ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

கன்னியாகுமரி


உள்ளும் புறமுமாய்
நான்
உருவாக்கிக் கொண்டேன்
எனக்கான தொலைதூர மணல் வெளியை
காலங்களுக்கப்பால் கிடக்கும்
திட்டுக்களின் ரேகைகளிலிருந்து
வாழ்நாட்களின்
உலர்ந்த வேர்முடிச்சுகளை
மெல்ல அவிழ்த்து வெளியெடுக்கும் பொழுது
இன்னும் சொட்டியது 
எஞ்சியிருந்தது
தவிப்புடன் அதன் தண்டுகளை உடைக்கிறேன்
உள்ளிருக்கும் கிழங்குகளின் 
சொதசொதப்பை சுரண்டுகிறேன்
சின்னஞ்சிறு சிற்றோடையாய்
என் பாதங்கள் வருடி நின்றிருக்கிறது
எலுமிச்சை நிற ஒளி
தனித்திருக்கும் முட்செடிகளின் வழி
வழிந்தோடுகிறது கானல் நதி
அலைக்க அலைக்க
விடாமல் வலை வீசினேன்
மீன்களின் கண்களுடன்
கொத்துக் கொத்தாய்
பெண்ணுடல்கள் துடிக்கத் துடிக்க,
மூச்சடங்கிய பின்
மெல்ல ஒவ்வொருவராய்ப் புணரத் தொடங்குகிறேன்
நேற்றையக் கனவின்
ஆணுடல்களின் குறிகளை
வெறி தீரக் கடித்துக் குதறியிருப்பேன்
அதற்கு முந்தைய நாட்களின்
எண்ணற்ற உடல்கள்...
பாலினம் தொலைத்த
முடிவில்லா உடலப்பெருக்குடன்
நானும் ஒளிந்து கொண்டிருப்பேன்
என் உடலின் பாலினப்பாகங்களில்
செயற்கைத் துடிப்புகள் கை கூடியிருந்தது
அகலக் கால் விரித்து குப்புறப்படுக்கிறேன்
அலை
அலைகள்
அலைகளின் பாய்ச்சலில்
படித்துறையில்
கால்கள் புதையப் புதைய
அடிமண்டிய சேற்று வண்டலிலிருந்து
வெளிவரத் தொடங்கியது
இதுவரை நான் உதிர்த்துக் கொண்டிருந்த
விந்து ஊற்று
உள்ளும் புறமுமாய்
உருவாக்கிய நெடும் மணல்
பாலாழியாகிறது
கசிந்து பீய்ச்சுகிறது
அமிர்தமும் விடமும்.
நீலகண்டன் உடைந்தழுது மாய்கிறான்
மாயவனை உயிரோடு (இருந்ததா) விழுங்கியது சேஷம்
நான்கு தலைகளும் நான் திசை தெறித்தது
தேவனும் அசுரனும்
தொடர்ச்சியற்று அகழ்ந்தெடுத்தனர்
அடியின் பெரும் பாறை  உடைவிலிருந்து கிளர்ந்தெழுந்து
எட்டுத்திக்கும்
சூழ்ந்தது நீர்
எங்கும் நீர்மை
அந்த உப்பு வெளியின் நடுத் தீவில்
முக்காலத்திற்குமாய் பெய்து அடங்கியது மழை
செழித்த தீவிலிருந்து
வெளியேறும் முன்
என் பிறப்புறுப்புகளை சரிபார்த்துக் கொள்ளும் பொழுது
அவள் வந்தாள்
நீ ஆண் என்றாள்
ஒற்றைக்காலுடன் என்னைப் புணர்ந்து மறைந்தாள்.











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக