திங்கள், 16 ஏப்ரல், 2018

தாகத்தின் நீர்

தாகத்தின் நீர் அலைகிறது
இண்டு இடுக்குகளில்
பதுங்கிக் கிடக்கின்றன நாக்குகள்
சத்தமின்றி வந்திறங்கும்
ஓராயிரம் சிறகுகள்
வானம் வானம் வானம்
பாதங்களுக்கடியில் சொத சொதக்கிறது
எச்சில் ஊற்று
விழுங்க இயலாத
நீர்மையின் கண்ணிகளில் இழுபடுகிறது
மீன் பற்றிய கனவுகள்
கனவுகளின் நிறங்களில் பாய்கிறது
மழை
நீ எனும் சொல்பட்ட நிலமெங்கும் ஊற்று
உன் நீள் முத்தத்திற்கு பின்னாலும்
நின்று விடாத
அலைச்சலின் வெம்மை
தாகத்தின் கொக்கிகளில்
ஏராளம் தொண்டைகள்
உன் நிழல் பாயும் சிற்றோடையில் கவிகிறது
கரும் மேகம்
நாக்குகளில் பேருரசல்
நீர்மைக்குள் புரள்கின்றன கண்ணாடிச்சில்லுகள்
தனிமையுடன் அமர்ந்திருக்கிறது வலி
தாகத்தின் நீர்
வழியெங்கும் சிதறித் துளிர்க்கிறது
பேரிரைச்சலுடன் வான் விடுகின்றன
ஓராயிரம் சிறகுகள்
பூமி பூமி பூமி
கனவுகளின் நிறத்தில் உறைந்தது வெயில்
தனிமை வற்றிய தாகக் கடல்
மீதம் கிடக்கும்
ஈரம் உலரா சிப்பி வாய்களில்
உன் உலரா முத்தம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக