ஞாயிறு, 1 ஜனவரி, 2023

கிறுஸ்துவின் கடைசி சபலம் - 82



The Last Temptation of Christ - Nikos Kazantzakis

    ஜீசஸ் வெறுமனேப் புன்னகைத்தான். உலகமே ஒரு மாபெரும் மரத்தின் கிளைதனில் முகிழ்ந்த மலரைப் போல, அதன் மலர்ச்சியின் இதழ்கள் விரிகையில், சிறகுகள் உயர்த்திப் பறவையாகி, அது எல்லையற்ற பிரபஞ்சவெளி நிறைத்துப் பறக்கத் தொடங்கிவிடும் என்று நினைத்து மகிழ்ந்தான். கீழ்மையில் தரக்குறைவாக, நடக்கும் அரசன், தன் பாவங்களை உணர்ந்து ஞானஸ்நானம் பெற்று, தன் ஆன்மாவைத் தூய்மைபடுத்துவான். அவன் தனது சகோதரனின் மனைவியான ஹெரோடியஸை விடுவித்து, அவள் கணவனிடம் சேர்ப்பிப்பான். முதன்மைப் பூசாரிகளும், நல்ல மனிதர்களும் தங்கள் தானிய சேமிப்புக் கிடங்குகளையும், கருவூலங்களையும் திறந்து, பாவப்பட்ட ஜீவன்களுக்கு, பொன்னையும், தானியங்களையும், உடைகளையும் பகிர்ந்தளிப்பர். அவர்கள் தங்கள் மனதிற்குள் இதுவரை ஊறிக் கிடந்த வெறுப்பையும், சுய நிந்தனையையும், கோபத்தையும், பொறாமையையும் விட்டுத்தள்ளி, மனதாரத் தங்கள் இருதயத்துடன் ஒன்றி அமைதியடைவர். ஜீசஸ் தன் கைகளை விரித்து ரேகைகளை ஆராய்ந்தான். காட்டுத்துறவி ஜான், தன் கைகளில் ஒப்படைத்த வலுவானக் கோடாரி, ரேகைகளின் ஊடேக் கிளைபரப்பி, இலை துளிர்த்து, பசுமை அடர்கிறது. வெண்மை விரிந்த பூவிதழ்கள் முளைக்கின்றன. இளஞ்சிவப்புத் தாதுக்கள் அடர்ந்த மகரந்தங்கள் கிளர்ந்து மணம் பரப்புகின்றன.

    அவனது உணர்வுகள் அடங்கின. பாரம் விலகியிருந்தது. கைகளைத் தலைக்கு முட்டுக் கொடுத்து, ஒருக்கழித்துக் கால்களை ஒடுக்கிப் படுத்துக் கொண்டான். எண்ணங்கள், நினைவுகள் எல்லாம் மறைந்து, உறக்கம் அவனை அணைத்துக் கொண்டது. அமைதி ஒரு கூடாரம் போல அவனைச் சுற்றி எழும்பத் தொடங்கியது. நள்ளிரவு கடக்கையில், தன் உறக்கத்தினுள், முன்னே நீரோட்டம் குமிழியிடும் சப்தம், ஏற்கனவே பார்த்த முயல்கள், குதித்துச் சண்டையிடுகின்றன. ஒரு மூக்கு, ஈரமான நாசி, பதுங்கிப் பதுங்கி மோப்படுவதை உடல் முழுதும் அறிந்தான். ஓநாய் ஒன்று, தனித்தும் பசித்தும் அவனை முகர்கிறது. ஜீசஸ் தன் சொப்பனத்தின் வெளியில், அது தன்னைச் சுற்றிச் சுற்றி வருவதைப் பார்த்தான். ஒரு சவம் போல அசையாமல் கிடக்கும் தன் உடலின் எந்தப் பாகத்தில் வாய் வைக்கலாம் என்று அந்த மிருகம் எச்சரிக்கையுடன் ஆலோசித்துக் கொண்டிருந்தது. அவன் தன் நெஞ்சைப் பிளந்து, இருதயத்தைப் பிய்த்து, ரத்தத்துடன் அதற்கு உணவாக அளிக்க வேண்டும் என்று நினைத்தான். தன் மற்ற மாமிசத்தை அவன் மனிதர்களுக்காக ஒதுக்கி வைத்திருந்தான்.

    விடியலுக்கு முன்னேயே எழுந்து வானை நோக்கினான். விண்மீன்களின் வலைப்பின்னல். மெல்லியக் காற்றின் அனல் சற்று குறைந்திருந்தது. பூமி ஒரு ஆடியினைப் போல நீல வெளியைப் பிரதிபலித்தது. மணற்துகள்களின் ஓயாத நடுக்கம். ஆகாயத்தின் அடர்த்தி கூடிக் கூடி, தலைக்கு மேலே தொட்டு விடும் உயரத்தில் விரிந்திருந்தது. மூட்டமான அமைதி. சமிஞ்சைகள் ஒளிவட்டங்களாக நட்சத்திரங்களின் பின்னே, விரிந்தும் சுருங்கியும் மூச்சிழைக்கிறது. சரியாக அத்தருணத்தில், காகங்களின் சிறகடிப்புகள், கரைதல்கள். கிராமங்கள் முழிக்கின்றன. மனிதர்கள் வெளிச்சத்தைப் பிடித்துக் கொண்டு உறக்கம் விடுத்தனர். சூரியனின் கிரணங்கள் எல்லா வீடுகளின் உள்ளும் சென்று, தன் நீள்பட்டைக் கரங்களால் அவர்களை எழுப்பியது. பிள்ளைகள் வீறிட்டலற, அதன் அம்மாக்கள் அவர்களை மார்போடு அணைத்துப் பாலூட்டுகின்றனர். பாலை நிலம் ஊர்களாக, வயல்களாக, சந்தைக் கூடங்களாக, நதியாக, சதுக்கங்களாக உருமாறியது. மனிதக்குரல்கள், ஆடுகள், சேவல்களின் குளறல்கள். மெல்ல மெல்லக் குளிர் குறைகிறது. காற்றின் நடுக்கம் கூடுகிறது. வெக்கை தன் பல்லாயிரம் கரங்களால் அனைத்தையும் பிடித்து விழுங்குகிறது!.....அவனது இருதயத்தின் துடிப்புகள் நின்று மீண்டன. "இந்த குளிரின் சுகந்தம் மாறாதது, நிலைத்தது என்று தவறாக நினைத்திருந்தேன். கடவுளின் எண்ணங்கள் மாறானவை. அது ஒரு பிலம் போல. ஆழம் காண இயலாது. அவனது அன்பு ஒரு படு குழியினைப் போன்றது. அவனே இவ்வுலகத்தை நட்டான். அது வளர்ந்து, கிளை விரித்து பழம் தரும் தருணம் அதனை அழித்துத் தரை மட்டமாக்குகிறான். பின் புத்தம்புதியதாகத் திரும்பவும் நடுகிறான். துறவியின் சொற்கள் அவனுள் துளைத்தன. "யாருக்குத் தெரியும்! உண்மையில் அன்பு, கோடாரியை ஏந்திக் கொண்டுதான் வரவேண்டும் போல...." அவனுள் நடுக்கம் கூடியது. கீழே தரையைப் பார்த்தான். மணற்துகள்கள் அவனைப் போலவே சதா நடுங்கிக் கொண்டும், குமைந்து கொண்டும். எங்குமே நிலையாகக் கால்பாவிக்க முடியாமல், காற்றின் திசை உந்துதலுக்குத் தன்னை ஒப்புக் கொடுத்து அலைந்து கொண்டே இருந்தது. வெம்மை படியப் படிய ஒளி கூடி எடையிழந்தது. வானத்தின் செம்மை நிலத்தை ஆக்கிரமித்தது. சூரியனுக்குக் கீழே அனைத்தும் சிவந்துப் பழுத்திருந்தது. அவனது எண்ணம் அங்கும் இங்கும் ஊசலாடிச் சுழன்றது. மணற்புயல் வருவதைப் போல சீதோஷணம் மாறி, வானம் கங்கினைப் போலக் கனன்றது. காற்றின் துடி, வெந்தெரியும் புழுதி நெடி. சோடோம், கொமோரா.....கோட்டை கொத்தளங்கள், சதுக்கங்கள், காட்சிக் கூடங்கள், விற்பனைச் சந்தைகள், மதுக்கடைகள், வேசிகள்....அவனது எண்ணங்கள் நெழிந்து நெழிந்து, தன் பாதையை மணலில் பரத்தும், மணற்பல்லியினைப் போல பரத்திக் கொண்டுப் பயணித்தது. ஆப்ரஹாமின் கதறல், "கருணை காட்டுங்கள் ஆண்டவரே! எங்களை எரித்து விடாதீர்! நீ படைத்த உயிர்களின் மேல் இரக்கம் கொள்ளும்! நீ நியாயவான் இல்லையா!  நாங்கள் தாழ்ச்சியுறுகிறோம்! உம் கோபத்தினால் எங்களைப் பொசுக்கிவிடாதீயும்!", கடவுளின் பதில் அமைதியாக ஒலித்தது. " நியாயத்தின் பொருட்டே நான் அனைத்தையும் எரிக்கப்பண்ணுவேன்!"

    "இதுதான் தேவனின் வழியா?. உண்மையில் நம் தேவனின் சொல் இதுவெனில், இரு

தயம் எனும் இந்தப் பொடிந்து போகும் மட்பாண்டம் ஏன் என்னிடம் இவ்வாறு உரைக்கிறது. அது தன் சொந்தத்துடுக்குத்தனத்தால் தேவனின் சொல்லை மறுதலிக்கிறதா? அது அனைத்திற்கும் எதிராக நின்று பதற்றத்துடன் கதறுகிறதே! நில்! நில்! அமைதியுறு! அய்யோ!....உண்மையில் நீ செய்ய வேண்டியது என்ன?" நிலைகுலைந்து தனக்குள்ளேயேப் பிதற்றினான். "எந்த எதிர்ச்சொல்லுமின்றி, இந்த மாபெரும் மணல்வெளியில், எல்லாம் வல்ல ஆண்டவனின் சுவடுகளைப் பிடித்துக் கொண்டு நானும் செல்ல வேண்டும். தேவனின் வருகையின் அடையாளங்களை, சோடோமிலும், கொமோராவிலும், சாக்கடலிலும் உறுதியாகக் காண்கிறேன். அவரே இந்நகரங்களை அழித்து மூழ்கடித்தார். ஆம்! இப்பொழுது மீண்டும் வருகிறார். திரும்பவும் அனைத்தும், ஒட்டுமொத்தமாக அழிந்துபடும். இப்பூமியின் ராஜாக்கள், பெரிய பெரிய பூசாரிகள், சடங்குகள், வழிபாடுகளை ஒருங்கிணைக்கும் பரிசேயர்கள், யூதக்குடியின் வலிமை மிகுந்த சதுசேயர்கள் அனைவரும் மண்ணோடு மண்ணாவர்கள். 

    சமநிலையிழந்து ஜீசஸ் கத்தத் தொடங்கினான். அவனது அகம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. எழுந்திருக்க முயல்கையில், அவனது முழங்கால் அசையவில்லை, உடல் ஒத்துழைக்கவில்லை. தேவனின் பாதையில் எழுச்சியுடனும், சீற்றத்துடனும் முன்னேறத் துடிக்கும் அவனது உள்ளத்தின் சொற்கள் உந்துகையில், உடல் எதிர்வினையாற்றவில்லை. மூச்சைப் பிடித்துக் கொண்டு அப்படியே அந்தப் பாறையின் மேல், கைகளால் ஊன்ற முயன்று, பிடிமானமின்றி சரிந்து விழுந்தான். "உனக்குத் தெரிகிறதா? என்னால் இயலவில்லை?"எரிந்து கொண்டிருக்கும் வானத்தைத் தன் கலங்கிய விழிகளை, கசக்கிக் கொண்டு பார்த்தான். "ஏன்? ஏன்? என்னைத் தேர்ந்தெடுத்தாய்? நிற்கக் கூட வலுவற்ற இந்த நலிந்தவனை எதற்காக இங்கு வரவழைத்தாய்?, என்னால் தாங்க முடியவில்லை! வேதனையுடன் சத்தமாக, உதவி கோரும் தொனியில் அழத் தொடங்கினான். அக்கணம் அவன்  முன்னே, மணற்துகள்கள் சரிந்தெழுந்து புழுதிக் கோளகமாய் ஒரு கருத்த ராட்சச உருவம் தோன்றியது. கால்கள் நான்கும் நால் திசைகளில் விரிந்து கிடக்க, வயிறு வீங்கி வெடித்து, குடல் கொத்தாக வெளித்தள்ளி சீழுடன் அது அழுகிக்கிடப்பதைப் பார்த்தான். அதன் கண்கள், அதன் மிரட்சி, காலமற்ற விதிர்த்தல், பயம், நடுக்கம், குலைவு, அசைவின்மை. அவனைப் பீடித்தது. அது அவன் தான். அது அவனது கண்கள். அழுகும் அவனது சொந்த உடல். " நான் தான் அந்தப் பலியாடு, தேவன் தனது பாதையில் என்னை இருத்துகிறார். நான் யார்? எங்கு சென்றடைந்திருக்கிறேன் என்பதை உணர்த்த இதனை நிகழ்த்துகிறார்" ஜீசஸ் தனக்குள் முனகினான். "வேண்டாம்! வேண்டாம்! எனக்கு உனது பாதைகள் வேண்டாம். என் தனிமையின் கனம் என்னை இம்மண்ணிற்குள் புதைத்துவிடும். பயத்தைத் தவிர நான் எதையுமே உணரவில்லை. என்னைக் காப்பாற்றும்!. ஒரு ஓநாய் என் அடிவயிற்றினைக் கிழித்து ரத்தமும் சதையுமாக், குடலைக் கவ்விக் கொண்டு, இப்புழுதி வெளியெங்கும் உடலுடன் தரதரவென இழுத்துச் செல்கிறது. காகங்கள் தன் கூர் அலகினால், என் கண்களைக் குத்திச் சுவைக்கின்றன. புழுக்கள் என் உடல் முழுதும் மொலுமொலுத்து உண்கின்றன. எரியும் நிலத்தில் என் உடல் கொளகொளவென நெகிழ்ந்து விட்டது. மண்ணின் உயிர்கள் அனைத்திற்கும் நான் தீனியாகிக் கொண்டிருக்கிறேன். இனிமேலும் எந்த சோதனைகளும் வேண்டாம். என்னை விட்டுவிடு!தாழ்ச்சியுறுகிறேன்! என்னைக் காப்பாற்றும் தந்தையே!"

    தனது முன் நெற்றி, தரையில் பதிய ஜீசஸ் பயத்துடன் வேண்டிக்கொண்டிருந்தான். அவனது அழுகுரல் எங்கோ தூரத் தொலைவில் பட்டு, பல்லாயிரம் மனித விளியாக வெளியெங்கும் எதிரொலித்தது. சட்டெனக் காற்றின் நிசப்தம். அதன் வெம்மை மறைந்து குளிர் ஆட்கொண்டது. பூதாகரமாய் உருவெடுத்த அழுகிய உடல் மறைந்தது. நறுமணம் கூடிக் கூடி சூழலை நிறைத்தது. தேவனின் சொல்லிற்காக, சூழுரைத்திருந்தவனைச் சுற்றி, நிசப்தத்தைக் கிழிக்கும் பலவிதக் குரல்கள். ஓடும் நீரின் திரவலயம், வளையல் குலுங்கும் சிரிப்பொலி. அது எட்டாத தொலைவிலிருந்து ஒலி மினுக்குகளாக, செவிகளை அடைந்தது. குளிரின் இதம் அவனது உடல் நிறைத்தது. கண்ணிமைகள் அதனை உள்வாங்கிக் கொண்டது. அக்குள் எரிச்சல் சற்று குறைந்தது. தூரம் மெல்ல மெல்லக் குறைந்து கொண்டிருந்ததை ஒலியால் உணர்ந்தான். தொண்டையைச் செருமிக் கொண்டான். ஒளி, ஓரிடத்தில் குவிந்து பின் சிதறியது. அவன் வரைந்த எல்கையின் முன்னே, ஒரு வினோதமான உருவம் நின்று கொண்டிருந்தது. ஒரே சமயம், ஒரு பாம்பினைப் போலவும், பெண்ணைப் போலவும் மாறி மாறிக் காட்சிகள் பெயர்ந்து சிதறியது. அதன் தலையில் உருளும் இரு பழுத்தக் கூர்மையானக் கண்களில், கரியக் கோளகம் போன்ற உள்விளி உற்று நோக்கியது. சீறும் ரெட்டை நாக்கு நொடிக்கொருதரம் வெளி வந்து மறைந்தது. ஆனால் வடிவான மார்புகங்களும், ஒசிந்த இடுப்பும், உடற்கட்டும் கொண்ட அம்மணப் பெண்ணுடல். ஜீசஸால் எதையுமே நிதானிக்க முடியவில்லை. நடுக்கத்துடன் பின்வாங்கினான். அதன் உடல் மணம் அவனது நாசி நிரப்பியது. "இது என்ன, ஒரு பாம்பா? இல்லை பெண்ணா? இல்லை இந்தப் பாலை நிலத்தில் அலைந்து  உயிரினங்களைத் தந்திரமாகப் பிடித்துத் திங்கும் அரக்கியா? இல்லை! இந்தப் பாம்புதான் அந்த முதல்  மனிதனை சபலப்படுத்தி, முதல் பெண்ணுடன் கூட வைத்து, பாவத்தைச் சம்பளமாகப் பெற வைத்ததா? சிரிப்பொலி கனத்து உயர்ந்தது. மயக்கும் ஒரு பெண்ணின் குரல் அதன் நாவிலிருந்து வெளிவந்தது.

    " நான் உனக்காக வருந்துகிறேன். என் அன்பான மேரியின் மகனே! நீ வேண்டினாய் அல்லவா! உனது அழுகையையும் கதறலையும் நான் கேட்டேன். நீ தனித்திருக்க வேண்டிய அவசியமென்ன? உன் அபயக்குரலிற்கு செவிமடுத்து நான் இங்கு வந்தேன். வருந்தாதே! இங்கு நீ தனித்தவனில்லை. சொல்! நான் உனக்காக என்ன செய்ய வேண்டும்!"

"எனது ஆன்மா!"

    "என் ஆன்மா!" ஜீசஸ் என்ன செய்வதென்றறியாதுக் கூச்சலிட்டான். பின் கண்களை மூடிக் கொண்டான், திடமின்றித் தன் அகத்தினுள் பயணித்தவன் , திக்குகளற்றுக் கண் திறந்தான்.

    "ஆம்! உனது ஆன்மா!. தனிமை உன்னைக் கொன்றுவிடும் என்று பயக்கிறாய். உன் மூதாதை ஆதாமும் உன்னைப் போலவே பயந்தான். உன்னைப் போலவே, உதவிக்காக வேண்டினான். அவனது உடலையும் ஆன்மாவையும் ஒன்றாக்கினேன். அவனது விலாஎலும்பினை  ஒரு பெண்ணாகப் படைத்து அவனுக்குத் துணையாக்கினேன்".

    "நீ எனக்குத் தேவையில்லை? போய்விடு! ஆதாமுக்கு நீ ஆப்பிளை அளித்ததை நான் அறிவேன். அது கொலைவாளுடன் நிற்கும் ஒரு தேவதை போல இருந்தது என்று நினைக்கிறேன்."

    "உன்னால் ஞாபகப்படுத்த முடிகிறதா? அப்படியென்றால் ஏன் வலியில் துடிக்கிறாய்? ஏன் உன் பாதையைக் கண்டறிய முடியாது பயந்து சாகிறாய்?  நான் கூறுகிறேன். உனக்கானச் சரியானப் பாதையை நான் காட்டுகிறேன். உன் கையைக் கொடு. திரும்பிப் பார்க்காதே! திரும்ப எதனையும் அழைக்காதே! பார்! என் முலைகள் உனக்கான வழியை உரைக்கும். என் அன்பே! அதனைப் பின் தொடர்ந்து வா! அது உன்னை சரியானப் பாதைக்கு அழைத்துச் செல்லும்!"

    "நீ என்னை அந்த இனிமையானப் பாவத்தின் படுகுழிக்கே அழைத்து செல்ல நினைக்கிறாய்! என்னுடைய பாதை வேறு! போய்விடு!"

    பாம்பு, பத்தியை உயர்த்தியது. அதன் சிவந்த ஒளிர்விழிகள் அவனது நடுங்கும் கண்களை நோக்கியது. தன் விஷப்பல்லை வெளிக்காட்டி ஏளனத்துடன் அவனைப் பார்த்து சீறியது. "ஓ! நீ ஆண்டவரின் பாதையில் செல்ல விளைகிறாய்! இல்லையா! உண்மையில் அந்த ராஜாளியின் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கும் நீ, மண்ணில் புதைந்து மறைந்து வாழும் ஒரு புழு என்பதை அறிவாயா? புழுவே! எனதருமை தச்சனின் மகனே! மானுடம் கொணர்ந்த ஒட்டுமொத்த  பாவத்தை மூட்டையாகத் தலைச் சம்மாட்டில் தூக்கிச் செல்ல விளைந்திருக்கும் அற்பப் புழுவே! உன்னுடைய சொந்தப் பாவங்களால் உன்னால் திருப்தியடைய முடியவில்லை இல்லையா! எந்தப் பிடிமானத்தில், இல்லை! எந்த தைரியத்தில், இல்லை! எந்த முட்டாள் தனத்தில் இந்த உலகத்தை மீட்கப் போகும் மாபெரும் கடமையை, உனக்கு நீயே அளித்துக் கொண்டாய், அன்பே!"

    "ஆம்! ஆம்! அவள் சரியாகத் தான் சொல்கிறாள்!" ஜீசஸின் உள்ளம் சொற்களை மறுதலித்தது. குழப்பத்துடன் தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தான். "உண்மையில் ஒரு முட்டாள் தான், இந்த உலகத்தைத் தான் மீட்கப் போவதாகவும், அதனையே தன் ஒரே கடமையாகவும் கொள்வான்!"

    "உனக்கு ஒரு ரகசியம் வைத்திருக்கிறேன்!, மேரியின் மகனே!,  இன்பம் மட்டுமே உடலாகக் கொண்ட மயக்கும் பெண் குரல். இடதும் வலதுமாக அது தன் தலையை சதா அசைத்துக் கொண்டும், ரெட்டை நாக்கினால் மூச்சு விட்டுக் கொண்டும், வசியம் செய்ததைப் போல அவனைப் பிடித்திருந்தது. அதன் முலைகள் அசைவிற்கேற்ப அங்குமிங்கும் அலங்கியது. இரு தொடைகளுக்கிடையில் கரிய மயிரடர்ந்தப் பாதை வழி நீர்மை எல்லையற்று விரிந்துக் குமிழியிடுவதைப் போல மயக்கு. நதிகள் கரையும், கடலின் விரிவு. அலைகள் மருங்கும் ஓதத்தின் சப்தங்கள். அது தன் உடலைச் சுருக்கித் தரையில் படர்ந்தது. மெல்ல மெல்ல ஊர்ந்து அவன் வரைந்த எல்லையின் விளிம்பு வரை வந்து சட்டெனத் தலை உயர்த்தியது. கண்கள் இன்னும் ஒளி கூடியிருந்தது. இரு முலைக்காம்புகளின் வட்ட நெளிவு இருளை இன்னும் மூட்டமாக அவன் முன்னேக் கிடத்தியது. அமர்ந்திருக்கும் அவனது தோள் வரை உயர்ந்து, தன் சிவந்த நாக்கினால் அவனது கன்னத்தை நக்கியது. அதன் ஈரக்குளிர்மை ஒரு ஆழ்ந்த தடமாய் அவனுள் படிந்தது. அதன் குரல், சீறல், மூச்சொலி, அது தூரத்திலிருந்தும் அருகிலிருந்தும் அவனிடம் பேசியது. அக்குரலின் கார்வை, அதன் தவிப்பு, ஏக்கம், தாபம், நிதானிக்க முடியாத தன்மை. நிசப்தம் முற்றிலுமாகக் கரைந்து குரல், குரல்கள் என அவன் அலையத் தொடங்கினான். அக்குரல் கலீலியைத் தாண்டி ஜென்னசரேட் ஏரியின் விளிம்பின் கரையினில் படிந்திருப்பதை அவன் உணர்ந்தான்.

"மாக்தலேன்.....என் மாக்தலேன்! மாக்தலேன்..."அய்யோ! என்னவாயிற்று? என் மாக்தலேன் என்னவானாள்?"

".....மாக்தலேன்! நீ அவளைக் காப்பாற்ற வேண்டும்!" பாம்பின் சீறல் ஒலி, தீர்க்கமானது. அது ஒரு கட்டளையைப் போல அவனிடம் தெரிவித்தது. "இந்த உலகத்தை அல்ல! அவளை! உன் தேவதையை! அன்பே! உன் மாக்தலேனை நீ மீட்க வேண்டும்!"

    பாம்பு மேலும் நெருங்கி வந்திருந்தது. அதன் சீறலின் துடி அவனை அசைய விடவில்லை. அவன் மறுதலிக்கும் தொனியில், தலையை இருபுறமும் அசைத்து விலக்க முயன்றான். கைகளால் உந்தித்தள்ள எத்தனிக்கையில் அது இன்னும் பலமாகத் தன் நாக்கினால், அவன் காதுகளை நக்கியது. அருவருப்பும் பயமுமாக ஜீசஸ் விதிர்விதிர்த்துத் தரையில் விழுந்தான். "அவளது தேகம் முழுமையானது, அழகானது. குளிர்ச்சி ஒரு சுனை போல ஒழுகும் அத்தேகத்தில், உலகின் ஆண்மகன்கள் அனைவரும் பாரபட்சமின்றி, விடாய் தீர்த்திருக்கின்றனர். ஆனால் அவள் உனக்கானவள். தேவன், அவள் பிறக்கும் பொழுதே அவளை உனக்கென்று எழுதி விட்டார். அவளை எடுத்துக்கொள்! ஆணையும் பெண்ணையும் இணைந்திருக்கவே கடவுள் படைத்திருக்கிறார். அவளைத் திறந்து கொள். உன் சாவியினால் அவளது வாசலைத் திற! உன்னுடைய பிள்ளைகள், அவளினுள் உணர்ச்சியற்று உறங்கிக் கிடக்கின்றனர்.  உன் வருகையினால் அவர்கள் உயிர் பெறட்டும். இம்மண்ணின் மைந்தர்களாக, சூரியனின் முன்னே தாழ்ச்சியின்றி அவர்கள் வாழ, வகை செய்வாய்! உனக்குப் புரிகிறதா? நான் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று!, என் முகத்தை நிமிர்ந்து பார்! என் அன்பே! நான் உனக்காக என்ன கொண்டு வந்திருக்கிறேன் பார்! உன்னுடைய மனைவியை உனக்காக நான் தருவிக்கிறேன்! உன்னுடைய தாபங்களைத் தீர்க்கும், தேகத்தினை உன் முன் அளிக்கப்பண்ணுவேன். பார்! உன் மனைவியை!"

"என் மனைவியா?"

    "ஆம்! உன்னுடையவளே! அங்கே உன் தந்தை, ஜெருசலேம் எனும் பரத்தையை, மணந்து கொண்டாரே! உலகத்து ஆண்கள் அனைவரும் அவளைக் கடந்து சென்றனர். ஆனால் அவர் அவளைத்தான் தன் மனைவியாக்கிக் காப்பாற்றினார்.அது போல. நம் தீர்க்கதரிசி ஓசேயா எவ்வாறு டெபேலியத்தின் மகளாகிய வேசை கோமேரை மணந்து கொண்டார், அதைப் போல! அவளை ஏற்றுக் கொள் எனதருமை மேரியின் மகனே. மாக்தலேன் உன் மனைவி. அவள் உனக்கானவள். அவள் மூலம் உன் பிள்ளைகளைப் பெற்றெடுத்து அவளை மீட்பதே, ஆண்டவர் உனக்கிட்டிருக்கும் கட்டளை. அடிபணி!"

    பாம்பு, நெருக்கமாக அவன் தோள்களைப் பற்றிச் சுருண்டது. அதன் குழுமையான மார்பகங்கள் அவனது முழங்கைகளில் அழுந்தியது. அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. அவனது கைகள் சூழலை மறந்து, அதனைப் பற்றிக் கொள்ளத் துடித்தது. நிமிண்டும் முலைக்காம்புகளின் ஈரம் அவனை உள்ளும் புறமும் எரிக்கத் தொடங்கியது. ஆனால் அவன் அசைவற்றிருந்தான். எல்லாமும் பெண்  உடல்களாக உருமாறியது. இருளின் கனம் கூடிக் கூடிப் பெண் உருவங்களாகியது. உடலின் அனைத்துத் துகள்களும் தேகம்! தேகம்! எனத் தாபித்து நின்றன. வானமே ஒரு மாபெரும் முலைக் காம்பினைப் போலக் குமிழ்ந்து அவன் தலைக்கு மேலே உருள்கிறது. கைதொடும் தூரத்தில் அதனைப் பிசைய முடியும். அவனது விரல்கள் நடுங்கின. உடல் முழுதும் ரத்தம் பீறிட்டுக் கிளம்பியது. அவன் அசையாதுத் தன் கண்களை மூடினான். மாக்தலேனின் கடை வாசல். உடல்கள், முயங்கி நொதித்துக் கரைகின்றன. ஜோர்டானின் பாதை வழியே அவனை வந்தடைந்த, அவளின் கொதிக்கும் மூச்சினை அவன் உணர்ந்தான். அவள் விரிந்து விரிந்து மணல் முழுதும் பரந்தாள். பார்க்கும் திசைகளெல்லாம் அவளன்றி ஏதுமற்றிருந்தது. அவளைப் பற்றிய எண்ணங்கள், நினைவுகள், அவளது தேகவெளியின் நறுமணம் அவனைப் பெயர் சுட்டி வா! வா! என்று காலமற்று அழைத்தது. அவன் அவளது எல்லையின் விளிம்பில் நின்று கொண்டிருந்தான். சற்று தொட்டாலும் உடைந்து அவிழும் நீர்மை ஒன்று பம்மி விரிந்து அவன் தொடுகைக்காக விம்மிக் கொண்டிருந்தது. ஒரே ஒரு ஒற்றைத் தொடுகை, ஒரு கண் சிமிட்டல் போதும். பெரு வெடிப்பென அவளது தேகம் பொங்கிப் படரும். அவனது உடல், ஒரு திரவக் கோளகமாய் உருண்டு, எல்லைகள் விரிந்து அவளைத் தொட்டது. இன்பம்! இன்பம் மட்டுமேயான ஒரு உலகம். உள்ளும் புறமும் மனிதனுக்கு மட்டுமே சாத்தியமான, தேகலயம் அவனை அணைத்துக் கொள்கிறது. எல்லாம் மறைந்தன. பசி! தாகம்! ஏக்கம்! தாபம்! அனைத்தும் கரைந்து உடல் பல்லாயிரம் திரட்சிகள் கொண்ட, அதன் ஒவ்வொரு நுனிகளும் வழிந்து பெருகும் மலர்ச்சியின் மகரந்தங்கள், சதா ஒழுகிக் கொண்டே இருக்கும் ஒரு ராட்சச மலரினைப் போல ஆகியது. வற்றாத அதன் ஊற்றுக் கண்ணிலிருந்து நிரம்பி வழிகிறது, ஆனந்தம். "இது தான் வழி! எல்லா அதீதங்களும் ஒதுங்கிக் கொண்டன. அவன் திரும்பவும் தான் நாசரேத் நகருக்குச் சென்று தன் அன்னையைக் காண்பதையும், தன் சகோதரர்களுடன் சமாதானமாகப் போவதைப் பற்றியும் யோசித்தான். தான், தன் மனைவி, தன் பிள்ளைகள் என ஒரு இயல்பான ஆண் மகனாகத் தன்னை உருவகித்துக் கொண்டான். எந்தக் குழப்பங்களுமற்ற ஒரு மனிதன். எந்தத் தரிசனங்களைப் பற்றியும் மீட்பைப் பற்றியும் சட்டை செய்து கொள்ள வேண்டாம். நான் என்னுடைய பட்டறையில் என் அப்பனைப் போலவே தச்சு வேலையைச் செய்யலாம், என் மாக்தலேன் தன் பழைய வாழ்க்கைக்குத் திரும்பலாம். கைவினைப் பொருட்களைச் செய்வதும், தன்னையும் தன் பிள்ளைகளும் பார்த்துக் கொள்வதும் அவளை மகிழ்விக்கும். ஒரு சரியானக் குடும்பத் தலைவனாக நான் அவளை, என் பிள்ளைகளைப் பாதுகாக்கலாம். இதைத்தவிர என்ன பேறு இருக்கப் போகிறது. என்னுடைய அமைதியான உலகத்தில் நான், என் மனைவி பிள்ளைகள் என்று வாழ்வை இன்பத்துடன் கழித்து விடலாமே! ஆர்வக்கோளாறுகளும், இளமைக்கே உண்டான முட்டாள் தனங்களுடன் அல்லவா! நான் உலகைக் காக்க, அதற்காக என் உயிரைப் பணயம் வைக்கத் துணிந்து விட்டேன் என்று அங்கலாய்த்துக் கொண்டு தனக்குள் சிரித்துக் கொண்டான். ஊர் மக்கள் அவனை மதிப்பார்கள்.வாரம் முழுதும் உழைத்து, சனிக்கிழமை, தன் மனைவி, தனக்காகத் துவைத்து நறுமணமிட்டு வைத்திருக்கும் பட்டும், பருத்தியும் நேர்த்தியுடன் நெய்த அங்கியையும், விலை உயர்ந்த தலைக் குட்டையையும் அணிந்து கொண்டு  ஜெப ஆலயத்திற்கு, குடும்பத்துடன் சென்று தேவனை[ப் பிரார்த்தித்து நன்றி தெரிவிக்கலாம். பின் மூத்தவர்களுடன் கடைத் தெருவிற்கு ச் சென்று வாயடிக்கலாம். இந்தக் கோவில் குட்டிகளும் ,மடையர்களும் சதா விவாதித்துக் கொண்டிருக்கும் பொழுது மறித்து, வேதங்களின் வசனங்களைக் கூறி விளக்கம் கேட்கலாம். தான் கூறும் அழகான விளக்கங்களினால் அவர்களைப் பரிகாசம் செய்யலாம். மனைவி, பிள்ளைகள் மற்றும் தேவைக்கான உழைப்புடன் வாழ்வதே வாழ்வு என அவர்களுக்கே பாடம் எடுக்கலாம். அமைதியாக நண்பர்களுடன் இரவுப் பொழுதில் சற்று மதுவினை அருந்திக் கொண்டு ஊர்க்கதை பேசிச் சிரித்து, வயிறார உண்டு விடுமுறை நாளில் இன்புற்றிலிருக்கலாம். என்று பலவாராக சிந்தித்து மகிழந்தன ஜீசஸின் எண்ணங்கள்.

    கண்களைத் திறந்து, வெற்று மணல் வெளியைப் பார்த்தான். வெளிச்சம் கூடடைந்து கொண்டிருந்தது. விளிம்பில் செந்நிறம் கசிந்து சோகை இழந்து, இருளைச் சூடுகிறது. காற்றின் வேகம் சற்றும் குறைந்திருக்கவில்லை. பாம்பின்  மிருதுவான முலைக்கண்கள் அவனது இடது முழங்கையை இறுக்கிப் படிந்திருந்தது. அதன் கனத்த சீறல் ஒலி குறைந்து, சாந்தமாக ஒலித்தது. அது மறுக்க ஒக்காத சீண்டலுடன், பரிவினை வேண்டி நிற்கும் முறையிடலுடன் மென்மையாக அவனுக்கு மட்டும் கேட்கும் வகையில் காதுகளில் ஓதியது. வானம் இருளடைந்து அந்தி இறங்கும் நேரம், கிரீச்சிடலாக மணற்துகள்களின் அனத்தம் ஒரு தாலாட்டினைப் போல, பாறைகளைக் குடைந்து செல்லும் காற்று. முழுப் பாலைநிலத்திலும் வாரி இறைக்கும் நிலை கொள்ளாமையின் பாடல், ஒரு தாய் பிள்ளையை உறக்காட்ட முயலும் தாலாட்டினைப் போல ஏறியும் இறங்கியும் மணற்துகள்கள் அலைந்து கொண்டிருந்தன.

    "நான் காத்திருக்கிறேன்..... நான் காத்திருக்கிறேன்!..." அக்குரல் சமநிலை இழந்ததைப் போலச் சலிப்புடன் அவனை இன்னும் நெருங்கியது. " இரவு நம்மை முழுக்கடித்துவிடும்!, குளிரும் கூடிக் கொண்டு வருகிறது. ஒப்புக் கொள்! ஒரு மெல்லிய தலை அசைத்தல் போதும்! முடிவெடு! என் அன்பே! மாக்தலேன் அங்கு உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறாள்! ம்ம்! சீக்கிரம்!, காலம் கடந்து கொண்டிருக்கிறது!" 

    எண்ணங்கள் நிலையின்றி, எல்லாத் திசைகளிலும் சுழன்றது.

    ரத்தம் அதன் அழுத்தம் நிறைந்து ஒரு நீண்டப் பட்டைக் கோடாய்ப் பதிந்திருந்தது. அதை அழிக்கவோ இல்லை மறைக்கவோ முற்படவில்லை.

        மலை முகட்டில் நின்று கரிய விழி போல முன்னால் குமிழும் நீர்மையினைப் பார்த்தான். ஒரு அழைப்பு போல இல்லையேல் ஒரு சின்னஞ்சிறியக் கேவல் போல மலை அருகமர்ந்து அதிர்ந்தது. அதன் ஒவ்வொரு அதிர்வுகளுக்கும் எதிர் பதிலாய், நிலத்தில் குத்திட்டுச் சிறு நீர் பெய்தான். அது ஒரு சிறகடிப்பு போல அதிர்ந்து பள்ளம் நோக்கி விலகி ஓடி ஆழம் விழுந்துக் கரைந்தது. மெல்ல அருகிலிருந்த பசும் கத்தாழையின் மணத்தை முகர்ந்தான். அது அவள்! அவள்! என விக்கித்துப் பின் அமைதியானது.

    மனம் அதன் பல்லாயிரம் கண்களுடன் நோக்கியது, செம்பழுப்பு நிற அனல் முன்னே அலையாடியது. நிலம் நா தீண்டிய அனைத்தையும் விழுங்கத் துடிக்கும் அவசரமும் ஆவேசமும். மெல்லக் கைகளை முன்னே எரியும் தீயினுள் விட்டான். பிரகாசமானது. கைகள் துண்டாகும் வரைத் தாக்குப் பிடித்துக் கொண்டான். வெந்தத் தன் சொந்தக் கைகளின் ஊனை, ஒரு ஓநாயைப் போலக் கடித்துத் தின்றான்.

"தன்னையே உண்ணுதல் மூலமாய் பிறிதொன்றிலாத ஒன்றை அறிகிறேன். பசிக்குத் தன் சொந்தக்குடலை அறுத்துத் தின்பவன், காலமற்றவன். காலம், அவன் விரலிடுக்குகளில் அதங்கிக் கொண்டிருக்கிறது."

    தன் முன் வியாபிக்கும் அனைத்தும் ரத்தமாய் இருந்ததைப் பார்த்தான். தன்னையே ஒரு ரத்த உருளையைப் போல!

    மெல்ல ஒரு கிசுகிசுப்பினைப் போல அக்குரல். அவளின் குரல். ஒரு அழைப்பு. ஒரு திண்மை. எல்லாம் மறைந்துப் பின் வெளித்தது போல. மலையைத் திரும்பவும் நோக்கினான். இம்முறை அது ஒரு மழையின் மணத்துடன் அவனிடம் வந்தது. ஆம்! ஆம்! என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான். தன்னை மெல்ல வருடினான். தன் ஆண் குறியையும், விதைப்பையையும் மெதுவாகச் ஸ்பரிசித்தான். பின் கைகளை முகரும் பொழுது தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். வலி!

    இரவு மெல்ல இருள்கிறது. கூர்முட்கள் போலத் திட்டுத் திட்டாய் ஈரம் முதுகில் படிகிறது. காற்றின் சில்லிப்பில் மெல்ல உதறிக் கொண்டான். தன் முன்னே விரியும் ஒரு புதிர்ப்பாதையை பதைப்புடன் பார்த்தான். உமிழ் நீர் தொண்டையில் ஒரு வலி உருளை போல நின்றது.

    தன் பால்யம் முன்னேக் கரைந்து ஒரு நிழல் வெளியாய் ஓடுவதைப் பார்த்தான். எதுவும் செய்யாது வானத்தை வெறிப்பதை, நட்சத்திரங்களை உண்பதைப் பற்றிக் கனவு காண்பதை, இரவெல்லாம் கண் விழித்துப் பகலில் அயர்வதை. மலைக்குன்றிலிருந்து வான் நோக்கிப் பறக்க எத்தனித்துக் கால் உடைந்துக் கிடந்ததை. தன் முதுகுக்குப் பின்னே சிறகுகள் முளைக்க முழு நேரமும் பிரார்த்தித்தை எல்லாம் ஒவ்வொன்றாக நினைத்தான்.

    கூர்மையான அலகும், தட்டையானக் கழுத்தும், விரிந்தச் சிறகுகளும், நீல மணிக் கண்களும் கொண்ட  ஒரு பறவை.

மரணத்திற்கும் அதனைத் தள்ளிப்போடுவதற்கும் சிறகுகளையே நம்பினான். அது நிலத்திற்கும் வானிற்கும் இடைப்பட்ட வெளியில் அலைதலைப் பற்றியப் பிரயாசை. சட்டென உடலற்ற இரு நீண்டச் சிறகுகள் மட்டும் வானில் பறப்பதைப் பார்த்தான்.

    நினைவுகள் ஒரு சுழல் பிம்பத்தைப் போல அவனைச் சுற்றிப் படர்ந்து முடிவே அற்று அவனை ஆக்கிரமித்துக் கொண்டது.

அவன் சரியாக அக்குரலின் கேள்விக்கு ஆம்! எனச் சொல்ல நினைத்த அக்கணம், கை கால்கள் இழுத்துக் கொள்ள, ஜீசஸ் ஒரு பொட்டலம் போலச் சரிந்து விழுந்தான். கண்கள் சொருகிக் கொண்டன. பயம், ஒரு ராட்சசப் பூச்சியைப் போல அவனைத் தொற்றிக் கொள்ள, தன்னிலை இழந்துக் கீழே கிடந்தான். சிறிது நேரம் நிசப்தம் அனைத்திலுமாய் நிறைந்து வழிந்தது. கண்களைத் திறந்தவன், தன்னை மீட்டுக் கொள்ளும் தொனியில், உடல் முழுதும் தொட்டுத் தடவி, அசைத்துப் பார்த்து மூர்ச்சையுற்றான். மேலிருந்து ஏதோ ஒன்று, கடுமையாகத் தன்னை உற்று நோக்குவது போல உணர்ந்தவன் அண்ணாந்து வானைப் பார்த்தான். இரு கண்கள், இரு கரும் வட்டப் பொட்டுகள், அதன் மேல் வெண்ணிற மயிரடர்ந்த புருவங்கள். இருளினுள் இருந்து முளைத்தக் காரிருள் விழிகள். அது அவனிடம் ஏதோ சொல்ல விளைந்தது. தாறுமாறாகத் துடித்துக் கொண்டிருந்தது அவனது இருதயம். கைகளால் மார்பினைத் தடவி மெல்ல சீர்படுத்த முயன்றான். அதன் சொற்கள், சமிஞ்சைகளாக அவனுள் ஊடுருவியது. "வேண்டாம்! வேண்டாம்!" எனும் சொல் அவனைத் தீண்டியது. திரும்ப அவ்விழிகளை நோக்கிக் கத்த வேண்டும் போல அவனுக்கு இருந்தது.  "நான் தனித்திருக்க வேண்டும்! அனுமதி கொடு! என்னிடம் கோபம் கொள்ளாதே!" ஒரு மன்றாட்டாக அவ்விழிகளிடம் இறைஞ்சினான். ஆனால் அதன் கடுமை இன்னும் அடர்ந்தது. பயமுறுத்தும் வகையில், புருவங்கள் முடிச்சிட்டு விழிகள் ரத்தசிவப்பாகியது.

    "வேண்டாம்! வேண்டாம்!" ஜீசஸ் தாளமுடியாமல் பிதற்றலுடன், கத்தி அழத் தொடங்கினான். கண்ணீர் குமிழ்ந்து இரு நீள் கோடுகளாகப் பிசுபிசுத்து தாடை வழியே  மண்ணில் சிந்தியது.

    சரியாக அதே சமயம், பாம்பு மெல்லச் சுருண்டு அவனை விடுவித்தது. முணுமுணுக்கும் அதன் மூச்சின் நெடி வெடித்துக் கிளம்பியது. காற்று சட்டென துர்நாற்றமெடுத்தது.

    பிடி தளர்ந்ததும், கால்களைத் தரையில் பாவிக்க முடியாமல், ஜீசஸ் தலை குப்புற மண்ணில் விழுந்தான். அவனது கண்கள், நாசி, வாய் என அனைத்திலும் மண் துகள்கள் படிந்தது. முற்றிலும் வெறுமையாக உணர்ந்தவனின், பசி, தாகம் எல்லாம் மறந்து விட்டது. தன் மனைவி, பிள்ளைகள் அனைவரும் இறந்து விட்டதைப் போலவும், தான் இங்கு வாழவே அருகதையற்றவன் எனவும், தான் பாழாக்கியத் தன் வாழ்வினைப் பற்றியும் நினைத்துத்  தேம்பித் தேம்பி அழத் தொடங்கினான்.

    துவர்க்கும் மணலை அதக்கிக் கொண்டு, தனக்குள்ளேயே முணுமுணுத்தான். "தந்தையே! என் தேவனே!, உனக்குக் கருணையே இல்லையா? நீ என்ன நினைக்கிறாயோ அது தான் நடக்க வேண்டும் இல்லையா! எத்தனை முறை, எத்தனை முறை நான் உன்னிடம் இதைப் போலவே நின்று தேம்பியிருப்பேன். இன்னும் எத்தனை முறை நான் உன்னிடம் மன்றாட வேண்டும். சோர்வும், பயமும், நடுக்கமும் மட்டுமே உன்னால் இவ்வாழ்வில் எனக்குத் தர முடிந்தது. ஆனால் அதற்குப் பதிலீடாக நான் என்னைப் பணயம் வைக்க வேண்டும். உன் சொல்லிற்கு அடிபணிய வேண்டும்!, சொல்! எனக்குப் புரியவில்லை!"

    ஓரு தனித்தப் புலம்பல். இது முதல் முறையும் அல்ல. அடி நாக்கில் படிந்த மணலை அப்படியே எச்சிலுடன் விழுங்கியவன் உறங்கிப் போனான். கண்கள் மூடியதும் அகம் திறந்து கொண்டது. 

    மணல் வெளி பரந்து சர்ப்பம் நெழிகிறது. அதன் உடல் பூதாகரமாகியது. மேற்தோல் சுருங்கியும் விரிந்தும் அது எல்லைகளை விஸ்தாரமாக்கியது. வானம் பூமி, எனும் இருமைகள் அழிந்து முன்னே அந்தப் பாம்பினைத் தவிர அனைத்துமே மறைந்தன. தன் கிழிந்த வாயைத் திறந்து அமைதியாக இருந்த அதன் கண்கள் மோனத்தில் ஆழ்ந்திருந்தன. எந்த அசைவுமில்லை. இரு கூர்மையான விஷப் பற்களும், ரத்தக் குழம்பு போலச் சிவந்த உள் நாக்கும் கொண்டிருந்த அது, தன்னிலை மறந்து சவம் போலக் கிடந்தது. அதன் வால் நுனியிலிருந்துச் சிறகுகள் கிரீச்சிடும் சப்தம். சாம்பலும், கருமையும் தீற்றலாகப் படிந்த சிறகுகள். தத்தும் அதன் பச்சை அடர்ந்த குச்சிக் கால்கள். சிறகுகள் மடிந்து கிளர்த்த முடியாது உட்குழிந்திருந்தன. பறக்க எத்தனித்துப் போராடிக் கொண்டிருந்தது. உதவி கோரும் குழறல். பின் படபடத்தல். சரிந்து விழுந்து மீண்டும் எழுந்து, பலம் கொண்டுத் தன் சொந்தச் சிறகுகளை உந்தி எழுப்ப முயன்று கொண்டிருந்தது. இருளின் பாதையில் தான் எங்கிருக்கிறோம், எங்கு செல்கிறோம் எங்கே வீழ்ந்து கிடக்கிறோம் என்ற போதமற்றுத் தன்னுள்ளேயே போராடிக் கொண்டிருந்தது அந்தச் சின்னஞ்சிறியப் பறவை. பாம்பின் அகலத் திறந்த வாய் அப்படியே அதனருகில் அசைவற்று இருந்தது. காலமற்று இந்தப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. அது வலுவிழந்து வீழ்வதும் பின் எழுந்திருத்துத் திரும்பவும் பறக்க எத்தனித்துத் தளர்வதுமாய்க் காலம் கடந்து கொண்டிருந்தது. மெல்ல மெல்ல அது நகர்ந்து அதன் வாய்க்கருகில் வந்து சேர்ந்தது. மடிந்திருந்த சிறகுகள் சற்று வெளி வந்திருந்தன. ஆனால் முழுமையாகப் பறக்கும் திராணி இல்லை. கால்கள் தரையில் நிற்க முடியாமல் நடுங்கிக் கொண்டிருந்தன. தான் எங்கிருக்கிறோம் என்று கூட அதனால் யூகிக்க முடியவில்லை. இபொழுது அது, பாம்பின் வாய்க்கருகில் நின்று கொண்டிருந்தது. முடிவேயற்றப் பிலம் போல விரிந்திருக்கும் அதனுள் மெல்லத் தன்னை உந்தியது. பின் எந்த விசனங்களுமற்று அது உள்ளே சென்றது. பாம்பு இப்பொழுதும் பெரிய அசைவுகளற்றுத் தான் வாயை மெல்ல ஒரு வாசலை, அழுத்தி சாத்துவதைப் போல அடைத்துக் கொண்டது. பறவை ரத்தமும், சதையும் உமிழ் நீருமாக, ஒரு மாமிசக் கூழாக அதன் வயிற்றினுள் இறங்குகிறது. உடலற்ற இரு சிறகுகள் மட்டும் தனித்த உயிர் போல அங்கும் இங்கும் துடித்துக் கொண்டிருந்தது.

    திடுக்கிட்டு விழித்தெழுந்தவன். முன்னே வெளியெங்கும் செந்நிறம் படிந்திறங்கி அலை அலையாக நெகிழும்  வானத்தைப் பார்த்தான்.

    சூரியன் மெல்ல வானில் எழுகிறது. "அது என்ன? நிச்சயம் அது நம் ஆண்டவர் தான்! அப்படியென்றால் அந்த பாவப்பட்டப் பறவை?"

    தன்னுள்ளே எதுவோ முறிந்ததைப் போல உணர்ந்தான். அவனால் எதுவும் சொல்ல முடியவில்லை. உள்ளூற அறிய மட்டுமே முடிந்தது.

".....மனித ஆன்மா! அப்பறவை, மனிதனின் புனித ஆன்மா!"

    நேரம் கடந்து கொண்டிருந்தது. சூரியன் தலைக்கு மேலே நகர்ந்து நிலமெல்லாம் எரித்துகள்களாக்கியது. அவன் இன்னும் அந்தக் உருவெளியின் எண்ணங்களிலேயே மூழ்கியிருந்தான். வெளிச்சத்தின் நீண்டக் கதிர்கள், ஒரு கூர்மையானப் பட்டையாய் செங்குத்தாக அவனது மண்டைக்குள் இறங்கியது. கொதிக்கும் மண்டை வழியே, உள் இறங்கி, தொண்டை, மார்பு வயிறு வழ சூடு, உடல் முழுதும் பரவியது. குடல்கள் மேலும் சுருங்கி, முந்திரிப் பருவம் முடிந்தப் பின், மேற்தோல் சதைந்துக் கூழாக, வெறும் பொருக்குகளாக நிலத்தில் எஞ்சும் திராட்சைக் கொத்துக்களைப் போல, வறண்டு, கொப்பளிக்கும் திரவக்குமிழ்கள் அனைத்தும் ஆவியாகி இழுத்து சுருங்கி விரிந்தது. நாக்கு உமிழ் நீர் சுரப்பற்று மேல் அன்னத்தில் ஒட்டிக் கொண்டது. விரல் நுனிகள் நீலம் பாரிக்கத் தொடங்கியது. சூடு தாங்காது மேற்தோல் உரிந்து, சிவந்த அடித்தோல் கிழிந்துக் கன்றியிருந்தது. உடல் முழுதும் காந்தலும் அரிப்பும். தகிக்கும் மணற் துகள்கள் காயத்தில் படிந்து மேலும் எரிச்சலுண்டாக்கியது. அவனது உடலும், ஆன்மாவும், ஒரு மரக்கட்டையைப் போல எரிந்துப் புகையாகுவதைப் போல உணர்ந்தான்.

    காலம் ஸ்திரமற்று, வெயிலின் உக்கிரத்தால் அமைதி இழந்தது. அவன் தனது மார்புகளில் கை வைத்துக் கொண்டான். கூடிக் கூடிச் செல்லும் அதன் துடிப்புகள், ஆழ்ந்து பரிதவிக்கும் சுவாச இழைப்பில், காலம் சுருங்கிச் சிறியதாகியது. பின் ஒரு புள்ளியில் மொத்தப் பிரபஞ்சமும், அவனைப் போலவே மூச்சிழைக்கையில், அது தன் துடிப்பினை உள்வாங்கிக் கொண்டுத் தன்னைப் போலவே அமைதியின்றித் தாறுமாறாகத் துடிக்கையில், விரிந்து மரணம்! மரணம்! எனும் விதிர் விதிர்த்துப் பெரிதாயிற்று. பசி, தாகம் எனும் உணர்வுகள் அர்த்தமிழந்தன. மனைவி, பிள்ளைகள் குடும்பம் என்று எந்த ஏக்கமும் அவனிடமில்லை. ஒரு ஒத்திசைவு, அவனது உடலும் ஆன்மாவும் அனைத்துமாய் உருமாறியிருந்தது. கேள்விகளோ, பதில்களோ இல்லை. வெளிச்சத்தின் தீவிரத்தால் பார்வை மங்கியது. ஆனால் கண்களே உடலாக எரியும் நிலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு ராட்சச வாய் ஒன்று தன் முன்னே விரிந்திருக்கிறது. அதன் கீழ் தாடை தரையிலும், மேற்தாடை ஆகாசத்திலும் இருந்தது. அடியாழமற்றக் குகை போல அது அவன் முன்னே திறந்துக் கிடப்பதைப் பார்த்தான். வலி! எனும் உணர்வு உடல் முழுமைக்கும் ஆக்கிரமித்திருந்தது. அதை அவன் சொல்லாக்குகையில், தீவிரமிழக்கும் சூட்சுமத்தைப் புரிந்து கொண்டான். திரும்பத் திரும்பத் தனக்குள் அச்சொல்லைச் சொல்வதன் மூலம் அப்படி, ஒன்று தனக்கு வெளியே யாருக்கோ நிகழ்வதைப் போல உருவகித்துக் கொண்டான். 

    நாட்கள் இரவும் பகலுமாக, வெளிச்சமும், இருளுமாக உருண்டு கொண்டிருந்தது. ஆனால் காலம் அவனுக்கு ஸ்தம்பித்து விட்டது. ஒற்றை நாளினுள் அமர்ந்திருந்தான். அது நகரவே இல்லை, அவனைப் போலவே. முன்னே மின்னி மறைகிறது வலி, எனும் ஒற்றைச் சொல்.ஒரு நள்ளிரவில், அவன் ஒரு ஆண் குரலைக் கேட்டான். ஒரு சிங்கம் கவனத்துடன், மெல்லக் காலடியெடுத்து அவன் முன்னே வந்து நின்றது. தன் உடலை உலுக்கித் தங்க நிறப் பிடறி மயிரைச் சிலுப்பியது. 

    "வெற்றியாளனே, வருக, என் குகைக்கு!. சின்னஞ்சிறியச் சபலங்களுக்கும், களிப்புகளுக்கும், இன்பங்களுக்கும் தன் மனதைத் தவற விடாதவனுக்கு, நான் தலை வணங்குகிறேன். எளியதையும், நிலையற்றதையும் நாம் எப்பொழுதுமே விரும்பியதில்லை. நமது பார்வை விசாலமானதும், மேலும் சிக்கலானதும் கூட. மாக்தலேன்!...." தனக்குள் செருமிக் கொண்டு மீண்டும் தொடர்ந்தது அக்குரல். "மாக்தலேன்! உனக்கு தகுதியானவள் அல்ல. உண்மையில் இது ஒரு ஒற்றைப் பெண்ணினால் முடியும் காரியமுமல்ல. அவள் நமக்குப் போதாது. நீ இந்த உலகையே மணக்க வேண்டியவன். எல்லையற்று விரியும் நம் ஆகிருதி அதைத்தானே நமக்கு உணர்த்துகிறது. துறவியே!.நீயே மணமகன். கேள்! இந்த மண்ணின் பெருமூச்சினை. வானத்து விளக்குகள் தூண்டப்படுகின்றன. எங்கும் பெருகும் விழாக்கோலம். விருந்தினர்கள் வந்துவிட்டார்கள். வா! நாம் போகலாம்!"

" யார் நீ?"

    "நான் நீ தான்!--- உன் இதயத்தினுள் பசியுடன் காத்திருக்கும் சிங்கம். சிங்கங்கள் இரவின் இருளினுள் ஆட்டுப்பட்டிகளைத் தானே குறி வைக்க முடியும். ஆம்! அதுவே இந்த உலகின் ராஜாங்கம். எத்தருணத்திலும் அதனுள் குதித்து இரையைக் கவ்வுவதைப் பற்றியக் கவனத்துடன் அது எடை போடுகிறது. நான் பாபிலோனிலிருந்து ஜெருசலேமிற்கும், ஜெருசலேமிலிருந்து அலெக்சாண்ட்ரியாவுக்கும், பின் அங்கிருந்து ரோமுக்கும் என சதா தலை தெறிக்க ஓடிக் கொண்டிருக்கிறேன். எனக்கு பசி! இந்த உலகம் முழுவதையும் திங்கத் துடிக்கும் பசி! அந்தி மயங்குகையில் நான் திரும்ப உன் மார்பினுள் நுழைந்து என்னை மறைத்துக் கொண்டேன். ஒரு பயங்கரமான சிங்கம் ஆட்டின் தோலைப் போர்த்தித் தன்னை மறைத்துக் கொண்டது. எந்தப் பற்றுதலும், விருப்பங்களுமற்றத் துறவியே, நீ ஒரு கோதுமை மணியினைப் போல, ஒரு துளி உயிர்த் திரவம் போல, உன் அப்பாவித் தனம் என்னைச் சீண்டியது. சொல்! உன் உண்மைத் தன்மையின் ரகசியம் என்ன?, நீ மனத்தில் இருத்தும் இந்தப் பரலோகத்தின் தந்தை....உனக்கென்ன அளித்தார். வலியும், துக்கமும், இறக்கி வைக்கவே முடியாத பாரமும் தானே உன்னை அமிழ்த்திக் கொண்டிருக்கிறது. சொல்! என் வீரனே! தூய்மையின் சொரூபமாய் உன்னைக் காண்கிறேன். உன் பரிசுத்தத்தின் வெளிச்சம், இவ்விருளைக் கூட வெளிச்சமாக்கப் பண்ணி விடும் என்று அறிகிறேன். அதனால் இருளுக்காகக் காத்திருந்தேன். இரவு தொடங்கியதும், என் பொய்த்தோலைக் கழற்றிக் கொண்டு, பாபிலோனையும்,ஜெருசலேம், அலெக்சாண்ட்ரியா மற்றும் ரோமையும் தாண்டி நேரடியாக உன்னிடம் வந்திருக்கிறேன். இதோ! இந்த வன் மிருகத்தின் தோற்றமே இயல்பானது. பாசாங்குகளற்றது."

    "நீ யாரென எனக்குத் தெரியவில்லை?, உண்மையில் என் தேவனின் சொர்க்க ராஜ்ஜியமே எனக்குப் போதுமானது. இவ்வுலகின் ராஜ்ஜியம் அழிந்துபடும். அதற்கு நான் விரும்பியதுமில்லை!"

    "இல்லை நண்பா! போதும்! உனக்கு நீயே பொய் சொல்லிக் கொள்ளாதே! நிச்சயம் அது உனக்குப் போதுமானதில்லை. உன்னிடமே கேட்டுக் கொள்! உன் உள்ளே அதற்கான விருப்பம் சிறுதுளி கூட இல்லை என்று நம்புகிறாயா!. என்னை ஏன் சந்தேகத்துடன் பார்க்கிறாய்? நிச்சயமாக நான் உன்னை ஏமாற்றவோ, உன்னைச் சபலப்படுத்தித் தூண்டி விடவோ நான் வரவில்லை. உன் உண்மைத் தன்மையை உனக்கு அறிவிக்கவே உன்னிடம் வந்தேன்.  என்னிடம் எந்தத் தந்திரங்களுமில்லை. உன்னை வழி நடத்தும் உத்தேசமும் எனக்கு இல்லை. துறவியே! நீயே சிந்தித்துப் பார்! உனக்கு வெளியிலிருந்து உன்னை யாரேனும் சபலப்படுத்த சாத்தியமுண்டா?  உனக்கு இதன் மேல் இருக்கும் விருப்பத்தின் வலிமையே, என்னை உன்னிடம் சேர்ப்பித்திருக்கிறது. உன் ஆழ்மனதின் குரலே ஒரு வெளிப்பாடாக என் வழி ரூபம் கொண்டிருக்கிறது. உன்னுள் இருக்கும் சிங்கத்தின் உருவே, நானாக உன் முன்னே தெரிகிறேன். உன்னை ஒரு ஆடிபிம்பம் போல என் வழி காண்கிறாய்.  மறவாதே! நீ ஒரு ஆட்டுத்தோலைப் போர்த்திய சிங்கம். மனிதர்கள் அதனை நம்பி உன்னை அணுகுகையில், சரியானத் தருணத்தில் பதுங்கியிருந்து, நீ அவர்களைப் பிடித்து விழுங்கி விடுவாய். உனக்கு நினைவிருக்கிறதா? நீ சிறுவனாக இருக்கும் பொழுது, ஒரு சாலடியச் சூனியக்காரி, உன் கை ரேகைகளைக் கணித்தாளே! 'உன் கைகளில் நட்சத்திரங்களின் தீற்றல்கள் குறுக்கு வெட்டாகப் போகிறது. நீ ராஜாவாகப் போகிறவன்' என்று சொன்னாளே' என் அதனை மறந்ததைப் போல என்னிடமே நடிக்கிறாய்? எனக்குத் தெரியும் நண்பா! இரவும் பகலும் நீ இதனை அடைவதை மட்டுமே, பலவாறாக நினைத்துக் கொண்டிருந்தாய்! எழுக! டேவிட்டின் மைந்தா! உன் ராஜ்ஜியத்தினை வென்றெடு!"

    ஜீசஸ் தலை குனிந்து அக்குரலைக் கேட்டுக் கொண்டிருந்தான். பரிட்சயமான அக்குரலை நடுக்கத்துடன் கூர்ந்தான். தன் சொப்பனத்தினுள் அக்குரல் கேட்டதா? என்று? எப்பொழுது?சிறுவயதில் யூதாஸ் அவனை அடித்துத் தள்ளிய பொழுதா?, மற்றொரு சமயம் தான், பகலிரவு பாராமல் வெளியே சுற்றித் திரிந்து, பசியுடன் வீடு திரும்புகையில் தன் சகோதரர்களான நொண்டி சைமனும், பக்திமான் ஜேக்கப்பும் கூச்சலிட்டுக், கேலி செய்து, ஊளையுடன் தன்னை வரவேற்பதற்காக வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்தப் பொழுது, பின் அந்தக் கலகக் காரனின் தண்டனை நாளில், தான் சிலுவையைத் தூக்கிச் செல்லும் பொழுது, ஒரு அருவருப்பான ஜந்துவைப் போல, இம்மக்கள் தன்னைப் பார்த்து விலகியும், வசவுகள் பொழிந்தும், காறி உமிழ்ந்தும், இகழ்குகையில், ஆம்! இதே சிங்கக் குரல்! ஒரு ஆண் மகனின் குரல். தன்னுள் குதித்து எழுந்ததை. ஒருவிதமான ஆக்ரோஷத்துடன் அதன் காலடிகள் தன்னுள எம்பிக் குதித்ததை அவன் உணர்ந்திருந்தான்.

நள்ளிரவின் நடுக்கும் குளிர். பூச்சிகளின் ரீங்கரிப்பு. புழுதி அப்பியக் கண்களுடன் தன் முன்னே இருக்கும் உருவத்தைக் கவனித்தான் ஜீசஸ். குளிர் தேங்கித் தேங்கிக் கனம் கூடிக் கொண்டிருந்தது. ஒரு மண் பானையின் அடிப்பகுதி போல, வானம் குமிழ்ந்து தலைக்கு மேலிருந்து அவனை அழுத்தியது. சிங்கத்தின் பார்வை அவனை விட்டு அகலவில்லை. அதன் சீறும் மூச்சின் வெம்மையை அவனால் தெளிவாக உணரமுடிந்தது. அது தன் உடலை முகர்ந்து கொண்டே, பின்னங்காலினால் விலாப்பகுதியில் அழுத்திச் சொரிந்தது. எதிர்ப்பைக் காட்டுவதைப் போல உடலை உலுக்கியது. திடீரென புகை உருவாக, ஒரு கலங்கல் தோற்றமாக உருமாறிய அது தன் மயிரடர்ந்த வாலினை, அவன் தலைக்கு நேராகச் சுழற்றிப் போக்கு காட்டி மறைந்தது, பின் வெளித்தது. அதன் நிழல் தோற்றத்தின் கர்ஜிக்கும் குரலை அவனால் கேட்க முடிந்தது. அது தோன்றி மறையும் கணம், ஏதோ ஒன்று அவனுள் ஊடுருவிச் செல்கிறது. அவனது உடல் உள்ளீடற்றதாக மாறி விட்டதைப் போல உணர்ந்தான். துடித்து வெடித்து விடும் நெஞ்சில் கை வைத்து அமைதிப்படுத்த முயன்றான். நிழல் உடல் மெல்ல மெல்ல அவனை நெருங்கி அவனைச் சுற்றி ஒரு இருள் வளையமாய் எல்லை விரித்தது.  

"சரிதான்! பசி, வலி, துயரம், பயம், இகழ்ச்சி இவைகளைத் தானே என்னுடைய தாழ்ச்சியின் பெயரால் இதுவரை நான் உள்வாங்கியிருப்பேன். வேறென்ன பெரிதாய்! ஒரு கன்னத்தை அடித்தவனிடம் மறு கன்னத்தைக் காட்டினால், அவன் அதிலும் தன் வன்மம் தீர அடிப்பான். அதில் எந்த மாற்றமமுல்லை. உண்மையில் என்னை உயிருடன் தின்று கொண்டிருக்கும் இந்தக் கடவுள். எல்லாம் வல்லத் தந்தையின் பெயரால் ஒரு ஒரு முறையும், நான் ஏமாற்றப்படுகிறேன். பதிலீடாக, என் சகோதரர்களின் சாபம், என் தாயின் தீராத அழுகை. நான் என் கண்முன்னே காண்கிறேன். இதோ சந்தைக் கூடத்தில், என்னை ஒரு கோமாளியைப் போல, கிறுக்கனைப் போல காணும் கண்களை. எல்லோரும் சிரிக்கிறார்கள். கேலி செய்கிறார்கள். நான் சிறுத்து சிறுத்து, இறுதியில் என்னை ஒரு மனிதப் பிறவியாக என்னாலேயே நம்ப முடியவில்லை. இதோ! இவர்கள் உண்கிறார்கள். குடிக்கிறார்கள். எக்காளமிடுகிறார்கள். மகிழ்ந்து நடனமிடுகிறார்கள். கோபம் வந்து சண்டை போடுகிறார்கள். வகை தொகையின்றிக் கூடிக் கும்மாளமிட்டுக் களிக்கிறார்கள். நான் என் கனவுலகின் வாசலில் மண்டியிட்டுக் காத்திருக்கிறேன். தேவனின் சொல் ஒரு தேன் துளியாக, ஒரு வறுத்த மணமான இறைச்சித்துண்டாக, நன்கு புளித்த, நுரைத்த மதுவாக, அழகியப் பெண்களாக வேண்டிப் பிரார்த்திக்கிறேன். வெறும் காற்றை மட்டும் குடித்துக் கொண்டு, இது எல்லாமே எங்கோ சொப்பன வெளியில் யாருக்கோ நிகழ்வதைப் போல, ஏக்கத்துடன் நானும், பல காலமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இது எல்லாமும் எனக்கும் உண்மையில் நடக்கும். நானும் மற்ற ஆண் மகன்களைப் போல, உயிர் வாழ முடியும் என்று  நம்புவதற்கான ஒன்றும் நிகழவில்லை. இவர்களின் முன் ஒரு பேடியைப் போல, என்னை மறைத்துக் கொண்டுப் பயந்து, தப்பி ஓடுவதை மட்டுமே, இந்த பரலோக ராஜ்ஜியத்தின் ஒரே தந்தை எனக்கு ஒழுங்காக சொல்லிக் கொடுத்திருக்கிறார். போதும்! போதும்! ஒரு நோயுற்றவன் போன்ற என் வாழ்க்கை! இனிமேலும் முடியாது! இது என்ன! என் மூதாதையின் சொற்கள் எனக்கு வேண்டாம். நான் டேவிட்டின் வழித்தோன்றல் இல்லை. யாருடைய ராஜ்ஜியமும் எனக்குத் தேவையில்லை. இந்த நிழல் என்னிடம் சொல்வது சரிதான். எனக்குத் தேவையானது இதோ, நான் நிற்கிறேனே, இந்தத் திடம். என் முன்னே, என் அறிதலுக்குட்பட்ட இந்த மண்ணும், கல்லும்,  இதன் மாமிசமும் தான். இதுவே எனக்கான ராஜ்ஜியம்! வானத்தையும், அதன் சொர்க்கத்தையும் அந்தத் தேவனே பார்த்துக் கொள்ளட்டும். 

அவன் எழுந்து நின்றான். வலுவைத் திரட்டி, நின்ற இடத்திலேயேக் குதித்தான். கண்ணுக்குத்தெரியாத வாளின் மினுக்கம் போல, ஒளி அவனைச் சுற்றி இறுக்கியது. அவன் தன் உடலை வலு கொண்ட மட்டும் நிமிர்த்தி முன்னே தெரியும் வெட்ட வெளியை நோக்கினான். சிங்கத்தின் கர்ஜனை அவனுள் இறங்கியது. " நான் வெறும் மனிதன் இல்லை. இதோ இந்த எல்லையற்ற மண்ணின் மைந்தன். நான் தயார்! போகலாம்!" அவன் தனக்குத் தானே சத்தமாகச் சொன்னான். சூழலின் நிச்சலனம் கலைந்து, பின் காற்றின் நிலைத்த அனக்கம் மீண்டும் தொடர்ந்தது. "போகலாம்! ஆம்! போகலாம்!" சட்டென சிங்கத்தின் நிழல் உரு, மணல் துகள்களாகக் கரைந்து மறைந்தது.

 இருள் வெளியில் ஒளித்துணுக்குகள் மெல்ல மெல்லக் கூடி வருகிறது. அண்ணாந்து வானத்தைப் பார்த்தான். ஒளியின் திண்மை பெரிதாகி விரிந்தது. அது குரல் கொண்டு அவனை அழைத்தது. பார்! பார்! என அவனை நிமிண்டியது. ஒளி விழுந்த நிலத்தில் காட்சிகள் ததும்பின. சதுக்கங்களும், கோட்டை கோபுரங்களுமாக நகரத்தின் வண்ணம் மாறி மாறி அலைத்தது. அதனைச் சுற்றி வளையமாகப் படர்ந்திருக்கும் மாபெரும் வெற்று நிலம். மலைகளும் கடல்களும் சூழந்த நிலங்களின் சாயைகள் துடித்து அடங்கிக் கொண்டிருந்தன. பாபிலோன், ஜெருசலேம், அலெக்சாண்ட்ரியா என கணத்திற்குக் கணம், காட்சிகள் மாறின. காட்சி வெளிக்கப்பால் ஸ்தூலமாகத் தெரிந்தது ரோம் நகரம். மறுபடியும் அத்தீர்க்கமான குரலின் வெளிப்பாடு,

"பார்! தெரிகிறதா உனக்கு, பார்!"

விரிந்த விழிகளுடன் ஜீசஸ், தன் முன்னே விரியும் காட்சிகளின் நிலத்தில் கட்டுண்டிருந்தான். மஞ்சள் நிறச் சிறகுகள் கொண்ட தேவதை ஒன்று  வானிலிருந்து மெல்லத் தரையில் அமர்ந்தது. புலம்பல்களும், கூச்சல்களும் கேட்கின்றன. நான்கு ராஜ்ஜியங்களின் மக்களும் கைகளை உயர்த்தி வானை நோக்கி மன்றாடிக் கொண்டிருந்தனர். ஆனால் எல்லா மனிதர்களையும் தொழு நோய் ஆட்கொண்டிருந்தது. அவர்களின் விரல்கள் மழுங்கியிருந்தன. பிண்டங்கள் போல அமர்ந்திருந்த அவர்களின் உதடுகள் சிதைந்து அழுகத் தொடங்கியிருந்தது. அவர்கள் குரல்கள் வெற்றுப் பிதற்றல்களாய் வானை நோக்கிச் சிதறியது. கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் உடல் உறுப்புகள் அழுகி விழ ஆரம்பித்தன. தெரு முழுதும் மனித உறுப்புகளின் துண்டங்கள் அழுகல் நெடியுடன், மீன் குஞ்சுகள் துடிப்பதைப் போலத் துடித்துக் கொண்டிருந்தன. 

ஜீசஸால் தன் முன்னே நிகழும் எதையுமேத் தாங்க முடியவில்லை. கைகளை உயர்த்தி மண்டியிட்டு அழத் தொடங்கினான். "தேவனே! வேண்டாம்! எங்களிடம் கருணையுடன் இருங்கள். ஏன்! மனிதர்களை இப்படிக் கைவிடத் துணிந்தீர்! வேண்டாம்! தந்தையே!"

இரண்டாவது தேவதை, கழுத்திலும், கால்களிலும் மணிகள் குலுங்கத் தரையில் விழுந்தது. அதன் கண்கள் முட்டை வடிவில் பெரிதாகவும், காது வரை வாய் கிழிந்து இளிப்பே முகமாகக் கொண்டிருந்தது. எல்லோரது முகங்களிலும் அதன் பைத்தியக் களை பற்றிக் கொண்டது. கொப்பளிக்கும் வெறிச்சிரிப்பு. கண்கள் பிதுங்க எலும்புக் கூடுகளாக இருக்கும் மக்கள் கூட்டம், தன்னுள் இருக்கும் மிச்சம் மீதி உயிரை

ஞாயிறு, 25 டிசம்பர், 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் - 81

    


The Last Temptation of Christ - Nikos Kazantzakis

     ஜீசஸ் பாலையினுள் நுழைந்தான். எந்த சிந்தனைகளுக்கும் இடம் கொடுக்காமல் நேரடியாக உள்ளே சென்று கொண்டிருந்தான். ஆனால் முன்னே செல்லச் செல்ல உள்ளூற உதறலும், பதற்றமும் அவனை  ஆட்கொண்டது.  அந்நிலம் அவனுக்கும் மிகவும் பரீட்சயப்பட்டதைப் போலத் தோன்றியது. அதே சமயம் அது நிலமே அல்லாதது போல, ஒரு வெட்ட வெளி போலக், கிட்டத்தட்ட அந்தரத்தில் கால் பதிந்தது போன்ற உணர்வு. தலைக்கு மேலும், காலுக்குக் கீழும் ஸ்தூலமான ஏதுமற்ற ஒன்றாய்ப் பின், ஒவ்வொரு அடியிலும் கால்கள் கொழகொழத்துப் போவது போல, மண்ணின் புதைவு அவனைக் குழப்பியது. ஆனால் எதற்கும் பயக்காமல் தன்னுடைய இரு பாதச்சுவடுகள் மட்டுமே பதிந்து செல்லும், அங்கே தன் சொந்தத் தனிமையைக் குடித்துக் கொண்டு அமைதியாக முன்னேறிக் கொண்டிருந்தான். சுற்றிலும் சிற்சிலப் புதர்கள் அங்காங்கு கொத்தாய் மண்டிக் கிடந்தது. புழுதியின் சொல் மட்டுமே நீக்கமுற நிறைந்திருந்தது. அவன் பிதற்றலுடன் உரையாட முயல்வது அதனுடன் மட்டுமே. தவிர்த்து காற்றின் பீறிடல். அது ஒரு மாபெரும் துவாரத்திலிருந்து, எல்லையற்றுத் தன் கைகளை விரித்துப் படர்ந்திருந்தது. தெரிந்ததும் தெரியாததும் கூடிக் கூடி உருகொள்ளும் மாய வெளியாய்  அந்நிலம் அவனுள் உருவெடுத்துக் கொண்டிருந்தது. சிறுவயது முதலே, கனவுகளில் பீடிக்கப்பட்டிருந்த அவனது நினைவின் தாழ்வாரங்களில் பாலையும், அதன் வெந்த மணமும், சதா அலையடித்துக் கொண்டிருக்கும் காற்றின் கார்வையும் ஒன்று கூடிக் கூடி, ஒருமாதிரியான இருண்ட வெளியாகியது. ஒரு ஆழமானக் குகையை நோக்கிச் செல்வதைப் போல மயக்கும். மண் பாளங்களின் பழுப்பு நிறம் பெயர்ந்தும் ,நெழிந்தும் செல்லும் பாதை, கணம், காலம், நேரம் என்பதற்கான எந்த அடையாளங்களுமற்றிருந்தது. ஆனால் முன்னே அனைத்துமே உயிருள்ளது, அது மாறிக் கொண்டே இருப்பதே அதற்கான உறுதிப்பாடு. அதனால் திண்மையான ஒன்று என்று ஒன்றுமே அங்கில்லை. எல்லாமே உடைந்தும் சிதறியும், சேர்ந்தும், கலந்தும் என, அவனது அகம் போலவே ஒவ்வொரு மணித்துளிகளிலும் வெவ்வேறு உருவம் கொள்வதை அவன் வெறுமனே ஒரு இருப்பாக கவனித்துக் கொண்டே நடந்தான். ஆனால் அதுவரை அவனுள் தேங்கியிருந்த துக்கத்தின் பாடுகள், கரைந்தழிந்திருந்தது. ஒரு விதமான பரவசத்துடனும், களிப்புடனும், சரியாகச் சொல்வதெனில், தன் தாயைக் காணச் செல்வதைப் போல, ஆவலுடன் சென்று கொண்டிருந்தான்.

    அம்மா எனும் நினைவுகள், அவனைக் கனவு வெளியினுள் தள்ளியது. சிறுவயதில், அவன் கண்ட ஒரு சொப்பனத்தினுள் தற்போது, தான் நிகழ்ந்து கொண்டிருப்பதாக அவன் நினைத்துக் கொண்டான். பல்லாயிரம் வருடங்களாக அவனின் எண்ணங்களின் தேங்கலில், குமிழியிடும் அந்த ஒரே கனவு. அது ஒரு இருண்ட, ஆழமானக் குகை. இரவின் வெளிச்சமன்றி ஏதுமற்றிருந்தது. அதனுள் ஒரு பெண் சிங்கம் தன் குட்டிகளை ஈனிக் கொண்டிருந்தது. அதன் உறுமலையும் , முணங்கலையும் கேட்ட ஜீசஸ் அதன் முன், தாகமும் பசியுமாக நின்று கொண்டிருந்தான். சட்டென்று எந்தத் தயக்கமுமின்றி அவன் அக்குட்டிகளுடன் சேர்ந்து அதன் முலையில், வாய் வைத்து பாலைச் சப்பத் தொடங்கினான். அப்பொழுது தான் எவ்வாறு இருந்தோம், என்ன உரு கொண்டிருந்தோம் என்பதைப் பற்றியத் தெளிவு அவனுக்கில்லை. அச்சிங்கமும் அவனைத் தன் இன்னொரு குட்டியைப் போலப் பாவித்துக் கொண்டு அமைதியாக அயர்ந்துக் கிடந்தது. பின் அவன் குட்டிகளோடு குட்டியாக, குகைக்கு முன்னே எல்லையற்று விரிந்துக் கிடக்கும், பசும் புல்வெளியில் குதூகலித்து விளையாடிக் கொண்டிருந்தான்.  சிங்கங்களுடன் ஒரு சிங்கக் குட்டிப் போல அவனும் கர்ஜித்துக் கொண்டும் குதித்து ஓடிக் கொண்டுமிருந்தவன், இடைவெட்டு போல ஒரு பெண்ணின் குரல் கேட்டு பதைபதைத்து எழுந்தான். அவனது அம்மா மேரி அருகில் ஒருக்கழித்துப் படுத்துக் கிடந்தாள். யாரிவள் என்றுத் துணுக்குற்றுப் பின் நிதானித்துக் கோபத்துடன் அவளைப் பார்த்தான். "ஏன் என்னை எழுப்பினாய்?, நான் என் சகோதரர்களுடனும், அம்மாவுடனும் விளையாடிக் கொண்டிருந்தேன் தெரியுமா?" வெறுப்பாக அச்சிறுவன் தன் அன்னையிடம் சண்டையிட்டதை இப்பொழுது நிகழ்ந்ததைப் போல ஜீசஸ் நினைத்துக் கொண்டான்.

    "அன்று ஏன் நான் அவ்வளவு மகிழ்ச்சியுடன் இருந்தேன் என்று இன்று தான் புரிகிறது. நான் என் அன்னையின் குகையில் இருந்தேன். ஒரு சிங்கத்தின் அணுக்கமான அரவணைப்பில். ஆம்! தனிமையின் மடியில்."

    வீரியன் பாம்புகளின் சீறல் ஒலி, கனத்தக் காற்று, மண் பாளங்களிலும், குன்றுகளின் மேடு பள்ளங்களிலிலும் பட்டுத் தெறித்துக் குமையும் சப்தம். காட்சிப்புலமற்ற இப்பாலையின் ஆன்மாவின் முடிவே இல்லாத அனக்கம்.

    ஜீசஸ் தலை குனிந்து மண்ணைப் பார்த்து, தன் வலதுகையை இடது நெஞ்சில் ஆழமாகப் பதித்து ஒரு அறைகூவல் போலத் தெரிவித்தான். " இங்கு நீ அறிந்து கொள்வாய்,  நீ நித்தியமானவன் என்று!"

    செவிகளைக் கூர்ந்து நடந்து சென்றான். பின் தொடரும் காலடிகள். ஆழமாக மண்ணை மிதித்து முன்னேறும் கனத்தத் தப்படிகள். "அமைதியாக, உறுதியுடன் தன்னைத் தொடர்ந்து எதுவோ வந்து கொண்டிருக்கிறது." நடுக்கத்துடன் நினைவு கூர்ந்தான். "அவள்! எப்படி மறந்தேன். அவள் என்னை விட்டு என்றுமே விலகவில்லை. என்னுடன் தானே அவள் எப்பொழுதுமே வந்து கொண்டிருக்கிறாள். அம்மா!....." அவனுக்குத் தெரியும், இது தன்னைப் பீடித்திருக்கும் சாபம் என்று. ஆனால் அவள் தம்முடனேயே எப்பொழுதுமே இருக்க வேண்டும் என்பதில் அவன் உறுதியாக இருந்தான்.

    பதற்றம் விலகி, திரும்பவும் நடக்கத் தொடங்கினான். எண்ணங்கள் சுழல் போலச் சுழன்று வேறு திசையில் கிளர்த்தியது. அந்தப் பறவை. வெண்ணிறச் சிறகுகளுடன் தலைக்கு மேலேக் குழறிக் கொண்டு சென்றதை நினைத்தான். அது சாதாரணமான ஒலி போல அல்ல. ஒரு எச்சரிக்கை போலவும், நிமித்தம் போலவும், வரவேற்பினைப் போலவும் பலவிதமாக அவனுக்குள் தோன்றியது. அது ஒரு மயக்கோ என்று கூடக் குழம்பினான். ஆனால் அது தான் தான் என்று அவன் நம்ப முயன்றான். தன்னுள் அது வரைக் கட்டுண்டிருந்தவை அனைத்தும் முறிந்து, சிறகுகள் படபடத்த தன் ஆன்மா பறப்பதாக எண்ணினான். அதுவரை அடைபட்டிருந்தப் பிடி தளர்ந்து அக்கணப்பொழுதில் பறத்தல் மட்டுமே உடலாகக் கொண்டு அது மேல் எழுவதை அவன் கண்ணுற்றான். ஆம்! ஆம்! நான் திருமுழுக்கிட்ட அச்சரியானக் கணத்தில் அதன் சீழ்க்கையை, சிறகடிப்புகளை, என்னைச் சுற்றி வட்டமிட்டு, அது எல்லையற்று வானமாய் விரிந்ததை நான் பார்த்தேன். அது தேவதூதனோ, இல்லை ஒரு காட்டுப்புறாவோ அல்ல, அது நான்! என் சொந்த ஆன்மா! "

    அப்பதிலினால் திருப்தியுற்றவன் போல உணர்ந்தவன், திரும்பவும் முன்னே நடக்கத் தொடங்கினான். அக்கனத்தக் காலடிகள் புழுதியை நசுக்கிக் கொண்டு அவனைப் பின் தொடர்ந்தது. இப்பொழுது அவனது எண்ணங்கள் ஓய்ந்து ஒருவாராக நிலைத்திருந்தது. தன்னால் தாங்க முடியாத ஒன்றுத் தனக்கு அளிக்கப்படுவதில்லை என்பதை அவன் உணர்ந்தான். "ஒரு மனித ஆன்மாவின் வலு அளப்பறியது. அது அற்புதங்களை நிகழ்த்துவது. அதனால் இயலாத ஒன்று என்று பூமியிலும், வானத்திலும் ஒன்றுமே இல்லை. அதுவே ஒரு பறவையின் விடுபடலாக, என் தலைக்கு மேலே எழுந்து வான் விரிந்தது. " தன்னைத் தானே தேற்றிக் கொண்டு, அமைதியாக வேகமெடுத்துச் சென்றான். ஆனால் சட்டென்று ஓரிடத்தில் நின்று விம்மத் தொடங்கினான். "ஏன்! அப்பறவை ஒரு மாயையாக, வெறும் கானல் நதியாக எனக்கு மட்டுமேத் தெரிந்த ஒரு காட்சிப்பிழையாக இருந்தால்," காற்றுச் சுழல், செவிப்பறைகளில் அறைகிறது, மண், புழுதித் தடத்தின் நீள் ரேகைகள் பதிந்தழிகிறது. தட்டழிந்து கொண்டிருந்தான் அப்புழுதியைப் போலவே. அவனால் எதனுள்ளும் தன்னைப் பொருத்திக் கொண்டு நிலை பெற முடிவதில்லை. அதுவே அவன் வரமும் சாபமும். இம்முடிவை எடுத்து, பாலை வெளியை அணுகுகையில் தன் உடல் முழுக்க ஒளி முகிழ்த்ததை, அது பட்டுப் படர்ந்து தன் பாதங்களிலிருந்து விரிந்துப் படர்ந்து, உலகம் முழுமைக்குமாய்த் தன் நீண்டக் கரங்களைப் படர்த்துவதை அவன் உணர்ந்திருந்தான். அதன் மாட்சிமை, அளப்பறியாத உவகை, வல்லமை, மறுக்க இயலாதத் தன்மை அனைத்தும்  சேர்ந்தே அவனை இயக்கியது.  "இந்நிலத்தினுள், நான் பணயம் வைப்பது என் தனிமையை, என் ரத்தத்தை, எலும்பும் நரம்பும் தோலும் உறுதியும் கொண்ட என் சொந்த உடலை,  என் திண்மையின் தளர்வுறாத நம்பிக்கையை. இங்கு  நான் கேட்க வேண்டியதையும், பார்க்க வேண்டியதையும் நிச்சயமாகக் காண்பேன். ஆம்! இதுவே என் கூடாரம். "தந்தையே! உம்மில் தாழ்ச்சியுறுகிறேன்!", நாம் இருவரும் இங்கு தனித்தமர்கிறோம். உம் சத்தியத்தின் பாதையை எமக்குக் காட்டும். நான் திரும்பிச் செல்லும் வழிகள் இல்லை. என் உடலையும் ஆன்மாவையும் உமக்கேக் காணிக்கையாக்கி உன் முன்னே நிற்கிறேன். இனிமேல் எனக்குப் பாடுகள் இல்லை. நீயே வழியும் உண்மையும் எனில், என்னை ஏமாற்றாது உன் சொற்களை அளியும்.  பலப் பலக் குரல்கள், சூறையாகக் காற்றில் அடித்து நிரம்புகிறது. பற்றுதலும், வேண்டுதலும் நீ மட்டுமே, தயை கூறும்! ஆமேன்!"

    சூரியனும் அவனும் ஒரே நேர்க்கோட்டில் பயணித்தனர். இப்பொழுது அவனது தலைக்கு மேலே சரியாக வானின் மேல் முகட்டில் அது ஒளிர்ந்து கொண்டிருந்தது. அவனது முழங்கால் வரை மண்ற்துகள்கள் பதிந்திருந்தன. தேகம் முழுதும் புழுதி திட்டுத் திட்டாகப் படிந்து வழிந்தது. தன்னைச்சுற்றிய வெற்று நிலத்தை அங்கும் இங்குமாய்த் திரும்பித் திரும்பிப் பார்த்தான். நிழலின் சின்னஞ்சிறியத் துணுக்குகள் கூட கிடைக்கவில்லை. வெட்டை நிலம், பொருமியது. ஒளியைப் பொசுக்கிப் பொசுக்கி நெடி கூடியிருந்தது. பாலை வேகுவது ஒரு மனிதஉடல் போலவே சுருங்கி விரிந்து சுவாசிப்பதாய் மயக்கு. சட்டென சிறகடிப்புகளை உணர்ந்தான். மேலே காகங்கள், வேகமாகக் கரைந்து கொண்டு, சற்றேத் தொலைவில் கருப்பாகக் கிடக்கும் ஒன்றினை நோக்கித் தரை இறங்குவதைக் கவனித்தான்.

    அழுகிக் கொண்டிருந்த ஒன்று அங்கு கிடந்தது. அதன் பிண நெடியின் கவிச்சி அவனை மெல்ல உலுக்கியது. சரியாக என்னவென்று தெரியவில்லை. மூக்கைப் பிடித்துக் கொண்டு அதனை நோக்கிச் சென்றான். காகங்கள் மூர்க்கமாகத் தன் கூர் நகங்களால் அதன் தோலைக் குத்தியும் கிழித்தும், தின்று கொண்டிருந்தன. அவைகளின் சப்தம், சுற்றிலும் பட்டுத் தெறித்து எதிரொலிப்பதைப் போல அவ்விடம் முழுதும் அதிர்ந்து கொண்டிருந்தது. ஒரு மனிதன் வருவதைக் கண்டதும், அவைகள் சிதறி விலகி, இன்னும் சத்தமாகக் கரையத் தொடங்கின. மெல்லப் பின் வாங்குவதும், பின் ஓரங்களிலிருந்து அதன் அருகே சென்று தன் அலகினால் குத்தி அதன் மாமிசத்தை துளைத்துக் கடிப்பதுமாய் அவைகள் ஒவ்வொன்றும் வெகு அவசரமாகத் தங்கள் வயிற்றை நிரப்பிக் கொண்டிருந்தன. பறந்து விலகிய ஒவ்வொன்றின் வாயிலும் கொழுத்த மாமிசத் துண்டங்கள். வானத்தில் வட்டமிட்டுக் கொண்டே அவனை விரட்டும் தொனியில் அவைகள் இன்னும் சீற்றத்துடன் கரைந்தன. விலக்கி அருகே சென்ற ஜீசஸ், அடிவயிறு கிழிந்துக் குடல், மாலையாக வெளித்தள்ளிக் கிடக்கும அழுகிய ஆட்டின் உடலைப் பார்த்தான். வளைந்தக் கொம்புகளும், கருப்பும் சாம்பல் நிறமும் கொண்ட அதன் உடல், குதறப்பட்டுப் பிண்டமாய்க் கிடந்தது. ரத்தம் முழுதும்  வடிந்து நொதித்தழுகிக் கொண்டிருந்தது. கண்களும், விதைக் கொட்டைகளும் ஏற்கனவே உணவாகி விட்டன. ஒடிந்து ஒருபக்கமாகச் சரிந்துக் கிடக்கும் கழுத்தினில் கொத்தான வளையங்கள் இறுக்கிச் சீழும் ரத்தமும் படிந்து, சூரிய ஒளியினில் பளபளப்பதை ஜீசஸ் பார்த்தான்.  

    "பலி!" நடுக்கத்துடன் ஜீசஸ் பின் வாங்கினான். "மக்களின் பாவங்களைச் சுமந்து வந்தப் புனிதப் பலிகடா. கிராமங்களையும், மலைகளையும், புல்வெளிகளையும், கற்பாறைக் குன்றங்களையும் தாண்டி இறுதியாக இந்த வெட்டை நிலத்திற்கு வந்து உயிரை விட்டிருக்கிறது." வளையங்கள் இறுகி அதன் தலை வீங்கியிருந்தது. நாக்கு, ஊர்வன போல நகர்வதைக் கவனித்தான். அதனடியிலிருந்து எறும்புக் கூட்டம் ஒன்று, கொஞ்சம் கொஞ்சமாக அதனைப் பிய்த்துக் கொண்டிருந்தது.  

    சட்டென அருகே இருந்த மணல் மேட்டில், தன் கைகளாலேயே முடிந்த வரைக் குழி தோண்டினான். பின் அந்த செத்த உடலை அப்படியேத் தூக்கி குழிக்குள் இட்டு மண்ணள்ளி நிரப்பினான். கைகளில் இருந்த பிசுபிசுப்பை மணல் பரப்பில் பதித்துத் துடைத்துக் கொண்டான். ஆனால் துர் நாற்றத்தின் வீச்சம் அவன் உடல் முழுதும் தொற்றிக் கொண்டது. நாசியில் அதன் நெடியை அவனால் மறுதலிக்க முடியவில்லை.

    "என் சகோதரா,  எந்தத் தீங்குமற்றத் தூய மிருகமே! மனிதன்! தந்திரமிக்கவன். அனைத்திற்கும் மாற்று உபாயங்களை வகுத்து வைத்திருக்கும் கோழை. உன்னைப் பலியாக்கித் தங்களின் பாவங்களைக் கரைக்க நினைக்கும் ஈனன். அமைதியுறு!. உன் ஆன்மா நித்தியத்தின் இருப்பிற்குள் சாந்தியடைய என் தந்தையைப் பிரார்த்திக்கிறேன். தங்களின் பாவங்களுக்குப் பிராயச்சித்தம் தேடாது என் தந்தையின் கூடாரத்திற்குள் வருவிக்கப்படும் அவர்கள் மறுமையில் அவர் சினத்திற்கு ஆளாவார்கள். உன் தூய்மையின் பரிசுத்தம் உன்னைக் காக்கும். என் அன்பின் சகோதரனே! அமைதியுடன் விடைபெறு! ஆமென்!"

    முன்னே நடக்க எத்தனித்தவன்,  நின்று கலக்கத்துடன் தன் கைகளை  வான் உயர்த்தி அழைத்தான். " நிச்சயம் நாம் திரும்ப சந்திப்போம்!"

    காகங்கள் வெறிக் கூச்சலிட்டன. பல்லாயிரம் சிறகுகளின் படபடத்தல். "அருமையானத் தங்களின் உணவு பறிபோய் விட்டதை அவைகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவனைப் பின்தொடர்ந்து கூட்டமாகப் பறந்து வந்தன. எப்படி, தங்களுக்குக் கிடைத்த, அருளப்பட்ட உணவை இம்மனிதன், உண்ண விடாமல் தடுக்கலாம். அழுகிய உடல்களைத் தின்று வாழத்தானே எங்களை இந்தக் கடவுள் படைத்திருக்கிறான். இப்பொழுது என்ன கேடாகி விட்டது இம்மனிதனுக்கு. எங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட நிலத்தில் எங்களின் உரிமைகளைப் பறிக்க இவனுக்கு யார் கொடுத்தார்கள் அதிகாரம்? கண்டிப்பாக இவன் இதற்கான விலையைத் தந்து தான் தீர வேண்டும். நாங்கள் விடுவதாக இல்லை!" காகங்களின் கரைதல் அவனுள் எண்ணங்களாக விரிந்தன.

    இறுதியாக இரவு அணைத்தது. ஒரு பெரிய வட்ட வடிவிலான, மண் பாறையின் மேல் அவன் தளர்ச்சியுடன் அமர்ந்தான். "இனி மேல் என்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது!" தனக்குக் கட்டளையிடும் யாரிடமோ சொல்வதைப் போன்றத் தொனியில் கூறினான். "இங்கு எனக்கான அரணை அமைத்துக் கொண்டு நான் விழிப்பில் அமரப்போகிறேன். எது வருமோ வரட்டும்!" இருள் சுருள் சுருளாக விரிந்துப் பாளம் பாளமாக, வானிலிருந்து மண்ணிற்கு உடைந்தும் நெழிந்தும், அடர்த்தியாகப் பரவிக் கொண்டிருந்தது. நாலாபுறமும் சுவர் போல கருமை எழும்பியது. குளிரின் வீரியம் கூடியது. காற்றின் சில்லிடல். அலறும் அதன் குரல், சட்டெனச் சன்னமாக ஒலித்துப் பின் உயர்ந்தது. ஒலி மேடு பள்ளங்கள் வழியாக அவனைச் சுற்றிக் குழுமியது. வானம் பெரிய மூடுதிரையாக வளைந்து கிடந்தது. இருளின் உயிர்த்தன்மை, அனக்கங்களாக, கூச்சலாக, ஓலங்களாக, நெடிகளாக, அடரும் மூட்டமாக அவன் முன்னேப் போக்குக் காட்டியது. பற்கள் கெட்டிக்கத் தொடங்கின. தன் வெண்ணிற மேலங்கியைக் கிளர்த்தி இறுக்கமாகச் சுற்றிக் கொண்டான். பகல் முழுதுமான அயர்ச்சியினால் தன்னையறியாமலேயே அவனது கண்கள் சொக்கின. கண்களை மூடியதும் பயம் ஒரு பூச்சியினைப் போல அவனைத் தொற்றிக் கொண்டது. தன்னைச் சுற்றி உலவும் இருள், அதன் பலவிதமான ஊளைகள்,  காற்றின் பம்முதல், எல்லாம் எந்நேரமும் தன்னைத் தாக்கிக் கொல்லப் போகும் வன் மிருகம் போல, அவன் அயர்ந்து வீழும் நொடிக்காகக் காத்திருப்பதைப் போல அவனுக்குத் தோன்றியது. சட்டென வானத்தைப் பார்த்தான். வெண் ஒளி மினுக்கம்.  அது பல்லாயிரம் விழிகள். இல்லை! பலப்பல மின்மினிப் பூச்சிகள். தேவனின் விரல் நகங்கள். அவனது உடல் முழுதும் ஜொலிக்கும், ஆபரணங்களின் மினுமினுத்தல்கள். தன் கற்பனையின் மொழியால், தன்னைத் தானே ஆசுவாசப்படுத்த முயன்றான். விண்மீன்களின் அசைவு, விண்ணுலகத்தின் அணுக்கத்தை அவனுக்கு ஸ்தூலமாகத் தெரிவித்தன. தேவனின் மணி முடியில், ஆறு ஒளிச்சிறகுகளாக ஒளிர்க்கும், சங்கீதங்களின் தாளத்தை அவனுக்கு நினைவு படுத்தின. ஆனால் அது வெகுதூரத்திலிருந்து ஒரு மெல்லியக் குரலாக அவனிடம் வந்தது. அவனால் அதன் முணங்கல் ஒலியை மட்டுமே அருகிருத்த முடிந்தது. அவனது அகம் முழுதும் பரவிய ஒளியின் வழியை மட்டுமே பற்றுக் கோடாகப் பிடித்துக் கொண்டிருந்தான். பசியும், தளர்ச்சியும், வாதையும் அவனை விட்டு விலகியது. அவனே அம்மாபெரும் இருள் வெளியின் கலங்கரை விளக்கம் போலத் தனக்குள் நினைத்தான். இறைவனை நோக்கியப் மன்றாட்டுதலின் கீர்த்தனைகளை தன்னுள்ளிருந்து பாட முயன்றான். அது தன்னை, தன் ஆன்மாவை, இருதயத்தைப் பிழிந்து சாறினை எடுப்பதைப் போல, சொற்களை, மொழியைத் தொடுத்து துதியை வருவிக்கும் பிரயத்தனமாக இருந்தது. தான் செய்கின்ற ஒவ்வொரு செயல்களும், கவனிக்கப்படுகிறது என்று நம்பினான். பணிவுடன், எளிமையான உடைகளுடன் நிற்கும் தேவதைச் சிறுமிகள் ஆதுரத்துடன் தன்னை நோக்கிக் கொண்டிருக்கின்றனர். அவனுள் இருக்கும் பதற்றமும் பயமும் மெல்ல மெல்ல விலகியது. சிறகுகள் ஒடுக்கித் தன்னைப் போர்த்திக் கொண்டு கண் அயரும், சின்னஞ்சிறு குருவியினைப் போல அவனும் உறங்கத் தொடங்கினான். சிறகடிப்புகள் கலைந்து ஒலியின் மோனம் நீக்கமுற நிறைந்திருந்தது.

    இரவின் குரல்கள் கலைந்தன. அவன் விழிக்கையில், இருள் துணுக்குகள் கூட மறைந்து, வானம் வெளிச்சம் உமிழத் தொடங்கியிருந்தது. கிழக்கிலிருந்து உயரும் மஞ்சள் கோளகம், ஆயிரம் தீக்கனல்களாய் ஒளியையும், வெம்மையையும் எல்லைகளின்றி விரித்தது. மண்ணிற்கு மேலே தழல் பூக்கும் மஞ்சளின் பாட்டையைப் பாறையின் மேலிருந்து உட்கிரகித்துக் கொண்டிருந்தவன், அதனைத் தந்தையின் உடல், ஸ்பரிசம், தொடுகை, அணைப்பு என்று பலவாறாக எண்ணி, அள்ளிப் பூசித் தன் உறக்கத்தைக் கலைத்தான். கண்களைச் சுருக்கி உறுத்தும் ஒளியினை கசக்கித் துடைத்தான். "தந்தையே! ஒரு தானியமணி போல இம்மண்ணில் கிடக்கிறேன், என்னை நீ அறிகிறாயா?, ஒரு விதையினைப் போல இம்மண்ணைப் பற்றிக் கொண்டிருக்கும் என் மூச்சினையும், குரலையும் கேட்கிறாயா? உன்னை விரும்பும், உன் சொல்லுக்காகக் காத்திருக்கும் உன் மகனை உன்னால் அடையாளம் காண முடிகிறதா? எந்த ஆயுதங்களும் என்னிடமில்லை. அன்பு எனும் ஒற்றைப் பிடிமானத்தைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டு உன் முன்னே அடிபணிகிறேன்.  நான் அறிவேன்! இது ஒரு போர்! என்னை நீ தேர்ந்தெடுப்பதற்கானத் தெரிவு! இங்கே நான் என் கைகளுக்குள் குஞ்சுப் பறவையைப் போலப் பாதுகாப்புடன் வைத்திருப்பது, என் பரிசுத்தமான அன்பு. அதனைக் கொண்டே நான் போரிட வந்துள்ளேன். தயை புரி தந்தையே!"

    தன்னுடன் ஜோர்டானிலிருந்துக் கொண்டு வந்திருந்த, கோரைப்புல்லினைக் கொண்டு, தான் அமர்ந்திருந்தப் பாறையைச் சுற்றி மண்ணில் வட்டமாக எல்கை வரைந்தான். 

    " நான் இந்த எல்லையினை விட்டு வெளிவர மாட்டேன்" சுற்றிலும் இருக்கும் வெட்ட வெளி முழுதும் கேட்கும் படி சத்தமாகக் கூறினான். அது அவனை எந்நேரமும் பற்றிக் கொள்ளக் காத்திருக்கும் காட்சிக்குப் புலனாகா சக்திகள் அறிந்துகொள்ளட்டும் என்பதைப் போல இருந்தது. "என் தந்தையின் சொல் என்னை அணுகாதவரை, நான் இதோ இங்கு வரைந்திருக்கும் தளத்தின் எல்லையை விட்டு நகரமாட்டேன். அவரது குரல் எனக்குத் தெளிவாகக் கேட்க வேண்டும். எப்பொழுதும் நிகழ்வதைப் போல, ஒரு தெளிவற்ற முணங்கலாக, ரகசியமாக, மின்னல் வெட்டாக, இடியின் குரலாக, பலப்பல சமிஞ்சைகளாக, வலியாக, பீடித்தலாக இல்லாது ஒரு தெளிவான மனிதக்குரலாக அவர் என் முன் வந்தாக வேண்டும். வந்து, அவர் என்னிடம் என்ன வேண்டுகிறார், என்னை என்ன செய்யச் சொல்கிறார், நான் என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்குத் தெளிவாக உரைக்கவேண்டும். அதுவரை இந்தத் தளத்தை விட்டு ஓரடி கூட நகரமாட்டேன். எதுவாயினும் சரி. அவரது கட்டளையை ஏற்பேன். மரணமானாலும், வாழ்வானாலும். அவரது விருப்பம். அவர் என்னை என்ன செய்ய முயல்கிறாரோ அதற்கு என் உடல், பொருள் ஆவி அனைத்தையும் காணிக்கையாக்குகிறேன்....என் தந்தையின் பெயரால்!, ஆமென்!"

    சூரியனுக்கு முன்னே முகத்தைக் காட்டிக் கொண்டு, எல்லையற்று விரியும் பாலையின் மணல் வெளியைத் தன் எல்லையினுள் அமர்ந்திருந்துப் பார்த்தான். கண்களை மூடியதும் எண்ணங்கள் ஓட்டமெடுத்தன. நாசரேத்திலுருந்துத் தொடங்கி, மாக்தலா, கார்பெர்னம், ஜேக்கப்பின் குடில், பின் ஜோர்டான் நதி என்று விலகி விலகி இறுதியாகத் தன் முன்னே வரிசைக்கிரமமாக அணிவகுக்கும் போர்வரிசையினை சூட்சுமமாக அவனுள் புலர்த்தியது. அவன் போர்புரிவதற்குத் தயாரானான்.

    நேராக நிமிர்ந்து, இறுக்கத்துடன் அமர்ந்திருந்தவனின் இமைகள் மூடியிருந்தன. அவன் தன்னுள் மூழ்கியிருந்தான். ஒலிகளின் கார்வை அவனுள்  கூடிக் கொண்டிருந்தது. ஆர்ப்பரிக்கும் நீர்மையின் பெருக்கோட்டம், கோரைப்புற்கள் கிலுங்கிக் கிலுங்கிக் கிழிகிறது, மனித விளி, புலம்பல்கள், ஓலங்கள்.....ஜோர்டான் நதியின் அலைப்பெருக்கு, கரைத் தொட்டு மீள்கையிலெல்லாம், வீறிட்டெழும் அழுகை, தூரத் தொலைவில் நடுக்கத்துடன் அதிர்ந்து கொண்டிருக்கும் நம்பிக்கையின் விதைப்பாடுகள், சீற்றத்தின் எழுச்சியால் கொஞ்சம் கொஞ்சமாகக் கரையக் காத்திருந்தது. ....அந்தக் காட்டு மனிதனுடன் மூன்று நீள் இரவுகளைக் கடத்திய ஞாபகங்கள் தான் அவனது மனதில் முதலில் வந்திறங்கியது. தன் எல்லாவிதமானத் தந்திரங்களுடனும், கவசத்துடனும் அவைகள், பாலைவெளிக்குள் அவனைக் குறிவைத்து ஊடுருவிக் கொண்டிருப்பதை அத்துறவி சரியாகவேக் கணித்திருந்தார்.

    அவருடன் இருந்த முதல் நாள் இரவு, ஒரு ராட்சச வெட்டுக் கிளி,  பழுத்த சாம்பல் நிறமான அதன் உருளையானக் வெறிக்கண்கள்,  படபடத்தும் அதன் வலுவானச் சிறகுகள், அதன் வெண்மையான அடிவயிற்றில் ஏதோ மந்திரச் சொல், பச்சையாகப் பொறித்திருந்தது. அதன் மூச்சின் கனம், சாக்கடலின் நெடியை ஒத்திருந்தது. வாயிலிருந்து வழியும் பசை நீர்மத்தை ஜீசஸின் மேல் உமிழ்ந்தது, அவன் நகர வாய்ப்பளிக்காமல் நேரடியாகத் தன் கூர்மையான உகிர்களால் அவன் தலையை அழுத்திப் பற்றியது. காற்றின் விசை, அதன் சிறகடிப்புகளால் கூடிக் கூடி அவன் பொடிந்து தூளாகி விடுவதைப் போல உணர்ந்தான். தன் உறுதியான மெலிந்தக் கைகளை, ஜெருசலேமின் இருள் பாதையை நோக்கி உயர்த்தி, அவர் ஜீசஸை நோக்கி வினவினார்.

"பார்! அங்கு நீ என்ன காண்கிறாய்?"

" எனக்கு எதுவும் தெரியவில்லை?"              

    "தெரியவில்லையா? பார்! உன் முன்னே தெரிவது ஜெருசலேம். புனித நகரம். நம் தந்தையின் கூடாரம். அங்கு அந்த வேசி உனக்குத் தெரிகிறாளா? ரோமானியர்களின்  கொழுத்த மடியில் அமர்ந்து கொண்டு, தன் தேகத்தால் அவர்களைக் கிளுகிளுப்பூட்டி, உறவு கொள்ளும் விலைமகள்.  நம் தந்தை அழுதுகொண்டிருக்கிறார். "எனக்கு வேண்டாம். இவள் தான் என் மனைவி என்றால் நிச்சயமாக எனக்கு இவள் வேண்டாம்!." நான் என் தந்தையின் காலடியில் அமர்ந்திருக்கும் காவல் நாய். அப்புனித நகரின் சதுக்கங்களிலும், தெருக்களிலும், ஆட்கள் கூடும் சந்தைகளிலும், மாடகோபுரங்களுக்கும் முன்னே சென்று அவளைப் பார்த்து வெறியேறக் குரைக்கிறேன். "இழிபிறப்பே! விட்டகன்று செல்! என் தந்தையின் நிலத்தை விட்டு ஓடிவிடு என்று". வானளவு உயர்ந்த, நான்கு மாபெரும் கோட்டை வாயில்கள் வழி அவளை அடையலாம். வாயிலின் முதலில் அமர்ந்திருப்பது பசி, பின் அச்சம், மூன்றாவதாக ஆநீதி, நான்காவது வடதிசை நோக்கித் திறந்திருப்பது இழிவு. அவளது தெருக்களுக்குள் முன்னும் பின்னும், இடமும் வலமுமாக எல்லா இண்டு இடுக்குகளுக்குள்ளும் செல்கிறேன். அவளது குடிகளை அணுகி சோதித்துப் பார்க்கிறேன். அவர்களது முகங்கள் கனத்தும், கொழுத்தும், வீங்கியும் இருந்த விகாரத் தோற்றத்தைப் பார். இவ்வுலகம் எப்போது அழியும் என்று தெரியுமா? மூவாயிரம் பேருக்கான உணவை, மூன்று பேர் மட்டுமே உண்டு செழித்து வாழ்வர். மற்றவர்கள் உண்ண ஏதுமின்றி, சொந்த மலத்தைத் தின்று, வயிறு வெடித்துச் சாவர். பார்! இம்மக்களின் அருளற்ற முகங்களை. பயம் மட்டுமே நீக்கமுறப் பீடித்து வெளிறிப் போயிருக்கிறது. சதா நடுங்கிக் கொண்டிருக்கும் அவர்களின் மூச்சின் அனத்தம் கேட்கிறதா? இவர்கள் நம் தேவனின் பிரார்த்தனைக்கூடங்களில் கூட, பெண்களுடன் சல்லாபிக்கின்றனர். மிகவும் நேர்மையானவன் என்று சொல்லிக்கொள்பவன் கூட, ரகசியமாக அவளின் மாமிசத்தின் ருசி அறிந்தவனே!"

    "பார்!...அவர்கள் மாளிகைகளின் வேர்களைப் பிடுங்கி எறிவதற்கே நான் வந்திருக்கிறேன். பார்! ராஜா என்று சொல்லிக் கொள்பவன், தன் சகோதரனின் மனைவியை, நிர்வாணப்படுத்திப் புணர்கிறான். நம் வேதங்களும், தீர்க்கதரிசன நூல்களும் என்ன கூறுகின்றன? எவன் ஒருவன் தன் சகோதரன் மனைவியை நிர்வாணப் படுத்துகிறானோ? அவன் சாவான். இந்தக் கேடுகெட்ட அரசன், சாக வேண்டியவன் தானே? ஒரு துறவியாக இதையே நான் கூற விளைகிறேன், ஆம்! நம் தந்தையின் நாள் வந்துவிட்டது. இவ்வுலகம் பொடிந்து தூள் தூளாகும் பார்!"

    ஒரு முழு நாளும், அக்காட்டுத்துறவியின் கனத்த ஆக்ரோஷமானச் சொற்கள், அவனை முழுக்கடித்திருந்தது. பசி, அச்சம், அநீதி, இழிவு எனும் நான்கு வாயில்கள் வழியாக, உள்ளும் புறமும் ஜெருசலேம் எனும் புனித நகரத்தில் பயணித்தான். வேசியின் நகரம், ரத்தத்தாலும், மாமிசத்தாலும் வேட்கையினாலும் நிறைந்திருந்தது. தேவனின் கோபம் வானின் மேகங்களை இருள் வெளியால் நிரப்பியது. செங்கனல் பொதிந்தக் கனத்தக் காற்று, தீக்கனல்களால் கீழிருக்கும் கீழ்மைகளை, ஒட்டுமொத்தமாக எரிக்கக் காத்துக் கொண்டிருந்தது.

    இரண்டாம் நாள் அவர், ஏதோ தன்னை உலுக்கி உந்துவதைப் போலச் சன்னதமெடுத்துக் கைகளை மேல் நோக்கி உயர்த்தினார். நாணல் புல்லைப் போல உயர்த்தியிருந்தக் கைகள் தங்களுக்குள் பிணைந்து சேர்ந்தும் அதிர்ந்து கொண்டிருந்தது. அது விண்ணிற்கும் மண்ணிற்குமாக ஏறி இறங்கியது. இரண்டையும் இணைப்பதும், மறுதலிப்பதுமான ஒன்றிடம் மன்றாடியது. சொல் எதுவும் எழுப்பவில்லை. ஆனால் சுற்றிலும் அதிர்வுகளின் தேற்றம். வானம் பொசுங்கும் நெடி. அது வெம்மையைத் திரட்டுகிறது. மண், அதனை உள்வாங்கித் தன் தேகமெங்கும் பரப்பி வெளிக்கிறது.

"காலம்! வெளி!"

"கவனி! நீ என்ன கேட்கிறாய்?"

"தெரியவில்லை!"

    "அவளது குரல், அந்த வேசை மகளின் குரைப்பொலி. கொஞ்சம் கூட வெட்கமின்றி, விண்ணுலகில் நம் தந்தையின் இருப்பிடத்தின் வாசலில் நின்று அவள் குரைப்பது உனக்குக் கேட்கவில்லையா? நீ வருகையில் அங்கு  ஜெருசலேமில் அதனைக் கவனித்திருப்பாயே, அங்கு கோவிலைச் சுற்றித் திரியும், பலவிதமானப் பூசாரிகளை. பொய்யர்களை, வீணர்களை. மந்திரம் சொல்லி அலறும் கீழ்ப்படி நிலையிலுள்ள பூசாரிகள், இறைவனிடம் நேரடியாகப் பேசி அற்புதங்கள் நிகழ்த்துவதாக, மக்களை ஏமாற்றிப் பணம் பிடுங்கும் மேல் நிலைப் பூசாரிகள், எழுத்தும், சொல்லும் அறிந்து வைத்திருந்து, வழிபாட்டினை மக்களுக்கு எடுத்தியம்பும், பொய்கள் கூறி அவர்களின் நம்பிக்கைகளைக் காசாக்கும் பூசாரிகள், சடங்குகள் செய்யும் பரிசேயர்கள் என ஒரு பெரும் கூட்டம் வாசலில், வியாபாரம் செய்து கொண்டிருக்கிறது. இவ்வுலகத்தின் ஆட்டங்களும், துடுக்குத்தனங்களும் வெகு நாட்கள் செல்லாது. தாங்கிக் கொண்டிருக்கும் கண்ணிகள் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து கொண்டிருக்கின்றன. அவனது பொறுமையின் கணங்கள் முடிகின்றன. அவன் எழுவான். தனக்கு முன்னே ஆத்திரமும், பின்னே தீ, வாதைமற்றும் பைத்தியம் எனும் மூன்று பேய்களுடன் அவன் வருகிறான். பெரும் பெரும் மலைகளை மிதித்து ஒரு காட்டாற்றினைப் போல அவன் இப்பூமிக்கு இறங்குவான். இக்கோவில் நகரம் சாம்பலாகும், இந்த இழிந்த பூசாரிகள் சாம்பலாவார்கள். இவர்களின் மாந்திரீகமும், அதன் லட்சிணைகளும் சாம்பலாகும், இப்பாதிரிமார்களின், பட்டுப் பீதாம்பரங்களும், தங்கக் கிரீடங்களும் எரிந்து சாம்பலாகும். அழிவற்றது! அழிவற்றது! என சதா துதித்துக் கொண்டிருக்கும், தங்க முலாம் பூசிய இந்த நீண்டுயர்ந்த கோவில் கோபுரங்கள் எரிந்தழியும். அனைத்தும் எரிந்து மட்கி சாம்பல் துகள்களாய் மீளும். ஜெருசலேம்! ஜெருசலேம்! நீ எங்கிருக்கிறாய், என் அருமை வேசி மகளே? என் கைவிளக்கினைப் பிடித்துக் கொண்டு, தேவனின் இருள்முடுக்குகளினுள் செல்கிறேன், அங்கு அனைத்தும் புழுதிப்படலமாக, மண்ணோடு மண்ணாகக் கரைந்து போயிருக்கும். என் கத்தலுக்கு, எதிரிடையாக காகங்கள் அங்காங்கு கரைந்து, கூட்டாக அழுகிய மீந்த உடல்களைத் தின்று கொண்டிருக்கும். நிணம் காயாத எலும்புகளும், மண்டை ஓடுகளும் என் முழங்கால் அளவு குவிந்து கிடக்கும். என்னையறியாது நான் அழுது கொண்டிருப்பேன். நான் என் கால்களால் விலக்கி முன்னே செல்கிறேன். கீழே குனிந்து சற்று நீண்ட ஒரு ஒற்றை எலும்பை எடுத்து, குழலாக்கி என் தந்தையின் மாட்சிமையைப் பாடத் தொடங்கினேன். அச்சங்கீதத்தின் இசைவு பெருகிப் பெருகி என்னைச் சுற்றிய நிலம் மொத்தமும் பரவசத்தில் நடனமாடிக் கொண்டிருந்தது.

    அந்த நாள் முழுதும், இருளடைந்திருந்தது. ஒளியும் கூட இருளைக் கூடியிருந்தது. அடங்காத அத்துறவியின் சிரிப்பொலி. ஜீசஸ் அவர் காலடிகளில் கிடந்து அழுது கொண்டிருந்தான். தீ! வாதை! கிறுக்கு! எனும் பேய்களின் பிடியில், பிணக்குவியல்களாய் நிரம்பி இருக்கும் மண்ணில் புழுக்களும், பூச்சிகளும், மாமிச உண்ணிகளும், மனித உடல்களை, மூர்க்கமாக உண்டு செரித்தன. 

    "வேண்டாம்! வேண்டாம்! ஏன்? நமது இரட்சிப்பின் நாள், அன்பின், கருணையின், களிப்பின் நாளாக இருக்கவில்லை, அதற்கான சிறு தொடுகையைக் கூடவா, நம் தந்தை நமக்கு அருளவில்லை!" ஜீசஸ் பொறுக்க முடியாது, கைகளால் தரையில் அறைந்தான்.

    துறவியின் பார்வை வான் நோக்கியிருந்தது. விண்மீன்களின் பரிசுத்த ஒளி. வானிற்கும் மண்ணிற்குமான இடைவெளி கூடிக் கூடிச் செல்வதைப் போல மயக்கு. ஊளை, சிறகடிப்புகள், கனைப்புகள், பூச்சிகளின் நிலையற்ற அரவம், காற்றின் ஜில்லிப்பு, பகல் முழுதும், எரிந்து வெந்த மண் திரும்பக் குளிர்ந்துத் தன்னைப் புதுப்பிக்கையில் உருவாகும் வாசனை எனப் பாலை நிலத்தின் அனைத்தும் உயிர்த்தன்மை கூடியிருந்தது. ஜோர்டான் நீரோட்டத்தின் நெகிழ்வு, நாணல் வெளிகள் அசைந்து அசைந்து, அந்த நீர்மையைச் உட்கிரகித்துஅத்துவான வெளியை நோக்கித் தெளிக்கும் துமி, காற்றினுள் நுழைந்து அதன் குளிர்ச்சியை தூரதூரத்திற்குப் பரப்பிக் கொண்டிருந்தது. 

    " நீ நம் மூதாதையர்களின் தீர்க்கதரிசனத்தை அறிந்தவன் தானே! நமது மீட்பர்களின் வருகை தீயாலானது. அவன் முதலில் நம் உடல்களை அழிப்பான். நாம் வெந்து சாவோம். விதைப்பதற்கு முன்னானப் பண்படுத்துதல் அது. நம் நிலங்கள் அனைத்தும் நெருப்பிட்டுக் கரியாகும். களைகளும் முட்புதர்களும் வேரோடுப் பிடுங்கி எரியப்படும். இந்தப் பொய்யையும், இழிவையும், அநீதியையும் வேறெப்படித் துடைக்க முடியும். பொய்யர்களை, வீணர்களை, மனிதத்தன்மையற்று நடந்துகொள்பவர்களை அழிக்காமல் எப்படி இந்தப் பூமியை சுத்தமாக்க முடியும். பயக்காதே! கவலையுறாதே! இது சுத்தமாக்கப் படவேண்டும். புதிய விதை, பரிசுத்தமான அந்நிலத்தில் முளைக்கப் பண்ணுவோம்!"

    இரண்டாவது இரவும் கடந்தது. ஜீசஸ் வாய் திறக்கவில்லை. மூன்றாவது இரவு அருளப்படட்டும். அந்த நாளில் தன் கேள்விக்கானத் தீர்வு கிடைக்கும் என்று அவன் நம்பினான்.

    மூன்றாவது இரவு, துறவி ஒரு பாறைக் குன்றத்தில் சம்மணமிட்டு மோனத்தில் அமர்ந்திருந்தார். வெறுமனே எதிரே அமர்ந்திருந்த ஜீசஸை நோக்கினார். அவனது உடல் முழுதும் பார்வையால் துளைத்தார். பின் தலையை அசைத்துக் கொண்டு வேதனையுடன் உள்முகமானார். அவரது ஆழந்த சுவாசத்தைத் தவிர்த்து அங்கு எந்த அனக்கமுமில்லை. நட்சத்திரங்கள் முளைத்துக் கொண்டிருந்தன. வானம் ஒரு மாபெரும் நதி போல நகர்ந்து கொண்டிருந்தது. பூமியின் ஒளியினால் அதன் நீர்மை மின்னி மறைவதே, நட்சத்திரத் திவலைகளாக மினுங்கியது. துறவியின் கண்கள் நிலைத்திருந்தது. அது வானின் சமிஞ்சைகளுக்குப் பதில் சொல்வதைப் போல வெவ்வேறு நிறம் மாறி பளபளத்தது. வெளிச்சம் நீள் அலகினைக் கொண்டப் பறவையினைப் போல மெல்ல சிறகுகள் ஒடுக்கி அவர்களைச் சுற்றி அமர்ந்தது. ஒளிரும் அவரது நெற்றி, சுருக்கங்கள் அடர்ந்து தீர்க்கமாகியது. இறுதியில் வானம் ஒளி கூடி, இருள் திட்டுத்திட்டுக்களாய்க் கரைந்து மறையத் தொடங்கியது. விடியலின் சுகந்தம் நிலத்தில் பரவியது. அவர் ஜீசஸின் கைகளை இறுக்கப் பிடித்துக் கொண்டு, அவன் பதற்றமுறும் கண்களை ஆழமாக நோக்கினார். சட்டெனக் கசப்புடன் தலை திருப்பினார். " நாணல் வெளியினுள் இருந்து நீ என்னை நோக்கி வருவதைப் பார்த்த அந்தக் கணம், என் அகம் ஒரு இளங்கன்றினைப் போல என்ன செய்ய என்று அறியாது துள்ளிக் குதித்தது. சிவந்த தலை முடி கொண்ட மேய்ப்பன், டேவிட்டை, சாமுவேல் பார்த்த அதே தருணம். அவன் எவ்வாறு உணர்ந்திருப்பான்? இதே போலத் தான் அவனது இருதயமும் துடித்ததா? ஆனால் தெரியவில்லை. இது என்ன? என்ன மாதிரியான உணர்வு என்று என்னால் விளக்க இயலவில்லை. ஆனால் இந்த இருதயம் ஒரு சதைப்பிண்டம். அது சதையையே நேசிக்கும். எனக்கு அதில் எந்த நம்பிக்கையுமில்லை. உன்னை முதல் முதல் பார்த்ததிலிருந்து உணர்கிறேன். நேற்று இரவும் அதுவே தோன்றியது. உன்னை ஆழமாக நான் சோதிக்கும் பொழுதெல்லாம், உன் கைகளைக் காணும் பொழுதெல்லாம் அது ஒரு தச்சனின் கைகளைப் போல இல்லை. ஒரு மீட்பனின் கைகளைப் போலவும் இல்லை.  மிருதுவும், உவகையும் அக்கைகளில் பொங்கி வழிகின்றன. அது பிள்ளையை அரவணைக்கும் தாயின் கைகளைப் போல, பாதுகாப்பும், கருணையும் மிக்கது. எப்படி இக்கைகளால் இந்த வலுவானக் கோடாரியைப் பிடிக்க முடியும். உன் கண்கள், அது ஒரு மீட்பனின் கண்கள் அல்ல. அது ஏன் இப்படி அல்லாடுகிறது. அதன் பதற்றம், அலைவுகள், அது பரிவுடன் என்னைப் பார்க்கிறது. அக்கண்கள் உண்மையில் என் அமைதியைக் குலைக்கிறது. ஒரு மானுடக் கண்கள் போலவே அது இல்லை. என்னால் உண்மையில் என்ன செய்ய என்று முடிவெடுக்க முடியவில்லை. தந்தையே! உன்னுடைய வழிகள் குழம்பியும், இருண்டும் இருக்கிறது.  ஒரு மென்மையானக் குஞ்சுப் பறவை, அநீதிக்கு எதிராக இவ்வுலகை, நெருப்பிலிடப் போகிறதா? நான் சதா வானத்தை உற்று நோக்கியிருந்தேன். ஒரு மின்னல் வெட்டாக, இடி முழக்கமாக, ஒரு கழுகினைப் போல இல்லையேல் ஒரு காகத்தைப் போல அல்லாது, ஒரு வெளிர்ந்த குஞ்சுப் பறவையினைக் கொண்டு நீ உன் வார்த்தைகளை எனக்களித்தாய்! கேள்வி கேட்பதாலோ, எதிர்ப்பதாலோ என்ன பயன்? உனக்கென்ன விருப்பமோ அதை நீ செய்யப் போகிறாய்?" அவர் தன் கைகளை விரித்து ஜீசஸைத் தன் உடலுடன் இறுக்கி வைத்துக் கொண்டார். அவனது நெற்றியிலும், இரு தோள்களிலும் முத்தமிட்டார். " நீயே அந்த ஒருவன் எனில், நான் காத்திருக்கிறேன். நீ நான் எதிர்பார்த்த வடிவத்தில் வரவில்லை. நான் இக்கோடாரியைத் தூக்கிக் கொண்டு நிற்பதன் பயன் என்ன? அல்லது அன்பின் பொருட்டே தேவன் இக்கோடாரியை எனக்களித்தானா? தெரியவில்லை. என்னால் முடிவெடுக்க முடியவில்லை." அவரது குரல் நடுங்கியது. "ஓரு வேளை என்ன நிகழப்போகிறது என்பதற்கான தீர்வை அறியாது நான் மரணிக்கலாம். ஆனால் நான் எனக்கு என் தந்தை வழங்கியதை சரிவரச் செய்திருக்கிறேன் என்று நம்புகிறேன். அதனை விரும்பியே செய்தேன்" அவர் ஜீசஸின் இருகைகளையும் பிடித்துக் கொண்டு ஆதுரத்துடன் பார்த்தார். பாரங்கள் மொத்தமும் இறங்கியிருந்தது. "போய் வா! பாலையில் உன் சொந்தத் தனிமையுடன் கடவுளை அணுகு. உனக்கான சொல்லை உள்வாங்கிக்கொள். ஆனால் இவ்வுலகத்தை தனித்து விட்டு விடாது சீக்கிரம் திரும்ப வா! இறைவனின் ஆணையுடன்!"

    ஜீசஸ் கண்களைத் திறந்தான். ஆனால் உள்முகமாக. ஜோர்டான் நதியின் நீள்வட்ட அலைகள் குமுழியிட்டு அவன் காணும் காட்சிப்படலத்தை நெகிழ்த்தியது. துறவியின் கடுமையானப் பார்வை அகலாது, அப்படியே அவரது உடல் மடிந்து கரைந்தது. மணலில் வரைந்தக் கிறுக்கல்கள், அலைப்பெருக்கில் கரைந்தழிவதைப் போல, அவன் முன் இருந்த வெளி மறைந்தது. சன்னதம் பூண்ட மனித உடல்கள், ஒட்டகங்கள் என்று எல்லாமும் உடைந்து உருகுவது வரை அவன் கண்கள் அகலாது, ஒரு மாயவெளியைக் காண்பதைப் போலத் தன் சொந்தக் காட்சிப்பிழையை அமைதியாக நோக்கிக் கொண்டிருந்தான். எல்லாம் மறைந்த பின், மண்ணும் காற்றும், வெம்மை மிகு ஒளியும் மட்டும் நீக்கமுற நிறைந்திருந்தது. பசி தலைக்கேறி சற்று மயக்கமுற்றிருந்தான். அவனது வயிறு இழித்துப் பிடித்துக் கொண்டது. நினைவுகள், எண்ணங்கள், தேவனின் சொல் என அனைத்தும் மறைந்து பசி எனும் உணர்வு, ஒரு தீயைப் போல அவனது உடலைப் பற்றியது. "எனக்குப் பசிக்கிறது!" தன் முன்னே இருந்தச் சிறிய பாறையிடம் முறையிடுவதைப் போலச் சொன்னான். தன் நீண்ட பயணத்தில், தான் உண்ட அத்தனை உணவுகளின் மணமும், சுவையும் அவனைக் கிளர்த்தியது. வரும் வழியில், தனக்கு உணவளித்த மூதாட்டியின் நரம்போடியச் சிறியக் கைகளை நினைத்தான். ரொட்டியின் மணம் நாசி நிரப்பியது. புளிப்பின், இனிப்பின் களிப்பு.  நாக்கினால் உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டான். ஊற வைத்த் ஆலிவ் பழங்கள்,  ஜென்னசரேட் நதிக்கரையில், துடிக்க துடிக்கப் பிடித்து சுட்டெடுத்துத் தனக்குத் தந்த சுவை குன்றா மீன்களின் ருசி, நுரைத்துப் பொங்கும் திராட்சை ரசத்தின் இனிய நறுமணம், மாதுளையின், பேரிச்சையின் அடி நாக்கில் தொற்றிக் கொள்ளும் இனிப்பு என, சுவைகளின் ரீங்காரம் அவனைச் சுழற்றியது. பசி எனும் ஒற்றை உணர்வைத் தவிர எதுவுமின்றி, கூசும் கண்களைச் சுருக்கி தூரத்தே வெறித்தான். அவனுள் குமையும் நெடிகள் இன்னும் பசியைக் கூட்டியது. ரத்தமும், மாமிசமும் எலும்பும் கொண்ட தன் சொந்த உடலைத் தவிர, பசிக்கு உணவாக ஏதுமற்ற நிலம், திக்கற்ற வானம். இரண்டிற்குமிடையில் ஓடிக் கொண்டிருக்கும் அந்தர நதியில், பசி எனும் சொல், ஒன்றாய் பலதாய், விரிந்து விரிந்துக் காணும் அனைத்தையும் விழுங்கி விடும் ஆக்ரோஷத்துடன் குமிழியிடுகிறது.

    தொண்டை எரிந்து அடைத்தது. மெல்ல வலியுடன் தன் உமிழ்நீரை வீச்சமான மணற்துகளுடன் விழுங்கிக் கொண்டான். உலகில் ஓடும் அனைத்து ஆறுகளின் நீரையும் குடித்தாலும் தீராத தாகம். வானிலிருந்து இறங்கி, பாறைகளையும், குன்றுகளையும், மணல் மேடுகளையும், பள்ளங்களையும் தாண்டி, இஸ்ரவேலத்தின் நரம்புகளின் வழி நிறைந்து, பல்வேறு கிளைகள் கிளைத்து இறுதியில் சாக்கடலில் கரைகிறது, இந்நிலத்தின் நீர். கிளம்பும் முன் ஜோர்டான் நதியில் கை நிறைய அள்ளிக் குடித்தபின் இங்கு வரும் வரை அவன் ஏதும் அருந்தியிருக்கவில்லை.பசியும் தாகமும் இணைந்து அவன் நாக்கை கசப்பாக்கியது. வெளிச்சத்தில் கலங்கிய கண்களைக் கசக்கித் துடைத்தான். சற்றே தொலைவில், பழுத்து நெழியும் வெயிலினுள் இருந்து இரு கருப்பு நிற முயல்கள் தத்தித் தத்தி அவன் அருகே வந்தது. இரு கைகளையும் பின்னால் பிடிமானமாக வைத்துக் கொண்டு சாய்ந்து அமர்ந்திருந்த அவன் கால்கள் வழி, இரு தோள்களிலும் பற்றி ஏறிக்கொண்டது. ஒன்று தண்ணீரைப் போலக் குழுமையாகவும், மற்றொன்று ரொட்டியினைப் போல மிதமான சூட்டுடன், புளிப்பு மணத்துடன் இருந்தது. சட்டென நிமிர்ந்து அமர்ந்தவன், வெறியுடன் அவைகளைப் பிடிக்க முயல்கையில், அது காற்றில் புகையாகக் கரைந்து மறைந்தது.

    அவன் கண்களை மூடிக் கொண்டான். பசி, தாகம் எனத் தன்னுள் உருளும் வலிகளின் பிடிமானங்களைத் தளர்த்த முயன்றான். தன்னிடம் போக்கு காட்டிக் கொண்டிருந்த மனத்தைப் பிடித்து இருத்தினான். அதன் சிதறிச் செல்ல முயலும் சொல்லை அடக்கி, ஒற்றைச் சொல்லாக்க முயன்றான். எண்ணங்கள் போதமற்றுக் குழுமியிருந்த வெளி சட்டென ஒற்றைச் சொல்லைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தது. மந்திரம் போல அச்சொல்லையேத் திரும்பத் திரும்ப முனகினான். சொல்லின் கூர்மை கூடக் கூட, உணர்வுகள் சுருங்கி, உடல் முழுதும் அதனைப் பிரதிபலித்து அதனுள் அடங்கியது. "மீட்பின் சொல்! தேவன் எனக்கருளிய ஒற்றைச் சொல்! அவன் சர்வ வல்லமை படைத்தவன் அல்லவா! ஏன்! அவன் அதனை நிகழ்த்தவில்லை. மானுடர்களின் இருதயத்தில் தன் தொடுகையால், இந்த மலர்ச்சியை அற்புதமாக அவனால் செய்திருக்க முடியுமே?. ஒரு தாவரத்தின் வெற்றுத் தண்டுகள் இலை துளிர்ப்பதைப் போல, ஒரு மாபெரும் புல்வெளி பச்சையே உடலாகப் பூத்துக் குலுங்குவதைப் போல, முட்களிலிருந்து பூவை மலரவைப்பதைப் போல, எளிதான காரியம். ஏன்? மனிதனின் ஆழத்திலிருந்து, வேர் பிடித்து ஒரு பரிசுத்தமான மலர்ச்சியை அவரால் தோற்றுவிக்க முடியாதா, என்ன?"



வியாழன், 22 டிசம்பர், 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -80

     


    The Last Temptation of Christ - Nikos Kazantzakis

    ஜீசஸ் திரும்பவும் நதியைக் கவனித்தான். முன்னே வியாபித்துப்படரும் மண் பாறைக்குன்றங்கள், ஒன்றிலிருந்து ஒன்றாக ஊர்வனவற்றின் லாவகத்துடன், மேலும் கீழும் இறங்கி ஏறிக் கொண்டிருந்தது. எங்கும் நீக்கமுற நிறைந்திருந்தப் புழுதி, அதன் அடங்காத ஓலம். கீழே நின்று கொண்டிருந்த மக்கள் குழாம். அவர்கள் ஒவ்வொருத்தரிடமும் நிலையாக இருந்த அமைதியின்மை. தூரேக் கிடக்கும் சாக்கடல். தன் சொந்த நிழல், நதியின் அலையோட்டத்தில் நெழிந்தும், உடைந்தும் பின் சேர்ந்தும் உருவாகிக் கொண்டிருந்த வடிவமின்மை என்று ஒன்றொன்றாக அவனுள் காட்சிப்புலம் குறுக்குவெட்டாய்ச் சிதறிக் கலங்கியது.

    "எவ்வளவு ரம்மியமானச் சூழல், இந்நதிக்கரையில் காலமற்று அமர்ந்திருக்கிறேன். சதா அலையடித்துக் கொண்டிருக்கும் நீர்மையில்  என் நிழல் உருவின் தோற்ற மயக்கங்கள், வழியெல்லாம் பசிய மரங்களின் தொய்வற்றக் காற்று, அதற்குப் புறத்தே நாணல் வெளியின் முடிந்தேவிடாத இறைஞ்சுதல். பறவைகளின் சீழ்க்கை, சிறகடிப்புகள். இரவு நெருங்குகையில், விண்மீன்கள், தங்கள் சிறகுகள் ஒடுக்கி, நதிமரத்தில் கூடணைகின்றன. நீர்மையின் குமிழினுள், அதன் மிணுக்கங்களின் தெறிப்பு, நீள் கோடுகளாய் நெழிந்து, விளிம்புகளில் அலைக்கரங்களால் மண்ணைப் பற்ற முயன்றுப் பின்வாங்குகின்றன. நானும் ஒரு சின்னஞ்சிறிய விண்மீனைப் போல நதியினுள் பாய்ந்து விடவேண்டும். என் உடல் ஒரு நீள்வட்ட நீர்க்குமிழாய் உருமாறி, நதியின் ஓட்டத்திற்கேற்ப, நானும் உடைந்தும் கோர்த்தும், சுழன்றும், சலனித்தும், விளிம்பினிலிருந்து மறுபடியும் உட்புகுந்து என விளையாடிக் கொண்டே இருந்தால் எப்படி இருக்கும். ஆனால் வேண்டாம்! என்னை ஆக்கரமிக்க முயலும் இந்நிலத்தினால் விழுங்கப்பட்டு விடக்கூடாது...."ஜீசஸ் தன்னுள் திமிறும் எண்ணங்களுக்கு கொடுக்க முயன்ற வடிவங்களின் தோற்றங்கள் சட்டென்று அழிந்து மறைந்தது.

    தலையை இருபுறமும் உதறிச் சமநிலை படுத்த முயன்றான். தன்னுள் உருவான ஆசையின் கொதுப்புகள் அவனைக் குலைக்க முயல்வதாய் நினைத்தான். சட்டென்று தலையை நதியின் பார்வையிலிருந்து திருப்பினான். அவசர கதியில் வேகமாக, வெற்றுப் பாறைப் பிளவுகள் பதிந்த நிலத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான். செந்தாடிக்காரன் கரையின் மற்றொரு ஓரத்தில் நின்று கொண்டு, அவனை வெறுமனே அதிருப்தியுடன் உற்று நோக்கினான். இன்னும் அவனால் நம்பமுடியவில்லை. எந்த நேரமும் இந்தப் பாவப்பட்ட ஜென்மம் தன் பாதையை விட்டு எப்படியும் விலகிவிடுவான் என்று அவன் உறுதியாக நம்பினான். தன் மேலங்கியின் கனத்த அடிப்பகுதியால் முகத்தை முற்றிலுமாக மறைத்துக் கொண்டு, அவனால் பார்வையிட முடியாத தொலைவிலிருந்து அவனைப் பின் தொடர்ந்து சென்றான்.  சாம்பல் பாறை நிலத்தைத் தாண்டிய பின், மண்ணைத் தவிர ஏதும் அற்ற நிலவெளி, அது முடிவேயற்ற வெற்று நிலம். உயிர்கள் கூட இருப்பதற்கு சாத்தியமற்ற அந்நிலத்தின் எல்லைதொடங்கும் இடம் வரை அவர்கள் பயணப்பட்டார்கள். ஜீசஸ் அதனுள் இறங்குவதற்கு முன்னே, செந்தாடிக்காரன், அவன் முன் மூச்சிறைக்க வந்து நின்றான்.

    "டேவிட்டின் மகனே! நில்! எதனால் என்னை இவ்வாறு நீ விட்டுச் செல்ல முனைகிறாய்?" 

    "யூதாஸ், என் அன்பனே!" மன்றாடும் தொனியில் ஜீசஸ் அவனைப் பார்த்தான். "வேண்டாம்! சகோதரா, இதற்கு மேல் நீ வராதே. நான் தனித்துச் செல்ல வேண்டும்."

    "நான் உன் ரகசியத்தை அறிந்து கொள்ள வேண்டும்." சற்று முன்னேறி அவனை நோக்கி வந்த யூதாஸ் பதிலுரைத்தான்.

    "அவசரப்படாதே! நண்பா, உனக்கான நேரத்தில், நீ அதனைச் சரியாகப் புரிந்து கொள்வாய். என்னால் இவ்வளவு தான் இப்பொழுது சொல்ல முடியும். கவலைப்படாதே, சகோதரனே! எல்லாம் சரியாகும். நம்பு!"

    "எல்லாம் சரியாகுமா? இந்த வெற்று வார்த்தைகள் என்னை சமாதானப்படுத்தும் என்று நீ நினைக்கிறாயா?, ஒரு ஓநாயின் பசி, இம்மாதிரியானச் சொற்களில் அடங்காது. ஒருவேளை அது உனக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அதனை நான் நன்றாகவே அறிவேன்."

    "என் மேல் உண்மையிலேயே நீ அன்பு கொண்டிருந்தால், காத்திரு. ஒரு மரத்தினைப் போல. விதை துளிர்த்துக் காய்த்துக் கனியாகும் வரை அது நிலத்திலிருந்து வான் நோக்கிக் காத்திருக்கும் மன்றாட்டினைப் போல!"

    " நான் மரமில்லை. ஒரு மனிதன்," மறுப்புடன் ஜீசசின் அருகில் வந்தான். " நான் மனிதன், மட்டுமல்லாது நம் செயல்களை அவசரமாகச் செய்தாக வேண்டியுள்ள நிர்பந்தம் உள்ளது. உனக்கேத் தெரியும், நான் என் சொந்த விதிகளை மட்டுமே நம்புவேன். அதுவே என் வழி."

"நம் தேவனின் என்றைக்கும் விதி ஒன்றே! அது மரமானாலும் மனிதனாலும் சரி,  யூதாஸ்."

    யூதாஸின் வெறுப்பும் கசப்பும் மட்டுமே கொண்ட கண்கள் மட்டுமே வெளித்தெரிந்தது. சொற்களினால் அவனுக்கு இதுவரை கிடைத்த நம்பிக்கையின்மை, ஒரு இருண்ட நிழல் உரு போல, அவன் தோள்களில் அமர்ந்திருக்கிறது. இன்னும்  இச்சொற்களின் பீடிப்பு தன்னை விட்டபாடில்லை என்று தனக்குள் நினைத்துக் கொண்டான்.

"ஓ! அப்படியா? அந்த விதி என்ன சொல்கிறது?"

    யூதாஸ் தன் கைமுஷ்டியை இறுக்கிக் கொண்டே அவனைப் பார்த்துக் கேட்டான். 

"காலம்!"

    அவன் அறிவான். உண்மையில் வேறு பதில்கள் எதுவும் இந்த மொன்னையான ஆட்டிடம் இருந்து கிடைக்கும் என அவன் எதிர்பார்க்கவில்லை. உண்மையில் இந்தக் காத்திருப்புகளின், பலிகளும், வாதைகளும், நோய்மையும்தான் அவனை ஒரு வனமிருகம் போல இப்போது ஆக்கியிருக்கிறது. கடவுளின் இந்த விதி என்பது மிகவும் மெதுவானது. உண்மையில் அப்படி ஒன்று நிகழ்கிது என்று கூட அவன் நம்பவில்லை. அதனால் கடவுளின் விதிக்கு எதிராகத் தன் சொந்த விதியை உருவாக்கிக் கொண்டான். அது நேரெதிரானது. காலம்! அதன் காத்திருப்புகள்! என்பதை அது நம்புவதில்லை. அதற்குப் பதிலாக செயல் புரிவதே, உறுதியானதும் விரைவானதுமான வழி என்று அவன் நினைத்தான். இதுவரை நிகழ்ந்த இழப்புகளுக்கெல்லாம் பதில் சொல்வதன் அவசரம் அவனிடம் தீர்க்கமாக இருந்தது.

    "நம் தேவன் மரணிப்பதில்லை. அவன் இன்னும் எத்தனை காலம் வாழ்வான் என்றும் அறுதியிட்டுக் கூற இயலாது" அவன் வெறியுடன் கத்தினான். "அழிவேயற்றவனல்லவா அவன்! அவனால் பொறூமையுடன் காத்திருக்க முடியும். ஆனால் நான்! நான் ஒரு மனிதன். உனக்கு ஒன்று சொல்கிறேன், கேள்! நான் என் மனதில் நினைத்திருப்பதை என் சாவுக்கு முன்பு பார்த்திருக்க வேண்டும். வெறுமனே பார்த்தல் அல்ல, அதன் ஒவ்வொரு அங்கங்களையும் என் சொந்தக் கைகளால் தொட்டு உணர வேண்டும். என்னுடைய அவசரம் உனக்குப் புரிகிறதா. இப்பொழுதும் நாம் விரைவு கொள்ளவில்லையெனில், உண்மையில் எனக்குத் தெரியவில்லை, நீ என்ன மாதிரியான நம்பிக்கையில், காத்திருக்கச் சொல்கிறாய் என்று!"

    "நிச்சயமாக நீ அதனைப் பார்ப்பாய்!". ஜீசஸ் தன் கைகளை உயர்த்தி அவனை அமைதிப்படுத்த முயன்றான். " நான் சொல்கிறேன், நாம் அதனைக் காண்போம், நம்மால் அதனைத் தொட்டு உணர முடியும். யூதாஸ், சகோதரா! நம்பிக்கையோடு இரு. விடை பெறுகிறேன். நம் தேவன், இப்பாலை நிலத்தினுள் எனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறான்."

" நானும் உன்னோடு வருகிறேன்:"

"இந்த மாபெரும் பாலைவெளி நம் இருவரையும் ஏற்றுக் கொள்ளாதா என்ன?"

    ஒரு வேட்டை நாயைப் போல செந்தாடிக் காரன், தன் எஜமானனின் சொற்களுக்காக வெறியுடன் நின்று கொண்டிருந்தான். ஆனால் எந்தப் பலனும் இல்லை. நிலத்தில் குத்திட்டிருந்த அவனது பார்வை சற்றுத் தளர்ந்தது. திரும்பலாம் என்று முடிவெடுத்தான். திரும்ப, ஜோர்டான் நதியை நோக்கி விரைவாகச் செல்லத் தொடங்கினான். பராபஸுடன் மலைகளினுள், பதுங்கியிருந்ததும், தீவிரமாக எதிரிகளைக் கொல்வதைப் பற்றிய வியூகங்களை வரைந்ததும், அதைப் பற்றி விவாதித்துக் கொண்டதும் பற்றி நினைத்துக் கொண்டுத் தனக்குள் தானே பிதற்றினான். "இறைவனுக்கு நன்றி! பராபஸ்! அவனல்லவா! தலைவன். என்ன மாதிரியானச் சுதந்திரம் முழங்கும் வெறிகொள் சூழல் அது. இஸ்ரவேலத்தின் கடவுளின் பாதுகாவலன், ஒரு போர்வீரனாகத் தானே இருக்க வேண்டும். கடினமும், மாட்சிமையும் பொருந்திய என் தலைவன். அவனைப் போல ஒரு தலைவன் வேண்டும் நமக்கு. இந்த ரோமானியர்களின் கொட்டத்தை அடக்கி, இஸ்ரவேலத்தை விடுதலை அடையச் செய்ய நாம் அவனுடன் துணை நிற்கலாம். ஆனால் நான் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறேன். எதற்காக, இந்தப் பேதையைப் போன்ற மனிதனின் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கிறேன். ரத்தத்தைக் கண்டாலே அலறும், சதா அன்பு! அன்பு! என்று பிதற்றும் பித்தன்! தெரியவில்லை! பொறு! கொஞ்சம் பொறு! இவன் இப்பாலை வெளியிலிருந்து  மீண்டுத் திரும்பி வந்து நமக்காக என்ன கொண்டு வரப்போகிறான் என்று பார்க்கலாம்!"


புதன், 21 டிசம்பர், 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் - 79

    


The Last Temptation of Christ - Nikoz Kazantzakis

    அந்தக் குகைப் பிளவைத்தாண்டி சற்று தொலைவில் ஒரு சிறிய பாறைத்துண்டத்திற்குக் கீழே மண்ணில் குத்துக் காலிட்டுத் தனித்து அம்ர்ந்திருந்தான் அவன். மற்றவர்களைப் பார்க்கவோ, இல்லை அவர்களிடம் பேசவோ அவன் விரும்பவில்லை. கால நேரமற்று அமர்ந்திருந்தவன் தன்னை அறியாமலேயே உறக்கத்தில் அயர்ந்தான். சரியாக அந்நேரத்தில் அவன் அத்தீர்க்கமானக் குரலினால் ஆட்கொள்ளப்பட்டான். சிதறிச் சிதறிக் குழறும் பாலையின் காற்று போல அது அவன் செவிகளில் அறைந்தது.

"தீ! சோடோம்! கொமோரோ! தயாராகு!"

    சட்டென்று விழிப்புற்று எழுந்து அமர்ந்தவன், யூகிக்க முடியாத சொற்களின் அதிர்வலைகள், அவனைத் தாண்டிச் சென்றதை உணர்ந்தான். பின் இரவுப் பறவைகளின் சிறகடிப்புகளாக, அலறல்களாக, காற்று வேகமெடுக்கையில், புழுதி கிளப்பும் சப்தங்களாக, ஓநாய்களின் ஊளையாக, நதியின் கரைகளில், காற்றின் திசைவேகத்திற்கு வளைந்து உராய்ந்து பரவும் நாணற்புற்களின் ஓசையாக என அச்சொற்கள் குவிந்தும் சிதறியும் உருமாறிக் கொண்டே இருந்ததைக் கூர்ந்து கவனித்தான். பின் தன்னிலையற்று, நதிக்கரையை நோக்கி, உந்தப்பட்டவன் போல, ஓடத் தொடங்கினான். நதியின் நீர்மை அடிப்பாதங்களில் புலப்பட்டதும், வேகம் கூடியது, நதியின் நடுப்பகுதிக்கு வந்தவன், விம்மிக் கொண்டிருக்கும் தலையை நீரினுள் முக்கினான். தீயை அள்ளிக் கொள்வதைப் போலச் சன்னதமெடுத்துத்,  தன் உடல் முழுதும் வெறியோடு நீரினால் அணைத்துக் கொண்டான். பசித்த மிருகம் இரையின் வயிற்றுத் தோலைக் கடித்துப் பிளப்பதைப் போல, நதியின் தோலைக் கிழித்து அதன் ஆழ்ந்த வெம்மையிண் துடிதுடிப்பினுள் தன்னைப் புதைத்துக் கொள்ள முயல்வதாய் இருந்தது.

    "எப்படியும் அவன் இங்குதான் வரவேண்டும். வேறு வழியில்லை. அவனுக்கு பிடிக்கிறதோ இல்லையோ, நான் அந்த ரகசியத்தை அவனிடமிருந்துப் பிடுங்கிக் கொள்ளத்தான் வேண்டும்." என்று தனக்குள் கருவிக் கொண்டான். 

    ஜீசஸ் மலைக் குன்றங்களைத் தாண்டி முன்னேறி வருவது ஒரு புள்ளியாகத் தெரிந்தது. யூதாஸ் அங்கிருந்து கிட்டத்தட்ட ஒரு ஓநாயைப் போலவேத் தன் கையில் இருந்தக் கவைக் கோலை அழுத்தமாக ஊன்றிக் கொண்டு அவனை நோக்கி விரைந்து ஓடினான். மற்றவர்களும், ஆரவாரத்துடன் அவனை வரவேற்க ஓடினர். அருகில் வந்ததும், அவனது கை, கால்கள், உடல் எனத் தடவிக் கொடுத்தனர். அணைத்து முத்தமிட்டனர். ஜான் தாங்கமுடியாது அழுது கொண்டிருந்தான். ஒரு தோல்பறை போல பம்! பம்! என அவனது அகம், தனது ஆத்மகுருவினைத் தேடி சதா அதிர்ந்து கொண்டிருந்தது. அது கண்ணீர்த்துளிகளாய் ஜீசஸின் பாதங்களை வருடியது. ஆனால் போனவனும் திரும்பி வந்தவனும் ஒருவனல்ல என்பது அவர்கள் அனைவருக்கும் தீர்க்கமாக உரைத்தது. தங்கள் குருவிடம் இன்னதென்று அறிந்து கொள்ள முடியாத ஒரு மர்ம பாவம் ரேகைகளாக முடிச்சிட்டிருப்பதை அனைவரும் உணர்ந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாகவும், கூட்டாகவும் அதுவரை, அந்தக் காட்டுமிராண்டித் துறவியுடன், தங்கள் குருவின் சம்பாஷணைகளை பல்வேறு விதமாகக் கதையாடிக் கொண்டிருந்ததை நினைத்து அத்தருணம் துணுக்குற்றனர். ஆனால் வந்திருக்கும் மனிதன் முற்றிலும் தாங்கள் அதுவரை அறிந்து  வைத்திருந்தத் தன்மையிலிருந்து வேறுபடவில்லை, என்பது ஒன்றே அவர்களை சற்று அமைதி கொள்ள வைத்தது.

    பீட்டரால் இதற்குமேலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. "துறவியே! தயை கூர்ந்து சொல்லுங்கள், திருமுழுக்கிடுபவருடன் தாங்கள் மூன்று பகலிரவுகளாக என்ன உரையாடினீர்கள். தங்களின் அகம் உவப்போடு இல்லை. முகம் வாடி, துக்கத்தில் இருண்டிருக்கிறது. என்னவாயிற்று? "

    "அவர் இன்னும் சிறிது காலமே இவ்வுலகில் இருப்பார்" ஜீசஸ் அமைதியாக அனைவரின் கண்களையும் கூர்ந்து பதிலளித்தான். "அனைவரும் அவருடன் இருந்து, திருமுழுக்கைப் பெற்றுக் கொள்ளுங்கள். நான் போக வேண்டும்"

    "எங்கே செல்லப் போகிறீர்கள்?" நாங்களும் உங்களுடன் வருகிறோம்!" செபெதீயின் இளையமகன், நடுக்கத்துடன் ஜீசஸின் அங்கி நுனியைப் பற்றிக் கொண்டு சிறுபிள்ளை போல அழத் தொடங்கினான்.

    "இப்பயணம் தனித்தது. நான் தனியனாகவே செல்ல வேண்டும். அங்கு நம் கடவுளின் குரலுக்கு நான் செவி சாய்க்க வேண்டும். எனக்கான பதிலை அவன் அருளட்டும்." ஜீசஸ் சலனமின்றிக் கூறினான்.

    "கடவுளுடனா?, எங்கே! இந்தப் பாலைவெளியின் ஆழத்திலா! வேண்டாம். உங்களால் திரும்ப வரவே முடியாது." பீட்டர் சற்று அமைதியிழந்திருந்தான்.

    "நான் திரும்பி வரவேண்டும்!" ஜீசஸின் குரல் தாழ்ந்திருந்தது. "கண்டிப்பாக நான் திரும்ப வந்துதான் ஆகவேண்டும். ஆம்!  நம்புங்கள் சகோதரர்களே! இந்த மொத்த உலகும் ஒற்றை நூலினால் கோர்க்கப்பட்டிருக்கிறது. நம் தேவனின் சொற்களை நான் தனித்திருந்தே அறிதல் அவசியம். எனக்காக அருளப்பட்டது எதுவாயினும் அதனை ஏற்கத் தலைப்படுவேன். நான் திரும்பி வருவேன்" ஒரு வீர முழக்கம் போல, ஜீசஸ் அவர்களை நோக்கிக் கூறினான்.

    "எப்பொழுது? இன்னும் எத்தனை நாட்கள் நாங்கள் காத்திருக்க வேண்டும் துறவியே! பாருங்கள் நீங்கள் எம்மை எப்படி விட்டுச் செல்கிறீர்கள் என்று. நாங்கள் உங்களை இப்படி அத்துவானத்தில் விட்டுக் காத்திருக்க இயலாது. புரிந்து கொள்ளுங்கள். வேண்டாம்!"  அனைவரும் ஜீசஸைப் போக விடாது தடுத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அங்கு வந்த யூதாஸ் மட்டும் எதுவும் பேசாது அனைவரையும், தனித்தனியாக உற்று நோக்கினான். அமைதியாக, ஆழமான வெறுப்புடன் ஜீசஸைப் பார்த்தான். கேலியாகத் தன் தாடியை வருடிக் கொண்டே, சிரித்தான். " பலியாடு! பலியாடு....! இஸ்ரவேலத்தின் தெய்வத்திற்கு நன்றி, அவர் என்னை ஒரு ஓநாயாகப் படைத்ததற்கு" ஆனால் உள்ளூற சிறு குழப்பமும் தயக்கமும் உடனடியாக அவனைப் பீடித்துக் கொண்டது. வேறு எதுவும் பேசிக் கொள்ளாமல், ஜீசஸின் கண்களை மட்டுமே ஆழ்ந்து நோக்கினான். அவனால் உண்மையில் அதனை சகித்துக் கொள்ள முடியவில்லை. சட்டென்று பார்வையைத் தவிர்த்து, முகம் திருப்பி மண்ணை நோக்கிக் காறி உமிழ்ந்தான்.

    "நான் வருவேன்! இறைவனின் விருப்பமிருந்தால், அதுவரை நீங்கள் இங்கேயே காத்திருங்கள். வேறென்ன! ம்ம்! விடைபெறுகிறேன்! என் சகோதரர்களே!"

    கலங்கிய விழிகளுடன், அவர்கள் அனைவரும் மெதுமெதுவாக, ஜீசஸ் பாலையை நோக்கிச் செல்வதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். முற்றிலுமாக உருமாறிப் போயிருந்தத் தங்களின் தலைவரை அவர்கள் ஒருவிதப் பரவசத்துடனும், பதைப்புடன் பார்த்தனர். வழக்கத்திற்கு மாறாக, கால்களைப் புழுதியில் அழுந்தப் பதிந்து, சற்று சாய்வாக முன்னேறிக் கொண்டிருந்தார். கணத்திற்குக் கணம் உருமாறிக் கொண்டே இருக்கும் அவரது உடல் மொழியை அவர்கள் ஒவ்வொருவரும் நினைத்துப் புதிரடைந்தனர். வழியில் குனிந்து ஒரு நாணல் புல்லைப் பிடுங்கிக் கையில் துணைக்கு வைத்துக் கொண்டு, பாறைப் பிளவுகளுக்கு இடைப்பட்ட, நதிக்குக் குறுக்காகப் போடப்பட்ட வளைந்தப் பாலத்தைக் கடந்து கொண்டிருந்தான். சட்டென்று நின்றவன், எதிரே நதியை நோக்கினான். பழுத்த வண்டல் அடர்த்தியை முழுக்கிக் கொண்டு அமைதியாக நகர்வே உடலாகக் கொண்ட நீர்மையின் நீண்டப் பாட்டையை உற்று நோக்கினான்.  அதனுள் நின்று கொண்டிருக்கும் மனிதத் தலைகள். முகங்களின் இருளடைந்த பிரதேசங்களில் குறுக்கு மறுக்காகப் பயணப்பட்டான். நிழல்வெளிகள் அங்காங்கே உலர்ந்தும், உடைந்தும் பொருக்கோடிப் போயிருந்த நதிக் கரைகளில், தங்கள் மார்புகளில் அறைந்து கொண்டு பிரார்த்தனைகளால், பாவங்களைக் கழுவ முயலும், துயர் வடிவங்களின் சன்னதத்தைக் கவனித்தான். சற்றுக் கூன் விழுந்தது போல அவர்களுக்கு மத்தியில், துடியுடன் அதிர்ந்து கொண்டிருக்கும் துறவி, அவர்களை ஒவ்வொருத்தராக நீரினுள் முக்கி எடுக்கையில், அவரின் உடல் நரம்புகள் ஒரு நீண்டத் தந்திக் கருவி போல வானிற்கும் பூமிக்குமாக, அதிர்ந்து விம்மி விம்மித் தன்னிலை இழந்துத் தளர்ந்துப் பின் சுருங்கி நீள்வதை அவனால் நேரடியாக உணர முடிந்தது. அக்காட்டுக் கூச்சல்களினுள் அவன் எதையோ, தொலைந்ததைத் தேடுவதைப் போலக் கூர்ந்தான். அவனால் அதனை எப்படி என்று விளக்கமுடியவில்லை, ஆனால் அவன் அதிருப்தியடைந்திருந்தான். உண்மையில் நம்பிக்கையும் இழந்திருந்தான். அங்கு நிகழ்வதில் எந்தத் தர்க்கப்பாடுகளையும் அவனால் அறிய முடியவில்லை. ஏன் இத்தனைக் கோபம், வெறிக் கூச்சல். எங்குமே அன்பின் நிமித்தத்தைக் கூட உணர முடியவில்லையே! என்று தனக்குள் பிதற்றினான். ஒரு மந்தையானக் குழாம் முடிந்ததும் அடுத்த மந்தைகள் தன்னுணர்வின்றி, அப்படியே நதியினுள் இறங்கித் தங்களை முழுக்கிட்டுக் கொண்டனர். அவர் வானத்தை அத்தனை ஆக்ரோஷத்துடன் வெறித்தார். ஒரு உறிஞ்சுக்குழாய் போல வானத்தின் தயையினை வேண்டிக் கொண்டு நிற்கும் மூர்க்கம் அதை அப்படியே பூமிக்குள் இறக்குவிட வேண்டும் எனும் பதைப்பு, அது நடந்தேற இயலாதத் தன்மையினால் உருவாகும் அமைதியிழப்பு, வெறிகொள்ளல், சன்னதமெடுத்து  மறுபடியும், ஒரு தூற்றல் போலப் பழித்தல். பின் திரும்பவும் முடிவிலிருந்து தொடங்கி, இறைஞ்சுதல், பிரார்த்தித்தல், துக்கித்தல், பாவங்களுக்காக வருந்தி அழுதல் என்றுத் திரும்பத் திரும்ப நிகழ்ந்து கொண்டிருந்தது. ஒருவகையான மன்றாடுதல் மட்டுமின்றி, எதிர்பார்ப்புகளின் திண்மை உடையும் பொழுதெல்லாம், கோபம் தலைக்கேறிக் கொண்டே இருந்தது. அது நீரினுள் இறங்கியது. மண்ணெல்லாம்  நீக்கமற்றுப் பரவி, சர்ப்பம் போல மொலுமொலுத்தது. அவரது குரல் மட்டும் இரவும் பகலுமற்று, அக்காட்டு நிலத்தினை ஆக்கிரமித்து அதிர்ந்து கொண்டே இருந்தது. 

செவ்வாய், 20 டிசம்பர், 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -78

     

The Last Temptation of Christ - Nikos Kazantzakis

    திருமுழுக்கு ஜான் ஜீசஸை, உதடுகள் பொருத்தி ஆழ்ந்து முத்தமிட்டார். அவரின் வலுவானக் கரங்களுக்குள் ஜீசஸ் நடுங்கிக் கொண்டிருந்தான். எரி கங்கு போன்ற அவரின் தனல் ஜீசஸின் அகத்திற்குள் இறங்கியது. "இறுதியாக நான் என் ஆன்மாவை உமக்கு அளிக்கிறேன். நீயே அந்த ஒருவன் எனில், நான் எனக்கான இறுதிச்சொல்லுக்காகக் காத்திருக்கத் தலைப்படுகிறேன். அதே சமயம் இதுவே நாம் சந்திக்கும் கடைசித் தருணம் போல என் உள்ளுணர்வு துடிக்கிறது. ஆம்! இவ்வுலகில் நாம் சந்தித்துக் கொள்ளும் கடைசி சந்திப்பு இதுவாகவே இருக்கக் கூடும் என நான் நினைக்கிறேன்" சன்னதமெடுத்த அவரது கனத்தக் குரல் சூழலின் நிசப்தத்தைக் கிழித்துச் சென்றது. சொல், ஒரு ஆதி ஆயுதம் போல அவர்களுக்கு முன்னானப் பெரு நிலத்தைக் குத்திக் கிழித்து முன்னேறுவதை அவர்கள் இருவரும்  தன் ஆன்மாவின் நெருப்பினால் கேட்டுக் கொண்டிருந்தனர்.

    "ஆம்! நானும் கேட்கிறேன்" ஜீசஸ் மெல்லியக் குரலில் கூறினான். அவனது குரலின் மென்மை, ஒரு சேரக் குழைவும் தீவிரமும் கொண்டிருந்தது."அச்சொல்லை நான் எவ்வாறு அர்த்தப்படுத்திக் கொள்ள, தாழ்ச்சியுறுகிறேன் சகோதரரே! எம்மைப் பெலப்படுத்தும்"

        "உன் உணர்வுகளை மாற்றிக் கொள்ள முயற்சி செய்! இளைஞனே! உறுதியுடனும், திடத்துடனும் பயணப்படு. உன்னுடைய வாழ்வின் கனத்தை என்னால் அறியமுடிகிறது. உன்  புருவங்களிலிருந்து ரத்தம் வழிவதைப் பார்க்கிறேன். முட்களால் தருவிக்கப்பட்டக் கிரீடம் உன் தலையை அழுத்துகிறது. சகோதரா! வலி! வலி! என்று அதிரும் குரலினைக் கேட்கிறேன். தாங்கிக் கொள்! என் அன்பே! உன் முன்னே இருவேறு பாதைகள். ஒன்று மனிதனுக்கானது, அது பண்படுத்தப்பட்டச் சம நிலம். இன்னொன்று தேவனுக்கானது, கடினமானது. கூர்மையானக் கற்களும், வெட்டுப்பாறைகளும், பாளங்களையுமேப் பாதையாகக் கொண்டது. கடினத்தைத் தேர்ந்துகொள். அதுவே சத்தியத்தின் வழி. பயக்காதே! வழிப்பாதையின், சலனங்களினால் பாதிக்காது உனைக் காத்துக் கொள். ஒடுங்குவதும் பின்வாங்குவதுமல்ல, தைரியம்! அது மட்டுமே உனக்குக் காப்பு. அதுவே உன்னை பெலப்படுத்தும். அதுவே தேவனின் வாக்கும், சித்தமும் கூட. ஆனால் ஞாபகம் வைத்துக் கொள். இவ்விரு வழிகளுமே நம் தேவனின் பிள்ளைகள் தாம். ஆனால் தீயே மூத்தது. அதன் பிறகுதான் அன்பு பிறந்தது. அதனால் தீயைக் கைகொள். அது உன்னை வழி நடத்தும். உன் பாதையின் குரலுக்கு, தீயினால் பதிலுறு. நித்தியத்துவமான தேவகாரியம், உனக்குக் கை கொள்ள என் தந்தையிடம் மண்டியிடுகிறேன். முன்னேறு! என் சகோதரா! சத்தியம் உன்னைக் காக்கட்டும்."

    சூரியன் தலைக்கு மேலே சுழன்றெரிந்துக் கொண்டிருந்தது. விளிம்புகள் காண இயலாத, எல்லையற்றப் பாலைவனத்தின் நுனிகளிலிருந்து, கதிர்களின் பாட்டைகள், காற்றில் வளைந்து நெழியும் மணல் பரப்பில் பற்றி எரிந்தது. ஒரு சில யாத்ரீகர்கள் நதியை நோக்கி வந்து கொண்டிருந்தனர். பல நிறங்களிலான, நீண்டத் தலைப்பாகை அவர்கள் கீழை தேசத்தவர் என்று அறிவித்தது. தங்கள் கைகளிலும், கழுத்திலும் தாயத்துகள் அணிந்திருந்தனர். அது காட்டுப்பன்றியின், இல்லை ஏதோ ஒரு வனமிருகத்தின் பல்லாகவோ, இல்லைத் தாங்கள் அழித்தத் தங்களின் எதிரிகளின் கூர்ப்பல்லாகவோ இருக்கக்கூடும்,  கழுத்தில் அவர்களின் பெண் கடவுளர்களின் உருவச்சின்னங்கள் பொருத்திய, உலோகப்பட்டைகளை அணிந்திருந்த அவர்கள் எரிவே உடலாகக், கொடும் பார்வையுடன், மண்ணை வெறித்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்தனர். திருமுழுக்கிட்டு ஞானம் அடைவதே நோக்கமாக துறவியின் இருப்பிடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர். காடே உடலாகக் கொண்ட அவர்களின் வருகையைக் கண்டத் துறவி, தொலைவை நோக்கித் தன் கடும் குரலால் ஊளையிட்டார். அது காட்டின் சமிஞ்சை. அவர்களும் அக்குரலுக்கு எதிர்குரலாக, மிருகலயத்துடன் ஓலமிட்டனர். தங்களின் ஒட்டகங்களைத் தரையில் அமர்த்திவிட்டு அவர்கள் நதியை நோக்கி முன்னேறினர். கருணையற்ற பாலை மண்ணின் குரல் மீண்டும்  எழும்பத் தொடங்கியது. "வருந்து! தாழ்ச்சியுறு, தேவனின் வருகை அமைந்து விட்டது"

    அதே சமயம், ஜீசஸ் தன் துணைவர்கள் தூரத்தே, நதிக்கரையோரம் கால்கள் ஒடுக்கி அமைதியாக அமர்ந்திருப்பதைக் கண்டுகொண்டான். ஆனால் நதியின் ஒவ்வொரு சலனத்திற்கும் அவர்களின் அகம் அதிர்ந்து கொண்டிருந்தது. சரியாக முன்று பகல்களும் இரவுகளுமாக அவர்கள் தங்கள் குருவிற்காகத் தனித்துக் காத்திருக்கின்றனர். ஆனால் இன்னும் அவர் வருகையின் நிமித்தம் கூடத் தெரியவில்லை. திருமுழுக்கிடும் சடங்குகளும் இந்நாட்களில் முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்தக் காட்டுத்தனமானத் துறவி, மீள மீள அவனிடம் பேசிக் கொண்டே இருந்தார். இரவும் பகலுமாக ஊன் உறக்கமின்றி அவரின் சொல், அவனுள் செலுத்தப்பட்டது. குனிந்த தலையுடன் அச்சொல்லை ரத்தமும் சதையுமாகத் தன்னுள் உள்வாங்கிக் கொண்டிருந்தான். ஒரு  வல்லூறைப் போல, கூர்மையானப் பார்வையுடன் அவர், ஜீசஸை உலுக்கிக் கொண்டிருந்தார். ஆனால் ஏன், அவ்விருவரில் ஒருவர் மிகக் கடுமையாகவும், ஒருவர் துக்கித்தும் இருந்தனர். செந்தாடிக்காரன் ஆத்திரம் பொங்க, நதி ஒழுக்கில் கால்கள் சளசளக்க அங்கும் இங்கும் அலைந்தான். இரவு மெல்ல மெல்லக் கரையேறும் பொழுது அவன் ரகசியமாக அந்தக் குகைப் பிளவை நோக்கி சென்றான். அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை அறிந்து கொள்வது அவனுக்கு மிக முக்கியமாக இருந்தது. ஆனால் எப்படிக் கூர்ந்து நோக்கினாலும், அவர்கள் இருவரும் பேசும் முணுமுணுப்புகளைத் தவிர்த்து அவனால் எதனையும் கேட்டுணர முடியவில்லை. அங்கு தன்னைக் கலைத்தலும் அடுக்குதலும் போல, சொற்பிரவாகம் ஊற்றெடுத்து ஓடியது. பேச்சுகளின் அதிர்வுகள் கூட, நிசப்தத்தை ஊடுருவும் நீரலைகளின் மென் சலனம் போல அதிர்ந்தது.  அவனால் இன்னதென்று ஊகிக்க முடியாத ஒரு மர்மம் அச்சூழலை ஆக்கிரமித்திருந்ததை மட்டுமே அவனால் அறிய முடிந்தது. ஆனால் அவன் ஒன்றைக் கவனித்தான். அது ஒற்றைக் குரல். பல சமய்ம் அந்தக் காட்டு மனிதரின் குரலைத் தவிர்த்து வேறு ஒன்றுமே அங்கு நிகழாதது போலத் தோன்றியது. ஜீசஸ் தன்னால் இயன்றவரை, அவரின் சொல் எனும் தடாகத்திலிருந்து தனக்கானப் பாதையைத் தேர்ந்தெடுக்கும், சொல்லினை முக்கி எடுத்துக் கொண்டிருக்கிறான் என்று யூதாஸ் நினைத்துக்கொண்டான். அவன், அருகிருந்த பாறைப்பிளவினுள் அமர்ந்து கொண்டு வானத்தை வெறித்தான். இருளின் ஊடுபாவுகள். மெல்ல மெல்ல தன்னை இழைத்து இழைத்துக் கோர்ப்பத்தை அமைதியின்றிப் பார்த்தான். "எனக்கே என் மேல் வெறுப்பாக இருக்கிறது, வெட்கக்கேடு! என்னை வேண்டுமென்றே அவர்கள் தவிர்த்து விட்டு, இஸ்ரவேலத்தின் விடுதலையைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் அந்த ஞானத்துறவி என்னிடமே,  தன் கோடாரியை அளித்து, இஸ்ரவேலத்தைக் காக்கும் பொறுப்பைக் கொடுத்திருக்க வேண்டும். அவருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமானவனும், பொருத்தமானவனும் என்னைத் தவிர யாருளர் இங்கு. என்னாலேயே இந்நிலத்தின் வலியை உள்ளூற உணரமுடிகிறது. நிச்சயமாக அந்தப் பாவப்பட்ட ஆட்டினால் அதை அறியக் கூட முடியாது. எந்த அவமான பாவமுமின்றி அவன் அனைவரையும் சகோதரர்கள் என்றல்லவா சொன்னான். நாசமாய்ப் போகட்டும். நம்மை வதைப்பவர்களும், நாமும் ஒன்றாம். இஸ்ரவேலத்தவர்களும், ரோமர்களும், கிரேக்கர்களும் ஓரு தாய்ப் பிள்ளைகளாம். பைத்தியக்காரன். சாத்தான் அவர்களை இரட்சிக்கட்டும்."