The Last Temptation of Christ - Nikoz Kazantzakis
அந்தக் குகைப் பிளவைத்தாண்டி சற்று தொலைவில் ஒரு சிறிய பாறைத்துண்டத்திற்குக் கீழே மண்ணில் குத்துக் காலிட்டுத் தனித்து அம்ர்ந்திருந்தான் அவன். மற்றவர்களைப் பார்க்கவோ, இல்லை அவர்களிடம் பேசவோ அவன் விரும்பவில்லை. கால நேரமற்று அமர்ந்திருந்தவன் தன்னை அறியாமலேயே உறக்கத்தில் அயர்ந்தான். சரியாக அந்நேரத்தில் அவன் அத்தீர்க்கமானக் குரலினால் ஆட்கொள்ளப்பட்டான். சிதறிச் சிதறிக் குழறும் பாலையின் காற்று போல அது அவன் செவிகளில் அறைந்தது.
"தீ! சோடோம்! கொமோரோ! தயாராகு!"
சட்டென்று விழிப்புற்று எழுந்து அமர்ந்தவன், யூகிக்க முடியாத சொற்களின் அதிர்வலைகள், அவனைத் தாண்டிச் சென்றதை உணர்ந்தான். பின் இரவுப் பறவைகளின் சிறகடிப்புகளாக, அலறல்களாக, காற்று வேகமெடுக்கையில், புழுதி கிளப்பும் சப்தங்களாக, ஓநாய்களின் ஊளையாக, நதியின் கரைகளில், காற்றின் திசைவேகத்திற்கு வளைந்து உராய்ந்து பரவும் நாணற்புற்களின் ஓசையாக என அச்சொற்கள் குவிந்தும் சிதறியும் உருமாறிக் கொண்டே இருந்ததைக் கூர்ந்து கவனித்தான். பின் தன்னிலையற்று, நதிக்கரையை நோக்கி, உந்தப்பட்டவன் போல, ஓடத் தொடங்கினான். நதியின் நீர்மை அடிப்பாதங்களில் புலப்பட்டதும், வேகம் கூடியது, நதியின் நடுப்பகுதிக்கு வந்தவன், விம்மிக் கொண்டிருக்கும் தலையை நீரினுள் முக்கினான். தீயை அள்ளிக் கொள்வதைப் போலச் சன்னதமெடுத்துத், தன் உடல் முழுதும் வெறியோடு நீரினால் அணைத்துக் கொண்டான். பசித்த மிருகம் இரையின் வயிற்றுத் தோலைக் கடித்துப் பிளப்பதைப் போல, நதியின் தோலைக் கிழித்து அதன் ஆழ்ந்த வெம்மையிண் துடிதுடிப்பினுள் தன்னைப் புதைத்துக் கொள்ள முயல்வதாய் இருந்தது.
"எப்படியும் அவன் இங்குதான் வரவேண்டும். வேறு வழியில்லை. அவனுக்கு பிடிக்கிறதோ இல்லையோ, நான் அந்த ரகசியத்தை அவனிடமிருந்துப் பிடுங்கிக் கொள்ளத்தான் வேண்டும்." என்று தனக்குள் கருவிக் கொண்டான்.
ஜீசஸ் மலைக் குன்றங்களைத் தாண்டி முன்னேறி வருவது ஒரு புள்ளியாகத் தெரிந்தது. யூதாஸ் அங்கிருந்து கிட்டத்தட்ட ஒரு ஓநாயைப் போலவேத் தன் கையில் இருந்தக் கவைக் கோலை அழுத்தமாக ஊன்றிக் கொண்டு அவனை நோக்கி விரைந்து ஓடினான். மற்றவர்களும், ஆரவாரத்துடன் அவனை வரவேற்க ஓடினர். அருகில் வந்ததும், அவனது கை, கால்கள், உடல் எனத் தடவிக் கொடுத்தனர். அணைத்து முத்தமிட்டனர். ஜான் தாங்கமுடியாது அழுது கொண்டிருந்தான். ஒரு தோல்பறை போல பம்! பம்! என அவனது அகம், தனது ஆத்மகுருவினைத் தேடி சதா அதிர்ந்து கொண்டிருந்தது. அது கண்ணீர்த்துளிகளாய் ஜீசஸின் பாதங்களை வருடியது. ஆனால் போனவனும் திரும்பி வந்தவனும் ஒருவனல்ல என்பது அவர்கள் அனைவருக்கும் தீர்க்கமாக உரைத்தது. தங்கள் குருவிடம் இன்னதென்று அறிந்து கொள்ள முடியாத ஒரு மர்ம பாவம் ரேகைகளாக முடிச்சிட்டிருப்பதை அனைவரும் உணர்ந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாகவும், கூட்டாகவும் அதுவரை, அந்தக் காட்டுமிராண்டித் துறவியுடன், தங்கள் குருவின் சம்பாஷணைகளை பல்வேறு விதமாகக் கதையாடிக் கொண்டிருந்ததை நினைத்து அத்தருணம் துணுக்குற்றனர். ஆனால் வந்திருக்கும் மனிதன் முற்றிலும் தாங்கள் அதுவரை அறிந்து வைத்திருந்தத் தன்மையிலிருந்து வேறுபடவில்லை, என்பது ஒன்றே அவர்களை சற்று அமைதி கொள்ள வைத்தது.
பீட்டரால் இதற்குமேலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. "துறவியே! தயை கூர்ந்து சொல்லுங்கள், திருமுழுக்கிடுபவருடன் தாங்கள் மூன்று பகலிரவுகளாக என்ன உரையாடினீர்கள். தங்களின் அகம் உவப்போடு இல்லை. முகம் வாடி, துக்கத்தில் இருண்டிருக்கிறது. என்னவாயிற்று? "
"அவர் இன்னும் சிறிது காலமே இவ்வுலகில் இருப்பார்" ஜீசஸ் அமைதியாக அனைவரின் கண்களையும் கூர்ந்து பதிலளித்தான். "அனைவரும் அவருடன் இருந்து, திருமுழுக்கைப் பெற்றுக் கொள்ளுங்கள். நான் போக வேண்டும்"
"எங்கே செல்லப் போகிறீர்கள்?" நாங்களும் உங்களுடன் வருகிறோம்!" செபெதீயின் இளையமகன், நடுக்கத்துடன் ஜீசஸின் அங்கி நுனியைப் பற்றிக் கொண்டு சிறுபிள்ளை போல அழத் தொடங்கினான்.
"இப்பயணம் தனித்தது. நான் தனியனாகவே செல்ல வேண்டும். அங்கு நம் கடவுளின் குரலுக்கு நான் செவி சாய்க்க வேண்டும். எனக்கான பதிலை அவன் அருளட்டும்." ஜீசஸ் சலனமின்றிக் கூறினான்.
"கடவுளுடனா?, எங்கே! இந்தப் பாலைவெளியின் ஆழத்திலா! வேண்டாம். உங்களால் திரும்ப வரவே முடியாது." பீட்டர் சற்று அமைதியிழந்திருந்தான்.
"நான் திரும்பி வரவேண்டும்!" ஜீசஸின் குரல் தாழ்ந்திருந்தது. "கண்டிப்பாக நான் திரும்ப வந்துதான் ஆகவேண்டும். ஆம்! நம்புங்கள் சகோதரர்களே! இந்த மொத்த உலகும் ஒற்றை நூலினால் கோர்க்கப்பட்டிருக்கிறது. நம் தேவனின் சொற்களை நான் தனித்திருந்தே அறிதல் அவசியம். எனக்காக அருளப்பட்டது எதுவாயினும் அதனை ஏற்கத் தலைப்படுவேன். நான் திரும்பி வருவேன்" ஒரு வீர முழக்கம் போல, ஜீசஸ் அவர்களை நோக்கிக் கூறினான்.
"எப்பொழுது? இன்னும் எத்தனை நாட்கள் நாங்கள் காத்திருக்க வேண்டும் துறவியே! பாருங்கள் நீங்கள் எம்மை எப்படி விட்டுச் செல்கிறீர்கள் என்று. நாங்கள் உங்களை இப்படி அத்துவானத்தில் விட்டுக் காத்திருக்க இயலாது. புரிந்து கொள்ளுங்கள். வேண்டாம்!" அனைவரும் ஜீசஸைப் போக விடாது தடுத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அங்கு வந்த யூதாஸ் மட்டும் எதுவும் பேசாது அனைவரையும், தனித்தனியாக உற்று நோக்கினான். அமைதியாக, ஆழமான வெறுப்புடன் ஜீசஸைப் பார்த்தான். கேலியாகத் தன் தாடியை வருடிக் கொண்டே, சிரித்தான். " பலியாடு! பலியாடு....! இஸ்ரவேலத்தின் தெய்வத்திற்கு நன்றி, அவர் என்னை ஒரு ஓநாயாகப் படைத்ததற்கு" ஆனால் உள்ளூற சிறு குழப்பமும் தயக்கமும் உடனடியாக அவனைப் பீடித்துக் கொண்டது. வேறு எதுவும் பேசிக் கொள்ளாமல், ஜீசஸின் கண்களை மட்டுமே ஆழ்ந்து நோக்கினான். அவனால் உண்மையில் அதனை சகித்துக் கொள்ள முடியவில்லை. சட்டென்று பார்வையைத் தவிர்த்து, முகம் திருப்பி மண்ணை நோக்கிக் காறி உமிழ்ந்தான்.
"நான் வருவேன்! இறைவனின் விருப்பமிருந்தால், அதுவரை நீங்கள் இங்கேயே காத்திருங்கள். வேறென்ன! ம்ம்! விடைபெறுகிறேன்! என் சகோதரர்களே!"
கலங்கிய விழிகளுடன், அவர்கள் அனைவரும் மெதுமெதுவாக, ஜீசஸ் பாலையை நோக்கிச் செல்வதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். முற்றிலுமாக உருமாறிப் போயிருந்தத் தங்களின் தலைவரை அவர்கள் ஒருவிதப் பரவசத்துடனும், பதைப்புடன் பார்த்தனர். வழக்கத்திற்கு மாறாக, கால்களைப் புழுதியில் அழுந்தப் பதிந்து, சற்று சாய்வாக முன்னேறிக் கொண்டிருந்தார். கணத்திற்குக் கணம் உருமாறிக் கொண்டே இருக்கும் அவரது உடல் மொழியை அவர்கள் ஒவ்வொருவரும் நினைத்துப் புதிரடைந்தனர். வழியில் குனிந்து ஒரு நாணல் புல்லைப் பிடுங்கிக் கையில் துணைக்கு வைத்துக் கொண்டு, பாறைப் பிளவுகளுக்கு இடைப்பட்ட, நதிக்குக் குறுக்காகப் போடப்பட்ட வளைந்தப் பாலத்தைக் கடந்து கொண்டிருந்தான். சட்டென்று நின்றவன், எதிரே நதியை நோக்கினான். பழுத்த வண்டல் அடர்த்தியை முழுக்கிக் கொண்டு அமைதியாக நகர்வே உடலாகக் கொண்ட நீர்மையின் நீண்டப் பாட்டையை உற்று நோக்கினான். அதனுள் நின்று கொண்டிருக்கும் மனிதத் தலைகள். முகங்களின் இருளடைந்த பிரதேசங்களில் குறுக்கு மறுக்காகப் பயணப்பட்டான். நிழல்வெளிகள் அங்காங்கே உலர்ந்தும், உடைந்தும் பொருக்கோடிப் போயிருந்த நதிக் கரைகளில், தங்கள் மார்புகளில் அறைந்து கொண்டு பிரார்த்தனைகளால், பாவங்களைக் கழுவ முயலும், துயர் வடிவங்களின் சன்னதத்தைக் கவனித்தான். சற்றுக் கூன் விழுந்தது போல அவர்களுக்கு மத்தியில், துடியுடன் அதிர்ந்து கொண்டிருக்கும் துறவி, அவர்களை ஒவ்வொருத்தராக நீரினுள் முக்கி எடுக்கையில், அவரின் உடல் நரம்புகள் ஒரு நீண்டத் தந்திக் கருவி போல வானிற்கும் பூமிக்குமாக, அதிர்ந்து விம்மி விம்மித் தன்னிலை இழந்துத் தளர்ந்துப் பின் சுருங்கி நீள்வதை அவனால் நேரடியாக உணர முடிந்தது. அக்காட்டுக் கூச்சல்களினுள் அவன் எதையோ, தொலைந்ததைத் தேடுவதைப் போலக் கூர்ந்தான். அவனால் அதனை எப்படி என்று விளக்கமுடியவில்லை, ஆனால் அவன் அதிருப்தியடைந்திருந்தான். உண்மையில் நம்பிக்கையும் இழந்திருந்தான். அங்கு நிகழ்வதில் எந்தத் தர்க்கப்பாடுகளையும் அவனால் அறிய முடியவில்லை. ஏன் இத்தனைக் கோபம், வெறிக் கூச்சல். எங்குமே அன்பின் நிமித்தத்தைக் கூட உணர முடியவில்லையே! என்று தனக்குள் பிதற்றினான். ஒரு மந்தையானக் குழாம் முடிந்ததும் அடுத்த மந்தைகள் தன்னுணர்வின்றி, அப்படியே நதியினுள் இறங்கித் தங்களை முழுக்கிட்டுக் கொண்டனர். அவர் வானத்தை அத்தனை ஆக்ரோஷத்துடன் வெறித்தார். ஒரு உறிஞ்சுக்குழாய் போல வானத்தின் தயையினை வேண்டிக் கொண்டு நிற்கும் மூர்க்கம் அதை அப்படியே பூமிக்குள் இறக்குவிட வேண்டும் எனும் பதைப்பு, அது நடந்தேற இயலாதத் தன்மையினால் உருவாகும் அமைதியிழப்பு, வெறிகொள்ளல், சன்னதமெடுத்து மறுபடியும், ஒரு தூற்றல் போலப் பழித்தல். பின் திரும்பவும் முடிவிலிருந்து தொடங்கி, இறைஞ்சுதல், பிரார்த்தித்தல், துக்கித்தல், பாவங்களுக்காக வருந்தி அழுதல் என்றுத் திரும்பத் திரும்ப நிகழ்ந்து கொண்டிருந்தது. ஒருவகையான மன்றாடுதல் மட்டுமின்றி, எதிர்பார்ப்புகளின் திண்மை உடையும் பொழுதெல்லாம், கோபம் தலைக்கேறிக் கொண்டே இருந்தது. அது நீரினுள் இறங்கியது. மண்ணெல்லாம் நீக்கமற்றுப் பரவி, சர்ப்பம் போல மொலுமொலுத்தது. அவரது குரல் மட்டும் இரவும் பகலுமற்று, அக்காட்டு நிலத்தினை ஆக்கிரமித்து அதிர்ந்து கொண்டே இருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக