை ஒருவர் அன்பு தழும்ப, கண்கள் பனிக்க உற்றூ நோக்கினர். இறுக்கி அணைத்துக் கனைத்துப் பின், ஆழமாக மூச்சிழுத்து மற்றவர்களின் உடல் வாடையை  வாங்கிக் கொண்டப் பின், சைமன் நிறுத்தாமல் சிரிக்கத்தொடங்கினான்.

    "நான் சம்மதிக்கிறேன், என் யூகம் என்றுமேத் தப்பியதில்லை, நீ ஞானஸ்நானம் செய்து கொள்ளத்தானே போய்க் கொண்டிருக்கிறாய்!" இன்னும் சிரிப்பை அடக்காமல் சைமன் தொடர்ந்தான். "நல்லது! சரியான வழி! நண்பா! என் ஆசிர்வாதங்களும், பிரார்த்தனைகளும். நானும் நேற்றுதான் என்னை முழுக்கிட்டுக் கொண்டேன். எந்த இடத்திலும் நான் அதை மறுக்கவே இல்லை தெரியுமா!. உண்மையில் இப்போது எவ்வளவு நிறைவாக உணர்கிறேன் தெரியுமா? நண்பா! நீ சரியானப் பாதையைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறாய்?" ம்ம்! வாழ்த்துக்கள்!"

    "அதன் பின்பு ஏதேனும் மாற்றங்களோ, இல்லை ஏதாவது மேம்பட்டதாக  உன்னிடம் உணர்கிறாயா?" யூதாஸ் எதையும் அருந்தாமல் இறைச்சித்துண்டங்களை சவைத்துக் கொண்டேக் கேட்டான். அவனது அகம் முழுதும் முட்களால் நிரம்பியிருந்தது.

    "உன்னிடம் சொல்வதெற்கென்ன நண்பா!, நான் முதன்முறைத் தண்ணீரை ஸ்பரிசித்த நொடியிலிருந்து இன்று வரை நினைக்கிறேன். நானும் நீரும் எதிரெதிர் கூர் முனைகள். நான் இயல்பாகவே மதுவினால் ஆனவன். இந்தத் தண்ணீர் தேரைகளுக்கானது. ஆனால் அன்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். இப்பொழுது என்னக் குடி முழுகி விடப் போகிறது. நாமும் ஞானஸ்நானம் செய்து கொள்வதில் ஒரு தவறும் ஆகிவிடப் போவதில்லை. கண்டிப்பாகப் புதிதாக திருமுழுக்கிடச் செல்பவர்களில் ஒரு சிலராவது தங்களின் ஆன்ம பலத்தைப் பெருக்கிக் கொள்ளக் குடிப்பவர்களாகத் தான் இருப்பார்களே! அந்த வாய்ப்பை நாம் ஏன் தவற விட வேண்டும். எப்படியும் தெரிந்த முகங்கள் யாராவது இருப்பார்கள். அது மட்டுமில்லாமல், வருபவர்கள் அனைவரும் ஒரே போல முட்டாளாக இருக்க மாட்டார்கள் இல்லையா! அதனால் எனக்கான வாடிக்கையாளர்களை நான் ஏன் தவற விட வேண்டும் என்று தோன்றியது. தவிர பெரும்பாலனவர்க்கு என்னையும், டேவிட்டின் வாசலிற்கருகேயே இருக்கும் என் மதுவிடுதியையும் நன்றாகவேத் தெரியும். எதற்கு நீட்டி முழக்கிக் கொண்டு, நான் அங்கு போனேன். உண்மையில் அந்த தீர்க்கதரிசி, ஒரு கட்டுப்ப்படுத்த முடியாத வனமிருகம் போல இருந்தார். எப்படி அவரைப்பற்றி விளக்குவது?, அவரது நாசித்துவாரங்களிலிருந்து தீ உமிழ்வதை நான் என் சொந்தக் கண்களாலேயேப் பார்த்தான். அந்த எல்லாம் வல்ல தேவன் தான் என்னைக் காப்பாற்றினார். அவர் என் கழுத்தைப் பிடித்துத் தூக்கி, ஆற்றினுள் இழுத்துக் கொண்டு போய், தலையத் தாழ்த்தி என் தாடியில் தண்ணீர் படும்வரை அமிழ்த்தி விட்டார். நான் துடிதுடித்து அலறிக் கொண்டிருந்தேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் அவர் என்னை முழுவதுமாய் முக்கிக் கொன்று விடுவாரோ என்று தான் நினைத்தேன். எப்படியோ ஒரு வழியாக நான் பிழைத்துக் கொண்டு உங்கள் முன் அமர்ந்திருக்கிறேன்.

    "சரி! ஆனால் அதன் பின் நீ எவ்வாறு உணர்கிறாய்? உன்னில் எதுவும் மாற்றம் நிகழ்ந்ததா, முன்னிலும் நீ இப்பொழுது மேன்மையடைந்ததைப் போல ஏதும் நினைக்கிறாயா?" யூதாஸ் மறுபடியும் வினவினான்.

    "நிச்சயமாக, நான் அருந்தும் மதுவின் மீது சத்தியம் செய்து சொல்கிறேன். அதன் பின்பு நான் நிறைய நல்ல மாற்றங்களை அடைந்தேன். உண்மையில் ஒருவிதமான சிகிழ்ச்சை போல, நான் குணமடைந்ததை என்னால் அறிய முடிகிறது. அவர் சொன்னார் நீ உனது பாவங்களிலிருந்து விடுவிக்கப்படுகிறாய் என்று. ஆனால், அது அவ்வாறல்ல, நான் சொல்வது நமக்குள் மட்டுமே இருக்கட்டும், உண்மையில் அந்த ஜோர்டான் நதியின் மேற்பரப்பில், சரியாக ஒரு பிடி ஆழத்தில்,  ஒரு விதமான கனத்த எண்ணெய் படர்த்தப்பட்டிருக்கிறதோ என்று நினைக்கிறேன். என்னுடையப் பாவங்களிலிருந்து அல்ல, ஆனால் என் உடலின் ஒரு சில வலிப் புள்ளிகள், அழுந்தும் இடங்களிலிருந்து முற்றிலுமாக நிவாரணம் அடைந்திருக்கிறேன்".

    சொல்லி முடித்ததும், பெருமையாகத் தன் கையிலிருந்தக் குவளையைத் தூக்கிக் காட்டி ஒரே அடியில் விழுங்கிக் கொண்டான். தன் முகத்தின், கன்ன ரேகைகள் அழுந்த, கண்கள் சுருங்கிப் பற்கள் தெரிய சத்தமாக சிரித்துக் கொண்டே அருகில் இருந்த பீட்டருக்கும், ஜேக்கப்புக்கும் குடிவையிலிருந்த மதுவை நிரம்ப ஊற்றினான். பின் மற்றுமொரு குவளையை யூதாசிடம் நீட்டினான்.

    "இந்தா! வாங்கிக் கொள், கொல்லனே! நீ குடிக்க மாட்டாயா? முட்டாள் முரடனே! நீ ஆசிர்வதிக்கப்பட்டவன் தெரியுமா உனக்கு, இது தண்ணீர் அல்ல!"

    "நான் குடிப்பதில்லை!" நீட்டிய கையை மறித்து பதிலளித்தான் செந்தாடிக்காரன்.

    சைமனின் குரல் சற்று தாழ்ந்தது. "நீ அவர்களில் ஒருவனா?" திகைப்பு அடங்காமல் கேட்டான்.

    "ஆமாம்!" மென்மையாக சிரித்துக் கொண்டே அந்த உரையாடலை நிறுத்திக் கொண்டான்.

    சிவப்பு மட்டும் கருமையானப் முகப் பூச்சுகளை வரைந்திருந்த இரு மத்திய வயதுப் பெண்கள் அவர்களைக் கடந்து சென்றனர். அவர்களில் ஒருத்தி நமட்டுதலாகக் கண்ணடித்தாள்.

    "அப்படியென்றால் பெண்களும் கிடையாதா?" சைமன் தடுமாறும் குரலில் கேட்டான்.

"ஆம்! அதுவும் கிடையாது" யூதாஸின் குரல் வறண்டிருந்தது.

    "அடப் பாவமே! என்ன இது நண்பா!" எதற்காக இப்படிப் பொறுத்துக் கொள்ளவேண்டும். இல்லை! யாருக்காக இந்த சொந்த வன்முறை, கடவுள் இந்தப் பெண்களையும், திகட்டாத மதுவையும் அளித்தது பின் எதற்காக. அவர் இதைத் தவிர்த்தாரா இல்லை நம்மைத் தான் அவர் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினாரா! உண்மையில் எனக்குப் புரியவில்லை நண்பா!"

    சரியாக அந்நேரத்தில் ஆண்ட்ரூ ஓட்டமும் நடையுமாக அவர்கள் முன் வந்து சேர்ந்தான். "சீக்கிரம்! சீக்கிரம்! நமது ஆசிரியர் மிகுந்த அவசரத்தில் இருக்கிறார்!" ஆண்ட்ரூ கிட்டத்தட்ட கத்திக் கொண்டிருந்தான்.

    "யார்? யாரைச் சொல்கிறாய்? யார்! அந்த வெண்ணிற அங்கி அணிந்து வெற்றுக் காலுடன் நடந்து செல்பவனையா சொல்கிறாய் ஆசிரியன் என்று" சைமன் தூரத்தேப் பார்த்துக் கைதூண்டு ஆண்ட்ரூவிடம் கேட்டான்.

    ஆனால் அதற்குள் சைமனைத் தவிர மற்ற மூவர்களும் அங்கிருந்து போய் விட்டனர். காலியான மதுக்குவளையையும், கோப்பையையும் வைத்துக் கொண்டு அவன் தனியாக வீதியில் அவர்கள் செல்வதை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். "இன்னொரு பைத்தியக்காரன், மறுமைக்கு வழி காட்டுபவன் போல. ஆங்! அது கிடக்கிறது. அவனது ஆரோக்கியத்திற்காகவும் குடிப்போம், அப்படியாவது இறைவன் அவனுக்கு நல்புத்தியை அருளட்டும்" சொல்லிக் கொண்டே வாயில் மதுவைக் கவிழ்த்துக் கொண்டான்.

    ஜீசசும், அவனது துணைவர்களும் அச்சமயம் சரியாகக் கோவில் வாசலின் முன்னே இருக்கும் பிரதான முற்றத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் பிரார்த்திக்கச் செல்வதற்கு ஆயத்தமாகத் தங்கள் கை கால்கள் மற்றும் வாயினை சுத்தமாகக் கழுவிக் கொண்டனர். சுற்றும் முற்றும் நிகழவதை வேகமாகக் கவனித்தனர். ஒன்றிலிருந்து ஒன்றாக மனிதர்களும், பலிக்கான நேர்ச்சை மிருகங்களும், நீண்டுயர்ந்த தூண் மாடங்களின் இடைவெளிகள் வழித் தெரிந்தனர். நீலச்சலவைக் கற்கள் பதிந்த பாதை நேராக உள் நோக்கிச் சென்றது. மக்கள் கூட்டம் கூட்டமாக உள்ளே செல்வதும் வெளியே வருவதும், அவர்களின் ஆர்ப்பரிப்பும், ஆரவாரமும், கூச்சல்களும், தோல்க்கருவிகளின் பறை ஒலியும் கலந்து எங்கும் என்னதென்று விளங்க முடியாத சத்தம் மட்டும் காதை அடைத்துக் கொண்டு வெளிவந்தது. வாசலின் இருபுறமும் தங்கவேலைப்பாடுகளால் செய்யப்பட்ட திராட்சைக் கிளைகளின் புடைப்பில், கரு நீல நிறக் கொத்துக்களாக கனிகள் தொங்கிக் கொண்டிருந்தது. உள்ளே செல்லும் அப்பாதையின் இருமருங்கிலும், சிறியதும் பெரியதுமானக் கூடாரங்களும், கழுதை வண்டிகளும், பணப்பரிமாற்றம் செய்து தரும் வியாபாரிகளும், மது விற்பனை செய்பவர்கள், முடி வெட்டுபவர்கள், இறைச்சி வெட்டுபவர்கள் என்று சரியாகச் சொல்வதெனில் சந்தைக் கூச்சல்.

    காற்று புகுவதற்குக் கூட வழியற்று நிரம்பி வழிந்த திரளில், ஆங்காங்கே சண்டை போட்டுக் கொண்டும், கத்திக் கொண்டும் இருந்தனர். துர்நாற்றம் மட்டுமே எங்கும் நீக்கமற இருந்தது. மனித மாமிச  நெடியும், மிருகங்களின் மூத்திரமும் மலமும் கலந்த வாடை அச்சூழலையே உருக்குலைத்திருந்தது. எங்கும் மக்கள் அதைப் பற்றிய எந்தத் தொந்தரவுகளுமின்றித் தங்கள் சடங்குகளைச் செய்து கொண்டுப் பூசலில் திளைத்தும், அங்காங்கே மூக்கு முட்டக் குடித்துக் கொண்டு, அடி போட்டுக் கொண்டுத் தங்களால் இயன்ற வரை அச்சூழலை எல்லா வகையிலும் ஆக்கிரமித்துக் கொண்டனர். 

    ஜீசஸ் தன் உள்ளங்கைகளால் மூக்கையும், வாயையும் ஒரு சேர மூடிக் கொண்டுத் தன் முன் நிகழ்வதைப் பார்த்தான், எங்குமே ஒரு கோவிலுக்கான,   தேவனின் இருப்பிடம் என்பதற்கான அறிகிறிகளேத் தென்படவில்லை. " எனக்கு அருவருப்பாக இருக்கிறது. இந்த இழிவான விழா? மூடத்தனமான இந்தச் சடங்குகள் உண்மையில் குமட்டுகின்றது. எனக்காக அறுக்கக் வைத்திருக்கும் இந்தக் கொழுத்த இளங்கன்றுகளை என்னால் ஏற்க இயலாது. உங்களின் சந்தடிகளை, சங்கீதங்களை, சத்தங்களைத் தூக்கிக் கொண்டு ஓடி விடுங்கள்.. நான் முற்றிலுமாக இவை அனைத்தையும் வெறுக்கிறேன். உண்மையில் என்னை மறுக்கும், என்னிருப்பை நிந்தனை செய்பவைகளாகவே இவைகளைக் கருதுகிறேன்". அச்சொல், தேவனுடையதோ இல்லை தீர்க்கதரிசியினுடையதோ அல்ல. அது தன் முன்னே தன் தந்தைக்கு நிகழும் அவலத்தின் பாதிப்பினால் அவனது இருதயத்தில் அழுத்தம் மீதுற அழுகையாய்க் கதறி வெளியேறியது. ஒரு கட்டத்தில் தாங்க இயலாது வெலவெலத்துக் கொண்டே நின்ற இடத்திலிருந்தே அவன் சரிந்து விழுந்தான். தன் முன்னே வியாபித்திருந்த சிறுமைகள் மொத்தமும் ஒரு தூசுப்படலம் விலகுவது போல விலகியது. கோவிலின் மேல் முகடுகள் நீலம் விரிந்து வானம் வெளித்தது. அதனுள்ளிருந்த கனத்த மேகத்துண்டங்க்ள் பிளந்து உடல் முழுதும் நெருப்பு பூத்த, ஜ்வாலையினால் சிறகுகள் அடர்ந்த ஒருதேவதை வெளிவந்தது. ஒரு தீப்பிழம்பு போலக் கோவிலின் நடுமையத்தில் சுழன்ற அதன் செந்நிற விளிம்புகளிலிருந்து, கூர் நுனி கொண்ட வாள் மையமிட்டது. அது தங்கத்தால் வார்த்து ஒழுகி, நெடிதுயர்ந்து நிற்கும் கோவிலைக் குறி வைத்தது.

    ஜீசஸ் தள்ளாடிக் கொண்டேத் தனக்குள் பொருளின்றி முனகினான். ஆண்ட்ரூவின் கைகளுக்குள்ளிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு மெல்ல எழுந்து நின்றான். முன்னே அழுகல் நாற்றம் வீசும் கோவிலையும், சதா கூச்சலிட்டுக் கொண்டே இருந்த மக்களையும் கண்கள் திறந்துப் பார்த்தான். தேவதையின் பிழம்புகள் ஒரு அழிவற்ற ஒளிக்குமிழாய் அவனுள் அமிழ்வதை உணர்ந்தான். தன் துணைவர்களை நோக்கி மெல்ல ஒரு பறவையைப் போலக் கைகளை அகல விரித்தான்.

"என்னை மன்னித்து விடுங்கள், நான் இன்னும் என்னை இழந்து விடவில்லை, சற்று நடுக்கம் மட்டும் தான் வேறு ஒன்றுமில்லை. வாருங்கள் செல்வோம்" 

"பிரார்த்திக்காமல் செல்வதா?" ஜேக்கப் குறுக்கிட்டான். அது உண்மையில் ஒரு அவதூறான சொல் போல அவர்களுக்கு நடுவே விழுந்தது.

"நாம் நம்முள்ளே பிரார்த்திப்போம்! ஜேக்கப்! நம் உடலே நம்முடையக் கோவில்"

அவர்கள் விரைவாக அங்கிருந்து அகன்றனர். யூதாஸ் முன்னே அவர்களை வழி நடத்திச் சென்றான். 

    தன் கைக் கோலினை ஆழமாக நிலத்தில் அழுத்தி விரைவானக் காலடிகளுடன் அவர்களுக்கு முன்னே தனியாக யூதாஸ் சென்று கொண்டிருந்தான். 

    கோவிலில் நிகழ்ந்தவை, அவனை குழப்பமடையச் செய்தன. "ரத்ததையும், மாமிசத்தையும், வெறிக் கூச்சலையும் உண்மையில் இவனால் தாங்க முடியவில்லை. அஞ்சுகிறான். இவன் யார்? நிச்சயமாக இவன் மெசியாவாக இருக்க வாய்ப்பில்லை!" யூதாஸ் தனக்குள் சொல்லிக் கொண்டான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக