வியாழன், 22 டிசம்பர், 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -80

     


    The Last Temptation of Christ - Nikos Kazantzakis

    ஜீசஸ் திரும்பவும் நதியைக் கவனித்தான். முன்னே வியாபித்துப்படரும் மண் பாறைக்குன்றங்கள், ஒன்றிலிருந்து ஒன்றாக ஊர்வனவற்றின் லாவகத்துடன், மேலும் கீழும் இறங்கி ஏறிக் கொண்டிருந்தது. எங்கும் நீக்கமுற நிறைந்திருந்தப் புழுதி, அதன் அடங்காத ஓலம். கீழே நின்று கொண்டிருந்த மக்கள் குழாம். அவர்கள் ஒவ்வொருத்தரிடமும் நிலையாக இருந்த அமைதியின்மை. தூரேக் கிடக்கும் சாக்கடல். தன் சொந்த நிழல், நதியின் அலையோட்டத்தில் நெழிந்தும், உடைந்தும் பின் சேர்ந்தும் உருவாகிக் கொண்டிருந்த வடிவமின்மை என்று ஒன்றொன்றாக அவனுள் காட்சிப்புலம் குறுக்குவெட்டாய்ச் சிதறிக் கலங்கியது.

    "எவ்வளவு ரம்மியமானச் சூழல், இந்நதிக்கரையில் காலமற்று அமர்ந்திருக்கிறேன். சதா அலையடித்துக் கொண்டிருக்கும் நீர்மையில்  என் நிழல் உருவின் தோற்ற மயக்கங்கள், வழியெல்லாம் பசிய மரங்களின் தொய்வற்றக் காற்று, அதற்குப் புறத்தே நாணல் வெளியின் முடிந்தேவிடாத இறைஞ்சுதல். பறவைகளின் சீழ்க்கை, சிறகடிப்புகள். இரவு நெருங்குகையில், விண்மீன்கள், தங்கள் சிறகுகள் ஒடுக்கி, நதிமரத்தில் கூடணைகின்றன. நீர்மையின் குமிழினுள், அதன் மிணுக்கங்களின் தெறிப்பு, நீள் கோடுகளாய் நெழிந்து, விளிம்புகளில் அலைக்கரங்களால் மண்ணைப் பற்ற முயன்றுப் பின்வாங்குகின்றன. நானும் ஒரு சின்னஞ்சிறிய விண்மீனைப் போல நதியினுள் பாய்ந்து விடவேண்டும். என் உடல் ஒரு நீள்வட்ட நீர்க்குமிழாய் உருமாறி, நதியின் ஓட்டத்திற்கேற்ப, நானும் உடைந்தும் கோர்த்தும், சுழன்றும், சலனித்தும், விளிம்பினிலிருந்து மறுபடியும் உட்புகுந்து என விளையாடிக் கொண்டே இருந்தால் எப்படி இருக்கும். ஆனால் வேண்டாம்! என்னை ஆக்கரமிக்க முயலும் இந்நிலத்தினால் விழுங்கப்பட்டு விடக்கூடாது...."ஜீசஸ் தன்னுள் திமிறும் எண்ணங்களுக்கு கொடுக்க முயன்ற வடிவங்களின் தோற்றங்கள் சட்டென்று அழிந்து மறைந்தது.

    தலையை இருபுறமும் உதறிச் சமநிலை படுத்த முயன்றான். தன்னுள் உருவான ஆசையின் கொதுப்புகள் அவனைக் குலைக்க முயல்வதாய் நினைத்தான். சட்டென்று தலையை நதியின் பார்வையிலிருந்து திருப்பினான். அவசர கதியில் வேகமாக, வெற்றுப் பாறைப் பிளவுகள் பதிந்த நிலத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான். செந்தாடிக்காரன் கரையின் மற்றொரு ஓரத்தில் நின்று கொண்டு, அவனை வெறுமனே அதிருப்தியுடன் உற்று நோக்கினான். இன்னும் அவனால் நம்பமுடியவில்லை. எந்த நேரமும் இந்தப் பாவப்பட்ட ஜென்மம் தன் பாதையை விட்டு எப்படியும் விலகிவிடுவான் என்று அவன் உறுதியாக நம்பினான். தன் மேலங்கியின் கனத்த அடிப்பகுதியால் முகத்தை முற்றிலுமாக மறைத்துக் கொண்டு, அவனால் பார்வையிட முடியாத தொலைவிலிருந்து அவனைப் பின் தொடர்ந்து சென்றான்.  சாம்பல் பாறை நிலத்தைத் தாண்டிய பின், மண்ணைத் தவிர ஏதும் அற்ற நிலவெளி, அது முடிவேயற்ற வெற்று நிலம். உயிர்கள் கூட இருப்பதற்கு சாத்தியமற்ற அந்நிலத்தின் எல்லைதொடங்கும் இடம் வரை அவர்கள் பயணப்பட்டார்கள். ஜீசஸ் அதனுள் இறங்குவதற்கு முன்னே, செந்தாடிக்காரன், அவன் முன் மூச்சிறைக்க வந்து நின்றான்.

    "டேவிட்டின் மகனே! நில்! எதனால் என்னை இவ்வாறு நீ விட்டுச் செல்ல முனைகிறாய்?" 

    "யூதாஸ், என் அன்பனே!" மன்றாடும் தொனியில் ஜீசஸ் அவனைப் பார்த்தான். "வேண்டாம்! சகோதரா, இதற்கு மேல் நீ வராதே. நான் தனித்துச் செல்ல வேண்டும்."

    "நான் உன் ரகசியத்தை அறிந்து கொள்ள வேண்டும்." சற்று முன்னேறி அவனை நோக்கி வந்த யூதாஸ் பதிலுரைத்தான்.

    "அவசரப்படாதே! நண்பா, உனக்கான நேரத்தில், நீ அதனைச் சரியாகப் புரிந்து கொள்வாய். என்னால் இவ்வளவு தான் இப்பொழுது சொல்ல முடியும். கவலைப்படாதே, சகோதரனே! எல்லாம் சரியாகும். நம்பு!"

    "எல்லாம் சரியாகுமா? இந்த வெற்று வார்த்தைகள் என்னை சமாதானப்படுத்தும் என்று நீ நினைக்கிறாயா?, ஒரு ஓநாயின் பசி, இம்மாதிரியானச் சொற்களில் அடங்காது. ஒருவேளை அது உனக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அதனை நான் நன்றாகவே அறிவேன்."

    "என் மேல் உண்மையிலேயே நீ அன்பு கொண்டிருந்தால், காத்திரு. ஒரு மரத்தினைப் போல. விதை துளிர்த்துக் காய்த்துக் கனியாகும் வரை அது நிலத்திலிருந்து வான் நோக்கிக் காத்திருக்கும் மன்றாட்டினைப் போல!"

    " நான் மரமில்லை. ஒரு மனிதன்," மறுப்புடன் ஜீசசின் அருகில் வந்தான். " நான் மனிதன், மட்டுமல்லாது நம் செயல்களை அவசரமாகச் செய்தாக வேண்டியுள்ள நிர்பந்தம் உள்ளது. உனக்கேத் தெரியும், நான் என் சொந்த விதிகளை மட்டுமே நம்புவேன். அதுவே என் வழி."

"நம் தேவனின் என்றைக்கும் விதி ஒன்றே! அது மரமானாலும் மனிதனாலும் சரி,  யூதாஸ்."

    யூதாஸின் வெறுப்பும் கசப்பும் மட்டுமே கொண்ட கண்கள் மட்டுமே வெளித்தெரிந்தது. சொற்களினால் அவனுக்கு இதுவரை கிடைத்த நம்பிக்கையின்மை, ஒரு இருண்ட நிழல் உரு போல, அவன் தோள்களில் அமர்ந்திருக்கிறது. இன்னும்  இச்சொற்களின் பீடிப்பு தன்னை விட்டபாடில்லை என்று தனக்குள் நினைத்துக் கொண்டான்.

"ஓ! அப்படியா? அந்த விதி என்ன சொல்கிறது?"

    யூதாஸ் தன் கைமுஷ்டியை இறுக்கிக் கொண்டே அவனைப் பார்த்துக் கேட்டான். 

"காலம்!"

    அவன் அறிவான். உண்மையில் வேறு பதில்கள் எதுவும் இந்த மொன்னையான ஆட்டிடம் இருந்து கிடைக்கும் என அவன் எதிர்பார்க்கவில்லை. உண்மையில் இந்தக் காத்திருப்புகளின், பலிகளும், வாதைகளும், நோய்மையும்தான் அவனை ஒரு வனமிருகம் போல இப்போது ஆக்கியிருக்கிறது. கடவுளின் இந்த விதி என்பது மிகவும் மெதுவானது. உண்மையில் அப்படி ஒன்று நிகழ்கிது என்று கூட அவன் நம்பவில்லை. அதனால் கடவுளின் விதிக்கு எதிராகத் தன் சொந்த விதியை உருவாக்கிக் கொண்டான். அது நேரெதிரானது. காலம்! அதன் காத்திருப்புகள்! என்பதை அது நம்புவதில்லை. அதற்குப் பதிலாக செயல் புரிவதே, உறுதியானதும் விரைவானதுமான வழி என்று அவன் நினைத்தான். இதுவரை நிகழ்ந்த இழப்புகளுக்கெல்லாம் பதில் சொல்வதன் அவசரம் அவனிடம் தீர்க்கமாக இருந்தது.

    "நம் தேவன் மரணிப்பதில்லை. அவன் இன்னும் எத்தனை காலம் வாழ்வான் என்றும் அறுதியிட்டுக் கூற இயலாது" அவன் வெறியுடன் கத்தினான். "அழிவேயற்றவனல்லவா அவன்! அவனால் பொறூமையுடன் காத்திருக்க முடியும். ஆனால் நான்! நான் ஒரு மனிதன். உனக்கு ஒன்று சொல்கிறேன், கேள்! நான் என் மனதில் நினைத்திருப்பதை என் சாவுக்கு முன்பு பார்த்திருக்க வேண்டும். வெறுமனே பார்த்தல் அல்ல, அதன் ஒவ்வொரு அங்கங்களையும் என் சொந்தக் கைகளால் தொட்டு உணர வேண்டும். என்னுடைய அவசரம் உனக்குப் புரிகிறதா. இப்பொழுதும் நாம் விரைவு கொள்ளவில்லையெனில், உண்மையில் எனக்குத் தெரியவில்லை, நீ என்ன மாதிரியான நம்பிக்கையில், காத்திருக்கச் சொல்கிறாய் என்று!"

    "நிச்சயமாக நீ அதனைப் பார்ப்பாய்!". ஜீசஸ் தன் கைகளை உயர்த்தி அவனை அமைதிப்படுத்த முயன்றான். " நான் சொல்கிறேன், நாம் அதனைக் காண்போம், நம்மால் அதனைத் தொட்டு உணர முடியும். யூதாஸ், சகோதரா! நம்பிக்கையோடு இரு. விடை பெறுகிறேன். நம் தேவன், இப்பாலை நிலத்தினுள் எனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறான்."

" நானும் உன்னோடு வருகிறேன்:"

"இந்த மாபெரும் பாலைவெளி நம் இருவரையும் ஏற்றுக் கொள்ளாதா என்ன?"

    ஒரு வேட்டை நாயைப் போல செந்தாடிக் காரன், தன் எஜமானனின் சொற்களுக்காக வெறியுடன் நின்று கொண்டிருந்தான். ஆனால் எந்தப் பலனும் இல்லை. நிலத்தில் குத்திட்டிருந்த அவனது பார்வை சற்றுத் தளர்ந்தது. திரும்பலாம் என்று முடிவெடுத்தான். திரும்ப, ஜோர்டான் நதியை நோக்கி விரைவாகச் செல்லத் தொடங்கினான். பராபஸுடன் மலைகளினுள், பதுங்கியிருந்ததும், தீவிரமாக எதிரிகளைக் கொல்வதைப் பற்றிய வியூகங்களை வரைந்ததும், அதைப் பற்றி விவாதித்துக் கொண்டதும் பற்றி நினைத்துக் கொண்டுத் தனக்குள் தானே பிதற்றினான். "இறைவனுக்கு நன்றி! பராபஸ்! அவனல்லவா! தலைவன். என்ன மாதிரியானச் சுதந்திரம் முழங்கும் வெறிகொள் சூழல் அது. இஸ்ரவேலத்தின் கடவுளின் பாதுகாவலன், ஒரு போர்வீரனாகத் தானே இருக்க வேண்டும். கடினமும், மாட்சிமையும் பொருந்திய என் தலைவன். அவனைப் போல ஒரு தலைவன் வேண்டும் நமக்கு. இந்த ரோமானியர்களின் கொட்டத்தை அடக்கி, இஸ்ரவேலத்தை விடுதலை அடையச் செய்ய நாம் அவனுடன் துணை நிற்கலாம். ஆனால் நான் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறேன். எதற்காக, இந்தப் பேதையைப் போன்ற மனிதனின் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கிறேன். ரத்தத்தைக் கண்டாலே அலறும், சதா அன்பு! அன்பு! என்று பிதற்றும் பித்தன்! தெரியவில்லை! பொறு! கொஞ்சம் பொறு! இவன் இப்பாலை வெளியிலிருந்து  மீண்டுத் திரும்பி வந்து நமக்காக என்ன கொண்டு வரப்போகிறான் என்று பார்க்கலாம்!"


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக